Dinamani - தினம் ஒரு தேவாரம் - https://www.dinamani.com/specials/Thinam-oru-thavaram/ https://www.dinamani.com/ RSS Feed from Dinamani en-us Copyright 2016 Dinamani. All rights reserved. 3188942 ஸ்பெஷல்ஸ் தினம் ஒரு தேவாரம் 134. முந்தி நின்ற வினைகள் - பாடல் 10 என். வெங்கடேஸ்வரன் DIN Monday, July 15, 2019 12:00 AM +0530  

பாடல் 10:

    குண்டு முற்றிக் கூறை இன்றியே
    பிண்டம் உண்ணும் பிராந்தர் சொல் கேளேல்
    வண்டு பாட மலரார் திருப்புன்கூர்
    கண்டு தொழுமின் கபாலி வேடமே

விளக்கம்:

குண்டு=பருத்த உடல்; முற்றி=மிகுந்து; கீழான  தன்மை  மிகுந்து; கூறை=உடை, துணி; பிண்டம்= சோற்றுக்கவளம்; பிராந்தர்=மயங்கிய அறிவினை உடையவர்; என்றும் நிலையாக இருக்கும் பெருமானை கருதமால், மற்ற நிலையற்ற பொருட்களை நிலையாக கருதுவதால் சமணர்களை  மயக்க அறிவினை உடையவர்கள் என்று அழைத்தார்  போலும், பெருமான்  மிகவும் குறைந்த ஆடையை உடையவராக இருப்பதால் நக்கர் என்று அழைக்கப் படுவதை நாம் அறிவோம். பெருமான் பலி ஏற்பதையும் நாம் அறிவோம். சமணர்களும் ஆடையேதும் இன்றி பல இடங்களிலும் திரிந்து மற்றவர் தரும் உணவினை ஏற்று வாழ்வதால், நக்கனாக பலியேற்றுத் திரியும் பெருமானுடன் அவர்களை ஒப்பிடுவது தவறு என்பதை உணர்த்தும் வண்ணம், சமணர்கள் மயங்கிய அறிவினை உடையவர்கள் என்று சம்பந்தர் குறிப்பிடுவதாக சிவக்கவிமணியார் விளக்கம் அளிக்கின்றார். கையில் கபாலம் ஏந்தி பலி ஏற்க வரும் பெருமானின் பிச்சைப் பாத்திரத்தில் நமது மலங்களை இட்டு, உள்ளத்தில் உள்ள மருள் நீங்கப் பெற்றவராக. பெருமானைத் தொழுது உய்வினை அடைய வேண்டும் என்று உணர்த்துகின்றார்.     

பொழிப்புரை:

பருத்த உடல் உடையவர்களாய், கீழ்மைத் தன்மை மிகுந்து உடலில் ஆடை ஏதுமின்று பல வீதிகளிலும் திரிந்து பிச்சை ஏற்றுண்பவர்களும், மயக்கம் தரும் அறிவினை உடையவர்களும் ஆகிய சமணர்களின் சொற்களை பொருட்டாக கருதாதீர்கள். மலர்ந்த மலர்களில் உள்ள தேனை உண்பதற்காக கூட்டமாக வரும் வண்டுகளின் இசை நிறைந்த திருப்புன்கூர் தலம் சென்று ஆங்குள்ள இறைவனைக் கண்டு தொழுவீர்களாக. கபாலியாக வேடம் கொண்டு பலியேற்கும்  இறைவனைத்  தொழுது அவனது பிச்சைப் பாத்திரத்தில் உங்களது மலங்களை இட்டு, மலங்கள்   நீங்கியவர்களாக இறைவனின் திருவடிகளைச் சென்று அடைவீர்களாக.

 

]]>
https://www.dinamani.com/specials/thinam-oru-thavaram/2019/jul/15/134-முந்தி-நின்ற-வினைகள்---பாடல்-10-3188942.html
3188941 ஸ்பெஷல்ஸ் தினம் ஒரு தேவாரம் 134. முந்தி நின்ற வினைகள் - பாடல் 9 என். வெங்கடேஸ்வரன் DIN Sunday, July 14, 2019 12:00 AM +0530  

பாடல் 9:

    நாட வல்ல மலரான் மாலுமாய்த்
    தேட நின்றார் உறையும் திருப்புன்கூர்
    ஆட வல்ல அடிகள் அவர் போலும்
    பாடல் ஆடல் பயிலும் பரமரே

விளக்கம்:

நாடவல்ல மலரான் என்று பிரமனை சம்பந்தர் இங்கே குறிப்பிடுகின்றார். பிரமனுக்கு நான்கு திசைகளையும் ஒரே சமயத்தில் நோக்கும் வண்ணம் நான்கு முகங்கள் உள்ளன். எனவே தான் தேடும் எந்த பொருளையும் எளிதில் கண்டறியும் ஆற்றல் படைத்தவன். இந்த தன்மையை, எதையும் எளிதில் நாடி உணரும் திறமையை குறிப்பிடும் பொருட்டு நாட வல்லவன் என்று இங்கே கூறுகின்றார். நாட வல்லவனாக இருந்தும், பெருமானின் திருமுடியைத் தேடி காண முடியாமல் திகைத்து நின்ற தன்மை இங்கே உணர்த்தப் படுகின்றது. பெருமான் எப்போதும் வேத கீதங்களை பாடியவண்ணம் இருக்கின்றார் என்று பல திருமுறை பாடல்கள் உணர்த்துகின்றன.

அழகன் வீரன் கருணையாளன் என்று பல விதமாக பெருமானை வர்ணித்த சம்பந்தர், கலைகளில்  வல்லவன் என்று இந்த பாடலில் கூறுகின்றார். பாடலில் வல்லவனாக வேதங்களை ஓதும் பெருமான் ஆடலில் வல்லவனாக ஐந்தொழில்களும் புரிகின்றான். பாடலையும் ஆடலையும் பயிலும் பெருமான் அதே சமயத்தில் வேதங்களை அருளியும், படைத்தல் காத்தல் அழித்தல் மறைத்தல் அருளல் ஆகிய ஐந்து செயல்களையும் செய்தும் உயிர்களை உய்யவைக்கும் கருணைத் திறம் தான் என்னே.             
 
பொழிப்புரை:

நான்கு முகங்களைக் கொண்டு எதனையும் எளிதில் தேடிக் கண்டுபிடிக்கும் ஆற்றல் வாய்ந்த பிரமனும் திருமாலும், தனது அடியையும் முடியையும் காண முடியாமல் திகைத்து நிற்கும் வண்ணம் நெடிய தீப்பிழம்பாக நின்ற பெருமான் திருப்புன்கூர் தலத்தில் உறைகின்றான். அவரே ஆடவல்லானாக திகழ்கின்றார். அவர் இடைவிடாது ஆடலும் பாடலும் பயின்றவண்ணம் உயிர்களுக்கு பல விதங்களிலும் அருள் புரிகின்றார்.

 

]]>
https://www.dinamani.com/specials/thinam-oru-thavaram/2019/jul/14/134-முந்தி-நின்ற-வினைகள்---பாடல்-9-3188941.html
3188940 ஸ்பெஷல்ஸ் தினம் ஒரு தேவாரம் 134. முந்தி நின்ற வினைகள் - பாடல் 8 என். வெங்கடேஸ்வரன் DIN Saturday, July 13, 2019 12:00 AM +0530  

பாடல் 8:

    மலையதனார் உடைய மதில் மூன்றும்
    சிலை அதனால் எரித்தார் திருப்புன்கூர்த்
    தலைவர் வல்ல அரக்கன் தருக்கினை
    மலை அதனால் அடர்த்து மகிழ்ந்தாரே

விளக்கம்:

மலையதனார்=மலையது அன்னார், மலை போன்று வலிமை உடையவர்கள்; அடர்த்தல்= நெருக்குதல்; மலைதல் என்ற சொல்லுக்கு சண்டை போடுதல் என்று ஒரு பொருளும் உள்ளது. தேவர்களுடன் போரிட்ட திரிபுரத்து அரக்கர்கள் என்றும் பொருள் சிலர் கொள்கின்றனர். மலைத்தல் என்றால் மலைத்து திகைத்து இருத்தல் என்று ஒரு பொருள். இந்த அடிப்படையில் தங்களது பகைவர்கள் திகைத்து நிற்கும் வண்ணம் வலிமை கொண்ட திரிபுரத்து அரக்கர்கள் என்றும் பொருள் கூறப்படுகின்றது.

பொழிப்புரை:

மலை போன்று வலிமை பொருந்திய திரிபுரத்து அரக்கர்கள் கொண்டிருத்த மூன்று பறக்கும் கோட்டைகளையும், மேருமலையினை வளைத்து செய்யப்பட்ட வில்லில் கூரிய அம்பினைப் பொருத்தி எரித்தவர் சிவபெருமான். அவரே திருப்புன்கூர் தலத்தின் தலைவராக திகழ்கின்றார். வலிமை வாய்ந்த அரக்கன் இராவணன் மிகுந்த செருக்குடன், கயிலாய மலையினைப் பேர்த்து எடுப்பேன் என்ற எண்ணத்துடன் முயற்சி செய்த போது, அந்த கயிலை மலையின் மீது தனது கால் பெருவிரலை அழுத்தி, மலையின் கீழே அரக்கனை நெருக்கி அவனது வலிமையை அழித்து, பின்னர் அரக்கனின் சாமகானத்தை கேட்டு மகிழ்ந்து பல வரங்கள் அளித்தவர் பெருமான்.

 

]]>
https://www.dinamani.com/specials/thinam-oru-thavaram/2019/jul/13/134-முந்தி-நின்ற-வினைகள்---பாடல்-8-3188940.html
3188939 ஸ்பெஷல்ஸ் தினம் ஒரு தேவாரம் 134. முந்தி நின்ற வினைகள் - பாடல் 7 என். வெங்கடேஸ்வரன் DIN Friday, July 12, 2019 12:00 AM +0530  

பாடல் 7:

    பாரும் விண்ணும் பரவித் தொழுது ஏத்தும்
    தேர் கொள் வீதி விழவார் திருப்புன்கூர்
    ஆர நின்ற அடிகள் அவர் போலும்
    கூர நின்ற எயில் மூன்று எரித்தாரே

விளக்கம்:

முந்தைய மூன்று பாடல்களில் பெருமானின் திருவடி, திருமேனி, சடைமுடி ஆகியவற்றின் அழகினை உணர்த்திய சம்பந்தர், இத்தகைய அழகு மிளிர பெருமான் வீதிவலம் வந்த காட்சியை மனதினில் நினைத்தார் போலும். அவ்வாறு வீதிவலம் நடைபெறும் தெருக்களின் அகலத்தை இந்த பாடலில் குறிப்பிடுகின்றார். பாரும்=உலகத்தில் உள்ளவர்கள்;

விண்ணும்=விண்ணுலகத்தில் உள்ள தேவர்கள்; ஆர=பொருந்த; க்ரூரம் என்ற வடமொழிச் சொல்லை மூலமாகக் கொண்டு எழுந்த சொல்லாக கருதப் படுகின்றது. க்ரூரம்=கொடுமை; தங்களின் விருப்பம் போன்று பல இடங்களுக்கு பறக்கும் கொட்டைகளில் பறந்து சென்று, திடீரென்று கீழே இறங்கி கோட்டைகளின் கீழே அகப்பட்ட அனைத்து உயிர்களையும் கொன்ற செயலின் கொடுமைத் தன்மை இங்கே உணர்த்தப் படுகின்றது.  

பொழிப்புரை:

நிலவுலகத்தில் உள்ள மனிதர்களும் விண்ணுலகத்தில் உள்ள தேவர்களும் பெருமானைத் தொழுது போற்றும் வண்ணம், தேரோடும் அகன்ற வீதிகளைக் கொண்டதும் எந்நாளும் திருவிழாக்களால் சிறப்பிக்கப்படுவதும் ஆகிய திருப்புன்கூர் தலத்தில் பொருந்தி உறையும்  இறைவனார், கொடுமையான முறையில் அனைவரையும் வருத்திய திரிபுரத்து அரக்கர்கள் வாழ்ந்த மூன்று பறக்கும் கோட்டைகளும் ஒருங்கே பற்றி  எரியும் வண்ணம் அம்பு எய்தி எரித்தவராவர்.

 

]]>
https://www.dinamani.com/specials/thinam-oru-thavaram/2019/jul/12/134-முந்தி-நின்ற-வினைகள்---பாடல்-7-3188939.html
3188937 ஸ்பெஷல்ஸ் தினம் ஒரு தேவாரம் 134. முந்தி நின்ற வினைகள் - பாடல் 6 என். வெங்கடேஸ்வரன் DIN Thursday, July 11, 2019 12:00 AM +0530  

பாடல் 6:

    தெரிந்து இலங்கு கழுநீர் வயல் செந்நெல்
    திருந்த நின்ற வயல் சூழ் திருப்புன்கூர்
    பொருந்தி நின்ற அடிகள் அவர் போலும்
    விரிந்து இலங்கு சடை வெண்பிறையாரே

விளக்கம்:

தெரிந்து இலங்குதல்=மிகுந்த ஒளியுடன் கூடி இருத்தல்;
 
பொழிப்புரை:

மிகுந்த ஒளியுடன் கூடிய செங்கழுநீர் பூக்கள் மலரும் வயல்களும், ஒரே சீராக உயர்ந்து வளர்கின்ற நெற்கதிர்கள் நிறைந்த வயல்களும் சூழ்ந்த திருப்புன்கூர் தலத்தில் நிலையாக பொருந்தி உறைபவர் சிவபெருமான். அவர் தனது விரிந்த சடையில் வெண்மை நிறத்தில் உள்ள பிறைச் சந்திரனை அணிந்துள்ளார்.

 

]]>
https://www.dinamani.com/specials/thinam-oru-thavaram/2019/jul/11/134-முந்தி-நின்ற-வினைகள்---பாடல்-6-3188937.html
3188936 ஸ்பெஷல்ஸ் தினம் ஒரு தேவாரம் 134. முந்தி நின்ற வினைகள் - பாடல் 5 என். வெங்கடேஸ்வரன் DIN Wednesday, July 10, 2019 12:00 AM +0530  

பாடல் 5:

    பவள வண்ணர் பரிசார் திருமேனி
    திகழும் வண்ணம் உறையும் திருப்புன்கூர்
    அழகர் என்னும் அடிகள் அவர் போலும்
    புகழ நின்ற புரிபுன் சடையாரே

விளக்கம்:

சென்ற பாடலில் திருவடிகளின் தன்மையை எடுத்துரைத்த சம்பந்தர் இந்த பாடலில் பெருமானின்  திருமேனியில் தன்மையை உணர்த்தி, பெருமான் அழகே வடிவானவர் என்று கூறுகின்றார். பரிசு= தன்மை; புரிசடை=முறுக்குண்ட சடை; புன்சடை=செம்பட்டை நிறத்தில் அமைந்துள்ள சடை; சொக்கவைக்கும் அழகு உடைய பெருமானை, பொருத்தமாக மதுரை தலத்தில் சொக்கன் என்று அழைப்பது நமது நினைவுக்கு வருகின்றது.     

பொழிப்புரை:

பவளத்தின் வண்ணம் போன்று சிவந்து காணப்படும் ஒளிவீசும் திருமேனியை உடைய பெருமான்  என்றும் நீங்காது உறையும் தலம் திருப்புன்கூர்; சிறந்த அழகர் என்று பலரும் புகழும் வண்ணம் வீற்றிருக்கும் பெருமான், முறுக்குண்டு பொன்னின் நிறத்தில் காணப்படும் சடையை உடையவர் ஆவார்.   

 

]]>
https://www.dinamani.com/specials/thinam-oru-thavaram/2019/jul/10/134-முந்தி-நின்ற-வினைகள்---பாடல்-5-3188936.html
3188943 ஸ்பெஷல்ஸ் தினம் ஒரு தேவாரம் 134. முந்தி நின்ற வினைகள் - பாடல் 11 என். வெங்கடேஸ்வரன் Tuesday, July 9, 2019 01:41 PM +0530  

பாடல் 11:

    மாடம் மல்கு மதில் சூழ் காழிமன்
    சேடர் செல்வர் உறையும் திருப்புன்கூர்
    நாட வல்ல ஞானசம்பந்தன்
    பாடல் பத்தும் பரவி வாழ்மினே

விளக்கம்:

இந்த பதிகத்தின் கடைக்காப்பு மற்ற பதிகங்களிலிருந்து மாறுபட்டது. இந்த பாடலில் இந்த பதிகம் பாடுவதால் நாம் அடையவிருக்கும் பலன் குறிப்பிடப்படவில்லை. அதற்கு பதிலாக இந்த பதிகத்தின் பத்து பாடல்களையும் பாடி வாழ்வீர்களாக என்று சம்பந்தர் கூறுகின்றார். இந்த பதிகத்தின் முதல் பத்து பாடல்களிலும் பெருமானின் தன்மைகளையும் பண்புகளையும் கருணைத் திறனையும் குறிப்பிட்ட சம்பந்தர், அந்த பாடல்கள் குறிப்பிடும் கருத்தினை உள்வாங்கி, அவற்றை பின்பற்றி, பெருமானை வணங்கித் தொழுது நாம் அனைவரும் வாழ்வினில் உய்வினை அடையவேண்டும் என்று சம்பந்தர் விரும்புகின்றார் போலும். அதனால் தான் பதிகத்தின் பாடல்களை மீண்டும் மீண்டும் பாடி வாழ்வீர்களாக என்று கூறுகின்றார். நாடவல்ல=ஆராய்ந்து  அறியும் வல்லமை வாய்ந்த;      

பொழிப்புரை:

உயர்ந்த மாடவீடுகள் நிறைந்ததும் உயர்ந்த மதிற்சுவர்களைக் கொண்டதும் ஆகிய சீர்காழி தலத்தின் தலைவன் ஆகிய ஞானசம்பந்தன், சான்றோர்களும் செல்வர்களும் வாழும் திருப்புன்கூர்   தலத்து இறைவனின் தன்மைகளை ஆராய்ந்து அறியும் ஆற்றலை வெளிப்படுத்திய பாடல்கள் பத்தையும் பாடி வாழ்வீர்களாக.            

முடிவுரை:

இந்த பதிகத்தின் மூன்று பாடல்களில் திரிபுரத்தை எரித்த நிகழ்ச்சி குறிப்பிடப்படுகின்றது. இவ்வாறு ஒரே பதிகத்தின் பல பாடல்களில் திரிபுரம் எரித்த நிகழ்ச்சி குறிப்பிடப்படுவது அரிது. திருப்புன்கூர் கோயிலில் உள்ள நடராஜர் சன்னதியில் ஒரு பூதகணம் பஞ்சமுக வாத்தியம் வாசிப்பதாகவும் மற்றொரு பூதகணம் மத்தளம் (குடமுழா) வாசிப்பதாகவும் சிற்பங்கள் உள்ளன.  இந்த சிற்பத்தைக் கண்ட ஞானசம்பந்தர்க்கு, பெருமான் திரிபுரத்தில் வாழ்ந்து வந்த மூன்று சிவனடியார்களை தனது இரண்டு காவல்காரர்களாகவும் குடமுழா வாசிப்பவனாகவும் நியமித்து பெருமான் கருணை புரிந்த செயலும் அதற்கு முன்னோடியாக அமைந்த திரிபுர தகனமும் நினைவுக்கு வந்தது போலும். அதனால் தான் பதிகத்தின் மூன்று பாடல்களில் திரிபுரம் எரித்த வீரச் செயலை குறிப்பிட்டார் போலும்.

சுந்தரர் தனது பாடல் ஒன்றினில் (7.54.8) பெருமான் திரிபுரத்தில் வாழ்ந்து வந்த மூன்று அடியார்களுக்கு அருள் புரிந்ததை குறிப்பிடுகின்றார். தாரகாட்சன் கமலாக்ஷன் வித்யுன்மாலி என்ற மூன்று அரக்கர்களும், தாங்கள் பின்பற்றி வந்த சிவநெறியை கைவிட்டு புத்தர்களாக மாறி சிவநிந்தனையும் வேதநிந்தனையும் செய்யத் தொடங்கினார்கள். மக்கள் அனைவரும் தங்களது மன்னனை பின்பற்றி புத்த மதத்திற்கு மாறிய போதிலும் சுதன்மன் சுசீலன் சுபுத்தி ஆகிய மூவர் சிவநெறியைக் கைவிடாமல் வாழ்ந்து வந்தனர். பெருமானிடம் தொடர்ந்து அன்பு பூண்டு அவர்கள்  வாழ்ந்து வந்தமையால் பெருமான் இவர்கள் மூவரும் அழியாமல் காத்து, திரிபுரத்தை எரித்தார். மேலும் மூவரில் இருவரை தனது கோயிலில் வாயில் காவலராகவும் ஒருவரை மத்தளம் முழக்குவராகவும் மாறும் வண்ணம் அருள் புரிந்தார் என்று காஞ்சிப்புராணம் கூறுகின்றது. அவர்களே இந்த திருக்கோயிலில் வாயில் காப்பாளராக இருப்பதாக நம்பப்படுகின்றது. பொதுவாக வாயில் காப்பாளர்கள் நுழைவாயிலைப் பார்த்த வண்ணம் நிற்பதைக் காண்கின்றோம். ஆனால் இந்த கோயிலில் அவர்கள் இருவரும் பெருமானின் சன்னதியை நோக்கிய வண்ணம் சற்று தலை சாய்த்து நிற்பதை நாம் காணலாம். காவலராக இருப்பினும் பெருமானைப் பார்த்துக் கொண்டே இருக்கவேண்டும் என்று அந்த திரிபுரத்து அடியார்கள் விரும்பினர் போலும். செற்ற=வெற்றி கொண்ட; ஞான்று=நாளில்; முழா=மத்தளம்; ஏவுதல்=கட்டளை இடுதல்;

    மூவெயில் செற்ற ஞான்று உய்ந்த மூவரில் இருவர் நின்
              திருக்கோயிலின் வாய்தல்
    காவலாளர்கள் என்று ஏவிய பின்னை ஒருவன் நீ கரி
              காடு அரங்காக
    மானை நோக்கி ஓர் மாநடம் மகிழ மணிமுழா முழக்க
             அருள் செய்த
    தேவதேவ நின் திருவடி அடைந்தேன் செழும் பொழில் திருப்புன்கூர்
              உளானே    
    

பதிகத்தின் முதல் பாடலில் ஆதி அந்தம் இல்லாத பெருமானாக விளங்கும் அவர் ஒருவர் தாம், நமது வினைகளை முற்றிலும் அழித்து, அதன் விளைவாக பிறப்பிறப்புச் சுழற்சியிலிருந்து நம்மை விடுவிக்க முடியும் என்று குறிப்பிட்ட சம்பந்தர் அடுத்த பாடலில் தேவர்கள் அனைவரும் அவரை வணங்குவதாக குறிப்பிடுகின்றார். மூன்றாவது பாடலில் அவரது உயர்வினைக் கருதி, அவரை தியானித்த தான் அவரைத் தனது தலை உச்சியின் மேல் உள்ள துவாதசாந்தப் பெருவெளியில் வைத்திருப்பதாக கூறுகின்றார். இத்தகைய சிறப்பு வாய்ந்த பெருமானின் திருவடிகளைப் பற்றிக் கொள்ளுமாறு நான்காவது பாடலில் அறிவுரை கூறப்படுகின்றது. நான்காவது பாடலில் பெருமானின் திருவடிகளின் தன்மையை குறிப்பிட்ட சம்பந்தர் ஐந்தாவது பாடலில் பெருமான் திருமேனி அழகு வாய்ந்து என்றும், ஆறாவது பாடலில் அவரது சடைமுடியின் அழகினையும் குறிப்பிடுகின்றார். முந்தைய மூன்று பாடல்களில் குறிப்பிட்ட அழகினை உடைய பெருமான் வீதிவலம் வரும் திருப்புன்கூர் வீதிகளின் சிறப்பு ஏழாவது பாடலில் குறிப்பிடப்படுகின்றது. எட்டாவது பாடலில், அழகராக விளங்கும் பெருமான் வீரமும் கருணையும் கொண்டவராக திகழ்வது எடுத்துக்காட்டுகளுடன் விளக்கப்படுகின்றது. அனைவரும்  மலைத்து நிற்கும் வண்ணம் ஆற்றல் பொருந்திய திரிபுரத்து அரக்கர்களை அழித்தமை பெருமானது வீரத்தையும், தனது இருப்பிடத்தையே பேர்த்து எடுக்க முயற்சி செய்தவன் என்பதையும் பொருட்படுத்தாது அரக்கன் இராவணனுக்கு பல வரங்கள் அளித்தமை பெருமானின் கருணையையும் உணர்த்துகின்றது. இவ்வாறு அழகும் வீரமும் கருணையும் பொருந்திய பெருமான் ஆடல் பாடல் கலைகளில் வல்லவராக விளங்கும் தன்மை ஒன்பதாவது பாடலில்  குறிப்பிடப் படுகின்றது. இவ்வாறு முதல் ஒன்பது பாடல்களில் பெருமானின் தன்மை, அழகு, கருணை வீரம் ஆகியவற்றை குறிப்பிட்டு, பெருமானை நாம் சென்று அடையவேண்டும் என்ற  ஏக்கத்தினை நம்மில் ஏற்படுத்தும் சம்பந்தர், பதிகத்தின் பத்தாவது பாடலில் நமது ஏக்கத்தினைத் தீர்த்துக் கொள்ளும் வழியினை காட்டுகின்றார். காபாலியாக வரும் பெருமானின் பிச்சைப் பாத்திரத்தில் நமது மலங்களை இட்டு, மலங்கள் நீங்கியவர்களாய், விருப்பு வெறுப்பு அற்றவர்களாய் வாழ்ந்து, பிறப்பிறப்புச் சுழற்சியிலிருந்து விடுபட்டு அவனது திருவடிகளைச் சென்று அடையவேண்டும் என்று உணர்த்துகின்றார். இந்த பதிகத்தின் கடைப்பாடல் மற்ற  பதிகங்களின் கருத்திலிருந்து மாறுபட்டு இருப்பது இந்த பதிகத்தின் தனிச் சிறப்பாகும். பதிகத்தின்  பாடல்களை மீண்டும் மீண்டும் பாடவேண்டும் என்று கூறுவதன் மூலம், பாடல்கள் உணர்த்தும் பொருட்களை புரிந்து கொண்டு அதனை நாம் அனைவரும் பின்பற்றவேண்டும் என்று உணர்த்தும் சம்பந்தர் காட்டிய வழியில் சென்று இறைவனை வணங்கித் தொழுது அவனது புகழினைப் பாடி வாழ்வினில் உய்வினை அடைவோமாக.

 

]]>
https://www.dinamani.com/specials/thinam-oru-thavaram/2019/jul/16/134-முந்தி-நின்ற-வினைகள்---பாடல்-11-3188943.html
3188935 ஸ்பெஷல்ஸ் தினம் ஒரு தேவாரம் 134. முந்தி நின்ற வினைகள் - பாடல் 4 என். வெங்கடேஸ்வரன் DIN Tuesday, July 9, 2019 01:25 PM +0530  


பாடல் 4:

    கரை உலாவு கதிர் மாமணி முத்தம்
    திரை உலாவு வயல் சூழ் திருப்புன்கூர்
    உரையின் நல்ல பெருமான் அவர் போலும்
    விரையின் நல்ல மலரச் செவடியாரே

விளக்கம்:

இந்த பாடலில் பெருமானின் திருவடிச் சிறப்பு கூறப்பட்டு அதனைப் பற்றிக்கொண்டு உய்வினை அடையுமாறு உணர்த்தப் படுகின்றது. பெருமானின் திருவருளின் வடிவமாக திருவடி கருதப் படுகின்றது. உரை=புகழ்; சென்ற பாடலில் தலத்தின் நீர்வளத்தினை உணர்த்தியவர், இந்த பாடலில்  தலத்தின் செல்வ வளத்தினை உணர்த்துகின்றார்.
  
பொழிப்புரை:

வயலின் கரைகளில் ஒளிவீசும் மாணிக்கக் கற்கள் சிதறிக் கிடக்க, வயலின் நீரினில் முத்துக்கள் உலாவும் செல்வச் செழிப்பு வாய்ந்த வயல்களை உடைய திருப்புன்கூர் தலத்தில், மிகுந்த புகழினை உடைய பெருமான் உறைகின்றார். நறுமணம் மிகுந்த மலர் ;போன்ற சிவந்த பெருமானின் திருவடிகளை கண்டு தொழுது வணங்குவீராக.   

 

]]>
https://www.dinamani.com/specials/thinam-oru-thavaram/2019/jul/09/134-முந்தி-நின்ற-வினைகள்---பாடல்-4-3188935.html
3188933 ஸ்பெஷல்ஸ் தினம் ஒரு தேவாரம் 134. முந்தி நின்ற வினைகள் - பாடல் 3 என். வெங்கடேஸ்வரன் DIN Monday, July 8, 2019 12:00 AM +0530  

பாடல் 3:

    பங்கயம் கண் மலரும் பழனத்துச்
    செங்கயல்கள் திளைக்கும் திருப்புன்கூர்க்
    கங்கை தங்கு சடையர் அவர் போலும்
    எங்கள் உச்சி உறையும் இறையாரே

விளக்கம்:

உச்சி=துவாத சாந்தத் தாமரை; பழனம்=வயல்கள்; பங்கயம்=தாமரை; பதிகத்தின் முதல் இரண்டு பாடல்களில் பெருமானை வணங்க வேண்டிய அவசியத்தையும் அவரது உயர்வினையும் குறிப்பிட்ட சம்பந்தர், இந்த இரண்டு நிலைகளையும் கருதி, பெருமானை தியானித்து தனது துவாதசாந்தப் பெருவெளியில் அவரை நிறுத்தியதாக கூறுகின்றார்.   

பொழிப்புரை:

திருப்புன்கூர் வயல்களில் தாமரை மலர்கள் மலர்கின்றன; செழுமையான கயல் மீன்கள் துள்ளி விளையாடுகின்றன. இத்தகைய நீர் வளம் நிறைந்த வயல்கள் மலிந்த திருப்புன்கூர் தலத்தில் உறையும் இறைவர் கங்கையைத் தனது சடையினில் ஏற்றவர் ஆவார். எங்களது தலைவராகிய அவர் எங்களது தலையுச்சியின் மேல் துவாதசாந்தப் பெருவெளியிலும் உறைகின்றார்.

 

]]>
https://www.dinamani.com/specials/thinam-oru-thavaram/2019/jul/08/134-முந்தி-நின்ற-வினைகள்---பாடல்-3-3188933.html
3188932 ஸ்பெஷல்ஸ் தினம் ஒரு தேவாரம் 134. முந்தி நின்ற வினைகள் - பாடல் 2 என். வெங்கடேஸ்வரன் DIN Sunday, July 7, 2019 12:00 AM +0530
பாடல் 2:

    மூவராய முதல்வர் முறையாலே
    தேவர் எல்லாம் வணங்கும் திருப்புன்கூர்
    ஆவர் என்னும் அடிகள் அவர் போலும்
    ஏவின் அல்லார் எயில் மூன்று எரித்தாரே

விளக்கம்:

ஏ=அம்பு; அல்லார்=வேதநெறியில் சாராது வாழ்ந்த திரிபுரத்து அரக்கர்கள்; மூன்றாவது அடியில் உள்ள சொற்களை அடிகள் ஆவர் என்னும் என்று மாற்றி அமைத்து பொருள் காண வேண்டும். எயில்=மதில்; பிரமன் திருமால் உருத்திரன் ஆகிய மூவருடன் இணைந்திருந்து அவர்கள் தந்தம் தொழில்களைச் செய்வதற்கு துணையாக இருப்பவன் பெருமான் என்பதை உணர்த்தும் வண்ணம் மூவராய முதல்வன் என்று சம்பந்தர்  இங்கே கூறுகின்றார். ஒரே தண்டினில் மூன்று கிளைகளாக பிரிந்துள்ள மூவிலைச் சூலத்தினை பெருமான் ஏந்துதல், நான்முகன் திருமால் உருத்திரன் ஆகிய மூவரும் தானே என்பதையும் மூன்று தொழில்களும் செய்பவன் தானே என்பதையும் உணர்த்தும் பொருட்டு என்று ஓற்றியூர் ஒருபா ஒருபது பதிகத்தின் ஆறாவது பாடலில் பட்டினத்து அடிகள் (பதினோராம் திருமுறை) கூறுகின்றார்.

    மூவிலை ஒரு தாள் சூலம் ஏந்துதல்
    மூவரும் யான் என மொழிந்தவாறே

 
மூன்று தொழில்களைச் செய்யும் மூவிலைச் சூலம் என்று அப்பர் பிரானும் ஒரு பொதுப் பதிகத்தின் பாடல் ஒன்றினில்  (5.89.3) கூறுகின்றார். தொழில் மூன்றும் ஆயின என்ற தொடரினை மூவிலைச் சூலம் என்ற தொடருடன் கூட்டி, பெரியபுராண விளக்கம் நூலின் ஆசிரியர் சிவக்கவிமணி சுப்பிரமணியம் அவர்கள் விளக்கம் கூறுகின்றார். வடமொழி ஆகமத்தில் ஜனனி ரோதயித்திரி ஆரணி ஆகிய மூன்று சக்திகளை உடையது பெருமானின் மூவிலைச் சூலம் என்று கூறப்படுகின்றது. பிரணவ மந்திரமே மூவிலைச் சூலத்தின் தண்டாக விளங்குகின்றது என்று கூறுவார்கள்,

    மூன்று மூர்த்தியுள் நின்றியலும் தொழில்
    மூன்றும் ஆயின மூவிலைச் சூலத்தன்
    மூன்று கண்ணினன் தீத்தொழில் மூன்றினன்
    மூன்று போதும் என் சிந்தையுள் மூழ்குமே

பதிகத்தின் முதல் பாடலில் பெருமானை வணங்கி நமது வினைகளை தீர்த்துக் கொள்ளுமாறு அறிவுரை கூறும் ஞானசம்பந்தர், இந்த பாடலில் பெருமான் எவ்வளவு உயர்ந்தவர் என்பதை நமக்குச் சுட்டிக் காட்டும் பொருட்டு, தேவர்களும் அவரை வணங்குவதாக குறிப்பிடுகின்றார்.    

பொழிப்புரை:

பிரமன் திருமால் உருத்திரன் ஆகிய மூவருடன் இணைந்து இருந்து அவர்கள் தத்தம் தொழில்களை செய்யும் வண்ணம் இயக்கி அந்த மூவருக்கும் முதல்வனாகத் திகழும் பெருமானை தேவர்கள் அனைவரும் முறையாக வணங்குகின்றனர். திருப்புன்கூர் தலத்தில் எழுந்தருளி இருக்கும் அவரே, வேதநெறியைச் சாராமல் நின்று பகைவர்களாக விளங்கிய திரிபுரத்து அரக்கர்களின் மூன்று பறக்கும் கோட்டைகளையும் எரித்தவர் ஆவார்.

 

 

]]>
https://www.dinamani.com/specials/thinam-oru-thavaram/2019/jul/07/134-முந்தி-நின்ற-வினைகள்---பாடல்-2-3188932.html
3188931 ஸ்பெஷல்ஸ் தினம் ஒரு தேவாரம் 134. முந்தி நின்ற வினைகள் - பாடல் 1 என். வெங்கடேஸ்வரன் Saturday, July 6, 2019 12:00 AM +0530  

பின்னணி:

வைத்தீச்வரன் கோயில் (தேவாரப் பதிகங்களில் புள்ளிருக்குவேளூர் என்று அழைக்கப்படும் தலம்) சென்று வைத்தியநாதரை, கள்ளார்ந்த என்று தொடங்கும் பதிகம் பாடி போற்றி வணங்கிய பின்னர் திருஞானசம்பந்தர், திருநின்றியூர் திருநீடூர் மற்றும் திருப்புன்கூர் தலங்கள் சென்று பெருமானை வணங்கி பதிகங்கள் பாடியதாக சேக்கிழார் பெரிய புராணத்தில் தெரிவிக்கின்றார். நீண்ட புகழ் வாய்ந்த திருநின்றியூர் சென்று ஆங்கே வீற்றிருக்கும் நிமலனாரின் திருவடிகளைத் தொழுது பெருமான் மீது காதல் கொண்டு அவரைப் போற்றி சிறந்த தமிழ்ப்பதிகம் பாடிய ஞானசம்பந்தர், சிறப்பு வாய்ந்த திருநீடூர் தலம் சென்று பெருமானை வணங்கிய பின்னர் திருபுன்கூர் தலம் சென்று நடனம் ஆடும் பெருமானின் திருப்பாதங்களை சிறப்பித்து அவனது அருளை இறைஞ்சி பதிகம் பாடினார் என்று சேக்கிழார் கூறுகின்றார். திருநின்றியூர் தலத்தின் மீது அருளிய, சூலம்படை சுண்ணப்பொடி என்று தொடங்கும் பதிகத்தினை (1.18) சிந்தித்த நாம் இப்போது திருப்புன்கூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தை சிந்திப்போம். திருநீடூர் தலத்தின் மீது திருஞானசம்பந்தர் அருளிய பதிகம் நமக்கு கிடைக்கவில்லை. திருப்புன்கூர் தலத்தின் மீது, சம்பந்தர் அப்பர் சுந்தரர் ஆகிய மூவரும் பாடிய பதிகங்கள் தலா ஒவ்வொன்று நமக்கு கிடைத்துள்ளது.

இந்த தலம் நந்தனார் சரித்திரத்துடன் தொடர்பு கொண்டது. திருக்கோயிலின் உள்ளே செல்லாமல் புறத்தே கோபுர வாயிலிலிருந்து நந்தனார் வழிபட்ட போது, இலிங்கத் திருமேனியை நந்தி மறைத்தால் காண முடியாமல் அவர் வருந்தினார். அவரது வருத்தத்தைப் போக்க திருவுள்ளம்  கொண்ட பெருமான் நந்தியை சற்று விலகுமாறு கட்டளையிட்டார் என்று பெரிய புராணம் கூறுகின்றது. இன்றும் அந்த நந்தி சற்று விலகிய நிலையில் இருப்பதை நாம் காணலாம். பிராகாரத்தின் தென்கிழக்கு மூலையில் நந்தனாரின் சன்னதி உள்ளது. சுந்தரர் தனது பதிகத்தின் பாடலில் (7.55.2) இந்த தலத்துடன் ஏயர்கோன் கலிக்காமர் தொடர்பு கொண்டுள்ள நிகழ்ச்சியை குறிப்பிடுகின்றார். ஒரு சமயம் உலகெங்கும் மழை இன்றி தவித்தபோது மழை பெய்தால் பன்னிரு வேலி நிலம் திருக்கோயிலுக்கு தருவதாக வேண்டிக்கொள்ள, பெருமழை பெய்து வெள்ளமாக ஓடியது. பின்னர் அந்த மழையினை நிறுத்த, மேலும் பன்னிரு வேலி நிலம் தருவதாக வேண்டிக்கொள்ள மழை நின்றது என்று சுந்தரர் இந்த பதிகத்தில் கூறுகின்றார். வைத்தீஸ்வரன்கோயிலிருந்து அணைக்கரை வழியாக மணல்மேடு செல்லும் பாதையில் வைத்தீஸ்வரன்கோயிலுக்கு மேற்கே சுமார் மூன்று கி,மீ, தூரத்தில் அமைந்துள்ள தலம். கும்பகோணம் மணல்மேடு பேருந்து, சீர்காழி மணல்மேடு பேருந்து, மற்றும் மயிலாடுதுறை நகரப் பேருந்து இந்த தலம் வழியாக செல்கின்றன. இறைவனின் திருநாமம்=சிவலோகநாதர்; இறைவியின் பெயர்=சொக்க நாயகி. திருக்கோயிலில் உள்ள குளம், ஒரே இரவில் விநாயகப் பெருமானின் உதவியுடன் நந்தனார் வெட்டியதாக கூறப்படுகின்றது.   
  
பாடல் 1:

    முந்தி நின்ற வினைகள் அவை போக
    சிந்தி நெஞ்சே சிவனார் திருப்புன்கூர்
    அந்தம் இல்லா அடிகள் அவர் போலும்
    கந்தம் மல்கு கமழ் புன்சடையாரே

விளக்கம்:

தலத்து இறைவனின் திருநாமம் சிவலோகநாதர் என்பது சிவனார் என்று சொல்லின் மூலம் உணர்த்தப் படுகின்றது. எந்த உயிரும் தான் கொண்டிருந்த உடலை விட்டு நீங்கிய பின்னர், தன்னுடன் பிணைந்துள்ள எஞ்சிய வினைகளைக் கழித்துக் கொள்ளும் பொருட்டு மீண்டும் மீண்டும் பிறவி எடுக்க நேரிடுகின்றது. எஞ்சியுள்ள வினைகளின் தன்மை பற்றியே, அடுத்து எடுக்கவிருக்கும் உடலின் தன்மை இறைவனால் தீர்மானிக்கப் படுகின்றது. இவ்வாறு பிறவி எடுக்கும் முன்னமே, வினைகள் முன்னமே சென்று அந்த பிறவியின் தன்மையை நிர்ணயிப்பதையும் தக்க தருணத்தில், புதிய உடலுடன் பிணைந்துள்ள அந்த உயிர்கள்,  வினைகளை நுகர்ந்து கழிக்கவேண்டிய கட்டாயத்தில் இருப்பதையும் நாம் காண்கின்றோம். இவ்வாறு வினைகள் இருக்கும் நிலையினையே முந்தி நின்ற வினைகள் என்று சம்பந்தர் இங்கே குறிப்பிடுகின்றார். இந்த வினைகளை அனைத்து உயிர்களும் அனுபவித்தே கழிக்க வேண்டிய நிலையில் பொதுவாக இருந்தாலும், சிவபெருமான் கருணையால் பக்குவப்பட்ட உயிர்களின் வினைகள் முற்றிலும் நீக்கப்படுகின்றன. அத்தகைய பக்குவம் பெறுவதற்கான முதற்படி பெருமானை வணங்கி வழிபடுதல். எனவே தான் சம்பந்தர் இந்த பாடலில், தனது நெஞ்சினுக்கு அறிவுரை கூறுவது போன்று நமக்கு அறிவுரை கூறுகின்றார். பதிகத்தின் பத்தாவது பாடலில் காபாலி வேடத்தைக் கண்டு களித்து, பெருமானின் பிச்சைப் பாத்திரத்தில் நமது மலங்களை இட்டு, உய்வினை அடையுமாறு அறிவுரை கூறுகின்றார்.  

உயிர்கள் இணைந்திருக்கும் உடல் அழிகின்றது: அதனால் எஞ்சிய வினைகளை கழித்துக் கொள்ள உயிர் மீண்டும் பிறப்பு எடுக்க நேரிடுகின்றது. ஆனால் பெருமானோ அழிவின்றி என்றும் நிலையாக இருப்பவன். அவனுக்கு இறப்பு என்பதே இல்லை; மேலும் அவன் மலங்களின் கலப்பற்றவன். எனவே மலங்களைக் கழித்துக் கொள்ள வேண்டிய அவசியம் அவனுக்கு இல்லை. அதனால் இறந்த பின்னர் மற்றவர்களுக்கு ஏற்படும் பிறப்பும் அவனுக்கு ஏற்படுவதில்லை. இவ்வாறு அழிவின்றி, அழிவினால் ஏற்படும் பிறப்பின்றி இருக்கும் பெருமான் ஒருவனே நம்மை பிறப்பிறப்புச் சுழற்சியிலிருந்து விடுவிக்க வல்லவன் என்பதை உணர்த்தும் வண்ணம் அந்தமில்லா அடிகள் என்று குறிப்பிடும் சம்பந்தர், இவ்வாறு அந்தமில்லா அடிகளாக இறைவன் இருப்பதால் அவனைத் தொழ வேண்டும் என்றும் நமக்கு அறிவுரை கூறுகின்றார். பிரமன் திருமால் உட்பட அனைத்து தேவர்களும் பிறப்பிறப்புச் சுழற்சியுடன் பிணைக்கப்பட்டு பிறந்தும் இறந்தும் இறந்த பின்னர் மீண்டும் பிறந்தும் உழல்பவர்கள். இந்த சங்கிலியிலிருந்து தன்னை  விடுவித்துக் கொள்ள முடியாதவர்கள் எவ்வாறு அந்த விடுதலையை மற்றவர்க்கு அளிக்க முடியும். எனவே தான் பெருமான் ஒருவன் மட்டுமே பிறப்பிறப்புச் சுழற்சியிலிருந்து நம்மை விடுவிக்கும் ஆற்றல் படைத்தவன் என்று திருமுறை பாடல்கள் உணர்த்துகின்றன.        
 
பொழிப்புரை:

ஒரு உடல் பிறக்கும் முன்னமே, அந்த பிறவியில் அனுபவித்து கழித்துத் தீர்க்கவேண்டிய வினைகள், அந்த உடலையும் உயிரினையும் வருத்த காத்திருகின்றன. இவ்வாறு காத்திருக்கும் வினைகளை நீங்கள் முற்றிலுமாக கழித்துக் கொள்ள விரும்பினால், நீங்கள் திருப்புன்கூர் தலத்தில் வீற்றிருக்கும் சிவலோகனாதரை சிந்திப்பீர்களாக. அழிவு என்பதே இல்லாமல் என்றும் நிலையாக இருக்கும் சிவபெருமான், நறுமணம் கமழும் செம்பட்டை நிறத்தில் உள்ள சடையை உடையவர் ஆவார்.       

 

]]>
https://www.dinamani.com/specials/thinam-oru-thavaram/2019/jul/06/134-முந்தி-நின்ற-வினைகள்---பாடல்-1-3188931.html
3185354 ஸ்பெஷல்ஸ் தினம் ஒரு தேவாரம் 133. சூலம்படை சுண்ணப்பொடி - பாடல் 11 என். வெங்கடேஸ்வரன் DIN Friday, July 5, 2019 12:00 AM +0530  

பாடல் 11:

    குன்றம் அது எடுத்தான் உடல் தோளும் நெரிவாக
    நின்று அங்கு ஒரு விரலால் உற வைத்தான் நின்றியூரை
    நன்றார் தரு புகலித் தமிழ் ஞானம் மிகு பந்தன்
    குன்றாத் தமிழ் சொல்லக் குறைவின்றி நிறை புகழே

 
விளக்கம்:

பொதுவாக பதிகத்தின் கடைக் காப்பினில் இராவணன் குறித்த நிகழ்ச்சி குறிப்பிடப் படுவதில்லை. இந்த பதிகத்தின் எட்டாவது பாடல் சிதைந்ததால், இராவணின் வலிமையை அடக்கிய தன்மையும் நமக்கு கிடைக்கவிலையே என்ற குறை தீரும் பொருட்டு இந்த குறிப்பு அமைந்துள்ளதோ என்று தோன்றுகின்றது. தமிழ் என்பது இங்கே தேவாரப் பதிகங்களை குறிக்கும். குன்றாத் தமிழ்= பலன்களை அளிப்பதில் பாடிய நாள் முதல் முதல் என்றும் மாறாது விளங்கும் தேவாரப் பதிகங்கள்;
    
பொழிப்புரை:

கயிலை மலையினை பேர்த்து எடுக்கத் துணிந்த அரக்கன் இராவணனின் உடலும் தோள்களும், கயிலை மலையின் கீழே அமுக்குண்டு நொறுங்கும் வண்ணம், தனது கால் பெருவிரலை மலையினின் மீது ஊன்றிய பெருமானை, நின்றியூர் தலத்தில் உறையும் பெருமானின் புகழினைப் போற்றி, தன்னை வந்தடையும் அடியார்களுக்கு நன்மை அளிக்கும் புகலித் தலத்தில் தோன்றியவனும் தமிழ் மொழியில் எல்லையற்ற ஞானம் உடையவனும் ஆகிய ஞானசம்பந்தன் சொல்லிய இந்த பத்து பாடல்களை, ஓதுவோருக்கு அன்றைய நாள் முதல் குன்றாத பலன்களை அளிக்கும் வல்லமை பெற்ற இந்த பாடல்களை, முழு மனதுடன் பக்தி வைத்து சொல்லும் வல்லமை பெற்ற அடியார்கள் வாழ்வினில் குறையேதும் இன்றி நிறைவான புகழினை பெற்று விளங்குவார்கள்.          

முடிவுரை:

பதிகத்தின் முதல் பாடலில் பண்டைய நாளில் தனது அடியானின் உயிரைக் கவர்ந்து செல்ல முயற்சி செய்த இயமனின் வலிமையை வீழ்த்தி மார்க்கண்டேயனுக்கு அருள் செய்த நிகழ்ச்சி குறிப்பிடப் படுகின்றது. இந்த நிகழ்ச்சியின் விளைவாக அன்று முதல் பெருமானின் அடியார்கள் அச்சம் இன்றி வாழ்வதாக இரண்டாவது பாடலில் சம்பந்தர் குறிக்கின்றார். மூன்றாவது பாடலில் அனைத்து ஒலிகளுக்கும் ஆதாரமாக இறைவனின் உடுக்கையிலிருந்து எழுந்த ஒலி இருப்பது உணர்த்தப் படுகின்றது. நான்காவது பாடலில் இறைவனைத் தொழும் அடியார்கள் மட்டுமே இறைவனின் தன்மைகளை உணரமுடியும் என்பது சொல்லப் பட்டுள்ளது. ஐந்தாவது பாடலில் இறைவன் ஒருவனே அனைத்து உயிர்களுக்கும் பற்றுக்கோடு என்று உணர்த்தி நாம் இறைவனைத் தொழ வேண்டிய அவசியத்தை சம்பந்தர் கூறுகின்றார். அவ்வாறு இறைவன் ஒருவனே பற்றுக்கோடு என்பதை உணர்ந்ததால் தனது மனம் அவனது திருவடிகளையன்றி வேறெதையும் உணராது என்று தனது தன்மையை எடுத்துரைத்து நமக்கு வழிகாட்டும் பாங்கினை ஆறாவது பாட்டினில் நாம் உணரலாம். உயிர்கள் உய்ய ஒரு வாய்ப்பினை அளிக்கும் பொருட்டுத் பலியேற்று திரிவதை என்றும் மாறாத இயல்பாக பெருமான் கொண்டுள்ள தன்மை ஏழாவது  பாடலில் சொல்லப் பட்டுள்ளது. இவ்வாறு என்றும் மாறாத கருணை உள்ளம் கொண்ட பெருமானின் திருவடிகளைத் தவிர்த்து தனது சிந்தை வேறெதையும் உணராது என்று ஒன்பதாவது பாடலில் கூறுகின்றார். நாம் புகழ்ந்து கூறும் சொற்களுக்கு தகுதி படைத்தவனாக இறைவன் ஒருவன் மட்டுமே இருப்பதால், அவனைப் புகழ்ந்து கூறும் சொற்களே உண்மையான வாழ்த்து என்று பத்தாவது பாடலில் குறிப்பிடும் சம்பந்தர், தேவாரப் பதிகங்கள் அன்று முதல் இன்று வரை பலன்கள் அளிப்பதில் குறையாத தன்மையுடன் விளங்குகின்றன என்று கூறுகின்றார். நாமும் சம்பந்தர் காட்டிய வழியில் சென்று, இறைவனைத் தவிர்த்து வேறு எதையும் நமது உள்ளத்தால் உணராது, அவனது திருவடிகளைத் தொழுது அவனது தன்மைகளை முழுவதும் அறிந்து கொண்டு, அவனையே பற்றுக்கோடாக நினைத்து வாழ்ந்து, அவனது திருவடிகளையே எப்போதும் சிந்தனை செய்து, உரிய முறையில் அவனை வாழ்த்தி, தேவார திருவாசக பதிகங்களை ஓதி, என்றும் குறையாத பெருமானின் அருள் பெற்று நிறைவாக வாழ்வோமாக.

 

]]>
https://www.dinamani.com/specials/thinam-oru-thavaram/2019/jul/05/133-சூலம்படை-சுண்ணப்பொடி---பாடல்-11-3185354.html
3185353 ஸ்பெஷல்ஸ் தினம் ஒரு தேவாரம் 133. சூலம்படை சுண்ணப்பொடி - பாடல் 10 என். வெங்கடேஸ்வரன் DIN Thursday, July 4, 2019 05:50 PM +0530
பாடல் 10:

    நெறியில் வரு பேரா வகை நினையா நினைவு ஒன்றை
    அறிவில் சமண் ஆதர் உரை கேட்டும் அயராதே
    நெறி இல்லவர் குறிகள் நினையாதே நின்றியூரில்
    மறி ஏந்திய கையான் அடி வாழ்த்தும் அது வாழ்த்தே

விளக்கம்:

ஆதர்=கீழ்மக்கள்; நெறி=சைவ சமயநெறி; அயர்தல்=மயங்குதல்; இந்த பாடலில் பெருமானின் திருவடிகளை வாழ்த்துவதே வாழ்த்தாக கருதப்படும் என்று சம்பந்தர் கூறுகின்றார். ஏனெனில் பொதுவாக வாழ்த்தொலிகளில் குறிப்படப்படும் அனைத்துப் புகழ் சொற்களுக்கும் முழுதும் பொருந்தும் வண்ணம் விளங்குபவன் பெருமான் ஒருவன் தான். எனவே ஏனையோரை புகழ்ந்து சொல்லப்படும் வாழ்த்துகள், வெறும் உபசார வார்த்தைகளே தவிர வேறொன்றுமில்லை என்று சம்பந்தர் இந்த பாடல் மூலம் உணர்த்துகின்றார்.

தொன்றுதொட்டு வரும் வைதீக நெறியினைச் சார்ந்த சைவசமயம் ஒன்றே பிறப்பிறப்புச் சுழற்சியிலிருந்து விடுதலை பெறுகின்ற வழியினை உணர்த்தும் சமயம். ஏனைய புறச் சமயங்கள் இடையில் தோன்றியவை; மேலும் அந்த சமயங்கள் முக்தி நெறிக்கு வழிகாட்டுவதில்லை என்பதால் சைவ சமயம் தவிர்த்த மற்ற சமயங்களை புறக்கணிக்குமாறு சம்பந்தர அறிவுரை கூறுகின்றார். நிலையான முக்தி நெறிக்கு வழி வகுப்பதால் சைவசமயத்தை உண்மை நெறி என்றும் முத்திக்கு நிலைக்கு அழைத்துச் செல்லாத மற்ற சமயங்களை நெறியற்றவை என்றும் சம்பந்தர் இங்கே உணர்த்துகின்றார்.  

இந்த பாடல் நமக்கு சுந்தரர் புகலூர் மீது அருளிய பாடலை (7.34.2) நினைவூட்டுகின்றது. தகுதி அற்றவர்களை புகழ்ந்து பாடுவதால் நமக்கு ஏதும் கிடைக்காது என்பதால், தகுதி உள்ள ஒருவனாகிய பெருமானைப் புகழ்ந்து பாடுங்கள்; நீங்கள் வேண்டுவன பெற்று அமரர் உலகினை ஆளும் தகுதியும் பெறுவது திண்ணம் என்று சுந்தரர் இந்த பாடலில் கூறுகின்றார்.

    மிடுக்கு இலாதனை வீமனே விறல் விசயனே வில்லுக்கு இவன் என்று
    கொடுக்கிலாதானைப் பாரியே என்று கூறினும் கொடுப்பார் இலை
    பொடிக் கொள் மேனி எம் புண்ணியன் புகலூரைப் பாடுமின் புலவீர்காள்
    அடுக்கு மேல் அமர் உலகம் ஆள்வதற்கு யாதும் ஐயுறவு இல்லையே

பொழிப்புரை:

தொன்றுதொட்டு மாறுபாடின்றி வரும் சைவ சமய நெறியை பயில்வதால் நாம் உணர்வதும், நிலையாக என்றும் பெயராமல் இருப்பதும் ஆகிய முழுமுதல் கடவுளாகிய நினையாத அறிவினை உடைய அறிவற்ற கீழ்மக்கள் ஆகிய சமணர்கள் மற்றும் புத்தர்களின் சொற்களை கேட்டு, மயங்காமலும், தமக்கென்று உண்மையான முக்தி நிலைக்கு வழிகாட்டும் நெறியற்ற புறச் சமயங்களின் அடையாளங்களை நினையாமலும், நின்றியூரில் வாழ்பவனும் மான் கன்றினை தனது கையில் ஏந்தியவனும் ஆகிய பெருமானை புகழ்ந்து பேசும் வாழ்த்துரைகளே உண்மையான வாழ்த்து  ஆகும்.

 

]]>
https://www.dinamani.com/specials/thinam-oru-thavaram/2019/jul/04/133-சூலம்படை-சுண்ணப்பொடி---பாடல்-10-3185353.html
3185352 ஸ்பெஷல்ஸ் தினம் ஒரு தேவாரம் 133. சூலம்படை சுண்ணப்பொடி - பாடல் 9 என். வெங்கடேஸ்வரன் DIN Wednesday, July 3, 2019 12:00 AM +0530  

பாடல் 9:

    நல்லம் மலர் மேலானொடு ஞாலம் அது உண்டான்
    அல்லர் என ஆவர் என நின்றும் அறிவரிய
    நெல்லின் பொழில் சூழ்ந்த நின்றியூரின் நிலையார் எம்
    செல்வர் அடி அல்லாது என சிந்தை உணராதே

விளக்கம்:

தமது முன்னர் எழுந்த அழற்றூணின், இயல்பினை அறியமாட்டாது, பகைவரோ எவரோ என்று இன்னதொன்று அறியாத நிலையில் பிரமனும் திருமாலும் திகைத்து நின்ற நிலை, அல்லர் என ஆவார் என்ற தொடரால் குறிப்பிடப்படுகின்றது. மற்ற எவரும் உயிர்களுக்குத் தலைவர் அல்லர் தாம் ஒருவனே உயிர்களுக்குத் தலைவன் என்று செருக்குடன் நின்ற நிலையை குறிப்பிடுவதாக கொள்வதும் பொருத்தமே. அல்லர் என ஆவர் என நின்றும் என்ற தொடருக்கு வேறுவிதமாகவும் விளக்கம் அளிக்கப்படுகின்றது. தான் பெருமானின் திருமுடியைக் கண்டதாக பொய் பேசிய  பிரமன் மற்றும் தன்னால் திருவடியைக் காண இயலவில்லை என்று உண்மை பேசிய திருமால் என்று பொருள் கொள்வதும் பொருத்தமாக உள்ளது. நல்ல மலர்=தாமரை மலர்; கண்ணனாக அவதாரம் செய்த போது, தனது மகன் மண்ணைத் தின்று விட்டானே என்ற கவலையில் அவனது வாயினைத் திறத்து யசோதை பார்த்தபோது, அவனது வயிற்றினில் உலகம் இருப்பதைக் கண்ட செய்தி இங்கே உணர்த்தப் படுகின்றது.

மாறுபட்டு தங்களுக்குள் வாதம் செய்த தகவல் திருவாசகம் தோள்நோக்கம் பதிகத்தில் கூறப்பட்டுள்ளதை நாம் இங்கே காணலாம்.. இறந்து என்றால் கடந்து என்று பொருள். அளவு கடந்து நின்ற தன்மை இங்கே உணர்த்தப்பட்டுள்ளது.

    பிரமன் அரி என்று இருவரும் தம் பேதமையால்
    பரமம் யாம் பரம் என்று அவர்கள் பதைப்பொடுங்க
    அரனார் அழலுருவாய் அங்கே அளவிறந்து
    பரமாகி நின்றவா தோணோக்கம் ஆடாமோ

இந்த நிகழ்ச்சியை விவரிக்கும் திருமந்திரப் பாடலிலும், தானே பெரியவன் என்று இருவரும் ஒருவருக்கொருவர் வாதம் செய்தது குறிப்பிடப் படுகின்றது. பேதமை என்று அவர்களது அறிவற்ற செயல் உணர்த்தப்பட்டுள்ளது.

    பிரமனும் மாலும் பிரானே நான் என்னப்
    பிரமன் மால் தங்கள் தம் பேதமையாலே
    பரமன் அனலாய்ப் பரந்து முன் நிற்க
    அரனடி தேடி அரற்றி நின்றாரே

தங்களுக்குள்ளே யார் மேம்பட்டவர் என்று வாதம் செய்து கொண்டிருந்த பிரமன் மற்றும் திருமாலின் முன்னே எழுந்த தீப்பிழம்பினைக் கண்டு, அந்த தீப் பிழம்பின் இரண்டு புறத்திலும் நின்ற பிரமனும் திருமாலும் இறைவனைப் பணிந்த செய்தி, சொல்லப்படும் அப்பர் பிரானின் பாடல் (4.14.2)  இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. பரம் ஒரு தெய்வம்=தங்களுக்கு அப்பாற்பட்ட பரமாகிய ஒரு தெய்வம்:  தம்பம்=தூண்

    நிரவொலி வெள்ளம் மண்டி நெடு அண்டம் மூட நிலம் நின்று தம்பம் அதுவப்
    பரம் ஒரு தெய்வம் எய்த இது ஒப்பது இல்லை இருபாலும் நின்று பணியப்
    பிரமனும் மாலும் மேலை முடியோடு பாதம் அறியாமை நின்ற பெரியோன்
    பர முதலாய தேவர் சிவனாய மூர்த்தி அவனா நமக்கொர் சரணே    

பொழிப்புரை:

நல்ல மலராகிய தாமரை மலரின் மேல் அமரும் பிரமனும், உலகினை உண்டவன் என்று கருதப்படும் திருமாலும் தங்களுக்குளே தானே தலைவன் என்றும் அடுத்தவர் தலைவன் அல்ல என்றும் வாதம் செய்து கொண்டிருந்த போது, அவர்கள் இருவரும் அடியையும் முடியையும் காண முடியாமல் தவித்து திற்கும் வண்ணம் நெடிய தீப்பிழம்பாக நின்றவன் பெருமான் .அத்தகைய பெருமான் நெல்வயல்கள் சூழ்ந்த நின்றியூர் தலத்தில் நிலையாக உறைகின்றார். அனைத்துச் செல்வங்களிலும் உயர்ந்த முக்திச் செல்வதைத் தன்னிடம் வைத்துள்ள செல்வராகிய பெருமானின் திருவடிகளை தவிர்த்து வேறு எதையும் எனது சிந்தை உணராது.  

 

]]>
https://www.dinamani.com/specials/thinam-oru-thavaram/2019/jul/03/133-சூலம்படை-சுண்ணப்பொடி---பாடல்-9-3185352.html
3185351 ஸ்பெஷல்ஸ் தினம் ஒரு தேவாரம் 133. சூலம்படை சுண்ணப்பொடி - பாடல் 7 என். வெங்கடேஸ்வரன் DIN Tuesday, July 2, 2019 12:00 AM +0530
பாடல் 7:

    பற்றி ஒரு தலை கையினில் ஏந்திப் பலி தேரும்
    பெற்றி அதுவாகித் திரி தேவர் பெருமானார்
    சுற்றி ஒரு வேங்கை அதளோடும் பிறை சூடும்
    நெற்றி ஒரு கண்ணார் நின்றியூரின் நிலையாரே
 

விளக்கம்:

பற்றி=பறித்து; பெற்றி=தன்மை; உலகத்தவர் உய்வதற்காக பலி ஏற்கும் பெருமான் இன்றும் தொடர்ந்து பலி ஏற்றுக் கொண்டு இருக்கின்றான். செம்பொன்பள்ளி பதிகத்தின் முதல் பாடலில் (5.36.1)  பலி ஏற்கும் கொள்கையிலிருந்து தவறாமல் பலி ஏற்கின்றான் என்று நமக்கு அப்பர் பிரான் உணர்த்துகின்றார். கான்=நறுமணம்: வெண் தலை=தசை நீங்காத தலை; அறாத=நீங்காத

    கான் அறாத கடி பொழில் வண்டினம்
    தேன் அறாத திருச்செம்பொன்பள்ளியான்
    ஊன் அறாததோர் வெண் தலையில் பலி
    தான் அறாததோர் கொள்கையன் காண்மினே

சீர்காழி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடல் ஒன்றினில் (3.56.5), இறைவன் ஒவ்வொரு நாளும் பலி ஏற்கின்றான் என்று சம்பந்தர் குறிப்பிடும் பாடல் இங்கே கொடுக்கப் பட்டுள்ளது. எனவே பலி ஏற்பது அவனது தன்மை என்பதை நாம் உணர்கின்றோம்.

    நச்சரவச் சடை மேல் நளிர் திங்களும் ஒன்ற வைத்து அங்கு
    அச்சம் எழ விடை மேல் அழகார் மழு ஏந்தி நல்ல
    இச்சை பகர்ந்து மிக இடுமின் பலி என்று நாளும்
    பிச்சை கொள் அண்ணல் நண்ணும் பிரமாபுரம் பேணுமினே

பலி என்ற வடமொழிச் சொல்லுக்கு, வணக்கத்துடன் சமர்பிப்பது என்றும் பணிவாக அளிப்பது என்றும் பொருள். சிவபெருமானுக்கு நாம் இடும் பிச்சையை வணக்கத்துடன், பணிவுடன் சமர்பிக்க வேண்டும் என்பதை உணர்த்தும் விதமாக, பிச்சை என்ற சொல் தவிர்க்கப்பட்டு பலி என்ற சொல் திருமுறைப் பாடல்களில் மிகவும் அதிகமாக பயன்படுத்தப் பட்டுள்ளது. சிவபெருமான் எதற்காக பலி ஏற்கின்றார் என்பதற்கு திருமூலர் விளக்கம் (ஏழாம் தந்திரம், பிட்சாவிதி அதிகாரம்) அளிக்கின்றார். இரந்துணி=இரந்து உண்பவன், பிச்சை எடுத்து உண்பவன்; நாம் அனுபவிக்கும் போகம் அனைத்தும், (உண்ணும் உணவு உட்பட) இறைவன் நமக்கிட்ட பிச்சை என்று உணரும் அடியார்கள், அந்த நினைப்பின் வழி நின்று, எப்போதும் இறைவனின் கருணையை நினைந்து இருப்பார்கள். அவர்கள் தங்களுடன் பிணைந்துள்ள ஆணவம் கன்மம் மாயம் ஆகிய மும்மலங்களை, பெருமானிடம் சமர்ப்பித்து விட்டு உலகப் பொருட்களின் மீது பற்றுதலை ஒழித்து வாழ்வார்கள். இவ்வாறு வாழும் அடியார்கள், பற்றின்மை காரணமாக வினைகளை மேலும் சேர்த்துக் கொள்ளாமல் இருப்பார்கள். பழைய வினையின் காரணமாக தாங்கள் அனுபவிக்கும் இன்ப துன்பங்கள் இறைவன் அளித்த பிச்சை என்று கருத்துடன், எல்லாம் ஈசன் செயல் என்று செயல்படுவதால், அவர்கள் அனுபவிக்கும் இன்ப துன்பங்கள் புதிய வினைகளுக்கு அடிகோல மாட்டா. இத்தகைய பக்குவம் பெற்ற உயிர்கள், பழைய வினைத் தொகுதிகளால் மாற்றம் ஏதும் அடைவதில்லை என்பதால், வினைகளை அவர்கள் கழித்து அனுபவிக்க வேண்டும் என்ற நிலையிலிருந்து அவர்களை விடுவித்து, அவர்களது வினைகளை தானே வாங்கிக் கொண்டு, அவர்கள் தனது திருவடி நீழலை அடையுமாறு இறைவன் அருள் புரிகின்றான்.      

    பரந்து உலகேழும் படைத்த பிரானை
    இரந்துணி என்பர் எற்றுக்கு இரக்கும்        
    நிரந்தரமாக நினையும் அடியார்
    இரந்துண்டு தன் கழல் எட்டச் செய்தானே

பொழிப்புரை:

தனது கை நகத்தால் கிள்ளி எறிந்த பிரமனது தலையினைக் கையில் பற்றிக் கொண்டு பல இடங்களிலும் திரிவது, தேவர்களின் தலைவனாக விளங்கும் பெருமானின் இயல்பாகும். இவ்வாறு பலி ஏற்கும் பெருமான் தனது இடுப்பினில் புலித்தோலைச் சுற்றிக்கொண்டும், பிறைச் சந்திரனைத் தனது சடையில் சூடிக் கொண்டும் தனது நெற்றியினில் ஒரு கண் உடையவராகவும்  இன்றியோர் தலத்தில் நிலையாக உறைகின்றார்.   

பாடல் 8: சிதைந்தது

]]>
https://www.dinamani.com/specials/thinam-oru-thavaram/2019/jul/02/133-சூலம்படை-சுண்ணப்பொடி---பாடல்-7-3185351.html
3185350 ஸ்பெஷல்ஸ் தினம் ஒரு தேவாரம் 133. சூலம்படை சுண்ணப்பொடி - பாடல் 6 என். வெங்கடேஸ்வரன் Monday, July 1, 2019 12:00 AM +0530
பாடல் 6:

    மூரன் முறுவல் வெண்ணகை உடையாள் ஒரு பாகம்
    சாரன் மதி அதனோடுடன் சலவம் சடை வைத்த
    வீரன் மலி அழகார் பொழில் மிடையும் திரு நின்றி
    ஊரன் கழல் அல்லாது எனது உள்ளம் உணராதே
   

விளக்கம்:

சலவம்-கங்கை; மூரல் என்ற சொல் எதுகை கருதி மூரன் என்று மாறியுள்ளது. மூரல் முறுவல்= மிகவும் சிறிய புன்சிரிப்பு; சாரன்=சார்ந்து இருப்பவன்; பொழில்=சோலை; மிடையும்=நெருங்கி இருத்தல். இந்த பாடலில் ஞானசம்பந்தர் பெருமானது திருப்பாதங்களைத் தவிர்த்து வேறு எதனையும் தொழாத அறிவு உடையவனாக தான் இருப்பதாக கூறுகின்றார். இவ்வாறு அவர் கூறுவது அவர் அருளிய பிறையணி படர்சடை என்று தொடங்கும் பதிகத்தின் பாடலை (1.19.4) நமது நினைவுக்கு கொண்டுவருகின்றது.. நறநிறை=நறவு என்ற சொல் குறைந்து நற என வந்துள்ளது; நறவு=தேன்;

    முதிருறு கதிர் வளர் இளமதி சடையனை நறநிறை தலை தனில்
    உதிருறு மயிர்பிணை தவிர் தசையுடை புலியதள் இடை இருள் கடி
    கதிருறு சுடரொளி கெழுமிய கழுமலம் அமர் மழு மலி படை
    அதிருறு கழலடிகளதடி தொழும் அறிவு அலது அறிவு அறியமே

நமக்கு வழிகாட்டும் நல்லோராகிய நால்வரும் சிவபெருமானைத் தவிர வேறு எவரையும் போற்றாது இருந்த தன்மையை அவர்களது வாழ்விலிருந்து நாம் அறிகின்றோம். அவர்களது இந்த கொள்கை அவர்களின் பல பாடல்களில் வெளிப்படுகின்றது. அத்தகைய பாடல்கள் சிலவற்றை நாம் இங்கே காண்போம். வாழாப்பத்து பதிகத்தின் கடைப் பாடலில் மணிவாசகர், பெருமானை அன்றி வேறு எவரையும் தனக்குத் துணையாக கருத மாட்டேன் என்றும் அவரைத் தவிர்த்து வேறு எவரையும் தொழமாட்டேன் என்றும் கூறுகின்றார். இந்த பாடலின் முதல் அடியில் கருணையே உருவமாக உள்ள பிராட்டியைத் தனது உடலின் ஒரு பாகத்தில் வைத்துள்ள பெருமான் என்று அடிகளார் கூறுகின்றார். பண்டைய நாளிலிருந்து இடைவிடாது தொடர்ச்சியாக அடியார்களுக்கு அருள் புரிந்து வரும் அன்னையை, குற்றம் ஏதும் இல்லாதவள் என்று அடியார்கள் புகழ்வதாக அடிகளார் கூறுகின்றார், இனியும் தொடர்ந்து வாழ்வதில் தனக்கு விருப்பம் ஏதும் இல்லாமையால், பெருமானே நீ என்னை விரைவில் அழைத்துக் கொள்வாயாக என்று விண்ணப்பம் வைக்கும் பாடல்.     

    பழுது இல் தொல் புகழாள் பங்க நீ அல்லால் பற்று நான் மற்று
     இலேன் கண்டாய்
    செழு மதி அணிந்தாய் சிவபுரத்து அரசே திருப்பெருந்துறை
     உறை சிவனே
    தொழுவனோ பிறரைத் துதிப்பனோ எனக்கு ஓர் துணை என
     நினைவனோ  சொல்லாய்  
    மழ விடையானே வாழ்கிலேன் கண்டாய் வருக என்று
     அருள் புரியாயே

மேற்கண்ட பாடலில் பெருமானே உன்னைத் தவிர பற்றுக்கோடு வேறேதும் எனக்கு இல்லை என்று அறிவிக்கும் அடிகளார், தனது நிலையை பெருமானே நீ இன்னும் காணவில்லையா என்று கேட்கும் வகையில், கண்டாய் என்ற சொல்லை கையாண்டுள்ளார்.  இந்த பதிகத்தின் அனைத்துப் பாடல்களிலும் பற்று நான் மற்றிலேன் கண்டாய் என்ற தொடர் வருகின்றது. இந்த பதிகத்தின் முதல் பாடல், இந்த தொடர் உணர்த்தும் செய்தியை மிகவும் அழகாக எடுத்துரைக்கின்றது. பெருமானே உன்னைத் தவிர வேறு பற்றுக்கோடு ஏதும் கொள்ளாமல் வாழும் எனக்கு அருள் புரியாமல் இருக்கின்றாயே இது நியாயமா என்று கேட்பது போன்று அமைந்துள்ள பாடல். பெருமான் ஒருவனே தனக்கு பற்றுக்கோடு என்பதால், அவனைத் தவிர வேறு எவரிடமும் சென்று முறையிடேன் என்று புலம்பும் அடிகளார், அவன் அருள் புரியாமல் இருப்பதால் அவன் மீது தான் கோபம் கொண்டாலும் அவனது அருளினை தொடர்ந்து வேண்டுவதையும் நாம் உணரலாம்.   

 பாரொடு விண்ணாய் பரந்த எம் பரனே பற்று நான் மற்றிலேன் கண்டாய்
 சீரொடு பொலிவாய் சிவபுரத்து அரசே திருபெருந்துறை உறை சிவனே
 ஆரொடு நோகேன் ஆர்க்கு எடுத்து உரைக்கேன் ஆண்ட நீ அருளிலை ஆனால்
 வார்கடல் உலகில் வாழ்கிலேன் கண்டாய் வருக என்று அருள் புரியாயே

தனது இடது கண்ணில் பார்வை வரப்பெற்று, வலது கண்ணில் பார்வை வேண்டி திருவாரூரில் வீற்றிருக்கும் இறைவனை வணங்கி பதிகம் பாடிய சுந்தரர், வேறு எவரையும் வேண்டாது தான் இருந்த நிலையினை மீளா அடிமை என்று தொடங்கும் பதிகத்தின் முதல் பாடலில் (7.95.1) உணர்த்துகின்றார். இறைவனிடம் நாம் கொண்டுள்ள அடிமைத்திறம் நமது வாழ்நாள் முழுவதும் நம்மிடம் இருக்க வேண்டும். அந்த அடிமைத் தன்மையிலிருந்து நாம் வெளியே வாராமல் பெருமானுக்கு எப்போதும் திருத்தொண்டு செய்பவர்களாய். அடிமைத் திறத்திலிருந்து மீளாமல் இருக்க வேண்டும். மேலும் நமது தேவைகளையும் அவரிடமே முறையிட்டு பெறுதல் வேண்டும் அவ்வாறு இருந்ததால் தான் சுந்தரர் தன்னை மீளா அடிமை என்று திருவாரூர் பதிகத்தில் (7.95) சொல்லிக் கொள்கின்றார்.

    மீளா அடிமை உமக்கே ஆளாய் பிறரை வேண்டாதே
    மூளாத் தீ போல் உள்ளே கனன்று முகத்தால் மிக வாடி
    ஆளாய் இருக்கும் அடியார் தங்கள் அல்லல் சொன்னக்கால்
    வாளாங்கு இருப்பீர் திருவாரூரீர் வாழ்ந்து போதீரே

மாசில் வீணையும் என்று தொடங்கும் பதிகத்தின் ஒரு பாடலில், அப்பர் பிரான், சிவபெருமானுக்கு மீளாத அடிமையாக இருந்து, மெய்ப்பொருளாகிய சிவபெருமானை அடையாத மனிதர்களை, வீணான வாழ்க்கை வாழ்பவர்கள் என்று கூறுகின்றார். அறிவு வளர்ச்சி பெற்று, ஒரு வேலையில் அமர்ந்து பொருள் ஈட்டும் திறம் பெற்று, தனது காலில் நிற்கும் தன்மையை அடைந்த மனிதனை நாம் ஆளாகி விட்டான் என்று கூறுகின்றோம். ஆனால் அப்பர் பிரான் ஆளாக கருதுவது, பெருமானது அடியார்களைத் தான். ஏனென்றால் அவர்கள் தானே, நிலையான இன்பம் அளிக்கக் கூடிய முக்தி நிலைக்கு செல்வதற்கான வழியில் அடியெடுத்து வைத்தவர்கள். அவ்வாறு ஆளாகாத ஒருவன், சிவபெருமானின் அடியார் ஒருவரை அணுகி, ஆளாகும் நிலையினை அடைந்து உய்வினை அடைய வேண்டும் என்றும் இந்த பாடலில் கூறுகின்றார்.     

    ஆளாகார் ஆளானாரை அடைந்து உய்யார்
    மீளா ஆட்செய்து மெய்ம்மையுள் நிற்கிலார்
    தோளாத சுரையோ தொழும்பர் செவி
    வாளா மாய்ந்து மண்ணாகிக் கழிவரே

  
இவ்வாறு சம்பந்தர் கூறுவதை கருத்தினில் கொண்டு தான், பெருமானின் திருவடிகளைத் தவிர்த்து வேறு எதையும் பேணாத சம்பந்தர் என்று சுந்தரர் கூறுகின்றாரோ? சுந்தரர் தனது திருத்தொண்டத் தொகை பதிகத்தில் திருஞான சம்பந்தரைக் குறிப்பிடும் வரிகளை நினைவூட்டுகின்றது. வம்பறா வரிவண்டு மணம் நாற மலரும் மதுமலர் நல் கொன்றையான் அடி அலால் பேணா எம்பிரான் சம்பந்தன் என்று கூறுகின்றார். கொன்றைசூடியின் திருவடிகளைத் தவிர்த்து வேறு எதையும் போற்றி வழிபடாத சம்பந்தர் என்று சுந்தரர் கூறுகின்றார். அச்சிறுபாக்கம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் கடைப் பாடலில், கையில் மான்கன்றினை ஏந்திய பெருமானின் திருவடிகளைத் தவிர்த்து வேறு எதையும் பேணாத கருத்தினை உடையவன் என்று தன்னை திருஞான சம்பந்தர் குறிப்பிடுவதை நாம் கீழ்க்கண்ட பாடலில் (1.77.11) உணரலாம். கருங்குவளை மலர்கள் பொழியும் தேனினை உட்கொள்ளும் தவளைகளின் வாய் நிறைந்துள்ள நிலையும், வாளை மீன்கள் துள்ளி விளையாடுவதால் புதியதாக மலர்ந்த மலர்களின் இதழ்கள் கிழியும் நிலையும் குறிப்பிடப்பட்டு சீர்காழி நகரின் நீர்வளமும் நிலவளமும் சம்பந்தரால் நமக்கு உணர்த்தப்படுகின்றது.         

    மைச்செறி குவளை தவளை வாய் நிறைய மதுமலர்ப்
         பொய்கையில் புதுமலர் கிழிய
    பச்சிற வெறி வயல் வெறி கமழ்ப் பதி அவர் அதிபதி
          கவுணியர் பெருமான்
    கைச் சிறு மறியவன் கழல் அலால் பேணாக் கருத்துடை
          ஞான சம்பந்தன தமிழ்  கொண்டு
    அச்சிறுபாக்கத்து அடிகளை ஏத்தும் அன்புடை அடியவர்
         அருவினை இலரே

இவ்வாறு சம்பந்தர் கூறுவது நமக்கு சுந்தரர் வன்பார்த்தான் பனங்காட்டூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் ஒரு பாடலை (7.86.7) நினைவூட்டுகின்றது. பெருமானை அறியாதவர்களின் அறிவு அறிவாக கருதப்படாது என்று சுந்தரர் இந்த பாடலில் கூறுகின்றார் மெய்ப்பொருளாய் இருப்பவனும் வெண்மையாக உள்ள திருநீற்றினை தனது உடல் முழுவதும் பூசுபவனும், வேதங்களின் தலைவனும், தனது கையினில் மான் மற்றும் மழு ஏந்தியவனும், அனைவரது வாழ்நாளினை முடிக்கும் காலனின் வாழ்நாளை முடித்தவனும், படத்தினை உடைய பாம்பினைத் தனது இடுப்பினில் இறுகக் கச்சையாக கட்டி ஆட்டுபவனும், தனது அடியார்கள் அன்றி ஏனையோர் அறிய முடியாத வண்ணம் மறைத்துக் கொள்பவனும், எங்களது தலைவனும் ஆகிய இறைவனை அறியாதவர்களின் அறிவு அறிவாக கருதப் படாது என்று சுந்தரர் இந்த பாடலில் கூறுகின்றார்.

    மெய்யன் வெண்பொடி பூசும் விகிர்தன் வேத முதல்வன்
    கையில் மான் மழு ஏந்திக் காலன் காலம் அறுத்தான்
    பை கொள் பாம்பு அரை ஆர்த்த படிறன் தன் பனங்காட்டூர்
    ஐயன் எங்கள் பிரானை அறியாதார் அறிவென்னே

மேலே குறிப்பிட்ட பாடல்களில் பெருமானை வழிபடாத அறிவு, அறிவு என்று கருதப்படாததை நாம் உணர்ந்தோம். மணிவாசகர் ஒரு படி மேலே சென்று, அத்தகைய அறிவு இல்லாத மூடர்களிடம் அச்சம் கொண்டு அவர்களுடன் பழகுவதை தவிர்ப்போம் என்று அச்சப்பத்து பதிகத்தினில் கூறுகின்றார். தறி=காட்டுத்தறி, தறியிலிருந்து விடுபடும் யானை மிகுந்த கோபத்துடன் வரும்; உழுவை=புலி; பெருமானின் சடை நறுமணத்துடன் கூடியது என்று அடிகளார் இங்கே கூறுகின்றார்,

    தறி செறு களிறும் அஞ்சேன் தழல் விழி உழுவை அஞ்சேன்
    வெறி கமழ் சடையன் அப்பன் விண்ணவர் நண்ண மாட்டா     
    செறி தரு கழல்கள் ஏந்தி சிறந்து இனிது இருக்க மாட்டா
    அறிவு இலாதவரைக் கண்டால் அம்ம நான் அஞ்சுமாறே

பொழிப்புரை:

சிறிய புன்முறுவலைத் தரும் வெண்மையான பற்களைக் கொண்டுள்ள உமையன்னையைத் தனது உடலில் ஒரு பாகத்தில் வைத்தவனும், முற்றிலும் அழிந்த நிலையில் தான் தொடர்ந்து  வாழும் பொருட்டுத் தன்னைச் சார்ந்து நின்ற பிறைச்சந்திரனுடன் கங்கை நதியையும் சடையில்  வைத்துள்ள வீரனும், அழகிய சோலைகள் நெருங்கி இருக்கும் நின்றியூரில் நிலை பெற்று உள்ளவனும் ஆகிய பெருமானின் திருப்பாதங்களைத் தவிர்த்து வேறு எதையும் எனது உள்ளம் உணராது.   

 

]]>
https://www.dinamani.com/specials/thinam-oru-thavaram/2019/jul/01/133-சூலம்படை-சுண்ணப்பொடி---பாடல்-6-3185350.html
3180478 ஸ்பெஷல்ஸ் தினம் ஒரு தேவாரம் 133. சூலம்படை சுண்ணப்பொடி - பாடல் 5 என். வெங்கடேஸ்வரன் DIN Sunday, June 30, 2019 12:00 AM +0530
பாடல் 5:

    குழலின் இசை வண்டின் இசை கண்டு குயில் கூவும்
    நிழலின் எழில் தாழ்ந்த பொழில் சூழ்ந்த நின்றியூரில்
    அழலின் வலன் அங்கை அது ஏந்தி அனலாடும்
    கழலின் ஒலி ஆடும் புரி கடவுள் களைகண்ணே  

விளக்கம்:

களைகண்=பற்றுக்கோடு; ஒருவர் பாடுவதைக் கேட்கும் அடுத்தவருக்கும் பாடத் தோன்றுவது உலக இயல்பு. அந்த இயல்பினால் குழலின் இசையையும் வண்டின் இசையையும் கேட்கும் குயில்களும் பாடத் தொடங்குகின்றன என்று சம்பந்தர் இங்கே கூறுகின்றார்.

பொழிப்புரை:

குழலின் இசையையும் வண்டின் இசையையும் கேட்டு தாமும் பாடத் தொடங்கும் குயில்கள் நிறைந்த சோலைகள், நிழலுடன் எழில் கொஞ்சும் வண்ணம் அமைந்துள்ளன. இத்தகைய  சோலைகள் சூழ்ந்த நின்றியூர் தலத்தில், வலமாகச் சுற்றி எழும் தீப்பிழம்பினைத் தனது கையில் ஏந்தியவாறும், காலில் அணிந்துள்ள கழல்கள் ஒலிக்குமாறும் நடமாடும் இறைவன் நம் அனைவருக்கும் பற்றுக்கோடாகத் திகழ்கின்றான்.    

 

]]>
https://www.dinamani.com/specials/thinam-oru-thavaram/2019/jun/30/133-சூலம்படை-சுண்ணப்பொடி---பாடல்-5-3180478.html
3180477 ஸ்பெஷல்ஸ் தினம் ஒரு தேவாரம் 133. சூலம்படை சுண்ணப்பொடி - பாடல் 4 என். வெங்கடேஸ்வரன் Thursday, June 27, 2019 06:13 PM +0530
பாடல் 4:

    பூண்டவ் வரை மார்பில் புரிநூலன் விரி கொன்றை
    ஈண்டவ் வதனோடும் ஒரு பாலம் மதி அதனைத்
    தீண்டும் பொழில் சூழ்ந்த திரு நின்றி அது தன்னில்
    ஆண்ட கழல் தொழல் அல்லது அறியார் அவர் அறிவே

விளக்கம்:

தொழில் அல்லது=தொழுதால் அல்லது; ஈண்ட=நெருங்க; பாலம் மதி=பால்+அம்+மதி; பால் போன்று வெண்மை நிறத்துடன் அழகாக விளங்கும் சந்திரன்; வரை=மலை; பூண்ட=அணிந்த, அணிகலன்களை அணிந்த என்று சேர்த்து பொருள் கொள்ளவேண்டும்; கழல்=கழல்களை அணிந்த திருவடிகள்; சென்ற பாடலில் சப்தப்ரபஞ்சத்தின் ஆதாரமாக இறைவன் வைத்துள்ள உடுக்கை ஒலி இருக்கும் நிலையினை தனது உள்ளம் உணர்வதாக சம்பந்தர் கூறினார். ஆனால் பல்வேறு விதமான ஒலிகளை கேட்கும் அனைவர்க்கும் இந்த உணர்வு ஏற்படுவதில்லை. அதற்கு இறைவனின் அருள் வேண்டும் என்பதையே இந்த பாடலில் சம்பந்தர் உணர்த்துகின்றார்.    

இறைவனின் திருவுருவக் காட்சியினைக் காண்பதற்கே அவனருள் வேண்டும். அவனுக்கு ஒப்பாக சொல்வதற்கு எவரும் இல்லை, அவன் ஓரூரில் உறைபவன் அல்லன்: அவனது உருவத்திற்கு உவமை ஏதும் இல்லை: எனவே இறைவனின் நிறம் இன்னது, அவனுக்கு உவமையாக இந்த பொருட்கள் உள்ளன என்று எவராலும் சொல்ல முடியாது என்ற கருத்தை அப்பர் பிரான் வெளிப்படுத்தும் பாடலை நாம் இங்கே காணலாம் (6.97.10)

    மைப்படிந்த கண்ணாளும் தானும் கச்சி மயானத்தான்
          வார்சடையான் என்னின் அல்லால்
    ஒப்புடையனல்லன் ஒருவனல்லன் ஓரூரனல்லன் ஓர்
          உவமனில்லி
    அப்படியும் அந்நிறமும் அவ்வண்ணமும் அவனருளே கண்ணாகக்
          காணின் அல்லால்
    இப்படியன் இந்நிறத்தன் இவ்வண்ணத்தன் இவன் இறைவன்
          என்றெழுதிக் காட்ட ஒணாதே

இறைவனின் திருவுருவத்தைத் தங்கள் கண்ணால் கண்ட அருளாளர்கள் ஒரு சிலரே. அவர்கள் கூறிய அடையாளங்களைக் கொண்டு தான், நாம் இறைவன் இப்படியிருப்பான் என்று நமது மனதினில் உருவகித்துக் கொண்டு வழிபடுகின்றோம். அவ்வாறு இறைவனைக் கண்ட அருளாளர்களும் தாங்கள் கண்ட தோற்றத்தை முழுவதும் வார்த்தைகளில் வடிக்கவோ அல்லது சிற்பமாக செதுக்கவோ அல்லது ஓவியமாக வரையவோ திறன் படைத்தவர்களா என்றால் அதுவும் இல்லை என்று இங்கே அப்பர் பிரான் கூறுகின்றார். இவ்வாறு இருக்கையில், ஒரு குறிப்பிட்ட வடிவத்தின் வரையறைக்குள்ளே எப்படி நாம் இறைவனின் தோற்றத்தையோ குணத்தையோ அடக்க முடியும். அதனால் தான் அவனது அடையாளத்தையும் (குறி) குணத்தையும் யார் அறிய முடியும் என்று அப்பர் பிரான் கூறுகின்றார். இந்த கருத்தினை உணர்த்தும் அப்பர் பிரானின் பாடல் (4.77.2) இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.

    கோவணம் உடுத்தவாறும் கோளரவு அசைத்தவாறும்
    தீவணச் சாம்பர் பூசித் திருவுரு இருந்தவாறும்
    பூவணக் கிழவனாரைக் புலியுரி அரையனாரை
    ஏவணச் சிலையினாரை யாவரே எழுதுவாரே

இன்ன உருவத்தை உடையவன் இன்ன நிறத்தை உடையவன் என்று பெருமானின் திறத்தினை, நமது சிற்றறிவின் துணை கொண்டு அறிவது மிகவும் அரிதான செயல். அவனது கருணையும் அவனது அருளும் இருந்தால் தான் அவனது தன்மையை நாம் உணர முடியும். புண்ணியங்கள் அனைத்தும் தனது உருவம் என்று சொல்லும் வண்ணம் சிறந்த தவக்கோலத்தை உடையவன் பெருமான் என்று திருஞானசம்பந்தர் கூறும் திருவைகா தலத்து பாடலை (3.71.4) நாம் இங்கே காண்போம். அறிவதேல் அரிது=இறைவனின் அருளும் ஞானமும் இல்லையேல் அறிய முடியாதது; மிகுத்த தவன்=மிகுந்த தவத்தினை உடையவன்; நீதியொடு=அருளோடு; நீதி பலவும்= பலவாகிய புண்ணியங்களும்; வகையினால்=முறைமைப்படி முழுதுணர்ந்து; மன்ன=நிலை பெற்று; மருவி=அடைந்து;

 இன்னவுரு இன்ன நிறம் என்று அறிவதேல் அரிது நீதி பலவும்
 தன்ன உருவாம் என மிகுத்த தவன் நீதியொடு தான் அமர்விடம்  
 முன்னை வினை போய் வகையினால் முழுது உணர்ந்து முயல்கின்ற முனிவர்
 மன்ன இருபோதும் மருவித் தொழுது சேரும் வயல் வைகாவிலே

இன்ன தன்மையன் என்று ஆராய்ந்து அறிந்து கொள்ள முடியாத இறைவனை நாம் உணர்வினால் அவன் இருப்பதை புரிந்து கொண்டு அவனை வழிபட்டு வணங்க வேண்டும்; அவ்வாறு செய்யாமல் அவனது தன்மை யாது என்று ஆராய்ச்சி செய்யத் தொடங்குவது தவறு என்பதை உணர்த்தும் திருவாசகப் பாடலை இங்கே நாம் சிந்திப்பது பொருத்தமாகும். இந்த பாடலில் இறைவனை உண்மையுமாய் இன்மையுமாய் என்று அடிகளார் கூறுகின்றார். எப்படி உண்மையாக இருக்கும் பொருள் இல்லாத பொருளாக மாற முடியும். நமது உணர்வினால் உணரப் படுபவன் இறைவன். எனவே அவன் உள்ளதை, அவன் இருக்கும் உண்மையை நாம் யாவரும் உணர்வால் அறிந்து உணர்கின்றோம். ஆனால் அதே இறைவனை நமது அறிவின் துணையால் இன்ன தன்மையன் என்று ஆராயத் தொடங்கினால் அவனை நாம் உணர முடியுமா. முடியாது என்பதே விடை. எனவே தான் அறிவினால் கண்டறியாத பொருள் என்று உணர்த்தும் பொருட்டு இன்மையுமாய் உள்ளவன் என்று கூறுகின்றார். உணர்வால் உணர முடியும் இறைவனை அறிவினால் உணர முடியாது என்பதை சுட்டிக் காட்டவே உண்மையுமாய் இன்மையுமாய் என்று அடிகளார் இங்கே கூறுகின்றார். வளி=காற்று; ஊன்=உடல்;

    வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி
    ஊனாகி உயிராகி உண்மையுமாய் இன்மையுமாய்
    கோனாகி யான் எனது என்று அவர் அவரைக் கூத்தாட்டு
    வானாகி நின்றாய் என் சொல்லி வாழ்த்துவனே

பொழிப்புரை:

தனது மலை போன்று பரந்த மார்பினில் அணிகலன்களை பூண்டவனும், முப்புரி நூலை அணிந்தவனும், நெருக்கமாக கட்டப்பட்ட விரிந்த கொன்றை மலர் மாலையினையும், பால் போன்று வெண்மை நிறத்துடன் அழகாக விளங்கும் பிறைச் சந்திரனையும் தனது சடையினில் அணிந்தவனும் ஆகிய பெருமான், வானத்தை தொடும் வண்ணம் உயர்ந்து வளர்ந்த சோலைகள்  கொண்டுள்ள திருநின்றியூரில் உறைகின்றான். நம்மை ஆட்கொண்டு அருளும் அவனது திரு வடிகளைத் தொழுதால் அன்றி அவனது தன்மையை எவராலும் அரிய முடியாது.       
 

]]>
https://www.dinamani.com/specials/thinam-oru-thavaram/2019/jun/29/133-சூலம்படை-சுண்ணப்பொடி---பாடல்-4-3180477.html
3180474 ஸ்பெஷல்ஸ் தினம் ஒரு தேவாரம் 133. சூலம்படை சுண்ணப்பொடி - பாடல் 2 என். வெங்கடேஸ்வரன் Thursday, June 27, 2019 06:12 PM +0530
பாடல் 2:

    அச்சம் இலர் பாவம் இலர் கேடும் இலர் அடியார்
    நிச்சம் உறு நோயும் இலர் தாமும் நின்றியூரில்
    நச்சம் மிடறு உடையார் நறுங்கொன்றை நயந்து ஆளும்
    பச்சம் உடை அடிகள் திருப்பாதம் பணிவாரே

 
விளக்கம்:

நஞ்சம் என்பது எதுகை நோக்கி நச்சம் என்று திரிந்தது. பக்ஷம் என்ற வடமொழிச் சொல் பட்சம் என்று தமிழ்ச் சொல்லாக மாற்றப்பட்டுள்ளது. வேற்றுமை பாராட்டி ஒரு பாலாருக்கு பரிந்து செயல் புரிதல் என்று பொருள்; தீயவினைகள் அகற்றப் படுவதால் அத்தகைய தீவினைகள் விளையும் கேடும் அகற்றப் படுகின்றன. நித்தம் என்ற சொல்லும் எதுகை கருதி நிச்சம் என்று மாற்றப் பட்டுள்ளது. பெருமான் ஒருதலைப் நடந்து கொள்கின்றார் என்று சம்பந்தர் உணர்த்துவது, தனது அடியார்களுக்கு பல விதமான நன்மைகளை புரியும் பெருமான், அடியார் அல்லாதவர்களுக்கு அத்தகைய நன்மை புரியார் என்பதே ஆகும். இந்த தன்மையை அப்பர் பிரான் மிகவும் அழகாக நமச்சிவாயப் பதிகத்தில் சொல்வதை நாம் கீழ்க்கண்ட பாடல் மூலம் (4.11.6) உணரலாம். சலம்=வேறுபாடுள்ள தன்மை. சஞ்சலம் என்ற வடமொழிச் சொல்லின் திரிபு. உள்ளொன்றும் புறமொன்றுமாக உள்ள நிலை. எப்போதும் ஒரே தன்மையுடன் தோன்றுபவன். உள்ளவன். சங்கரன்=இன்பம் அளிப்பவன்.

    சலமிலன் சங்கரன் சார்ந்தவர்க்கு அலால்
    நலமிலன் நாள்தோறும் நல்குவான் நலம்
    குலமிலர் ஆகிலும் குலத்துக்கு ஏற்பதோர்
    நலம் மிக கொடுப்பது நமச்சிவாயவே

உள்ளொன்றும் புறமொன்றுமாக இல்லாமல், எப்போதும் ஒரே தன்மையுடன் காணப்படும் சிவபெருமான், தன்னைச் சார்ந்த அடியார்களுக்கு நன்மை செய்பவன்; சிவபிரான் தன்னைச் சாராதவர்களுக்கு நன்மை அளிக்காதவன். நற்குலத்தில் பிறவாதாரும், சிவபிரானின் நாமத்தை ஓதினால், அவர்களுக்கும் நற்குலத்தோர் அடையும் நன்மைகளை அளிப்பவன் சிவபெருமான், என்பதே மேற்கண்ட பாடலின் திரண்ட பொழிப்புரை.  .  

பெருமானது அடியார்கள் அச்சம் ஏதும் இல்லாதவராக இருப்பார்கள் என்று சம்பந்தர் இந்த பாடலில் கூறுகின்றார். அனைவரிலும் வலியவனாக உள்ள பெருமான் துணையாக இருக்கையில்  பெருமானின் அடியார்கள் எதற்காகவும் எவரிடமும் அச்சம் கொள்ளத் தேவையில்லை என்பதை இங்கே உணர்த்துகின்றார். அவர் இவ்வாறு கூறுவது நமக்கு திருநாவுக்கரசர் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை நினைவூட்டுகின்றது. தங்களுடன் இருந்த போது தீராத வயிற்று வலியால் வருந்திய தருமசேனர், திருவதிகைப் பெருமானின் அருளினால் தனது வயிற்றுவலி (சூலைநோய்)  நீங்கப்பெற்று பெருமானின் அருளினால் சைவராக மாறியதை அறிந்த சமண குருமார்கள் இந்த   மாற்றம் தங்களது மதத்தின் பால் மக்கள் வைத்திருந்த மதிப்பினை வேகமாக குறைத்துவிடும் என்று அச்சம் கொண்டு உண்மையை திரித்து மன்னனிடம் சொல்லவும், தருமசேனரை பழிவாங்கவும் முயற்சி செய்தனர். சைவ சமயத்தைச் சார்ந்து வாழ்ந்து வந்த தனது தமக்கையாருடன் கூடுவதற்காக, தான் பொய்யாக உருவாக்கிக்கொண்ட சூலை நோய் தீரவில்லை என்ற நாடகம் நடத்தி, சூலை நோய் சமண சமய மருத்துவர்களால் தீர்க்கப்படவில்லை என்று சமண சமயத்திற்கு ஒரு இழுக்கினை ஏற்படுத்தி, சமணசமய குருமார்களுக்கான விதிகளை மீறியதும் அல்லாமல், சமண சமயத்தை மிகவும் இழிவாகவும் தருமசேனர் பேசினார், என்று மன்னனிடம் முறையிட்டனர். மன்னன் அவரை அழைத்துப் பேசி தக்க தண்டனை அளிக்கவேண்டும் என்று வற்புறுத்தினார்கள். மன்னனும் தனது படைவீர்ர்களை அமைச்சர்களுடன் அனுப்பி, திருநாவுக்கரசரை (தருமசேனர் என்ற பெயர் பெருமானால் நாவுக்கரசர் என்று மாற்றப்பட்டது.) சிறை பிடித்து வருமாறு கட்டளையிட்டான். தன்னை அணுகிய அமைச்சர்களை நோக்கி நாவுக்கரசர், உமது மன்னனின் ஆணையினைக் கேட்டு அதன் வழியே உமது மன்னனைச் சாரும் நிலையில் தான் இல்லை என்று விடை அளித்ததாக சேக்கிழார் பெரிய புராணத்தில் கூறுகின்றார்.

    நாமார்க்கும் குடி அல்லோம் என்றெடுத்து நான்மறையின்
    கோமானை நதியினுடன் குளிர்மதி வாழ் சடையானைத்
    தேமாலைச் செந்தமிழின் செழும் திருத்தாண்டகம் பாடி
    யாமாறு நீர் அழைக்கும் அடைவு இலம் என்று அருள் செய்தார்

மன்னனின் கட்டளை தனக்குப் பொருந்தாது என்று வீரமொழி பேசிய நாவுக்கரசர், அச்சமில்லை அச்சமில்லை உச்சி மீது வானிடிந்து வீழ்கின்ற போதிலும் அச்சமில்லை என்று கூறிய பாரதி உட்பட பல புலவர்களுக்கு முன்னோடியாக திகழ்ந்ததை இந்த நிகழ்ச்சி உணர்த்துகின்றது. அந்த தருணத்தில் அப்பர் பிரான் அருளிய பதிகம் தான் நாமார்க்கும் குடியல்லோம் என்று தொடங்கும் இந்த பதிகம் (6.98). இயமனுக்கும் அஞ்சமாட்டோம் என்று இந்த பதிகத்தின் முதல் பாடலில் அப்பர் பிரான் முழங்குவதை நாம் உணரலாம்.

    நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம் நரகத்தில் இடர்ப்படோம்            நடலை இல்லோம்
    ஏமாப்போம் பிணி அறியோம் பணிவோம் அல்லோம் இன்பமே
        எந்நாளும் துன்பம்  இல்லை
    தாமார்க்கும் குடியல்லாத் தன்மையான சங்கரன் நற்சங்க வெண்
        குழை ஓர் காதில்
    கோமாற்கே நாம் என்றும் மீளா ஆளாய்க் கொய்ம்மலர்ச் சேவடி                              குறுகினோமே

சமண குருமார்களின் போதனையால் மதி மயங்கிய பல்லவ மன்னன், அப்பர் பிரானை  சுண்ணாம்புக் காளவாயில் இடுமாறு கட்டளை இடுகின்றான். இறைவனின் அருளால் உயிர் பிழைத்த அப்பர் பிரானை இடறித் தள்ள பட்டத்து யானை ஏவப்படுகின்றது.  அப்போது  அருளிய பதிகத்தில், இறையவனின் அடிமையாக இருக்கும் தான் எதற்கும் அஞ்சுவதில்லை என்றும் தம்மை அச்சுறுத்தும் நிகழ்ச்சிகள் ஏதும் நிகழாது  என்றும் அப்பர் பிரான் மிகவும் உறுதியுடன் கூறுகின்றார். இந்த  பதிகத்தின் (4.02) முதல் பாடல் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. சாந்து என்ற சொல் இரண்டு சொற்களுக்குப் பொதுவாக வருகின்றது. சுண்ணவெண் சாந்து மற்றும் சந்தனச் சாந்து என்றும் பொருள் கொள்ளவேண்டும். வெண் சாந்து=வெள்ளை நிறமுடைய திருநீறு. தமர்=அடியவர். அகலம்=மார்பு, சுண்ணம்=பொடி, முரண்=போர்க்குணம் மிகுந்த. உரிவையுடை= உரித்துத் தனது உடலின் மேல் போர்த்துக் கொண்ட போர்வை, வண்ண உரிவை என்பதால் புலியின் தோலை குறிப்பதாக கொள்ளவேண்டும். திண்மை=வலிமை, இங்கே நதியின் தன்மையை குறிப்பதால், அகன்ற கெடில நதியைக் குறிக்கின்றது. அரண் முரண் ஏறு என்பதற்கு சிவபிரானை அடைந்தவர்க்கு அரணாகவும் அடையாதவர்க்கு முரணாகவும் இருக்கும் இடபம் என்றும் பொருள் கூறுவார்கள்.

    சுண்ண வெண் சந்தனச் சாந்தும் சுடர்த் திங்கள் சூளாமணியும்
    வண்ண உரிவை உடையும் வளரும் பவள நிறமும்
    அண்ணல் அரண் முரண் ஏறும் அகலம் வளாய அரவும்
    திண் நல் கெடிலப் புனலும் உடையார் ஒருவர் தமர் நாம்
    அஞ்சுவது யாதொன்றும் இல்லை அஞ்ச வருவதும் இல்லை

பாவம் இலர் கேடும் இலர் என்ற தொடருக்கு, அடியார்கள் யான் எனது என்கின்ற செருக்குடன் கூடிய எண்ணம் இல்லாமல் இருப்பதால், அவர்களுக்கு ஆகாமிய வினைகளும் அவற்றால் விளையும் கேடுகளும் இருப்பதில்லை என்று விளக்கம் கூறுகின்றனர். பண்டைய வினைகளை நுகர்ந்து கழிக்கும் உயிர்கள், அந்த வினைகளால் ஏற்படும் துன்பங்களையும் இன்பங்களையும் அனுபவிக்கும் போது தாங்கள் செய்யும் செயல்களால், எண்ணும் எண்ணங்களால் மேலும் வினைகளை பெருக்கிக் கொள்கின்றன. அவ்வாறு வளரும் வினைகளை ஆகாமிய வினைகள் என்று கூறுவார்கள். இவ்வாறு மேலும் மேலும் வினைகளை பெருக்கிக் கொள்வதால், உயிர் பிறப்பிறப்புச் சுழற்சியிலிருந்து, பழைய வினைகள் மற்றும் புதியதாக தோன்றும் ஆகாமிய வினைகள் ஆகியவற்றின் அழுத்தத்தால், விடுபட முடியாமல் தவிக்கின்றது, ஆனால் பெருமானின் அடியார்கள் அனைத்தும் இறைவனின் செயல் என்று ஏற்றுக்கொண்டு செயல்படுவதால், வினைகளால் மாற்றம் ஏதும் விளையாத தற்போத நிலையில் இருப்பதால்,  ஆகாமிய வினைகள் தோன்றுவதில்லை; அவற்றால் ஏற்படும் கேடுகளும் தவிர்க்கப் படுகின்றன.     
                                                         
பொழிப்புரை:

பெருமானின் திருப்பாதங்களைப் பணியும் அடியார்களுக்கு, அனைவரிலும் வல்லவனாகிய பெருமான் தகுந்த துணையாக இருப்பதால், அவர்கள் எதற்கும் அஞ்சாமல் இருக்கின்றனர். அவர்களது தீவினைகளை பெருமான் தீர்த்துவிடுவதால் பாவங்கள் அவர்களை அணுகுவதில்லை; பாவங்கள் விலகிப் போவதால் பாவங்களால் நாள்தோறும் விளையும் கெடுதிகளும் தவிர்க்கப் படுகின்றன. மேலும் மன நலனும் உடல் நலமும் வாய்க்கபெற்று அடியார்கள் இன்பமாக வாழ்வார்கள். இவ்வாறு தனது அடியார்களை பாதுகாக்கும் பெருமான், நிலையாக நின்றியூர் தலத்தில் உறைகின்றான். அவன் நஞ்சு தேக்கப்பட்டதால் கருமை நிறம் கொண்ட கழுத்தினை உடையவனாக உள்ளான்; நறுமணம் கொண்ட கொன்றை மாலைகளை அன்புடன் தனது திருவடிகளில் சாத்தும் அடியார்களை பெருமான் ஆட்கொண்டு அருள் புரிகின்றான். தன்னிடம் அன்பு பாராட்டாத மாந்தர்களை ஆட்கொள்ளாமல் பட்சபாதமாக நடந்து கொள்கின்றான்.    

 

]]>
https://www.dinamani.com/specials/thinam-oru-thavaram/2019/jun/27/133-சூலம்படை-சுண்ணப்பொடி---பாடல்-2-3180474.html
3180475 ஸ்பெஷல்ஸ் தினம் ஒரு தேவாரம் 133. சூலம்படை சுண்ணப்பொடி - பாடல் 3 என். வெங்கடேஸ்வரன் Thursday, June 27, 2019 06:11 PM +0530
பாடல் 3:

    பறையின் ஒலி சங்கின் ஒலி பாங்கு ஆரவம் ஆர
    அறையும் ஒலி எங்கும் அவை அறிவார் அவர் தன்மை
    நிறையும் புனல் சடைமேல் உடை அடிகள் நின்றியூரில்
    உறையும் இறை அல்லது என் உள்ளம் உணராதே

 
விளக்கம்:

திருக்கோயில்களில் சிறப்பு பூஜை நேரங்களில் சங்கு பறை இவற்றின் ஒலிகள் கலந்து  ஆரவாரமாக காணப்படும். நேரங்களிலும் தான் மனம் ஒன்றி வழிபடுவதால் தனது மனம் எதையும் உணராது இறை சிந்தனையில் ஆழ்ந்திருப்பதாக ஞானசம்பந்தர் கூறுகின்றார் என்று சிலர் விளக்கம் கூறுகின்றனர். உலகெங்கிலும் பல விதமான ஓசைகள் கலந்து நிற்கின்றன. ஆனால் இந்த ஓசைகளின் மூலம் எது என்பதை ஆராய்ந்தால், நமக்கு நாததத்துவம் புலப்படும். இறைவனின் கையினில் இருக்கும் உடுக்கையின் ஒலியே, இந்த சப்த பிரபஞ்சத்தின் மூலமாக திகழ்வதை சம்பந்தர் குறிப்பிடுகின்றார் எனும் விளக்கம் பொருத்தமாக தோன்றுகின்றது. பாங்கு ஆரவும் ஆர=பறை சங்கு ஆகிய ஒலிகளின் பக்கத்தில் தோன்றும் பல விதமான ஓசைகள்.

அனைத்து ஓசைகளின் பின்னணியில் இறைவன் இருப்பதாக பெரியோர்கள் உணருகின்றனர் என்று சம்பந்தர் கூறுவது நமக்கு அப்பர் பிரானின் திருவையாறு தாண்டகத்தின் முதல் பாடலை  (6.38.1) நினைவூட்டுகின்றது. நமது மொழியில் உள்ள 247 எழுத்துக்களும் பொருளைத் தருவதில்லை. பொருள் தரும் எழுத்துகள் (பூ, மா, ஆ, பா, வா, போன்றவை) தவிர்த்த மற்று எழுத்துக்கள் வெறும் ஓசையை மட்டும் தருகின்றன. இந்த எழுத்துகள் தனித்து நிற்கும் போது  பொருள் தராவிடினும் மற்ற எழுத்துக்களுடன் இணையும் போது பொருளைத் தருகின்றன. இவ்வாறு ஓசையாகவும் ஒலியாகவும் இருக்கும் எழுத்துகளாகவும், எழுத்துகளின் கூட்டாகிய  சொற்களாகவும் இறைவன் உள்ள தன்மை இங்கே உணர்த்தப் படுகின்றது. தேசம்=உலகம்; தேச விளக்கு=உலகிலுள்ள ஒளிதரும் பொருட்கள் சூரியன், சந்திரன், கோள்கள், மற்றும் விண்மீன்கள்.

    ஓசை ஒலி எலாம் ஆனாய் நீயே உலகுக்கு ஒருவனாய் நின்றாய் நீயே
    வாச மலரெலாம் ஆனாய் நீயே மலையான் மருகனாய் நின்றாய் நீயே
    பேசப் பெரிதும் இனியாய் நீயே பிரானாய் அடி என்மேல் வைத்தாய் நீயே
    தேச விளக்கு எலாம் ஆனாய் நீயே திருவையாறு அகலாத செம்பொன் சோதீ

இந்த பாடலில் சம்பந்தர் இறைவனைத் தவிர்த்து வேறு எதையும் தனது உள்ளம் உணராது என்று கூறுவது நமக்கு திருவெண்காடு தலத்தின் மீது பாடிய பாடலை (2.48.9) நினைவூட்டுகின்றது. திருமால் மற்றும் பிரமன் காண முடியாமல் நெடிய தீப்பிழம்பாக நின்றவன் என்றும் ஐராவத யானைக்கு அருள் புரிந்தவன் என்று அவனது பெருமைகளை தங்களது உள்ளத்தில் நினைத்து உருகாத மாந்தர்களை உணர்வு உடையவராக கருதமாட்டோம் என்று கூறுகின்றார். கள்=தேன்; கிடந்தான்=படுத்து கிடப்பவன்; ஒள்ளாண்மை=சிறந்த ஆண்மைத் தன்மை; ஆடுதல் என்றால் நீராடுதல் என்று பொருள். உள்ளம் முழுவதும் பெருமான் குறித்த சிந்தைனைகளால் நீராட்டப்பட்டு நனைந்து  நையவேண்டும் என்பதை உள்ளாடி என்று சம்பந்தர் உணர்த்துகின்றார்.  

    கள்ளார் செங்கமலத்தான் கடல் கிடந்தான் என இவர்கள்
    ஒள்ளாண்மை கொளல் கோடி உயர்ந்து ஆழ்ந்தும் உணர்வு அரியான்
    வெள்ளானை தவம் செய்யும் மேதகு வெண்காட்டான் என்று
    உள்ளாடி உருகாதார் உணர்வு உடைமை உணரோமே

திருஞானசம்பந்தர் தான் அருளிய ஆமாத்தூர் பதிகத்தின் (2.44.10) பாடலில் சம்பந்தர், ஈசனைத் தினமும் நினையாதார்களின் நெஞ்சம் நெஞ்சமாக கருதப்படாது என்று கூறுகின்றார். நித்தல் என்ற சொல் எதுகை கருதி நிச்சல் என்று மருவியுள்ளது. பெய்தல்=இடுதல்; பின் சார்தல்=பின்னே வருதல். கொச்சை=இழிவான; பிச்சைப் பெருமானாக (பிக்ஷாடனர்) வேடம் தரித்து தாருகாவனம் சென்ற சிவபிரானின் பின்னர், முனிவர்களின் மனைவியர் தொடர்ந்து வந்த செய்தி இங்கே குறிப்பிடப்பட்டுள்ளது. புலால் நாற்றம் வீசிய தோல் என்று குறிப்பதன் மூலம் அப்போது தான் உரித்த தோல் என்று உணர்த்தப்பட்டுள்ளது. யானையின் பச்சைத் தோல், உடலுக்கு கேடு விளைவிக்கும் என்று நம்பப்படுகின்றது. ஆனால் சர்வ வல்லமை படைத்த ஈசனை எந்த கேடும் அணுகமுடியாது. மதயானையின் தோல் உரிக்கப்படுவதை நேரில் கண்ட உமாதேவி அச்சம் அடைந்த நிகழ்ச்சியும் இங்கே கூறப்பட்டுள்ளது.  

    பிச்சை பிறர் பெய்யப் பின் சாரக் கோசாரக்
    கொச்சை புலால் நாற ஈரிருவை போர்த்து உகந்தான்
    அச்சம் தன் மாதேவிக்கு ஈந்தான் தன் ஆமாத்தூர்    
    நிச்சல் நினையாதார் நெஞ்சமும் நெஞ்சமே   

நீறு அலைத்ததோர் என்று தொடங்கும் பதிகத்தின் பாடலில் (5.98.6) அப்பர் பிரான் பெருமானை நினையாதவர்களின் நெஞ்சம் நெஞ்சமே அல்ல என்று கூறுகின்றார். முன்னுதல்=நினைத்தல்; முன் நெஞ்சம்=இறைவனை நினைக்கும் நெஞ்சம்; மூர்க்கர்=கொடியவர்; வன்=கொடிய; பெருமானை நினைக்காமல் தங்களது வாழ்க்கையை கழிப்பவர்கள், வீணான வாழ்க்கையை கழிக்கின்றார்கள் என்று இங்கே கூறுகின்றார். தம் நெஞ்சம் தமக்குத் தாமிலாதவர் என்று தங்களது நெஞ்சத்தை சரியாக பயன்படுத்திக் கொண்டு பலன் அடையாமல் இருக்கும் வீணர்களை அப்பர் பிரான் இந்த பாடலில்  குறிப்பிடுகின்றார். மனிதப் பிறவி எடுத்துள்ள நாம் பெறற்கரிய பாக்கியம் செய்தவர்கள். இறைவன் நமக்கு அளித்துள்ள கருவி கரணங்களை நன்கு உபயோகித்து, மெய்ப் பொருளின் தன்மையை உண்மையாக உணர்ந்து, பழைய பிறவிகளிலிருந்து நாம் கொண்டு வந்துள்ள வினைகளை முற்றிலும் கழித்து, பிறவிச் சுழலிலிருந்து விடுபட்டு முக்தி நிலையினை அடைந்து என்றும் அழியாத இன்பத்தில் ஆழ்ந்திருப்பது தான், நாம் உயிருக்கு செய்யும் கைம்மாறு ஆகும். கண்ணிருந்தும் குருடனாக பொருட்களை பார்த்து அறியாமல் இருக்கும் மனிதனை மூடன் என்பது போல், நெஞ்சம் இருந்தும் அதனை சரிவர பயன்படுத்தாமல் இருப்பவர் மூடர் தானே.

    முன் நெஞ்சம் இன்றி மூர்க்கராய்ச் சாகின்றார்
    தன் நெஞ்சம் தமக்குத் தாம் இலாதவர்
    வன் நெஞ்சம் அது நீங்குதல் வல்லீரே
    என் நெஞ்சில் ஈசனைக் கண்டது என் உள்ளமே    

பொழிப்புரை:

பறை சங்கு முதலிய கருவிகளிலிருந்து எழுகின்ற ஓசை, மற்றும் அந்த கருவிகளின்  அருகிலுள்ள ஏனைய வாத்தியங்களிளிருந்து ஒலிக்கும் ஒலிகளும் எங்கும் பரவி இருக்கும் சூழ்நிலையில், அந்த ஓசைகளின் அடிப்படைத் தன்மையில் இறைவன் இருப்பதை சான்றோர்கள்  உணருகின்றனர். நிறைந்த நீரினை உடைய கங்கை நதியினைத் தனது சடையில் வைத்துள்ள இறைவன் நின்றியூர் தலத்தில் உறைகின்றான். அந்த ஒரு பொருளைத் தவிர்த்து வேறு எதனையும் எனது உள்ளம் உணராது.

 

]]>
https://www.dinamani.com/specials/thinam-oru-thavaram/2019/jun/28/133-சூலம்படை-சுண்ணப்பொடி---பாடல்-3-3180475.html
3180473 ஸ்பெஷல்ஸ் தினம் ஒரு தேவாரம் 133. சூலம்படை சுண்ணப்பொடி - பாடல் 1 என். வெங்கடேஸ்வரன் Thursday, June 27, 2019 06:10 PM +0530
பின்னணி:

தனது ஐந்தாவது தலயாத்திரையினை கண்ணார்கோயில் தலத்தில் தொடங்கிய சம்பந்தர் அங்கிருந்து புள்ளிருக்குவேளூர் (தற்போது வைத்தீஸ்வரன் கோயில் என்று அழைக்கப்படும் தலம்)  சென்ற பின்னர் திருநின்றியூர், நீடூர், திருப்புன்கூர் சென்றதாக பெரிய புராணம் குறிப்பிடுகின்றது. திருநீடூர் தலத்தின் மீது காழிப் பிள்ளையார் அருளிய பதிகம் இதுவரை நமக்கு கிடைக்கவில்லை.  மற்ற இரண்டு தலங்களின் மீது அருளிய ஒவ்வொரு பதிகங்கள் நமக்கு கிடைத்துள்ளன.

    நீடு திருநின்றியூரில் நிமலனார் நீள்கழல் ஏத்திக்
    கூடிய காதலில் போற்றி கும்பிட்டு வண்டமிழ் கூறி
    நாடு சேர் நீடூர் வணங்கி நம்பர் திருப்புன்கூர் நண்ணி
    ஆடிய பாதம் இறைஞ்சி அருந்தமிழ் பாடி அமர்ந்தார்.

இந்த தலம் வைத்தீஸ்வரன்கோயில் மயிலாடுதுறை பாதையில், வைத்தீச்வரன்கோயில் தலத்திலிருந்து சுமார் ஏழு கி.மீ. தொலைவில் உள்ளது. சிதம்பரம் மயிலாடுதுறை இரயில் பாதையில் ஆனந்ததாண்டவபுரம் இரயில் நிலையத்திலிருந்து வடகிழக்கே சுமார் மூன்று கி.மீ, தொலைவில் உள்ளது. இலக்குமி வழிபட்டமையால் திருநின்றியூர் என்று பெயர் வந்ததாகவும் கூறுவார்கள். கோச்செங்கட் சோழனால் கட்டப்பட்ட மாடக் கோயில். இந்த தலத்தின் மீது அருளிய நான்கு தேவாரப் பதிகங்கள் நமக்கு கிடைத்துள்ளன. ஞானசம்பந்தர் மற்றும் அப்பர் பிரான் அருளிய ஒவ்வொரு பதிகமும் சுந்தரர் அருளிய இரண்டு பதிகங்களும் கிடைத்துள்ளன.           

சுந்தரர் தான் பாடிய பதிகத்தின் பாடலில் (7.65.3), பரசுராமர் முன்னூறு வேதியர்களை கோயில் திருப்பணிக்கு நியமித்து, முன்னூற்று அறுபது வேலி நிலங்களையும் அளித்தார் என்று கூறுகின்றார். அவரே இந்த தலத்திற்கு நின்றியூர் என்று பெயரிட்டு அழைத்தார் என்றும் சுந்தரர் இந்த பாடலில் கூறுகின்றார். மேலே குறிப்பிட்ட கொடையினை பரசுராமர், அழகிய பொற்கலசங்கள் கொண்டு நீர் வார்த்து இறைவனுக்கு அர்ப்பணம் செய்தார் என்றும் பரசுராமரின் பக்தியை மெச்சிய இறைவன்  அவருக்கு தனது திருவடிகளை காட்டி அருளினார் என்றும் இந்த பாடலில் சொல்லப் படுகின்றது.   
    மொய்த்த சீர் முன்னூற்று அறுபது வேலி மூன்று நூறு வேதியரோடு நுனக்கு
    ஒத்த பொன்மணிக் கலசங்கள் ஏத்தி ஓங்கு நின்றியூர் உனக்கு அளிப்பப்
    பத்தி செய்த அப் பரசுராமற்குப் பாதம் காட்டிய நீதி கண்டு அடைந்தேன்
    சித்தர் வானவர் தானவர் வணங்கும் செல்வத் தென் திருநின்றியூரானே

வடமொழியில் இந்த தலம் வர்த்தி நிவாரணபுரம் என்று அழைக்கப்படுகின்றது. பூம்புகாரைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்து வந்த ஒரு சோழ மன்னன் தினமும் இந்த தலத்திற்கு நள்ளிரவு பூஜையினை காண்பதற்காக வருவதை பழக்கமாகக் கொண்டிருந்தான். ஒரு நாள் அவன்  வேறு ஏதோ அலுவல் காரணமாக வருவதற்கு தாமதம் ஏற்பட்டதால், இந்த தலம் வந்த போது இரவுநேரம் தொடங்கிவிட்டது. இரவு நேரத்தில் இந்த கோயிலைக் காண முடியாமல் மன்னன் வருந்திய போது, சிவலிங்கத்திலிருந்து ஒரு ஜோதி தோன்றி அடையாளம் காட்டியதாக கூறுவார்கள். அந்த ஜோதியின் திரி இலிங்கத் திருமேனியின் மீது விழுந்ததால் பள்ளம் ஏற்பட்டது என்றும் தலபுராணம் கூறுகின்றது. இதனால் இந்த தலத்திற்கு திரிநின்றியூர் என்று பெயர் வந்தது என்றும் நாளடைவில் அந்த பெயர் திருநின்றியூர் என்று மாறியதாகவும் கூறுவார்கள். ஜமதக்னி முனிவர், அகத்தியர், பரசுராமர், இலக்குமி தேவி, பரசுராமன் ஆகியோர் வழிபட்ட தலம். இறைவனின் திருநாமம், மகாலக்ஷ்மீசர், பரிகேச்வரர்; இறைவியின் திருநாமம் உலகநாயகி.              
பாடல் 1:

    சூலம் படை சுண்ணப்பொடி சாந்தம் சுடு நீறு
    பாலம் மதி பவளச் சடைமுடி மேலது பண்டைக்
    காலன் வலி காலின்னொடு போக்கிக் கடி கமழும்
    நீலம் மலர்ப் பொய்கை நின்றியூரின் நிலையோர்க்கே

விளக்கம்:

பாலம் என்ற சொல்லுக்கு பலவிதமாக பொருள் கொள்ளப்பட்டு விளக்கம் அளிக்கப்படுகின்றது. பாலம் என்ற தொடர் பால்+அம் என்று பிரிக்கப்பட்டு பால் போன்ற வெண்மை நிறத்தில் காணப் படும் அழகிய சந்திரன் என்பது ஒரு பொருள். பாலன் என்று சொல்லின் திரிபாக (எதுகை கருதி) எடுத்துக் கொண்டு, இளைய பிறைச் சந்திரன் என்பது மற்றொரு பொருள். பாலம் என்ற சொல்லுக்கு நெற்றி என்று பொருள் கொள்ளப்பட்டு பெருமானின் நெற்றியின் மீது உள்ள பிறைச் சந்திரன் என்று சிலர் பொருள் கொள்கின்றனர். சடைமுடி மேல் என்று பின்னர் வருவதால், நெற்றி என்று பொருள் கொள்வது பொருத்தமாக தோன்றவில்லை. நின்றியோர்=நிலையாக உறைபவர்; சுண்ணப் பொடி=வாசனைப் பொடி; சாந்தம்=குழைத்த சந்தனம்; பவளச்சடை=பவளம் போன்று செம்பட்டை நிறத்தில் அமைந்துள்ள சடைமுடி; பண்டைக் காலனின் வலிமையை போக்கினார் என்று சம்பந்தர் இந்த பாடலில் கூறுகின்றார். அதற்கு பண்டைய நாளில் சிறுவன்  மார்க்கண்டேயனின் உயிரினைக் கவர முயற்சி செய்த காலன், அப்போது பெருமானிடம் உதை வாங்கி அழிந்த பின்னர், இயமன் சிவபெருமானது அடியார்கள் பால் செல்வதை தவிர்த்து விட்டான் என்ற பொருள் பட பண்டைக் காலன் என்று சம்பந்தர் குறிப்பிடுகின்றார் என்று  விளக்கம் அளிக்கின்றனர்.        
  
பொழிப்புரை:

சூலத்தைத் தனது படைக்கலமாக கொண்டுள்ள பெருமான், சுடுகாட்டு சாம்பலை நறுமணம் மிகுந்த வாசனைப் பொடியாகவும் குழைத்த சந்தனமாகவும் பாவித்து, தனது உடல் முழுவதும்  பூசிக்கொண்டு, பால் போன்று வெண்ணிறத்தில் அமைந்துள்ள பிறைச் சந்திரனைத் தனது பவள நிறத்தில் உள்ள சடைமுடியில் மேலே வைத்துள்ளார். பண்டைய நாளில் மார்க்கண்டேயனின் உயிரினைக் கவர முயற்சி செய்த இயமனின் வலிமையைத் தனது காலினால் இயமனை உதைத்து வீழ்த்திய பெருமான், நறுமணம் கமழும் நீல மலர்கள் நிறைந்த நீர்நிலைகள் கொண்டுள்ள நின்றியூரில் நிலையாக உறைகின்றார்.    

 

]]>
https://www.dinamani.com/specials/thinam-oru-thavaram/2019/jun/26/133-சூலம்படை-சுண்ணப்பொடி---பாடல்-1-3180473.html
3174018 ஸ்பெஷல்ஸ் தினம் ஒரு தேவாரம் 132. கள்ளார்ந்த பூங்கொன்றை - பாடல் 11 என். வெங்கடேஸ்வரன் DIN Tuesday, June 25, 2019 12:00 AM +0530  

பாடல் 11:

    செடியாய உடல் தீர்ப்பான் தீவினைக்கு ஓர் மருந்தாவான்
    பொடி ஆடிக்கு அடிமை செய்த புள்ளிருக்குவேளூரைக்
    கடி ஆர்ந்த பொழில் காழிக் கவுணியன் சம்பந்தன் சொல்
    மடியாது சொல்ல வல்லார்க்கு இல்லையாம் மறுபிறப்பே

விளக்கம்:

செடி=குணமின்மை; பாவம் சேர்ந்தது; வினைகளால் விளைந்த உடல் என்பதால் களங்கம் உடையது என்று கூறப்படுகின்றது. வினைகளை தீர்த்துக் கழிப்பதற்கு தானே, உயிர் தகுந்த  உடலுடன் சேர்க்கப்படுகின்றது. மீண்டும் மீண்டும் பிறந்து உழல்வது உயிர்களின் குற்றம். அந்த குற்றமாகிய நோயினைத் தீர்க்கும் வல்லமை படைத்த மருத்துவன் என்பதால் தலத்து இறைவனுக்கு வைத்தியநாதன் என்ற பெயர் ஏற்பட்டது. அவனைத் தொழுது வணங்குவதே மருந்தாக செயல்படுவதால், பெருமானையே மருந்து என்று சம்பந்தர் கூறுகின்றார். பொடி=திருநீறு; நீரில் நீராடும் ஒருவனின் உடலில் எங்கும் நீர்த்துளிகள் காணப்படுவது போன்று, பெருமானின் உடலெங்கும் திருநீறு காணப்படுவதால், பொடியில் நீராடியவன் என்ற பொருள்பட பொடியாடி என்று நயமாக சம்பந்தர் கூறுகின்றார். மடி=சோம்பல்; மடியின்றி=சோம்பல் ஏதுமின்றி மீண்டும் மீண்டும் சொல்லும் தன்மை; கடி=நறுமணம்; பொடியாடிக்கு அடிமை என்று திருஞானசம்பந்தர் தன்னை குறிப்பிடுவதாக சிலர் விளக்கம் கூறுகின்றனர்.

மந்திரமும் தந்திரமும் மருந்துமாகி தீராநோய் தீர்த்து அருள வல்லான் என்று அப்பர்  பிரான் கூறுவது (6.54.8) நமது நினைவுக்கு வருகின்றது. பஞ்சாக்கர மந்திரத்தை மந்திரம் என்றும், பஞ்சாக்கர மந்திரத்தால் விளக்கப்படும் ஆகம நூல்களை தந்திரம் என்றும் அந்த நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ள முறையின் வழியே செய்யப்படும் தியானம், பூஜை, ஜெபம் ஆகியவற்றை மருந்து என்றும் அப்பர் பிரான் உணர்த்துவதாகவும் பொருள் கொள்ளலாம்.

    பேராயிரம் பரவி வானோர் ஏத்தும் பெம்மானைப் பிரிவிலா
        அடியார்க்கு என்றும்
    வாராத செல்வம் வருவிப்பானை மந்திரமும் தந்திரமும்
         மருந்தும் ஆகித்
    தீரா நோய் தீர்த்து அருள வல்லான் தன்னைத் திரிபுரங்கள்
         தீயெழத் திண்சிலைக்         கொண்ட
    போரானைப் புள்ளிருக்குவேளூரானைப் போற்றாதே ஆற்ற
         நாள் போக்கினேனே         

பொழிப்புரை:

நமது தீவினைகளுக்கு மருந்தாக விளங்கி அவற்றை முற்றிலும் நீக்கி, களங்கம் நிறைந்த உடலுடன் சேர்ந்து மீண்டும் மீண்டும் பிறப்பதைத் தவிர்க்கும் பெருமானுக்கு, தனது உடல் முழுதும் திருநீறு பூசி விளங்கும் பெருமானுக்கு, அடிமையாக திகழ்ந்து வழிபட்ட சடாயு வழிபட்ட தலம் புள்ளிருக்குவேளூர். நறுமணம் உடைய மலர்ச் சோலைகள் நிறைந்த சீர்காழி நகரத்தில் தோன்றியவனும், கவுணிய கோத்திரத்தைச் சார்ந்தவனும் ஆகிய ஞான சம்பந்தன் சொல்லிய இந்த பத்து பாடல்களையும், சோம்பல் ஏதுமின்றி மீண்டும் மீண்டும் சொல்லும் வல்லமை வாய்ந்த அடியார்களுக்கு மறுபிறப்பு என்பதே இல்லை. அவர்கள் இறைவனின் அருளால் பிறப்பிறப்புச் சுழற்சியிலிருந்து விடுபட்டு வீடுபேறு அடைந்து நிலையான இன்பமுடன் வாழ்வார்கள்.          

முடிவுரை:

இந்த பதிகத்தினை நாள்தோறும் பாராயணம் செய்யும் அடியார்களுக்கு பிறவிப்பிணி தீரும்  என்பது சான்றோர்களின் முடிவு. பெருமானின் தன்மைகளையும் பண்புகளையும் சிறப்பாக கருதுவது போன்று அடியார்களின் தன்மையையும் நாம் சிறப்பாக கருதவேண்டும் என்பதை உணர்த்தும் பொருட்டு, சம்பந்தர் இந்த பதிகத்தின் அனைத்துப் பாடல்களிலும் சடாயு மற்றும் சம்பாதியின் செயல்களை குறிப்பிடுகின்றார். சடாயு மற்றும் சம்பாதியின் செயல்கள் விவரமாக கூறப்பட்டாலும் பெருமானின் பெருமைகளையும் சம்பந்தர் இந்த பதிகத்து பாடல்களில் கூறுகின்றார்.

பதிகத்தின் முதல் பாடலில் சந்திரனுக்கு அருளிய கருணைத் தன்மையும், இரண்டாவது பாடலில் பக்குவப்பட்ட அடியார்களின் மலங்களைத் தனது பிச்சைப் பாத்திரத்தில் ஏற்றுக்கொண்டு முக்தி நிலை அளிக்கும் தன்மையும், மூன்றாவது பாடலில் தேவர்களால் வணங்கப்படும் தன்மையும்,  நான்காவது பாடலில் தீயினை ஏந்தியவாறு நடமாடும் தன்மையும்,  ஐந்தாவது பாடலில் அடியார்கள் இசையுடன் இணைத்து பாடல்கள் பாடும் வண்ணம் தலத்தில் உறையும் தன்மையும்,  ஆறாவது பாடலில் நாம் அனைவரும் உய்யும் வண்ணம் ஆகமங்களையும் வேதங்களையும் அருளிய கருணைச் செயலும்,  ஏழாவது பாடலில் தன்னை எதிர்த்து வந்த மதயானையினை வெற்றி கொண்ட தன்மையும்,  எட்டாவது பாடலில் இசைப் பாடல்கள் பாடி தன்னை மகிழ்விக்கும் அடியார்கள் மீண்டும் பிறப்பெடுத்து நிலவுலகுக்கு வாராமே தன்னுடன் இணைந்து இன்பமாக இருக்கும் நிலையினை அருளும் திறமும்,  ஒன்பதாவது பாடலில் திரிபுரங்களை எரித்த சாதனையும், பத்தாவது பாடலில் பெருமானின் பெரிய உருவத்தையும் பேராற்றலையும் குறிப்பிடும் ஞானசம்பந்தர் பதிகத்தின் கடைப்பாடலில், மறுபிறப்பினை நாம் தடுப்பதற்கான வழியினை உணர்த்துகின்றார். மந்திரமும் தந்திரமும் மருந்துமாகி நமது பிறவிப்பிணியினைத் தீர்க்கும் மருத்துவனகிய வைத்தியநாதரை, அப்பரும் சம்பந்தரும் அருளிய பதிகங்கள் கொண்டு வணங்கி துதித்துப் பாடி, இம்மையில் நோயின்றியும் மறுமையில் பிறவிப் பிணி நீங்கப் பெற்றும் இன்பமுடன் வாழ்வோமாக.

 

]]>
https://www.dinamani.com/specials/thinam-oru-thavaram/2019/jun/25/132-கள்ளார்ந்த-பூங்கொன்றை---பாடல்-11-3174018.html
3174017 ஸ்பெஷல்ஸ் தினம் ஒரு தேவாரம் 132. கள்ளார்ந்த பூங்கொன்றை - பாடல் 10 என். வெங்கடேஸ்வரன் DIN Monday, June 24, 2019 12:00 AM +0530

பாடல் 10:

    கடுத்து வரும் கங்கை தனைக் கமழ் சடை ஒன்று ஆடாமே
    தடுத்தவர் எம் பெருமானார் தாம் இனிதா உறையும் இடம்
    விடைத்து வரும் இலங்கைக் கோன் கலங்கச் சென்று இராமர்காப்
    புடைத்து அவனை பொருது அழித்தான் புள்ளிருக்குவேளூரே

விளக்கம்:

கடுத்து வரும்=மிகுந்த கோபத்துடன்; நீர்நிலைகளில் முங்கி, தலை உட்பட உடல் உறுப்புகள் அனைத்தும் நனையும் வண்ணம் குளித்தலே, நீராடல் என்று சொல்லப்படும். பெருமான் தனது சடையில் கங்கை நதியினை மறைத்த போதிலும் அவரது சடை முழுதும் நனையாமல் இருந்தது என்பதை உணர்த்தும் வண்ணம், சடை ஒன்றும் ஆடாமே என்று சம்பந்தர் கூறுகின்றார். பெருமானுக்கு ஒன்பது சடைகள் என்று தேவாரப் பாடல்கள் உணர்த்துகின்றன. அந்த ஒன்பது சடைகளில் ஒரு சடை மட்டுமே, கங்கை நதியைக் கரந்திடப் பயன்பட்டது என்பதையும் சம்பந்தர் இங்கே உணர்த்துகின்றார். விடைத்து=சீறி; கமழ் சடை=பரந்து விளங்கிய சடை; மலங்க=கலங்க; கமழ் சடை என்ற தொடருக்கு  நறுமணம் கமழும் பூக்களை சடையில் அணிந்தவன் என்று பொருள் கொள்வதும் பொருத்தமே. சூரிய மண்டலம் வரை பறந்து சென்றதால் சம்பாதியின் சிறகுகள் எரிந்து  அழிந்தன என்று மனிமேகலை காப்பியம், சம்பாதி வனத்தை குறிப்பிடுகையில் சொல்கின்றது. அரக்கன் இராவணன் வைத்திருந்த சந்திரகாசம் என்றார் வாள் மிகவும் சிறந்த படைக்கலம் என்பதால். அந்த படைக்கலம் மீண்டும் பயன்படாத வகையில்  செயல்பட்ட ஜடாயு இராமபிரானுக்கு செய்த உதவி மிகவும் பெரிய உதவியாகும்.            

பொழிப்புரை:

தனது விருப்பத்திற்கு மாறாக நிலவுலகம் செல்லுமாறு பணிக்கப்பட்டதால், மிகுந்த கோபத்துடன் வேகமாக கீழே இறங்கிய கங்கை நதியினை, தனது ஒன்பது சடைகளில் ஒரு சடையில் பெருமான் தாங்கிய போதிலும், அந்த ஒரு சடையும் முழுவதும் நனையாத வண்ணம் இருந்தது. அத்தகைய பேருருவும் ஆற்றலும் கொண்டுள்ள பெருமான், மிகுந்த  மகிழ்வுடன் உறையும் இடம் புள்ளிருக்குவேளூர் ஆகும். தான் சீதா பிராட்டியைக் கவர்ந்து சென்றதை கண்டுவிட்ட ஜடாயு என்பதால் மிகுந்த கோபம் கொண்டு சீறிப் பாய்ந்த, இலங்கை மன்னனாகிய அரக்கன் கலங்கும் வண்ணம், இராம பிரானுக்கு உதவி செய்யும் பொருட்டு அரக்கனுடன் கடுமையாக போரிட்டு அவனது வலிமையை அழித்த ஜடாயு  வழிபட்ட தலம் புள்ளிருக்குவேளூராகும். 

 

]]>
https://www.dinamani.com/specials/thinam-oru-thavaram/2019/jun/24/132-கள்ளார்ந்த-பூங்கொன்றை---பாடல்-10-3174017.html
3174016 ஸ்பெஷல்ஸ் தினம் ஒரு தேவாரம் 132. கள்ளார்ந்த பூங்கொன்றை - பாடல் 9 என். வெங்கடேஸ்வரன் DIN Sunday, June 23, 2019 12:00 AM +0530  

பாடல் 9:

    வேதித்தார் புரம் மூன்றும் வெங்கணையால் வெந்து அவிய
    சாதித்த வில்லாளி கண்ணாளன் சாரும் இடம்
    ஆதித்தன் மகன் என்ன அகன் ஞாலத்தவரோடும்
    போதித்த சடாய் என்பான் புள்ளிருக்குவேளூரே

விளக்கம்:

வேதித்தார்=பேதம் செய்து வேறுபட்டவர்; வேறு எவராலும் அழிக்க முடியாத மூன்று பறக்கும் கோட்டைகளையும் ஒருசேர அழித்து சாதனை செய்தவர் சிவபெருமான் என்பதை உணர்த்தும் வண்ணம் சாதித்த வில்லாளி என்று கூறுகின்றார். கண்ணாளன்=கண் போன்று உலகம் இயங்குவதற்கு இன்றியமையாதவனாக விளங்கும் பெருமான்; ஞாலம்=உலகம்; சூரியனின் மகன்களாகிய ஜடாயு சம்பாதி ஆகிய இருவரும், ஒரு முறை மிகவும் உயரே பறந்து சூரிய மண்டலத்தை நெருங்கியதால், அவர்களது சிறகுகள் எரிந்துபட்டு கீழே இந்த தலத்தில் விழுந்தனர் என்றும் பெருமானை வழிபட்டு அதன் பயனாக சிறகுகள் வளர்ந்தன என்றும் தலபுராணம் கூறுகின்றது. உலகத்தவர் பெருமானை வழிபட்டு, அதன் பயனாக ஞானம் பெற்று, மற்றவருக்கு அறிவுரை கூறியது போன்று இந்த இரண்டு பறவைகளும் மற்றவருக்கு அறிவுரை கூறியதாக சம்பந்தர் உணர்த்துகின்றார் என்று சிலர் விளக்கம் கூறுகின்றனர்.      .     

பொழிப்புரை:

வேதநெறி வழி செல்லாமல் வேறு வழியில் சென்ற திரிபுரத்து அரக்கர்களின் மூன்று பறக்கும் கோட்டைகளையும், தான் கொண்டிருந்த கொடிய அம்பினால் ஒரே சமயத்தில் எரித்து அழித்த சாதனை படைத்த வில்லாளி பெருமான் ஆவான். உலகத்தின் கண் போன்று அனைத்து உயிர்களுக்கும் இன்றியமையாதவனாக இருந்து ஆட்கொள்ளும் பெருமான் சார்ந்து தங்குமிடம் புள்ளிருக்குவேளூர் தலமாகும். அரக்கன் இராவணனை எதிர்கொண்டு, சூரியனின் மகன் என்ற இயல்பினுக்கு ஏற்ப வலிமை கொண்டவன் தான்  என்று உலகுக்கு நிரூபித்த ஜடாயு வழிபட்ட தலம் புள்ளிருக்குவேளூர் ஆகும்.  

  

]]>
https://www.dinamani.com/specials/thinam-oru-thavaram/2019/jun/23/132-கள்ளார்ந்த-பூங்கொன்றை---பாடல்-9-3174016.html
3174015 ஸ்பெஷல்ஸ் தினம் ஒரு தேவாரம் 132. கள்ளார்ந்த பூங்கொன்றை - பாடல் 8 என். வெங்கடேஸ்வரன் DIN Saturday, June 22, 2019 12:00 AM +0530  

பாடல் 8:

    பண் ஒன்ற இசை பாடும் அடியார்கள் குடியாக
    மண் இன்றி விண் கொடுக்கும் மணிகண்டன் மருவும் இடம்
    எண்ணின்றி முக்கோடி வாணாள் அது உடையானைப்
    புண் ஒன்றப் பொருது அழித்தான் புள்ளிருக்குவேளூரே

விளக்கம்:

பொதுவாக திருஞானசம்பந்தர் அருளிய பதிகத்தின் எட்டாவது பாடலில் அரக்கன் இராவணனின் வலிமையை சிவபெருமான் அடக்கியதும் பின்னர் அவனுக்கு அருள் புரிந்த நிகழ்ச்சியும் காணப்படும் ஆனால் இந்த பதிகத்தில், சிவபெருமான் இராவணனின் வலிமையை அடக்கிய நிகழ்ச்சி குறிப்பிடப்படவில்லை. ஆனால் அதற்கு பதிலாக, பெருமானின் அடியான் ஆகிய ஜடாயு, இராவணனின் வலிமையை அடக்கிய நிகழ்ச்சி குறிப்பிடப் படுகின்றது. பெருமானின் பெருமை போன்று அவனது அடியார்களின் பெருமையையும் சிறப்பாக கருதியமையால், சம்பந்தர் ஜடாயு அரக்கனின் வலிமையை அடக்கிய நிகழ்ச்சியை குறிப்பிட்டார் போலும் என்று தோன்றுகின்றது. இத்தகைய குறிப்பு நமக்கு வடகுரங்காடுதுறை தலத்தின் மீது சம்பந்தர் அருளிய பதிகத்து பாடலை (3.91.8) நமது நினைவுக்கு கொண்டு வருகின்றது. இலை=மூலிகை பச்சிலைகள்

    நீலமாமணி நிறத்து அரக்கனை இருபது கருத்தோடு ஒல்க
    வாலினால் கட்டிய வாலியார் வழிபட மன்னு கோயில்
    ஏலமோடு இலை இலவங்கமே இஞ்சியே மஞ்சள் உந்தி
    ஆலியா வரு புனல் வடகரை அடை குரங்காடுதுறையே

இந்த நிகழ்ச்சி இராமயணம் உத்தரகாண்டத்தில் காணப் படுகின்றது. தான் சந்தியாவந்தனம்  செய்வதற்கு கடற்கரை செல்வது வாலியின் அன்றாட வழக்கம். அவ்வாறு சென்ற வாலியைக் கண்ட அரக்கன் இராவணன், அவனது வலிமையை அடக்கும் பொருட்டு அவனது முதுகின் மீது ஏறி அமர்ந்தான். தனது முதுகின் மீது எவரோ அமர்வதை உணர்ந்த  வாலி, தனது வாலினால் அரக்கன் அசையாவண்ணம் சுற்றிக் கட்டினான் என்று வால்மீகி  கூறுகின்றார். ஒல்க=குழைய;

அரக்கனின் வலிமையை பெருமான் அடக்கிய நிகழ்ச்சி குறிப்பிடப்படவில்லை; எனினும் பெருமான் மூன்று கோடி வாழ்நாள் அருளியது இந்த பாடலில் கூறப்பட்டுள்ளது. பண் ஒன்ற=இசைப்பண் பாடலுடன் பொருந்தும் வண்ணம்; குடியாக=புகலிடமாக; மண்ணின்றி= மீண்டும் உலகினில் பிறக்க வேண்டிய அவசியம் இன்றி; விண்=விண்ணுலகத்தினும் பெருமை வாய்ந்த முக்தி உலகம்; மருவும்=வாழும்; புண்=காயங்களால் ஏற்பட்ட புண்; எண்ணின்றி=கணக்கில் அடங்காத வண்ணம்; வாணாள்=வாழ்நாள்
            
பொழிப்புரை:

இனிய இசை பொருந்தும் வண்ணம் பாடல்கள் பாடி, பெருமானின் திருவடிகளை புகலிடமாக கருதி வழிபடும் அடியார்கள், மீண்டும் நிலவுலகில் பிறக்க வேண்டிய அவசியம் இல்லாமல் விண்ணுலகத்தினும் மேலான முக்தி உலகத்தினை அவர்களுக்கு அருளும் பெருமான், தனது கழுத்தினில் மாணிக்கம் பதிக்கப் பட்டது போன்று கரையினை உடைய நீலகண்டன், உறையும் இடம் புள்ளிருக்குவேளூர் தலமாகும். எண்ணிக்கையில் அடங்காத வண்ணம் மூன்று கோடி வாழ்நாளை, பெருமானது அருளால் பெற்ற அரக்கன் இராவணனின் உடலில் காயங்களும் புண்களும் ஏற்படும் வண்ணம் போரிட்டு அவனது வலிமையை அழித்த ஜடாயு வழிபட்ட தலம் புள்ளிருக்குவேளூர் தலமாகும்.   

 

]]>
https://www.dinamani.com/specials/thinam-oru-thavaram/2019/jun/22/132-கள்ளார்ந்த-பூங்கொன்றை---பாடல்-8-3174015.html
3174014 ஸ்பெஷல்ஸ் தினம் ஒரு தேவாரம் 132. கள்ளார்ந்த பூங்கொன்றை - பாடல் 7 என். வெங்கடேஸ்வரன் DIN Friday, June 21, 2019 12:00 AM +0530  

பாடல் 7:

    அத்தியின் ஈருரி மூடி அழகாக அனல் ஏந்திப்
    பித்தரைப் போல் பலி திரியும் பெருமானார் பேணுமிடம்
    பத்தியினால் வழிபட்டுப் பலகாலம் தவம் செய்து
    புத்தி ஒன்ற வைத்து உகந்தான் புள்ளிருக்குவேளூரே

விளக்கம்:

அத்தி=யானை; பசி, தாகம், தூக்கம் ஆகியவற்றைக் கடந்த பெருமான், தான் உயிர் வாழும்  வண்ணம் உதவி புரியும் உணவினுக்காக பிச்சை எடுப்பது போன்ற தோற்றத்தை தருவதால், அவரை பித்தர் என்று சம்பந்தர் அழைக்கின்றார். யானையின் பசுமைத் தோல் உடலுக்கு கேடு விளைவிக்கும் என்பதால் அனைவரும் அதனைத் தவிர்ப்பார்கள். ஆனால் பெருமானோ யானையின் தோலை தனது உடல் மீது போர்த்துக் கொண்டதும் அன்றி,  எரியும் தீப்பிழம்பினை ஏந்தி நடமாடுகின்றார். இவ்வாறு அனைவரும் தவிக்கும் மூன்று செயல்களை செய்யும் பெருமானை மிகவும் பொருத்தமாக பித்தர் என்று சம்பந்தர் அழைப்பதை நாம் உணரலாம். பத்தி=பக்தி; உகந்தான்=உயர்ந்த நிலையினை அடைந்து மகிழ்ச்சியுடன் இருந்தான்;

மனமொன்றி ஜடாயு வழிபட்டான் என்று சமபந்தர் கூறுவது, நமக்கு அப்பர் பிரான் தில்லைத் தலத்தின் மீது அருளிய பாடலினை (4.82.3). நினைவூட்டுகின்றது. கன்றிய=சினந்த சிறுவன் மார்க்கண்டேயனின் வாழ்நாள் முடிந்து விட்ட நிலையில், அவனது உயிர்னைக் கவரும் பொருட்டு தனது கடமையைச் செய்ய வந்த இயமனுக்கு அந்தச் சிறுவன் தனது கடமையைச் செய்ய விடாமல் சிவலிங்கத்தைக் கட்டிக் கொண்டு இருந்தது, கோபத்தை ஏற்படுத்தியது.

    ஒன்றி இருந்து நினைமின்கள் உந்தமுக்கு ஊனமில்லை
    கன்றிய காலனைக் காலால் கடிந்தான் அடியவற்காச்
    சென்று தொழுமின்கள் தில்லையுள் சிற்றம்பலத்து நட்டம்
    என்று வந்தாய் என்னும் எம்பெருமான் தன் திருக்குறிப்பே  

பொழிப்புரை:

தன்னை எதிர்த்து வந்த மதயானையின் தோலை உரித்து, அந்த ஈரப்பசை மிகுந்த தோலினைத் தனது உடல் மீது போர்த்தவனும், மிகுந்த அழகுடன் தனது கையினில் தீப்பிழம்பை ஏந்தி நடனம் ஆடுபவனும், தனக்கு உணவு ஏதும் தேவைப்படாத நிலையிலும் பித்தர் போன்று பலியேற்று உலகெங்கும் திரிபவனும் ஆகிய பெருமான், மிகுந்த விருப்பத்துடன் பேணி பாதுகாத்து உறையும் இடம் புள்ளிருக்குவேளூர். பல காலம் தவம் செய்து அடைந்த ஞானம் கொண்டு, மிகுந்த பக்தியுடன் தனது மனம் ஒன்றி பெருமானை வழிபட்டதால் உய்வினை அடைந்து மகிழ்ச்சியுடன் இருந்த ஜடாயுவும் சம்பாதியும்  பெருமானை வழிபட்ட தலம் புள்ளிருக்குவேளூர் என்பதாகும்.

 

 

]]>
https://www.dinamani.com/specials/thinam-oru-thavaram/2019/jun/21/132-கள்ளார்ந்த-பூங்கொன்றை---பாடல்-7-3174014.html
3174013 ஸ்பெஷல்ஸ் தினம் ஒரு தேவாரம் 132. கள்ளார்ந்த பூங்கொன்றை - பாடல் 6 என். வெங்கடேஸ்வரன் DIN Thursday, June 20, 2019 12:00 AM +0530
பாடல் 6:

    திறம் கொண்ட அடியார் மேல் தீவினை நோய் வாராமே
    அறம் கொண்டு சிவதன்மம் உரைத்த பிரான் அமரும் இடம்
    மறம் கொண்டு அங்கு இராவணன் தன் வலி கருதி வந்தானைப்
    புறம் கண்ட சடாய் என்பான் புள்ளிருக்குவேளூரே

விளக்கம்:

தீவினை நோய்=தீயினும் கொடிய வினைகளால் ஏற்படும் பிறவிப்பிணி; மறம்=பாவச்செயல்;   திறம்=சைவத் திறம், சிவநெறியில் ஒழுகுதல்: திருவாசகம் கீர்த்தித் திருவகவலில் மணிவாசகர், சொன்ன ஆகமம் தோற்றுவித்து அருளியும்,  என்று பெருமான் தனது திருவாயால் ஆகமங்கள் தோற்றுவித்ததை குறிப்பிடுகின்றார். திருவிளையாடல் புராணத்தில் எந்தெந்த ஆகமங்கள் எவருக்கு சொல்லப்பட்டன என்ற விவரங்கள் காணப்படுகின்றன. தத்புருட முகத்தின் மூலம் கௌதம முனிவருக்கு, இரௌரவம் மகுடம் விமலம் சந்திரஞானம் முகவிம்பம் எனப்படும் ஐந்து ஆகமங்களும், வாமதேவ முகத்தின் மூலம்  காசிப முனிவருக்கு தீர்த்தம் சூக்குமம் சகச்சிரம் அஞ்சுமான் அப்பிரபேதம் ஆகிய ஐந்து ஆகமங்களும், சத்தியோஜாதம் முகத்தால் கௌசிக முனிவருக்கு காமிகம் யோகசம் சிந்தியம் காரணம் அசிதம் ஆகிய ஐந்து ஆகமங்களும், அகோர முகத்தால் பாரத்வாஜ முனிவருக்கு விசயம் நிச்சுவாசம் சுவாயம்புவம் ஆக்னேயம் வீரம் ஆகிய ஐந்து ஆகமங்களும், ஈசான முகத்தின் மூலமாக அகத்திய முனிவருக்கு புரோற்கீதம் இலளிதம் சித்தம் சந்தானம் சருவோத்தம் பரமேசுரம் கிரணம் வாதுளம் ஆகிய எட்டு ஆகமங்களும், உணர்த்தப் பட்டன என்று கூறுவார்கள். இந்த பாடலில் அறம் என்ற சொல் கருணை என்று பொருளில் பயன்படுத்தப் பட்டுள்ளது. மலத்துடன் பிணைந்துள்ள உயிர்கள் பால் கருணை கொண்டு, அந்த உயிர்கள் தங்களது மலத்தினைக் கழித்துக் கொண்டு உய்வினை அடையும் பொருட்டு பல விதமான உடல்களுடன் அந்த உயிர்களை இணைக்கும் பெருமான், அந்த உயிர்கள் உய்வினை அடையும் வழி யாது என்பதை உணர்த்தும் பொருட்டு நான்கு வேதங்களையும் ஆகமங்களையும் பல முனிவர்கள் மூலமாக நமக்கு உணர்த்தியுள்ளான்.  வடமொழி வேதங்களையும் ஆகமங்களையும் அளித்த பெருமான், அத்துடன் நிற்காமல், நால்வர் பெருமானார்கள் மூலம் தேவார திருவாசக பதிகங்களையும் அருளியது நமது தமிழுலகம் செய்த பெரும் பேறு அல்லவா. இந்த கருணைச் செயல் இங்கே குறிப்பிடப் பட்டுள்ளது.  

இந்த பாடலில் புறம் கண்ட சடாயு என்று சம்பந்தர் குறிப்பிடுகின்றார். அந்நாள் வரை எவரிடமும் பெருமான் அளித்த வாளினால் போரிடாத அரக்கன் இராவணன், அந்த தெய்வத்தன்மை வாய்ந்த வாளினை எடுத்து சடாயுவின் சிறகுகளை வெட்டினான் என்பதே  நிலைகுலைந்த நிலையினில் அரக்கன் ஒரு தருணத்தில் இருந்தான் என்பதை நமக்கு புலப்படுத்துகின்றது. சுந்தர காண்டம் நிந்தனைப் படலத்தில் வரும் கீழ்க்கண்ட கம்ப இராமாயண வரிகள், ஜடாயுவுக்கும் இராவணனுக்கும் நடந்த சண்டையை நேரில் கண்ட  சீதையின் வாய்மொழியாக வந்த சொற்கள், நாம் இங்கே நினைவு கூரத் தக்கன. பெருமான் அருளிய வாளின் உதவி இல்லையேல். அன்றே ஜடாயுவிடம் நீ தோற்று இறந்திருப்பாய் அல்லவா என்று ஏளனமாக சீதா பிராட்டி அரக்கன் இராவணனை நோக்கி கேள்வி கேட்பதை நாம் உணரலாம். எனவே ஜடாயு மற்றும் இராவணன் ஆகிய இருவருக்கும் இடையே நடந்த சண்டையில் வெற்றி பெற்றது பெருமான் அளித்த வாள் தான் என்பதையும் இராவணன் அல்ல என்பதையும் நாம் உணரலாம். எனவே புறம் கண்ட ஜடாயு என்ற தொடர் மிகவும் பொருத்தமாக அமைந்துள்ளது.      

    தோற்றனை பறவைக்கு அன்று துள்ளுநீர் வெள்ளம் சென்னி
    ஏற்றவன் வாளினால் வென்றாய் அன்று எனின் இறத்தி அன்றே

ஜடாயுவின் வலிமை அரக்கனின் வலிமையை விடவும் குறைந்தது என்பதால் ஜடாயு  தோல்வி அடையவில்லை என்பதையும், கம்பர் ஜடாயு வதைப் படலப் பாடல் ஒன்றினில் குறிப்பிடுகின்றார். ஜடாயுவின் ஆற்றலுக்கு முன்னம் தனது வலிமையை இழந்து  அரக்கன் வெட்கத்துடன் நின்றான் என்று குறிப்பிடுகின்றார். மேலும் தனது வாழ்நாள் அன்றே   முடிந்துவிடுமோ என்ற அச்சத்தில் அரக்கன் பெருமான் கொடுத்த வாளினை எடுத்தான் என்று கம்பர் உணர்த்தும் பாடலை நாம் இங்கே காண்போம். எவராலும் தடுக்கவொண்ணாத சிறப்புத் தன்மை வாய்ந்த வாள் என்றும் கம்பர் குறிப்பிடுகின்றார். மாற்றரும்=தடுக்கும் படை ஏதுமின்றி திகழும்; இராவணின் வலிமை முன்னர் ஜடாயு தோற்கவில்லை என்றும் எவராலும் தடுக்கமுடியாத வாளின் முன்னர் தோற்றான் என்றும் கம்பர் இங்கே கூறுகின்றார். முன்னொரு காலத்தில் மலைகளுக்கு சிறகுகள் இருந்தன என்றும், அந்த மலைகளின் சிறகுகளை இந்திரன் தனது வச்சிராயுதத்தால் வெட்டி வீழ்த்தினான் என்றும் புராணம் கூறுகின்றது. அவ்வாறு சிறகுகள் வெட்டப்பட்ட மலைகள் கீழே விழுந்தது போன்று, தனது சிறகுகள் வெட்டப்பட்டு ஜடாயு கீழே விழுந்தது என்று கம்பர் இங்கே கூறுகின்றார்.     

    வலியின் தலை தோற்றிலன் மாற்றரும் தெய்வ வாளால்
    நலியும் தலை என்றது அன்றியும் வாழ்க்கை நாளும்
    மெலியும் கடை சென்றுளது ஆகலின் விண்ணின் வேந்தன்   
    குலிசம் எறிய சிறை அற்றதோர் குன்றின் வீழ்ந்தான்             

பொழிப்புரை:

சிவநெறி ஒழுக்கத்தில் ஒழுகும் அடியார்கள் தங்களது பிறவிப் பிணியினைத் தீர்த்துக் கொண்டு, பிறப்பிறப்புச்  சுழற்சியிலிருந்து விடுபடும் வழியினை உணர்த்தும் வண்ணம், உயிர்களின் மீது கருணை கொண்டு, வேதங்களையும் ஆகமங்களையும் அருளிய பெருமான் உறையும் இடம் புள்ளிருக்குவேளூர் ஆகும். மாற்றான் மனைவியைக் கவர்ந்ததால் தருமத்திற்கு புறம்பான வழியில் சென்ற அரக்கன் இராவணன், தனது வலிமையை மிகவும் பெரிதாக கருதி, தான் சீதை பிராட்டியைக் கவர்ந்து செல்வதை தடுப்பவர் எவருமில்லை என்ற செருக்குடன், வந்த அரக்கன் இராவணனுடன் போரிட்டு அவனை புறமுதுகிட்டோடச் செய்த ஜடாயு பெருமானை வழிபட்ட தலம் புள்ளிருக்குவேளூர்  ஆகும்.

 

]]>
https://www.dinamani.com/specials/thinam-oru-thavaram/2019/jun/20/132-கள்ளார்ந்த-பூங்கொன்றை---பாடல்-6-3174013.html
3174008 ஸ்பெஷல்ஸ் தினம் ஒரு தேவாரம் 132. கள்ளார்ந்த பூங்கொன்றை - பாடல் 5 என். வெங்கடேஸ்வரன் DIN Wednesday, June 19, 2019 12:00 AM +0530  

பாடல் 5:

    கீதத்தை மிகப் பாடும் அடியார்கள் குடியாகப்
    பாதத்தைத் தொழ நின்ற பரஞ்சோதி பயிலும் இடம்
    வேதத்தின் மந்திரத்தால் வெண்மணலே சிவமாகப்
    போதத்தால் வழிபட்டான் புள்ளிருக்குவேளூரே

விளக்கம்:

போதம்=ஞானம்; கீதம்=இனிய இசையுடன் கூடிய பாடல்கள்; குடி=புகலிடம்; பரஞ்சோதி= உயர்ந்த சோதி; பெருமான் சூரியன் சந்திரன் மற்றும் அக்னி ஆகிய மூன்று சுடர்களுடன் உடன் இருந்து அந்த சுடர்களுக்கு ஒளி கொடுக்கும் ஈசன், தானே ஒளிவிடும் சோதியாகவும் உள்ளான். அவ்வாறு ஒளிவீசும் சோதியாக விளங்கும் ஈசனுக்கு ஒளி கொடுப்பவர் எவரும் இல்லை என்பதால், உயர்ந்த சோதி என்ற பொருளைத் தரும் வண்ணம் பரஞ்சோதி என்று இங்கே குறிப்பிடுகின்றார். பயிலும்=தொடர்ந்து இந்த தலத்தில் உறையும் நிலை; மண்ணி ஆற்றின் கரையில் இருந்த வெண்மணலில் இலிங்கம் செய்து வழிபட்டவர் சண்டீசர். தான் கண்ட அனைத்துப் பொருட்களிலும் சிவத்தை காணும் ஞானம் பெற்றவர் அப்பர் பிரான்.  அவ்வாறே வெண்மணலில் சிவபெருமானின் உருவத்தைக் கண்ட ஞானம் உடையவர்களாக ஜடாயுவும் சம்பாதியும் திகழ்ந்தனர் என்று சம்பந்தர் கூறுகின்றார்.       

பொழிப்புரை:

இனிய இசையுடன் கூடிய பாடல்களை பாடும் அடியார்கள், தங்களது புகலிடம் என்று பெருமானின் திருவடிகளை கருதி, அவற்றைத் தொழுது வணங்கும் வண்ணம், எந்நாளும் உயர்ந்த சோதியாகிய பெருமான் உறையும் இடம் புள்ளிருக்குவேளூர் தலமாகும். தாங்கள் பெற்றிருந்த ஞானத்தின் உதவி கொண்டு வெண்மணலை சிவமாக பாவிக்கும் தன்மை பெற்றிருந்த ஜடாயுவும் சம்பாதியும், வேத மந்திரங்களை சொல்லி பெருமானை வழிபட்ட தலம் புள்ளிருக்குவேளூர் ஆகும்.

 

]]>
https://www.dinamani.com/specials/thinam-oru-thavaram/2019/jun/19/132-கள்ளார்ந்த-பூங்கொன்றை---பாடல்-5-3174008.html
3174007 ஸ்பெஷல்ஸ் தினம் ஒரு தேவாரம் 132. கள்ளார்ந்த பூங்கொன்றை - பாடல் 4 என். வெங்கடேஸ்வரன் DIN Tuesday, June 18, 2019 03:20 PM +0530
பாடல் 4:

    மாகாயம் பெரியது ஒரு மான் உரிதோல் உடையாடை
    ஏகாயம் இட்டு உகந்த எரியாடி உறையும் இடம்
    ஆகாயம் தேரோடு இராவணனை அமரின் கண்
    போகாமே பொருது அழித்தான் புள்ளிருக்குவேளூரே

விளக்கம்:

காயம்=உடல்; மா=பெரிய; மாகாயம் என்ற சொல் இறைவனது திருமேனியை குறிக்கும். மான்=யானை; ஏகாயம்=மேலாடை, அங்கவஸ்திரம்; ஈரப்பசை உள்ள யானையின் தோலை உடல் மீது போர்த்துக் கொள்வது உடலுக்கு கேடு விளைவிக்கும் என்பதால் அனைவரும் அதனை தவிர்ப்பார்கள்; ஆனால் பெருமானோ அத்தகைய அச்சம் ஏதும் கொள்ளாமல், மிகுந்த மகிழ்ச்சியுடன் அணிந்து கொண்டார் என்பதை உணர்த்தும் வகையில், இட்டு உகந்த எரியாடி என்று சம்பந்தர் இங்கே கூறுகின்றார். எரியாடி=ஊழித் தீயினில் நின்று ஆடும் பெருமான்; புட்பக விமானத்தில் பறந்து கொண்டு சீதையை கவர்ந்து சென்ற இராவணனின் பயணம் தடைப்படும் வண்ணம் அரக்கனைத் தாக்கி ஜடாயு போர் புரிந்த செய்கை இங்கே கூறப்படுகின்றது. மாகாயம் என்ற சொல்லுக்கு பருத்த உடலினை உடைய யானை என்றும் பொருள் சொல்லப் படுகின்றது. அழித்தான்=வலிமையை குறைத்தவன்;

இந்த பாடலில் மான் என்ற சொல் மானினத்தை குறிக்காது யானையை குறிக்கும். மானின் தோலை பெருமான் உரித்ததாக புராணத்தில் எங்கும் கூறப்படவில்லை; தாருவனத்து முனிவர்களால் தன் மீது ஏவப்பட்ட புலியின் தோலை உரித்ததாகவும், யானையின் தோலை உரித்து போர்த்துக் கொண்டதாகவும் புராணங்கள் கூறுகின்றன. எனவே இங்கே யானையின் தோலை உரித்த நிகழ்ச்சியே குறிப்பிடப் படுவதாக கொள்ள வேண்டும். மான் என்று யானையைக் குறிப்பிட்டு, கருமான் என்று உணர்த்தி கரிய நிறம் கொண்ட விலங்காகிய யானை என்பதை புரிய வைக்கும் சில திருமுறைப் பாடல்களை நாம் இங்கே காண்போம்.

புகலூர் தலத்தின் மீது அருளிய பாடலில் (1.2.2) கருமானின் உரியாடை என்று யானையின் தோலை பெருமான் உரித்ததை சம்பந்தர் இங்கே குறிப்பிடுகின்றார். ஒரு காதினில் குழை அணிந்தவன் என்று மாதொரு பாகனாக இறைவன் இருக்கும் நிலை இங்கே உணர்த்தப் படுகின்றது. இழை=ஒன்பது இழைகளால் ஆன பூணூல்; நசை=தேன்; போது=மலர்கள்;

    காதிலங்குக் குழையன் இழை சேர் திருமார்பன் ஒரு பாகம்
    மாதிலங்கு திருமேனியினான் கருமானின் உரியாடை
    மீது இலங்க அணிந்தான் இமையோர் தொழ மேவும் இடம் சோலை
    போது இலங்கு நசையால் வரிவண்டு இசை பாடும் புகலூரே  

தில்லைத் தலத்தின் மீது அருளிய திருத்தாண்டகப் பாடல் ஒன்றினில் (6.1.3) அப்பர் பிரான், இறைவனை கருமானின் (யானையின்) தோலினை மேலாடையாக இறுகக் கட்டியுள்ளான் என்று கூறுகின்றார். கருமான்=யானை; அதள்=தோல்; வீக்கி=கட்டி; கனைகழல்=ஒலி எழுப்பும் கழல்கள்; கழல்கள் காலில் அணியும் ஒரு ஆபரணம் ஆகும். மானம்=பெருமை; மடித்து என்ற சொல் மட்டித்து என்று மருவியது; மானேர் நோக்கி=மானைப் போன்ற மருண்ட பார்வையினை உடைய பார்வதி தேவி; இந்த பாடல் சிவபெருமானது ஆடல் சிறப்பினை எடுத்துக் கூறுகின்றது. வாண்முகம்=வாள்முகம்=வாள் போன்று ஒளியினை வீசும் முகம்.

    கருமானின் உரி அதளே உடையா வீக்கிக் கனைகழல்கள் கலந்து
        ஒலிப்ப அனல் கை ஏந்தி
    வருமானத் திரள் தோள்கள் மட்டித்து ஆட வளர்மதியம் சடைக்கு
        அணிந்து மானேர் நோக்கி
    அருமான வாண்முகத்தாள் அமர்ந்து காண அமரர் கணம் முடி
        வணங்க ஆடுகின்ற
    பெருமானைப் பெரும்பற்றப் புலியூரானைப் பேசாத நாளெல்லாம்
        பிறவா நாளே

தில்லைத் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (7.90.5) சுந்தரர் பெருமானின் மேலாடையை கருமானின் உரியாடை என்று குறிப்பிடுகின்றார். உரும் அன்னக் கூற்று=இடி  போல் முழங்கும் கூற்றுவன்;   

    கருமானின் உரியாடைச் செஞ்சடை மேல் வெண்மதியக் கண்ணியானை
    உரும் அன்னக் கூற்றத்தை உருண்டு ஓட உதைத்து உகந்து உலவா இன்பம்
    தருவானைத் தருமனார் தமர் செக்கில் இடும் போது தடுத்தாட்கொள்வான்
    பெருமானார் புலியூர் சிற்றம்பலத்து எம் பெருமானைப் பெற்றாம் அன்றே
   
  
பொழிப்புரை:

தனது பெரிய திருமேனியின் மீது, தன்னை எதிர்நோக்கி மிகுந்த ஆவேசத்துடன் வந்த பெரிய கரிய யானையின் தோலினை உரித்து மேலாடையாக போர்த்துக் கொண்டவனும், ஊழித் தீயின் நடுவே நின்று நடமாடுபவனும் ஆகிய இறைவன் உறையும் இடம் புள்ளிருக்குவேளூர் தலமாகும். சீதாப் பிராட்டியைக் கவர்ந்து கொண்டு பறக்கும் புட்பகத் தேரினில் வானில் சென்று கொண்டிருந்த அரக்கன் இராவணனை சண்டைக்கு அழைத்து அவனை மேலே செல்லவிடாமல் தடுக்க முயற்சி செய்த ஜடாயு பெருமானை வழிபட்ட தலம் புள்ளிருக்குவேளூர் என்பதாகும்.

 

]]>
https://www.dinamani.com/specials/thinam-oru-thavaram/2019/jun/18/132-கள்ளார்ந்த-பூங்கொன்றை---பாடல்-4-3174007.html
3174006 ஸ்பெஷல்ஸ் தினம் ஒரு தேவாரம் 132. கள்ளார்ந்த பூங்கொன்றை - பாடல் 3 என். வெங்கடேஸ்வரன் DIN Monday, June 17, 2019 12:00 AM +0530  

பாடல் 3:

    வாசநலம் செய்து இமையோர் நாடோறும் மலர் தூவ
    ஈசன் எம் பெருமானார் இனிதாக உறையுமிடம்
    யோசனை போய் பூக் கொணர்ந்து அங்கு ஒரு நாளும் ஒழியாமே
    பூசனை செய்து இனிது இருந்தான் புள்ளிருக்குவேளூரே

விளக்கம்:

யோசனை=சுமார் பத்து மைல் தூரம். புள்ளிருக்குவேளூர், பூம்புகார் ஆகிய இடங்களுக்கு இடையே சுமார் பத்து மைல் தூரம் உள்ளது. பூம்புகாரில் சம்பாதி வனம் என்று ஒரு பகுதி இருந்ததாக மணிமேகலை காப்பியம் தெரிவிக்கின்றது. எனவே நாள் தவறாமல் பூம்புகாரிலிருந்து மலர்கள் பறித்து வந்து சகோதரர்களாகிய சம்பாதி மற்றும் ஜடாயு புள்ளிருக்குவேளூர் பெருமானை வழிபட்டமை இங்கே குறிப்பிடப்படுகின்றது. வாசம்= சந்தனம் குங்கிலியம் முதலான வாசனைப் பொருட்கள்; இந்த தலத்து இறைவனை, சூரியன், வேதங்கள், முருகப் பெருமான், பிரமன், செவ்வாய், இராமன், இலக்குவன் முதலான தேவர்கள் வழிபட்டமை இங்கே குறிப்பிடப் படுகின்றது.  

வாசம் என்ற சொல்லுக்கு வசிப்பது என்று பொருள் கொண்டு நலம் செய்து என்ற தொடருக்கு நன்மை விளைவிக்கும் செயல்கள் செய்து என்றும் பொருள் கொண்டு ஒரு விளக்கமும் கூறப்படுகின்றது. இந்த திருக்கோயில் குளத்தில் நீராடுவது உடல் நோயினைத் தீர்க்கும் என்று கருதப் படுகின்றது. திருக்குளத்தில் நீராடுவது மற்றும் மூர்த்தியை தரிசனம் செய்து வழிபடுவது ஆகிய செயல்கள் உடலுக்கும் உள்ளத்துக்கும் நலம் விளைவிக்கும்  செயல்கள் என்பதால், வாசநலம் செய்து இமையோர் என்ற தொடர், தேவர்கள் இந்த தலத்தில் பல நாட்கள் தங்கியிருந்து, தலத்து தீர்த்தத்தில் நீராடி, இறைவனை வழிபட்ட செயலைக் குறிக்கின்றது என்பது மற்றொரு விளக்கம்.          
 
பொழிப்புரை:

சந்தனம் குங்கிலியம் முதலான நறுமணம் மிகுந்த பொருட்களையும் மலர்களையும் இமையோர்கள் நாள்தோறும் பெருமானின் திருமேனியின் மீது தூவி வழிபட, பெருமான் மிகுந்த விருப்பத்துடன் உறையும் இடம் புள்ளிருக்குவேளூர் என்பதாகும். ஒரு நாளும் தவறாமல் ஒரு யோசனை தூரம் சென்று பூக்கள் கொணர்ந்து  சடாயு மற்றும் சம்பாதி வழிபடும் வண்ணம், இறைவன் மகிழ்ந்து உறையும் இடம் புள்ளிருக்குவேளூர் தலமாகும்.    

 

]]>
https://www.dinamani.com/specials/thinam-oru-thavaram/2019/jun/17/132-கள்ளார்ந்த-பூங்கொன்றை---பாடல்-3-3174006.html
3174004 ஸ்பெஷல்ஸ் தினம் ஒரு தேவாரம் 132. கள்ளார்ந்த பூங்கொன்றை - பாடல் 2 என். வெங்கடேஸ்வரன் DIN Sunday, June 16, 2019 12:00 AM +0530  

பாடல் 2:

    தையலாள் ஒரு பாகம் சடை மேலாள் அவளோடும்
    ஐயம் தேர்ந்து உழல்வாரோர் அந்தணனார் உறையும் இடம்
    மெய் சொல்லா இராவணனை மேலோடி ஈடு அழித்துப்
    பொய் சொல்லாது உயிர் போனான் புள்ளிருக்குவேளூரே

விளக்கம்:

தேர்ந்து=தேர்ந்தெடுத்து; தலத்து இறைவனின் திருநாமம் வைத்தியநாதர். அந்த பெயரினுக்கு  ஏற்ப உயிருடன் பிணைந்துள்ள மலமாகிய நோயினைத் தீர்த்து இன்பம் அளிப்பவன் பெருமான். இந்த தன்மையை கருத்தினில் கொண்டு ஐயம் தேர்ந்தெடுத்து என்ற தொடரின் பொருளினை நாம் உணரவேண்டும். பெருமான் பிச்சை ஏற்பதன் நோக்கமே, தங்களது மலத்தினைக் கழித்துக் கொள்ள விரும்பும் உயிர்கள் தங்களது மலத்தினை பெருமானின் பிச்சை பாத்திரத்தில் இட்டு உய்வினை அடைய வேண்டும் என்பதாகும். அந்தணர்= அம்+தணர்; குளிர்ந்த நெஞ்சம் உடையவர்; உயிர்களின் பால் எல்லையற்ற கருணையும் அன்பினையும் வைத்துள்ள பெருமானின் நெஞ்சம் அவனது கருணை இரக்கம் அன்பு காரணமாக ஈரமாக உள்ளது என்பதை குறிப்பிடும் வண்ணம் பெருமானை அந்தணர் என்று சம்பந்தர் இங்கே கூறுகின்றார்.  

ஈடு=பெருமை; தங்களது உயிர்நிலை இருக்கும் இடத்தினை எதிரிக்கு அறிவித்து விட்டு சண்டை செய்வதை அந்நாளில் வீரர்கள் பெருமையாக கருதினர் போலும். வால்மீகி இராமாயணமும் கம்ப இராமாயணமும் ஜடாயு மற்றும் இராவணனின் இடையே நடைபெற்ற சண்டையை  மிகவும் விவரமாக கூறுகின்றது. இராவணன் கூரிய அம்புகளைக் கொண்டு ஜடாயுவை வருத்திய போதும், ஜடாயு அந்த தாக்குதலை முறியடித்து தனது மூக்கினால் இராவணன் வைத்திருந்த இரண்டு விற்களை உடைத்து, வாளினைத் தவிர்த்து வேறு ஆயுதங்கள் இல்லாத வகையில் இராவணனை நிலை குலையச் செய்தது என்று வால்மீகி முனைவர் கூறுகின்றார். இராவணன் தன்னிடம் இருந்த வாளினைக் கையில் ஏந்திய வண்ணம் ஜடாயுவின் சிறகுகளை அறுத்து எறிந்தான் என்று கம்பரும் வால்மீகி முனிவரும் கூறுகின்றனர். ஜடாயுவோ மீண்டும் மீண்டும் இராவணின் தலைகளை குறி வைத்து தாக்கியதாகவும், அரக்கனது கிரீடங்களை உடைத்து கீழே தள்ளியதாகவும், சடாயுவால் கிள்ளப்பட்ட தலைகள் மீண்டும் வளர்ந்ததாகவும், இருவரும் கூறுகின்றனர். எனவே தனது உயிர்நிலை சிறகுகளில் உள்ளது என்ற உண்மையை உணர்த்தி ஜடாயு போரிட்டதாகவும், அரக்கன் இராவணனோ தனது உயிர்நிலை தனது தலைகளில் உள்ளது என்று பொய் சொன்னதாகவும் சம்பந்தர் இங்கே கூறுகின்றார் போலும். இந்த செய்தி இராமயணத்தில் கூறப்படவில்லை எனினும் தனது ஞானத்தால் சம்பந்தர் இதனை அறிந்தார் போலும். நாலாயிர திவ்ய பிரபந்த பாசுரங்களிலும் நாம், பாகவதம் மற்றும் இராமாயணம் புராணங்களில் இல்லாத பல சுவையான செய்திகளை விவரங்களுடன் காணலாம்.

ஜடாயுவின் சிறகுகள் வெட்டப்பட்டதை குறிப்பிடும் கம்பர், தெய்வத்தன்மை பொருந்திய வாளினால் சிறகுகள் வெட்டப்பட்டு ஜடாயு கீழே விழுந்தது என்று கூறுகின்றார். எனவே  சிவபெருமான் அருளிய சந்திரகாசம் என்ற வாளினை அரக்கன் பயன்படுத்தினான் என்பது தெளிவாகின்றது. இராமயணத்தில் வேறு எங்கும் சிவபெருமான் அருளிய இந்த வாளினை இராவணன் கையாண்டதாக குறிப்பு காணப்படவில்லை. தன்னால் ஏதும் செய்யமுடியாத நிலையில் ஜடாயுவுடன் நடைபெற்ற சண்டையில் உடைவாளை வீசிய இராவணன் ஏன் இராமபிரானுடன் நடைபெற்ற யுத்தத்தில் அந்த உடைவாளினை பயன்படுத்தவில்லை என்பதற்கு ஒரேவொரு விளக்கமே இருக்க முடியும். ஒரேவொரு முறையே பயன்படுத்த முடியும் என்ற நிலையில் இந்த தெய்வீக ஆயுதம் இருந்தது போலும். மகாபாரதத்தில் கர்ணனுக்கு இந்திரன் வழங்கிய சக்தி ஆயுதத்தின் தன்மை நினைவுக்கு வருகின்றது. ஒரேவொரு முறை மட்டுமே பயன்படுத்த முடியும் என்ற நிபந்தனையுடன் வழங்கப்பட்ட இந்த சக்தி ஆயுதத்தை அர்ஜுனனுடன் நடைபெறும் சண்டையில் கையாள வேண்டும் என்ற உறுதியான எண்ணத்துடன் கர்ணன் செயல்பட்டு வந்த போதிலும், அவனது விருப்பத்திற்கு மாறாக கர்ணன் இந்த ஆயுதத்தினை கடோத்கஜன் மீது ஏவ வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுகின்றான். பதினான்காம் நாள் யுத்தத்தில் துரோணர் இறந்த பின்னரும் இரவிலும் சண்டை தொடர்ந்து நடைபெற்ற போது, இரவு நேரத்தில் அரக்கன் கடோத்கஜனின் ஆற்றல் பல மடங்கு பெருகியதால், கௌரவர் படையில் எவராலும் கடோத்கஜனை எதிர்கொள்ள முடியாத நிலையில் துரியோதனன் கர்ணனை சக்தி ஆயுதத்தினை கடோத்கஜன் மீது வீசுமாறு வற்புறுத்துகின்றான். கடோத்கஜனை கொன்ற பின்னர் அந்த சக்தி ஆயுதம் இந்திரனின் கைகளுக்கு திரும்பி விடுகின்றது என்று வியாசபாரதம் கூறுகின்றது. இந்த பாடலில் ஜடாயு குறித்த உண்மை பேசுவதை தனது உயிரினும் மேலாக ஜடாயு கருதியமையை புலப்படுத்துகின்றது.   

பொய் சொல்லாது என்ற தொடருக்கு நடந்த உண்மைகளை இராமனுக்கு எடுத்துரைத்த  ஜடாயு என்றும் விளக்கம் கூறுகின்றனர். சீதையைத் தேடிக்கொண்டு இராமனும்  இலக்குவனும் வந்த போது, தேரின் உடைந்த பாகங்கள், முறிக்கப்பட்ட வில், அம்புகள்  ஆகியவற்றை முதலில் கண்டனர். சீதையின் காரணமாக ஏதோ இருவரின் இடையே சண்டை நடைபெற்றது என்று புரிந்து கொண்டனர். சிறிது நேரம் கழித்து ஈனக்குரல் ஒன்று கேட்கவே, அந்த குரல் வந்த திசை நோக்கி சென்று ஆங்கே ஜடாயு உயிர் பிரியும் நிலையில் இருப்பதைக் கண்டனர். அப்போது ஜடாயு நடந்த விவரங்கள் அனைத்தையும் கூறியதாக இராமாயணம் கூறுகின்றது. ஆனால் மெய் சொல்லா இராவணன் என்ற குறிப்பின் பின்னணியில் பார்க்கும்போது, ஜடாயு உண்மை பேசியதாக இங்கே குறிப்பிடப் படும் நிகழ்ச்சி இராவணனுடன் போரிட்டபோது நடந்தது என்று கொள்வதே மிகவும்  பொருத்தமாக உள்ளது.
                            
பொழிப்புரை:

உமையன்னையைத் தனது உடலின் ஒரு பாகத்திலும் கங்கை நங்கையைத் தனது சடையிலும் ஏற்றுள்ள பெருமான், பக்குவம் அடைந்து தனது மலங்களைக் கழித்துக் கொள்வதற்கு தயாராக உள்ள அடியார்களைத் தேடிச் சென்று அவர்களது மலங்களைத் தான் வாங்கிக் கொண்டு என்றும் நிலையாக உள்ள பேரின்ப முக்தியை அவர்களுக்கு அருளும் கருணை உள்ளம் கொண்டவனாக விளங்குகின்றான். தனது உயிர்நிலை தனது  சிறகுகளில் உள்ளது என்ற உண்மையை எதிரிக்கு உணர்த்தி, தனது உயிர்நிலை தனது தலைகளில் உள்ளது என்று பொய் சொல்லி போரிட்ட இராவணனின் தலைகள் மீது பல முறை மோதி போரிட்ட ஜடாயு தான் உண்மை சொன்னதால் தனது உயிரினை இழக்கின்றான். அத்தகைய ஜடாயு வழிபட்ட இறைவன் உறையும் தலம் புள்ளிருக்குவேளூர்
 

]]>
https://www.dinamani.com/specials/thinam-oru-thavaram/2019/jun/16/132-கள்ளார்ந்த-பூங்கொன்றை---பாடல்-2-3174004.html
3174003 ஸ்பெஷல்ஸ் தினம் ஒரு தேவாரம் 132. கள்ளார்ந்த பூங்கொன்றை - பாடல் 1 என். வெங்கடேஸ்வரன் Saturday, June 15, 2019 12:00 AM +0530  

பின்னணி:

தனது ஐந்தாவது தலயாத்திரையின் முதல் தலமாக கண்ணார்கோயில் சென்று வழிபட்ட திருஞானசம்பந்தர், அந்த தலத்திலிருந்து புறப்பட்டு, காவிரி நதியின் வடகரை ஓரமாக  மேற்கு திசை நோக்கிச் சென்று புள்ளிருக்குவேளூர் சென்றடைந்தார் என்று சேக்கிழார்  பெரிய புராணத்தில் கூறுகின்றார். பெருமான் பால் தான் வைத்திருந்த அன்பு மேலும் மேலும் பெருகும் வண்ணம், அழகான பதிகம் பாடினார் என்று சேக்கிழார் குறிப்பிடும் பாடலை நாம் இங்கே காண்போம். இந்த பதிகத்தினை பாடி சொல்மாலையாக இறைவனுக்கு சம்பந்தர் அணிவித்தார் என்று கூறுகின்றார். இந்த பதிகத்தின் அனைத்துப் பாடல்களிலும் சம்பந்தர் சடாயுவினை குறிப்பிட்டு சடாயு செய்த வழிபாட்டினை குறிப்பிடுகின்றார். முதல் பாடலில் சடாயு மற்றும் சம்பாதி ஆகிய இருவரும் இறைவனை  வழிபட்ட தன்மை குறிப்பிடப்படுவதால், சடாயு என்ற சொல் சம்பாதியையும் குறிப்பதாக பொருள் கொண்டு, பறவைகள் இருவரும் இறைவனை போற்றி வழிபட்டமையை சம்பந்தர் குறிப்பிடுகின்றார் என்று சேக்கிழார் (இருவர் ஆற்றிய பூசனை) கூறுவதை நாம் உணரலாம்.    

    போற்றிய காதல் பெருகப் புள்ளிருக்கும் திருவேளூர்
    நாற்றடம் தோளுடை மூன்று நயனப்பிரான் கோயில்         
    ஏற்ற அன்பு எய்த வணங்கி இருவர் புள் வேந்தர் இறைஞ்சி
    ஆற்றிய பூசனை சாற்றி அஞ்சொல் பதிகம் அணிந்தார்

பொதுவாக இறைவனை எண்தோள் ஈசன் என்றே திருமுறை பாடல்கள் பலவும் குறிப்பிடுகின்றன. தோள் என்ற சொல் இணையான இரண்டு தோள்களையும் குறிப்பதாக கையாண்டு, சேக்கிழார் நாற்றடம் தோள் என்று குறிப்பிடுவதை நாம் உணரலாம். புள் (பறவை), இருக்கு (இருக்கு முதலான நான்கு வேதங்கள்), வேள் (முருகப் பெருமான்), ஊர் (சூரியன்) ஆகியோர் வழிபட்டதால் புள்ளிருக்குவேளூர் என்ற பெயர் வந்ததாக கூறுவார்கள். இறைவனின் பெயர்=வைத்தியநாதர்;  இறைவியின் பெயர்=தைல நாயகி, தைலாம்பாள்;

தாரகாசுரனுடன நடைபெற்ற போரினில் காயம் அடைந்த தனது படைவீரர்களுக்கு  மருத்துவ உதவி அளிக்குமாறு முருகப் பெருமான் இறைவனிடம் வேண்ட இறைவன் வைத்தியராக இந்த தலத்தில் ஒரு வேப்பமரத்தின் நிழலில் அமர்ந்து வைத்தியம் பார்த்ததால் வைத்தியநாதர் என்ற பெயர் வந்ததாக கூறுவார்கள். இறைவனுடன் இறைவியும், தனது கையஈல் ஒரு எண்ணெய் கிண்ணம் ஏந்தியவாறு உதவி செய்ததால்  தைல நாயகி என்று அழைக்கப்பட்டதாகவும், நாளடைவில் அந்த பெயர் தையல் நாயகி  என்று மாறியது என்றும் கூறுவார்கள். திருக்கோயிலில் உள்ள வேப்பமரத்தின் அடியில் உள்ள பெருமானின் சன்னதி ஆதி வைத்தியநாதர் சன்னதி என்று அழைக்கப் படுகின்றது. தையல் என்ற சொல் பல திருமுறைப் பாடல்களில் அம்பிகையை குறிக்க பயன்படுத்தப் பட்டுள்ளது. எனவே தையல் நாயகி என்ற பெயரும் பொருத்தமாக காணப் படுகின்றது. .

பொதுவாக திருஞானசம்பந்தரின் பெரும்பாலான பதிகங்களில், எட்டாவது பாடலில் இராவணனுக்கு பெருமான் அருள் செய்தமையும், ஒன்பதாவது பாடலில் அண்ணாமலை நிகழ்ச்சியும், பத்தாவது பாடலில் சமணர்கள் பற்றிய குறிப்பும் காணப் படுவதை நாம்  அறிவோம். ஆனால் இந்த பதிகத்தின் பாடல்கள் மற்ற பதிகங்களிளிருந்தும் மாறுபட்டவை. இந்த பதிகத்தில் இராவணன் பற்றிய குறிப்பு காணப்பட்டாலும், மற்ற இரண்டு குறிப்புகள் ஒன்பதாவது பத்தாவது பாடல்களில் காணப்படவில்லை. இவ்வாறு இராவணனுக்கு அருள் புரிந்தமை குறிப்பிடப்பட்டு மற்ற இரண்டு நிகழ்ச்சிகள் குறிப்பிடப்படாத சம்பந்தரின் தேவாரப் பதிகம் இந்த பதிகம் ஒன்று தான் என்பது குறிப்பிடத் தக்கது. ஞானசம்பந்தரின் இந்த பதிகம் தவிர்த்து இந்த தலத்தின் மீது அப்பர் பிரான் அருளிய குறுந்தொகைப் பதிகம் ஒன்றும் திருத்தாண்டகப் பதிகம் ஒன்றும் நமக்கு கிடைத்துள்ளன.            .
 
பாடல் 1:

    கள்ளார்ந்த பூங்கொன்றை மத மத்தம் கதிர் மதியம்
    உள்ளார்ந்த சடைமுடி எம் பெருமானார் உறையும் இடம்
    தள்ளாய சம்பாதி சடாய் என்பார் தாம் இருவர்
    புள்ளானார்க்கு அரையன் இடம் புள்ளிருக்குவேளூரே

விளக்கம்:

கள்=தேன்; அரையன்=அரசன்; அரையன் என்ற சொல்லே நாளடைவில் அரசன் என்று மருவியதாக சிவக்கவிமணியார் பெரியபுராணம் விளக்கம் புத்தகத்தில் கூறுகின்றார். புள்= பறவை; இங்கே கழுகுப் பறவைகள், சடாயு மற்றும் சம்பாதி ஆகிய இருவரையும் குறிக்கும். தள்ளாய=வலிமை மிகுந்த என்ற பொருளும் கூறப்படுகின்றது.; கதிர்=ஒளிக் கதிர்கள்; ஆர்ந்த=நிறைந்த; மதமத்தம் என்று ஊமத்தை மலர் இங்கே குறிப்பிடப் படுகின்றது. ஊமத்தை காயினை உட்கொண்டால் சிந்தனை மயக்குற்று பைத்தியம் பிடிக்கும் என்று நம்பப் படுகின்றது. அனைவரும் வெறுக்கும்/தவிர்க்கும் பொருட்கள் பெருமானால் மிகுந்த  விருப்பத்துடன் ஏற்றுக் கொள்ளப்படுகின்றன. ஊமத்தை மலர் மற்றும் கொன்றை மலர்களை எவரும் சூடிக் கொள்வதில்லை. யானையின் தோலை, கேடு விளைவிக்கும் என்பதால் எவரும் அணிந்து கொள்வதில்லை. சுடுகாட்டு சாம்பலை உடலில் எவரும் பூசிக் கொள்வதில்லை; ஆனால் பெருமானோ இவை அனைத்தையும் ஏற்றுக்கொண்டு தான் விருப்பு வெறுப்புக்கு அப்பாற்பட்டவன் என்பதை நமக்கு உணர்த்துகின்றார்.   

தள்ளாய=தள்ளத் தகாத; பொதுவாக கழுகுகள் என்றால் சுடுகாட்டினில் உலவும் பறவைகள் என்று தாழ்மையாக கருத்வோம். ஆனால், சடாயு மற்றும் சம்பாதி ஆகிய இரு பறவைகளும் கழகுகளாக இருந்த போதிலும் தொடர்ந்து பெருமானை வழிபட்டு வந்தன.    இராமகாவியத்தில் இந்த இரண்டு பறவைகளும் இடம் பெறுகின்றன. இராவணனுடன்  போரிட்டு, அவன் சீதையை கடத்திச் செல்வதை தடுக்க முயன்ற சடாயு, தனது சிறகுகள் வெட்டப்பட்டு குற்றுயிரும் குலையுயிருமாக கீழே விழுந்து இருந்த நிலையிலும். இராமனும் இலக்குவனும் சீதையை தேடிக் கொண்டு அலைந்த போது அவர்கள் இருவரையும் சந்தித்து, சீதை இராவணனால் கவர்ந்து செல்லப்பட்டதை அவர்களுக்கு உரைத்தது. சீதையைத் தேடிக் கொண்டு சென்ற வானர வீரர்கள், தங்களது நம்பிக்கையை  இழந்து பாரத நாட்டின் தென்கோடி கடற்கரையில் தாங்கள் தற்கொலை செய்து கொள்ள நினைத்த போது, ஆங்கே இருந்த சம்பாதி, சீதை அசோகவனத்தில் சிறைப்பட்டு இருப்பதை உணர்த்தி இராமனுக்கு சேவை செய்தது. இவ்வாறு இரண்டு பறவைகளும் இராமனுக்கு  சேவை செய்து உதவியதாலும், பெருமானை தொடர்ந்து வழிபட்டமையாலும், அந்த பறவைகளின் உயர்வு கருதி, கழுகுகள் என்று தாழ்வாக நினைக்கலாகாது என்ற கருத்து இங்கே உணர்த்தப் படுகின்றது. ஐந்து அறிவுகள் கொண்ட கழுகுகள் பெருமானை வணங்கி  உய்வடைந்த நிலையினை பாடல் தோறும் குறிப்பிட்டு மனிதர்களாகிய நாமும் இறைவனை வழிபட்டு உய்வினை அடையவேண்டும் என்ற கருத்து இங்கே உணர்த்தப் படுகின்றது.    

பொழிப்புரை:

தேன் நிறைந்த கொன்றை மலர்களையும் சிந்தனையை கலக்கும் ஊமத்தை மலர்களையும்,  ஒளிவீசும் பிறைச் சந்திரனையும், நிறைவாகத் தனது சடையினில் ஏற்றுக்கொண்டுள்ள பெருமான் உறையும் இடமாவது, இழிந்த பிறவி என்று கருதாமல் உயர்ந்தவை என்று மதிக்கப்பட வேண்டிய சடாயு மற்றும் சம்பாதி கழுகு இனத்தினைச் சார்ந்த பறவைகள் தங்களது அரசனாகக் கருதி இறைவனைத் தொழுது வணங்கும் தலம் புள்ளிருக்குவேளூர் என்று அழைக்கப் படும் தலமாகும்.     

]]>
https://www.dinamani.com/specials/thinam-oru-thavaram/2019/jun/15/132-கள்ளார்ந்த-பூங்கொன்றை---பாடல்-1-3174003.html
3168603 ஸ்பெஷல்ஸ் தினம் ஒரு தேவாரம் 131. அருத்தனை அறவனை - பாடல் 11 என். வெங்கடேஸ்வரன் DIN Friday, June 14, 2019 12:00 AM +0530
பாடல் 11:

    பொன் திகழ் காவிரிப் பொருபுனல் சீர்
    சென்றடை கடைமுடிச் சிவனடியை
    நன்றுணர் ஞானசம்பந்தன் சொன்ன
    இன் தமிழ் இவை சொல இன்பமாமே

விளக்கம்:

பொன் திகழ்=அழகுடன் விளங்கும்; பொரு புனல்=கரையில் மோதுகின்ற அலைகள்;

பொழிப்புரை:

அழகுடன் திகழ்ந்து அலைகள் இரு கரைகளிலும் மோதும் வண்ணம் ஓடிவரும் சிறந்த காவரியாற்றின் கரையில் அமைந்துள்ள கடைமுடி தலத்தினை சென்றடைந்து ஆங்கே உறையும்  பெருமானின் திருவடிகளின் சிறப்பினை நன்குணர்ந்த ஞானசம்பந்தன் சொன்ன இனிமையான தமிழ்ப் பாடல்களாகிய இவை பத்தினையும் ஓதும் அடியார்களுக்கும் இன்பம் உண்டாகும்.    

முடிவுரை:

வினவுதிரேல் என்று குறிப்பிட்டு உலகத்தவரின் கேள்விக்கு விடை அளிக்கும் முகமாக இந்த பதிகத்தின் முதல் பாடல் அமைந்துள்ளது. அதே போன்று மற்ற பாடல்களும் இறைவன் அமரும்  இடம் கடைமுடித் தலம் என்று உலகத்தவர்க்கு தலத்தின் இறைவனின் தன்மையையும்   எடுத்துச் சொல்வதாக கொள்ளவேண்டும். உண்மையான மெய்ப்பொருளை அணுக வேண்டும் என்று விரும்பும் மனிதர்களுக்கு, சிவபெருமானே உண்மையான ஒப்பற்ற மெய்ப்பொருள் என்று பதிகத்தின் முதல் பாடலில் சம்பந்தர் அடையாளம் காட்டுகின்றார். அவ்வாறு அடையாளம் காட்டப்பட்ட பெருமான் எல்லையற்ற கருணையும் ஆற்றலும் உடையவன் என்பதை, சந்திரன் மறுவாழ்வு பெற்றதை குறிப்பிட்டு நமக்கு உணர்த்துகின்றார். இத்தகைய பெருமானை பலரும் வணங்கிப் பயன் அடைவதை மூன்றாவது பாடலில் உணர்த்தி, நான்காவது பாடலில் பண்டைய நாளில் தேவர்கள் உட்பட அனைவரும் அழியும் வண்ணம் பாற்கடலிலிருந்து பொங்கி வந்த விடத்தினைத் தான் உட்கொண்டு உலகினை காத்த கருணையாளன் என்று உணர்த்துகின்றார். அங்கிங்கெனாதபடி உலகெங்கும் அனைத்துப் பொருட்களிலும் கலந்துள்ள பெருமான் என்று அவனது சர்வவியாபகத் தன்மை ஐந்தாவது பாடலில் விளக்கப் படுகின்றது. தனது திருவருளின் அம்சமாக விளங்கும் அன்னையுடன், உலகத்தவர்க்கு அருள்புரியும் நோக்கத்துடன் கடைமுடித் தலத்தினில் பெருமான் உறைகின்றார் என்று ஆறாவது பாடலில் கூறுகின்றார். பெருமானின் அழகிய தோற்றம் ஏழாவது பாடலில் கூறப்படுகின்றது. பகைவனுக்கும் அருளும் கருணை நெஞ்சத்தை உடையவன் என்று எட்டாவது பாடலில் உணர்த்தும் சம்பந்தர் ஒன்பதாவது பாடலில் வியத்தகு ஆற்றலை உடையவன் பெருமான் என்று எடுத்துக்காட்டுகளுடன் கூறுகின்றார். பத்தாவது பாடலில் சமணர்கள் மற்றும் புத்தர்களின் புறத் தோற்றத்தைக் கண்டு ஏமாற வேண்டாம் என்று அறிவுரை கூறுகின்றார். இந்த அறிவுரை இன்றும் பொருத்தமாக இருப்பதை நாம் உணரலாம். மாற்று மதத்தவர்களின் போதனைகள் மற்றும் செயல்பாடுகள், இந்து மதத்தினை அழிக்கும் நோக்கத்துடன் இருப்பதை நாம் உணர்ந்து கொண்டு அவர்களது வலையினில் வீழாமல் நாம் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்பதை உணர்த்தும் வண்ணம் இந்த பாடல் அமைந்துள்ளது. அவர்களது புறத் தோற்றத்தைக் கண்டு நாம் ஏமாறாமல் இருக்கும் வண்ணம் அறிவுரை கூறப் படுகின்றது. பதிகத்தின் கடைப் பாடல், பதிகத்தின் பத்து பாடல்களையும் முறையாக ஓதும் அடியார்கள் இம்மையிலும் மறுமையிலும் இன்பத்துடன் வாழ்வார்கள் என்று கூறுகின்றது. உண்மையான ஒப்பற்ற ருள் சிவபெருமான் ஒருவன் தான் என்பதை உணர்ந்து, அவனை முழு மனதுடன் வழிபட்டு, மாற்று மதத்தவரின் போதனைகளில் மயங்காது தொடர்ந்து பெருமானை வழிபட்டு, பதிகங்கள் ஓதி இம்மையிலும் மறுமையிலும் இன்பமுடன் வாழ்வோமாக.       

]]>
https://www.dinamani.com/specials/thinam-oru-thavaram/2019/jun/14/131-அருத்தனை-அறவனை---பாடல்-11-3168603.html
3168602 ஸ்பெஷல்ஸ் தினம் ஒரு தேவாரம் 131. அருத்தனை அறவனை - பாடல் 10 என். வெங்கடேஸ்வரன் DIN Thursday, June 13, 2019 12:00 AM +0530  

பாட ல் 10:

    மண்ணுதல் பறித்தலும் மாயமிவை
    எண்ணிய கால் அவை இன்பம் அல்ல
    ஒண்ணுதல் உமையை ஒர் பாகம் வைத்த
    கண்ணுதல் வளநகர் கடைமுடியே

விளக்கம்:

மண்ணுதல்=நீக்குதல், கழுவுதல், தலைமுடியினை மழித்தல் என்ற பொருளில் இங்கே கையாளப்  பட்டுள்ளது. பறித்தல்=பிடித்து இழுத்தல்; தங்களது தலைமுடிகளை ஒவ்வொன்றாக பறித்துக் கொள்ளுதல் சமணர்களின் செயலாகும். அடிக்கடித் தங்களது தலையில் உள்ள முடியினை மழித்துக் கொள்ளுதல் புத்தர்களின் செயலாகும். இந்த இரண்டு செயல்களும் ஒரு மாயத் தோற்றத்தை அவர்களும் இருவரும் ஒழுக்க நெறியுடன் இருப்பது போன்ற தோற்றத்தை  அளித்தாலும், சம்பந்தரது காலத்தில் வாழ்ந்து வந்த சமண மற்றும் புத்தத் துறவிகள், அரசன் தங்களின் மீது வைத்திருந்த மதிப்பினை தவறாக பயன்படுத்தி வந்தமையால், அவர்களது புறத் தோற்றத்தைக் கண்டு ஏமாற வேண்டாம் என்று இங்கே அறிவுரை கூறுகின்றார்.  

பொழிப்புரை:

தங்களது தலைமுடியினை முற்றிலும் மழித்துக் கொண்டுள்ள புத்தர்கள், தங்களது தலை முடியினை ஒவ்வொன்றாக பறித்துக் கொண்டுள்ள சமணர்கள் ஆகிய இவர்களது புறத் தோற்றத்தை கண்டு. ஒழுக்க நெறியினை உடையவர்கள் என்று அவர்களை நினைத்து, உலகத்தவரே நீங்கள் ஏமாந்து விடாதீர்கள். அவர்களது உண்மையான தோற்றம் மெய்யான துறவல்ல. ஆராய்ந்து பார்த்தால் அவர்களது நெறிகள் உண்மையான அழியாத இன்பத்தை விளைவிக்கும் முக்தி நிலைக்கு அழைத்துச் செல்லாது என்பதை உணரலாம். எனவே அவர்கள் காட்டும் நெறியினைத் தவிர்த்து பெருமான் உணர்த்தும் சைவ நெறியினைச் சார்ந்து உய்வினை அடைவீர்களாக. ஒளிவீசும் நெற்றியினை உடைய உமை அன்னையைத் தனது உடலின் ஒரு பாகத்தில் வைத்துள்ள பெருமான், தனது நெற்றியினில் கண்  உடைய பெருமான், உறையும் தலம் வளம் நிறைந்த கடைமுடி தலமாகும்.

]]>
https://www.dinamani.com/specials/thinam-oru-thavaram/2019/jun/13/131-அருத்தனை-அறவனை---பாடல்-10-3168602.html
3168601 ஸ்பெஷல்ஸ் தினம் ஒரு தேவாரம் 131. அருத்தனை அறவனை - பாடல் 9 என். வெங்கடேஸ்வரன் DIN Wednesday, June 12, 2019 12:00 AM +0530
பாடல் 9:

    அடிமுடி காண்கிலர் ஓர் இருவர்
    புடை புல்கி அருள் என்று போற்றி இசைப்பச்
    சடையிடைப் புனல் வைத்த சதுரன் இடம்
    கடை முடி அதன் அயல் காவிரியே  

விளக்கம்:

சதுரன்=சாமர்த்தியம் மிகுந்தவன்; வியத்தகு திறமை உடையவன்; புடைபுல்கி=அணுகி அருகில் சென்று; தங்களது செருக்குற்ற நிலையிலிருந்து விலகி அன்பினால் இறைவனை அணுகி அருகில் சென்று; மும்மூர்த்திகளில் ஒருவராக கருதப் படும் பிரமன் மற்றும் திருமால் ஆகிய இருவரும் திகைத்து நிற்க, நீண்ட நெடுந்தழலாக இறைவன் நின்றதும், மிகுந்த வேகத்துடன் கீழே இறங்கி வந்த அகன்ற நீர்ப்பரப்பினைக் கொண்ட கங்கை நதியினை சடையில் தேக்கி வைத்ததும், வியத்தகு செயல்கள் அல்லவா. எனவே சதுரன் என்று மிகவும் பொருத்தமாக இறைவனை சம்பந்தர் இங்கே அழைக்கின்றார்.        

பொழிப்புரை:

தங்களது வலிமையின் மீது செருக்கு கொண்டு, நீண்ட தழலாய் நின்ற இறைவனின் திருவடியை திருமுடியை கண்டு விடுவோம் என்று முயற்சி செய்த திருமாலும் பிரமனும், தங்களது முயற்சி வீணான பின்னர் பெருமானின் வலிமையை உணர்ந்து, அன்புடன் அவரை அணுகி அவரது அருகில் சென்று அருள் புரிவாய் என்று இறைஞ்சி அவனைப் போற்றி இசைத்து நின்றனர். இவ்வாறு இருவரினும் உயர்ந்து நிற்பவன் தான், என்று உலகுக்கும் அவரகள் இருவருக்கும் உணர்த்திய இறைவன், தனது சடையின் இடையே கங்கை நதியைத் தேக்கி வைத்த திறமையாளன் ஆவான். அத்தகைய சதுரன் உறையும் இடமாகிய கடைமுடி தலத்தின் அருகே  காவிரியாறு ஓடுகின்றது.   
 

]]>
https://www.dinamani.com/specials/thinam-oru-thavaram/2019/jun/12/131-அருத்தனை-அறவனை---பாடல்-9-3168601.html
3168600 ஸ்பெஷல்ஸ் தினம் ஒரு தேவாரம் 131. அருத்தனை அறவனை - பாடல் 8 என். வெங்கடேஸ்வரன் DIN Tuesday, June 11, 2019 12:00 AM +0530  

பாடல் 8:

    நோதல் செய்து அரக்கனை நோக்கழியச்
    சாதல் செய்து அவன் அடி சரண் எனலும்
    ஆதரவு அருள் செய்த அடிகளவர்
    காதல் செய் வளநகர் கடைமுடியே

விளக்கம்:

ஆதரவு=அன்புடன் செய்யப்படும் உதவி; நோதல் செய்து=வருத்தி; நோக்கு=அருட்பார்வை: அழிய= இல்லாத நிலை ஏற்பட; அன்பே உருவான பெருமான் அனைத்து உயிர்களுக்கும் அருள் செய்பவன். பெருமானை எவ்வாறு அணுக வேண்டும் என்பதை தனது செருக்கினால் மறந்த அரக்கன், பெருமான் உறையும் மலை என்ற சிறந்த தன்மையையும் புரிந்து கொள்ளாமல், அந்த மலையினை பேர்த்து எடுக்க முயற்சி செய்து அந்த முயற்சியால் உமையன்னை அச்சம் கொள்ளுமாறு மலையினை அசைத்தான். அத்தகைய செய்கையால் பெருமானின் அருட்பார்வையினை அரக்கன் இழந்ததுமன்றி, பெருமானின் கால் விரல் அழுத்தத்தால் கயிலை மலையின் கீழே அமுக்குண்டு நெருக்குண்டான். இந்த நிலையினை நோக்கழிய அரக்கனை நோதல் செய்து என்று சம்பந்தர் இந்த பாடலில் குறிப்பிடுகின்றார். சாதல்-வலிமை அழிந்தவன்;
    

பொழிப்புரை:

செருக்கு மிகுந்த தனது செயலால், இறைவனது அருட்பார்வையை இழந்த அரக்கன் இராவணன், தான் கயிலை மலையினை பேர்த்து எடுக்க செய்த முயற்சியின் விளைவாக, கயிலை மலையின் கீழே அகப்பட்டு நெருக்குண்டு தனது வலிமை முழுவதும் அழிந்த நிலையில், பெருமானே உனது திருவடிகளே சரணம் என்று இறைஞ்சி சாம கானம் பாடலும், அரக்கன் செய்த தவறினை பொருட்படுத்தாது அன்புடன் அரக்கனுக்கு பல வகையிலும் உதவி செய்த பெருமான், மிகுந்த விருப்பத்துடன் உறைவது வளம் மிகுந்த கடைமுடி தலமாகும்.     
 

]]>
https://www.dinamani.com/specials/thinam-oru-thavaram/2019/jun/11/131-அருத்தனை-அறவனை---பாடல்-8-3168600.html
3168599 ஸ்பெஷல்ஸ் தினம் ஒரு தேவாரம் 131. அருத்தனை அறவனை - பாடல் 7 என். வெங்கடேஸ்வரன் DIN Monday, June 10, 2019 12:00 AM +0530  

பாடல் 7:

    பொடி புல்கு மார்பினில் புரி புல்கு நூல்
    அடி புல்கு பைங்கழல் அடிகள் இடம்
    கொடி புல்கு மலரொடு குளிர் சுனை நீர்
    கடி புல்கு வளநகர் கடைமுடியே

விளக்கம்:

பொடி=திருநீறு; புல்குதல்=பொருந்துதல்; கடி=நறுமணம்; புரிபுல்கு=முறுக்கேற்றப்பட்ட; பஞ்சினைத் திரித்து நூல் நூற்று முறுக்கேற்றி பூணூல் செய்யப்படுவதை இங்கே சம்பந்தர் குறிப்பிடுகின்றார்.

பொழிப்புரை:

திருநீறு பூசப்பட்ட மார்பினில் ஒன்பது புரிகள் கொண்ட பூணூல் பொருந்த இருப்பவனும், தனது  திருவடிகளில் வீரக்கழல் பொருந்தியவனும் ஆகிய இறைவன் உறையும் இடமாவது, கொடிகளில் பூத்த மலர்களுடன் குளிர்ந்த சுனைகளில் ஊறுகின்ற நீரின் மணமும் கலந்து கமழும் வளமை உடைய கடைமுடி தலமாகும்.

]]>
https://www.dinamani.com/specials/thinam-oru-thavaram/2019/jun/10/131-அருத்தனை-அறவனை---பாடல்-7-3168599.html
3168598 ஸ்பெஷல்ஸ் தினம் ஒரு தேவாரம் 131. அருத்தனை அறவனை - பாடல் 6 என். வெங்கடேஸ்வரன் DIN Sunday, June 9, 2019 12:00 AM +0530  

பாடல் 6:

    பட அரவு ஏர் அல்குல் பல் வளைக்கை
    மடவரலாளை ஒர் பாகம் வைத்துக்
    குடதிசை மதியது சூடு சென்னிக்
    கடவுள் தன் வளநகர் கடைமுடியே

விளக்கம்:

குடதிசை=மேற்கு; வளர்பிறை பிறைச் சந்திரன் மேற்கு திசையில் தோன்றுவதால் குடதிசை மதி என்று குறிப்பிட்டதாக அறிஞர்கள் பொருள் கூறுகின்றனர். சந்திரன் எப்போதும் ஒரே திசையில் தோன்றுவதில்லை. மாதத்தில் பாதி நாட்கள் ஒரு திசையிலும் மிகுதியான நாட்களில் வேறொரு திசையிலும் தோன்றுவதை நாம் காண்கின்றோம். குறைந்த கலைகளைக் கொண்ட சந்திரன் மேற்கே உதிப்பதை பெரும்பாலும் காண்கின்றோம். பட அரவு=புடைத்த படத்தினை உடைய பாம்பு;
    
பொழிப்புரை:

பாம்பின் புடைத்த படம் போன்று புடைத்து அழகாக விளங்கும் மார்பகங்களைக் கொண்டவளும், பல வகையான வளையல்களைக் கொண்ட கைகளை உடையவளும் இளமையும் அழகும் சேர்ந்து பொருந்தியவளும் ஆகிய உமை அம்மையைத் தனது உடலின் ஒரு பாகத்தில் வைத்தவனும், மேற்கு திசையினில் உதிக்கும் பிறைச் சந்திரனைத் தனது சடையினில் சூட்டிக் கொண்டுள்ளவனும் ஆகிய இறைவன் உறைவது வளம் மிகுந்த கடைமுடியாகும்.      

]]>
https://www.dinamani.com/specials/thinam-oru-thavaram/2019/jun/09/131-அருத்தனை-அறவனை---பாடல்-6-3168598.html
3168596 ஸ்பெஷல்ஸ் தினம் ஒரு தேவாரம் 131. அருத்தனை அறவனை - பாடல் 5 என். வெங்கடேஸ்வரன் DIN Saturday, June 8, 2019 12:00 AM +0530
பாடல் 5

    மறையவன் உலகவன் மாயமவன்
    பிறையவன் புனலவன் அனலுமவன்
    இறையவன் என உலகம் ஏத்தும் கண்டம்
    கறையவன் வளநகர் கடைமுடியே

விளக்கம்:

புனலாகவும் அனலாகவும் உலகமாவும் உள்ள பெருமான் என்று மூன்று பஞ்ச பூதங்களை இந்த பாடலில்  குறிப்பிட்டமையால் மற்ற இரண்டு பூதங்களாகவும் இருப்பவன் பெருமான் என்று உணர்த்தியதாக பொருள் கொள்ள வேண்டும்; அதே போன்று சந்திரனையும் அனல் என்று அக்னியையும் குறிப்பிட்டமையால் சூரியனாகவும் இறைவன் உள்ள நிலையையும் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று உரையாசிரியர்கள் கூறுகின்றனர். மறையவன்=வேதங்கள் உண்மைப் பொருள் என்று உணர்த்தும் பெருமான்; மாயம்=மாயை, உலகப் பொருட்கள் மற்றும் உலகினில் உள்ள அனைத்து உயிர்கள்; மறையவன், உலகவன், மாயமவன் என்பதற்கு வேறு விதமாகவும் அறிஞர்கள் பொருள் கூறுகின்றனர். மறை என்பது வேதங்கள் முதலான சொற்ப்ரபஞ்சத்தையும் உலகு என்பது பொருட்ப்ரபஞ்சத்தையும், மாயை என்பது மேற்குறிப்பிட்ட இரண்டு பிரபஞ்சங்கள் தோன்றுவதற்கு காரணமாக உள்ள சுத்த மாயை மற்றும் அசுத்தமாயையை குறிப்பதாக ;பொருள் கொண்டு, இறைவன் சொல்லாகவும், பொருளாகவும், சொல்லும் பொருளும் தோன்றுவதற்கு காரணமாகிய மாயையாகவும் இருக்கும் நிலையை உணர்த்துவதாக பொருள் கூறுகின்றனர்.  

பொழிப்புரை:

வேதங்கள் உணர்த்தும் உண்மையான மெய்ப்பொருளாகவும், உலகமாகவும், உலகத்தில் உள்ள அனைத்துப் பொருட்களாகவும், உலகினில் உள்ள அனைத்து உயிர்களாகவும் இருக்கும் பெருமான், சூரியன் சந்திரன் அக்னி ஆகிய மூன்று சுடர்களாகவும்,  நீர் தீ முதலான பஞ்ச பூதங்களாகவும் இருக்கின்றான். இவனே அனைவரிலும் முதலானவன், தலையானவன் என்று உலகத்தவர் புகழ்ந்து ஏத்த, வளமான கடைமுடி தலத்தில் உறையும் இறைவன் ஆவான்.,    

]]>
https://www.dinamani.com/specials/thinam-oru-thavaram/2019/jun/08/131-அருத்தனை-அறவனை---பாடல்-5-3168596.html
3168594 ஸ்பெஷல்ஸ் தினம் ஒரு தேவாரம் 131. அருத்தனை அறவனை - பாடல் 4 என். வெங்கடேஸ்வரன் DIN Friday, June 7, 2019 12:00 AM +0530
பாடல் 4:

    கொய்யணி நறுமலர்க் கொன்றை அந்தார்
    மையணி மிடறு உடை மறையவன் ஊர்
    பை அணி அரவொடு மான் மழுவாள்
    கை அணிபவன் இடம் கடைமுடியே

விளக்கம்:

மை=மை போன்று கரிய நிறம் கொண்ட ஆலகால விடம்; பை=பாம்பின் படம்; கொய்யணி= அப்போது தான் கொய்யப்பட்ட; கொய்தல்=பறித்தல்;

பொழிப்புரை:

அப்போது தான் பறிக்கப்பட்ட, நறுமணம் வீசும் கொன்றை மலர் மாலையை அணிந்தவனும், மை போன்று கரிய நிறம் கொண்டிருந்த ஆலகால விடத்தினை அருந்திய பின்னர் அதனைத் தேக்கியதால் கருமை நிறம் கொண்டு விளங்கும் கழுத்தினை உடையவனும், வேதத்தின் பொருளாக உள்ளவனும், ஆகிய இறைவன் உறையும் ஊர் யாது என்று நீர் அறிந்து கொள்ள விரும்பினால் கேட்பீராக; படம் எடுத்து ஆடுவதும் கொடிய விடத்தினை உடையதும் ஆகிய பாம்பினை கங்கணமாக அணிந்து கொண்டுள்ள கையினில் மானினையும் மழுவினையும் ஏற்றுக் கொண்டுள்ள இறைவன் உறையும் இடம் கடைமுடி தலமாகும்.

]]>
https://www.dinamani.com/specials/thinam-oru-thavaram/2019/jun/07/131-அருத்தனை-அறவனை---பாடல்-4-3168594.html
3168593 ஸ்பெஷல்ஸ் தினம் ஒரு தேவாரம் 131. அருத்தனை அறவனை - பாடல் 3 என். வெங்கடேஸ்வரன் DIN Thursday, June 6, 2019 12:00 AM +0530  

பாடல் 3:

    ஆல் இளமதியினொடு அரவு கங்கை
    கோல வெண்ணீற்றனைத் தொழுது இறைஞ்சி
    ஏல நன் மலரொடு விரை கமழும்
    காலன வளநகர் கடைமுடியே

விளக்கம்:

காலன்=காலை உடையவன்; பெருமானின் திருவடி, நறுமணம் மிகுந்த மலர்கள் சாத்தப்பட்டு மணத்துடன் கமழும் நிலை இங்கே குறிக்கப்பட்டுள்ளது. ஏலம்=நறுமணம் விரை=வாசனை; பெருமானை வணங்கும் அடியார்கள் மலர்கள் தூவியும் தூபதீபம் காட்டியும் பெருமானை இந்த தலத்தில் வழிபட்டனர் என்பது இங்கே உணர்த்தப் படுகின்றது. ஆல்=கல்லால மரத்தின் நீழல்; கோல=அழகிய;   
 
பொழிப்புரை:

கல்லால மரத்தின் கீழே அமர்ந்து சனகாதி முனிவர்கள் நால்வருக்கும் அறம் உறைத்தவரும், ஒற்றைப் பிறைச் சந்திரனுடன் பாம்பு மற்றும் கங்கை நதியினைத் தனது சடையில் ஏற்றுக் கொண்டவரும், அழகிய வெண்ணீற்றை உடலெங்கும் பூசியவரும் ஆகிய இறைவனை அடியார்கள் நறுமணம் மிகுந்த மலர்களை அவரது திருவடிகளில் தூவியும், வாசனை வீசும்  தூபங்கள் காட்டியும் தொழுதும் வணங்குகின்றனர். இவ்வாறு அடியார்கள் தொழுவதால் நறுமணம் கமழும் திருவடிகளைக் கொண்டுள்ள இறைவன் உறைவது கடைமுடி எனப்படும் தலமாகும்.

]]>
https://www.dinamani.com/specials/thinam-oru-thavaram/2019/jun/06/131-அருத்தனை-அறவனை---பாடல்-3-3168593.html
3168592 ஸ்பெஷல்ஸ் தினம் ஒரு தேவாரம் 131. அருத்தனை அறவனை - பாடல் 2 என். வெங்கடேஸ்வரன் DIN Wednesday, June 5, 2019 12:00 AM +0530
பாடல் 2:

    திரை பொரு திருமுடி திங்கள் விம்மும்
    அரை பொரு புலியதள் அடிகள் இடம்
    திரையொடு நுரை பொரு தெண் சுனை நீர்
    கரை பொரு வளநகர் கடைமுடியே
 

விளக்கம்:

திரை=அலைகள்; பொருதல்=மோதுதல், பொருந்துதல்; விம்மும்=பெருகுதல்; திருக்கோயிலுக்கு தெற்கே சுமார் அரை கி.மீ. தொலைவில் காவிரிநதி ஓடுகின்றது.  

பொழிப்புரை:

கங்கை நதியின் நீரலைகள் மோதும் சடைமுடியினில், நாளும் ஒளி பெருகும் பிறைச் சந்திரனை உடையவரும், தனது இடுப்பினில் புலித்தோல் ஆடை பொருந்தியவரும் ஆகிய இறைவன் உறையும் இடமாவது, வளமான கடைமுடி தலமாகும், நுரைகள் பெருகியும் தெளிந்த நீரினைக் கொண்டுள்ள நீரலைகள் கரையினில் மோதும் தன்மையால் இந்த தலம் நீர்வளத்துடன் காணப்படுகின்றது.

]]>
https://www.dinamani.com/specials/thinam-oru-thavaram/2019/jun/05/131-அருத்தனை-அறவனை---பாடல்-2-3168592.html
3168591 ஸ்பெஷல்ஸ் தினம் ஒரு தேவாரம் 131. அருத்தனை அறவனை - பாடல் 1 என். வெங்கடேஸ்வரன் Tuesday, June 4, 2019 12:00 AM +0530  

பின்னணி:

தனது ஐந்தாவது தலயாத்திரையின் முதல் தலமாக கண்ணார்கோயில் திருத்தலத்திற்கு சென்ற  திருஞானசம்பந்தர், ஆங்கிருந்து புறப்பட்டு மேற்கு நோக்கி சென்று புள்ளிருக்குவேளூரை அடைந்தார் என்று பெரிய புராணத்தில் சேக்கிழார் கூறுகின்றார். இந்த பெரியபுராணப் பாடல்  இங்கே கொடுக்கப் பட்டுள்ளது. கடற்கரை ஓரமாக மயிலாடுதுறையிலிருந்து பூம்புகார் செல்லும் வழியில் கீழையூர் என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமமே அந்நாளில் கடைமுடி என்று அழைக்கப்பட்டு தேவாரப் பதிகத்தில் குறிப்பிடப் பட்டுள்ளது. கடைமுடி தலம் சென்றதாக பெரியபுராணத்தில் குறிப்பு ஏதும் காணப்படாமையால், புள்ளிருக்குவேளூர் செல்லும் வழியில் இங்கும் ஞானசம்பந்தர் சென்றிருக்கலாம் என்று பெரியோர்களால் கருதப் படுகின்றது. இந்த தலத்தின் மீது திருஞானசம்பந்தர் அருளிய பதிகம் ஒன்று மட்டும் நமக்கு இதுவரை கிடைத்துள்ளது. இந்த தலத்தில் கண்வ மகரிஷி தவம் செய்தார் என்று கூறுவார்கள். இறைவனின்  திருநாமம்; கடைமுடிநாதர்; இறைவியின் திருநாமம்; அபிராமி அம்மை. பிஞ்ஞகர்=அழகிய தலைக் கோலம் கொண்டவர். திரு சி.கே.  சுப்பிரமணியம் அவர்களும் பிஞ்ஞகர் கோயில் பிறவும் எனும் சொற்றொடர், கடைமுடி, காட்டுப்பள்ளி, நாங்கூர் ஆகிய தலங்களை குறிக்கலாம் என்றும் கருதுகின்றார்.

    திருமறைச் சண்பையராளி சிவனார் திருக்கண்ணார்கோயில்
    பெரு விருப்பால் அணைந்து ஏத்திப் பிஞ்ஞகர் கோயில் பிறவும்
    உருகிய அன்பால் இறைஞ்சி உயர் தமிழ்மாலை கொண்டு ஏத்தி
    வருபுனல் பொன்னி வடபால் குடதிசை நோக்கி வருவார்      

பாடல்  1:

    அருத்தனை அறவனை அமுதனை நீர்
    விருத்தனை பாலனை வினவுதிரேல்
    ஒருத்தனை அல்லது இங்கு உலகம் ஏத்தும்
    கருத்தவன் வளநகர் கடைமுடியே
 

விளக்கம்:

விருத்தன்=அனைத்துப் பொருட்களுக்கும் அனைத்து உயிர்களுக்கும் முன்னவனாக இருக்கும் நிலை; பாலனாகி=அனைத்துப் பொருட்களும், அனைத்து உயிர்களும் அழிந்த பின்னரும் இருக்கும் நிலை: இந்த இரண்டு நிலைகளும், ஞான சம்பந்தப் பெருமானால் இடர் களையும் பதிகத்தின் (1.52) எட்டாவது பாடலில் குறிக்கப் படுகின்றது. கருத்தன்=முழுமுதற் கடவுள், கர்த்தன் என்ற சொல்லின் திரிபு; அருத்தன்=அனைத்துப் பொருட்களுக்கும் கருவானவன், உட்பொருளானவன்; சிவபெருமானை வழிபடும் அடியார்கள், ஆனந்தத்தினால், ஆடுவதாகவும் பாடுவதாகவும் சம்பந்தர் கூறுகின்றார். .

    விருத்தனாகி பாலனாகி வேதம் ஓர் நான்கு உணர்ந்து
    கருத்தனாகிக் கங்கையாளை கமழ்சடை மேல் கரந்தாய்
    அருத்தனாய ஆதி தேவன் அடியிணையே பரவும்
    நிருத்தர் கீதர் இடர் களையாய் நெடுங்களம் மேயவனே

பெருமான், பாலனகவும் விருத்தனாகவும் இருக்கும் நிலை இலம்பையங்கோட்டூர் தலத்தின் மீது திருஞான சம்பந்தர் அருளிய பாடலை (1.76.3) நினைவூட்டுகின்றது. தன்னை வழிபடும் அடியார்களின் நிலைக்கு ஏற்ப பெருமான் பாலனாகவும் விருத்தனாகவும் வடிவு கொள்கின்றார்.  விருத்தனாக வடிவம் ஏற்று, தனது அடியார்களின் தன்மையை உலகுக்கு உணர்த்திய பல நிகழ்ச்சிகளை நாம் பெரிய புராணத்தில் காண்கின்றோம், சுந்தரரின் வரலாற்றினில் நான்கு இடங்களிலும் மானக்கஞ்சாற நாயனார் புராணத்திலும், பெருமான் முதியவராக வேடம் தரித்து வருவதை நாம் காண்கின்றோம். நடக்கவிருந்த திருமணத்தினை தடுக்கும் பொருட்டு ஓலையுடன் வந்து சுந்தரரை ஆட்கொண்டபோதும், திருவதிகை சித்தமடத்தில் சுந்தரருக்கு திருவடி தீட்சை கொடுத்து பின்னர் மறைந்த போதிலும், கூடலையாற்றூருக்கு வழிநடத்தி கூட்டிச் சென்ற போதும், கருகாவூர் வெள்ளடை செல்லும் வழியில் பொதி சோறு அளித்த போதிலும் பெருமான் முதியவராக வந்ததை நாம் பெரிய புராணத்தில் காண்கின்றோம்.           

விருத்தனை பாலனை என்று திருஞானசம்பந்தர் குறிப்பிடுவது நமக்கு திருவிளையாடல் புராண நிகழ்ச்சி ஒன்றினை நினைவூட்டுகின்றது. மதுரை நகரில் வாழ்ந்து வந்த விரூபாக்ஷன் என்ற அந்தணன், தனக்கு சந்ததி வேண்டும் என்று இறைவனை வேண்டினான். அவனது வேண்டுகோளுக்கு இணங்க, பெருமான் அந்தணனின் மனைவியின் வயிற்றில் ஒரு பெண் குழந்தை பிறப்பதற்கு அருள் புரிந்தார். இந்த குழந்தைக்கு கௌரி என்று பெயரிட்டு பெற்றோர் வளர்த்து வந்தனர். இந்த குழந்தை எட்டு வயது நிரம்பிய தருணத்தில், வாழ்வில் உய்வினை அடைவதற்கு உதவும் மந்திரத்தை தனக்கு உபதேசிக்க வேண்டும் என்று தந்தையிடம் வேண்டினாள். தந்தையும் அதற்கு உடன்பட்டு, உமையன்னையை தியானிக்கும் மந்திரத்தை உபதேசம் செய்தார். அந்த சிறுமியும் அந்த மந்திரத்தை தினமும் தியானித்து வந்தாள். இவ்வாறிருக்கையில் ஒரு நாள் அவர்களது இல்லத்திற்கு ஒரு வைணவச் சிறுவன் பிக்ஷை கேட்டு வந்தான், அவனது அழகால், நடத்தையால் கவரப்பட்ட விரூபாக்க்ஷன், தனது பெண்ணினை அவருக்கு திருமணம் செய்து கொடுத்தார். தனது மனைவியுடன் வைணவச் சிறுவன் தனது ஊருக்கு சென்றபோது, அவனது தாயார், ஒரு சைவப்பெண் தனக்கு மருமகளாக வந்ததை விரும்பவில்லை. தனது திருமணம் நடைபெற்ற வரை, தினமும் ஒரு சைவ அடியாருக்கு அன்னம் அளிப்பதை தனது பழக்கமாக கொண்டிருந்த கௌரி, திருமணத்திற்கு பின்னர் அவ்வாறு செய்ய முடியாமல் போனதற்கு மிகவும் வருந்தினாள். இவ்வாறு வருத்தத்துடன் கௌரி வாழ்ந்து வருகையில் ஒரு நாள், அவளது மாமியாரும் கணவனும் வெளியூர் செல்ல நேரிட்டது. தாங்கள் ஊரில் இல்லாத சமயத்தில், சிவனடியார் எவருக்கேனும் தனது மருமகள் அன்னம் அளிப்பாளோ என்ற சந்தேகம் கொண்டிருந்த மாமியார், மருமகளை வீட்டில் உள்ளே வைத்து பூட்டிவிட்டு சென்றாள். அப்போது அங்கே ஒரு முதியவர் வேடம் தாங்கி, பசியினால் தள்ளாடிய நடையுடன் பெருமான் கௌரி தங்கியிருந்த வீட்டிற்கு வந்தார். பசியினால் வாடும் முதியவருக்கு அன்னமிட வேண்டும் என்று விரும்பினாலும், தனது இயலாமையை குறித்து கௌரி மிகவும் வருந்தினாள். வந்த முதியவர், கெளரியை நோக்கி நீ உனது கையை பூட்டின் மீது வைத்தால் பூட்டு திறந்துவிடும் என்று கூறினார். கௌரியும் அவ்வாறு செய்ய பூட்டு திறக்கவே, முதியவர் வீட்டினுள்ளே நுழைந்தார். வந்த விருந்தினருக்கு சமையல் செய்து கௌரி படைத்தாள், திடீரென்று முதியவர், கட்டிளம் குமரனாக மாறினார். இதனைக் கண்டு திகைத்த கௌரி, வெளியே சென்றிருந்த தனது மாமி வந்தால், ஒரு ஆடவனுடன் தான் தனியே இருந்ததற்கு தன்னை குற்றம் சாட்டுவாளே என்று அச்சமுற்றாள். அவளின் பயத்தினை மேலும் அதிகரிப்பது போன்று, வெளியே சென்றிருந்த அவளது மாமி, அப்போது வீட்டினுள்ளே நுழைந்தார். ஆனால் கட்டிளம் காளையாக இருந்த பெருமான் சிறிய குழந்தையாக மாறி, தனது கால் பெருவிரலை வாயினில் வைத்தவண்ணம் தரையில் கிடந்தார். உள்ளே நுழைந்த மாமி, முழந்தை எவருடையது என்று கேட்க, தாயில்லாத குழந்தை என்று தேவதத்தன் என்ற சைவன் கொடுத்ததாக கௌரி கூறினாள்; மாமி மேலும் கோபம் கொண்டு, ஒரு சைவக் குழந்தையை ஏற்றுக்கொண்டது குற்றம் என்று கூறி, மருமகளையும் குழந்தையையும் வீட்டிலிருந்து வெளியே செல்லுமாறு கட்டளை இட்டாள்; வேறு வழியின்றி வெளியே வந்த கௌரி, தனது தகப்பனார் தனக்கு உபதேசம் செய்த மந்திரத்தை சொல்ல, அவளது கையில் இருந்த குழந்தை திடீரென்று மறைந்து வானில் சென்றது; பெருமான் விடையினில் அமர்ந்தவராக வானில் காட்சி அளித்தார். மேலும் கெளரியின் உருவமும் அன்னை பார்வதி தேவியின் உருவமாக மாறியது. பெருமான், பார்வதி தேவியின் உருவத்திற்கு மாறிய கெளரியை விடையின் மீது ஏற்றுக்கொண்டு பெருமான் மறைந்தார். இது தான் திருவிளையாடல் புராணத்தில் கூறப்படும் வரலாறு.  

தில்லை நேரிசைப் பதிகத்தின் ஒரு பாடலில் (4.22.9) ஊழித்தீயினில் நின்று நடமாடும் இறைவன் என்று குறிப்பிட்டு அனைத்து உயிர்களும் ஊழியில் அழிந்த பின்னரும் நிலைத்து நிற்கும் இறைவன் அனைவருக்கும் இளையவன் என்றும், ஊழி முடிந்தவுடன் மீண்டும் உலகம் தோன்றுவதற்கு முன்னமே இறைவன் இருப்பதால் அனைத்து உயிர்களுக்கும் மூத்தவன் என்று உணர்த்தும் பொருட்டு விருத்தனாய் பாலனாய் இருப்பவன் பெருமான் என்று அப்பர் பிரான் கூறுகின்றார்.

    விருத்தனாய்ப் பாலனாகி விரிநிலா எறிக்கும் சென்னிச்
    திருத்தனார் நிருத்தம் செய்ய நீண்ட புன்சடைகள் தாழ
    கருத்தனார் தில்லை தன்னுள் கருது சிற்றம்பலத்தே
    அருத்தமா மேனி தன்னோடு அனல் எரி ஆடுமாறே    

விருத்தன் என்பதற்கு அனைத்து உயிர்களும் தோன்றுவதற்கு முன்னமே தோன்றியதால், அனைவரிலும் மூத்தவன் என்றும், பாலன் என்பதற்கு அனைத்து உயிர்களும் அழிந்த பின்னரும்  தான் அழியாது இருப்பவன் என்று பொருள் கொண்டு, ஆதி அந்தமற்ற நிலையில் இருக்கும் இறைவனை விடவும் மூத்தவர் எவரும் இல்லை என்றும், அழியாமல் நிலைத்து நிற்கும் அவனை விடவும் இளையவர் எவரும் இல்லை என்று பொருள் கொள்வதும் பொருத்தமே. கச்சி மேற்றளி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (4.43.2) அனைத்து உயிர்களுக்கும் தலைவனாக இருக்கும் பெருமான் விருத்தனாகவும் பாலனாகவும் திகழ்கின்றார் என்று அப்பர் பிரான் கூறுகின்றார். மால்=மேகம்; மாலன=மேகத்தின் கருமை நிறத்தினை ஒத்த; மாயன்= திருமால்; ஏலம்= நறுமணம் மிகுந்த;

    மாலன மாயன் தன்னை மகிழ்ந்தனர் விருத்தராகும்
    பாலனார் பசுபதியார் பால்வெள்ளை நீறு பூசிக்
    காலனைக் காலால் செற்றார் காஞ்சி மாநகர் தன்னுள்ளால்
    ஏலநல் கடம்பன் தந்தை இலங்கு மேற்றளியனாரே

தில்லைச் சிற்றம்பலத்தின் மீது அருளிய குறுந்தொகைப் பாடல் ஒன்றினில், அப்பர் பிரான்,  விருத்தனாகவும் பாலனாகவும் இருக்கும் பெருமான், தனது அடியார்களின் தன்மையை நன்கு அறிவார் என்று கூறுகின்றார். திருத்தன்=உயிர்களைத் திருத்தி ஆட்கொள்பவன்,  அருத்தன்= மெய்ப்பொருளாக உள்ளவன்.

    ஒருத்தனர் உலகங்கட்கு ஒரு சுடர்
    திருத்தனார் தில்லைச் சிற்றம்பலவனார்
    விருத்தனார் இளையார் விடம் உண்ட எம்
    அருத்தனார் அடியாரை அறிவரே

ஒருத்தன் என்பதன் மூலம் சிவபிரான் ஒப்பற்றவன் என்று அப்பர் பிரான் நமக்கு இந்த பாடலில் உணர்த்துகின்றார். ஒருவன் என்னும் ஒருவன் காண்க என்பது திருவாசகம், திருவண்டப்பகுதி அகவலில் வரும் வாக்கியம், ஒருவனாய் உலகேத்த நின்றவன் சிவபெருமான் என்ற செய்தியை, ஆரூர்த் திருத்தாண்டகம் ஒன்றின் முதல் அடியாக அப்பர் பிரான் வழங்குகின்றார். திருவாரூர்த் தலம் எத்தகைய பழமை வாய்ந்தது என்று இங்கே கூறப்படுகின்றது. தெரித்த என்றால் தோற்றுவித்த என்று பொருள்.

    ஒருவனாய் உலகேத்த நின்ற நாளோ ஓருருவே
             மூவுருவமான நாளோ
    கருவனாய் காலனை முன் காய்ந்த நாளோ காமனையும்
             கண் அழலால் விழித்த நாளோ
    மருவனாய் மண்ணும் விண்ணும் தெரித்த நாளோ மான் மறிகை
              ஏந்தி ஓர்  மாதோர் பாகம்
    திருவினாள் சேர்வதற்கு முன்னோ பின்னோ திருவாரூர்
              கோயிலாக் கொண்ட நாளோ

மறைக்காடு தலத்தின் மீது அருளிய திருத்தாண்டகத்தின் பாடலில் (6.23.9) பால விருத்தனும் ஆனான் கண்டாய் என்று அப்பர் பிரான் கூறுகின்றார். மூல நோய்=கன்மம் மாயை ஆகிய மற்ற மலங்கள் நம்மை பிடிப்பதற்கு காரணமாக இருப்பதும், உயிர் தோன்றிய காலந்தொட்டே உயிருடன் கலந்திருந்து உயிர்கள் அடையும் அனைத்து துயரங்களுக்கும் மூலமாக இருப்பததால், ஆணவ மலம் மூலமலம் என்று அழைக்கப்படுகின்றது.  எவராலும் அடக்க மூடியாத ஆணவ மலத்தினை அடக்குவதற்கு உதவும் பரமன் என்பதால், சிவபெருமானை முதல்வன் என்று அப்பர் பிரான் அழைக்கின்றார்.

   மூலநோய் தீர்க்கும் முதல்வன் கண்டாய் முத்தமிழும் நான்மறையும்
         ஆனான்  கண்டாய்
   ஆலின் கீழ் நால்வர்க்கு அறத்தான் கண்டாய் ஆதியும்
         அந்தமும் ஆனான் கண்டாய்
   பால விருத்தனும் ஆனான் கண்டாய் பவளத் தட வரையே
         போல்வான் கண்டாய்
   மாலை சேர் கொன்றை மலிந்தான் கண்டாய் மறைக்காட்டு
          உறையும் மணாளன் தானே

கழுமலம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (7.58.3) சுந்தரர், பெருமானை விருத்தன் என்றும் பாலன் என்றும் அழைப்பதை நாம் கீழ்க்கண்ட பாடலில் காணலாம், முந்திய பிறவிகளில் ஈட்டிய வினைகள் தாமே இந்த பிறவியில் இன்பங்களையும் துன்பங்களையும் நமக்கு விளைவிக்கின்றது. இவ்வாறு இன்பத்தையும் துன்பத்தையும் செய்யும் வினைகளை செய்வினை என்று சுந்தரர் குறிப்பிடுகின்றார். விருத்தனாக திருவதிகை சித்தமடத்தில் காட்சி அருளிய பெருமான், கயிலை மலையில் வீற்றிருந்த வண்ணம் காட்சி கொடுத்தார் அல்லவா. முதுமை அடையாத தோற்றத்துடன் இறைவன் காட்சி கொடுத்ததை பாலன் என்று சுந்தரர் இங்கே குறிப்பிடுகின்றார் போலும். பெருமானின் திருவுருவத்தினை பல நாட்கள் கனவினில் கண்டிருந்த சுந்தரர், இந்த தலத்தில் நேரில் கண்டுகொண்டதாக மகிழ்ச்சியுடன் கூறுவதை நாம் உணரலாம். பெருமானைத் தவிர்த்து வேறு எவரையும் நினையாத தன்மை தனக்கு இருந்ததால் தான், உய்வினை அடைந்ததாக சுந்தரர் இங்கே கூறுகின்றார்.   

    திருத்தினை நகர் உறை சேந்தன் அப்பன் என் செய்வினை
          உறுத்திடும் செம்பொனை அம்பொன்
    ஒருத்தனை அல்லது இங்கு ஆரையும் உணரேன் உணர்வு பெற்றேன்
          உய்யும் காரணம் தன்னால்
    விருத்தனைப் பாலனைக் கனவிடை விரவி விழித்து எங்கும்
         காணமாட்டாது  விட்டிருந்தேன்
    கருத்தனை நிருத்தம் செய் காலனை வேலைக் கழுமல
         வளநகர் கண்டு கொண்டேனே

அருத்தன்=பொருளாக விளங்குபவன்; வேதத்தின் என்று நாம் சேர்த்துக் கொள்ளவேண்டும்.  அறவன்=அறத்தின் வடிவமாக உள்ளவன்; அமுதன்=அமுதம் போன்று இனியவன்; பெருமான்  ஒப்பற்ற ஒருவன் என்பதை உலகத்தவர் அனைவரும் உணர்ந்து கொண்டு அவனைப் புகழ்ந்து கொண்டாடுகின்றனர் என்று சம்பந்தர் கூறுகின்றார். கருத்தவன்=உலகத்தவரின் கருத்தாக  இருப்பவன்;           

பொழிப்புரை:

வேதங்களின் பொருளாக விளங்குபவனும், அறத்தின் வடிவமாக உள்ளவனும், அமுதம் போன்று தெவிட்டாத இனிமையினை உள்ளத்திற்கு அளிப்பவனும், அனைத்து உயிர்களுக்கும் முன்னமே தோன்றியமையால் அனைவர்க்கும் பழமையானவனும். அனைத்து உயிர்கள் அழிந்த பின்னரும்   தான் அழியாமல் நிலையாக இருப்பதால் அனைவரினும் இளையவனாக கருதப் படுவானும் ஆகிய இறைவன் யார் என்று நீங்கள் வினவுவீராயின், உமது கேள்விக்கு நான் அளிக்கும் விடையினை கேட்பீர்களாக; ஒப்பற்ற ஒருவனாக விளங்கும் சிவபெருமானைத் தவிர்த்து வேறு எவரும் நமக்கு உண்மையான துணை இல்லை என்பதை கருத்தினில் கொண்டு, உலகத்தவர், தொழுது புகழ்ந்து வணங்கும் இறைவன் கடைமுடி எனப்படும் வளமான நகரத்தில் உறைகின்றான். எனவே அந்த தலம் சென்று இறைவனை வழிபட்டு வாழ்வினில் உய்வினை அடைவீராக.       

]]>
https://www.dinamani.com/specials/thinam-oru-thavaram/2019/jun/04/131-அருத்தனை-அறவனை---பாடல்-1-3168591.html
3162297 ஸ்பெஷல்ஸ் தினம் ஒரு தேவாரம் 130. தண்ணார் திங்கள் - பாடல் 11 என். வெங்கடேஸ்வரன் DIN Monday, June 3, 2019 12:00 AM +0530

பாடல் 11:

    காமரு கண்ணார் கோயில் உளானைக் கடல் சூழ்ந்த
    பூமரு சோலைப் பொன்னியல் மாடப் புகலிக் கோன்
    நாமரு தொன்மைத் தன்மையுள் ஞானசம்பந்தன்
    பாமரு பாடல் பத்தும் வல்லார் மேல் பழி போமே

விளக்கம்:

இந்த பாடலில் பதிகத்தினை முறையாக பாடும் அடியார்கள் மேல் தகாத பழிகள் வாரா என்று சம்பந்தர் கூறுகின்றார். தாம் செய்யாத குற்றத்திற்கு பலர் பழிச்சொற்கள் பெறுவதும் தண்டனை அடைவதையும் நாம் இன்றும் காண்கின்றோம். இதற்கு மூல காரணம் அவர்களின் பண்டைய வினைகளே. பெருமானை வழிபடும் அன்பர்கள் மற்றும் பதிகத்தினை ஓதும் அன்பர்கள் அத்தகைய வினைகளிலிருந்து விடுதலை பெறுவார்கள் என்பதால், அந்த வினைகளால் ஏற்படும் பழிகள் வருவதும் தவிர்க்கப்படும் அல்லவா. காமரு=அழகுடைய; நாமரு தொன்மை=மீண்டும் மீண்டும் ஒரே சொற்களைச் சொல்வதால் அந்த சொற்கள் நாவினுக்கு மிகவும் அதிகமான பழக்கமாக மாறியதை நாவுக்கு தொன்மைத் தொடர்பு உடைய சொற்கள் என்று கூறுகின்றார். பாமரு பாடல் என்ற தொடருக்கு எங்கும் பரந்து செல்லும் இனிய ஓசையினை உடைய பாடல் என்றும் பொருள் சொல்லப் படுகின்றது.      

பொழிப்புரை:

அழகுடன் விளங்கும் கண்ணார் கோயில் திருத்தலத்தினில் உள்ள கோயிலில் உறையும் பெருமானை, பூஞ்சோலைகள் நிறைந்ததும் பொன்னால் அழகு சேர்க்கப்பட்ட மாடங்கள் நிறைந்ததும் ஆகிய புகலி நகரத்தின் தலைவனாக திகழும் ஞானசம்பந்தனின் நாவின் மூலமாக. பெருமானின் புகழினை மீண்டும் மீண்டும் பாடி பழக்கப்பட்ட நாவின் மூலமாக வெளிவரும் பாடல்கள் பத்தினையும் பாடவல்ல அடியார்கள் மேல் தகாத பழிகள் வாரா.

முடிவுரை:

பதிகத்தின் முதல் பாடலில் சென்ற பல பிறவிகளில் செய்த பாவங்களின் விளைவாக ஏற்படும் தீங்குகள் நம்மை விட்டு நீங்கும் என்றும் வாழ்வினில் இன்பம் ஏற்படும் என்று இம்மையில், பெருமானை கை தொழுவதால் ஏற்படும் விளைவினை சம்பந்தர் கூறுகின்றார். பதிகத்தின் இரண்டாவது பாடலில் தலத்தின்  இயற்கை வளமும், அடியார்கள் பாடும் செவ்வழிப் பண்களை கேட்ட வண்டுகளும் செவ்வழிப் பண்ணில் முரல்கின்றன என்று கூறுகின்றார். மூன்றாவது பாடலில் சுடுகாட்டினில் நடனம் ஆடும் பெருமான் என்று குறிப்பிடும் சம்பந்தர், நான்காவது பாடலில் பெருமானின் திறமையை (யானை உரித்தது மற்றும் அறம் உரைத்தது) குறிப்பிடுகின்றார். பதிகத்தின் ஐந்தாவது பாடலில், திருமால் வாமனனாக சென்று வஞ்சகமான முறையில் மாவலியை ஏமாற்றியதால் தனக்கு ஏற்பட்ட பழி மற்றும் பாவத்தைத் தீர்த்துக் கொள்ள இலிங்கம் தாபித்து வழிபட்ட கோயில் கண்ணார் கோயில் என்று உணர்த்துகின்றார். ஆறாவது பாடலில் கண்ணார்கோயில் பெருமானை வணங்கி வழிபடும் அன்பர்களுக்கு இயமனால் துன்பம் ஏதும் உண்டாகாது என்று கூறுகின்றார். ஏழாவது பாடலில் தலத்தில் உள்ள கன்னிப்பெண்கள், பெருமானை நெருங்கி வழிபடுகின்றனர் என்று கூறும் சம்பந்தர், திருக்கண்ணார் என்று இறைவனை அழைக்கும் அன்பர்கள் அனைவரும் சிவலோகம் சென்று சேர்வார்கள் என்று எட்டாவது பாடலில் கூறுகின்றார். ஒன்பதாவது பாடலில் பெருமானை வழிபடும் அடியார்கள்  வானோர் உலகத்தினைச் சென்று அடைவார்கள் என்று கூறுகின்றார். பத்தாவது பாடலில் புத்தர்கள் மற்றும் சமணர்களின் சொற்களை பொருட்படுத்த வேண்டாம் என்று அறிவுரை வழங்கப் படுகின்றது. பதிகத்தின் கடைப் பாடலில் பதிகத்தினை ஓதும் அடியார்களுக்கு தகாத பழிகள் வாரா என்று கூறுகின்றார். கண்ணார்கோயில் சென்றடைந்து பெருமானை வணங்கி வழிபட்டு, அந்த தலத்திற்கு உரிய பதிகத்தினை பாடி, இம்மையில் துன்பங்கள் நீங்கப்பெற்று இன்பங்கள் அடைந்தும், நரகத்தினில் நாம் எதிர்கொள்ளவிருக்கும் துன்பங்களைத் தவிர்த்தும், மறுமையில் சிவலோகம் சென்றடைந்து என்றும் அழியாத இன்பத்துடன் இருப்போமாக.       

 

]]>
https://www.dinamani.com/specials/thinam-oru-thavaram/2019/jun/03/130-தண்ணார்-திங்கள்---பாடல்-11-3162297.html
3162296 ஸ்பெஷல்ஸ் தினம் ஒரு தேவாரம் 130. தண்ணார் திங்கள் - பாடல் 10 என். வெங்கடேஸ்வரன் DIN Sunday, June 2, 2019 12:00 AM +0530  

பாடல் 10:

    தாறிடு பெண்ணைத் தட்டுடையாரும் தாம் உண்ணும்
    சோறு உடையார் சொல் தேறன்மின் வெண்ணூல் சேர் மார்பன்
    ஏறுடையன் பரன் என்பு அணிவான் நீள் சடை மேலோர்
    ஆறு உடை அண்ணல் சேர்வது கண்ணார் கோயிலே

விளக்கம்:

தாறிடு பெண்ணை=குலை தள்ளும் பனைமரங்கள்; தட்டு=பனை ஓலையால் செய்யப்பட்ட; தடுக்குப் பாய்களை சமணர்கள் தாங்கள் செல்லும் இடம் எல்லாம் எடுத்து செல்வது அவர்களின் வழக்கம். பொதுவாக சமண குருமார்கள் ஒரே இடத்தில் தொடர்ந்து தங்குவதை தவிர்ப்பார்கள். இவ்வாறு ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு அடிக்கடி செல்லும் அவர்களின் தேவை கருதி, இரவினில் அவர்கள் படுப்பதற்காக பல சமணப் பள்ளிகள் அந்நாட்களில் இருந்தன. புதுக்கோட்டை அருகில் உள்ள சித்தன்னவாசல் செல்லும் வழியில் குன்றினைக் குடைந்து செய்யப்பட்ட சமணப் படுக்கைகள் இருப்பதை நாம் இன்றும் காணலாம். இவ்வாறு எடுத்துச் செல்லும் பாய்களை இடுப்பினில் சுற்றிக் கொள்வதும் உண்டு, அந்த பழக்கத்தையே இங்கே தட்டுடையார் என்று சம்பந்தர் குறிப்பிடுகின்றார். சோறுடையார்=சோற்றினை உட்கொள்வதே வாழ்க்கையின் முக்கிய நோக்கமாக கருதிய புத்தர்கள்; பரன்=அனைவர்க்கும் மேலானவன்; தனது சொற்களால் ஊக்கமடைந்து இந்த தலம் செல்லும் அடியார்களின் மனதினைக் கலைக்கும் முயற்சியில் ஈடுபடுவோரின் சொற்களை பொருட்படுத்த வேண்டாம் என்ற அறிவுரை இங்கே அளிக்கப் படுகின்றது.      

பொழிப்புரை:

குலை தள்ளும் பனை மரங்களின் ஓலைகளால் செய்யப்பட்ட தடுக்கினை ஆடையாக உடுக்கும் சமணர்களும், சோறு உண்பதே வாழ்க்கையின் பிரதான நோக்கமாக கருதும் புத்தர்களும் சொல்லும் சொற்களை ஒரு பொருட்டாக கருதாதீர்கள்; தனது மார்பினில் வெண்ணூல் அணிந்தவனும், எருதினை வாகனமாகக் கொண்டவனும், அனைவர்க்கும் மேலானவனும், எலும்பினை ஆபரணமாக அணிந்தவனும், தனது நீண்ட சடையின் மேல் கங்கை நதியைத் தேக்கியவனும் ஆகிய பெருமான் சேர்ந்து எழுந்தருளி இருப்பது கண்ணார் கோயில் என்ற தலமாகும்.

 

]]>
https://www.dinamani.com/specials/thinam-oru-thavaram/2019/jun/02/130-தண்ணார்-திங்கள்---பாடல்-10-3162296.html
3162295 ஸ்பெஷல்ஸ் தினம் ஒரு தேவாரம் 130. தண்ணார் திங்கள் - பாடல் 9 என். வெங்கடேஸ்வரன் DIN Saturday, June 1, 2019 12:00 AM +0530
பாடல் 9:

    செங்கமலப் போதில் திகழ் செல்வன் திருமாலும்
    அங்கமலக் கண் நோக்க அரும் வண்ணத் தழல் ஆனான்
    தங்கமலக் கண்ணார் திகழ் கோயில் தமதுள்ளம்
    அங்கமலத்தோடு ஏத்திட அண்டத்து அமர்வாரே

விளக்கம்:

அங்கமலக்கண்=அங்கு+அம்+மலக்+கண்; அங்கு=பிரமனும் திருமாலும் தமக்குள்ளே யார்  பெரியவன் என்று  வாதம் செய்து கொண்டிருந்த இடத்தில்; அம் மலக்கண்=இறைவனின் திருவடியையும் திருமுடியையும், தங்களது கண்களால் காண்போம் என்று செருக்குடன், பிரமனும் திருமாலும் முயற்சி செய்ததால், அவர்களது கண்களை மலக்கண் என்று கூறுகின்றார். பெருமானை அணுக வேண்டிய முறையில் பிரமனும் திருமாலும்  அணுகாமல் இருந்ததை அப்பர் பிரான், இலிங்க புராண குறுந்தொகை பதிகத்தின் (5.95) முதல் பத்து பாடல்களில் கூறுகின்றார். பிரமன் திருமால் ஆகிய இருவரும், பெருமானை எவ்வாறெல்லாம் வழிபட்டிருக்க வேண்டும் என்பதையும் இந்த பாடல்களில் குறிப்பிட்டு, அவர்கள் செய்யத் தவறியதை பாடல் தோறும் குறிப்பிடுகின்றார். இந்த பதிகத்தின் முதல் பத்து பாடல்களில் இருவர் இருவர் என்றே அப்பர் பிரான் குறிப்பிட்டு அவர்கள் செய்யத் தவறிய செயல்களை பட்டியல் இட்டு, அவர்கள் இருவரும் இறைவனைக் காண்பதற்கு முயற்சி செய்தனர் என்று கூறுகின்றார். பதிகத்தின் கடைப் பாடலில் தான், செங்கணான் மற்றும் பிரமன் ஆகிய இருவரே பதிகத்தின் முந்திய பாடல்களில் குறிப்பிடப் படுகின்றனர் என்று நமக்கு உணர்த்துகின்றார். எவ்வாறு இறைவனை வணங்க  வேண்டும் என்று அப்பர் பிரான் இந்த பாடல்களில் கூறியது, இங்கே சுருக்கமாக தரப்படுகின்றது.

பதிகத்தின் முதல் பாடலில் இறைவனது பெருமைகளை புரிந்து கொண்டு அவன் இருக்கும் இடத்திற்கு நாம் செல்ல வேண்டும் என்றும், அவனது திருவடிகளில் தூவுவதற்காக மலர்கள் எடுத்துச் செல்ல வேண்டும் என்றும், அன்றலர்ந்த தூய்மையான மலர்களை நாமே பறித்தல் வேண்டும் என்றும். மகிழ்ந்த மனத்துடன் அவனை நெருங்கிக் காண வேண்டும் என்று அப்பர் பிரான்  கூறுகின்றார். பதிகத்தின் இரண்டாவது பாடலில் இறைவனை நீராட்டி, திலகமிட்டு அழகு செய்து, அவனை வலம் வந்து வழிபடல் வேண்டும் என்று கூறுகின்றார். பதிகத்தின் மூன்றாவது பாடலில், திருக்கோயிலின் தரையினை சுத்தம் செய்து, பசுஞ்சாணத்தால் மெழுக வேண்டும் என்றும் கூடை நிறைய அன்றலர்ந்த பூக்களை திருக்கோயிலுக்கு கொண்டு செல்லவேண்டும் என்றும் கூறுகின்றார். நான்காவது பாடலில் நெய் பால் ஆகியவை கொண்டு இறைவனை நீராட்ட வேண்டும் என்றும் இறைவனைத் தொழும் போது பொய்யான மற்றும் வஞ்சகமான சொற்களைத் தவிர்க்க வேண்டும் என்றும் கூறுகின்றார். ஐந்தாவது பாடலில் பெருமானுக்கு எருக்க மாலையும் இண்டை மாலையும் சூட்டி வழிபட வேண்டும் என்றும் எளிமையான தோற்றம் தரும் உடைகளை உடுத்துக் கொண்டு இறைவனை வணங்க வேண்டும் என்றும் கூறுகின்றார். பெருமானுக்கு மிகவும் அதிகமான பூக்கள் சமர்ப்பித்து வழிபட, நமது உடலை வருத்திக் கொண்டு பூக்கள் பறிக்க வேண்டும் என்றும், பெரிய குடங்களில் நீர் சுமந்து கொண்டு சென்று பெருமானை நீராட்ட வேண்டும் என்று ஆறாவது பாடலில் கூறுகின்றார். ஏழாவது பாடலில் திருக்கோயிலில் அடியார்கள் அட்டாங்க வணக்கம் செய்யவேண்டும் என்று உணர்த்தப்படுகின்றது. எட்டாவது பாடலில், திருநீறு அணிந்தவாறு, அன்றலர்ந்த மலர்களைக் கொண்டு மாலைகள் தொடுக்க வேண்டும் என்று கூறப்படுகின்றது. ஒன்பதாவது பாடலில் கருங்குவளை மலர் மாலைகளை இறைவனது திருவடியில் சமர்ப்பிக்கவேண்டும் என்று கூறுகின்றார். உருத்திராக்கம் அணிந்தவாறு பெருமானின் சன்னதியில் சங்கு ஊதவேண்டும் என்று பத்தாவது பாடலில் கூறுகின்றார். பதிகத்தின் கடைப் பாடலில், அவர்கள் இருவர் மீது இரக்கம் கொண்ட பெருமான் இலிங்கத்தின் உருவில் தோன்றி அவர்களுக்கு காட்சி கொடுத்தான் என்று அப்பர் பிரான் முடிக்கின்றார்.

தங்கமலக் கண்ணார்=தங்கு+அமலக்+கண்ணார்; அமலம்=மலம் நீங்கிய நிலை; ஞானக் கண் உடையவர்; மலம் என்றால் பொதுவாக ஆணவ மலத்தினை குறிக்கும். அறியாமை நிலையினை ஆணவ மலமே உண்டாக்குவதால், மலம் நீங்கிய நிலை என்பது அறியாமை நீங்கிய நிலையினை குறிக்கும். அங்கமலத்தோடு=அம்+கமலத்தோடு; உள்ளம் அங்கமலத்தோடு=தாமரை போன்ற அழகிய உள்ளத்தோடு; பெருமானைத் தொழும் அடியார்கள், ஆணவ மலம் நீங்கியவர்களாக இருப்பதால், அவர்களை அழகிய தாமரை மலர் போன்று உள்ளத்தவர்கள் என்று சம்பந்தர் இங்கே குறிப்பிடுகின்றார். உள்ளத்தால் இறைவனை வணங்குதல் அக வழிபாடாக கருதப் படுகின்றது. திருக்கோயில் சென்று இறைவனின் மூர்த்தத்தைக் கண்டு வழிபடுவது புறவழிபாடு எனப்படும். திகழ் கோயில் என்று குறிப்பிட்டு புறவழிபாட்டினை குறிக்கும் சம்பந்தர்  அங்கமலத்தோடு என்று குறிப்பிடுவதால், அகவழிபாடு செய்வோர் புறவழிபாட்டினை கைவிடாமல் ஈடுபடவேண்டும் என்று உணர்த்துவதாக பொருள் கூறுகின்றனர். தனது மொழிகளால் தூண்டப்பட்டு இந்த தலம் செல்லும் அடியார்கள் இறைவனை எவ்வாறு வழிபடவேண்டும்  என்று இந்த பாடலில் சம்பந்தர் உணர்த்துகின்றார்.          
பொழிப்புரை:

சிவந்த தாமரை மலரினைத் தனது ஆசனமாகக் கொண்ட பிரமனும் திருமாலும் தங்கள் இருவரில் யார் பெரியவன் என்று வாதம் செய்து கொண்டிருந்த இடத்தில், நெடிது உயர்ந்த தழற்பிழம்பாய் பெருமான் தோன்றிய போது, பெருமானின் திருவடியையும்  திருமுடியையும் எளிதில் கண்டு விடலாம் என்று தங்கள் வலிமை மீது தாங்கள் கொண்டிருந்த செருக்கின் விளைவால் மிகுந்த நம்பிக்கையுடன், தங்களது ஊனக் கண்களின் துணையால் கண்டுவிடலாம்   என்று இருவரும் முயற்சி செய்த போதிலும், அவர்கள் இருவரும் தங்களது முயற்சியில் வெற்றி காணவில்லை. இவ்வாறு அவர்கள் இருவரும் தங்களது முயற்சியில் வெற்றி பெறாத வண்ணம் நீண்டு உயர்ந்த பெருமான், ஆணவ மலத்தினை அடக்கும் வல்லமை வாய்ந்த கண்ணார்கோயில்  தலத்தில் உறைகின்றார். இந்த தலத்தில் உள்ள பெருமானை நேரில் கண்டு புறவழிபாடு மற்றும் உள்ளத்தில் நினைத்து அகவழிபாடு செய்து பெருமானை போற்றி வழிபடும் அடியார்களே அமரர் உலகத்தினைச் சென்று அடைவார்கள்.

 

]]>
https://www.dinamani.com/specials/thinam-oru-thavaram/2019/jun/01/130-தண்ணார்-திங்கள்---பாடல்-9-3162295.html
3162294 ஸ்பெஷல்ஸ் தினம் ஒரு தேவாரம் 130. தண்ணார் திங்கள் - பாடல் 8 என். வெங்கடேஸ்வரன் DIN Friday, May 31, 2019 12:00 AM +0530
பாடல் 8:

    பெருக்கு எண்ணாத பேதை அரக்கன் வரைக் கீழால்
    நெருக்குண்ணாத் தன் நீள் கழல் நெஞ்சில் நினைந்து ஏத்த
    முருக்குண்ணாதோர் மொய் கதிர் வாள் தேர் முன் ஈந்த
    திருக் கண்ணார் என்பார் சிவலோகம் சேர்வாரே  

விளக்கம்:

பெருக்கு=பெருமை; வரை=மலை, இங்கே கயிலை மலையினை குறிக்கின்றது; முருக்கு=அழிவு; பேதை=அறிவற்றவன், பெருமான் இராவணனுக்கு தேர் ஈந்ததாக இந்த பாடலில் சம்பந்தர் சொல்வதை நாம் உணரவேண்டும். பதிகத்தின் ஆறாவது பாடலில் பெருமானின் அடியார்களுக்கு இயமனால் துன்பங்கள் ஏதும் ஏற்படாது என்று கூறிய சம்பந்தர், இந்த பாடலில், இயமனால் ஏற்படும் துன்பங்கள் எவ்வாறு தவிர்க்கப்படும் என்பதை உணர்த்துகின்றார். அத்தகைய அடியார்களை, இயமன் நரகத்திற்கு அழைத்துச் செல்வதை தடுத்து, பெருமான் அவர்களை சிவலோகத்திற்கு அழைத்துச் செல்வார் என்று கூறுகின்றார். முந்தைய ஏழு பாடல்களில் இந்த தலம் சென்று இறைவனை வணங்குமாறு நம்மைத் தூண்டும் சம்பந்தர், உதாரணமாக இந்திரனும் திருமாலும் வழிபாட்டு பயன் அடைந்ததை நமக்கு உணர்த்தும் சம்பந்தர், இந்த தலத்திற்கு நேரில் செல்ல முடியவில்லையே என்று வருத்தம் அடையும் அன்பர்களின் நிலையினை உணர்ந்து அத்தகையோர் தலத்தின் உறையும் பெருமானின் திருநாமத்தினை சொல்லி உய்வினை அடையலாம் என்று கூறுகின்றார்.  

பொழிப்புரை:

திருக்கயிலை மலையின் பெருமையை அறியாத அறிவிலியாக விளங்கிய அரக்கன் இராவணன், கயிலை மலையினை பேர்த்து எடுக்கும் முயற்சியில் ஈடுபட்ட போது, பெருமான் தனது கால் பெருவிரலை மலையின் மீது அழுத்தியதன் விளைவால், அரக்கன் மலையின் கீழே நெருக்குண்டு துன்பம் அடைந்தான். அப்போது தனது தவறினை உணர்ந்த அரக்கன், பெருமானின் நீண்ட கழல்களை நினைத்து புகழ்ந்து சாமகானம் பாடியதை கண்ணுற்ற இறைவன், அரக்கனை அவன் அடைந்த துன்பத்திலிருந்து விடுவித்து, அவனுக்கு ஒளிவீசும் வாளொடு தேரினையும் அருளினார். இத்தகைய கருணை உள்ள கொண்ட பெருமானின் திருநாமத்தை, கண்ணார் என்று சொல்லும் அன்பர்கள் சிவலோகம் சென்று சேர்வார்கள்.

 

]]>
https://www.dinamani.com/specials/thinam-oru-thavaram/2019/may/31/130-தண்ணார்-திங்கள்---பாடல்-8-3162294.html
3162292 ஸ்பெஷல்ஸ் தினம் ஒரு தேவாரம் 130. தண்ணார் திங்கள் - பாடல் 7 என். வெங்கடேஸ்வரன் DIN Thursday, May 30, 2019 12:00 AM +0530
பாடல் 7:

    முன்னொரு காலத்து இந்திரன் உற்ற முனி சாபம்
    பின்னொரு நாள் அவ் விண்ணவர் ஏத்த பெயர்வு எய்தி
    தன் அருளால் கண் ஆயிரம் ஈந்தோன் சார்பு என்பர்
    கன்னியர் நாளும் துன்னமர் கண்ணார் கோயிலே
  

விளக்கம்:

தனது மனைவியை வஞ்சகமாக ஏமாற்றிய இந்திரன் மீது கோபம் கொண்ட கௌதம முனிவர், இந்திரனின் தன்மையை உலகத்தவர் அனைவரும் அறிந்து கொண்டு அவனை இகழும் வண்ணம் அவனது உடல் முழுவதிலும் பெண்குறிகள் தோன்ற வேண்டும் என்ற சாபத்தினை அளித்தார். இந்த சாபத்தின் விளைவால் அவனது உடல் முழுவதும் பெண்குறிகளின் அடையாளங்கள் தோன்ற இந்திரன் வெளியே தலைகாட்டுவதற்கு தயக்கம் அடைந்தான். பின்னர் இந்த சாபத்தினை நீக்கிக் கொள்ளும் பொருட்டு இந்த தலம் வந்தடைந்து இறைவனை வணங்கி தனது நிலையினை மாற்றுமாறு வேண்டினான். இறைவனது அருளால் அவனது உடலில் இருந்த பெண்குறி அடையாளங்கள் கண்களாக மாறின. இவ்வாறு கண்களாக மாறியதால் இந்த தலத்திற்கு கண்ணார்கோயில் என்றும் பெருமானுக்கு கண்ணாயிர நாதர் என்றும் பெயர் வந்ததாக தலபுராணம் கூறுகின்றது.  தங்களது தலைவன் இந்திரன் அடைந்த அவமானத்தின் வெளிப்பாடாக திகழ்ந்த அவனது உடலின் நிலை மாறவேண்டும் என்று தேவர்களும் இறைவனை வழிபட்டதாக சம்பந்தர் இந்த பாடலில் கூறுகின்றார். முனி=கௌதம முனிவர்; பெயர்தல்=அந்த இடத்தினை விட்டு விலகுதல்; சார்பு=சார்ந்து உறையும் இடம்; துன்னமர்=நெருங்கி வந்து; தண்ணருளால் என்ற சொல் தன்னருளால் என்று எதுகை கருதி மாற்றப்பட்டுள்ளது. தண் அருள்=குளிர்ந்த அருள்; துன்பங்களும் வருத்தமும் எவருக்கும் மனதினில் வெப்பம் ஏற்படுத்தும். இன்பங்கள் மனதினையும் உடலினையும் குளிர்ச்சியாக வைத்திருக்கும் என்பதால், இறைவனின் அருளால்  வருத்தம் நீங்கி உடலும் உள்ளமும் குளிர்ந்து இருக்கும் என்பதை உணர்த்த, தண் அருள் என்று இங்கே கூறுகின்றார்.      
 
பொழிப்புரை:

பண்டைய நாளில் கௌதம முனிவரால் இந்திரன் அடைந்த சாபம் தீர்க்கப்பட வேண்டும் என்று இந்திரனும் தேவர்களும் பின்னர் இறைவனை வேண்டிய போது, அவர்களது வேண்டுதலுக்கு இரங்கிய ஈசன், இந்திரனுக்கு அவமானம் தரும் வகையில் அவனது உடலெங்கும் விளங்கிய பெண்குறிகள், அழகிய ஆயிரம் கண்களாக மாறும் வண்ணம், இந்திரனது வருத்தத்தை நீக்கி  அவனது உடலும் உள்ளமும் குளிரும் வண்ணம், அருள் புரிந்தவன், கண்ணார்கோயில் திருத்தலத்தில் உறையும் ஈசன். அத்தகைய கருணை உள்ளம் கொண்ட பெருமான்; தலத்தில் உள்ள கன்னிப் பெண்கள், திருக்கோயிலை அடைந்து பெருமானை நெருங்கி வழிபடுகின்றனர். 

]]>
https://www.dinamani.com/specials/thinam-oru-thavaram/2019/may/30/130-தண்ணார்-திங்கள்---பாடல்-7-3162292.html
3162291 ஸ்பெஷல்ஸ் தினம் ஒரு தேவாரம் 130. தண்ணார் திங்கள் - பாடல் 6 என். வெங்கடேஸ்வரன் DIN Wednesday, May 29, 2019 12:00 AM +0530  

பாடல் 6:

    விண்ணவருக்காய் வேலையுள் நஞ்சம் விருப்பாக
    உண்ணவனைத் தேவர்க்கு அமுது ஈந்து எவ்வுலகிற்கும்
    கண்ணவனைக் கண்ணார் திகழ் கோயில் கனி தன்னை
    நண்ண வல்லார்கட்கு இல்லை நமன் பால் நடலையே

விளக்கம்:

அனைத்து உறுப்புகளிலும் கண்ணே மிகவும் அருமையான உறுப்பாக அனைவராலும் கருதப் படுகின்றது. கண் என்பது ஒரு மனிதனுக்கு இன்றியமையாத உறுப்பு. அதனால் தான் மிகவும் முக்கியமாக கருதுவோரை நமது கண் என்று அழைக்கின்றோம். பல திருமுறைப் பாடல்கள் இறைவன் நமக்கு கண் போன்று திகழ்கின்றான் என்று உணர்த்துகின்றன. அத்தகைய பாடல்கள் சிலவற்றை நாம் இங்கே காண்போம். பல்லவனீச்சரம் தலத்தின் மீது அருளிய பதிகத்து பாடலில் (1.65.2) இமையோர்களின் கண்களாய் விளங்குபவன் என்று கூறுகின்றார்.

    எண்ணார் எயில்கள் மூன்றும் சீறும் எந்தை பிரான் இமையோர்
    கண்ணாய் உலகம் காக்க நின்ற கண்ணுதல் நண்ணுமிடம்
    மண்ணார் சோலைக் கோல வண்டு வைகலும் தேன் அருந்தி
    பண்ணார் செய்யும் பட்டினத்துப் பல்லவனீச்சரமே  

உலகத்தில் வாழும் உயிர்கள் அனைத்திற்கும் கண் போன்றவன் என்று காறாயில் பதிகத்தின் பாடலில் (2.15.3) சம்பந்தர் கூறுகின்றார். ஏதம்=குற்றம், கேடு, துன்பம்; விண்=வீடுபேறு; எண்= எண்ணம்; எண்ணான்=உள்ளத்தில் நாம் எண்ணுவதற்கு ஏதுவாக எளிமையாக இருப்பவன்; நாம் அவனை நமது மனதினில் எண்ணி துதிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் இறைவன் மிகவும் எளிமையாக இருக்கின்றான். அவ்வாறு மிகவும் எளிமையாக இருக்கும் இறைவனை எண்ணித் துதிப்போர்க்கு இடர்கள் ஏற்படாது துன்பம் விளையாது என்று கூறுகின்றார்.   

    விண்ணானே விண்ணவர் ஏத்தி விரும்பும் சீர்
    மண்ணானே மண்ணிடை வாழும் உயிர்க்கு எல்லாம்
    கண்ணானே கடி பொழில் சூழ் திருக் காறாயில்
    எண்ணானே என்பவர் ஏதம் இலாதாரே  

பெருவேளூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் முதல் பாடலில் (3.64.1) உலகுக்கு கண்ணாகவும்  வழிபடும் அடியார்களின் கருத்தாகவும் பெருமான் விளங்குகின்றார் என்று சம்பந்தர் கூறுகின்றார்.  பேரருளாளன் என்று அழைக்கப்படும் பெருமான், விண்ணவர்களும் மன்னவர்களும் வியக்கும் வண்ணம் அடியார்களுக்கு, அருள் செய்கின்றார் என்று சம்பந்தர் கூறுகின்றார். அண்ணா= அண்ணாமலை;

    அண்ணாவும் .கழுக்குன்றும் ஆயமலை அவை வாழ்வார்
    விண்ணோரும் மண்ணோரும் வியந்து ஏத்த அருள் செய்வார்
    கண்ணாவார் உலகுக்குக் கருத்தானார் புரிம் எரித்த
    பெண் ஆணாம் பெருமானார் பெருவேளூர் பிரியாரே  

கண்ணாகவும் கண்ணின் மணியாகவும் பெருமான் இருப்பதாக அபப்ர் பிரான் திருவையாறு பதிகத்தின் பாடல் (1.13.7) ஒன்றினில் கூறுகின்றார். தனக்கு கண்ணாகவும், கண்ணின் மணியாகவும், தனது கருத்தாகவும், தான் நுகர்ந்து அனுபவிக்கும் பொருளாகவும், இருக்கும் பெருமானை, தனக்கு மிகவும் நெருங்கியவனாக இறைவன் உள்ளான் என்பதை வெளிப்படுத்தும் வண்ணம் அண்ணா என்று இறைவனை அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார். இவ்வாறு தனக்கு மிகவும் நெருங்கியவனாக இருக்கும் பெருமானுக்கு அடிமையாக அப்பர் பிரான் மாறியதில் வியப்பேதும் இல்லை. அருத்து=நுகர்ச்சி;      

    கண்ணானாய் மணியானாய் கருத்தானாய் அருத்தானாய்
    எண்ணானாய் எழுத்தானாய் எழுத்தினுக்கு ஓர் இயல்பானாய்
    விண்ணானாய் விண்ணிடையே புரம் எரித்த வேதியனே
    அண்ணான ஐயாறர்க்கு ஆளாய் நான் உய்ந்தேனே   

பாவநாசத் திருப்பதிகத்தின் பாடலில் (4.15.4) காண்பார் காணும் கண்ணான் என்று அப்பர் பிரான் பெருமானை குறிப்பிடுகின்றார். அரிமான் ஏற்று=ஆண் சிங்கம்; கறங்கும்=ஒலிக்கும்; காண்பார் காணும் கண்ணானை என்பதற்கு வேறொரு விதமாகவும் சுவையான விளக்கம் அளிக்கப் படுகின்றது. அன்புடன், திருக்கோயில்களில் உள்ள தனது உருவத்தைக் காணும்  அடியார்களின் கண்களாக செயல்பட்டு தனது உருவத்தினை அவர்களுக்கு காட்டும் பெருமான் என்று கூறுகின்றார். பெருமானின் அருளே கண்ணாகக் காணின் அல்லால் அவனது திருவுருவத்தை எவராலும் காண முடியாது என்று அப்பர் பிரான் கூறுவது நமது நினைவுக்கு வருகின்றது.   

    புறம்பயத்து எம் முத்தினைப் புகலூர் இலங்கு பொன்னினை
    உறைந்தை ஓங்கு சிராப்பள்ளி உலகம் விளங்கும் ஞாயிற்றைக்
    கறங்கும் அருவிக் கழுக்குன்றில் காண்பார் காணும் கண்ணானை
    அறம் சூழ் அதிகை வீரட்டது அரிமான் ஏற்றை அடைந்தேனே  

 
கயிலாயத் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.55.11) கண்ணாய் உலகுக்கு நின்றாய் நீயே என்று அப்பர் பிரான் இறைவனை அழைக்கின்றார். கண் என்பதற்கு பற்றுக்கோடு என்று பொருள் கொண்டு, உலகத்தவர் அனைவர்க்கும் பற்றுக்கோடாக இருப்பவன் பெருமான் என்று உணர்த்தப் படுகின்றது என்று பெரியோர்கள் விளக்கம் அளிக்கின்றனர். இறை விரல்=சிறிது நேரமே விரலை வைத்து மலையினை அழுத்தியவன்;  

    உண்ணாது உறங்காது இருந்தாய் போற்றி ஓதாதே வேதம்
         உணர்ந்தாய் போற்றி
    எண்ணா இலங்கைக் கோன் தன்னைப் போற்றி இறை விரலால்
         வைத்து உகந்த ஈசா போற்றி
    பண்ணார் இசையின் சொல் கேட்டாய் போற்றி பண்டே என்
         சிந்தை புகுந்தாய் போற்றி
    கண்ணாய் உலகுக்கு நின்றாய் போற்றி கயிலை மலையானே
         போற்றி போற்றி

நாட்டியத்தாங்குடி என்ற தலத்தின் மீது அருளிய பதிகத்தின் (7.15) பாடலில் சுந்தரர் பெருமானை கண்ணா என்று அழைக்கின்றார். தனக்கு கண் போன்று மிகவும் அருமையானவன் பெருமான் என்று இதன் மூலம் சுந்தரர் உணர்த்துகின்றார். குண்டாடி=மூர்க்கத் தன்மை; அன்பினால் மட்டுமே  நாம் எதையும் அடைய முடியும் என்பது சைவர்களின் கொள்கை. எனவே அன்பு வழியினைத் தவிர்த்து நாம் வேறு எந்த வகையிலும் செல்லலாகாது என்பதை சுந்தரர் இங்கே உணர்த்துகின்றார். தங்களது மூர்க்கத் தன்மையால் சமணர்களும் சாக்கியர்களும் தாங்கள் அடைய விரும்பும் பொருளினை அடைகின்றனர் என்பதை கேள்விப் பட்டாலும், நேரில் கண்டாலும் அதனை ஒரு பொருட்டாக கருதாமல், சிவநெறியாக உள்ள அன்பு வழியில் தான் செல்வேன் என்று சுந்தரர் இங்கே கூறுகின்றார்.    

    குண்டாடிச் சமண் சாக்கியப் பேய்கள் கொண்டார் ஆகிலும்
    கண்டாலும் கருதேன் எருது ஏறும் கண்ணா நின் அலது அறியேன்
    தொண்டாடித் தொழுவார் தொழக் கண்டு தொழுதேன் என் வினை போக
    நண்டாடும் வயல் தண்டலை வேலி நாட்டியத்தான்குடி நம்பீ

திருக்கடவூர் வீரட்டம் தலத்தின் மீது அருளிய பாடலில் (7.28.6), சுந்தரர் தனது கண்ணாகவும் கண்ணின் மணியாகவும் உள்ள பெருமான் என்று குறிப்பிட்டு, பெருமானைத் தவிர்த்து தனக்கு வேறு எவரையும் துணையாக கருத மாட்டேன் என்று கூறிகின்றார். வரு=சொல்ல வருகின்ற;

    மண் நீர் தீ வெளி ஆகாசம் வரு பூதங்களாகி மற்றும்
    பெண்ணோடு ஆண் அலியாகிப் பிறவா உரு ஆனவனே
    கண்ணார் உள் மணியே கடவூர் தனுள் வீரட்டத்து எம்
    அண்ணா என் அமுதே எனக்கு ஆர் துணை நீ அலதே

வேலை=கடல், இங்கே பாற்கடல்; உண்ணவன்=உண்டவன்; நடலை=துன்பம்; இந்த பாடலில் எமதருமனால் ஏற்படும் துன்பம் ஏதும் இல்லை என்று சம்பந்தர் கூறுகின்றார். பல திருமுறைப் பாடல்களில் நரகத்தில் விளையும் துன்பங்களிலிருந்து பெருமானை நோக்கி செய்யப்படும் வழிபாடு தவிர்க்கும் என்று கூறப்படுகின்றதே தவிர இறப்பு தவிர்க்கப்படும் என்றும் எங்கும் சொல்லப் படவில்லை. மனிதராய் பிறந்த அனைவர்க்கும், ஏன் உலகத்தில் பிறந்த எந்த உயிருக்கும், இறப்பு என்பது நிச்சயம், எனவே அந்த இறப்பினை எவராலும் தவிர்க்க இயலாது. பொதுவாக எந்த உயிரும் உடலிலிருந்து பிரிந்த பின்னர், சூக்கும உடலுடன் நரகத்திற்கும் சொர்க்கத்திற்கும் எடுத்து  செல்லப்பட்டு, ஆங்கே இன்ப துன்பங்களை அனுபவித்து தங்களது வினையின் ஒரு பகுதியை கழித்துக் கொள்கின்றன. பெருமானின் அடியார்களை அவ்வாறு நரகத்திற்கு செல்ல விடாமல் பெருமான் பாதுகாத்து சிவலோகத்திற்கு அழைத்துச் செல்வான் என்பதே திருமுறை ஆசிரியர்கள்  உணர்த்தும் பொருள். இதனை நாம் சரியாக புரிந்து கொள்ள வேண்டும்.   .  
 
பொழிப்புரை:

பாற்கடலிலிருந்து பொங்கி எழுந்த கொடிய விடத்தின் தாக்கத்திலிருந்து காப்பாற்றும் பொருட்டு, மிகுந்த விருப்பத்துடன் நஞ்சினை உண்ட பெருமான், அவ்வாறு நஞ்சினை தான் உட்கொண்டு தேவர்களுக்கு அமுதம் அளித்தவன் ஆவான். அவன் உலகினுக்கு, உலகினில் வாழும் உயிர்கள் அனைத்திற்கும் கண் போன்று மிகவும் அருமையானவனாகத் திகழ்கின்றான். அத்தகைய பெருமான் கண்ணார்கோயில் தலத்தில், நாம் அனைவரும் அவனை வணங்கி, அந்த வணக்கத்தின் பலனை அனுபவிக்கும் பொருட்டு, இனிய கனியாக திகழ்கின்றான். அந்த இனிய கனியினை நெருங்கித் தொழுது வணங்கும் அடியார்களை, இயமனால் ஏற்படும் துன்பங்கள் எவையும் அணுகாது.   

 

]]>
https://www.dinamani.com/specials/thinam-oru-thavaram/2019/may/29/130-தண்ணார்-திங்கள்---பாடல்-6-3162291.html
3162280 ஸ்பெஷல்ஸ் தினம் ஒரு தேவாரம் 130. தண்ணார் திங்கள் - பாடல் 5 என். வெங்கடேஸ்வரன் DIN Tuesday, May 28, 2019 12:00 AM +0530
பாடல் 5:

    மறு மாண் உருவாய் மற்று இணை இன்றி வானோரைச்
    செறு மாவலி பால் சென்று உலகெல்லாம் அளவிட்ட
    குறு மாண் உருவன் தற்குறியாகக் கொண்டாடும்
    கறு மா கண்டன் மேயது கண்ணார் கோயிலே

விளக்கம்:

வாமனர் வணங்கியதால் இந்த தலத்திற்கு குறுமாணிக்குடி என்ற பெயரும் உள்ளது. குறு மாண் உருவன்=குள்ளமான பிரமச்சாரி உருவம் எடுத்த திருமால்; தற்குறி=தன்னால் குறிப்பிட்டு வணங்கப் படும் அடையாளம்; இந்த தலத்தில் உள்ள இலிங்கம் வாமனரால் தாபிக்கப் பட்டதாக கருதப் படுகின்றது. இந்த தலத்தினை அடுத்துள்ள ஊர் குறுமாணிக்குடி என்று இன்றும் அழைக்கப் படுகின்றது. மறு=குற்றம்; உருவத்தில் சிறியவனாக, குள்ளனாக மூன்றடி மண் இரந்த பின்னர், அவ்வாறு பெற்ற மூன்றடிகளை அளக்கும் தருவாயில் நெடுமாலாக வளர்ந்தது குற்றமுடைய  வஞ்சக செயலாக இங்கே குறிப்பிடப்படுகின்றது. இவ்வாறு குற்றமுடைய வாமனன் என்று கூறுவது நமக்கு பெரியாழ்வாரின் பாசுரம் ஒன்றினை நினைவூட்டுகின்றது.

திரிவிக்ரமனாக வளர்ந்து இரண்டு அடிகளால் மூவுலகத்தையும் அளந்து மூன்றாவது அடியினை  மாவலியின் தலை மேல் வைத்து அழுத்தியதை மாயச்செயல் என்று மாவலியின் மகன் நமுசி கூறியதாக பெரியாழ்வார் இந்த பாசுரத்தில் கூறுகின்றார். கடலூர் அருகில் உள்ள திருமாணிக்குழி  தலத்தில் பெருமானின் சன்னதியில் நமக்கு இடது புறம் தோன்றும் சுவற்றில், திருமால் மாவலியிடம் யாசிப்பது, நெடுமாலாக வளர்வது, மூன்றடி அளப்பது, ஒரு அரக்கனுடன் போரிட்டு அவனை வானில் சுழற்றுவது, பெருமானை வழிபடுவது ஆகிய சித்திரங்கள் பொறிக்கப் பட்டுள்ளதை நாம் கண்டு மகிழலாம். முந்தைய வண்ணம், மூன்றடி யாசகம் கேட்டபோது இருந்த குள்ளமான உருவத்துடன் மூன்றடிகளை அளக்காமல், மாயமாக உயர்ந்த திருவிக்ரமன்  உருவத்தால் மூன்றடிகள் அளந்த மாயத்தினை புரிந்து கொள்ளாமல் தனது தந்தை ஏமாந்து விட்டதாக அரக்கன் கூறுவதாக அமைந்த பாசுரம்.

    என்னிது மாயம் என்னப்பன் அறிந்திலன்  
    முந்தைய வண்ணமே கொண்டு அளவாய் என்ன
    மன்னு நமுசியை வானில் சுழற்றிய
    மின்னு முடியனே அச்சோவச்சோ
    வேங்கடவாணனே அச்சோவச்சோ

அசுரர்களில் சற்று மாறுபட்டவனாக இருந்தவன் மாவலி. வலிமையுடைவனாக இருந்தாலும்   மக்களை அன்பால் அரவணைத்து அறம் தவறாமல் ஆட்சி புரிந்தவன்; வேதங்களை மதித்து  வேள்விகளை வளர்த்து இறையுணர்வுடன் திகழ்ந்தவன். எனவே தான் மற்றிணை இன்றி வாழ்ந்தவன் என்று சம்பந்தர் இங்கே குறிப்பிடுகின்றார். மற்றிணை இன்றி என்ற தொடரினை திருமாலுக்கு அடைமொழியாக கொண்டு, தனது வாமன உருவத்திற்கு இணையான அழகிய உருவம் வேறேதும் இல்லாத வண்ணம் தோன்றிய பெருமாள் என்றும் பொருள் கொள்ளலாம்.  தேவர்களை வென்ற மாவலியின் செயல் இங்கே வானோரைச் செறு மாவலி என்றார் தொடரால் உணர்த்தப் படுகின்றது.  செறு என்ற சொல்லுக்கு வருத்திய என்றும் பொருள் கூறப்படுகின்றது. இந்த பாடலில் கற்றவனாக திகழ்ந்த வாமனன் பெருமானை வணங்கிய செயல் உணர்த்தப் படுகின்றது.             
   
பொழிப்புரை:

தனக்கு இணையாக வேறு எந்த அரக்கரும் இலாத வகையில் அறம் தவறாமல் ஆட்சி நடத்தியும் வானோரை வெற்றி கொண்டு வலிமையுடனும் திகழ்ந்த மாவலியை, வாமனனாக அவதாரம் எடுத்து குற்றமான வஞ்சக முறையில் நெடிது வளர்ந்து இரண்டு அடிகளால் மூன்று உலகினையும் அளந்த பிரம்மச்சாரி சிறுவன் திருமால், தான் பெருமான் பால் கொண்டிருந்த பக்தியின் அடையாளமாக, சிவலிங்கம் தாபித்து வழிபட்ட திருக்கோயில், நஞ்சினைத் தேக்கியதால் கருமை நிறத்துடன் திகழும் பெரிய கழுத்தினைக் கொண்ட பெருமான் பொருந்தி உறையும்  தலம் கண்ணார் கோயிலாகும்.

 

]]>
https://www.dinamani.com/specials/thinam-oru-thavaram/2019/may/28/130-தண்ணார்-திங்கள்---பாடல்-5-3162280.html
3162279 ஸ்பெஷல்ஸ் தினம் ஒரு தேவாரம் 130. தண்ணார் திங்கள் - பாடல் 4 என். வெங்கடேஸ்வரன் DIN Monday, May 27, 2019 12:00 AM +0530
பாடல் 4:

    தரு வளர் கானம் தங்கிய துங்கப் பெருவேழம்
    மரு வளர் கோதையை அஞ்ச உரித்து மறை நால்வர்க்கு
    உரு வளர் ஆலநீழல் அமர்ந்து ஈங்கு உரை செய்தார்
    கரு வளர் கண்ணார்கோயில் அடைந்தோர் கற்றோரே

விளக்கம்:

மருவளர்=நறுமணம் வளர்கின்ற; இயல்பாகவே தேவியின் கூந்தல் நறுமணம் உடையது என்று சம்பந்தர் இங்கே கூறுகின்றார். இயல்பாகவே நறுமணம் உடைய கூந்தல் என்று சம்பந்தர் கூறுவது நமக்கு திருவிளையாடல் புராண நிகழ்ச்சியை நினைவூட்டுகின்றது. பல தேவாரப் பாடல்களில், பிராட்டியின் கூந்தல் இயற்கையாகவே நறுமணம் வாய்ந்தது என்று சொல்லப் படுகின்றது. அத்தகைய பாடல்கள் சிலவற்றை நாம் இங்கே காண்போம்.

திருச்செம்பொன்பள்ளி தலத்தில் உறையும் தேவியின் திருநாமம் மருவார்குழலி என்பதாகும். மணம் பொருந்திய கூந்தலை உடையவள் என்பது இதன் பொருள். இந்த தலத்தின் மீது அருளிய பதிகத்தின் முதல் பாடலில் (1.25.1) மருவார் குழலி என்று குறிப்பிட்டு, திருஞானசம்பந்தர் மணம் கமழும் கூந்தலை உடைய தேவியை ஒரு பாகத்தில் வைத்தவன் என்று இறைவனை குறிப்பிடுகின்றார். மருவார் குழலி என்ற தொடர் பல தேவாரப் பாடல்களில் மூவர் பெருமானர்களால் குறிப்பிடப் படுகின்றது.

    மருவார் குழலி மாதோர் பாகமாய்த்
    திருவார் செம்பொன்பள்ளி மேவிய
    கருவார் கண்டத்து ஈசன் கழல்களை
    மருவாதார் மேல் மன்னும் பாவமே

புறவம் (சீர்காழியின் பன்னிரண்டு பெயர்களில் ஒன்று) தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடல் ஒன்றினில் (1.74.3) மணம் நிறைந்த கூந்தலை உடைய தேவி காணுமாறு சுடுகாட்டில் நடனம் ஆடியவன் என்று பெருமானை திருஞான சம்பந்தர் குறிப்பிடுகின்றார். உதரபந்தம்=பூதங்கள் இடுப்பில் அணியும் ஒருவகை ஆபரணம்

    பந்தம் உடைய பூதம் பாட பாதம் சிலம்பார்க்கக்
    கந்தம் மல்கு குழலி காண கரிகாட்டு எரி ஆடி
    அந்தண் கடல் சூழ்ந்த அழகார் புறவம் பதியா அமர்வெய்தி
    எந்தம் பெருமான் இமையோர் ஏத்த உமையோடு இருந்தானே

தில்லைத் திருத்தலத்தின் மீது அருளிய பதிகத்தின் இரண்டாவது பாடலில் (3.1.2) நறுமணம் கமழும் கூந்தலை உடைய அன்னை என்று சம்பந்தர் குறிப்பிடுகின்றார். நுதல்=நெற்றி; கொட்டம்=நறுமணம்

    கொட்டமே கமழும் குழலாளொடு கூடினாய் எருது ஏறினாய் நுதல்
    பட்டமே புனைவாய் இசை பாடுவ பாரிடமா
    நட்டமே நவில்வாய் மறையோர் தில்லை நல்லவர் பிரியாத சிற்றம்பலம்
    இட்டமா உறைவாய் இவை மேவியது என்னை கொலோ

விசயமங்கை தலத்தின் அருளிய பதிகத்தின் (3.17) முதல் பாடலில் அம்மையை மருவமர் குழலி என்று திருஞானசம்பந்தர் அழைக்கின்றார். மரு=வாசனை. இயற்கையாகவே நறுமணம் சென்று அமரும் கூந்தலை உடைய தேவியைத் தனது உடலின் ஒரு பாகத்தில் வைத்தவர் என்று பெருமானை குறிப்பிடுகின்றார்.

    மருவமர் குழல் உமை பங்கர் வார்சடை
    அரவமர் கொள்கை எம் அடிகள் கோயிலாம்
    குரவமர் சுரபுன்னை கோங்கு வேங்கைகள்
    விரவிய பொழில் அணி விசயமங்கையே

சண்பை நகர் (சீர்காழியின் பன்னிரண்டு பெயர்களில் ஒன்று) மீது அருளிய பதிகத்தின் முதல் பாடலில் (3.75.1) நறுமணம் கமழும் கூந்தலை உடைய தேவி என்று உமையன்னையை சம்பந்தர் குறிப்பிடுகின்றார். சந்தம் என்ற சொல்லுக்கு நறுமணம் அழகு என்று இரண்டு பொருள்களும் பொருந்தும்.

    எந்தமது சிந்தை பிரியாத பெருமான் என இறைஞ்சி இமையோர்
    வந்து துதி செய்ய வளர் தூபமொடு தீப மலி வாய்மை அதனால்
    அந்தி அமர் சந்தி பல அர்ச்சனைகள் செய்ய அமர்கின்ற அழகன்
    சந்த மலி குந்தள நன் மாதினொடு மேவு பதி சண்பை நகரே

வலிவலம் தலத்தின் மீது அருளிய பாடலில் (1.123..6) ஞானசம்பந்தர் தேவியை நறுமணம் மிகுந்த  கூந்தலை உடையவள் என்று குறிப்பிடுகின்றார். விரவது=கலத்தல்; இந்த பாடலில் பெருமான் உமை அன்னையுடன் கூடி இருப்பது போன்று தோற்றம் தருவது, நிலவுலகம் மற்றுமுள்ள பல உலகங்களில் வாழும் உயிர்களில் ஆணும் பெண்ணும் ஒருவருக்கொருவர் புணர்ந்து தத்தம் இனங்களைப் பெருக்கும் முயற்சியில் ஈடுபட வேண்டும் என்பதை முன்னிட்டே என்று சம்பந்தர்  கூறுகின்றார்.    

    தரை முதலினில் உயிர் புணர் தகை மிக
    விரை மலி குழல் உமையொடு விரவது செய்து   
    நரை திரை கேடு தகை அது அருளினன் எழில்
    வரை திகழ் மதில் வலிவலம் உறை இறையே

அருணை வடிவேல் முதலியார் அவர்கள், உயிர்கள் போகத்தை விரும்பி அனுபவிக்க வேண்டும் என்பதற்காக பெருமான் போகவடிவம் கொண்டு போகி போல் நிற்கின்றாரே அன்றி அவர் உண்மையில் போகம் அனுபவிப்பவர் அல்லர் என்று விளக்கம் கூறுவார். இதே கருத்து திருச்சாழல் பதிகத்தில் மணிவாசகரால் உணர்த்தப் படுவதையும் நாம் கீழ்க்கண்ட பாடலில் காணலாம். பெருமான் பெண்ணைத் தனது உடலில் ஏற்றுக் கொண்டிராவிடில் உலகத்து உயிர்கள் எல்லாம் துறவு மேற்கொண்டு யோகத்தில் புகுவர்; அதனால் உலகம் வளராது நிற்கும்.  எனவே போகத்தில் ஆழ்ந்திருப்பது போன்று தோற்றத்தை நமக்கு பெருமான் நல்குகின்றான் என்பதே இந்த பாடல் உணர்த்தும் செய்தியாகும்.

    தென்பால் உகந்தாடும் தில்லைச் சிற்றம்பலவன்    
    பெண் பால் உகந்தான் பெரும்பித்தன் காணேடி
    பெண்பால் உகந்திலனேல் பேதாய் இருநிலத்தோர்
    விண்பால் யோகு எய்தி வீடுவர் காண் சாழலோ

மண்ணுலகில் வாழும் மாந்தர்கள் இன்பம் துய்க்காமல் யோகியராக மாறினால், அவர்களால் ஏற்படவிருந்த இனப்பெருக்கம் தடைப்பட்டுவிடும். இனப்பெருக்கம் தடைப்பட்டால் வினைகளுடன்  பிணைந்திருக்கும் உயிர்கள் மீண்டும் பிறப்பெடுத்து தங்களது வினைகளை அனுபவித்துக் கழித்துக் கொள்ள தேவையான உடல்கள் இல்லாமல் போய்விடும். எனவே உடல்களை தோற்றுவிக்கும் இனப்பெருக்கம் தொடர்ந்து நடைபெற வேண்டும். எனவே தான் இனப்பெருக்கம் தொடர்ந்து நடைபெறும் பொருட்டு, மனிதர்கள் இன்பம் துய்க்கும் வழியில் ஈடுபடவேண்டும் என்பதற்காக, இறைவனும் தான் போகம் துய்ப்பது போன்று காட்சி அளிக்கின்றான்.  மனிதப் பிறவி தான் அனைத்துப் பிறவிகளிலும் உயர்ந்தது என்று சொல்வதன் காரணம், மனிதப் பிறவி தான், உயிர் உண்மையான மெய்ப்பொருளை அறிந்து கொண்டு உலக இச்சைகளிலிருந்து விடுபட்டு இறைவனைச் சென்று அடைய வழி வகுக்கும் பிறவியாகும். இந்த மனிதப் பிறவியின் பெருக்கம் தடைப்பட்டால், எண்ணற்ற உயிர்கள் என்றென்றும் மலங்களுடன் பிணிக்கப்பட்டு விடுதலை அடைய முடியாமல் போய்விடும். மேலும் உயிர்கள் முக்தி நிலை அடைந்து தன்னுடன் வந்து இணைந்து என்றென்றும் பேரின்பத்தில் ஆழ்ந்திருக்க வேண்டும் என்ற இறைவனின் விருப்பமும் ஈடேறாமல் போய்விடும். எனவே, அத்தகைய உயிர்கள் பொருத்தப் படுவதற்கான தகுந்த உடல்கள் இனப்பெருக்கத்தின் மூலம் தான் உருவாக்கப் பட முடியும் என்பதால், உயிர்கள் போகிகளாக வாழ்ந்து இன்பம் துய்க்கவேண்டிய வேண்டிய கட்டாயம் உள்ளது. எனவே தான் இறைவன் பிராட்டியுடன் கூடியிருந்து, உலகம் தொடர்ந்து வளரும் பொருட்டு நமக்கு முன்மாதிரியாக விளங்குகின்றான் என்ற செய்தி மேற்கண்ட திருவாசகப் பாடலில் உணர்த்தப் படுகின்றது.  
   
இயற்கையிலேயே ஆசாபாசங்களிலிருந்து விடுபட்ட இறைவன் மங்கையோடு கூடி இருந்தாலும் யோகம் செய்பவனாகவே விளங்குகின்றான் என்பதை கருவூர்த் தேவர் ஒரு திருவிசைப்பா பாடலில் விளக்குகின்றார்.

    மங்கையோடு இருந்தே யோகு செய்வானை வளர் இளம் திங்களை முடிமேல்
    கங்கையோடு அணியும் கடவுளைக் கங்கை கொண்ட சோளேச்சரத்தானை
    அங்கை ஓடு ஏந்திப் பலி திரி கருவூர் அறைந்த சொல் மாலையால் ஆழிச்
    செங்கையோடு உலகில் அரசு வீற்றிருந்து திளைப்பதும் சிவனருள் கடலே

பெருவேளூர் தலத்தின் மீது பாடிய பதிகத்தின் பாடலில் (4.60.3) அப்பர் பிரான் நறுமணம் வீசுவதும்  மென்மையானதும் ஆகிய கூந்தலை உடைய நங்கை என்று பார்வதி தேவியை குறிப்பிடுகின்றார். குறவி=குறத்தியாகிய வள்ளி அம்மை; வள்ளியம்மையின் தோள்களைக் புணர்ந்து தனது அன்பினை வெளிப்படுத்தியவன் என்று முருகனைக் குறிப்பிட்ட அப்பர் பிரானுக்கு, உமையம்மைக்குத் தனது உடலின் ஒரு பாகத்தைக் கொடுத்து தனது அன்பினை வெளிப்படுத்திய பெருமானின் செய்கை நினைவுக்கு வந்தது போலும். நங்கையோர் பாகத்தன் என்று பெருமானை இந்த பாடலில் குறிப்பிடுகின்றார்.   

    குறவி தோள் மணந்த செல்வக் குமரவேள் தாதை என்றும்
    நறவு இள மென்கூந்தல் நங்கையோர் பாகத்தானைப்
    பிறவியை மாற்றுவானைப் பெருவேளூர் பேணினானை
    உறவினால் வல்லனாகி உணருமாறு உணர்த்துவேனே

பிராட்டியின் கூந்தல் தெய்வீக நறுமணம் வீசுகின்றது என்று குறிப்பிடும் அப்பர் பிரான் அந்த கூந்தலை அன்றலர்ந்த நறுமணம் வீசும் மலர்கள் அலங்கரிக்கின்றன என்று கூறும் பாடல் (6.4.9),  அதிகை தலத்தின் மீது அருளிய திருத்தாண்டகப் பாடலாகும். கோசரம்=தேசம்: நாண்மலர்=அன்று அலர்ந்த மலர்கள், அந்நாளில் மலர்ந்த பூக்கள்: செம்பொன்னினால் செய்தது போன்று அழகுடன் செம்பட்டை நிறத்தினில் உள்ள சடை கொண்டவன் என்று பெருமானை குறிப்பிடும் அப்பர் பிரானுக்கு பிராட்டியின் கூந்தலுக்கு உரிய இயற்கை நறுமணத்தினை உணர்த்துவது பொருத்தம் என்று தோன்றியது போலும்.

    செம்பொனால் செய்து அழகு பெய்தால் போலும் செஞ்சடை
           எம் பெருமானே தெய்வ நாறும்
    வம்பின் நாண் மலர்க் கூந்தல் உமையாள் காதல் மணவாளனே
           வலங்கை  மழுவாளனே
    நம்பனே நான்மறைகள் தொழ நின்றானே நடுங்காதார் புரம்
           மூன்றும் நடுங்கச் செற்ற
    அம்பனே அண்ட கோசரத்துளானே அவனாகில் அதிகை
            வீரட்டனாமே  

எறும்பியூர் தலத்தின் மீது அருளிய, பன்னிய செந்தமிழ் என்று தொடங்கும் பதிகத்தின் பாடலில் (6.91.3) அப்பர் பிரான் மலர்களின் நறுமணத்தையும் வென்ற நறுமணம் கொண்ட கூந்தலை உடைய அன்னை என்று தேவியை குறிப்பிடுகின்றார். கடுஞ்சுடர்=பேரொளியை உடைய விளக்கு; படிந்து=நிலத்தில் வீழ்ந்து; ஒரு=ஒப்பற்ற; ஓத வேலி=அலைகளையுடைய கடல்; நிறை=மிகுதியாய் காணப்படுகின்ற; மருவை வென்ற=மலர்களின் மணத்தை வென்ற நறுமணம்; நறுங்குழல் மங்கை என்பது தலத்து இறைவியின் திருநாமம். இந்த பெயர் அப்பர் பிரானுக்கு, இயற்கையாகவே நறுமணம் வீசும் தேவியின் கூந்தலை நினைவுபடுத்தியது போலும். இந்த பாடலில் அப்பர் பிரான் மலர்களின் நறுமணத்தை வென்ற நறுமணம் உடைய கூந்தலை உடையவள் தேவி என்று கூறுகின்றார். தெய்வீக மணம் கமழும் கூந்தல் என்பதால் இயற்கையில் மணம் வாய்ந்த கூந்தலாக, வேறு நறுமணப் பொருட்களோ வாசனை மலர்களோ சேர்க்க வேண்டிய அவசியம் இல்லாத கூந்தலாக இருந்த தன்மை இங்கே குறிப்பிடப்படுகின்றது.

    கருவை என் மனத்திருந்த கருத்தை ஞானக் கடும் சுடரைப் படிந்து
          கிடந்து அமரர் ஏத்தும்
    உருவை அண்டத்து ஒரு முதலை ஓத வேலி உலகின் நிறை தொழில்
           இறுதி நடுவாய் நின்ற
    மருவை வென்ற குழல் மடவாள் பாகம் வைத்த மயானத்து மாசிலா
           மணியை  வாசத்
     திரு எறும்பியூர் மலை மேல் மாணிக்கத்தைச் செழுஞ்சுடரைச்
            சென்று அடையப்  பெற்றேன் நானே

திருக்கோளிலி தலத்தின் மீது பதிகத்தின் பாடலில் (7.20.7) சுந்தரர் நறுமணம் உடைய கூந்தல்  கொண்ட உமையம்மை என்று குறிப்பிடும் வண்ணம் வம்பமரும் குழலாள் என்று கூறுவதை நாம்  காணலாம். தன்னிடத்தில் அன்பு உடையவனே என்று பெருமானை அழைத்து, பெருமானே உன்னை அல்லால் வேறு எவரொருவர் எனக்கு உதவி செயவல்லார்,  நீயே குண்டையூரில் இந்த நெல்மலையினை திருவாரூர் மாற்றுவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று சுந்தரர் கோரும் பாடல்.

    எம்பெருமான் உனையே நினைத்து ஏத்துவன் எப்பொழுதும்
    வம்பமரும் குழலாள் ஒரு பாகம் அமர்ந்தவனே
    செம்பொனின் மாளிகை சூழ் திருகோளிலி எம்பெருமான்
    அன்பதுவே அடியேற்கு அவை அட்டித் தரப் பணியே  

திருப்பாண்டிக்கொடுமுடி தலத்தின் மீது அருளிய நமச்சிவாயப் பதிகத்தின் பாடல் ஒன்றினில் (7.48.8) சுந்தரர் தேவியை மணம் வீசும் குழலாள் என்று கூறுகின்றார். வம்பு=நறுமணம்; இந்த பாடலிலும் பெருமானின் சடை மற்றும் பிராட்டியின் கூந்தல் குறிப்பிடப்பட்டு, அவற்றின் சிறப்புகள் உணர்த்தப் படுகின்றன. கோலுதல்=வளைத்தல்; திரிபுரங்களை எரிப்பதற்காக பெருமான் வில்லை வளைத்த நிகழ்ச்சி இங்கே குறிப்பிடப்படுகின்றது.

    செம்பொன் நேர் சடையாய் திரிபுரம் தீ எழச் சிலை கோலினாய்
    வம்புலாம் குழலாளைப் பாகம் அமர்ந்து காவிரிக் கோட்டைக்
    கொம்பின் மேல் குயில் கூவ மாமயில் ஆடு பாண்டிக் கொடுமுடி
    நம்பனே உனை நான் மறக்கினும் சொல்லும் நா நமச்சிவாயவே

பிராட்டியின் கூந்தல் இயற்கை மணம் வாய்ந்தது எனும் தேவாரப் பாடல் குறிப்புகள் நமக்கு திருவிளையாடல் புராண நிகழ்ச்சியை நினைவூட்டுகின்றன. பரஞ்சோதி முனிவர் தாம் அருளிய திருவிளையாடல் புராணத்தில், இந்த நிகழ்ச்சியை, தருமிக்கு பொற்கிழி அளித்த படலம் மற்றும் கீரனை கரையேற்றிய படலம் ஆகிய இரண்டு படலங்களில் கூறுகின்றார். பெருமான் தருமிக்கு எழுதிக் கொடுத்த பாடல் குறுந்தொகை எனப்படும் சங்க இலக்கியத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. இறைவன் எழுதிக் கொடுத்த பாடல் இங்கே கொடுக்கப் பட்டுள்ளது.

    கொங்கு தேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி
    காமம் செப்பாது கண்டது மொழிமோ
    பயிலியது கெழீஇய நட்பின் மயிலியல்
    செறியெயிற்று அரிவை கூந்தலின்
    நறியவும் உளவோ நீ அறியும் பூவே

வண்டினை நோக்கி பாடுவதாக அமைந்த இந்த பாடலின் கருத்து; நறுமணத்தினை ஆராய்ந்து திரியும் வாழ்க்கையை உடைய அழகிய சிறகுகளை உடைய வண்டே, பயிற்சி மிக்க நட்பும் மயில் போன்ற சாயலும் நெருங்கிய பற்களும் உடைய எனது தலைவியின் கூந்தலில் வீசும் நறுமணத்தினை விடவும் அதிகமான நறுமணம் கொண்ட பூவினை நீ இதுவரை கண்டதுண்டோ. எனது கேள்விக்கு விருப்பு வெறுப்பு ஏதும் இன்றி உண்மையான பதிலை நீ கூறுவாயாக. இந்த பாடல் பொருட்குற்றம் உள்ள பாடல் என்று நக்கீரன் உரைக்க, இறைவன் நேரில் தோன்றி, நக்கீரனிடம், நீ வணங்கும் ஞானப் பூங்கோதையின் (திருக்காளத்தி தலத்து அம்மை) கூந்தலுக்கு இயற்கையில் நறுமணம் இல்லையா என்று கேட்க, நக்கீரன் இல்லை என்று முதலில் பதில் உரைத்தார். பின்னர் தான் தவறு செய்தேன் என்று ஒப்புக்கொண்டு, கயிலை பாதி காளத்தி பாதி அந்தாதி, கோப பிரசாதம், திருவெழுகூற்றிருக்கை ஆகிய பாடல்களை (பதினோராம் திருமுறை) பாடியதாகவும் பரஞ்சோதி முனிவர் கூறுகின்றார்.

தரு=மரங்கள்; தருவளர்=மரங்கள் வளர்கின்ற; கானம்=காடு; துங்க=உயர்ந்த; வேழம்=யானை;  உருவளர் ஆல்=உயர்ந்து வளரும் ஆலமரம்; கரு=புகழ், மேன்மை; இந்த பாடலில் பெருமானை அடைந்து பணியும் மனிதர்களே கற்றோர் என்று சம்பந்தர் கூறுகின்றார். எனவே ஏனையோரை அவர் கற்றவராக மதிக்கவில்லை என்பது இதனின்று புலனாகின்றது. கற்றதனால் ஆய பயன் நற்றாள் தொழல் என்று தானே வள்ளுவப் பெருந்தகையும் கூறுகின்றார். பெருமான் தோலுரித்த யானை கயாசுரன் என்ற அரக்கன் என்றாலும் யானையின் பொதுத்தன்மை குறித்து காட்டில் வாழும் யானை என்று இங்கே குறிப்பிடுகின்றார். முதல் பாடலில் இந்த தலத்து இறைவனை வணங்கித் தொழும் அடியார்கள் அடையவிருக்கும் பலனை குறிப்பிடும் சம்பந்தர், இரண்டாவது மூன்றாவது பாடல்களில் தலத்தின் இயற்கை அழகினை குறிப்பிட்டு நம்மை இந்த தலத்திற்க்கு செல்லுமாறு ஊக்குவிக்கும் சம்பந்தர், இந்த பாடலில் தலத்து பெருமானை வணங்குவோரே கற்றவர்களாக கருதப் படுவார்கள் என்று கூறுகின்றார்.   
       
பொழிப்புரை:

மரங்கள் அடர்ந்த கானகத்தில் வாழ்வதும் சிறந்ததும் பெரியதும் ஆகிய யானையின் தோலை உரித்து அதனை, உமையன்னை அஞ்சும் வண்ணம் தனது உடலின் மீது போர்த்துக் கொண்ட பெருமான், சனகர் சனந்தனர் சனத்குமாரர் சனாதனர் ஆகிய நான்கு முனிவர்க்கும், உயர்ந்து வளரும் ஆலமரத்தின் நிழலில் அமர்ந்த வண்ணம், வேதங்களின் பொருளாகிய அறத்தினை உணர்த்தினார்.  இத்தகைய பெருமையை உடைய பெருமான் உறைவதும், நாளும் புகழ் வளர்ந்து திகழ்வதும் ஆகிய கண்ணார்கோயில் திருக்கோயிலை அடைந்து பெருமானைப் பணியும் மனிதர்களே, கற்றவர்களாக கருதப் படுவார்கள்.  

   

]]>
https://www.dinamani.com/specials/thinam-oru-thavaram/2019/may/27/130-தண்ணார்-திங்கள்---பாடல்-4-3162279.html
3162278 ஸ்பெஷல்ஸ் தினம் ஒரு தேவாரம் 130. தண்ணார் திங்கள் - பாடல் 3 என். வெங்கடேஸ்வரன் DIN Sunday, May 26, 2019 12:00 AM +0530

பாடல் 3:

    பல்லியல் பாணிப் பாரிடம் ஏத்தப் படு கானின்
    எல்லி நடம் செய் ஈசன் எம்மான் தன்னிடம் என்பர்
    கொல்லையின் முல்லை மல்லிகை மௌவல் கொடி பின்னிக்
    கல்லியல் இஞ்சி மஞ்சு அமர் கண்ணார் கோயிலே

விளக்கம்:

பாணி என்ற வடமொழிச் சொல் பொதுவாக கைகள் என்று பொருள் தந்தாலும் இங்கே கைகளால்  இசைக்கப்படும் தாளத்தை குறிப்பிடுகின்றது. பாரிடம்=பூத கணங்கள்; எல்லி=இரவு; கல்லியல் இஞ்சி=கல் மதில்; மஞ்சு=மேகம்; படுகான்=பிணங்கள் இடப்படும் சுடுகாடு; கொல்லை=முல்லை நிலம், காடும் காடு சார்ந்த இடம்; சென்ற பாடலில் அடியார்கள் இறைவன் சன்னதியில் பாடுவதை குறிப்பிட்ட சம்பந்தருக்கு இறைவனின் நடனத்திற்கு பூதகணங்கள் பாடுவது நினைவுக்கு வந்தது போலும்.  இந்த பாடலில் பூதகணங்கள் நடமாட சுடுகாட்டினில் இறைவன் ஆடும் நடனத்தை குறிப்பிடுகின்றார். மௌவல்=காட்டு மல்லிகை    

பொழிப்புரை:

பெருமானைப் புகழ்ந்து, பலவகையான பாடல்களை பூதகணங்கள் தங்களது கைகளில் தாளம் இட்டவாறு பாட, அத்தகைய பாடல்களுக்கு ஏற்ப, பிணங்கள் இடப்படும் சுடுகாட்டினில் நடமாடும் பெருமான், எங்கள் தலைவன், உறையும் இடம் கண்ணார்கோயில் என்று கூறுவார்கள். முல்லை நிலத்து பூக்களாகிய முல்லை, மல்லிகை, காட்டு மல்லிகை ஆகிய கொடிகள் ஒன்றுடன் ஒன்று பிணைந்து செழிப்புடன் வளரும் சோலைகள் கொண்ட கண்ணார்கோயில் வானளாவ மேகத்தைத் தொடும் வண்ணம் உயர்ந்த கல் மதில்கள் கொண்டதாகும்.

 

]]>
https://www.dinamani.com/specials/thinam-oru-thavaram/2019/may/26/130-தண்ணார்-திங்கள்---பாடல்-3-3162278.html
3162277 ஸ்பெஷல்ஸ் தினம் ஒரு தேவாரம் 130. தண்ணார் திங்கள் - பாடல் 2 என். வெங்கடேஸ்வரன் DIN Saturday, May 25, 2019 12:00 AM +0530  

பாடல் 2:

    கந்து அமர் சந்தும் கார் அகிலும் தண் கதிர் முத்தும்
    வந்து அமர் தெண்ணீர் மண்ணி வளம் சேர் வயல் மண்டிக்
    கொந்து அலர் சோலைக் கோகிலம் ஆடக் குளிர் வண்டு
    செந்திசை பாடும் சீர் திகழ் கண்ணார் கோயிலே


விளக்கம்:

மண்ணி=காவிரி நதியின் கிளையாறுகளில் ஒன்று: கோகிலம்=குயில்; செந்து=தமிழ்ப் பண்களில் ஒன்று; செவ்வழி என்றும் கூறுவார்கள்; கந்து=கந்தம், நறுமணம்; சாந்து=சந்தனக் கட்டைகள்; கார்=கரிய, வயிரம் பாய்ந்து உறுதியான; கதிர்=ஒளிவீசும்; வந்தமர்=வந்து சேரும்; கொந்து=கொத்து கொத்தாக மலர்கள் மலரும் வளமான சோலைகள்; பொதுவாக குயில்கள் பாடுவதாக பாடல்களில் குறிப்பிடும் சம்பந்தர் இந்த பாடலில் குயில்கள் நடமாடின என்று இந்த பாடலில் கூறுகின்றார். பாடும் இயல்பினை உடைய  குயில்கள் நடமாடியது இந்த தலத்தின் தனிச் சிறப்பு போலும். இந்த குறிப்பு பெருமானின் அருள் இருந்தால் இயல்பு நிலை மாறி சிறப்பான நிலையினை எவரும் அடையலாம் என்பதை உணர்த்துகின்றது போல அமைந்துள்ளது. வண்டு பாடும் என்ற தொடரினை வண்டும் பாடும் என்று மாற்றி அடியார்கள் செவ்வழிப் பண்ணில் பதிகங்கள் பாடியது போன்று தலத்து வண்டுகளும் பாடின என்று சிவக்கவியார் தனது பெரியபுராண விளக்கத்தில் கூறுகின்றார். வண்டுகள் கற்றுக் கொண்டு பாடும் அளவுக்கு தேர்ச்சி பெற்றன என்ற குறிப்பு அடியார்கள் இந்த தலத்தில் அடியார்கள் இடைவிடாது சிறந்த இன்னிசைப் பாடல்கள் பாடினர் என்பதை உணர்த்துகின்றது. கண்ணார்கோயில் சென்று தொழுவதால் நாம் அடையவிருக்கும் பலன்களை முதல் பாடலில் உணர்த்திய சம்பந்தர் அடுத்த இரண்டு பாடல்களில் தலத்தின் இயற்கை வளத்தினை குறிப்பிடுகின்றார்.        

பொழிப்புரை:

நறுமணம் பொருந்திய சந்தனக் கட்டைகளும் வயிரம் பாய்ந்து உறுதியான கரிய அகில் கட்டைகளும் குளிர்ச்சி பொருந்தி அழகுடன் ஒளிவீசும் முத்துக்களும் அடித்துக் கொண்டு வரப்படும் நீர்ப் பெருக்கினை உடைய மண்ணியாறு வந்து சேர்வதால் நிலவளம் மிகுந்த வயல்களையும் கொத்து கொத்தாக மலரும் மலர்கள் கொண்ட சோலைகளும் நிறைந்த இந்த தலத்தினில் மகிழ்ச்சி பொங்க குயில்கள் நடமாடுகின்றன. குளிர்ந்த சூழ்நிலையை விரும்பும் வண்டுகள், அடியார்கள் செவ்வழிப் பண்ணில் இறைவனை துதித்து பாடல்களைக் கேட்டு, செவ்வழிப் பண்ணில் முரலும் சிறப்பினை உடையது கண்ணார்கோயில் எனப்படும் திருத்தலம்.

 

]]>
https://www.dinamani.com/specials/thinam-oru-thavaram/2019/may/25/130-தண்ணார்-திங்கள்---பாடல்-2-3162277.html
3162275 ஸ்பெஷல்ஸ் தினம் ஒரு தேவாரம் 130. தண்ணார் திங்கள் - பாடல் 1 என். வெங்கடேஸ்வரன் Friday, May 24, 2019 12:00 AM +0530

பின்னணி:

தனது நான்காவது தலயாத்திரையை முடித்துக் கொண்டு சீர்காழி திரும்பிய திருஞான சம்பந்தருக்கு அவரது பெற்றோர்களால் உபநயனம் செய்து வைக்கப் பட்டது. பல நாட்கள் சீர்காழியில் தங்கிய சம்பந்தர் மீண்டும் பல தலங்களைக் காண ஆவல் கொண்டமையால், தனது விருப்பத்தைத் தனது தந்தையிடமும் நீலகண்ட யாழ்ப்பாணரிடமும் தெரிவித்தார். அந்நாள்  வரை நடைபெற்ற நான்கு தலையாத்திரைகளிலும் பங்கேற்ற அவரது தந்தையார், தனக்கு வயதாகியதால் முன்போன்று நெடுந்தூரப் பயணங்கள் மேற்கொள்ள இயலாது என்றும் வேள்வி  செய்யவேண்டும் என்ற ஆவல் இருப்பதால் பயணங்கள் மேற்கொள்ள இயலாது என்றும் கூறினார். எனினும் தவம் இருந்து பெருமான் அருளினால் அருமையாக பெற்ற உன்னைப் பிரிந்து இருப்பது கடினம் என்பதால் சில நாட்கள் உன்னுடன் பயணம் மேற்கொள்வேன் என்று தனது நிலையினை ஞான சம்பந்தருக்கு உணர்த்தினார். இதனை உணர்த்தும் பெரிய புராண பாடல் இங்கே கொடுக்கப் பட்டுள்ளது. திருஞானசம்பந்தர் பெருமானையே தனது தந்தையாக எப்போதும் கருதியமையால், சிவபாத இருதயரை, குலத்தாதை என்று சேக்கிழார் நயமாக குறிப்பிடுகின்றார். இந்த தல யாத்திரையில், பல அதிசயங்கள் நிகழ்கின்றன.     

    பெருகு விருப்புடன் நோக்கிப் பெற்ற குலத் தாதையாரும்
    அருமையால் உம்மைப் பயந்த அதனால் பிரிந்து உறைவாற்றேன்
    இருமைக்கும் இன்பம் அளிக்கும் யாகமும் யான் செய வேண்டும்
    ஒருமையால் இன்னம் சில நாள் உடன் எய்துவேன் என்று உரைத்தார்  

தந்தையார் இவ்வாறு உரைத்ததைக் கேட்ட ஞானசம்பந்தர், தந்தையார் திருநீலகண்ட யாழ்ப்பாணர் மற்றுமுள்ள அடியார்கள் புடைசூழ சீர்காழி திருக்கோயிலின் உள்ளே சென்று  பெருமானை வணங்கிய பின்னர் தனது ஐந்தாவது பயணத்தை தொடங்குகின்றார். ஒவ்வொரு முறையும் தனது பயணத்தைத் தொடங்கும் ஞானசம்பந்தர், சீர்காழி பெருமானை தரிசனம் செய்து அவரை வணங்கிச் செல்வதை பழக்கமாகக் கொண்டிருந்ததை நாம் அவரது சரித்திரத்திலிருந்து அறியலாம். ஊர் மக்கள் பிரியா விடை அளிப்ப, முத்துச் சிவிகையில் ஏறி ஞானசம்பந்தர் அமர்ந்தபோது சங்க நாதங்களின் ஒலியும், ஊது கொம்புகளின் ஒலியும், மறையோர்கள் சொன்ன மங்கல வாழ்த்தொலிகளும், பெருமானின் திருநாமங்களும் கலந்து ஒலித்தன என்று சேக்கிழார் பெரிய புராணத்தில் கூறுகின்றார். இவ்வாறு தனது ஐந்தாவது தலயாத்திரையைத் தொடங்கிய ஞானசம்பந்தர், மிகுந்த விருப்பத்துடன் கண்ணார்கோயில் திருத்தலம் சென்று அடைகின்றார். ஐந்தாவது தலயாத்திரையில் முதன் முதலாக சென்ற இந்த திருத்தலம் சீர்காழியிலிருந்து ஒன்பது கி.மீ தொலைவில் மயிலாடுதுறை செல்லும் பாதையில் உள்ளது. வைத்தீஸ்வரன் கோயில் தலத்திலிருந்து மூன்று கி.மீ தொலைவில் தெற்கே செல்லும் பாதையில் உள்ளது. இறைவனின் திருநாமம்---கண்ணாயிர நாதர்; இறைவியின் திருநாமம்---முருகுவளர் கோதை; அழகாக வளரும் கூந்தலைக் கொண்ட அம்பிகை என்று பொருள் கொள்ளும் வண்ணம் இந்த பெயர் அமைந்துள்ளது. கண்கள் சம்பந்தமான நோய்கள் இந்த தலத்து இறைவனை வழிபட தீரும் என்று கூறுவார்கள். அழகாக விளங்கும் பிராட்டியின் கூந்தல், தெய்வீக மனத்துடன் திகழ்கின்றது என்று ஞானசம்பந்தர் பதிகத்தின் பாடல் ஒன்றினில் கூறுவதை நாம் விளக்கத்தில் காணலாம். இந்த தலத்திலிருந்து புறப்பட்ட ஞானசம்பந்தர், அடுத்து புள்ளிருக்குவேளூர் செல்கின்றார்.    

அகலிகையின் அழகில் மயங்கி, வஞ்சகமாக அவரது கணவரைப் போன்று வேடம் தரித்து  ஏமாற்றிய குற்றத்தினால் கௌதம முனிவரிடம் பெற்ற சாபத்தினை இந்திரன் இந்த தலத்து இறைவனை வணங்கி தீர்த்துக் கொண்டான் என்பதும் மகாபலியை வெல்வதற்காக வாமன அவதாரம் எடுத்த திருமால் பெருமானை வழிபட்டார் என்பதும் தலபுராணம் கூறும் தகவல்கள். இந்த இரண்டு தகவல்களையும் ஞானசம்பந்தர் இந்த பதிகத்தின் பாடல்களில் அளிக்கின்றார்.                

பாடல் 1:

    தண்ணார் திங்கள் பொங்கரவம் தாழ் புனல் சூடிப்
    பெண் ஆணாய பேரருளாளன் பிரியாத
    கண்ணார் கோயில் கைதொழுவோர்கட்கு இடர் பாவம்
    நண்ணா ஆகும் நல்வினையாய நணுகும்மே

விளக்கம்:

தண்மை=குளிர்ச்சி; தண்ணார் திங்கள்=குளுமை பொருந்திய பிறைச் சந்திரன்; பொங்கரவம்= சீற்றத்துடன் பொங்கி எழுந்து படமாடும் பாம்பு; தாழ் புனல்=வேகமாக கீழே இறங்கி வந்த கங்கை நதி; நல்வினை=புண்ணியம்; நாம் இந்த பிறவியில் அனுபவிக்கும் துன்பஇன்பங்களுக்கு காரணம், நாம் பழைய பிறவிகளில் செய்த பாவங்களும் (தீவினைகளும்) புண்ணியங்களுமே (நல்வினைகள்) என்பதை சைவம் தெளிவாக உணர்த்துகின்றது. நம்மை விட்டு பாவங்கள் நீங்கினால் எஞ்சி இருக்கும் புண்ணியங்களால் நமக்கு, இம்மையில் எப்போதும் இன்பமே ஏற்படும் என்பதை இந்த பதிகத்தின் வாயிலாக சம்பந்தர் உணர்த்துகின்றார். நண்ணா=நெருங்காது; நண்ணும்=நெருங்கி நிற்கும்;

இந்த பாடலில் பெண் ஆணாகிய பேரருளாளன் என்று சம்பந்தர் குறிப்பிடுகின்றார். மாதொரு  பாகனாக இறைவன் இருக்கும் நிலையினை மிகுந்த மகிழ்ச்சியுடன் திருமுறை ஆசிரியர்கள்  பல  பாடல்களில் குறிப்பிடுகின்றனர். பெருமான் புரிந்த பல அருட்செயல்களில் இந்த செயலே மிகவும்  பெரிய அருட்செயலாக கருதப்படுவதால், பேரருளாளன் என்று பெருமானை சம்பந்தர் அழைக்கின்றார். கை தொழுவார்கள் என்று சம்பந்தர் இங்கே குறிப்பிடுகின்றார். எவரேனையும் கண்டவுடன் கைகூப்பித் தொழுதல் நமது பாரம்பரிய பழக்கம். நமக்கு சமமானவர்களை  நமது நெஞ்சினுக்கு நேராக கைகளை வைத்துத் தொழவேண்டும் என்றும், நம்மை விடவும் உயர்ந்தவர்களை நமது முகத்திற்கு நேராக கைகளை வைத்துத் தொழவேண்டும் என்றும் நமது தலையின் மேல் கைகளை வைத்து இறைவனைத் தொழவேண்டும் என்று கூறுவார்கள்.  நம்மை விடவும் கீழாக எவரையும் கருதாது இருக்கவேண்டும் என்று பெரியோர்கள் கூறுவார்கள்.    

பொழிப்புரை:

குளிர்ச்சி பொருந்திய பிறைச் சந்திரனையும், சீற்றத்துடன் பொங்கி எழும் பாம்பினையும், பள்ளத்தை நோக்கி ஓடும் தன்மையை உடைய பெரிய நீர்ப்பரப்பினைக் கொண்டு மிகுந்த வேகத்துடன் கீழே இறங்கிய கங்கை நதியையும் தனது சடையினில் சூட்டிக் கொண்டுள்ள பெருமான், பார்வதி தேவியைத் தனது உடலின் ஒரு பாகத்தில் வைத்துக் கொண்டு பேரருள் புரிந்தவனாக பெண்ணாகவும் ஆணாகவும் திகழ்கின்றான். இத்தகைய பெருமை வாய்ந்த பெருமான், கண்ணார்கோயில் தலத்தினை விட்டு என்றும் பிரியாதவனாக ஆங்கே உறைகின்றான்.  இந்த பெருமானை, தங்களது கைகளால் தொழும் அடியார்களை பாவங்களும் அதனால் விளையும் துன்பங்களும் நெருங்காது; புண்ணியங்கள் அவர்களை நெருங்க அதன் விளைவாக   இன்பங்களே அவர்களது வாழ்வினில் ஏற்படும்.

 

]]>
https://www.dinamani.com/specials/thinam-oru-thavaram/2019/may/24/130-தண்ணார்-திங்கள்---பாடல்-1-3162275.html
3151566 ஸ்பெஷல்ஸ் தினம் ஒரு தேவாரம் 129. விளங்கிய சீர்ப் பிரமனூர் - பாடல் 11 என். வெங்கடேஸ்வரன் DIN Thursday, May 23, 2019 12:00 AM +0530  

பாடல் 11:

  ஆக்கமர் சீரூர் சண்பை காழி அமர் கொச்சை கழுமலம் அன்பான் ஊர்
  ஓக்கம் உடைத் தோணிபுரம் பூந்தராய் சிரபுரம் ஒண் புறவ நண்பார்
  பூக்கமலத்தோன் மகிழூர் புரந்தரனூர் புகலி வெங்குருவும் என்பர்
  சாக்கியரோடு அமண் கையர் தாம் அறியா வகை நின்றான் தங்கும் ஊரே

விளக்கம்:

அன்பான் ஊர்=அன்பே உருவமாக உடைய சிவபெருமான் உறையும் இடம்; ஆக்கு=ஆக்கம்; நண்பு என்ற சொல் இங்கே பக்தியை குறிக்கின்றது. ஓக்கம்=உயர்வு; அன்பே உருவமாக உள்ள பெருமான் உறைவதால் உயர்வாக கருதப்படும் தோணிபுரம், பூந்தராய், சிரபுரம், ஒண்=ஒளி மிகுந்த; புரந்தரன்=இந்திரன்; புரந்தரன் ஊர்=வேணுபுரம்  

பொழிப்புரை:

செல்வங்களை படைக்கும் சிறப்பு வாய்ந்த சண்பை, காழி, புகழும் பெருமையும் அமர்கின்ற கொச்சைவயம், கழுமலம், அன்பே உருவமாக அமர்ந்து அனைவரிலும் உயர்வாக உள்ள பெருமான் உறையும் தோணிபுரம், பூந்தராய், சிரபுரம், ஒளி மிகுந்த புறவம், தாமரை மலரில் உறையும் பிரமன் பக்தியுடன் வழிபட்டு பயனடைந்து மகிழ்ந்த பிரமன் வழிபட்ட பிரமபுரம், வேணுபுரம், புகலி,  வெங்குரு என்ற பன்னிரண்டு பெயர்களை உடைய சீர்காழித் தலம், புத்தர்களும் சமணர்களும் அறியாத வகையில் நிற்கும் இறைவன் சிவபெருமான் தங்கும் ஊராகும்.  

பாடல் 12 :

 அக்கரம் சேர் தருமனூர் புகலி தராய் தோணிபுரம் அணி நீர்ப் பொய்கை    
 புக்கரம் சேர் புறவம் சீர்ச் சிலம்பனூர் புகழ் காழி சண்பை தொல்லூர்
 மிக்கரம் சீர்க் கழுமலமே கொச்சைவயம் வேணுபுரம் அயனூர் மேவிச்
 சக்கரம் சீர்த் தமிழ் விரகன் தான் சொன்ன தமிழ் தரிப்போர் தவம் செய்தோரே

விளக்கம்:

தரிப்போர்=மனதினில் தரிப்பவர்கள், நினைவு கொள்வோர்; அக்கரம்=அக்ஷரம் என்ற வடமொழிச் சொல்லின் தமிழாக்கம்; க்ஷரம்=அழிவு, அக்ஷரம்=அழிவின்மை; உயிர்கள் செய்த தவற்றினுக்கு ஏற்ப நரகத்தில் தண்டனை விதிக்கும் ஆற்றலை இயமன், சீர்காழி தலத்தில் இறைவனை நோக்கி தவமிருந்து பெற்றதால், வெங்குரு என்ற பெயர் வந்ததாக  தலபுராணம் கூறுகின்றது. பிறிதொரு பதிகத்தில் வெங்கோத் தருமன் பேணியாண்ட வெங்குரு என்று சம்பந்தர் கூறுவதும் நமது நினைவுக்கு வருகின்றது. தருமனூர்=வெங்குரு; புக்கரம்=தாமரை மலர்; புக்கரம் என்ற சொல்லினை புஷ்கரம் (புண்ணிய தீர்த்தம்) என்ற வடமொழிச் சொல்லின் திரிபு என்றும் கூறுவார்கள்; மிக்கரம் சீர்=மிக்கு+அரன்+சீர்;        

பொழிப்புரை:

தருமனூர் என்று அழிவற்ற தன்மை உடைய வெங்குரு, புகலி, பூந்தராய், தோணிபுரம், புண்ணிய தீர்த்தங்களையும் பொய்கைகளையும் தனக்கு அணிகலனாகக் கொண்டு நீர்வளத்துடன் திகழும் புறவம், சிறப்பு வாய்ந்த சிரபுரம், புகழ் வாய்ந்த காழி, தொன்மை வாய்ந்த சண்பை, பழமையானதும், பெருமானது பெருமை மிகுதியாக உள்ளதும் ஆகிய கழுமலம், கொச்சைவயம், வேணுபுரம், பிரமபுரம், ஆகிய பன்னிரண்டு பெயர்களை உடைய சீர்காழி தலத்தின் மீது சக்கரமாக தலத்தின் பெயர்கள் சக்கரத்தின் சட்டங்கள் போன்று மாறி மாறி வரும் வண்ணம், தமிழில் புலமை கொண்ட ஞானசம்பந்தன் சொன்ன இந்த பதிகத்தின் பாடல்களை அன்புடன் மனதினிலும் நாவிலும் தரித்து ஓத வல்லார்கள் சிறந்த தவம் செய்தவர்களுக்கு சமமாக கருதப் படுவார்கள்.  

முடிவுரை:

பதிகத்தின் முதல் பாடலில் தேவர்களின் பகையாகிய சூரபதுமனை அழிப்பதற்கு முருகப் பெருமானை தோற்றுவித்தவன் என்றும், பாற்கடலிலிருந்து பொங்கி எழுந்த விடத்தினை உட்கொண்டு தேவர்களின் அச்சத்தை தீர்த்தவன் என்று இரண்டாவது பாடலிலும், சிறுவன்  மார்க்கண்டேயனுக்காக இயமனை உதைத்து வீழ்த்தியவர் என்று பதிகத்தின் ஆறாவது பாடலிலும், தான் ஒருவனே நிலையானவன் என்பதை உணர்த்தும் வண்ணம் மேனி முழுவதும் திருநீறு பூசிய பெருமான் என்று ஏழாவது பாடலிலும், எவராலும் வெல்ல முடியாது என்று செருக்குடன் திரிந்த திரிபுரத்து அரக்கர்களை வென்றவன் என்று எட்டாவது பாடலிலும், இராவணனின் வலிமையை அழித்தவன் என்று ஒன்பதாவது பாடலிலும், பிரமனும் திருமாலும் உணர முடியாத வண்ணம் நெடிது உயர்ந்தவன் என்று  பத்தாவது பாடலிலும் சமணர்களும் புத்தர்களும் அறிய முடியாத தன்மை உடையவன் என்று பதினோராவது பாடலிலும் பெருமானின் பெருமைகள் உணர்த்தப் படுகின்றன.  மூன்றாவது நான்காவது மற்றும் ஐந்தாவது பாடல்களில் தலத்தில் வாழும் அடியார்களின் பெருமை உணர்த்தப்பட்டு, பெருமானை வழிபட்டு அவனது அருள் பெற்று நாமும் அத்தகைய பெருமைகளுடன் விளங்கலாம் என்பதும் உணர்த்தப் படுகின்றது.
        
தலத்தின் பன்னிரண்டு பெயர்களையும் அனைத்துப் பாடல்களிலும் குறிப்பிடும் திருஞான சம்பந்தர், தலத்தின் பெருமைகளையும் ஆங்காங்கே உணர்த்துவது பாடலுக்கு மெருகூட்டுகின்றது. மேலும் பெருமானின் சிறந்த தன்மைகளும் செயல்களையும் ஒவ்வொரு பாடலிலும் குறிப்பிட்டு பெருமானின் புகழினை எடுத்துரைக்கும் தோத்திரப் பாடல்களாகவும் இந்த பதிகம் அமைந்துள்ளது. பன்னிரண்டு பெயர்கள் மாறி மாறி குறிப்பிடப்பட்டாலும் பாடலில் எதுகை நயம் சேர்க்கப்பட்டும், பண்ணுடன் இணைத்து பாடுவதற்கு ஏற்ப சந்த அமைப்புடன் பாடல்கள் அமைந்திருப்பது ஞான சம்பந்தரின் புலமைக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகின்றது. பெருமான் உறையும் தலத்தின் பல பெயர்களை மந்திரம் போல் மீண்டும் மீண்டும் உரைப்பது தவத்திற்கு சமமானது  என்று கடைப் பாடலில் உணர்த்தப்பட்டு பதிகம் ஓதுவோர் அனைவரையும் தவநெறியில்  சம்பந்தர் ஈடுபடுத்துகின்றார். நாமும் இந்த பதிகத்தை ஓதுவதன் மூலம், சிவபெருமானை குறித்து செய்யப்படும் தவத்தில் ஈடுபட்டு அந்த தவத்தின் பயனடைந்து இம்மையில்  துன்பங்கள் தீர்ந்து மறுமையில் என்றும் அழியாத இனபத்தினை பெறுவோமாக.  

 

]]>
https://www.dinamani.com/specials/thinam-oru-thavaram/2019/may/23/129-விளங்கிய-சீர்ப்-பிரமனூர்---பாடல்-11-3151566.html
3151564 ஸ்பெஷல்ஸ் தினம் ஒரு தேவாரம் 129. விளங்கிய சீர்ப் பிரமனூர் - பாடல் 10 என். வெங்கடேஸ்வரன் DIN Wednesday, May 22, 2019 12:00 AM +0530  

பாடல் 10:

    மேல் ஓதும் கழுமல மெய்த்தவம் வளரும் கொச்சை இந்திரனூர் மெய்ம்மை
    நூலோதும் அயன் தனூர் நுண்ணறிவார் குருப் புகலி தராய் தூநீர் மேல்
    சேலோடு தோணிபுரம் திகழ் புறவம் சிலம்பனூர் செருச் செய்து அன்று
    மாலோடும் அயன் அறியான் வண் காழி சண்பை மண்ணோர் வாழ்த்தும் ஊரே
 

விளக்கம்:

மேல்=மேலோர்; மெய்ந்நூல்=வேதங்கள்; மெய்த்தவம்=உண்மையான தவம்; குரு=வெங்குரு; செருச் செய்து அன்று என்ற தொடர் மூலம், பிரமனும் திருமாலும் தங்கள் இருவரில் எவர் உயர்ந்தவர் என்று ஒருவருக்கொருவர் இடைவிடாது வாதம் செய்த நாளினை சம்பந்தர் இங்கே குறிப்பிடுகின்றார்.

பொழிப்புரை;

உயர்ந்தவர்கள் போற்றும் கழுமலம், உண்மையான தவத்தில் ஆழும் தவசிகள் அதிகமாக வாழும் கொச்சைவயம், வேணுபுரம், உண்மையை உரைக்கும் வேதங்களை நாள்தோறும் ஓதும் பிரமன் வழிபட்ட பிரமபுரம், நுண்ணிய அறிவினை உடைய சான்றோர்கள் வாழும் வெங்குரு, புகலி, பூந்தராய், தூய்மையான நீரினை உடைய நீர்நிலைகளில் மீன்கள் துள்ளித் திரியும் தோணிபுரம், புகழுடன் திகழும் புறவம், சிலம்பன் வழிபட சிரபுரம்,  தம்மில் யார் பெரியவன் என்று ஒருவருக்கொருவர் மாறுபட்ட பிரமனும் திருமாலும் வாதம் செய்த நாளன்று அவர்களின் எதிரே நீண்ட நெருப்புப் பிழம்பாகத் தோன்றி அவர்கள் இருவரும் அடியையும் முடியையும் காணாத வண்ணம் நின்ற பெருமான் உறையும் காழி, சண்பை என்று பன்னிரண்டு பெயர்களை உடைய சீர்காழி தலமாவது, உலகத்தவர் அனைவரும் வாழ்த்தும் ஊராகும்.      
 

]]>
https://www.dinamani.com/specials/thinam-oru-thavaram/2019/may/22/129-விளங்கிய-சீர்ப்-பிரமனூர்---பாடல்-10-3151564.html
3151563 ஸ்பெஷல்ஸ் தினம் ஒரு தேவாரம் 129. விளங்கிய சீர்ப் பிரமனூர் - பாடல் 9 என். வெங்கடேஸ்வரன் DIN Tuesday, May 21, 2019 12:00 AM +0530  

பாடல் 9:

    இரக்கம் உடை இறையவன் ஊர் தோணிபுரம் பூந்தராய் சிலம்பன் தன்னூர்
    நிரக்க வரு புனல் புறவ நின்ற தவத்து அயனூர் சீர்த் தேவர் கோனூர்
    வரக் கரவாப் புகலி வெங்குரு மாசிலாச் சண்பை காழி கொச்சை
    அரக்கன் விறல் அழித்து அருளி கழுமலம் அந்தணர் வேதம் அறாத ஊரே

விளக்கம்:

வரம் கரவா என்ற தொடர் எதுகை நோக்கி வரக்கரவா என்று திரிந்தது. விறல்=வலிமை; அறா=இடைவிடாமல்;

பொழிப்புரை:

அனைத்து உயிர்களிடத்தும் இரக்கம் கொண்டுள்ள இறைவனது ஊர் தோணிபுரம், பூந்தராய், சிலம்பன் என்ற அரக்கன் வழிபட்டு பயன் அடைந்த சிரபுரம், நிறைந்தும் விரைந்தும் வரும் நதியின் அருகே உள்ள புறவம், பெருமானை நோக்கி நிலையான தவத்தைப் புரிந்து பயனடைந்த பிரமன் வழிபட்ட பிரமபுரம், சிறப்பு வாய்ந்த தேவர்களின் தலைவன் இந்திரன்  வழிபட்ட வேணுபுரம், தனது அடியார்களுக்கு மறைக்காது கேட்ட வரத்தினை அருளும் இறைவன் உறையும் புகலி, வெங்குரு, குற்றமற்ற சண்பைநகர், காழி, கொச்சைவயம், என்ற பன்னிரண்டு பெயர்களை உடைய சீர்காழித் தலம், நான்கு வேதங்களும் இடைவிடாது அந்தணர்களால் ஓதப்படும் சிறப்பினை உடையதும், கயிலாய மலையினை பேர்த்து எடுக்கத் துணிந்த அரக்கன் இராவணின் வலிமையை அடக்கிய பெருமான் உறைகின்ற சிறப்பினை உடையதும் ஆகிய தலமாகும்.

 

]]>
https://www.dinamani.com/specials/thinam-oru-thavaram/2019/may/21/129-விளங்கிய-சீர்ப்-பிரமனூர்---பாடல்-9-3151563.html
3151562 ஸ்பெஷல்ஸ் தினம் ஒரு தேவாரம் 129. விளங்கிய சீர்ப் பிரமனூர் - பாடல் 8 என். வெங்கடேஸ்வரன் DIN Monday, May 20, 2019 12:00 AM +0530
பாடல் 8:

    மோடி புறம் காக்கும் ஊர் புறவம் சீர்ச் சிலம்பனூர் காழி மூதூர்
    நீடு இயலும் சண்பை கழுமலம் கொச்சை வேணுபுரம் கமல நீடு
     கூடியவன் ஊர் வளர் வெங்குருப் புகலி தராய் தோணிபுரம் கூடப் போர்
    தேடி உழல் அவுணர் பயில் திரிபுரங்கள் செற்ற மலைச் சிலையன் ஊரே

விளக்கம்:

மோடி=காளி; சிலையன்=வில்லினை உடையவன்; அருளி=அருள்பவன்; மலைச் சிலையன்= மேரு மலையினை வில்லாக வளைத்த பெருமான்; நீடு இயலும்=நீண்ட காலமாக, பல ஊழிகளைக் கடந்தும், நிலைத்து நிற்கும்; கமல நீடு கூடியவன்=நீண்ட காலமாக தாமரையில் வாழும் பிரமன்; வளர்=நாள்தோறும் புகழுடன் வளரும்; கூடப் போர் தேடி உழல்=போர்களைத் தேடித் திரிந்த திரிபுரத்து அரக்கர்கள்; போர் கூட என்று மாற்றி வைத்து பொருள் கொள்ள வேண்டும். பறக்கும் கோட்டைகளில் திரிந்த வண்ணம் தாம் விரும்பிய இடங்களில் கீழே இறங்கி, ஆங்கிருந்த மக்களை அழித்த செய்கை இங்கே குறிப்பிடப் படுகின்றது. இந்த மூன்று அரக்கர்களும் பெற்றிருந்த வல்லமை கண்டு அனைவரும் அஞ்சி நடுங்கி ஓடியதால், அவர்களைத் தேடி போர் புரிய எவரும் வராத நிலையில், அவர்களே போரினைத் தேடிச் சென்ற நிலை இங்கே உணர்த்தப் படுகின்றது. பெருமான் ஒருவனே  திரிபுரத்து அரக்கர்களுடன் போரிடச் சென்றவன். அவுணர்=அரக்கர்கள்; உழலுதல்=திரிதல்;  செற்ற=வெற்றி கொண்ட;         

பொழிப்புரை:

பெருமானிடம் நடனப் போட்டியில் தோற்று ஊருக்கு வெளிப்புறம் சென்று அமர்ந்து காவல் காக்கும் புறவம், புகழ் நிறைந்த சிரபுரம், தொன்மையான காழி, பல ஊழிகளைக் கடந்தும் நிலையாக நிற்கும் சண்பை, கழுமலம், கொச்சைவயம், வேணுபுரம், தாமரைப் பூவினில் நெடுங்காலமாக அமர்ந்து உறையும் பிரமன் வழிபட்ட பிரமனூர், நாள்தோறும் புகழில் வளரும் வெங்குரு, புகலி, பூந்தராய், தோணிபுரம் என்று பன்னிரண்டு பெயர்களை உடைய சீர்காழி தலமாவது, தம்மை எதிர்த்து போரிட வல்லவர் எவரும் இல்லாத நிலையில் தாங்களே தேடிச் சென்று வலிய போர் தொடுக்க வானில் திரிந்த திரிபுரத்து அரக்கர்கள் வாழ்ந்த மூன்று பறக்கும் கோட்டைகளையும் வெற்றி கொள்ளும் பொருட்டு மேரு மலையை வில்லாக வளைத்த பெருமான் உறையும் பதியாகும்.   
 

]]>
https://www.dinamani.com/specials/thinam-oru-thavaram/2019/may/20/129-விளங்கிய-சீர்ப்-பிரமனூர்---பாடல்-8-3151562.html
3151561 ஸ்பெஷல்ஸ் தினம் ஒரு தேவாரம் 129. விளங்கிய சீர்ப் பிரமனூர் - பாடல் 7 என். வெங்கடேஸ்வரன் DIN Sunday, May 19, 2019 12:00 AM +0530

பாடல் 7:

   வண்மை வளர் வரத்து அயனூர் வானவர் தம் கோனூர் வண்
        புகலி இஞ்சி
   வெண்மதி சேர் வெங்குரு மிக்கோர் இறைஞ்சு சண்பை வியன்
        காழி கொச்சை
   கண் மகிழும் கழுமலம் கற்றோர் புகழும் தோணிபுரம்
        பூந்தராய் சீர்ப்
   பண் மலியும் சிரபுரம் பார்புகழ் புறவம் பால்வண்ணன்
        பயிலும் ஊரே

 
விளக்கம்:

வண்மை=கொடைத் தன்மை, உண்மை, வளமை, புகழ், வலிமை என்று பல பொருள் கொண்ட சொல்; வரத்து=மேன்மை உடைய; வண்=வளமை; இஞ்சி=மதில்சுவர்; பால் வண்ணன்=திருமேனி முழுதும் வெண்ணீறு பூசியமையால் பால் போன்று வெண்மை நிறத்துடன் விளங்கும் மேனியை உடைய சிவபெருமான்; மிக்கோர்=மேம்பட்டவர், கல்வி, கேள்வி, ஞானம், கொடை, தவம், தொண்டு, சிவநெறி ஆகியவற்றில் மேம்பட்டோர்;  வியன்=பரந்த; இங்கே பரந்த பெருமையினை உடைய என்று பொருள் கொள்ள வேண்டும்; கண் மகிழும்=கண்களுக்கு இனிய காட்சியினை நல்கும்; பண் மலியும்=பெருமானின் புகழ் குறித்த பாடல்கள் இடைவிடாது ஒலிக்கும்; பயிலுதல்=தொடர்ந்து ஒரு செயலைச் செய்தல்.

கற்றவர்கள் என்று உண்மையான மெய்ப்பொருளை உணர்ந்தவர்கள் என்று சம்பந்தர் இங்கே குறிப்பிடுகின்றார். நிலையான மெய்ப்பொருள் சிவபெருமான் ஒருவனே என்று உணர்ந்தோர்   அவனை வழிபட்டு பயனடைவார்கள். பல திருமுறைப் பாடல்களில் கற்றவர்கள் பெருமானை வழிபடுவது குறிப்பிடப்படுகின்றது. அத்தகைய பாடல்கள் சிலவற்றை நாம் இங்கே காண்போம். கழுமலம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் கடைப் பாடலில் (1.129.11) கற்றவர்கள் பணிந்து ஏத்தும் கழுமலத்து ஈசன் என்று குறிப்பிடுகின்றார். நல்லோர்களுக்கு துணையாக தேவாரப் பதிகங்கள் அமையும் என்று இந்த பாடலில் உணர்த்தப் படுகின்றது.  

    கற்றவர்கள் பணிந்து ஏத்தும் கழுமலத்துள் ஈசன் தன் கழல்
        மேல் நல்லோர்
    நற்றுணையாம் பெருந்தன்மை ஞானசம்பந்தன் தான்
         நயந்து சொன்ன
    சொற்றுணை ஓர் ஐந்தினோடு ஐந்து இவை வல்லார்
         தூமலராள் துணைவராகி
     முற்றுலகம் அது ஆண்டு முக்கணான் அடி சேர
          முயல்கின்றாரே  

கீழைத் திருக்காட்டுப்பள்ளி தலத்தின் மீது அருளிய பாடலில், திருஞானசம்பந்தர் பெருமானை, கற்றவர் தாம் தொழுது ஏத்த நின்றவன் என்று குறிப்பிடுகின்றார். பெற்றம்= இடபம்; பெருமானின் புகழினைத் தவிர்த்து வேறு எந்த பேச்சினையும் தான் பேசுவதில்லை என்று திருஞானசம்பந்தர் இந்த பாடலில் கூறுகின்றார். அரணம்=கோட்டை; உற்றவர்=மெய் உணர்வு உற்று சிவபெருமானே முழுமுதற்கடவுள் என்று உணர்ந்தவர்கள்; உம்பர்= தேவர்கள்;  

  செற்றவர் தம் அரணம் அவற்றைச் செவ்வழல் வாய் எரி ஊட்டி நின்றும்
  கற்றவர் தாம் தொழுது ஏத்த நின்றான் காதலிக்கப்படும் காட்டுப்பள்ளி
  உற்றவர் தாம் உணர்வு எய்தி நல்ல உம்பர் உள்ளார் தொழுது ஏத்த நின்ற
  பெற்றம் அமரும் பெருமானை அல்லால் பேசுவதும் மற்றோர் பேச்சு இலோமே

ஆவடுதுறை தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (4.56.3) அப்பர் பிரான், கற்றவர்கள் புகழ்ந்து பாடும் பெருமான், ஆதரவற்றவரிடம் அன்பாக இருப்பார் என்று கூறுகின்றார். இவ்வாறு அவர் கூறுவது திக்கற்றவர்க்கு தெய்வமே துணை என்ற பழமொழியை நினைவூட்டுகின்றது. உற்ற நோய்=உயிருக்கு உற்ற நோய், வினைத் தொகுதிகள் மற்றும் அவற்றால் விளையும் தொடர்ந்த பிறப்பு இறப்புகள்: செற்றவர்=பகைவர்: செறுதல்= வெல்லுதல்: கலந்து=உள்ளமும் உயிரும் இறை உணர்வுடன் கலத்தல்: உலத்தல்=பாசப் பற்றுகளை அறுத்தல்: அலத்தல்=பாசப் பற்றுகளால் துயர் உறுதல்: அற்றவர்=பாசப் பற்றுகளை அறவே ஒழித்து பக்குவம் அடைந்த அடியார்கள்: அலத்தல் என்பதற்கு விரதம் முதலியவற்றால், உடலை வருத்திக் கொள்ளுதல் என்றும் பொருள் கொள்ளலாம்.

    உற்றநோய் தீர்ப்பர் போலும் உறுதுணை ஆவர் போலும்
    செற்றவர் புரங்கள் மூன்றும் தீயெழச் செறுவர் போலும்
    கற்றவர் பரவி ஏத்திக் கலந்து உலந்து அலந்து பாடும்
    அற்றவர்க்கு அன்பர் போலும் ஆவடுதுறையனாரே  

கற்றவர்க்கு கற்பகமாய் நிற்பவன் என்று திருவையாறு பதிகத்தின் பாடலில் அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார். வள்ளுவரும் கல்வி கற்பதன் பயனே இறைவனைத் தொழுவது தான் என்பதை உணர்த்துகின்றார். அதனால் தான் பல பாடல்களில் அருளாளர்கள் இறைவனை தொழுது ஏத்துபவர்களை கற்றவர்கள் என்றும் மற்றவரை கல்லாதவர் என்றும் குறிப்பதை காணலாம். அப்பர் பிரான் கற்றவர் என்று இங்கே இறைவனை தொழுபவர்களை குறிப்பிட்டு, அவர்களுக்கு சிவபிரான் கற்பகமாய் இருப்பான், அதாவது வேண்டுவன எல்லாம் தருவான் என்று கூறுகின்றார். உற்றிருந்த=உணர்வதற்கு உதவி புரியும் தன்மைகள்; உற்றவர்=அடைந்த அடியார்கள்;

    உற்றிருந்த உணர்வெலாம் ஆனாய் நீயே உற்றவர்க்கோர்
         சுற்றமாய் நின்றாய் நீயே
    கற்றிருந்த கலை ஞானம் ஆனாய் நீயே கற்றவர்க்கோர் கற்பகமாய்
         நின்றாய் நீயே
    பெற்றிருந்த தாய் அவளின் நல்லாய் நீயே பிரானாய் அடி
         என்மேல் வைத்தாய் நீயே
    செற்றிருந்த திருநீலகண்டன் நீயே திருவையாறு அகலாத
        செம்பொன் சோதீ

இந்தக் கருத்தை உள்ளடக்கி, சேந்தனார் தமது, வீழிமிழலை திருவிசைப்பா பதிகத்தில், சிவபிரானை கற்றவர்களுக்கு கற்பக கனியாகவும், மற்றவர்கள் அறிய முடியாத மாணிக்க மலையாகவும் இருப்பவன் சிவபிரான் என்று கூறுகின்றார்.

 கற்றவர் விழுங்கும் கற்பகக் கனியை கரை இலாக் கருணை மா கடலை
 மற்றவர் அறியா மாணிக்க மலையை மதிப்பவர் மனமணி விளக்கை
 செற்றவர் புரங்கள் செற்ற எம் சிவனைத் திருவீழிமிழலை வீற்று இருந்த
 கொற்றவன் தன்னைக் கண்டு கண்டு உள்ளம் குளிர என் கண் குளிர்ந்தனவே

சுந்தரரும் தனது நமச்சிவாயப் பதிகத்தில் கற்றவர் தொழுது ஏத்தும் நற்றவா என்று சிவபிரானை அழைக்கின்றார். நமச்சிவாய என்று தொடர்மொழியாய் சொல்லும்போது, சிவனுக்கு வணக்கம் என்று ஒரு பொதுவான பொருளினைத் தருவதால் இந்த ஐந்தெழுத்து தூல பஞ்சாக்கரம் என்று சொல்லப்படுகின்றது

    மற்றுப் பற்று எனக்கு இன்றி நின் திருப்பாதமே மனம் பாவித்தேன்
    பெற்றலும் பிறந்தேன் இனிப் பிறவாத தன்மை வந்து எய்தினேன்
    கற்றவர் தொழுது ஏத்தும் சீர்க் கறையூரில் பாண்டிக் கொடுமுடி
    நற்றவா உனை நான் மறக்கினும் சொல்லும் நா நமச்சிவாயவே         

பொழிப்புரை:

கொடைத்தன்மை, வளமை, உண்மை, புகழ் மற்றும் வலிமை கொண்ட சான்றோர்கள் வாழ்வதால் மேன்மையடைந்து, மேலும் மேலும் கீர்த்தியுடன் வளரும் பிரமபுரம், வேணுபுரம், செழிப்புடன் விளங்கும் புகலி, சந்திரனை நெருங்கும் வண்ணம் உயர்ந்த மதில்கள் கொண்ட வெங்குரு, உயர்ந்தவர்கள் இறைவனை வேண்டி வழிபடும் சண்பை,   அகன்ற புகழினை உடைய காழி, கொச்சைவயம், செழிப்புடன் பசுமையாக விளங்குவதால் காண்போர் கண் மகிழும் வண்ணம் அமைந்துள்ள கழுமலம், கற்றவர்கள் பெருமானை புகழும் தோணிபுரம், பூந்தராய், சிறந்த பண்களுடன் பொருந்திய பாடல்கள் இடைவிடாது பாடப்படும் சிரபுரம், உலகம் புகழும் புறவம் என்று பன்னிரண்டு பெயர்களை உடைய சீர்காழி தலம், உடல் முழுதும் திருநீறு பூசியமையால் பாலின் நிறத்தில் திருமேனியை உடைய சிவபெருமான் தொடர்ந்து உறையும் தலமாகும்.

 

]]>
https://www.dinamani.com/specials/thinam-oru-thavaram/2019/may/19/129-விளங்கிய-சீர்ப்-பிரமனூர்---பாடல்-7-3151561.html
3151559 ஸ்பெஷல்ஸ் தினம் ஒரு தேவாரம் 129. விளங்கிய சீர்ப் பிரமனூர் - பாடல் 6 என். வெங்கடேஸ்வரன் DIN Saturday, May 18, 2019 12:00 AM +0530  

பாடல் 6:

    புண்டரீகத்து ஆர் வயல் சூழ் புறவ மிகு சிரபுரம்
         பூங்காழி சண்பை
    எண் திசையோர் இறைஞ்சிய வெங்குரு புகலி பூந்தராய்
         தோணிபுரம் சீர்
    வண்டு அமரும் பொழில் மல்கு கழுமலம் நற்கொச்சை வானவர்
         தம் கோன் ஊர்
    அண்ட அயனூர் இவை என்பர் அரும் கூற்றை உதைத்து உகந்த
         அப்பன் ஊரே

விளக்கம்:

புண்டரீகம்=தாமரை மலர்கள்; ஆர்=நிறைந்த; மிகு=புகழினால் மிகுந்த; அண்ட=அண்டங்களை  படைக்கும்; அரும்=வெல்வதற்கு அரிய; பூங்காழி=அழகு நிறைந்த காழி;

பொழிப்புரை:

தாமரை மலர்கள் நிறைந்த கழனிகளால் சூழப்பட்ட புறவம், புகழினால் மிகுந்த சிரபுரம், அழகு நிறைந்த காழி, சண்பை நகரம், உலகின் எட்டு திசைகளிலும் உள்ளவர்களால் வணங்கப் படும் வெங்குரு, புகலி, பூந்தராய், தோணிபுரம், சிறந்த வண்டுகள் வந்து சேரும் அழகிய சோலைகள் மலிந்து நிறைந்த கழுமலம், அடியார்களுக்கு நன்மை பயக்கும் கொச்சைவயம், இந்திரன் வழிபட்ட வேணுபுரம், பல உலகங்களையும் படைக்கும் பிரமன் வழிபட்ட பிரமாபுரம், என்ற பன்னிரண்டு பெயர்களை உடைய தலமாகிய சீர்காழி தலம், தனது அடியான் சிறுவன் மார்க்கண்டேயனுக்காக இயமனை உதைத்தவனும், நம் அனைவர்க்கும் தந்தையும் ஆகிய இறைவன் உறையும் தலமாகும்.    

 

]]>
https://www.dinamani.com/specials/thinam-oru-thavaram/2019/may/18/129-விளங்கிய-சீர்ப்-பிரமனூர்---பாடல்-6-3151559.html
3151555 ஸ்பெஷல்ஸ் தினம் ஒரு தேவாரம் 129. விளங்கிய சீர்ப் பிரமனூர் - பாடல் 5 என். வெங்கடேஸ்வரன் DIN Friday, May 17, 2019 12:00 AM +0530  

பாடல் 5:

    தரைத் தேவர் பணி சண்பை தமிழ்க் காழி வயம் கொச்சை
         தயங்கு பூ மேல்
    விரைச் சேரும் கழுமலம் மெய் உணர்ந்த அயனூர் விண்ணவர் தம்
         கோன் ஊர் வென்றித்
    திரை சேரும் புனல் புகலி வெங்குருச் செல்வம் பெருகு
         தோணிபுரம் சீர்
    உரைச் சேர் பூந்தராய் சிலம்பனூர் புறவம் உலகத்தில்
         உயர்ந்த ஊரே

விளக்கம்:

தரைத்தேவர்=பூசுரர் என்ற வடமொழிச் சொல்லின் பொருள்; நிலவுலகினில் தேவர்கள் போன்று சிறப்புடன் வாழும் அந்தணர்கள் மற்றும் சான்றோர்கள்; ஒழுக்கத்திலும் இறை வழிபாட்டிலும் சிறந்த அந்தணர்கள், தேவர்கள் போன்று உயர்ந்தவர்களாக அந்நாளில் மதிக்கப் பட்டனர் என்பது இந்த பாடலில் உணர்த்தப்படுகின்றது. தயங்கு=அசைந்தாடும்; விரை=நறுமணம்; பிரமன் வழிபட்டமையால் இந்த தலத்திற்கு பிரமனூர் என்று பெயர் வந்ததை நாம் அறிவோம். தனது படைப்புத் தொழில் சரிவர நடக்கவேண்டும் என்றால் அதற்கு இறைவனின் அருள் வேண்டும் என்ற உண்மையை உணர்ந்த பிரமன் என்பதை குறிப்பிடும் வகையில் மெய் உணர்ந்த அயன் என்று சம்பந்தர் இங்கே கூறுகின்றார். வென்றி=வெற்றி;   
  
பொழிப்புரை:

தங்களது ஒழுக்கும் மற்றும் இறையுணர்வு காரணமாக தேவர்களைப் போன்று சிறந்தவர்களாக மதிக்கப்படும் அந்தணர்கள் பணிந்து பெருமானை வணங்கும் சண்பை, தமிழ் வளர்க்கும் காழி, கொச்சைவயம், அசைந்தாடும் பூக்கள் வீசும் நறுமணம் கலந்த கழுமலம், தான் செய்யும் படைப்புத் தொழில் சரிவர நடக்க இறைவனின் அருள் தேவை என்பதை உணர்ந்த பிரமன் வழிபட்ட பிரமனூர், தேவர்களின் தலைவனாகிய இந்திரன் வழிபட்ட வேணுபுரம், கடலில் கிடைக்கும் அரிய பொருட்களை கரைக்கு கொண்டுவந்து சேர்ப்பதில் வெற்றியினை அடையும் அலைகள் ஏற்படுத்தும் நீர்ப்பெருக்கினை மிகுதியாக உடைய புகலி, வெங்குரு, செல்வம் மல்கும் தோணிபுரம், இறைவனைக் குறித்த புகழ்ச் சொற்கள் வந்தைடையும் பூந்தராய், சிரபுரம், புறவம், என்று பன்னிரண்டு பெயர்களால் அழைக்கப் படும் சீர்காழி தலம், உலகினில் சிறந்த தலமாகும்.

 

]]>
https://www.dinamani.com/specials/thinam-oru-thavaram/2019/may/17/129-விளங்கிய-சீர்ப்-பிரமனூர்---பாடல்-5-3151555.html
3151552 ஸ்பெஷல்ஸ் தினம் ஒரு தேவாரம் 129. விளங்கிய சீர்ப் பிரமனூர் - பாடல் 4 என். வெங்கடேஸ்வரன் DIN Thursday, May 16, 2019 12:00 AM +0530

பாடல் 4:

    மாமலையாள் கணவன் மகிழ் வெங்குரு மாப் புகலி தராய்
            தோணிபுரம் வான்
    சேமம் மதில் புடை திகழும் கழுமலமே கொச்சை தேவேந்திரன்
            ஊர் சீர்ப்
    பூமகனூர் பொலிவுடைய புறவம் விரல் சிலம்பனூர்
            காழி சண்பை
    பா மருவு கலை எட்டு எட்டு உணர்ந்து அவற்றின் பயன்
            நுகர்வோர் பரவும் ஊரே

விளக்கம்:

பூமகன்=பிரமன்; பூமகனூர்=பிரமபுரம், மாமலையாள்=இமயமலையில் வளர்ந்த பார்வதி தேவி; சேமம்=காவல்; விறல்=வலிமை; பாமருவு=பாடல்களில் பொருந்திய; உணர்ந்து அவற்றின் பயன் நுகர்வோர்=அறுபத்து நான்கு கலைகள் மூலம் சிவபெருமானே முழுமுதற்கடவுள் என்பதை உணர்ந்து, முக்தி நிலை அளித்து என்றும் அழியாத இன்பம் அளிக்கவல்ல பெருமான் அவன் ஒருவனே என்பதை தெரிந்து கொண்டு, அவனை வழிபட்டு அந்த பயனை நுகர்தல்;  மா=பெருமையினை உடைய;   

பொழிப்புரை;

மலைகளில் தலை சிறந்த மலையாக கருதப்படும் இமயமலைச் சாரலில் வளர்ந்த பார்வதி தேவியின் கணவனாகிய பெருமான் மகிழ்ந்து உறையும் வெங்குரு, பெருமையினை உடைய புகலி, பூந்தராய், தோணிபுரம், வானளாவ உயர்ந்து நின்று நகரத்திற்கு சிறந்த காவலாக உடைய மதில்கள் கொண்ட கழுமலம், கொச்சைவயம், வேணுபுரம், தாமரைப் பூவில் உறையும் பிரமன் வழிபட்ட பிரமபுரம், அழகுடன் பொலியும் புறவம், வலிமை உடைய இராகு கோள் வழிபட்ட சிரபுரம், காழி, சண்பை ஆகிய பன்னிரண்டு பெயர்களைக் கொண்ட சீர்காழித் தலம், சிறந்த நூல்கள் எடுத்துரைக்கும் அறுபத்துநான்கு கலைகளையும் நன்கு கற்று அந்த கலைகள் மூலம் சிவபெருமானே முழுமுதற்கடவுள் என்பதை உணர்ந்து, அவனை வழிபட்டு கலைகளின் பயனை நுகரும் சான்றோர்கள் பெருமானைப் புகழ்ந்து பாடும் ஊராகும்.       

 

]]>
https://www.dinamani.com/specials/thinam-oru-thavaram/2019/may/16/129-விளங்கிய-சீர்ப்-பிரமனூர்---பாடல்-4-3151552.html
3151549 ஸ்பெஷல்ஸ் தினம் ஒரு தேவாரம் 129. விளங்கிய சீர்ப் பிரமனூர் - பாடல் 3 என். வெங்கடேஸ்வரன் DIN Wednesday, May 15, 2019 12:00 AM +0530  

பாடல் 3:

 வாய்ந்த புகழ் மறை வளரும் தோணிபுரம் பூந்தராய் சிலம்பன் வாழூர்
 ஏய்ந்த புறவம் திகழும் சண்பை எழில் காழி இறை கொச்சை அம் பொன்
 வேய்ந்த மதில் கழுமலம் விண்ணோர் பணிய மிக்க அயனூர் அமரர் கோன் ஊர்
 ஆய்ந்த கலையார் புகலி வெங்குரு அது அரன் ஆளும் அமரும் ஊரே
  

விளக்கம்:

சிலம்பன்=நாகநாதர்; சிலம்பன் வாழூர்=நாகநாதர் வாழும் சிரபுரம்; அமரர் கோனூர்= வேணுபுரம்; இறை=தலைமைத் தன்மை;

பொழிப்புரை;

புகழ் வாய்ந்த நான்மறைகள், தலத்து மக்களால் போற்றப்பட்டு வளர்க்கப்படும் தோணிபுரம், பூந்தராய், நாகநாதப் பெருமான் வாழும் சிரபுரம், புகழ் பெற்ற புறவம், பெருமையுடன் விளங்கித் திகழும் சண்பை, அழகுடன் விளங்கும் காழி, பல தலங்களுக்கு தலைமையாக விளங்கும் புகழினை உடைய கொச்சைவயம், அழகிய பொன்னால் வேயப்பட்ட மதிலினை  உடைய கழுமலம், விண்ணோர்கள் பணிவதால் மிகுந்த சிறப்புடன் விளங்கும் பிரமபுரம், வேணுபுரம், பல கலைகளையும் ஆராய்ந்து அறியும் வல்லமை படைத்த சான்றோர்கள் வாழும் புகலி மற்றும் வெங்குரு என்ற பெயர்களை உடைய சீர்காழி நகரம் பெருமான் எழுந்தருளி ஆளும் தலமாகும்.    

 

]]>
https://www.dinamani.com/specials/thinam-oru-thavaram/2019/may/15/129-விளங்கிய-சீர்ப்-பிரமனூர்---பாடல்-3-3151549.html
3151548 ஸ்பெஷல்ஸ் தினம் ஒரு தேவாரம் 129. விளங்கிய சீர்ப் பிரமனூர் - பாடல் 2 என். வெங்கடேஸ்வரன் DIN Tuesday, May 14, 2019 12:41 PM +0530
பாடல் 2:

    திரு வளரும் கழுமலமே கொச்சை தேவேந்திரன் ஊர்
         அயனூர் தெய்வத்
    தரு வளரும் பொழில் புறவம் சிலம்பனூர் காழி தரு
          சண்பை ஒள்பா
    உரு வளர் வெங்குருப் புகலி ஓங்கு தராய் தோணிபுரம்
          உயர்ந்த தேவர்
 வெருவ வளர் கடல் விடம் அது உண்டு அணி கொள்
          கண்டத்தோன் விரும்பும்             ஊரே  

விளக்கம்:

அயன்=பிரமன்; அயனூர்=பிரமபுரம்; திரு=செல்வம், அழகு; சுவர்பானு என்ற அரக்கன், பாற்கடலிலிருந்து பொங்கி வந்த அமுதத்தை, மோகினியாக வந்த திருமால், வஞ்சகமாக தேவர்களுக்கு மட்டும் அளித்து வந்ததைக் கண்டு, தானும் தேவர்களின் நடுவே அமர்ந்து அமுதம் பெறுவதற்கு முயற்சி செய்தான். தங்களின் இடையே அமர்ந்து அவன் அமுதம் பெற்றதை உணர்ந்து, சூரியனும் சந்திரனும், திருமாலிடம் அவன் வரிசை மாறி அமர்ந்ததை சுட்டிக் காட்டி உணர்த்தியதால், திருமால் அவனது தலையினை வெட்டினார். ஆனால் அமுதம் உள்ளே சென்றதால் சுவர்பானு உடனே இறக்கவில்லை. அவனது தலை சீர்காழி சென்று இறைவனிடம் இறைஞ்சி முறையிட, அரக்கனது உடலுடன் பாம்பின் தலையை பொருத்தியும், அரக்கனது தலையுடன் பாம்பின் உடலை பொருத்தியும் பெருமான் வாழ்வளித்தார். அவர்கள் இருவரும் முறையே இராகு என்றும் கேது என்று அழைக்கப்பட்டனர். இந்த சுவர்பானு எனப்படும் அரக்கனே சிலம்பன் என்று தேவாரப் பாடல்களில் அழைக்கப்படுகின்றான். சுவர்பானுவின் தலை சென்று இறைவனை வழிபட்டமையால் சிரபுரம் என்ற பெயரும் தலத்திற்கு வந்தது. இராகு என்ற பாம்பு வழிபட்டமையால், நாகநாதன் என்று பெருமானும் அழைக்கப் படுகின்றார். எனவே சிலம்பன் என்ற சொல் பெருமானை வழிபாட்டு அருள் பெற்ற சுவர்பானுவை குறிப்பதாகவும், நாகநாத சுவாமி என்ற பெயரினை பெற்ற பெருமானை குறிப்பதாகவும் இரண்டு விதமாக விளக்கம் அளிக்கப்படுகின்றது. இந்த பாடலில் சிரபுரம்  என்ற சொல் இல்லாமல் இருப்பதன் பின்னணியில், சிலம்பனூர் என்ற சொல்லுக்கு சிரபுரம் என்று பொருள் கொள்வது மிகவும் பொருத்தமாக உள்ளது. தெய்வத்தரு=கற்பக மரம். கற்பக மரம் தனது நிழலில் அமர்வோர் நினைத்ததை அளிக்கும் என்று கூறுவார்கள். சீர்காழி தலத்தில் உள்ள மரங்கள் செழிப்புடன் வளர்ந்து மக்களின் தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்வதால், கற்பக மரங்களுக்கு ஒப்பாக இங்கே குறிப்பிடப்படுகின்றன. வேணுபுரம் என்ற பெயர் இந்திரன் வந்து பெருமானை வழிபட்டதால் வந்த பெயர். எனவே தேவேந்திரன் ஊர் என்று வரும் இடங்களில் வேணுபுரம் என்று பொருள் கொள்வது பொருத்தம். ஒண்பா= சிறந்த பாடல்கள்; உருவளர்=புகழ் வளரும்; சான்றோர்கள் மேலும் மேலும் இறைவனைப் புகழ்ந்து பாடுவதால், பெருமானின் சிறப்பும் தலத்தின் சிறப்பும் மேலும் மேலும் வளர்கின்றது என்று சம்பந்தர் இங்கே குறிப்பிடுகின்றார். உயர்ந்த தேவர்=பிரமன் திருமால் இந்திரன் உள்ளிட்ட உயர்ந்த தேவர்கள்; வெருவளர்=அச்சம் வளரும் நிலை;          
 
பொழிப்புரை;

செல்வ வளம் கொழிக்கும் கழுமலம், கொச்சைவயம், தேவேந்திரன் ஊர் என்று அழைக்கப்படும் வேணுபுரம், பிரமபுரம், கற்பக மரத்தினை ஒத்தது போன்று பல விதமான வளங்களை மக்களுக்கு அளிக்கும் சோலைகள் சூழ்ந்த புறவம், சிலம்பனூர் என்று அழைக்கப்படும் சிரபுரம், காழி, தகுதியை உடைய சண்பை, அடியார்கள் பெருமானைப் புகழ்ந்து பாடும் சிறந்த பாடல்களால் மேலும் மேலும் புகழ் வளர்க்கின்ற வெங்குரு, புகலி,  உயர்ந்த தலமாக ஓங்கி நிற்கும் பூந்தராய், தோணிபுரம் ஆகிய பெயர்களுடன் விளங்கும்  சீர்காழி நகரம், திருமால் பிரமன் இந்திரன் உள்ளிட்ட உயர்ந்த தேவர்கள் அஞ்சும் வண்ணம் பாற்கடலிலிருந்து பொங்கி எழுந்த விடத்தினை உட்கொண்டு, அந்த விடத்தினை தேக்கியதால் ஏற்பட்ட கருமை நிறத்து கறையினை தனது கழுத்திற்கு அணிகலனாக வைத்துக் கொண்டுள்ள நீலகண்டனாக விளங்கும் இறைவன் விரும்பும் ஊராகும்.  

 

]]>
https://www.dinamani.com/specials/thinam-oru-thavaram/2019/may/14/129-விளங்கிய-சீர்ப்-பிரமனூர்---பாடல்-2-3151548.html
3151547 ஸ்பெஷல்ஸ் தினம் ஒரு தேவாரம் 129. விளங்கிய சீர்ப் பிரமனூர் - பாடல் 1 என். வெங்கடேஸ்வரன் Monday, May 13, 2019 12:00 AM +0530  

பின்னணி:

தனது நான்காவது மற்றும் ஐந்தாவது தல யாத்திரைகளுக்கு இடையே பல நாட்கள் சீர்காழி நகரில் தங்கிய திருஞானசம்பந்தர், சீர்காழி தலத்தின் மீது பல வகையான பாடல்களை பாடுகின்றார். அத்தகைய பதிகங்களில் பல தமிழ் இலக்கியத்திற்கு முன்னோடியாக விளங்கின என்று சேக்கிழார் பெரிய புராணத்தில் கூறுகின்றார். வடமொழியில் சக்கர பந்தம் என்று அழைக்கப்படும் வகையைச் சார்ந்த பதிகம். தமிழ் மொழியில் சக்கரமாற்று என்றும் சக்கர பந்தம் என்றும் அழைக்கின்றனர். திருஞானசம்பந்தர் இந்த பதிகத்தினை சக்கரம் என்று அழைப்பதை நாம் பதிகத்தின் கடைக் காப்பினில் காணலாம். இந்த பதிகமும் மற்ற மிறைக் கவிகள் போன்று பன்னிரண்டு பாடல்கள் கொண்டது. தலத்தின் பன்னிரண்டு  பெயர்களும் ஒவ்வொரு பாடலிலும் வருகின்றன. சுழலும் வண்டிச் சக்கரத்தின் சட்டங்கள் மாறி மாறி நமது கண்ணின் முன்னே தோன்றுவது  போன்று தலத்தின் பெயர்கள் சுழன்று சுழன்று முன்னும் பின்னுமாக வருதலால் சக்கரம் என்று சம்பந்தரால் அழைக்கப்பட்டது போலும். பிரமனூர் என்று தொடங்கும் பதிகமும் சக்கரமாற்று வகையில் அமைந்துள்ள பதிகமாகும். இந்த பதிகம் (2.70), பாண்டியன் ஞானசம்பந்தரை நோக்கி உமது பதி யாது என்று வினவிய போது, அந்த கேள்விக்கு விடையாக சீர்காழி தலத்தின் பன்னிரண்டு பெயர்களையும் குறிப்பிட்டு சீர்காழியின்  சிறப்பினை உணர்த்திய பதிகமாகும்.  

இந்த பதிகத்தினை மற்ற மிறைக் கவிகளுடன் சேர்த்து ஆதி விகற்பம் என்று சேக்கிழார் கூறுகின்றார். விகற்பம் என்றால் மாறுபட்டது என்று பொருள். பெரும்பான்மையான பதிகங்களின் அமைப்பிலிருந்து மாறுபட்டதால் சேக்கிழார் இவ்வாறு அழைத்தார் போலும்.  பல்பெயர்ப் பத்து என்று அழைக்கப்படும் எரியார் மழு ஒன்று என்று தொடங்கும் பதிகமும்  பூமகனூர் புத்தேளுக்கு என்று தொடங்கும் கோமுத்திரி அந்தாதி பதிகமும் இந்த ஆதி விகற்பங்கள் என்று சேக்கிழார் கருதும் பதிகங்களில் அடங்கியவை என்று அறிஞர்கள்  கூறுகின்றனர். பெருமான் உறையும் தலங்களின் பெயர்களும் பெருமானின் திருநாமங்கள் போன்று புனிதமான மந்திரங்கள் என்று கருதப்படுவதால், தலத்தின் பெயர்களை பலமுறை திரும்பத் திரும்பச் சொல்வது மந்திர ஜெபம் செய்வதற்கு ஒப்பாகும். அதனால் தான் திருஞான சம்பந்தரும் இந்த பதிகத்தை ஓதுவோர் தவம் செய்தவராவர் என்று பதிகத்தின் கடைக்காப்புப் பாடலில் கூறுகின்றார்.            

பாடல் 1:

    விளங்கிய சீர்ப் பிரமனூர் வேணுபுரம் புகலி வெங்குரு மேல் சோலை
    வளம் கவரும் தோணிபுரம் பூந்தராய் சிரபுரம் வண் புறவம் மண் மேல்
    களங்கம் இல் ஊர் சண்பை கமழ் காழி வயம் கொச்சை கழுமலம் என்று இன்ன
    இளம் குமரன் தன்னைப் பெற்று இமையவர் தம் பகை எறிவித்த இறைவன் ஊரே

விளக்கம்:

சீர்=பெருமை; விளங்கிய சீர்=பெருமையுடன் விளங்கும்; மேல் சோலை=உயர்ந்து ஓங்கி வளர்ந்த மரங்கள் கொண்ட சோலை: களங்கமில் ஊர்=உயிரினுக்கு களங்கம் எனப்படும் ஆணவ மலத்தினை இல்லை என்று சொல்லும் வண்ணம் அடக்க உதவும் ஊர்; இளங்குமரன்=முருகப் பெருமான்; பகை=சூரபதுமன்; எறிவித்தல்=எறிதல், அடித்தல், முரித்தல். வீசுதல் என்று பல பொருள்களைத் தரும். இந்த சொல் இங்கே அழித்தல் என்ற பொருளைத் தருகின்றது. வண்=வளமை மிகுந்த; புகலி என்பது சீர்காழி நகரத்தின் பன்னிரண்டு பெயர்களில் ஒன்று. தேவர்கள் இறைவனிடம் புகலடந்தமையால் ஏற்பட்ட பெயர். அவ்வாறு தன்னிடம் புகலடைந்த தேவர்களின் துயரத்தினை நீக்கும் பொருட்டு முருகப் பெருமானை தோற்றுவித்த இறைவனின் செயல் இங்கே குறிப்பிடப்படுவது மிகவும் பொருத்தமாக உள்ளது. முருகப் பெருமானைத் தோற்றுவித்த காரணத்தை குறிப்பிடும் சில திருமுறைப் பாடல்களை நாம் இங்கே காணலாம்.

மதுரையில் பாண்டிய மன்னனின் அவையில் அருளிய பதிகத்தின் பாடலில் (2.74.6) முருகப் பெருமானை தோற்றுவித்து தேவர்களின் பகையை (சூரபதுமன் மற்றும் அவனது படை) கெடுத்த இறைவன் என்று சிவபெருமானை சம்பந்தர் குறிப்பிடுகின்றார். காய்ந்த= சினத்துடன் வந்த; சிறுவன் மார்க்கண்டேயனின் உயிரினைக் கவர வந்த இயமன், சிறுவன் சிவபெருமானை வழபாடு செய்வதைக் கண்டு மிகுந்த கோபம் கொண்டதை இங்கே குறிப்பிடுகின்றார். இருங் கமலம்=சிறந்த தாமரைப்பூ. சேந்தன்=முருகப் பெருமான்; பயந்து= பெற்றெடுத்து;    

     காய்ந்து வரு காலனை அன்று உதைத்தவன் ஊர் கழுமலமாத்
             தோணிபுரம் சீர்
     ஏய்ந்த வெங்குருப் புகலி  இந்திரனூர் இருங் கமலத்து
             அயனூர் இன்பம்
     வாய்ந்த புறவம் திகழும் சிரபுரம் பூந்தராய் கொச்சை
             காழி சண்பை
   சேந்தனை முன் பயந்து உலகில் தேவர்கள் தம் பகை கெடுத்தோன்
             திகழும் ஊரே

சுரருலகு என்று தொடங்கும் சீர்காழி பதிகத்தின் மூன்றாவது பாடலில் (3.67.3) தேவர்களின் பகையினைக் களையும் வகையில் ஆறுமுகப் பெருமானை தோற்றுவித்து தேவர்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் தன்னை வழிபடச் செய்த இறைவன் என்று ஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார். தனது ஐந்து முகங்களோடு அதோமுகம் என்று மேலும் ஒரு முகத்தினைச் சேர்த்து முருகப் பெருமானை படைத்த தன்மை, மிக அருள என்ற தொடர் மூலம் உணர்த்தப் படுகின்றது. நிகழ்=போன்ற; நகமணி=நாகமணி; முகை=மொட்டு; முகைமலர்=அன்று வரை மொட்டாக இருந்து அப்போது தான் மலர்ந்த மலர், நாண்மலர்; பகவன்=சிவபெருமான்; முகம்=திருவருள் நோக்கம்; பகை=தேவர்களின் பகைவராகிய அசுரர்கள்; மிக அருள=மிகுந்த கருணையுடன் தர; நிகரில் இமையோர்=அளவு கடந்த மகிழ்ச்சியில் திளைத்த தேவர்கள்; புக=சரண் புக; அகவு=விருப்பம்;

    பகலொளி செய் நகமணியை முகை மலரை நிகழ் சரண
      அகவு முனிவர்க்கு
    அகல மலி சகல கலை மிக உரை செய் முகமுடைய
       பகவன் இடமாம்
    பகை களையும் வகையில் அறுமுக இறையை மிக அருள
       நிகரில் இமையோர்
    புக உலகு புகழ எழில் திகழ நிகழ் அலர் பெருகு
       புகலி நகரே  

 
அதிகை வீரட்டம் தலத்தின் மீது அருளிய திருவிருத்தப் பாடல் ஒன்றினில், (4.104.5) சூரபதுமனைக் கொன்ற முருகவேளின் தந்தை என்று அப்பர் இறைவனை குறிப்பிடுகின்றார். முருகப் பெருமானிடம் தோற்றுக் களைத்த நிலையில், ஏதும் செய்ய இயலாத சூரபதுமன்  மாயமாக மறைந்து போய் கடலின் நடுவே மாமரமாக நின்ற நிலை இங்கே குறிப்பிடப் படுகின்றது. விரிநீர்ப் பரவை சூர் என்ற தொடர் மூலம் இந்த நிலை உணர்த்தப் படுகின்றது.  அதிகை வீரட்டத்துப் பெருமானை வணங்காவிடின் என்ன ஏற்படும் என்பதை அப்பர் பிரான் இந்த பாடலில் நமக்கு உணர்த்துகின்றார். வறுமையின் காரணமாக இரந்து வாழ்ந்தாலும்   சிலர் அனைவரையும் அணுகி உதவி கோருவதில்லை. தரம் வாய்ந்து ஒழுக்கத்தில் சிறந்து  விளங்கும் சிலரையே அவர்கள் அணுகுவதை நாம் இன்றும் காண்கின்றோம். ஆனால் வறுமையின் கொடுமையால் தேர்ந்தெடுத்த ஒரு சிலரிடம் உதவி கோராமல் அனைவரிடமும் இரக்கும் நிலை பலருக்கும் இருப்பதை நாம் காண்கின்றோம். இந்த நிலைக்கு காரணம் யாது என்பதை அப்பர் பிரான் இங்கே கூறுகின்றார். சென்ற பல பிறவிகளில் வீரட்டத்துப் பெருமானை வணங்காமல் இருந்ததே, இந்த பிறவியில் அத்தகையோர், தகுதி படைத்தோர் ஏனையோர் என்று ஆராய்ந்து பார்க்காமல் அனைவரின் இல்லங்களின் முன்னே சென்று வீடு வீடாக திரிந்து இரந்து உண்கின்றனர்; இந்த நிலை அவர்களின் வாழ்நாள் முழுவதும் வேரூன்றி நிலையாக அவர்களுடன் நிற்கின்றது; இத்தகைய நிலை, பெருமானைத் தொழாமல் நின்ற பாவத்தால் வரும் வேதனை, மறுமையில் உங்களுக்கு ஏற்படுவதை தவிர்க்க விரும்பினால் பெருமானைத் தொழுது அந்த நிலையினை தவிர்ப்பீர் என்று அப்பர் பிரான் உலகினுக்கு உணர்த்தும் பதிகம். அகம் அகவன் திரிந்து=பல வீடுகள் முன்னே சென்று நின்று; பரவை=கடல்    

    ஆர் அட்டதேனும் இரந்து உண்டு அகம் அகவன் திரிந்து
    வேர் அட்ட நிற்பித்திடுகின்றதால் விரி நீர்ப் பரவை
    சூர் அட்ட வேலவன் தாதையைச் சூழ் வயலார் அதிகை
    வீரட்டத்தானை விரும்பா வரும் பாவ வேதனையே   

கோழம்பம் தலத்தின் மீது அருளிய குறுந்தொகைப் பதிகத்தின் பாடலில் (5.64.10) அப்பர் பிரான் போரினில் வல்ல சூரபதுமனைக் கொன்ற வேலினை உடைய முருகப்பெருமானின் தந்தை என்று சிவபெருமானை குறிப்பிடுகின்றார். சமரன்=போரில் வல்லவன்; தடிந்த= கொன்ற;  

    சமர சூரபன்மாவைத் தடிந்த வேல்
    குமரன் தாதை நல் கோழம்பம் மேவிய
    அமரர் கோவினுக்கு அன்புடைத் தொண்டர்கள்
    அமரலோகம் அது ஆளுடையார்களே  

பொன்னும் மெய்ப்பொருளும் என்று தொடங்கும் பதிகத்தின் பாடலில் சுந்தரர் (7.59.10) தேவர்கள் பால் வைத்திருந்த அன்பின் காரணமாக முருகப் பெருமானை தோற்றுவித்து அவனுக்கு தந்தையாக பெருமான் விளங்கினார் என்று சுந்தரர் கூறுகின்றார். ஒட்டி=வழக்கு தொடுத்து; திருமணம் புரிந்து கொள்ளவிருந்த தன்னை அடிமை என்று வழக்கு தொடுத்து ஆட்கொண்ட பெருமான், வழக்கினில் வென்ற பின்னர் எதிரே தோன்றாமல் மறைந்து விட்டார் என்று சுந்தரர் இந்த பாடலில் கூறுகின்றார். உச்சிப் போதன்=நண்பகல் போன்று ஒளிவீசுபவன்; பட்டியை=பட்டாடை உடையவன்; பெருமான் தான் அணிந்துள்ள பட்டாடையின் மேல் நாகத்தை கச்சாக இறுகக் கட்டியுள்ளார் என்று திருமுறைப் பாடல்கள் கூறுகின்றன. செட்டி என்பது முருகப் பெருமானை குறிக்கும் செட்டியப்பன்=சிவபெருமான்.

    ஒட்டி ஆட்கொண்டு போய் ஒளித்திட்ட உச்சிப் போதனை
        நச்சரவு ஆர்த்த
    பட்டியைப் பகலை இருள் தன்னைப் பாவிப்பார் மனத்து
        ஊறும் அத் தேனை
    கட்டியைக் கரும்பின் தெளி தன்னைக் காதலால் கடற்
        சூர் தடிந்திட்ட
    செட்டி அப்பனைப் பட்டனைச் செல்வ ஆரூரானை
        மறக்கலும் ஆமே

பொழிப்புரை

பெருமையுடன் விளங்கும் பிரமபுரம், வேணுபுரம், புகலி, வெங்குரு, உயர்ந்து ஓங்கி வளர்ந்த மரங்கள் கொண்டதும் செழுமை நிறைந்ததும் ஆகிய தோணிபுரம், பூந்தராய், சிரபுரம், வளமை மிகுந்த புறவம், நிலவுலகத்தில் உயிரினுக்கு களங்கத்தை விளைவிக்கும் ஆணவ மலத்தினை அடக்கி இல்லாதது போன்று செய்யும் சண்பை, நறுமணம் கமழும் காழி, கொச்சைவயம், கழுமலம் என்று பன்னிரண்டு பெயர்களை உடைத்த இந்த தலம், முருகப் பெருமானைத் தோற்றுவித்து தேவர்களின் பகையாகிய சூரபதுமன் அவனது தம்பியர்கள் மற்றும் அவனைச் சார்ந்த அரக்கர் கூட்டத்தினை அழித்த இறைவன் உறையும் தலமாகும்.

 

]]>
https://www.dinamani.com/specials/thinam-oru-thavaram/2019/may/13/129-விளங்கிய-சீர்ப்-பிரமனூர்---பாடல்-1-3151547.html
3148191 ஸ்பெஷல்ஸ் தினம் ஒரு தேவாரம் 128. எந்தமது சிந்தை பிரியாத - பாடல் 11 என். வெங்கடேஸ்வரன் DIN Sunday, May 12, 2019 12:00 AM +0530
பாடல் 11:

    வாரின் மலி கொங்கை உமை நங்கையொடு சங்கரன் மகிழ்ந்து அமரும் ஊர்
    சாரின் முறல் தென் கடல் விசும்புற முழங்கு ஒலி கொள் சண்பை நகர் மேல்
    பாரின் மலிகின்ற புகழ் நின்ற தமிழ் ஞானசம்பந்தன் உரை செய்
    சீரின் மலி செந்தமிழ்கள் செப்பும் அவர் சேர்வர் சிவலோக நெறியே   

விளக்கம்:

வார்=மார்பு கச்சை; நங்கை=மகளிரில் சிறந்தவள்; சங்கரன்=நன்மையைச் செய்பவன்; சாரின்= வீதி முதலான இடங்கள்;  மலி=மிகுந்த, மிகுந்த புகழ் என்பதை நிலையான புகழ் என்று பொருள் கொள்ளவேண்டும்.
 
பொழிப்புரை:

கச்சை பொருந்திய மார்பங்களை உடையவளும், பெண்களில் சிறந்தவளும் ஆகிய உமை அன்னையுடன், அனைத்து உயிர்களுக்கும் நன்மை விளைவிப்பவனாகிய சங்கரன் மகிழ்ந்து உறைவதும், கடலலைகள் எழுப்பும் ஒலி போன்று ஆரவாரம் நிறைந்த ஒலிகள் வீதிகளிலிருந்து உயர்ந்து எழுந்து வானளாவச் செல்லும் சிறப்பினை உடையதும், ஆகிய சண்பை நகரின் மீது, உலகினில் நிலையான புகழினைக் கொண்டவனும் தமிழ் மொழியில் வல்லவனும் ஆகிய ஞானசம்பந்தன் உரைத்த, சிறப்பு வாய்ந்த இந்த பத்து செந்தமிழ் பாடல்களை முறையாக ஓதும் அடியார்கள் சிவலோகத்தினை அடைவார்கள்.         

முடிவுரை:

அழகன் என்று குறிப்பிடப்படும் இறைவனின் துணையாகிய இறைவியின் அழகினை பதிகத்தின் முதல் ஆறு பாடல்களில் குறிப்பிடுவது இந்த பதிகத்தின் தனிச் சிறப்பாகும். பரமனின் பெருமையையும் தேவியின் அழகினையும் பதிகத்தின் முதல் ஆறு பாடல்களில் குறிப்பிட்ட சம்பந்தர், பதிகத்தின் ஏழாவது பாடலில் தலத்தில் வாழும் அடியார்களின் சிறப்பினை, என்றும் மாறாத கொடைத் தன்மையை குறிப்பிடுகின்றார். எட்டாவது பாடலில் தலத்தில் நடைபெறும் திருவிழாவின் சிறப்பு உணர்த்தப் படுகின்றது.  ஒன்பதாவது மற்றும் பத்தாவது பாடல்களில் பெருமான் பிராட்டியை விட்டு பிரியாது இருக்கும் தன்மை குறிப்பிடப் படுகின்றது. பத்தாவது பாடலில் நன்மை பயக்கும் நெறியாகிய சிவநெறியை பின்பற்றி அவனது திருநாமங்களை சொல்லி உய்வினை அடையவேண்டும் என்ற அறிவுரை வழங்கப் படுகின்றது.  பதிகத்தின் கடைப் பாடலில் இந்த பதிகத்து பாடல்களை முறையாக ஓதி, சிவலோகம் செல்வதற்கான பாதையை வகுத்துக் கொள்ளலாம் என்று பதிகம் ஓதுவதன் பலன் கூறப்படுகின்றது. பெருமானின் திருவடிகளை வழிபாட்டு நல்ல குணங்கள் வரப்பெற்று,  இந்த பதிகத்தின் பாடல்களை முறையாக ஓதி சிவலோகம் செல்வதற்கான பாதியினை வகுத்துக் கொண்டு பெருமானின் திருவடிகளில் இணைந்து என்றும் அழியாத ஆனந்தத்தை அனுபவிப்போமாக.

 

]]>
https://www.dinamani.com/specials/thinam-oru-thavaram/2019/may/12/128-எந்தமது-சிந்தை-பிரியாத---பாடல்-11-3148191.html
3148190 ஸ்பெஷல்ஸ் தினம் ஒரு தேவாரம் 128. எந்தமது சிந்தை பிரியாத - பாடல் 10 என். வெங்கடேஸ்வரன் DIN Saturday, May 11, 2019 12:00 AM +0530
பாடல் 10:

    போதியர்கள் பிண்டியர்கள் போது வழுவாத வகை உண்டு பல பொய்
    ஓதி அவர் கொண்டு செய்வது ஒன்றுமிலை நன்றது உணர்வீர் உரைமினோ
    ஆதி எமை ஆளுடைய அரிவையொடு பிரிவிலி அமர்ந்த பதி தான்
    சாதி மணி தெண்டிரை கொணர்ந்து வயல் புக எறி கொள் சண்பை நகரே

விளக்கம்:

பொய்=நிலையற்ற உலகப் பொருட்களை நிலையாக கருதி உரைக்கும் சொற்கள் என்பதால் பொய்மொழி என்று கூறுகின்றார். நிலையான மெய்ப்பொருளாகிய சிவபெருமானின் தன்மையை உணர்ந்து அவனை வழிபடுவதால் உயிருக்கு நன்மை விளைவிக்கும் முக்தி உலகுக்கு செல்லும் வழியினை நாம் வகுத்துக் கொள்ளமுடியும். இதனை விட்டுவிட்டு, நிலையற்ற உலகப் பொருட்களின் மீது பற்று கொண்டு வாழ்ந்தால் நம்மால் உயிரினுக்கு நன்மை விளைவிக்கும் செயல் எதையும் செய்ய முடியாது அல்லவா. எனவே தான் சமணர்கள் மற்றும் புத்தர்களின் சொற்களை பின்பற்றி நாம் செய்யும் செயல்கள் உயிரினுக்கு நன்மை விளைவிக்காத செயல்கள் என்று சம்பந்தர் இங்கே குறிப்பிடுகின்றார். சாதி=உயர்ந்த; எறிகொள்=வீசி எறியும் தன்மை; தெண்டிரை=தெளிந்த நீர்;  போதியர்கள்= போதி மரத்தின் அடியில் அமர்ந்து புத்தர் ஞானம் பெற்றமையால், போதி மரத்தினை புனிதமாக கருதும் புத்தர்கள்; பிண்டி=அசோகமரம்; பிண்டியர்கள்=அசோக மரத்தினை புனிதமாக கருதும் சமணர்கள்;  போது வழுவா வகை=நேரம் தவறாமல்; நன்றது=உயிருக்கு நன்மை பயக்கும் சிவநெறி; புத்தர்கள் சமணர்கள் குறித்து உலகத்தவர்க்கு அறிவுரை கூறிய பாடல் இது.

பொழிப்புரை:

போதி மரத்தினை புனிதமாக கருதி பாராட்டும் புத்தர்களும், அசோக மரத்தினை புனிதமாக கருதி பாராட்டும் சமணர்களும், காலம் தவறாமல் உணவினை உட்கொண்டு, பொய்யான பல சொற்களை வாழ்வினை உய்விக்கும் என்று கூறுவார்கள். ஆனால் அவர்களது சொற்கள் எவையும்,  நிலையான முக்தி நெறிக்கு அழைத்துச் செல்லும் வழி கோலா. எனவே அந்த சொற்களைத் தவிர்த்து நன்மை அளிக்கும் நெறியாகிய சிவநெறியைச் சார்ந்து பெருமானின் திருநாமங்களை உரைப்பீர்களாக. அனைத்து உயிர்களுக்கும் முதன்மையாக திகழ்பவனும் எம்மை ஆள்பவனும் பார்வதி தேவியைப் பிரியாது என்றும் சேர்ந்து இருப்பவனும் ஆகிய பெருமான்  உறையும் தலம்,  சண்பை நகர் என்று அழைக்கப்படும் சீர்காழி நகரமாகும். கடலில் உள்ள தெளிந்த நீரலைகள், தேர்ந்த முத்துக்களை கொணர்ந்து வயல்கள் மீது வீசி எறியும் சிறப்பினை உடைய தலம் சண்பை நகராகும்.

 

]]>
https://www.dinamani.com/specials/thinam-oru-thavaram/2019/may/11/128-எந்தமது-சிந்தை-பிரியாத---பாடல்-10-3148190.html
3148189 ஸ்பெஷல்ஸ் தினம் ஒரு தேவாரம் 128. எந்தமது சிந்தை பிரியாத - பாடல் 9 என். வெங்கடேஸ்வரன் DIN Friday, May 10, 2019 12:00 AM +0530  

பாடல் 9:

    நீலவரை போல நிகழ் கேழல் உரு நீள் பறவை நேர் உருவமாம்
    மாலும் மலரானும் அறியாமை வளர் தீ உருவமான வரதன்
    சேலும் இன வேலும் அன கண்ணியொடு நண்ணு பதி சூழ் புறவு எலாம்
    சாலி மலி சோலை குயில் புள்ளினொடு கிள்ளை பயில் சண்பை நகரே

விளக்கம்:

வரை=மலை; நீலமலை போன்று நெடிய உருவம் கொண்ட திருமால்; இனம்=சிறந்த; நேர்=நேராக உயர்ந்த நெடிய உருவம்;  நீள்=நீண்ட இறகுகளை உடைய அன்னப் பறவை; பரமன்=அனைவரிலும் உயர்ந்தவன்; பிரமன் மற்றும் திருமால் காண முடியாமல் திகைத்து நின்ற தன்மை அவர்கள் இருவரையும் விடவும் பெருமான் உயர்ந்தவன் என்று உணர்த்துவதால், பரமன் என்றார் திருப்பெயரால் பெருமானை அழைக்கின்றார்.  சூழ் புறவு= தலத்தை சூழ்ந்த இடங்கள்; பயில்=தொடர்ந்து செய்யப்படும் ஒரு செயல்.

பொழிப்புரை:

பெரிய நீலமலை போன்ற உருவமுடைய பன்றியாக வடிவெடுத்த திருமாலும், நீண்ட இறகுகளை உடைய அன்னப்பறவையாக உருவெடுத்த பிரமனும் காண முடியாத வண்ணம்  நெடிது வளர்ந்த தீயுருவமாக நின்றவன் பெருமான். அடியார்களுக்கு வேண்டும் வரங்கள் அளிக்கும் வரதனாகிய பெருமான், சிறந்த மீன்கள் போன்றும் வேல் போன்றும் நீண்டும் நுனியில் கூர்மையாகவும் உள்ள கண்களைக் கொண்ட உமையன்னையுடன் மகிழ்ந்து உறையும் தலம், சண்பை நகரம் என்று அழைக்கப்படும் சீர்காழி நகரமாகும். இந்த தலத்தைச் சுற்றியுள்ள வயல்களில் நெற்பயிர்கள் செழித்து வளர, அருகில் உள்ள சோலைகளில் கிளிகள் குயில்கள் மற்றும் ஏனைய பறவைகள் தொடர்ந்து வசிக்கின்றன.    

 

]]>
https://www.dinamani.com/specials/thinam-oru-thavaram/2019/may/10/128-எந்தமது-சிந்தை-பிரியாத---பாடல்-9-3148189.html
3148186 ஸ்பெஷல்ஸ் தினம் ஒரு தேவாரம் 128. எந்தமது சிந்தை பிரியாத - பாடல் 8 என். வெங்கடேஸ்வரன் DIN Thursday, May 9, 2019 12:00 AM +0530  

பாடல் 8:

  வரைக்குல மகட்கொரு மறுக்கம் வருவித்த மதியில் வலியுடை
  அரக்கனது உரக் கர சிரத்துற அடர்த்து அருள் புரிந்த அழகன்
  இருக்கையது அருக்கன் முதலான இமையோர் குழுமி ஏழ் விழவினில்
  தருக்குல நெருக்கு மலி தண் பொழில்கள் கொண்டல் அன சண்பை நகரே

விளக்கம்:

இந்த பாடலில் இராவணனது செய்கை, கயிலை மலையினை பேர்த்தெடுக்கச் செய்த முயற்சி, தேவிக்கு அச்சம் ஊட்டியதாக சம்பந்தர் குறிப்பிடுகின்றார். திருமுறை பாடல்களில்  தேவி அச்சம் கொண்டதாக மூன்று நிகழ்ச்சிகள் குறிப்பிடப்படுகின்றன. மிகவும் அதிகமாக குறிப்பிடப்படும் நிகழ்ச்சி, பெருமான் தன்னை எதிர்த்து வந்த யானையின் தோலினை உரித்து தனது உடல் மீது போர்த்துக் கொண்ட நிகழ்ச்சி. இரண்டாவது நிகழ்ச்சி பெருமான் உண்ட நஞ்சு அவரது உடலினுள்ளே சென்று தங்கினால், ஊழிக்காலத்தில் அவரது உடலில்  ஒடுங்கும் உயிர்களுக்கு ஏதேனும் தீங்கு விளையுமோ என்ற அச்சத்தினால் தேவிக்கு பயம் ஏற்பட்டது. மூன்றாவது நிகழ்ச்சி அரக்கன் இராவணன் கயிலை மலையினை அசைத்த போது  ஏற்பட்ட அச்சம். பெருமான் இராவணனின் செயலால் கோபம் கொண்டு அவனை மலையின் கீழே நெருக்கினார் என்று பொருள் கொள்வது தவறு என்றும் தேவியின் அச்சத்தை தீர்க்கும் பொருட்டே அரக்கனின் வலிமையை குறைத்தார் என்பதையும் உணர்த்தவே, உமையன்னை கொண்ட அச்சம் தேவாரப் பதிகங்களில் குறிப்பிடப்படுகின்றது.  கோபதாபங்களைக் கடந்த பெருமான் என்பதை நாம் நினைவில் கொள்ளவேண்டும்.      இருபதுக்கும் மேற்பட்ட திருமுறைப்  பாடல்களில் இராவணன் கயிலை மலையினை அசைத்த போது தேவி அச்சம் கொண்டதாக குறிப்பிடப்படுகின்றது. அத்தகைய பாடல்கள் சிலவற்றை நாம் இங்கே காண்போம்.   

கோட்டூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.109.8) சம்பந்தர் கயிலாய மலையினை அரக்கன் இராவணன் எடுக்க முயற்சி செய்த போது உமையம்மை அஞ்சவே, அந்த அச்சத்தினை நீக்கும் வண்ணம் தனது கால் பெருவிரலை சற்று சுளித்து மலையின் மீது ஊன்றி, அரக்கன் சோர்வு அடையுமாறு செய்தார் என்று கூறுகின்றார்.  சோர்வடைந்த இராவணன் தனது தவறினை உணர்ந்து பெருமானை போற்றி சாமகானம் பாடிய பின்னர் அவன் செய்த தவறினை பொருட்படுத்தாது அவனுக்கு அருள் நல்கிய பெருமானின் திருவடிகளைத் தொழும் அடியார்கள் இறைவனின் திருவடித் தாமரைகளைச் சென்றடைய தவம் செய்யும் முனிவர்கள் போன்றவர்கள் ஆவார்கள் என்று சம்பந்தர் இந்த பாடலில் பெருமானின் திருவடிப் பெருமையை உணர்த்துகின்றார். அரக்கனது பற்கள் ஒளி வீசும் வாள் போன்று இருந்தன என்று சம்பந்தர் கூறுகின்றார்.

  ஒளிகொள் வாள் எயிற்று அரக்கன் அவ் உயர் வரை எடுத்தலும்
       உமை அஞ்சிச்
  சுளிய ஊன்றலும் சோர்ந்திட வாளொடு நாள் அவற்கு
       அருள் செய்த
  குளிர் கொள் பூம்பொழில் சூழ்தரு கோட்டூர் நல் கொழுந்தினைத்
       தொழுவார்கள்
  தளிர் கொள் தாமரைப் பாதங்கள் அருள் பெரும் தவம்
        உடையவர்களே   

மீயச்சூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.62.8) உமையன்னைக்கு அச்சம் விளைவித்த, திரண்ட தோள்களையும் வலிமையையும் உடைய அரக்கனின் வலிமை நலியுமாறு, மலையின் கீழே,  சிவபெருமான் அடக்கினார் என்று சம்பந்தர் கூறுகின்றார். ஒலி கொள் புனல் என்று மிகுந்த ஆரவாரத்துடன் கீழே இறங்கிய கங்கை நதி என்று கூறுகின்றார்.

    புலியின் உரிதோல் ஆடை பூசும் பொடி நீற்றர்
    ஒலி கொள் புனல் ஓர் சடை மேல் கரந்தார் உமை அஞ்ச
    வலிய திரள் தோள் வன்கண் அரக்கர் கோன் தன்னை
    மெலிய வரைக் கீழ் அடர்த்தார் மீயச்சூராரே

பாதாளீச்சரம் தலத்தின் மீது அருளிய பாடலில் (1.108.8) சம்பந்தர் உமையன்னை இராவணனின் செயலால் அச்சம் கொண்டு நடுங்கியதை நாம் கீழ்க்கண்ட பாடலில் காண்போம். மறுக=அச்சம் கொள்ள; தொல்லை மலை=மிகவும் பழமையான கயிலாய மலை; கொல்லை விடை=முல்லை நிலத்திற்கு உரிய கடவுளாகிய திருமால், திரிபுர தகனத்தின் போது விடையாக பெருமானை தாங்கிய நிலை; திருமால் விடையாக தன்னைத் தாங்கியதை பெருமான் உகந்து ஏற்றுக் கொண்டான் என்று சம்பந்தர் இங்கே கூறுகின்றார். திரிபுரத்து அரக்கர்களுடன் பெருமான் போர் செய்ய புறப்பட்ட போது, தேவர்கள் பலரும்  அந்த போரினில் பெருமானுக்கு உதவும் பொருட்டு பல விதங்களில் பங்கேற்றனர். அவ்வாறு பங்கேற்றமை குறித்து அவர்களுக்கு கர்வம் ஏற்பட்டது போலும். அந்நாள் வரை திரிபுரத்து அரக்கர்களிடம் அஞ்சி நடுங்கி ஒளிந்து கொண்டிருந்த தேவர்களால் பெரிதாக என்ன உதவி செய்து விடமுடியும் என்பதையும் மறந்து அவர்கள் கர்வம் கொண்டது தவறான செய்கை தானே. எவரின் உதவியும் தேவைப்படாமல் திரிபுரத்து அரக்கர்களை தன்னால் வெல்ல முடியும் என்பதை அனைவர்க்கும் உணர்த்தும் பொருட்டு,  தேவர்கள்  பங்கேற்ற தேரின் மீது தனது காலினை பெருமான் வைத்த போது தேரின் அச்சு முறிந்தது. தேரின் அச்சு முறிந்ததால் தேரின் மீது பெருமான் செல்ல முடியாமை கண்டு, திருமால் விடையாக மாறி தன்னை வாகனமாக ஏற்றுக் கொள்ளுமாறு வேண்டினார்,  திருமாலின் வேண்டுகோளினை ஏற்று விருப்பத்துடன் பெருமான் விடையின் மீது அமர்ந்தார் என்பதை உணர்த்தும் பொருட்டு கொல்லை விடை உகந்தான் என்று சம்பந்தர் இங்கே குறிப்பிடுகின்றார்.

    மல்கிய நுண்ணிடையாள் உமை நங்கை மறுக அன்று கையால்
    தொல்லை மலை எடுத்த அரக்கன் தலை தோள் நெரித்தான்
    கொல்லை உடை உகந்தான் குளிர் திங்கள் சடைக்கு அணிந்தோன்
    பல்லிசை பாடலினான் உறை கோயில் பாதாளே

நல்லூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.57.8) சம்பந்தர், இராவணன் கயிலை மலையினை பேர்த்து எடுக்க முயற்சி செய்த போது உமையன்னை அஞ்சியதைக் கண்டு  மகிழ்ந்தார் என்று கூறுகின்றார். இவ்வாறு மகிழ்ந்தது பெருமானின் திருவிளையாடல்களில் ஒன்று என்று சான்றோர்கள் பொருள் கண்டனர். கங்கை நதியினைத் தனது சடையினில் ஏற்ற செயலுக்கு கோபம் கொண்ட பார்வதி அன்னையின் கோபத்தினை தணிப்பதற்காக, பெருமான் இந்த திருவிளையாடலை புரிந்தாரோ என்று நமக்கு தோன்றுகின்றது.   இத்தகைய கற்பனை ஒன்றினை உள்ளடக்கி அப்பர் பிரான் பிரான் பாடிய பாடல், இந்த  விளக்கத்தின் பிறிதொரு பகுதியில் கொடுக்கப் பட்டுள்ளது. மாது=காதல்/பெருமை; தீது அமரா=தீயனவற்றை வெறுக்கும்  

    காதமரும் வெண்குழையீர் கறுத்த அரக்கன் மலை எடுப்ப
    மாதமரும் மென்மொழியாள் மறுகும் வண்ணம் கண்டுகந்தீர்
    தீது அமரா அந்தணர்கள் பரவி ஏத்தும் திருநல்லூர்
    மாது அமரும் கோயிலே கோயிலாக மகிழ்ந்தீரே  
 

சீர்காழி நகரத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.96.8)  தனது வலிமையை பெரிதாக கருதிய அரக்கன் இராவணனின் வலிமை கண்டு, கயிலாய மலையினை எடுக்கும் ஆற்றலைக் கண்டு, உமையன்னை அஞ்சியதாக சம்பந்தர் கூறுகின்றார்; ஏர்=அழகு; ஏர்கொள் மங்கை=அழகுடைய பார்வதி தேவி; சீர்கொள் பாதம்=சிறப்புடைய திருவடி; செறுத்த=வெற்றி கொண்ட;  தார்=பூ; கடுந்திறல்=மிகுந்த வலிமை;

    கார் கொள் மேனி அவ் வரக்கன் தன் கடுந்திறலினைக் கருதி
    ஏர்கொள் மங்கையும் அஞ்ச எழில் மலை எடுத்தவன் நெரியச்
    சீர்கொள் பாதத்து ஒரு விரலால் செறுத்த எம் சிவன் உறை கோயில்
    தார்கொள் வண்டினம் சூழ்ந்த தண்வயல் காழி நன்னகரே

  
திருப்பயற்றூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் கடைப் பாடலில் (4.32.10) அப்பர் பிரான் ராவணன் கயிலை மலையை அசைத்தபோது உமையம்மை அஞ்சியதாக குறிப்பிடுகின்றார். மூர்த்தி=தலைவன்; முனிதல்=கோபித்தல்; ஆர்த்தல்=ஆரவாரம் செய்தல்; அடர்த்தல்= நெருக்குதல்; அரிவை=பார்வதி தேவி;

    மூர்த்தி தன் மலையின் மீது போகாதால் முனிந்து நோக்கிப்
    பார்த்துத் தான் பூமி மேலால் பாய்ந்துடன் மலையைப் பற்றி
    ஆர்த்திட்டான் முடிகள் பத்தும் அடர்த்து நல்லரிவை அஞ்சத்
    தேத்தெத்தே என்னக் கேட்டார் திருப்பயற்றூரனாரே

குடமூக்கு தலத்தின் மீது அருளிய குறுந்தொகை பதிகத்தின் (5.22) கடைப் பாடலில், அரக்கன் மலையை எடுத்த போது உமையம்மை அஞ்சியதாகவும், தேவியின் அச்சத்தைக் கண்ட பெருமான் சிரித்ததாகவும் கூறுகின்றார். கொன்று=வருத்தி; பெருமான் அப்போது சிரித்த சிரிப்பு நன்மை விளைவித்த சிரிப்பு என்பதை உணர்த்தும் பொருட்டு நன்று தான் நக்கு என்று அப்பர் பிரான் கூறுகின்றார். முப்புரம் எரிக்கப்பட்ட போது சிரித்த சிரிப்பு திரிபுரத்து அரக்கர்களுக்கு அழிவை ஏற்படுத்தியது. ஆனால் அரக்கன் இராவணன் கயிலை மலையை  எடுக்க .முயற்சி செய்த போது சிரித்த சிரிப்பு அவனுக்கு பல நன்மைகளைத் தேடித் தந்தது.

    அன்று தான் அரக்கன் கயிலாயத்தைச்
    சென்று தான் எடுக்க உமை அஞ்சலும்
    நன்று தான் நக்கு நல்விரல் ஊன்றிப் பின்
    கொன்று கீதம் கேட்டான் குடமூக்கிலே  

  
கயிலாய மலையினை பேர்த்து எடுக்க அரக்கன் இராவணன் முயற்சி செய்த போது, அவனது முயற்சி வீண் முயற்சி என்பதை நன்கு அறிந்தவர் சிவபெருமான். எனினும் தனது அருகில் அமர்ந்திருந்த பார்வதி தேவி அச்சம் கொண்டதைக் கண்டு, அந்த அச்சத்தை நீக்கும் பொருட்டு பெருமான் தனது கால் பெருவிரலை மலையின் மீது ஊன்றி அரக்கனின் வலிமையை அழித்தார் என்று அப்பர் பிரான் கூறும் பாடல் (4.27.9) இங்கே கொடுக்கப் பட்டுள்ளது.

    தீர்த்த மாமலையை நோக்கிச் செருவலி அரக்கன் சென்று
    பேர்த்தலும் பேதை அஞ்சப் பெருவிரல் அதனை ஊன்றிச்
    சீர்த்த மா முடிகள் பத்தும் சிதறுவித்து அவனை அன்று
    ஆர்த்த வாய் அலற வைத்தார் அதிகை வீரட்டனாரே

தன்னிடம் மிகவும் அதிகமாக விருப்பம் கொண்டிருந்த பார்வதி தேவி, அரக்கன் இராவணன் கயிலை மலையினை எடுக்க முயற்சி செய்த போது அஞ்சியதைக் கண்ட பெருமான், தேவியின் அச்சம் தேவையற்றது என்பதை உணர்த்தும் வண்ணம் சிரித்தவாறே தனது கால் பெருவிரலை மலையின் மீது ஊன்ற, அரக்கன் அலறி வீழ்ந்தான் என்று உணர்த்தும் பாடல் (4.30.10) இது. மாலினாள்=பெருமானிடம் அதிகமான விருப்பம் உடையவள்; வேலினான்= வேல் ஏந்திய வீரன்; நூலினான்=வேத நூல்களை அருளிய பெருமான்

    மாலினாள் நங்கை அஞ்ச மதில் இலங்கைக்கு மன்னன்
    வேலினான் வெகுண்டு எடுக்கக் காண்டலும் வேத நாவன்
    நூலினான் நோக்கி நக்கு நொடிப்பதோர் அளவில் வீழக்
    காலினால் ஊன்றி இட்டார் கழிப்பாலைச் சேர்ப்பனாரே

   
கயிலை மலையினைக் கடந்து புட்பக விமானம் செல்லாது என்று அறிவுரை கூறிய தனது தேர்ப்பாகன் மீது சினம் கொண்ட அரக்கன் இராவணன் தேரிலிருந்து கீழே குதித்து மலையினை பேர்த்து எடுக்க முயற்சி செய்ததாக அப்பர் பிரான் இந்த பாடலில் கூறுகின்றார். தேர்ப்பாகனது அறிவுரையை அப்பர் பிரான் குறிப்பிடுவது நமக்கு தசபுராணத் திருப்பதிகத்தின் கடைப்பாடலை நினைவூட்டும். இந்தப் பாடலிலும் தேர்ப்பாகன் கூறிய அறிவுரையை மதிக்காது இராவணன் நடந்து கொண்ட விதம் மிகவும் அழகாக கூறப்பட்டுள்ளது. உனது வீரத்தை நீ பெரிதாக நினைத்து, திருக்கயிலை மலையை பெயர்த்து எடுக்கும் முயற்சியில் ஈடுபடவேண்டாம் என்று தெளிவாக கூறிய அறிவுரை புறக்கணிக்கப்படுகின்றது. தனது வலிமையின் மீது இராவணனுக்கு இருந்த நம்பிக்கை அவனை எவ்வளவு வேகமாக செயல்படவைத்தது என்பதை மிகவும் அழகாக, விடுவிடு என்று சென்று என்ற சொற்களால் அப்பர் பிரான் கூறுகின்றார். அவனது வீரம் பயனற்றுப், போன தன்மையும் இங்கே கூறப்பட்டுள்ளது.

   கடுகிய தேர் செலாது கயிலாயம் மீது கருதேல் உன் வீர
        மொழி நீ
   முடுகுவது அன்று தன்மம் என நின்று பாகன் மொழிவானை
        நன்று முனியா
  விடுவிடு என்று சென்று விரைவு உற்று அரக்கன் வரை உற்று
        எடுக்க முடி தோள்
   நெடுநெடு விற்று வீழ விரல் உற்ற பாத நினைவு உற்றது என்
        தன் மனனே

கயிலை மலையினை அரக்கன் அசைத்த போது, பார்வதி தேவி கொண்ட அச்சத்தினை நீக்கிய பெருமான், அதனை ஒரு வாய்ப்பாக கருதி தேவி தன்னிடம் கொண்டிருந்த ஊடலைத் தீர்த்தான் என்று சுவையாக தனது கற்பனையை ஏற்றி அப்பர் பிரான் பாடிய பாடல் மறைக்காடு தலத்தின் மீது அருளிய பதிகத்தின் (434) கடைப் பாடலாகும். இந்த பதிகத்தின் அனைத்துப் பாடல்களிலும் அரக்கன் இராவணனின் கயிலை நிகழ்ச்சி குறிப்பிடப் படுகின்றது. கங்கை நங்கையை பெருமான் தனது சடையில் மறைத்ததை காரணமாக கொண்டு தேவி ஊடல் செய்ததாக அப்பர் பிரான் கற்பனை செய்கின்றார். உருவம் வேறுவேறாக திகழ்ந்தாலும், பெருமானும் பிராட்டியும் இணைந்தே செயல்படுவதாக சைவ சித்தாந்தம் சொல்கின்றது. பெருமானின் கருணை தான் தேவி. எனவே அவர்களுக்குள்ளே ஊடல் என்ற பேச்சுக்கே இடமில்லை. எனினும் புலவர்களுக்கு உள்ள சுதந்திரத்தை பயன்படுத்தி, அப்பர் பிரான், ஒரு கற்பனை நிகழ்ச்சியை புகுத்தி, தேவாரப் பாடலுக்கு நயம் சேர்ப்பதை நாம் இந்த பாடலில் காணலாம்.

உலகியலில் வாழும் நாம், எத்துனை கருத்தொத்த தம்பதியராக இருப்பினும் அவர்களின் இடையே, சிறுசிறு விஷயங்களில், கருத்து ஒவ்வாது இருப்பதையும், அந்த வேறுபாடு காரணமாக ஊடல்கள் ஏற்படுவதையும் காண்கின்றோம். சங்க இலக்கியங்களில் காதலர்களுக்கு இடையே ஏற்படும் ஊடல் வெகுவாக விவரிக்கப் படுகின்றது. திருக்குறளிலும் ஊடல் காதலுக்கு மேலும் சுவை ஊட்டும் என்பதை உணர்த்தும் பொருட்டு ஊடலுவகை என்று தனி அதிகாரம் கொடுக்கப்பட்டு பத்து பாடல்கள் உள்ளன. அந்த ஊடல் அதிக நேரம் நீடிப்பதில்லை. ஒருவருக்கு ஒருவர் உண்மையான பாசமும் நேசமும் கொண்டு தம்பதியர் திகழ்வதால், அவர்களில் எவரேனும் ஒருவருக்கு சிறிய இடர் நேர்ந்தாலும், அடுத்தவர் அந்த இடரினைக் களையும் போது, அந்நாள் வரை அவர்களின் இடையே இருந்த ஊடல் காணமல் போய்விடுகின்றது. இதனை உலக வாழ்க்கையில் அடிக்கடி காண்கின்றோம். அத்தகைய நிகழ்ச்சியாக, இராவணன் கயிலை மலையினை அசைத்த போது தேவி கொண்ட அச்சத்தை பெருமான் கலைந்த விதத்தினை அப்பர் பிரான் கற்பனை செய்கின்றார்.

கங்கை நங்கையைத் தனது தலையில் மறைத்து வைத்ததால் தேவிக்கு கோபம் ஏற்படுகின்றது. அந்த கோபம் ஊடலாக மாறுகின்றது. அரக்கன் இராவணன் கயிலை மலை அசைத்ததால் ஏற்பட்ட அசைவு, அன்னைக்கு அச்சத்தை ஏற்படுத்த, அந்த அச்சத்தை தீர்க்கும் முகமாக, அன்னையிடம் அஞ்சேல் என்று சொல்லிய பெருமான், தனது கால் பெருவிரலால் மலையினை அழுத்தி, மலையின் ஆட்டத்தை நிறுத்துகின்றார். தேவியின் அச்சம் மட்டுமா மறைகின்றது. அவர்கள் இருவருக்கும் இடையே இருந்த ஊடலும் மறைந்து விடுகின்றது என்பதை சொல்லாமல் சொல்லி விளக்கும் நயமான பதிகம்.

    கங்கை நீர் சடையுள் வைக்கக் காண்டலும் மங்கை ஊடத்
    தென்கையான் தேர் கடாவிச் சென்று எடுத்தான் மலையை
    முன்கை மா நரம்பு வெட்டி முன் இருக்கு இசைகள் பாட
    அங்கை வாள் அருளினான் ஊர் அணி மறைக்காடு தானே

மறுக்கம்=அச்சம்; வரை=மலை, இங்கே இமயமலையினை குறிக்கும்; மதியில் வலிமை= அறிவற்றவனாகவும் வலிமை மிகுந்தவனாகவும் விளங்கிய அரக்கன் இராவணன்;  உரம்=மார்பு; அருக்கன்=சூரியன்; ஏழ்விழவு=ஏழு நாட்கள் நடைபெறும் திருவிழா; பண்டைய  நாட்களில் திருவிழாக்கள் ஏழு நாட்களே நடைபெற்றன போலும். அட்டமி நவமி திதி நாட்கள் நற்காரியங்கள் நடத்த தகுதியற்ற நாட்கள் என்று கருதப் பட்டமையால் அட்டமி நவமி நாட்களில் திருவிழாக்களை தவிர்த்தனர் போலும். குறுக்கை வீரட்டம் மீது அருளிய பாடல் ஒன்றினில் (4.58.2) அப்பர் பிரான் அட்டமி தினத்திற்கு முந்திய ஏழு நாட்களில் நடராஜப் பெருமான் வீதிவுலா வந்ததாக கூறுகின்றார். கால மாற்றத்தால் திருவிழா நாட்கள் அதிகரிக்கப்பட்டு தற்போது பத்து நாட்கள் திருவிழா நடைபெறுகின்றன.

    ஆத்தமா அயனும் மாலும் அன்றி மற்று ஒழிந்த தேவர்
    சோத்தம் எம் பெருமான் என்று தொழுது தோத்திரங்கள் சொல்லத்
    தீர்த்தமாம் அட்டமி முன் சீருடை ஏழு நாளும்
    கூத்தராய் வீதி போந்தார் குறுக்கை வீரட்டனாரே

ஆத்தம்=குருவுக்கு செயப்படும் சேவை; பிரமனும் திருமாலும் தங்களது குருவாக கருதி இறைவனை வழிபடுதல்; முதன்முதலில் பிரமன் இறைவனை வழிபட்டு திருவிழா எடுத்தமையால் பிரம்மோற்சவம் என்ற பெயர் வந்தது என்பார்கள். சோத்தம்=ஸ்தோத்திரம் என்றார் வடமொழி சொல்லின் தமிழாக்கம். கீழ் நிலையில் உள்ளவர்கள் மேல் நிலையில் உள்ளவர்களை புகழ்ந்து சொல்லப்படும் மொழிகள். இதனை உணர்த்தும் பொருட்டே இறைவனைக் குறித்து நாம் புகழ்ந்து பாடும் பாடல்கள் அனைத்தும் தோத்திரம் என்றும் ஸ்தோத்திரம் என்றும் அழைக்கப் படுகின்றன. பெருமானினும் பல படிகள் தாழ்ந்தவர்கள் தேவர்கள் என்பதால் அவர்கள் பெருமானை தோத்திரம் செய்வதாக அப்பர் பிரான் இங்கே குறிப்பிடுகின்றார், திருவிழா நாட்களில் வீதிவலம் வரும் பெருமானை நாம் அனைவரும் கண்டு களித்து வணங்குவது போன்று பிரமன் திருமால் உள்ளிட்ட தேவர்களும் வந்து வணங்குகின்றனர் என்பது ஐதீகம். ஆத்தம் என்பதை ஆப்தம் என்றார் வடமொழிச் சொல்லின் தமிழாக்கமாக கருதி பெருமானுக்கு நெருங்கிய பிரமன் மற்றும் திருமால் என்று பொருள் கொள்வதும் பொருத்தமே. தரு=பொதுவாக மரங்களை குறிக்கும் வடமொழித் சொல்லின் தமிழாக்கம்; தருக்குலம் என்று மரங்களில் உயர்ந்ததாக கருதப்படும் கற்பக மரத்தினை சம்பந்தர் குறிப்பிடுகின்றார். செழிப்புடன் விளங்கும் சீர்காழி தலத்தின் மரங்களை அவைகளின் பயன்பாட்டினை கருத்தில் கொண்டு, உயர்ந்த கற்பக மரத்திற்கு சம்பந்தர் இங்கே ஒப்பிடுகின்றார். முந்திய பாடலில் தலத்து அடியார்களின் சிறப்பினை உணர்த்திய  சம்பந்தர்,  இந்த பாடலில் தலத்து திருவிழாக்களின் சிறப்பினை உணர்த்துகின்றார்.  கொண்டல்=மேகம்;   
 
பொழிப்புரை:

இமயமலைக்கு அரசனாகிய இமவானின் மகளாகிய பார்வதி தேவியின் மனம் கலங்கும் வண்ணம், மிகுந்த வலிமை உடையவனாகவும் அறிவற்றவனாகவும் விளங்கிய அரக்கன் இராவணன் கயிலை மலையினை எடுக்கும் முயற்சியில் அசைத்த போது, அந்த அரக்கனது  தோள்கள் மார்பு மற்றும் தலைகள் ஆகியவை மலையின் கீழே அகப்பட்டு நொறுங்கும்  வண்ணம் தனது கால் பெருவிரலை கயிலை மலையின் மீது அழுத்தியவன் பெருமான். பின்னர் அரக்கன் தனது தவறினை உணர்ந்து பெருமானை சாமகானம் பாடி போற்றியபோது அவனுக்கு அருள் புரிந்த அழகனாகிய பெருமானின் இருப்பிடம் சண்பை நகரமாகும்.  சூரியன் முதலான பல தேவர்களும் கலந்து கொள்ளும் திருவிழாக்கள், அட்டமி தினத்திற்கும் முந்திய ஏழு நாட்கள் திருவிழாக்கள் நடைபெறுவதும், சிறப்பினில் கற்பகச் சோலையினை நெருங்கும் வண்ணம் மக்களுக்கு பல வகையிலும் பயன் அளிக்கும் செழிப்பான சோலைகள் நிறைந்தும், குளிர்ந்த மேகங்கள் தவழும் வண்ணம் உயர்ந்த சோலைகள் உடையதும் ஆகிய நகரம் சண்பை நகரம் என்று அழைக்கப்படும் சீர்காழி நகரமாகும்.


 

]]>
https://www.dinamani.com/specials/thinam-oru-thavaram/2019/may/09/128-எந்தமது-சிந்தை-பிரியாத---பாடல்-8-3148186.html
3148184 ஸ்பெஷல்ஸ் தினம் ஒரு தேவாரம் 128. எந்தமது சிந்தை பிரியாத - பாடல் 7 என். வெங்கடேஸ்வரன் Wednesday, May 8, 2019 05:26 PM +0530

பாடல் 7:

    விண் பொய் அதனால் மழை விழாது ஒழியினும் விளைவு தான் மிக உடை
    மண் பொய் அதனால் வளமிலாது ஒழியினும் தமது வண்மை வழுவார்
    உண் பகர வாருலகினில் ஊழி பல தோறு நிலையான பதி தான்
    சண்பை நகர் ஈசனடி தாழும் அடியார் தமது தன்மை அதுவே
 

விளக்கம்:

பெருமானின் தன்மையையும் பிராட்டியின் அழகினையும் முந்திய பாடல்களில் பதிவு  செய்த சம்பந்தர் இந்த பாடலில் சீர்காழி தலத்தில் வாழ்ந்து வந்த அடியார்களின் சிறப்பினை உணர்த்துகின்றார். அவ்வாறு உணர்த்தும் சம்பந்தர் இறைவனின் திருவடிகளை தொழுவதால் அந்த பண்பு அவர்களுக்கு ஏற்பட்டது என்று கூறி, நாமும் அந்த பண்பினை வளர்த்துக் கொள்ள இறைவனை வணங்க வேண்டும் என்பதை உணர்த்தும் பாடல் இது. பண்டைய நாட்களில் மாதம் மும்மாரி மழை பொழிவது வழக்கமாக இருந்தது என்பதை நாம் இலக்கியங்களிலிருந்து அறிகின்றோம். அவ்வாறு மழை பெய்யத் தவறுவதை வானம் பொய்த்தது என்று குறிப்பிடும் வழக்கு இன்றும் நிலவுவதை நாம் காண்கின்றோம். மழையின்றி வயல்கள் வளம் குறைந்து வறண்டு காணப்படும் நிலையினை விண் பொய்த்து மண் பொய்த்து என்று சம்பந்தர் இங்கே குறிப்பிடுகின்றார்.  விண்=மேகம்;  பொய் அதனால்=மேகங்கள் மழை பொழியத் தவறினாலும்; விளைவு தான் மிகவுடை=முன்னர் மிகுந்த விளைச்சலைத் தந்த வளமுடைய; வண்மை=கொடைத்தன்மை; உண் பகர=உணவு அளித்து; வாருலகு=நீண்டு பரந்த உலகம்; பல ஊழிகளைக் கண்ட பின்னரும் நிலையாக நிற்கும் சீர்காழி தலம் போன்று அந்த நகரில் உறையும் அடியார்களும் வறட்சியான காலத்திலும் தங்களது கொடைத் தன்மை மாறாது இருந்தனர் என்று குறிப்பிட்டு தலத்தின்  தன்மை மற்றும் தலத்து அடியார்களின் தன்மை ஒன்றுக்கொன்று ஒப்பிடப்பட்டு மிகவும் நயமாக கூறப்படுகின்றது   

பொழிப்புரை:

பல ஊழிகள் கடந்த பின்னரும் நிலையாக இருக்கும் சீர்காழி தலத்தினைப் போன்று அந்த தலத்தில் உள்ள அடியார்களும் தங்களது தன்மை மாறாமல் இருக்கின்றனர். வானம் பொய்த்து மழை பொழியாததால் வளமையான நிலங்கள் தமது வளமை குன்றி விளைச்சல்  தருவதை தவிர்த்தாலும், தங்களது கொடைத் தன்மையிலிருந்து வழுவாமல், நீண்டு பரந்த  உலகினில் வாழும் வறியவர்களுக்கு உணவு அளிப்பதே அந்த தன்மையாகும். சண்பை என்று அழைக்கப்படும் சீர்காழி தலத்தில் உறையும் பெருமானின் திருவடிகளை தங்களது தலையினைத் தாழ்த்தி வணங்குவதால், அந்த தலத்து அடியார்களுக்கு என்றும் மாறாத கொடைத் தன்மை ஏற்படுகின்றது     

 

]]>
https://www.dinamani.com/specials/thinam-oru-thavaram/2019/may/08/128-எந்தமது-சிந்தை-பிரியாத---பாடல்-7-3148184.html
3143777 ஸ்பெஷல்ஸ் தினம் ஒரு தேவாரம் 128. எந்தமது சிந்தை பிரியாத - பாடல் 6 என். வெங்கடேஸ்வரன் DIN Tuesday, May 7, 2019 12:00 AM +0530  

பாடல் 6:

    பாலன் உயிர் மேல் அணவு காலன் உயிர் பாற உதை செய்த பரமன்
    ஆலும் மயில் போல் இயலி ஆயிழை தனோடு அமர்வு எய்தும் இடமாம்
    ஏல மலி சோலை இன வண்டு மலர் கிண்டி நறவு உண்டு இசை செயச்
    சாலி வயல் கோல மலி சேல் உகளும் நீலம் வளர் சண்பை நகரே

 
விளக்கம்:

அணவுதல்=நெருங்குதல், அணுகுதல்; பாற=அழிய; ஆலும்=நடமாடும்; இயலி=போன்று; அமர்வு எய்தும்=விருப்புடன் இருக்கையாக கொள்வது; கிண்டி=கிளறி;  நறவு=தேன்; சாலி=ஒரு வகை நெல்; கோல=அழகு; உகளும்=துள்ளி குதிக்கும்; நீலம்=நீலோற்பலம்; முந்தைய பாடல்களில் பிராட்டியின் அழகினை பல விதமாக வர்ணித்த சம்பந்தர், இந்த பாடலில் பிரட்டி மயில் போன்ற சாயலைக் கொண்டுள்ளாள் என்று கூறுகின்றார். சேல்=மீன்கள்
 
பொழிப்புரை:

சிறுவன் மார்க்கண்டேயனை நெருங்கி அவனது உயிரினை கவர்வதற்கு முயற்சி செய்த இயமன் அழியும் வண்ணம் உதைத்த பெருமான், நடமாடும் மயில் போன்று சாயலை உடையவளும், தேர்ந்தெடுத்து அழகிய நகைகளை அணிபவளும் ஆகிய உமை அன்னையுடன் மிகுந்த விருப்போடு அமரும் இடம் சண்பை என்று அழைக்கப்படும் சீர்காழி நகரமாகும். இந்த தலத்தில் உள்ள ஏலம் நறுமணம் சோலைகளில் காணப்படும் மலர்களின் மீது வண்டுகள் கூட்டமாக அமர்ந்து அந்த மலர்களைக் கிளறி மலர்களில் நிறைந்துள்ள  தேனை உண்ட களிப்பினில் இசை பாடுகின்றன. அருகில் உள்ள சாலி நெல் வயல்களில் அழகான மீன்கள் துள்ளி குதித்தாட, அவற்றின் அசைவால் நீலோற்பல மொட்டுகள் மலர்ந்து அழகாக காணப்படுகின்றன.      

 

]]>
https://www.dinamani.com/specials/thinam-oru-thavaram/2019/may/07/128-எந்தமது-சிந்தை-பிரியாத---பாடல்-6-3143777.html
3143776 ஸ்பெஷல்ஸ் தினம் ஒரு தேவாரம் 128. எந்தமது சிந்தை பிரியாத - பாடல் 5 என். வெங்கடேஸ்வரன் DIN Monday, May 6, 2019 12:00 AM +0530  

பாடல் 5:

    பணம் கெழுவு பாடலினொடு ஆடல் பிரியாத பரமேட்டி பகவன்
    அணங்கு எழுவு பாகம் உடையாக முடை அன்பர் பெருமானது இடமாம்
    இணங்கெழுவி ஆடு கொடி மாட மதில் நீடு விரையார் புறவு எல்லாம்
    தணம் கெழுவி ஏடலர் கொள் தாமரையில் அன்னம் வளர் சண்பை நகரே

விளக்கம்:

பார்வதி தேவியின் அழகினை முந்தைய பாடல்களில் விவரித்த சம்பந்தர், இந்த பாடலில் தேவியை தெய்வத் தன்மை பொருந்திய பெண் என்று கூறுகின்றார்.  கெழுவு=பொருந்திய, அம்=அழகிய; பணம்=பண்+அம்; பண்ணுக்கு அழகு இனிமை; பரமேட்டி=மேலானவர்கள் என்று கருதப்படும் தேவர்களால் பெரிதும் விரும்பப் படுபவன்; புறாக்கள் உள்ளம் குளிர்ந்து மகிழ்ச்சியுடன் உலாவுகின்றன என்ற குறிப்புக்கு ஒரு சுவையான விளக்கமும் தரப் படுகின்றது. சிபிச் சக்ரவர்த்தியை சோதிக்க புறா வடிவினில் வந்த அக்னி, தான் செய்த தவறினுக்கு வருந்தி புறா வடிவினில் பெருமானை வழிபாட்டு பயன் அடைந்ததை நினைத்து, தங்களது இனத்தில் ஒரு புறாவுக்கு இறைவன் அருள் புரிந்த இடம் என்று பெருமையுடன் மகிழ்வதாக இந்த விளக்கம் அமைந்துள்ளது.

இந்த பாடலில் பெருமானை பகவன் என்று சம்பந்தர் குறிப்பிடுகின்றார். இந்த சொல் பகவான் என்ற வடமொழிச் சொல்லின் தமிழாக்கம். .பகவான் என்று கீதையில் வரும் சொல்லுக்கு பராசர முனிவர் ஆறு சிறந்த குணங்கள் உடையவன் என்று பொருள் கூறுகின்றார். முழு வலிமை, முழுதான புகழ், முழுமையான செல்வம், முழுமையான அறிவு, முழுமையான அழகு மற்றும் முற்றும் துறந்த தன்மை என்பவையே அந்த ஆறு குணங்கள் என்று கூறுவார்கள். தன்வயத்தன் ஆதல், முதல் இல்லாது ஆதியாக இருத்தல், உருவம் அற்றவனாக இருத்தல், எல்லா நலன்களும் உடையவனாக இருத்தல், எங்கும் பரவி இருத்தல், உலகில் நடக்கும் அனைத்துச் செயல்களுக்கும் காரணமாக இருத்தல் ஆகிய இந்த ஆறு செயல்களை உடையவன் என்றும் கூறுவார்கள். இந்த ஆறு செயல்களின் தன்மையை நாம் உணர்ந்தால், இந்த ஆறு தன்மைகள் கொண்டவன் பெருமான் ஒருவனே என்பதை நாம் அறிந்து கொள்வோம். எனவே பகவன் என்ற சொல் பெருமான் ஒருவனுக்கே உரிய பெயர் என்பதை நாம் உணர்வோமாக.

பகவன் என்று பல திருமுறைப் பாடல்களில் பெருமான் அழைக்கப் படுகின்றார். அத்தகைய பாடல்கள் சிலவற்றை நாம் இங்கே காண்போம். திருப்பழனம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (1.67.4) சம்பந்தர் பெருமானை பரமன் என்றும் பகவன் என்றும் பரமேச்சுவரன் என்றும் அழைக்கின்றார். பரமன்=உயர்ந்தவன்;  பரமேச்சுவரன்=மேலோர்க்கும் மேலோன்;  உரம்=வலிமை;  உலறு=வற்றிய; கோடு=கிளைகள்; நறவம்=கள், தேன் என்ற பொருளில் பொதுவாக பயன்டுத்தப்பட்டாலும் இங்கே உணவு என்ற பொருளை குறிப்பதாக கொள்ள வேண்டும்.

    உரமன்னு உயர் கோட்டு உலறு கூகை அலறு மயானத்தில்
    இரவில் பூதம் பாட ஆடி எழிலார் அலர் மேலைப்
    பிரமன் தலையில் நறவம் ஏற்ற பெம்மான் எனை ஆளும்
    பரமன் பகவன் பரமேச்சுவரன் பழன நகராரே

திருவிடைமருதூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடல் (1.121.1) ஒன்றில் சம்பந்தர் பெருமானை பகவன் என்று அழைக்கின்றார். நடைமரு திரிபுரம்=இயங்கும் தன்மை கொண்ட கோட்டைகள், பறக்கும் கோட்டைகள்; பொதுளிய=செறிந்த, அடர்ந்த; தீயினை உமிழும் படைக்கலம் என்று பெருமானின் மழுப்படையினை சம்பந்தர் குறிப்பிடுகின்றார்.  மேகங்கள் தவழும் வண்ணம் மருதமரங்கள் உயர்ந்து காணப்படுகின்றன என்று குறிப்பிட்டு சம்பந்தர் தலத்தின் நீர் வளத்தினையும் நிலா வளத்தினையும் இங்கே கூறுகின்றார்.

    நடைமரு திரிபுரம் எரி உண நகை செய்த
    படை மரு தழல் எழ மழு வல பகவன்
    புடை தரு மருது இளமுகில் வளம் அமர் பொதுளிய
    இடைமருது அடைய நம் இடர் கெடல் எளிதே

இரும்பை மாகாளம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் (2.117) பாடலில் சம்பந்தர் இறைவனை பகவன் என்று அழைக்கின்றார். பிறைமதியைச் சூடிய வண்ணம் கூத்தாடும் பெருமான் வினைகளை அழிக்கும் வல்லமை உடையவர் என்றும், அனைவர்க்கும் மேலானவன் என்றும் தூய்மையாயான ஆறு குணங்களை உடையவன் என்றும் கூறும் சம்பந்தர், இரும்பை மாகாளத்தில் உள்ள மறையவர்கள் இறைவனைத் தொழுது வணங்கியதையும் இந்த பாடலில் குறிப்பிடுகின்றார்.  குறைவதாய=கலைகள் குறைந்த;  குனித்தான்=கூத்தாடிய பெருமான்; பறைவது=அழிப்பது;

    குறைவதாய குளிர் திங்கள் சூடிக் குனித்தான் வினை
    பறைவது ஆக்கும் பரமன் பகவன் பரந்த சடை
    இறைவன் எங்கள் பெருமான் இடம் போல் இரும்பை மாகாளம்
    மறைகள் வல்லார் வணங்கித் தொழுகின்ற மாகாளமே

பூந்தராய் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் கடைப் பாடலில் (2.1.11) இறைவனை பகவனார் என்று சம்பந்தர் குறிப்பிடுகின்றார். இறைவனைப் போற்றி பாடிய இந்த பதிகத்தின் பத்து பாடல்களையும் பாட வல்ல அடியார்கள் தங்களின், தீவினைகள் அகன்று நல்வினைகள் கூடப் பெறுவார்கள் என்று சம்பந்தர் இந்த பாடலில் கூறுகின்றார்.

    மகர வார் கடல் வந்து அணவும் மணல் கானல் வாய்ப்
    புகலி ஞானசம்பந்தன் எழில் மிகு பூந்தராய்ப்
    பகவனாரைப் பரவு சொன்மாலை பத்தும் வல்லார்
    அகல்வர் தீவினை நல்வினையோடு உடன் ஆவாரே

கொச்சைவயம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (2.83.5), பகவன் என்று குறிப்பிடும் சம்பந்தர் இனியன அல்லாதவற்றையும் இனியதாக ஏற்றுக்கொள்ளும் பெருமான் என்று கூறுகின்றார். இந்த பாடலில் குபேரனை தோழனாக இறைவன் கொண்டுள்ள தன்மை குறிப்பிடப் படுகின்றது. அந்நாளில் சீர்காழி நகரில் இருந்த மறையவர்கள் வளர்த்த வேள்வியிலிருந்து எழுந்த புகை வானளாவச் சென்று வானையும் சந்திரனையும் மறைத்ததாக கூறுகின்றார். குனிமதி=வளைந்த பிறையை உடைய சந்திரன்

    பனிவளர் மாமலைக்கு மருகன் குபேரனோடு தோழமைக் கொள் பகவன்
    இனியன அல்லவற்றை இனிதாக நல்கும் இறைவன் இடம் கொள் பதிதான்
    முனிவர்கள் தொக்கு மிக்க மறையோர்கள் ஓமம் வளர் தூமம் ஓடி அணவிக்
    குனிமதி மூடி நீடும் உயர் வான் மறைத்து நிறைகின்ற கொச்சைவயமே  

பிரமபுரத்தின் மீது அருளிய பதிகத்தின் மூன்றாவது பாடலில் (3.67) ஞானசம்பந்தர் பெருமானை பகவன் என்று அழைக்கின்றார். இந்த பாடலில் பெருமானின் திருவடிகள் பிரகாசமான நாகமணி போன்று ஒளி வீசுவதாகவும் விரிந்த செந்தாமரை மலர் போன்று  மென்மையாகவும் அழகாகவும் இருப்பதாக கூறுகின்றார்.  முகம் என்ற சொல் பார்வை என்ற பொருளில் இங்கே வருகின்றது. பெருமான் வாய் திறந்து ஏதும் பேசாமல் மௌனமாக இருந்தவாறே தனது திருவருள் நோக்கத்தால் அருள் புரிந்து சனகாதி முனிவர்களுக்கு வேதங்களுக்கு விளக்கம் அளித்தார் என்று கூறுகின்றார். நகமணி= நாகமணி; முகை-விரிந்த

  பகலொளி செய் நகமணியை முகை மலரை நிகழ் சரண அகவு முனிவர்க்கு
  அகல மலி சகல கலை மிக உரை செய் முகமுடைய பகவன் இடமாம்
  பகை களையும் வகையில் அறுமுக இறையை மிக அருள நிகரில் இமையோர்
  புக உலகு புகழ எழில் திகழும் அலர் பெருகு புகலி நகரே  

கொட்டையூர் மற்றும் வலஞ்சுழி தலங்களின் மீது அருளிய பதிகத்தின் (6.73) பாடலில் அப்பர்  பிரான் பெருமானை பகவன் என்று குறிப்பிடுகின்றார். அணவுதல்=எட்டுதல், எட்டுதற்கு அரியவனாக இறைவன் இருக்கும் தன்மை இங்கே உணர்த்தப் படுகின்றது. பணம்=பாம்பின் படம். அவனது அருளின் உதவியாலன்றி எட்டுதற்கு அரியவனாக உள்ளவனும், இயல்பாகவே மலங்களிலிருந்து நீங்கியவனும், என்றும் அழியாத தன்மை உடையவனும், உலகங்கள் எங்கும் பரந்து நிற்பவனும், அழகான படத்தையும் பெரிய மணியினையும் கொண்டுள்ள பாம்பினை அணிகலனாக உடையவனும், பண்டரங்க கூத்து எனப்படும் கூத்தினை ஆடுபவனும், அளவற்ற செல்வம் முதலான ஆறு தன்மைகளை கொண்டவனும், மணலினை வாரிக் கொண்டு வரும் பொன்னி நதியின் கரையில் அமைந்த வலஞ்சுழி தலத்தின் இறைவனும், திருமாலுக்கும் பிரமனுக்கும் அவர்கள் விரும்பும் அதிகாரத்தினை வரமாக அருளுபவனும், நற்குணங்கள் வாய்க்கப் பெற்ற அடியார்கள் வாழும்  கொட்டையூர் தலத்தில் கோடீச்சரம் என்று அழைக்கப்படும் திருக்கோயிலில் உறையும் தலைவனும் ஆகிய இறைவனை, நெஞ்சமே நீ காண்பாயாக, என்று தனது நெஞ்சத்திற்கு கூறுவது போன்று நமக்கு அப்பர் பிரான் அறிவுரை கூறும் பதிகம்.

    அணவரியான் கண்டாய் அமலன் கண்டாய் அவினாசி
            கண்டாய் அண்டத்தான்  கண்டாய்
    பணமணி மாநாகம் உடையான் கண்டாய் பண்டரங்கன் கண்டாய்
            பகவன் கண்டாய்
    மணல் வருநீர்ப் பொன்னி வலஞ்சுழியான் கண்டாய் மாதவற்கும்
            நான்முகற்கும்         வரதன் கண்டாய்
    குணமுடை நல்லடியார் வாழ் கொட்டையூரில் கோடீச்சரத்து
            உறையும் கோமான்  தானே

திருக்கழுக்குன்றம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.92.2) அப்பர் பிரான் பெருமானை பகவன் என்று அழைக்கின்றார். பல்லாடு தலை=பற்கள் வெளியே தோன்றும் பிரம கபாலம்; என்பறாக் கோலம்=எலும்பு மாலைகள் நீங்காமல் எப்போதும் அணிந்திருக்கும் தன்மை;   

      பல்லாடு தலை சடை மேல் உடையான் தன்னைப்
          பாய்புலித் தோல் உடையானைப்   பகவன் தன்னை
      சொல்லோடு பொருள் அனைத்தும் ஆனான் தன்னைச் சுடருருவில்
          என்பறாக்  கோலத்தானை
      அல்லாத காலனை முன் அடர்த்தான் தன்னை ஆலின் கீழ்
          இருந்தானை அமுது ஆனானை  
      கல்லாடை புனைந்தருளும் காபாலியைக் கற்பகத்தைக்கண்ணாரக்
          கண்டேன் நானே

தில்லைச் சிதம்பரத்தின் மீது அருளிய திருத்தாண்டகத்தின் கடைப் பாடலில் (6.2) அப்பர் பிரான் பகவனார் என்று இறைவனை குறிப்பிடுகின்றார். பாரிடங்கள்=பூத கணங்கள்; பெருமான் இடையில் தான் உடுத்தியுள்ள பட்டாடையின் மேல் கச்சாக பாம்பினை இறுகக் கட்டிக் கொண்டும், பூத கணங்கள் சூழவும், தீயினைக் கையில் ஏந்தியவாறும், நடனக் கலையில் வல்லவராக நடனம் செய்கின்றார் என்று பாடலின் முதல் இரண்டு அடிகளில் கூறும் அப்பர் பிரான், அந்த பெருமானை தில்லை நகர் சென்று காணுமாறு நம்மை பணிக்கின்றார். அவ்வாறு நடனம் ஆடும் பெருமானை தேடிக் கொண்டு செல்லும் நாம் அவனை அடையாளம் கண்டு கொள்வதற்காக, அவனது அடையாளங்களை இந்த பாடலில்  குறிப்பிடுகின்றார். ஒளியுடன் விளங்கும் சூலம், மார்பினில் திகழும் வெண்ணூல், ஓதும் வேதம், கையில் வீணை மற்றும் கட்டங்கம் என்று குறிப்பிட்டு இறுதியில் வேறு எவருக்கும் இல்லாத நீலக்கறை படிந்த கழுத்து என்று  குறிப்பிடுவதை நாம் உணரலாம். விட்டு=ஒளிவீசும்; சிட்டர்=மேலானவர், நடனக் கலையில் வல்லவர் என்று பொருள் கொள்ளவேண்டும்.

    பட்டுடுத்து தோல் போர்த்துப் பாம்பு ஒன்று ஆர்த்துப் பகவனார்
           பாரிடங்கள் சூழ             நட்டம்
    சிட்டராய் தீ ஏந்திச் செய்வார் தம்மைத் தில்லை சிற்றம்பலத்தே
           கண்டோம் இந்நாள்
    விட்டு இலங்கு சூலமே வெண்ணூல் உண்டே ஓதுவதும் வேதமே
            வீணை உண்டே
    கட்டங்கம் கையதே சென்று காணீர் கறை சேர் மிடற்று
             எம் கபாலியார்க்கே

கங்கை கொண்ட சோளேச்சரம் தலத்தின் மீது பாடிய பதிகத்தில் கருவூர்த் தேவர் பெருமானை பகவன் என்று குறிப்பிடும் பாடலை (9.13.5)  நாம் இங்கே காண்போம். சுருதி= வேதம்; பருதி=சூரியன்; வேதங்கள் ஓதும் பிரமனாகவும், திருமாலாகவும், சுவர்க்க லோகத்தை ஆளும் இந்திரனாகவும், வானில் உலவும் சூரியனாகவும், உள்ள பெருமான், மூன்று கண்களை உடையவனாக,  சிறந்த ஆறு குணங்களை உடையவனாக, அனைத்து உடலிலும் உள்ளே இருக்கும் உயிரினுக்கு அமுதம் போன்று இனியவனாகவும் இருப்பதாக இங்கே கூறுகின்றார். இவ்வாறு இருக்கும் பெருமான், கருதுவார் கருதும் உருவமாகவும் இருக்கின்றான் என்று பாடலை முடிக்கின்றார்  

    சுருதி வானவனாம் திருநெடுமாலாம் சுந்தர விசும்பின் இந்திரனாம்
    பருதி வானவனாம் படர்சடை முக்கண் பகவனாம் அக உயிர்க்கு அமுதாம்
    எருது வாகனனாம் எயில்கள் மூன்று எரித்த ஏறு சேவகனாம் பின்னும்
    கருதுவார் கருதும் உருவமாம் கங்கை கொண்ட சோளேச்சரத்தானே

திருமந்திரம் ஆதார ஆதேயம் தந்திரத்தில், பெருமானை பகவன் என்று குறிப்பிடும் திருமூலர், பிராட்டி என்றும் பகவானுடன் பிரியாது நிற்கும் நிலையினை உணர்த்துகின்றார். அத்தகைய சக்தியை, தமது உள்ளத்தில் நிலை நிறுத்தி வழிபடும் அடியார்களின் உள்ளங்கள் அழுக்கு நீங்கிய நிலையில் உள்ள வெண்ணிற ஆடையினைப் போன்று, ஆணவம் கன்மம் மாயம் ஆகிய மூன்று மலங்களும் நீங்கப் பெற்று தூய்மையாக விளங்கும் என்று கூறுகின்றார்.

    மாது நல்லாளும் மணாளன் இருந்திடப்
    பாதி நல்லாளும் பகவனும் ஆனது
    சோதி நல்லாளைத் துணைப் பெய்ய வல்லிரேல்
    வேதனை தீர்தரும் வெள்ளடையாமே  
 

மாகேசுர பூஜை என்ற தந்திரத்தில் வரும் பாடலில் திருமூலர் பெருமானை பகவன் என்று குறிப்பிடுவதை நாம் இங்கே காண்போம். தமது உள்ளமே பெருங்கோயிலாக திகழ்வதை உணர்ந்து கொண்டு, தமது உள்ளத்தில் உள்ள சிவனை போற்றி வழிபடு செய்யும் அடியார்கள் நடமாடும் கோயிலாகத் திகழ்கின்றனர் என்றும், அத்தகைய அடியார்களை நோக்கி செய்யப்படும் வழிபாடு இறைவனைச் சென்று சாரும் என்று இங்கே திருமூலர் குறிப்பிடுகின்றார். ஆனால்  திருக்கோயிலில் உள்ள பெருமானுக்கு செய்யப்படும் வழிபாடு, நடமாடும் உயிர்களின் உள்ளே இருக்கும் சிவனைச் சென்று சாராது என்றும் இந்த பாடலில் கூறுகின்றார். பெருமானின் அடியார்களை நோக்கி செய்யப்படும் வழிபாடு பெருமானை நோக்கி செய்யப்படும் வழிபாட்டினும் சிறந்தது என்பதை திருமூலர் இந்த பாடலில் உணர்த்துகின்றார். படமாடக் கோயில்=கொடிகள் ஆடும் திருக்கோயில்கள்; நடமாடும் கோயில்=நடமாடும் உயிர்களின் உள்ளத்தில் இணைந்து நிற்கும் பெருமான் உள்ள இடம்.    

    படமாடக் கோயில் பகவற்கு ஒன்று ஈயின்
    நடமாடக் கோயில் நம்பர்க்கு அங்கு ஆகா
    நடமாடக் கோயில் நம்பர்க்கு ஒன்று ஈயின்
    படமாடக் கோயில் பகவற்கு அதாமே   

பொழிப்புரை:

இனிமை பொருந்திய பண்களுடன் கலந்து பாடுவதும் ஆடுவதும் இடைவிடாது செய்யும் பெருமான் மேலானவர்கள் என்று கருதப்படும் தேவர்களால் பெரிதும் விரும்பப்படுபவன். அவன் சிறந்த ஆறு குணங்களை உடையவன்.  தெய்வத்தன்மை பொருந்திய பிராட்டியைத் தனது உடலின் ஒரு அங்கமாக உடையவனும் தனது அடியார்களுக்கு அருள் புரிந்து அன்பராக விளங்குபவனும் ஆகிய பெருமான் உறையும் இடம் சண்பை நகரம் என்று அழைக்கப் படும் சீர்காழி தலமாகும்.  சிறப்பினில் ஒன்றினோடு ஒன்று ஒத்து விளங்கும் கொடிகள் பறக்கும் மாடங்களும், உயர்ந்த மதில்களும் கலந்ததும், நறுமணம் கமழ்வதும் ஆகிய சண்பை நகரினில் உள்ளம் குளிர்ந்து மகிழ்ச்சியுடன் புறாக்கள் உலாவுகின்றன; மேலும் குளிர்ச்சி பொருந்திய இதழ்கள் உடைய தாமரை மலர்களின் மேல் அன்னப் பறவைகள் தவழ்ந்து வளர்கின்றன. இத்தகைய செழிப்பு வாய்ந்த நகரமே பெருமான் உறையும் இடமாகும்.     

 

]]>
https://www.dinamani.com/specials/thinam-oru-thavaram/2019/may/06/128-எந்தமது-சிந்தை-பிரியாத---பாடல்-5-3143776.html
3143775 ஸ்பெஷல்ஸ் தினம் ஒரு தேவாரம் 128. எந்தமது சிந்தை பிரியாத - பாடல் 4 என். வெங்கடேஸ்வரன் DIN Sunday, May 5, 2019 12:00 AM +0530  

பாடல் 4:

    கொட்ட முழவு இட்ட அடி வட்டணைகள் கட்ட நடமாடி குலவும்
    பட்ட நுதல் கட்டு மலர் மட்டு மலி பாவையொடு மேவு பதி தான்
    வட்ட மதி தட்டு பொழிலுள் தமது வாய்மை வழுவாத மொழியார்
    சட்ட கலை எட்டு மருவு எட்டும் வளர் தத்தை பயில் சண்பை நகரே

விளக்கம்:

மட்டு=நறுமணம், தேன் என்று இரண்டு பொருட்களும் இங்கே பொருந்தும்; இட்ட=வைக்கப் பட்ட; தத்தை=கிளி; வட்டணை=வட்ட வடிவமாக ஆடப்படும் ஒருவகை நடனம்; சீர்காழி நகரத்தில் வளரும் கிளிகள் பயில்வது யாது என்பதை சம்பந்தர் இங்கே குறிப்பிடுகின்றார்.  சீர்காழி நகரினில் வாழும் சான்றோர்கள் அறுபத்து நான்கு கலைகளையும் நன்கு கற்று தேர்ந்தவர்களாக விளங்குவதால், அத்தகைய சான்றோர்கள் தொடர்ந்து பயில்வதைக் கேட்கும் கிளிகளும் அந்த கலைகளை பயில்வதாக சம்பந்தர் இந்த பாடலில் கூறுகின்றார். இவ்வாறு கூறுவதன் மூலம் சீர்காழி நகரில் பண்டைய நாளில் அறுபத்து நான்கு கலைகளைக் கற்று தேர்ந்தவர்கள் வாழ்ந்து வந்தனர் என்று உணர்த்துகின்றார். அத்தகைய சான்றோர்கள் கலைகள் பயில்வதை காணும் கிளிகள் அந்த கலைகளைத் தாங்களும் கற்று பயிலும் பெருமையை உடைய சண்பை நகரமே, பெருமான் உறையும் நகரமாகும்.

பொழிப்புரை:

முழவு போன்று வாத்தியங்கள் ஒலிக்க வட்டணை என்று அழைக்கப்படும் நடனத்தை ஆடியபடியே பெருமான், பட்டம் கட்டியது போன்று நெற்றியினில் நறுமணம் வீசும் மலர் மாலைகளை அணிந்துள்ள பார்வதி தேவியுடன் பொருந்தி உறையும் பதி சண்பை நகர் என்று அழைக்கப்படும் சீர்காழி நகரமாகும்.  வட்டமான வடிவில் விளங்கும் சந்திரனைத் தொடும் வண்ணம் உயர்ந்த மாட மாளிகைகளை உடைய சீர்காழி நகரத்தில்,  எப்போதும் உண்மையே பேசுபவர்களாகவும் அறுபத்து நான்கு கலைகளை கற்றவர்களாகவும் சான்றோர்கள் விளங்கினார்கள். அவர்கள் கலைகளை பயில்வதை கவனிக்கும் கிளிகள் தாங்களும் தொடர்ந்து அந்த கலைகளைப் பயிலும் நிலையினை சண்பை நகரில் காணலாம்.  

 

]]>
https://www.dinamani.com/specials/thinam-oru-thavaram/2019/may/05/128-எந்தமது-சிந்தை-பிரியாத---பாடல்-4-3143775.html
3143773 ஸ்பெஷல்ஸ் தினம் ஒரு தேவாரம் 128. எந்தமது சிந்தை பிரியாத - பாடல் 2 என். வெங்கடேஸ்வரன் DIN Friday, May 3, 2019 12:00 AM +0530  

பாடல் 2:

    அங்கம் விரி துத்தி அரவு ஆமை விரவார அமர் மார்பில் அழகன்
    பங்கய முகத்து அரிவையோடு பிரியாது பயில்கின்ற பதி தான்
    பொங்கு பரவைத் திரை கொணர்ந்து பவளத் திரள் பொலிந்து அயலே
    சங்கு புரி இப்பி தரளத் திரள் பிறங்கொளி கொள் சண்பை நகரே
 

விளக்கம்:

சென்ற பாடலில் பிராட்டியின் கூந்தலை அழகான கூந்தல் என்று குறிப்பிட்ட சம்பந்தர் இந்த பாடலில் பிராட்டியை தாமரை போன்று அழகிய முகத்தினை உடையவள் என்று இந்த பாடலில் கூறுகின்றார். அங்கம்=உடல்; விரி=பரந்த; துத்தி=புள்ளிகள்; விரவார=கலந்து திகழ; திரை=அலைகள்; அயலே=அருகினில்; இப்பி=சிப்பிகள்; பரவை=கடல்; திரள்=குவியல்;  பிறங்க=விளங்க,  வெண்மை நிறமும் சிவப்பு நிறமும் கலந்து விளங்க;  புரி சங்கு=வலமாக சுற்றிய சங்கு; அரிவை=பிராட்டி;  தரளம்=முத்து;   

பொழிப்புரை:

தனது திருமேனியில், புள்ளிகள் கொண்டதும் விரிந்த படத்தினை உடையதும் ஆகிய பாம்பினையும் மார்பினில் ஆமை ஓட்டினையும் கலந்து அணிந்துள்ள பெருமான் மிகுந்த அழகனாகத் திகழ்கின்றான்.  அவன் தாமரை மலர் போன்று அழகிய முகம் கொண்ட பிராட்டியுடன் பிரியாது உறைகின்ற தலம் சண்பை நகர் என்று அழைக்கப் படுகின்ற சீர்காழி ஆகும்.  பொங்கி எழும் கடலலைகள் அடித்துக் கொண்டு வந்து சேர்க்கும் பவளக் குவியல்களின் அருகே வலம்புரி சங்குகளும் முத்துக்களும் குவியலாக குவிந்திருக்க, அதன் ஒளியால் மிகுந்த பிரகாசத்துடன் விளங்கும் சண்பை நகர் தான் பெருமான் வீற்றிருக்கும் தலமாகும்.

 

]]>
https://www.dinamani.com/specials/thinam-oru-thavaram/2019/may/03/128-எந்தமது-சிந்தை-பிரியாத---பாடல்-2-3143773.html
3143771 ஸ்பெஷல்ஸ் தினம் ஒரு தேவாரம் 128. எந்தமது சிந்தை பிரியாத - பாடல் 1 என். வெங்கடேஸ்வரன் DIN Thursday, May 2, 2019 12:00 AM +0530
பின்னணி:

தனது நான்காவது தலயாத்திரையை முடித்துக்கொண்டு சீர்காழி திரும்பிய திருஞான சம்பந்தர் சில நாட்கள் சீர்காழியில் தங்கினார். அப்போது அவரது பெற்றோர்களால் அவருக்கு உபநயனச் சடங்கு செய்து வைக்கப் பட்டது. அதன் பின்னர் சில நாட்கள் கழித்து திருநாவுக்கரசர், திருஞான சம்பந்தரை நேரில் காணும் ஆர்வத்துடன் சீர்காழி வந்தடைந்தார்.  தனது  ஊருக்கு திருநாவுக்கரசர் வருவதை அறிந்து கொண்ட திருஞான சம்பந்தர், தனது தொண்டர்களுடன் ஊர் எல்லைக்கு சென்று மிகுந்த உற்சாகத்துடன்  திருநாவுக்கரசரை வரவேற்றார். பின்னர் பாசம் பொங்க அவரை அப்பரே என்று அழைத்தார். பின்னர் இருவருமாக சேர்ந்து சீர்காழி நகரில் உள்ள திருக்கோயிலுக்கு சென்றனர்; அதன் பின்னர் தனது இல்லத்திற்கு, அப்பர் பிரானை அழைத்துச் செல்ல ஆங்கே இருவரும் மிகுந்த மகிழ்ச்சியுடன் பெருமானை குறித்து அளவளாவினர். இந்த சந்திப்பின் பின்னர் அவர்கள் இருவரும், இறுதி வரை நெருங்கிய தோழர்களாக பழகியதை நாம் பெரிய புராணத்திலிருந்து அறிகின்றோம்.  இவ்வாறு இறைவனைக் குறித்து பேசியதால் விளைந்த சிவானந்த அனுபூதியில் திளைத்த இருவரும் பல பதிகங்கள் இயற்றினார்கள் என்று பெரிய புராணத்தில் சேக்கிழார் கூறுகின்றார். அவர்கள் இருவரின் இடையே அன்பும் நண்பும் மேலும் மேலும் பெருகியது என்று சேக்கிழார் கூறும் பாடலை நாம் இங்கே காண்போம்.  இயல்பாகவே அவர்கள் இருவரின் மனதினில் இறைவன் பால் இருந்த அன்பு பொங்க அவர்கள் இருவரும் உரையாடினார்கள் என்று சேக்கிழார் கூறுவதை நாம் இந்த பாடலில் உணரலாம்.

    அணையும் திருத்தொண்டர் தம்மோடு ஆண்ட அரசுக்கும் அன்பால்
    இணையில் திருவமுது ஆக்கி இயல்பால் அமுது செய்வித்து
    புணரும் பெருகு அன்பு நண்பும் பொங்கிய காதலில் கும்பிட்டு
    உணரும் சொல்மாலைகள் சாத்தி உடன் மகிழ்வு எய்தி உறைந்தார்

பின்னர் இருவருமாக திருக்கோலக்கா தலம் சென்று இறைவனை வணங்கி பதிகங்கள் பாடியதாக பெரிய புராணம் உணர்த்துகின்றது. எனினும் அப்பர் பிரான் திருக்கோலக்கா தலத்தின் மீது பாடிய பதிகம் ஏதும் நமக்கு இதுவரை கிடைக்கவில்லை. திருக்கோலக்கா தலத்திலிருந்து சீர்காழி திரும்பிய போது அப்பர் பிரான் பல சோழ நாட்டுத் தலங்கள் காண்பதற்கு தமக்கிருந்த விருப்பத்தை வெளியிட்டு, சம்பந்தரிடமிருந்து விடைபெற்றுக் கொண்டு செல்ல, திருஞான சம்பந்தர் மேலும் பல நாட்கள் சீர்காழி நகரில் தங்கினார். அந்நாட்களில் பலவகையான வித்தியாசமான பாடல்கள் பாடினார் என்று சேக்கிழார் குறிப்பிடும் பாடலில்  நடையில் முடுகு இராகம் என்ற வகையில் பதிகம் பாடினார் என்று கூறுகின்றார். முடுகுதல் என்றால் வேகம் என்று பொருள். வேகமான நடை கொண்ட பண்ணில் பாடப்பட்டுள்ள பதிகம் இந்த பதிகம். சாதாரி பண்ணில் அமைந்துள்ள 34  பாடல்களில் ஐந்து பாடல்கள் சீர்காழி தலத்தின் மீது அருளப்பட்டவை.  சுரருலகு நரர்கள் என்று தொடங்கும் பிரமாபுரத்து பதிகம், வழிமொழி இராகம் என்று குறிப்பிடப்படுகின்றது. விண்ணவர் தொழுதெழு என்று தொடங்கும் பதிகம் முக்கால் என்று குறிப்பிடப்படுகின்றது. இந்த இரண்டு பதிகங்களையும் நாம் ஏற்கனவே சிந்தித்துள்ளோம். எஞ்சிய மூன்று பதிகங்கள், எந்தமது சிந்தை,  சங்கமரு முன்கை,  திருந்துமா களிற்றிள என்று தொடங்கும் பதிகங்கள். இந்த மூன்று பதிகங்களும் (3.75, 3.81 & 3.89), பொதுவாக நடையின் முடுகு இராகம் என்று சேக்கிழாரால் குறிப்பிடப் படுகின்றன என்று உரை ஆசிரியர்கள் கருதுகின்றனர். இந்த மூன்று பதிகங்களில் எந்தமது சிந்தை என்று தொடங்கும் பதிகத்தினை நாம் இங்கே சிந்திப்போம். இந்த பதிகத்தின் அனைத்துப் பாடல்களிலும் சண்பை என்ற சீர்காழியின் பெயர் குறிப்பிடப் படுகின்றது. இந்த பதிகத்தின் ஒன்பது பாடல்களில் தேவியுடன் பெருமான் இந்த வீற்றிருப்பதாக குறிப்பிடப்படுகின்றது.    
 
பாடல் 1:

    எந்தமது சிந்தை பிரியாத பெருமான் என இறைஞ்சி இமையோர்
    வந்து துதி செய்ய வளர் தூபமொடு தீப மலி வாய்மை அதனால்
    அந்தி அமர் சந்தி பல அர்ச்சனைகள் செய்ய அமர்கின்ற அழகன்
    சந்த மலி குந்தள நன் மாதினொடு மேவு பதி சண்பை நகரே

விளக்கம்:

எந்தமது சிந்தை பிரியாத பெருமான் என்று தேவர்கள் பெருமானை இறைஞ்சியதாக சம்பந்தர் இந்த பாடலில் குறிப்பிடுகின்றார். சூரபதுமனின் கொடுமைகளுக்கு அஞ்சிய தேவர்கள் இந்த தலத்து பெருமானிடம் புகல் அடைந்ததால் புகலி என்ற பெயர் வந்தது என்பதை நாம் அறிவோம். அந்த சம்பவம் தான் இந்த பாடலின் முதல் அடியில் குறிப்பிடப் படுகின்றது. பெருமான்=பெருமைக்குரிய ஆண் மகன் என்ற சொற்றொடர் பெருமான் என்று குறுகியதாக கூறுவார்கள்.  வளர்=வாசனை வளரும்;  வாய்மை=தன்மை; சீர்காழி தலத்தில் அமர்ந்துள்ள பெருமானுக்கு அர்ச்சனைகள் செய்த பின்னர், சிறந்த முறையில் தூபம் தீபம் முதலிய உபசாரங்கள் செய்தமை இங்கே குறிப்பிடப்படுகின்றது. அந்தி=மாலை நேரம்; அமர்=பொருந்திய; சந்தி=சந்திப் பொழுதுகள்; இரண்டு வேறுவேறு  காலங்கள் சந்திக்கும் நேரங்கள்; இரவும் பகலும் சந்திக்கும் நேரம் காலை நேரம்; காலைப் பொழுதும் மாலைப் பொழுதும் கலக்கும் நேரம் நண்பகல்; பகலுக்கும் இரவுக்கும் இடைப்பட்ட நேரம் மாலை;  இரவும் முற்காலை நேரமும் இணையும் நேரம் நள்ளிரவு, அர்த்த ஜாமம்; இத்தகைய நான்கு பொழுதுகளிலும் அர்ச்சனைகள் செய்து பெருமானை அந்நாளில் வழிபட்டு வந்தனர் என்பது இந்த பாடல் மூலம் தெளிவாகின்றது. பெருமானை விடவும் அழகில் சிறந்தவர் வேறு எவர் உள்ளார். அதனால் தான் பெருமானை அழகன் என்று இங்கே குறிப்பிடுகின்றார்.  சொக்க வைக்கும் அழகினை உடையவன் என்ற பொருளினை  கொண்ட திருநாமம் தானே மதுரையம்பதியில் வீற்றிருக்கும் பெருமானின் திருநாமம்--சொக்கன்; மலி=சிறந்த; குந்தளம்= கூந்தல்; விரித்த சடையுடன் உள்ள பெருமானுக்கு துணைவியாக இருப்பவள் மிகுந்த அழகுடன் விளங்கும் கூந்தலை உடையவள் பிராட்டி என்று கூறுவது நயமாக உள்ளது. சந்தம் மலி=அழகு பொருந்திய; எந்தமது சிந்தை பிரியாத பெருமான் என்று கூறுவது நமக்கு, இமைப் பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் என்ற திருவாசகத் தொடரை நினைவூட்டுகின்றது.   

பொழிப்புரை:

எங்களின் சிந்தையில் இருந்து பிரியாத பெருமானே, எங்களது தலைவனே என்று தேவர்கள் புகலி நகர் வந்தடைந்து தொழுது போற்றி வணங்க சீர்காழி நகரில் வீற்றிருப்பவன் பெருமான்;  அத்தகைய பெருமானை மாலை நேரம் உள்ளிட்ட பல சந்தியா காலங்களிலும் முறையாக அர்ச்சனை செய்து சிறப்பான முறையில் தூபம் தீபம் முதலான உபசாரங்கள் செய்து அனைவரும் வழிபடுவதை விரும்பி சீர்காழி நகரில் அமர்ந்து உறைகின்றான்; அழகன் என்று அழைக்கப் படும் பெருமான், அழகிய கூந்தலை உடையவளும், பல நல்ல குணங்களை உடைய பெண்மணியும் ஆகிய பிராட்டியுடன் பொருந்தி உறைகின்ற தலம் சண்பை நகரமாகும்.

 

]]>
https://www.dinamani.com/specials/thinam-oru-thavaram/2019/may/02/128-எந்தமது-சிந்தை-பிரியாத---பாடல்-1-3143771.html
3143774 ஸ்பெஷல்ஸ் தினம் ஒரு தேவாரம் 128. எந்தமது சிந்தை பிரியாத - பாடல் 3 என். வெங்கடேஸ்வரன் Wednesday, May 1, 2019 06:08 PM +0530
பாடல் 3:

    போழு மதி தாழு நதி பொங்கு அரவு தங்கு புரி புன் சடையினன்
    யாழின் மொழி மாழை விழி ஏழை இள மாதினொடு இருந்த பதி தான்
    வாழை வளர் ஞாழல் மகிழ் மன்னு புனை துன்னு பொழில் மாடு மடலார்
    தாழை முகிழ் வேழ மிகு தந்தம் என உந்து தகு சண்பை நகரே

விளக்கம்:

பிராட்டியின் கூந்தல் மற்றும் முகத்தின் அழகினை முதல் இரண்டு பாடல்களில் கூறும் சம்பந்தர் இந்த பாடலில் கண்களின் அழகினை, மாவடு போன்று கண்கள் என்று குறிப்பிடுகின்றார். பெண்களின் கண்களுக்கு மாவடுவினை உவமையாக சொல்வது இலக்கிய வழக்கு; நமக்கு திருவாசகம் பொற்சுண்ணம் பதிகத்தின் பாடல் ஒன்று நினைவுக்கு வருகின்றது. தன்னையும் ஒரு பெண்ணாக பாவித்துக் கொண்டு பெருமான் நீராட நறுமணம் கொண்ட பொடி தயார் செய்யவேண்டும் என்று மாணிக்கவாசகர் விரும்புகின்றார். பெருமானுக்கு பொற்சுண்ணம் இடிக்க அழகிய கண்கள் கொண்ட பெண்களை அழைக்கும் அடிகளார், அவ்வாறு வரும் பெண்கள் பெருமானின் புகழினை தன்னுடன் சேர்ந்து பாடவேண்டும் என்றும், புறத்தே பெருமானின் அடியார்கள் ஒருவரும் இல்லாத வண்ணம் அனைவரும் கலந்து கொண்டு பெருமானுக்கு பொற்சுண்ணம் இடிக்க வேண்டும் என்று விரும்புகின்றார். எனவே தான் வரும் பெண்கள் மற்றவரை கூவி அழைக்க வேண்டும் என்றும் கூறுகின்றார். பெருமானுக்கு பொற்சுண்ணம் இடிக்கும் திருப்பணியில், அடியார்கள் எவரையும் விட்டு விடாமல் ஈடுபடுத்த வேண்டும் என்ற தன்னலமற்ற ஆசை இங்கே வெளிப்படுகின்றது. இவ்வாறு அனைவரும் ஈடுபட்டு செய்வதன் பலன் என்ன என்பதையும் இந்த பாடலில் அடிகளார் உணர்த்துகின்றார். பிராட்டியுடன் பெருமான் தோன்றி அனைவரையும் ஆட்கொள்ளுவார் என்று கூறி திருப்பணியில் கலந்து கொள்ளுமாறு ஊக்குவிப்பதை நாம் இந்த பாடலில் உணரலாம்.   

    பூவியல் வார்சடை எம்பிராற்கு பொன் திருச்சுண்ணம்
           இடிக்க வேண்டும்
    மாவின் வடுவகிர் அன்ன கண்ணீர் வம்மின்கள் வந்து
           உடன் பாடுமின்கள்
     கூவுமின் தொண்டர் புறம் நிலாமே குனிமின் தொழுமின்
           எம் கோன் எம் கூத்தன்
    தேவியும் தானும் வந்து எம்மை ஆளச் செம்பொன் செய்
           சுண்ணம் இடித்தும் நாமே

போழும்=பிளந்த, வட்டத்தின் ஒரு பகுதியாக பிளந்த சந்திரன்; தாழுநதி=தாழ்ந்து கீழே பாய்ந்து இறங்கிய கங்கை நதி; பொங்கரவு=சீறும் பாம்பு; புன்சடை=செம்பட்டை நிறத்தில் உள்ள சடை; புரி=முறுக்கிய; மாழை=மாவடு; தாழை முகிழ்=தாழையின் மொக்கு; ஞாழல்= புலிநகக் கொன்றை; மன்னு=நிலையாக விளங்கும்; புனை=புன்னை மரங்கள்; மாடு=அருகே;  வுந்துதரு=தலையில் சூட்டிக் கொள்ளாமல் அலட்சியம் செய்யும்; ஏழை=தனியாக தனக்கென்று எந்த செயலும் இல்லாமல் இறைவனது எண்ணங்களை செயல்படுத்தும்; தாழுநதி என்ற சொல் தண்ணீரின் தன்மையை, மேடான இடத்தில் நில்லாமல் கீழே பாயும்  தன்மையை உணர்த்துவதாகவும் பொருள் கூறுவார்கள். உயர்ந்த சடையில் தேக்கிவைக்கப் பட்ட கங்கை நதி கீழே வாராமல் நிறுத்திய பெருமானின் வல்லமை மலைப்புக்கு உரியது.     

பொழிப்புரை:

வட்ட வடிவினைப் பிளந்தது போன்று தோன்றும் ஒற்றைப் பிறைச் சந்திரனையும், சீறிப் பாய்கின்ற இயல்பினை உடைய பாம்பினையும், வேகமாக கீழே இறங்கி வந்த கங்கை நதியையும் தனது சுருண்ட செம்பட்டை நிறத்தில் உள்ள சடையில் தங்கும் வண்ணம் செய்த பெருமான், யாழின் ஒலி போன்று இனிய குரலினையும் மாவடு போன்று அழகிய கண்களையும் உடையவளும், தனக்கென்று தனியாக எந்த செயலும் இல்லாமல் எப்போதும் இறைவனின் எண்ணங்களை செயல்படுத்தும் தன்மை உடையவளும் ஆகிய பார்வதி தேவியுடன் இணைந்து இருக்கும் பதி சண்பை நகர் என்று அழைக்கப்படும் சீர்காழி நகரமே. வாழை மற்றும் புலிநகக் கொன்றை, மகிழ மரம், புன்னை மரம் ஆகிய மரங்கள் அடர்ந்து விளங்கும் சோலைகளின் அருகே, தாழை செழித்து வளர்ந்து காணப்படுவதால் யானையின் தந்தங்கள் என்று தவறாக கருதப்பட்டு தங்களது கூந்தலில் சூட்டிக் கொள்ளாமல் மகளிரால் அலட்சியம் செய்யப்படும் மடல்கள் பொருந்திய தாழை மொக்குகள் படர்ந்து கிடக்கும் சண்பை நகரமே பெருமான் உறையும் பதியாகும்.   

 

]]>
https://www.dinamani.com/specials/thinam-oru-thavaram/2019/may/04/1287-எந்தமது-சிந்தை-பிரியாத---பாடல்-3-3143774.html
3143768 ஸ்பெஷல்ஸ் தினம் ஒரு தேவாரம் 127. பிறையணி படர்சடை - பாடல் 11 என். வெங்கடேஸ்வரன் DIN Wednesday, May 1, 2019 05:42 PM +0530
பாடல் 11:

    பெருகிய தமிழ் விரகினன் மலி பெயரவன் உறை பிணர் திரையொடு
    கருகிய நிற விரி கடலடை கழுமலம் உறைவிடம் எனநனி
    பெருகிய சிவனடி பரவிய பிணைமொழியன ஒரு பதுமுடன்
    மருவிய மனமுடையவர் மதியுடையவர் விதியுடையவர்களே

விளக்கம்:

மலி=நிறைந்த; பெயர்=புகழ்; பெருகிய தமிழ்=பல வகையான எண்ணற்ற நூல்களைக் கொண்டு வளர்ந்த தமிழ் மொழி; விரகினன்=மிகவும் ஆழமாகக் கற்று உணர்ந்தவன்; உரை=நீர்த்துளி

பொழிப்புரை:

எண்ணற்ற நூல்களைக் கொண்டு பரந்து விரிந்த தமிழ் மொழியினை ஆழமாகக் கற்று உணர்ந்து நிறைந்த புகழுடன் விளங்கும் ஞானசம்பந்தன், நீர்த்துளிகள் கலந்த அலைகள் உடைய கடல், நீல நிறத்துடன் விரிந்து பரந்து விளங்கும் கடலினை அடுத்துள்ள கழுமலம் நகரினில் உறையும் சிவபெருமானது திருவடிகளை பெருமையுடன் பாடிய இந்த பதிகத்தின் பத்து பாடல்களை, ஒன்றிய மனத்துடன் பாடும் அடியவர்கள் இம்மையில் கல்விச் செல்வமும் பொருட்செல்வமும் பெற்று மகிழ்ச்சியுடன் வாழ்ந்த பின்னர், பெருமானின் திருவடிகளை அடைந்து நிலையான இன்பத்துடன் வாழ்வார்கள். 

முடிவுரை:

பதிகத்தின் முதல் பாடலில் நன்மை விளைவிக்கும் திருவடிகள் என்று உணர்த்தி, அந்த திருவடிகளைச் சார்ந்து நலம் பெறுமாறு சம்பந்தர் நம்மைத் தூண்டுகின்றார். கடினமான செயலாக தோன்றும், பிறப்பிறப்புச் சுழற்சியிலிருந்து விடுதலை பெறுவதை, மிகவும் எளிய செயலாக மாற்றி நன்மை புரிவான பெருமானின் கழல்கள் என்று இரண்டாவது பாடலில் கூறுகின்றார். பெருமானின் திருவடிகளை நாள்தோறும் புகழ்ந்து வணங்கும் அடியார்கள், இறைவனைப் பற்றிய சிந்தனையில் எப்போதும் ஆழ்ந்து இருப்பார்கள் என்று மூன்றாவது பாடலில் கூறுகின்றார். நமது வினைகளை முற்றிலும் கழித்துக் கொள்ள விரும்பினால் நாம் செய்ய வேண்டியது யாது என்பதை நான்காவது பாடலில் உணர்த்துகின்றார். ஐந்தாவது பாடலில் பெருமானின் வல்லமையை நமக்கு உணர்த்தும் சம்பந்தர் ஆறாவது பாடலில் அந்த வல்லமை நமது வினைகளை பொடிபொடியாக மாற்றி நாம் முக்தி உலகுக்கு செல்ல வழி வகுக்கும் என்று கூறுகின்றார். ஏழாவது பாடலில் பெருமானின் திருவடிகளைத் தவிர்த்து வேறு எதையும் பேணாதவன் என்று தன்னைக் குறிப்பிட்டு, நாமும் அவரை பின்பற்றும் வண்ணம் நம்மை தூண்டுகின்றார். எட்டாவது பாடலில் கழுமலம் நகரம் முற்றூழிக் காலத்திலும் அழியாது உயர்ந்து நின்றது என்று தலத்தின் சிறப்பினை குறிப்பிடுகின்றார். ஒன்பதாவது பாடலில் அவனது திருவடிகளைத் தொழும் அடியார்கள், ஏழு வகையான பிறப்புகளிலிருந்து விடுதலை பெற்று மேலான உலகத்தை அடைவார்கள் என்று கூறுகின்றார். பத்தாவது பாடலில், பெருமானைத் தொழும் அடியார்கள் முக்தி நிலையினை அடிவார்கள் என்று கூறும் சம்பந்தர் பதிகத்தின் கடைப் பாடலில் பதிகத்தை ஓதும் அடியார்கள் அறிவுச்செல்வமும் பொருட்செல்வமும் பெற்று விளங்குவார்கள் என்று கூறுகின்றார். இந்த பதிகத்தினை ஒன்றிய மனத்துடன் ஓதி, இம்மையில் கல்வியும் செல்வமும் பெற்று மகிழ்ச்சியுடன் வாழ்ந்து மறுமையில் பெருமானின் திருவடிகளைச் சென்றடைந்து நிலையான இன்பத்துடன் வாழ்வோமாக

 

]]>
https://www.dinamani.com/specials/thinam-oru-thavaram/2019/may/01/127-பிறையணி-படர்சடை---பாடல்-11-3143768.html
3143767 ஸ்பெஷல்ஸ் தினம் ஒரு தேவாரம் 127. பிறையணி படர்சடை - பாடல் 10 என். வெங்கடேஸ்வரன் DIN Tuesday, April 30, 2019 12:00 AM +0530
பாடல் 10:

    அமைவன துவர் இழுகிய துகில் அணியுடையினர் அமண் உருவர்கள்
    சமையமும் ஒரு பொருளெனும் அவை சல நெறியன அறவுரைகளும்
    இமையவர் தொழு கழுமலம் அமர் இறைவனது அடி பரவுவர் தமை
    நமையல வினை நலன் அடைதலில் உயர்நெறி நனி நணுகுவர்களே

விளக்கம்:

அமைவன=பொருந்துவன; இழுகிய=தோய்ந்த; நமையல=வருத்தம் உண்டாக்காது; சல நெறி= வஞ்சக நெறி; உண்மையான மெய்ப்பொருளாகிய இறைவனை உணர்ந்து அவனை நாடிச் சென்று வணங்கி அவனது அருளினால் முக்தி நிலை பெறுவதற்கு வழி வகுப்பது, வேதங்களும் ஆகமங்களும் உணர்த்தும் சைவநெறியாகும். அந்த வழியினில் நாம் செல்வதைத் தடுப்பதால் சமணர்கள் மற்றும் புத்தர்களின் கொள்கைகள் வஞ்சக நெறிகள் என்று கூறப்படுகின்றன.   

பொழிப்புரை:

தமக்கு பொருந்தும் வண்ணம் துவர் நிறம் தோய்க்கப்பட்ட ஆடையினை அணியும் புத்தர்களும், உடையேதும் இல்லாமல் அம்மணமாக திரியும் சமணர்களும் பின்பற்றும் மதங்கள், பொருள் என உணர்த்தும் கொள்கைகள் வஞ்சக நெறிக்கு உயிரினை அழைத்துச் செல்லும் வழிகளாகும். அவர்களது அறிவுரைகளும் வஞ்சகம் நிறைந்த மொழிகள். ஆனால், விண்ணவரும் தொழும் வண்ணம் கழுமலம் நகரில் வீற்றிருக்கும் பெருமானது திருவடிகளைத் தொழும் அடியார்களின் வினைகள் அவர்கள் வருத்தாத வண்ணம் பெருமான் அருள் செய்வதால், அத்தகைய அடியார்கள் வினைகளின் தன்மைகள் நீங்கப்பெற்று உயர்ந்த முக்திநெறியினை சென்று அடைவார்கள்.    

 

]]>
https://www.dinamani.com/specials/thinam-oru-thavaram/2019/apr/30/127-பிறையணி-படர்சடை---பாடல்-10-3143767.html
3143766 ஸ்பெஷல்ஸ் தினம் ஒரு தேவாரம் 127. பிறையணி படர்சடை - பாடல் 9 என். வெங்கடேஸ்வரன் DIN Monday, April 29, 2019 12:00 AM +0530  

பாடல் 9:

    கொழு மலர் உறை பதி உடையவன் நெடியவன் என இவர்களும் அவன்
    விழுமையை அளவு அறிகிலர் இறை விரை புணர் பொழிலணி விழவமர்
    கழுமலம் அமர் கனல் உருவினன் அடியிணை தொழும் அவர் அருவினை
    எழுமையும் இல நிலவகை தனில் எளிது இமையவர் வியனுலகமே

விளக்கம்:

கொழு=அழகு; அவன்=சிவபெருமான்; விழுமை=பெருமை. சிறப்பு; இறை என்ற சொல்லினை அளவு அறிகிலர் என்ற சொற்களுடன் முன்னர் வைத்து பொருள் காண வேண்டும். இறை அளவு அறிகிலர்=சிறிதும் அறியாமல்; விரை=நறுமணம்; புணர்=கலந்த;

பொழிப்புரை:

சிறந்த தாமரை மலரினைத் தனது இருப்பிடமாக உடைய பிரமனும், நெடியவனாக வளர்ந்து மூவுலகங்களையும் அளந்த திருமாலும் ஆகிய இருவரும், பெருமானின் சிறப்பினையும் பெருமையினையும் சிறிதளவும் அறியாததால், அவனது திருமுடியையும் திருவடிகளையும் காண்பதற்கு முயற்சி செய்து, அவற்றை காண முடியாமல் திகைத்தனர்;  நறுமணம் கலந்த அழகிய சோலைகள் சூழ்ந்ததும், திருவிழாக்கள் இடைவிடாது நடைபெறுவதும் ஆகிய கழுமலம் நகரினில் உறைபவனாகிய பெருமானின் இணையான இரண்டு திருவடிகளை வணங்கும் அடியார்கள், வல்லமை வாய்ந்த வினைகளால் ஏற்படும் ஏழு வகையான பிறப்புகளில் ஏதும் அவர்களை அணுகாது. எனவே அவர்கள் மீண்டும் நிலவுலகில் பிறவாமல் இமையவர் உலகினை அடையும் தன்மையை மிகவும் எளிதில் பெறுவார்கள்.

 

]]>
https://www.dinamani.com/specials/thinam-oru-thavaram/2019/apr/29/127-பிறையணி-படர்சடை---பாடல்-9-3143766.html
3143765 ஸ்பெஷல்ஸ் தினம் ஒரு தேவாரம் 127. பிறையணி படர்சடை - பாடல் 8 என். வெங்கடேஸ்வரன் DIN Sunday, April 28, 2019 12:00 AM +0530  

பாடல் 8:

    கடலென நிற நெடு முடியவன் அடு திறல் தெற அடி சரணென
    அடல் நிறை படை அருளிய புகழ் அரவு அரையினன் அணி கிளர் பிறை
    விடநிறை மிடறு உடையவன் விரி சடையவன் விடை உடையவன் உமை
    உடனுறை பதி கடல் மறுகுடை உயர் கழுமல வியன் நகரதே

விளக்கம்:

அடுதல்=அழித்தல், வருத்துதல்; அடுதிறல்=பிறரை வருத்தும் வலிமை; தெற=தொலையும் வண்ணம்; அடல்=வலிமை;
 
பொழிப்புரை:

கடலின் கருமை நிறம் கொண்டவனும் நீண்ட முடிகளை உடையவனும் ஆகிய அரக்கன் இராவணனின், பிறரை வருத்தும் வலிமை தொலையும் வண்ணம் அவனை கயிலை மலையின் கீழே அழுத்தி நெருக்கியவன் சிவபெருமான். அவ்வாறு அழுத்தப்பட்டதால் தனது உடல் வலிமை குன்றிய நிலையில் அரக்கன் இராவணன் பெருமானின் திருவடிகளை சரணடைய, அவனுக்கு பரிசாக வல்லமை வாய்ந்த படைக்கலங்களை அருளியவன் சிவபெருமான்; அனைவரும் புகழத் தக்க வகையில் விடமுடைய பாம்பினைத் தனது இடுப்பினில் கச்சையாக கட்டி ஆட்டுபவனும், ஒளி வீசும் கதிர்களை உடைய பிறைச் சந்திரனைத் தனது சடையில் அணிந்தவனும், விடத்தினை தேக்கியதால் கருமை நிறம் அடைந்த கழுத்தினை உடையவனும், விரிந்த சடையை உடையவனும், இடபத்தை வாகனமாக உடையவனும் ஆகிய பெருமான், உமையம்மையுடன் உறைவது கழுமலம் நகரமாகும். அத்தகைய பெருமை வாய்ந்த கழுமலம் நகரம், பிரளய காலத்தில் கடல் பொங்கி எழுந்து னித்து உலகத்தினையும் மூழ்கடித்த போதிலும். தான் மூழ்காத வண்ணம் உயர்ந்து நின்ற தலமாகும்.     

 

]]>
https://www.dinamani.com/specials/thinam-oru-thavaram/2019/apr/28/127-பிறையணி-படர்சடை---பாடல்-8-3143765.html
3143764 ஸ்பெஷல்ஸ் தினம் ஒரு தேவாரம் 127. பிறையணி படர்சடை - பாடல் 7 என். வெங்கடேஸ்வரன் DIN Saturday, April 27, 2019 12:00 AM +0530  

பாடல் 7:

    முதிருறு கதிர் வளர் இளமதி சடையனை நறநிறை தலை தனில்
    உதிருறு மயிர்பிணை தவிர் தசையுடை புலியதள் இடை இருள் கடி
    கதிருறு சுடரொளி கெழுமிய கழுமலம் அமர் மழு மலி படை
    அதிருறு கழலடிகளதடி தொழும் அறிவு அலது அறிவு அறியமே

விளக்கம்:

இந்த பாடலில் ஞானசம்பந்தர் பெருமானது திருப்பாதங்களைத் தவிர்த்து வேறு எதனையும் தொழாத அறிவு உடையவனாக தான் இருப்பதாக கூறுகின்றார். இவ்வாறு அவர் கூறுவது அவர் அருளிய மற்றொரு பதிகத்தின் முதல் பாடலை (3.44.1) நினைவூட்டுகின்றது. கல்லால மரத்தின் கீழ் அமர்ந்து சனகாதி முனிவர்களுக்கு, தென்முகக்கடவுள் வடிவத்தில் அறம் உரைத்த பெருமானை அன்றி வேறு எந்த தேவரையும் நல்லார் பேணார் என்று சம்பந்தர் இந்த பாடலில் கூறுகின்றார். நல்லார் என்பதற்கு உண்மையான மெய்ப்பொருளை உணர்ந்த ஞானியர் என்று விளக்கம் அளிக்கப்படுகின்றது.   

    கல்லால் நீழல்
    அல்லாத் தேவை
    நல்லார் பேணார்
    அல்லோம் நாமே

நமக்கு வழிகாட்டும் நல்லோராகிய நால்வரும் சிவபெருமானைத் தவிர வேறு எவரையும் போற்றாது இருந்த தன்மையை அவர்களது வாழ்விலிருந்து நாம் அறிகின்றோம். அவர்களது இந்த கொள்கை அவர்களின் பல பாடல்களில் வெளிப்படுகின்றது. அத்தகைய பாடல்கள் சிலவற்றை நாம் இங்கே காண்போம். வாழாப்பத்து பதிகத்தின் கடைப் பாடலில் மணிவாசகர், பெருமானை அன்றி வேறு எவரையும் தனக்குத் துணையாக கருத மாட்டேன் என்றும் அவரைத் தவிர்த்து வேறு எவரையும் தொழமாட்டேன் என்றும் கூறுகின்றார். இந்த பாடலின் முதல் அடியில் கருணையே உருவமாக உள்ள பிராட்டியைத் தனது உடலின் ஒரு பாகத்தில் வைத்துள்ள பெருமான் என்று அடிகளார் கூறுகின்றார். பண்டைய நாளிலிருந்து இடைவிடாது தொடர்ச்சியாக அடியார்களுக்கு அருள் புரிந்து வரும் அன்னையை, குற்றம் ஏதும் இல்லாதவள் என்று அடியார்கள் புகழ்வதாக அடிகளார் கூறுகின்றார், இனியும் தொடர்ந்து வாழ்வதில் தனக்கு விருப்பம் ஏதும் இல்லாமையால், பெருமானே நீ என்னை விரைவில் அழைத்துக் கொள்வாயாக என்று விண்ணப்பம் வைக்கும் பாடல்.    

    பழுது இல் தொல் புகழாள் பங்க நீ அல்லால் பற்று நான்
               மற்று இலேன் கண்டாய்
    செழு மதி அணிந்தாய் சிவபுரத்து அரசே திருப்பெருந்துறை
               உறை சிவனே
    தொழுவனோ பிறரைத் துதிப்பனோ எனக்கு ஓர் துணை
              என நினைவனோ சொல்லாய்  
    மழ விடையானே வாழ்கிலேன் கண்டாய் வருக என்று
              அருள் புரியாயே

மேற்கண்ட பாடலில் பெருமானே உன்னைத் தவிர பற்றுக்கோடு வேறேதும் எனக்கு இல்லை என்று அறிவிக்கும் அடிகளார், தனது நிலையை பெருமானே நீ இன்னும் காணவில்லையா என்று கேட்கும் வகையில், கண்டாய் என்ற சொல்லை கையாண்டுள்ளார்.  இந்த பதிகத்தின் அனைத்துப் பாடல்களிலும் பற்று நான் மற்றிலேன் கண்டாய் என்ற தொடர் வருகின்றது. இந்த பதிகத்தின் முதல் பாடல், இந்த தொடர் உணர்த்தும் செய்தியை மிகவும் அழகாக எடுத்துரைக்கின்றது. பெருமானே உன்னைத் தவிர வேறு பற்றுக்கோடு ஏதும் கொள்ளாமல் வாழும் எனக்கு அருள் புரியாமல் இருக்கின்றாயே இது நியாயமா என்று கேட்பது போன்று அமைந்துள்ள பாடல். பெருமானே ஒருவனே தனக்கு பற்றுக்கோடு என்பதால், அவனைத் தவிர வேறு எவரிடமும் சென்று முறையிடேன் என்று புலம்பும் அடிகளார், அவன் அருள் புரியாமல் இருப்பதால் அவன் மீது தான் கோபம் கொண்டாலும் அவனது அருளினை தொடர்ந்து வேண்டுவதையும் நாம் உணரலாம்.   

 பாரொடு விண்ணாய் பரந்த எம் பரனே பற்று நான் மற்றிலேன் கண்டாய்
 சீரொடு பொலிவாய் சிவபுரத்து அரசே திருபெருந்துறை உறை சிவனே
ஆரொடு நோகேன் ஆர்க்கு எடுத்து உரைக்கேன் ஆண்ட நீ அருளிலை ஆனால் 
 வார்கடல் உலகில் வாழ்கிலேன் கண்டாய் வருக என்று அருள் புரியாயே 

தனது இடது கண்ணில் பார்வை வரப்பெற்று, வலது கண்ணில் பார்வை வேண்டி திருவாரூரில் வீற்றிருக்கும் இறைவனை வணங்கி பதிகம் பாடிய சுந்தரர், வேறு எவரையும் வேண்டாது தான் இருந்த நிலையினை மீளா அடிமை என்று தொடங்கும் பதிகத்தின் முதல் பாடலில் (7.95.1) உணர்த்துகின்றார். இறைவனிடம் நாம் கொண்டுள்ள அடிமைத்திறம் நமது வாழ்நாள் முழுவதும் நம்மிடம் இருக்க வேண்டும். அந்த அடிமைத் தன்மையிலிருந்து நாம் வெளியே வாராமல் பெருமானுக்கு எப்போதும் திருத்தொண்டு செய்பவர்களாய். அடிமைத் திறத்திலிருந்து மீளாமல் இருக்க வேண்டும். மேலும் நமது தேவைகளையும் அவரிடமே முறையிட்டு பெறுதல் வேண்டும் அவ்வாறு இருந்ததால் தான் சுந்தரர் தன்னை மீளா அடிமை என்று திருவாரூர் பதிகத்தில் (7.95) சொல்லிக் கொள்கின்றார். 

    மீளா அடிமை உமக்கே ஆளாய் பிறரை வேண்டாதே
    மூளாத் தீ போல் உள்ளே கனன்று முகத்தால் மிக வாடி
    ஆளாய் இருக்கும் அடியார் தங்கள் அல்லல் சொன்னக்கால்
    வாளாங்கு இருப்பீர் திருவாரூரீர் வாழ்ந்து போதீரே

மாசில் வீணையும் என்று தொடங்கும் பதிகத்தின் ஒரு பாடலில், அப்பர் பிரான், சிவபெருமானுக்கு மீளாத அடிமையாக இருந்து, மெய்ப்பொருளாகிய சிவபெருமானை அடையாத மனிதர்களை, வீணான வாழ்க்கை வாழ்பவர்கள் என்று கூறுகின்றார். அறிவு வளர்ச்சி பெற்று, ஒரு வேலையில் அமர்ந்து பொருள் ஈட்டும் திறம் பெற்று, தனது காலில் நிற்கும் தன்மையை அடைந்த மனிதனை நாம் ஆளாகி விட்டான் என்று கூறுகின்றோம். ஆனால் அப்பர் பிரான் ஆளாக கருதுவது, பெருமானது அடியார்களைத் தான். ஏனென்றால் அவர்கள் தானே, நிலையான இன்பம் அளிக்கக் கூடிய முக்தி நிலைக்கு செல்வதற்கான வழியில் அடியெடுத்து வைத்தவர்கள். அவ்வாறு ஆளாகாத ஒருவன், சிவபெருமானின் அடியார் ஒருவரை அணுகி, ஆளாகும் நிலையினை அடைந்து உய்வினை அடைய வேண்டும் என்றும் இந்த பாடலில் கூறுகின்றார்.     
    ஆளாகார் ஆளானாரை அடைந்து உய்யார்
    மீளா ஆட்செய்து மெய்ம்மையுள் நிற்கிலார்
    தோளாத சுரையோ தொழும்பர் செவி
    வாளா மாய்ந்து மண்ணாகிக் கழிவரே

  
இவ்வாறு சம்பந்தர் கூறுவதை கருத்தினில் கொண்டு தான், பெருமானின் திருவடிகளைத் தவிர்த்து வேறு எதையும் பேணாத சம்பந்தர் என்று சுந்தரர் கூறுகின்றாரோ? சுந்தரர் தனது திருத்தொண்டத் தொகை பதிகத்தில் திருஞான சம்பந்தரைக் குறிப்பிடும் வரிகளை நினைவூட்டுகின்றது. வம்பறா வரிவண்டு மணம் நாற மலரும் மதுமலர் நல் கொன்றையான் அடி அலால் பேணா எம்பிரான் சம்பந்தன் என்று கூறுகின்றார். கொன்றைசூடியின் திருவடிகளைத் தவிர்த்து வேறு எதையும் போற்றி வழிபடாத சம்பந்தர் என்று சுந்தரர் கூறுகின்றார். அச்சிறுபாக்கம் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் கடைப் பாடலில், கையில் மான்கன்றினை ஏந்திய பெருமானின் திருவடிகளைத் தவிர்த்து வேறு எதையும் பேணாத கருத்தினை உடையவன் என்று தன்னை திருஞான சம்பந்தர் குறிப்பிடுவதை நாம் கீழ்க்கண்ட பாடலில் (1.77.11) உணரலாம். கருங்குவளை மலர்கள் பொழியும் தேனினை உட்கொள்ளும் தவளைகளின் வாய் நிறைந்துள்ள நிலையும், வாளை மீன்கள் துள்ளி விளையாடுவதால் புதியதாக மலர்ந்த மலர்களின் இதழ்கள் கிழியும் நிலையும் குறிப்பிடப்பட்டு சீர்காழி நகரின் நீர்வளமும் நிலவளமும் சம்பந்தரால் நமக்கு உணர்த்தப்படுகின்றது. 

    மைச்செறி குவளை தவளை வாய் நிறைய மதுமலர்ப்
           பொய்கையில் புதுமலர் கிழிய
    பச்சிற வெறி வயல் வெறி கமழ்ப் பதி அவர் அதிபதி
           கவுணியர் பெருமான்
    கைச் சிறு மறியவன் கழல் அலால் பேணாக் கருத்துடை ஞான
           சம்பந்தன தமிழ் கொண்டு
    அச்சிறுபாக்கத்து அடிகளை ஏத்தும் அன்புடை அடியவர்
           அருவினை இலரே 

இவ்வாறு சம்பந்தர் கூறுவது நமக்கு சுந்தரர் வன்பார்த்தான் பனங்காட்டூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் ஒரு பாடலில் (7.86.7) பெருமானை அறியாதவர்களின் அறிவு அறிவாக கருதப்படாது என்று கூறுகின்றார் மெய்ப்பொருளாய் இருப்பவனும் வெண்மையாக உள்ள திருநீற்றினை தனது உடல் முழுவதும் பூசுபவனும், வேதங்களின் தலைவனும், தனது கையினில் மான் மற்றும் மழு ஏந்தியவனும், அனைவரது வாழ்நாளினை முடிக்கும் காலனின் வாழ்நாளை முடித்தவனும், படத்தினை உடைய பாம்பினைத் தனது இடுப்பினில் இறுகக் கச்சையாக கட்டி ஆட்டுபவனும், தனது அடியார்கள் அன்றி ஏனையோர் அறிய முடியாத வண்ணம் மறைத்துக் கொள்பவனும், எங்களது தலைவனும் ஆகிய இறைவனை அறியாதவர்களின் அறிவு அறிவாக கருதப் படாது என்று சுந்தரர் இந்த பாடலில் கூறுகின்றார்.

    மெய்யன் வெண்பொடி பூசும் விகிர்தன் வேத முதல்வன்
    கையில் மான் மழு ஏந்திக் காலன் காலம் அறுத்தான்
    பை கொள் பாம்பு அரை ஆர்த்த படிறன் தன் பனங்காட்டூர்
    ஐயன் எங்கள் பிரானை அறியாதார் அறிவென்னே

நறநிறை=நறவு என்ற சொல் குறைந்து நற என வந்துள்ளது; நறவு=தேன்; மேலே குறிப்பிட்ட பாடல்களில் பெருமானை வழிபடாத அறிவு, அறிவு என்று கருதப்படாததை நாம் உணர்ந்தோம். மணிவாசகர் ஒரு படி மேலே சென்று, அத்தகைய அறிவு இல்லாத மூடர்களிடம் அச்சம் கொண்டு அவர்களுடன் பழகுவதை தவிர்ப்போம் என்று அச்சப்பத்து பதிகத்தினில் கூறுகின்றார். தறி=காட்டுத்தறி, தறியிலிருந்து விடுபடும் யானை மிகுந்த கோபத்துடன் வரும்; உழுவை=புலி; பெருமானின் சடை நறுமணத்துடன் கூடியது என்று அடிகளார் இங்கே கூறுகின்றார்,

    தறி செறு களிறும் அஞ்சேன் தழல் விழி உழுவை அஞ்சேன் 
    வெறி கமழ் சடையன் அப்பன் விண்ணவர் நண்ண மாட்டா     
    செறி தரு கழல்கள் ஏந்தி சிறந்து இனிது இருக்க மாட்டா
    அறிவு இலாதவரைக் கண்டால் அம்ம நான் அஞ்சுமாறே

பொழிப்புரை:

தனது ஒளிக்கதிர்கள் மூலம் பயிர்களை வளர்க்கும் தன்மை உடைய பிறைச் சந்திரனைத் தனது சடையில் ஏற்றவனும், தேன் நிறைந்த மலர்கள் இருக்கும் திருமுடியை உடையவனும் ஆகிய பெருமான், உதிரும் தன்மை உடைய மயிர்கள் நிறைந்ததும் தசைகள் நீங்கப் பெற்றதுமான புலித் தோலினை உடையாக இடுப்பினில் அணிந்தவனும், இருளினை நீக்கும் கதிரவனின் கதிர்கள் போன்று ஒளிவீசும் மழுப் படையை ஏந்தியவனும் ஆகிய பெருமான், மிகுந்த விருப்பத்துடன் கழுமலம் என்று அழைக்கப்படும் சீர்காழி நகரில் எழுந்தருளியுள்ளான். அத்தகைய பெருமானின், ஒலிக்கும் வீரக்கழல்கள் அணிந்த திருவடிகளை தொழுது போற்றி வணங்கும் அறிவன்றி வேறு அறிவு ஏதும் இல்லாதவனாக அடியேன் இருக்கின்றேன்,  

 

]]>
https://www.dinamani.com/specials/thinam-oru-thavaram/2019/apr/27/127-பிறையணி-படர்சடை---பாடல்-7-3143764.html
3143762 ஸ்பெஷல்ஸ் தினம் ஒரு தேவாரம் 127. பிறையணி படர்சடை - பாடல் 6 என். வெங்கடேஸ்வரன் DIN Friday, April 26, 2019 12:00 AM +0530
பாடல் 6:

    வரை பொருது இழி அருவிகள் பல பருகொரு கடல் வரி மணலிடை
    கரை பொரு திரை ஒலி கெழுமிய கழுமலம் அமர் கனல் உருவினன்
    அரை பொரு புலியதள் உடையினன் அடியிணை தொழ வருவினை எனும்
    உரை பொடிபட உறுதுயர் கெட உயருலகு எய்தலொரு தலைமையே

விளக்கம்:

வருவினை என்ற சொல் பொடியாக மாறிவிடும் என்று கூறுவதன் மூலம், வினைகளும் பொடிபொடியாக மாறி வலிமை இழந்துவிடும் என்று சம்பந்தர் குறிப்பாக உணர்த்துகின்றார்.. மலையில் தோன்றும் அருவிகள் பல கற்களுடன் மோதி அவற்றை உடைத்து மணல் பொடிகளாக கடலின் அருகே கொண்டு வந்து சேர்க்கும் தன்மை, சம்பந்தர்க்கு பெருமானின் திருவடிகள் வினைகளை பொடியாக்கும் தன்மையை நினைவூட்டியது போலும். சென்ற பாடலில் பெருமானின் வல்லமையை குறிப்பிட்ட சம்பந்தர் இந்த பாடலில் அந்த வல்லமை நம்மை முக்தி உலகுக்கு அழைத்துச் செல்லும் என்று இங்கே கூறுகின்றார். பருகொரு கடல் என்று அனைத்து நதிகளின் நீரும் இறுதியில் கடலினைச் சென்று அடையும் நிலையை குறிப்பிடுகின்றார். 
 
பொழிப்புரை:

மலைகளில் உள்ள கற்களில் மோதி கீழே இறங்கும் பல அருவிகள் நதிகளாக மாறி கடலினைச் சென்று அடைவதன் முன்னம், அந்த கடலின் கரையினில் வரிவரியாக மணலினை கொணர்ந்து சேர்க்கின்றன. இந்த மணற்கரையினில் பல முறையும் மோதும் அலைகளைக் கொண்ட கடலின் கரையில் அமைந்துள்ள கழுமலம் என்ற தலத்தினில் மிகுந்த விருப்பமுடன் பெருமான் உறைகின்றான். அவன் கொழுந்து விட்டெரியும் தீயின் நிறத்தில் திருமேனியை உடையவனாகவும், தனது இடுப்பினில் புலித்தோலை உடையாக அணிந்தவனாகவும் காட்சி தரும் பெருமானின் திருவடிகளை தொழுவதால், நம்மை பிணித்துள்ள வினைகள் பொடியாக அழிந்து, அந்த வினைகளால் நமக்கு ஏற்படும் துன்பங்கள் தடுக்கப்பட்டு, உயர்ந்த உலகமாகிய சிவலோகத்தில் இடம் பெறுகின்ற வாய்ப்பு நமக்கு ஏற்படும்.

 

]]>
https://www.dinamani.com/specials/thinam-oru-thavaram/2019/apr/26/127-பிறையணி-படர்சடை---பாடல்-6-3143762.html
3143761 ஸ்பெஷல்ஸ் தினம் ஒரு தேவாரம் 127. பிறையணி படர்சடை - பாடல் 5 என். வெங்கடேஸ்வரன் DIN Thursday, April 25, 2019 12:00 AM +0530
பாடல் 5:

 தலை மதி புனல் விட அரவு இவை தலைமையது ஒரு சடை இடை உடன்
 நிலை மருவ ஒரிடம் அருளினன் நிழல் மழுவினொடு அழல் கணையினன்
 மலை மருவிய சிலை தனில் மதில் எரியுண மனம் மருவினன் நல
 கலை மருவிய புறவு அணி தரு கழுமலம் இனிதமர் தலைவனே 

விளக்கம்:

தலைமதி=பிள்ளை மதி, முதற்பிறைச் சந்திரன்; ஒற்றைப்பிறைச் சந்திரன் என்பதை தலைமதி என்று கூறுகின்றார். தலை என்ற சொல்லினை புனல் அரவு ஆகிய சொற்களுடன் இணைத்து, நீரினில் தலையாய கங்கை என்றும் பாம்பினால் தலையாய நல்லபாம்பு என்றும் பொருள் கொள்ளலாம். தலைமையது சடை=பெருமை மிக்க சடை; நிழல் மழு=ஒளிவீசும் மழுப்படை; மனம் மருவுதல்=மனமதில் எண்ணுதல்; புறவு=காடு; மூன்று புறங்களை எரித்த நிகழ்ச்சியின் தத்துவம், பெருமான் உயிர்களைப் பிணைத்துள்ள மூன்று மலங்களையும் எரித்து அழிக்கும் வல்லமை வாய்ந்தவன் பெருமான் என்று உணர்த்துகின்றது என விளக்கம் அளிக்கும் திருமூலர் பாடலை நாம் இங்கே காணலாம். பெருமான் மூன்று கோட்டைகளையும் அழித்த நிகழ்ச்சியினை புராணங்கள் வாயிலாக அறிந்து கொள்ளும் மனிதர்கள், பெருமானின் வீரச் செயலை புகழ்கின்றனர். ஆனால் அவர்கள் அந்த நிகழ்ச்சி உணர்த்தும் முக்கியமான கருத்தினை புரிந்து கொள்வதில்லை. உயிர்களை தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஆணவம் கன்மம் மாயம் ஆகிய மூன்று மலங்களின் வலிமையை அடக்கி, உயிர்களை அந்த மூன்று மலங்களின் பிடியிலிருந்து விடுவிக்கும் ஆற்றல் படைத்தவன் பெருமான் என்பதை நாம் உணர்ந்து, அவனை வேண்டி, அவனது அருளின் உதவியால், அந்த மூன்று மலங்களின் வலிமையையும் அடக்கி, வினைகளை முற்றிலும் கழித்துக் கொண்டு முக்தி நிலையினை அடைய வேண்டும் என்பதே இந்த நிகழ்ச்சி நமக்கு உணர்த்தும் செய்தி என்பதே இந்த திருமந்திரப் பாடலின் பொழிப்புரை ஆகும்.. பதிகத்தின் நான்காவது பாடலில் பெருமானின் திருவடிகளை மீண்டும் மீண்டும் தொழும் வண்ணம் நம்மை பணிக்கும் சம்பந்தர், பெருமானின் வல்லமையை இங்கே குறிப்பிட்டு, பெருமானின் திருவடிகள் நமது மலங்களை அடக்கி. முக்திநிலைக்கு வழிவகுக்கும் என்று கூறுகின்றார்.

    அப்பணி செஞ்சடை ஆதி புராதனன்
    முப்புரஞ் செற்றனன் என்பர்கள் மூடர்கள்
    முப்புரம் ஆவது மும்மல காரியம்
    அப்புரம் எய்தமை யாரறிவாரே    

பொழிப்புரை:

ஒற்றைப் பிறைச் சந்திரனையும், நதிகளில் தலையாய கங்கை நதியையும், பாம்புகளில் முதன்மையான விடம் உடைய நல்ல பாம்பினையும் ஒருங்கே, பெருமை வாய்ந்த தனது சடையினில் நிலையாக இருக்கும் வண்ணம் இடம் அளித்த பெருமான், ஒளி வீசும் மழுப்படையை உடையவன்; அவன் தீக்கடவுள் இடம் பெற்ற வெம்மை மிகுந்த அம்பினைக் கொண்டு, மேரு மலையினை வில்லாக வளைத்து அதனில் பொருத்தி, திரிபுரத்து அரக்கர்களின் மூன்று பறக்கும்  கோட்டைகளும் நெருப்பினில் வெந்து அழியவேண்டும் என்று முடிவு செய்தவனாக தனது முடிவினை செயல்படுத்தினான்; இத்தகைய வல்லமை உடைய பெருமான், நமது மலங்களின் கட்டினை அழித்து முக்தி நிலைக்கு வழிவகுக்கும் பெருமான், அழகிய கலைமான்கள் அழகு சேர்க்கும் காடுகளை உடைய கழுமலம் என்ற நகரினில் மிகுந்த விருப்பத்துடன் அமர்ந்து உள்ளான். 

 

]]>
https://www.dinamani.com/specials/thinam-oru-thavaram/2019/apr/25/127-பிறையணி-படர்சடை---பாடல்-5-3143761.html
3143760 ஸ்பெஷல்ஸ் தினம் ஒரு தேவாரம் 127. பிறையணி படர்சடை - பாடல் 4 என். வெங்கடேஸ்வரன் DIN Wednesday, April 24, 2019 12:00 AM +0530  

பாடல் 4:

    வினை கெட மன நினைவது முடிகெனில் நனி தொழுதெழு குல மதி
    புனை கொடி இடை பொருள் தரு படு களிறினது உரி புதை உடலினன்
    மனை குடவயிறு உடையன சில வரு குறள் படை உடையவன் மலி
    கனை கடல் அடை கழுமலம் அமர் கதிர் மதியினனது அதிர் கழல்களே
    

விளக்கம்:

முடிகெனில்=முடிக+எனின்; முடிய வேண்டும் என்று விரும்பினால்; தொழுதெழு என்ற தொடர் மூலம், தரையில் விழுந்து இறைவனை வணங்கி பின்னர் எழும் நிலையினை குறிப்பிடுகின்றார். புனை கொடியிடை என்ற தொடரினை, பிறைச்சந்திரனுடன் இணைத்து கொடியிடையாளாகிய கங்கை நதி என்றும் பொருள் கொள்ளலாம். அதே தொடரினை உடலுடன் தொடர்பு கொண்டு, பெருமானின் உடலில் பாதியில் விளங்கும் உமையன்னை என்றும் பொருள் கொள்ளலாம். தாருகவனத்து முனிவர்கள் அபிச்சார ஹோமம் என்று அழைக்கப்படும் ஒரு வகை யாகத்தினை செய்து, பல பொருட்களை தீயினில் இட்டு அந்த தீயிலிருந்து ஓர் காட்டு யானையினை எழுப்பி, பெருமான் மீது ஏவியதை குறிப்பிடும் வண்ணம், பொருள் படுதரு களிறு என்று கூறுகின்றார் என்று சிலர் விளக்கம் கூறுகின்றனர். பொருள் தரு என்ற தொடரினை கொடியிடை என்ற சொல்லுடன் இணைத்து, அன்னையைத் தனது உடலின் ஓர் அங்கமாக, பொருளாக ஏற்றுக்கொண்ட இறைவன் என்ற விளக்கமும் பொருத்தமே. கதிர்=சூரியன்     

பொழிப்புரை:

உலகத்தவரே, உங்களைப் பிணைந்துள்ள வினைகள் முற்றிலும் கெட்டு அழிந்துவிட வேண்டும் என்று நீங்கள் விரும்பினால் நீங்கள் செய்யவேண்டியது யாது என்பதை நான் கூறுகின்றேன்; கேட்பீர்களாக. தனது களங்கங்கள் நீங்கப் பெற்று உயர்ந்த நிலையினை அடைந்த பிறைச் சந்திரனைத் தனது சடையில் சூடியவனும், கொடி போன்ற இடையினை உடைய உமை அன்னையைத் தனது உடலில் ஏற்றுக் கொண்டவனும், தாருகவனத்து முனிவர்களால் அபிசார ஹோமத்திலிருந்து எழுப்பப்பட்டு தன் மீது ஏவப்பட்ட மதம் கொண்ட ஆண் யானையின் தோலை உரித்துத் தனது உடல் மீது போர்த்துக் கொண்டவனும், நமது இல்லங்களில் பயன்படுத்தப்படும் குடம் போன்று பருத்த வயிற்றினை உடையதும் குள்ளமான உருவத்தினை உடையதும் ஆகிய பூத கணங்களை படையாக உடையவனும், இடைவிடாது ஒலிக்கின்ற அலைகள் உடைய கடலால் சூழப்பட்ட கழுமலம் நகரினில் மிகுந்த விருப்பமுடன் வீற்றிருப்பவனும், சூரியனையும் சந்திரனையும் தனது இரு கண்களாக உடையவனும் ஆகிய பெருமானின் திருவடிகளை, ஒலிக்கும் கழல்கள் அணிந்த திருவடிகளை நன்றாக தொழுது எழுவீர்களாக. அவ்வாறு செய்தால் உங்களது வினைகள் முற்றிலும் அழிந்துவிடும்.     

 

]]>
https://www.dinamani.com/specials/thinam-oru-thavaram/2019/apr/24/127-பிறையணி-படர்சடை---பாடல்-4-3143760.html
3143759 ஸ்பெஷல்ஸ் தினம் ஒரு தேவாரம் 127. பிறையணி படர்சடை - பாடல் 3 என். வெங்கடேஸ்வரன் DIN Tuesday, April 23, 2019 12:00 AM +0530  

பாடல் 3:

  வரியுறு புலி அதள் உடையினன் வளர்பிறை ஒளி கிளர் கதிர் பொதி
  விரியுறு சடை விரை புரை பொழில் விழவொலி மலி கழுமலம் அமர்
  எரியுறு நிற இறைவனது அடி இரவொடு பகல் பரவுவர் தம
  தெரியுறு வினை செறி கதிர் முனை இருள் கெட நனி நினைவு எய்து மனமே

விளக்கம்:

முதல் பாடலில், நன்மை விளைவிக்கும் கழல்கள் என்றும் இரண்டாவது பாடலில் பிறப்பிறப்புச் சுழற்சியிலிருந்து உயிரினை விடுவிக்கும் கழல்கள் என்றும் குறிப்பிட்ட சம்பந்தர் இந்த பாடலில் நமது நினைவுகள் எப்போதும் இறைவனைச் சுற்றியே இருக்க வேண்டும் என்று விரும்பினால், நாள்தோறும் இரவும் பகலும் அவனைப் புகழ்ந்து பாட வேண்டுமென்று கூறுகின்றார். எரியுறு நிற=அழல் வண்ணன்; ஒளி கிளர்=ஒளி திகழும்; நனி=மிகவும் அதிகமாக, எப்போதும்
  
பொழிப்புரை:

வரிவரியாக கோடுகள் உடைய புலித்தோலினை ஆடையாகக் கொண்டவனும், ஒளியுடன் திகழ்வதும் வளரும் நிலையினை அடைந்ததும் ஆகிய பிறைச் சந்திரனின் கதிர்கள் பொதிந்த சடையினை உடையவனும், நறுமணம் நிறைந்த சோலைகள் உள்ளதும் திருவிழாக்களின் ஆரவாரங்கள் நிறைந்ததும் ஆகிய கழுமலம் என்று அழைக்கப்படும் தலத்தில் விரும்பி எழுந்து அருள் புரிபவனும் ஆகிய இறைவனின், அழல் வண்ணனாக திகழும் இறைவனின், திருவடிகளை இரவும் பகலும் புகழ்ந்து வணங்கும் அடியார்களை வருத்தும் வினைகள் சூரியனின் ஒளி பொருந்திய கதிர்கள் முன்னே இருள் அழிந்து விடுவதைப் போன்று அழிந்துவிடும்; மேலும் அத்தகைய அடியார்கள் எப்போதும் இறை நினைவுடன் இருப்பார்கள்.  

 

]]>
https://www.dinamani.com/specials/thinam-oru-thavaram/2019/apr/23/127-பிறையணி-படர்சடை---பாடல்-3-3143759.html
3143758 ஸ்பெஷல்ஸ் தினம் ஒரு தேவாரம் 127. பிறையணி படர்சடை - பாடல் 2 என். வெங்கடேஸ்வரன் DIN Monday, April 22, 2019 12:00 AM +0530  

பாடல் 2:

    பிணி படு கடல் பிறவிகள் அறல் எளிது உளது அது பெருகிய திரை
    அணி படு கழுமலம் இனிது அமர் அனல் உருவினன் அவிர் சடை மிசை
    தணி படு கதிர் வளர் இள மதி புனைவனை உமை தலைவனை நிற
    மணி படு கறை மிடறனை நலம் மலி கழல் இணை தொழல் மருவமே

விளக்கம்:

முதல் பாடலில் நன்மைகள் விளைவிக்கும் திருவடிகள் என்று குறிப்பிடும் சம்பந்தர், இந்த பாடலில் அந்த நன்மை யாது என்பதை உணர்த்துகின்றார். கடலால் சூழப்பட்டுள்ள சீர்காழி நகரத்தின் தன்மை, பிறவிக் கடலில் மூழ்கி தத்தளிக்கும் உயிரின் நிலையை சம்பந்தருக்கு நினைவூட்டியது போலும். பிறப்பெடுக்கும் தன்மைக்கு கடலினை உதாரணமாக சொல்வது வழக்கம். பிறவிக்கடல் என்றே சான்றோர்கள் குறிப்பிடுகின்றனர், அலைகள் ஒன்றன் பின் ஒன்று தொடர்ச்சியாக வருவது போன்று, வாழ்க்கையில் வினைகளின் விளைவால் இன்பமும் துன்பமும் மாறி மாறி வந்து உயிர்களை அலைக்கழிக்கின்றன. இந்த இன்பங்களையும் துன்பங்களையும் நுகரும் உயிர்கள் மேலும் வினைகளை சேர்த்துக் கொண்டு, தங்களது வினைகளை முற்றிலும் கழித்துக் கொள்ள முடியாமல் தவிக்கின்றன. எனவே தான் பல வகையான பிணிகளுடன் (துன்பங்களுடன்) தொடர்பு கொண்டுள்ள பிறவிக்கு, தொடர்ந்து ஒன்றன் பின் ஒன்றாக வரும் அலைகள் கொண்டுள்ள கடலினை உவமையாக குறிப்பிடுவார்கள். விரிந்து பரந்துள்ள கடலினைப் போன்று நமது உயிரும் எண்ணற்ற பிறவிகளுடன் தொடர்பு கொண்டுள்ளது. தன்னிடம் அகப்பட்டுக் கொண்ட பொருட்களை விடாமல் பற்றிக்கொண்டு அந்த பொருட்கள் வெளியே செல்லாத வண்ணம் தடுக்கும்  அலைகள் போன்று வினைகளும் தன்னிடம் பிடிபட்டுள்ள உயிர்களை விடாமல் வருத்துவதோடன்றி, பிறப்பிறப்புச் சுழற்சியிலிருந்து வெளியே செல்லாத வண்ணம் தடுக்கின்றன. பிணி என்று பிறவிகளுடன் இணைந்துள்ள வினைகளை குறிப்பிடுகின்றார். எனவே தான் இந்த பிறவிகளை பிணிபடு பிறவிகள் என்று சம்பந்தர் அழைக்கின்றார். இந்த பிறப்பிறப்புச் சுழற்சியிலிருந்து விடுபட்டு வெளியே வருவது மிகவும் கடினமாக தோன்றினாலும், அவ்வாறு வெளியே விடுபட்டு வருவது மிகவும் எளிதான செயல் என்று சம்பந்தர் நமக்கு சொல்லிக் கொடுக்கும் பாடல் இது. அவிர்சடை=விரிந்த சடை; ஒற்றைப் பிறையுடன் சந்திரன் சரண் அடைந்ததை இளமதி என்றும், பெருமானிடம் சரண் அடைந்த பின்னர் தக்கனது சாபத்தால் ஏற்பட்ட அழிவினின்று மீண்டு வளரத் தொடங்கிய நிலையினை வளர்மதி என்றும் இங்கே குறிப்பிடுகின்றார். தண்படு கதிர்=குளிர்ச்சி பொருந்திய கதிர்கள்; மலி=மலிந்த, மிகுதியாக உடைய; நலமலி=நன்மைகள் புரியும் குணத்தினை மிகுதியாக உடைய; நலம்=வீடுபேறு. தக்கனது சாபத்தால் அழியும் நிலையிலிருந்து மீட்டு சந்திரனுக்கு அருளியது போன்று வினைக் கடலில் அகப்பட்டு தவிக்கும் உயிர்களை மீட்கும் வல்லமை வாய்ந்தவன் இறைவன் என்பது இங்கே குறிப்பாக உணர்த்தப் படுகின்றது. 
     
பொழிப்புரை:

கடலின் அலைகள் போன்று பல பிறவிகளை தொடர்ந்து அளித்து உயிரினுக்கு துன்பங்களை விளைவிக்கும் பிறப்பிறப்புச் சுழற்சியிலிருந்து விடுபட்டு நிலையான இன்பம் அடைவது மிகவும் எளிதான செயலாகும். அது யாதெனின் சொல்லுகின்றேன் கேட்பீர்களாக. பெரிய அலைகள் நிறைந்த கடலினை அணிகலனாகக் கொண்டுள்ள சீர்காழி நகரத்தினில் மிகுந்த விருப்பத்துடன் அமர்ந்துள்ளவனும், கொழுந்து விட்டெரியும் நெருப்பு போன்ற நிறத்தினை உடைய திருமேனியை உடையவனும், விரிந்த சடையின் இடையே நாளும் வளர்ந்து கொண்டிருப்பதும் குளிர்ந்த கதிர்களை உடையதும் ஆகிய பிறைச் சந்திரனை அணிந்தவனும், கழுத்தினில் நீலமணி அணிந்தது போன்று தோன்றும் வண்ணம் விடத்தை அடக்கியதால் ஏற்பட்ட கறையினை உடையவனும் ஆகிய பெருமானின், நலன்கள் விளைவிக்கும் இணையான இரண்டு திருப்பாதங்களையும் சார்ந்து தொழுது, பிறப்பிறப்புச் சுழற்சியிலிருந்து விடுபட்டு வீடுபேறு அடைவதை மிகவும் எளிதான செயலாக மாற்றிக் கொள்வீர்களாக.    

 

]]>
https://www.dinamani.com/specials/thinam-oru-thavaram/2019/apr/22/127-பிறையணி-படர்சடை---பாடல்-2-3143758.html
3143757 ஸ்பெஷல்ஸ் தினம் ஒரு தேவாரம் 127. பிறையணி படர்சடை - பாடல் 1 என். வெங்கடேஸ்வரன் Sunday, April 21, 2019 12:00 AM +0530  

பின்னணி:

அப்பர் பிரான் திருஞானசம்பந்தரிடமிருந்து விடை பெற்றுக் கொண்டு பல சோழ நாட்டுத் தலங்களை தரிசிப்பதற்கு சென்ற பின்னர், ஞானசம்பந்தர் பல நாட்கள் சீர்காழி தலத்தில் தங்கியிருந்து பல வித்தியாசமான பதிகங்கள் பாடினார் என்பதை நாம் பெரிய புராணத்திலிருந்து உணர்கின்றோம். மொழிமாற்று, மாலைமாற்று, திருவெழுகூற்றிருக்கை. ஏகபாதம், ஈரடி மேல் வைப்பு, நாலடிமேல் வைப்பு, திருவிருக்குக்குறள், ஈரடி, வழிமொழி விராகம் ஆகிய வகைகளில் பல பதிகங்கள் இயற்றினார். இந்த பதிகங்களில் பல பதிகங்களை நாம் இதுவரை சிந்தித்தோம். அத்தகைய பதிகங்களில் ஒரு வகை தான் முடுகும் இராகம் எனப்படும் வகையில் உள்ள பதிகம். முடுகிய சந்தம் என்பதற்கு வேகமாக பாடும் வகையில் அமைந்த பண் கொண்ட பாடல் என்று பொருள். அத்தகைய பதிகம் தான் நாம் இப்போது சிந்திக்கவிருக்கும் இந்த பதிகம். இந்த பதிகம் வேறொரு சிறப்பினையும் உடையது. இந்த பதிகத்தின் நான்காவது அடியில் உள்ள கடைச் சொல்லின்  கடை எழுத்தினைத் தவிர வேறெங்கும் நெடிலெழுத்தே வருவதில்லை. மற்ற அனைத்து எழுத்துக்களும் குறில் எழுத்துக்கள் உள்ளன. இவ்வாறு நான்கு பதிகங்கள் உள்ளன. தடநிலவிய மலை என்று தொடங்கும் வீழிமிழலைப் பதிகம் (1.20), புவம்வளிகனல் என்று தொடங்கும் சிவபுரம் பதிகம் (1.21) மற்றும் சிலைதனை நிறுவி என்று தொடங்கும் திருமறைக்காடு பதிகம் (1.22) ஆகியவை மற்ற மூன்று பதிகங்கள். 

இந்த நான்கு பதிகங்களிலும் ஐ என்ற உயிரெழுத்துடன் இணைந்த பல உயிர்மெய் எழுத்துக்கள் வருவதை நாம் காணலாம். ஐ என்ற உயிரெழுத்து நெடிலாக கருதப் பட்டாலும் ஐ என்ற எழுத்துடன் இணையும் உயிர்மெய் எழுத்துக்கள் குறில் எழுத்துகள் என்று தொல்காப்பியம் நன்னூல் ஆகிய இலக்கண நூல்கள் குறிப்பிடுகின்றன. இரண்டு மாத்திரை அளவுள்ள ஐ எழுத்து, உயிர்மெய் எழுத்தாக வரும்போது இரண்டுக்கும் குறைந்த மாத்திரையுடன் வருவதால், அவை குறில் எழுத்துகளாக கருதப் படுகின்றன. இத்தகைய நுட்பமான விவரங்களையும் கருத்தில் கொண்டு பதிகங்கள் இயற்றிய சம்பந்தரின் புலமை நம்மை வியக்க வைக்கின்றது. அகத்தியருக்கு தமிழ் இலக்கணம் கற்றுக் கொடுத்த பெருமானின் அருளால் பதிகங்கள் பாடத் தொடங்கிய ஞானசம்பந்தர், வல்லமை வாய்ந்த புலவராக இருந்ததில் வியப்பு ஏதும் இல்லை.           

பாடல் 1:

    பிறை அணி படர் சடை முடி இடை பெருகிய புனல் உடையவன் இறை
    இறை அணி வளை இணை முலையவள் இணைவனது எழில் உடை இட வகை
    கறை அணி பொழில் நிறை வயல் அணி கழுமலம் அமர் கனல் உருவினன்
    நறை அணி மலர் நறு விரை புல்கு நலம் மலி கழல் தொழல் மருவுமே

விளக்கம்:

பெருகிய புனல்=வெள்ளமாக பெருகி கீழே இறங்கி வந்த கங்கை நதி; இறை=முன்கை; இணை முலை=தேவியின் இணையான இரண்டு மார்பகங்கள்; ஞானமே வடிவமாக தேவி இருப்பதாக கடுதப்படுவதால், தேவியின் இரண்டு மார்பகங்களும் பரஞானத்தையும் அபர ஞானத்தையும் குறிப்பிடுவதாக கூறுவார்கள். விரை=நறுமணம்; இணைவன்=இணைபவன்; இணை முலைகள் என்று சம்பந்தர் இங்கே கூறுகின்றார். பிராட்டியின் மார்பகங்களின் அழகுக்கு வேறு எதனையும் ஒப்பாக சொல்ல முடியாது என்பது உணர்த்தும் வண்ணம், பிராட்டியின் ஒரு மார்பகமே மற்றொரு மார்பகத்திற்கு இணையாக இருக்க முடியும் என்று அழகாக சம்பந்தர் கூறுகின்றார். கறை=இருள்; மரங்கள் ஒன்றுடன் ஒன்று இணைந்து நெருக்கமாக காணப்படுவதால், சூரியன் மற்றும் சந்திரனின் கதிர்கள் உள்ளே புக முடியாத வண்ணம் நெருங்கி காணப்படுவதால், சோலைகள் இருள் நிறைந்து காணப்படுவதாக சம்பந்தர் கூறுகின்றார். நெருக்கமாக வளத்துடன் மரங்கள் இருப்பது சோலைகளுக்கு அழகு சேர்ப்பதால் இங்கே இருளினை சோலைக்கு அணிகலனாக சம்பந்தர் குறிப்பிடுகின்றார். நறை=தேன்; நறுவிரை=நறுமணம்; நல்கு=கலந்து பொருந்திய;               

பொழிப்புரை:

அழியும் தன்மையில் ஒற்றைப் பிறையுடன் தன்னிடம் சரணடைந்த சந்திரனின் ஒற்றைப் பிறையினை, தனது படர்ந்த சடையில் ஏற்றுக் கொண்டுள்ள பெருமான், அந்த சடையின் இடையே மிகுந்த வெள்ளப் பெருக்குடன் கீழே இறங்கி வந்த கங்கை நதியினை தேக்கியவர் ஆவார்; தனது முன் கையில் வளையல்களை அணிந்தவளும், அழகில் ஒன்றுக்கொன்று இணையான மார்பகங்களை உடையவளும் ஆகிய பிராட்டியைத் தனது உடலின் ஒரு பாகத்தில் இணைத்துக் கொண்டவனும் ஆகிய சிவபெருமான் இருக்கும் அழகிய இடங்களில் ஒரு இடமாவது, நெருங்கி இருக்கும் தன்மையால் இருளினை ஒரு அணிகலனாகக் கொண்டுள்ள சோலைகள் நிறைந்த கழுமலம் நகரமாகும். இவ்வாறு அழகிய சோலைகளும்  வளம் வாய்ந்த வயல்களும் கொண்டுள்ள கழுமலம் நகரத்தில் அமர்ந்துள்ள இறைவன், கொழுந்து விட்டெரியும் தீப்பிழம்பின் நிறத்தில் திருமேனி உடையவன் ஆவான். தேன் உடையதும் நறுமணம் வீசுவதும் ஆகிய மலர்கள் இந்த பெருமானின் திருவடிகளில் கலந்து பொருந்தி உள்ளன. தன்னை வணங்கித் தொழும் அடியார்களுக்கு பலவிதமான நன்மைகள் விளைவிக்கும் அந்த திருவடிகளைச் சார்ந்து தொழுது வணங்கி நலன்கள் பெறுவீர்களாக.   

 

]]>
https://www.dinamani.com/specials/thinam-oru-thavaram/2019/apr/21/127-பிறையணி-படர்சடை---பாடல்-1-3143757.html
3132446 ஸ்பெஷல்ஸ் தினம் ஒரு தேவாரம் 126. இயலிசை எனும் பொருளின் - பாடல் 11 என். வெங்கடேஸ்வரன் DIN Saturday, April 20, 2019 12:00 AM +0530
பாடல் 11

    புண்ணியர் தொழுதெழு புகலிந்நகர்
    விண்ணவர் அடி தொழ விளங்கினானை
    நண்ணிய ஞானசம்பந்தன் வாய்மை
    பண்ணிய அருந்தமிழ் பத்தும் வல்லார்
    நடலை அவை இன்றிப் போய் நண்ணுவர் சிவனுலகம்
    இடராயின இன்றித் தாம் எய்துவர் தவநெறியே

விளக்கம்:

நடலை=துன்பம்; பிறவி எடுத்தால் உயிர்கள் அனுபவிக்கும் துன்பங்கள்; புண்ணியர்=சென்ற பிறவிகளில் நல்வினைகள் புரிந்தவர்கள்; சென்ற பிறவிகளில் நல்வினைகள் செய்தவர்களே இந்த பிறவியில் பெருமானை தொழுதெழும் சிந்தை உடையவர்களாக இருப்பார்கள் என்பதை சம்பந்தர் இங்கே உணர்த்துகின்றார். இந்த கருத்து நமக்கு அப்பர் பிரான் திருவாரூர் தலத்தின் மீது அருளிய குறுந்தொகைப் பாடல் (5.07.2) ஒன்றினை நமது நினைவுக்கு கொண்டு வருகின்றது. தனது நெஞ்சத்தினை நோக்கி அப்பர் பிரான், நெஞ்சமே ஆரூர் அரநெறி அப்பன், உனது சிந்தையுள்ளும் சிரத்துள்ளும் தங்க நீ என்ன தவம் செய்தாய், என்று வினவுகின்றார். 

    என்ன மாதவம் செய்தனை நெஞ்சமே
    பந்தம் வீடு அவை ஆய பராபரன்    
    அந்தமில் புகழ் ஆரூர் அரநெறி
    சிந்தையுள்ளும் சிரத்துளும் தங்கவே

முன்னைப் பிறவியின் நல்வினையால், வலஞ்சுழிப் பெருமானை வழிபடும் வாய்ப்பு இந்த பிறவியில் கிடைத்தது என்று இந்த பாடலில் (2.106.1) ஞானசம்பந்தர் சொல்லி மகிழ்கின்றார்.

    என்ன புண்ணியம் செய்தனை நெஞ்சமே இருங்கடல் வையத்து
    முன்ன நீ புரி நல்வினைப் பயனிடை முழுமணித் தரளங்கள்
    மன்னு காவரிசூழ் திருவலஞ்சுழி வாணனை வாயாரப்
    பன்னி ஆதரித்து ஏத்தியும் பாடியும் வழிபடும் அதனாலே

அப்பர் பெருமான் முந்தைய பிறவியில் செய்த தவத்தின் பயனாகத் தான், இந்த பிறவியில் சிவபெருமானால் ஆட்கொள்ளப் பட்டார் என்ற செய்தி சிவபெருமானின் வாய்மொழியாக வருவதை பெரிய புராணத்தில் சேக்கிழார் சுட்டிக் காட்டுகின்றார். அவரது தமக்கை திலகவதியார், சிவபெருமானிடம் மாற்று சமயத்தில் இருக்கும் தனது தம்பி மீண்டும் சைவ சமயத்திற்கு வரவேண்டும் என்று வேண்டியபோது, சிவபெருமான் அவரது கனவில் தோன்றி, அஞ்சற்க, சூலை நோய் கொடுத்து அவனை நாம் ஆட்கொள்வோம்; அவன் முன்னமே முனியாகி என்னை அடையத் தவம் செய்தவன் என்று கூறுவதை இந்த பாடலில் நாம் உணரலாம்.

    மன்னு தபோதனியார்க்குக் கனவின் கண் மழவிடையார்
    உன்னுடைய மனக்கவலை ஒழி நீ உடன்பிறந்தான்
    முன்னமே முனியாகி எனை அடையத் தவம் முயன்றான்
    அன்னவனை இனிச் சூலை மடுத்து ஆள்வோம் என அருளி

சென்ற பிறவியில் நாம் செய்த நல்வினைகள் தாம், இந்த பிறவியில் நாம் சிவபெருமானை வழிபடத் தூண்டும், இது சிவபெருமானின் அருளால் நிகழ்வது. இதனையே மணிவாசகர் அவன் அருளாலே அவன் தாள் வணங்கி என்று சிவபுராணத்தில் குறிப்பிடுகின்றார். இதே கருத்தினை மயிலாடுதுறை மீது அருளிய குறுந்தொகைப் பதிகம் (5.39) ஒன்றினில் அப்பர் பிரான் குறிப்பிடுவதை நாம் கீழ்க்கண்ட பாடலில் காணலாம். சிவபெருமான் மீது கொண்ட காதலால். அவனது பெருமைகளை அறிந்த தலைவி சிவபெருமானின் நினைவுகளை தனது நெஞ்சினுள்ளே வைத்தும், தலையில் தாங்கியும் பெருமை கொள்கின்றாள். அதற்கு தான் செய்த தவம் என்ன என்று தனது நெஞ்சினை நோக்கி வினவும் பாடல்.

    நிலைமை சொல்லு நெஞ்சே தவம் என் செய்தாய்
    கலைகள் ஆய வல்லான் கயிலாய நன்
    மலையன் மா மயிலாடுதுறையான் நம்
    தலையின் மேலும் மனத்துளும் நிற்கவே

திருச்சேறை தலத்தின் மீது அருளிய குறுந்தொகைப் பாடல் ஒன்றிலும் (5.77.2) அப்பர் பிரான் நெஞ்சமே செந்நெறி மன்னு சோதி இறைவனார் உன்னுள் வந்து தங்குவதற்கு நீ என்ன தவம் செய்தாய், என்று வினவுகின்றார். விழுப்பொருள்=கருப்பொருள்; மன்னு சோதி=நிலை பெற்ற சோதி; வைகுதல்=வெளிப் படுதல்:

    என்ன மாதவம் செய்தனை நெஞ்சமே
    மின்னு வார் சடை வேத விழுப் பொருள்
    செந்நெலார் வயல் சேறையுள் செந்நெறி
    மன்னு சோதி நம்பால் வந்து வைகவே 

துருத்தி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் (2.98) ஒரு பாடலில் சம்பந்தர், தான் சென்ற பிறவியில் இறைவனை ஒரு பொழுதும் மறக்காமல் இருந்ததாகவும், அவ்வாறு இருந்த தனக்கு முக்தி அளிக்காமல் மறுபடியும் மண்ணுலகில் பிறக்கச் செய்தது ஏன் என்றும் வினவுவதை நாம் இந்த பாடலில் உணரலாம். பிறப்பிறப்பினைத் தவிர்க்கும் வழியை நீ எனக்கு உணர்த்தாமல், பிறவிப் பிணியினை எனக்குத் தந்து சென்ற பிறவியில் இறக்குமாறும் இந்த பிறவியில் மறுபடியும் இந்த மண்ணுலகில் பிறக்குமாறும் செய்தது நியாயமா என்ற கேள்வி எழுப்பப்படுகின்றது. துறத்தல் என்பதை ஒரு துறவி தான் அடுத்தவருக்கு கற்றுத் தரமுடியும் என்பதால், பகலில் துறவிக் கோலம் பூண்டு வேதங்களை உபதேசம் செய்தவனாகிய துருத்திப் பெருமானை நோக்கி இந்த கேள்வி கேட்கப்படுகின்றது. இவ்வாறு மறுபடியும் நான் பிறப்பு எடுப்பதற்கு நான் செய்த தவறு தான் என்னே என்றும் கேட்கின்றார்.  

    துறக்குமாறு சொலப்படாய் துருத்தியாய் திருந்தடி
    மறக்குமாறு இலாத என்னை மையல் செய்து இம்மண்ணின் மேல்
    பிறக்குமாறு காட்டினாய் பிணிப் படும் உடம்பு விட்டு
    இறக்குமாறு காட்டினாய்க்கு இழுக்குகின்றது என்னையே   

கயிலாயத்தில் இறைவனுக்கு அணுக்கத் தொண்டராய் சுந்தரர் வாழ்ந்து வந்ததையும், நம்பி ஆரூரராக தமிழகத்தில் வாழ்ந்த வாழ்க்கை முடிந்தபின்னர் அவர் மீண்டும் கயிலாயம் சென்று இறைவனுடன் இணைந்ததையும் நாம் அறிவோம். திருஞானசம்பந்தர், அப்பர் பிரான், ஆகிய இருவரும் இறைவனுடன் கலந்ததை பெரியபுராணம் எடுத்துச் சொல்கின்றது. தில்லைச் சிற்றம்பலத்தில், திருவாசகத்தின் பொருள் யாது என்று கேட்ட அன்பர்களுக்கு பெருமானை சுட்டிக் காட்டி பெருமானுடன் மணிவாசகர் கலந்தார்; இவ்வாறு நால்வரும் தவநெறியையும் அதன் பயனாக முக்தி நிலையயும் அடைந்தனர்.

வழிவழியாக, பாண்டிய மன்னனுக்கு அமைச்சர் தொழில் செய்து வந்த, ஆமாத்தியர்  குடியில் பிறந்தவர் மணிவாசகர். எனவே சிறு வயதில் அவர் தன்னை, அமைச்சுத் தொழிலுக்கு தகுந்தவனாக உருவாக்கிக் கொள்வதிலும், அமைச்சரான பின்னர், அரசுப் பணிகளில் முழு கவனம் செலுத்துவதிலும் அவர் காலத்தை கழித்திருக்க வேண்டும். அதுவும் முதல் அமைச்சராக பதவி வகுத்த, மணிவாசகருக்கு அரசுப் பணிகள் செய்வதைத் தவிர வேறு எதிலும் நாட்டம் இருந்திருக்காது, அதற்கும் மேலாக நேரமும் இருந்திருக்காது. அதனால் தான், திருஏசறவு பதிகத்தில் நானேயோ தவம் செய்தேன், சிவபெருமானின் திருநாமத்தைச் சொல்வதற்கு என்று மிகவும் வியந்து பாடுகின்றார். சிவபெருமான் இவரைத் தடுத்து ஆட்கொண்ட சமயத்திலும், அரசுப் பணியினை மேற்கொண்டு குதிரைகள் வாங்குவதற்காக தொண்டித் துறைமுகம் நோக்கி மணிவாசகர் சென்று கொண்டிருந்தார். எனவே சிவபெருமான் அவரை ஆட்கொண்டதற்கு காரணம், அவர் சென்ற பிறப்பில் செய்த தவமாகத் தான் இருக்க வேண்டும். இவ்வாறு நால்வருமே, சென்ற பிறப்பில் செய்த தவப் பயனால் எத்தைகைய பேற்றினைப் பெற்றார்கள் என்பதை நாம் உணரலாம். நால்வர் பெருமானார்கள், தாங்கள் பெற்ற பேற்றினை, தங்களது அனுபவத்தினை பாடல்களாக வடித்து, அந்த பாடல்களை பாடுவதன் மூலம் நாமும் இறைவனைப் புகழ்ந்து பாடி மகிழுமாறு செய்துள்ளார்கள்.

    நானேயோ தவம் செய்தேன் சிவாயநம எனப் பெற்றேன்
    தேனாய் இன்னமுதமுமாய் தித்திக்கும் சிவபெருமான்
    தானே வந்தெனது உள்ளம் புகுந்து அடியேற்கு அருள் செய்தான்
    ஊனாரும் உயிர் வாழ்கை ஒறுத்து அன்றே வெறுத்திடவே   .     
 

பொழிப்புரை:

சென்ற பிறவிகளில் புண்ணியங்கள் செய்தமையால் இந்த பிறவியில் பெருமானைத் தொழும் வாய்ப்பினைப் பெற்ற அடியார்கள் உறையும் புகலி நகரினில், தேவர்கள் தனது திருவடியினைத் தொழும் வண்ணம் வீற்றிருக்கும் பெருமானை, சரண் அடைந்த ஞானசம்பந்தன் இயற்றிய அரிய தமிழ் பாடல்களை பாடும் வல்லமை பெற்ற அடியார்கள், பிறவி எடுப்பதால் வரும் துன்பங்கள் நீங்கும் வண்ணம் பிறப்பிறப்புச் சுழற்சியிலிருந்து விடுதலை பெற்று, சிவலோகத்தினை சென்றடைந்து, தடைகள் ஏதும் இன்றி தவ வாழ்க்கையினை மேற்கொள்வார்கள். 

முடிவுரை:

இந்த பதிகத்தின் பாடல்களில் இறைவனது பெருமைகள் குறிப்பிடப்பட்டு, பலதரப்பட்ட அடியார்கள் அவனது அருள் பெரும் தன்மையும் உணர்த்தப் படுகின்றது. தவநெறி தர வேண்டும் என்று பெருமானை நோக்கி பதிகத்தின் மூன்றாவது பாடலில் விண்ணப்பம் வைக்கும் சம்பந்தர், பதிகத்தின் கடைப் பாடலில், இந்த பதிகத்தினை ஓதும் அடியார்கள் தவநெறி எய்துவார்கள் என்று கூறுகின்றார். தனது விருப்பங்களைத் தீர்த்துக் கொண்டு, தங்களின் வழியே உயிரினை நடத்திச் செல்லும் புலன்களின் பிடியிலிருந்து விடுபட்டு செயல்படுவது எளிய காரியம் அல்ல. இறைவனது துணை கொண்டே நாம் இதனைச் செய்ய முடியும். அந்த நிலையே தவநெறிக்கு வழிவகுக்கும். அந்த தவநெறியை எளிதில் அடையும் முறையினை சம்பந்தர் நமக்கு இங்கே கற்றுக் கொடுக்கின்றார். இந்த வழியினை பின்பற்றி, மனம் ஒன்றி பதிகத்தினை ஓதி தவநெறியில் சென்று இறுதியில் இறைவனின் திருவடிகளில் சேர்ந்து என்றும் அழியாத இன்பத்துடன் இருப்போமாக.

 

]]>
https://www.dinamani.com/specials/thinam-oru-thavaram/2019/apr/20/126-இயலிசை-எனும்-பொருளின்---பாடல்-11-3132446.html
3132445 ஸ்பெஷல்ஸ் தினம் ஒரு தேவாரம் 126. இயலிசை எனும் பொருளின் - பாடல் 10 என். வெங்கடேஸ்வரன் DIN Friday, April 19, 2019 12:00 AM +0530  

பாடல் 10:

    கையினில் உண்பர் கணிகை நோன்ப]ர்
    செய்வன தவமலாச் செதுமதியார்
    பொய்யவர் உரைகளைப் பொருள் எனாத
    மெய்யவர் அடி தொழ விரும்பினனே
    வியந்தாய் வெள்ளேற்றினை விண்ணவர் தொழு புகலி
    உயர்ந்தார் பெரும் கோயிலுள் ஒருங்குடன் இருந்தவனே

விளக்கம்:

கணிகை=போலித் தனம்; கணிகையரின் சொற்களும் செயல்களும் அடுத்தவரை மயக்கும் நோக்கத்துடன் போலித் தன்மை உடையதாக இருக்கும். அது போன்றே புத்தர்கள் அந்நாளில் செய்த நோன்புகளும் போலித் தனம் உடைத்திருந்தது என்று சம்பந்தர் இங்கே கூறுகின்றார். செதுமதி=குற்றமுடைய அறிவு;

பொழிப்புரை:

கையினில் உணவினை ஏந்தி உண்ணும் சமணர்களும் போலித்தன்மை உடைய நோன்பினை செய்யும் புத்தர்களும் செய்வன தவம் என்று கருதப்படுவதில்லை; குற்றம் நிறைந்த அறிவினை உடைய அவர்களது பொய்யான சொற்களை பொருட்படுத்தாத மெய்யறிவினை உடைய அடியார்கள் தனது திருவடிகளை தொழுவதை பெரிதும் விரும்பும் பெருமானே, இடபத்தின் தன்மைகளை அறிந்து வியந்து அதனைத் தனது வாகனமாக ஏற்றுக் கொண்டுள்ள பெருமானே, விண்ணவர்கள் தொழும் வண்ணம் உயர்ந்தவனாக விளங்கும் பெருமானே நீ, புகலி நகரில் இருக்கும் உயர்ந்த திருக்கோயிலில் பிராட்டி உடனாக உறைகின்றாய்.  

 

]]>
https://www.dinamani.com/specials/thinam-oru-thavaram/2019/apr/19/126-இயலிசை-எனும்-பொருளின்---பாடல்-10-3132445.html
3132442 ஸ்பெஷல்ஸ் தினம் ஒரு தேவாரம் 126. இயலிசை எனும் பொருளின் - பாடல் 9 என். வெங்கடேஸ்வரன் DIN Thursday, April 18, 2019 12:00 AM +0530
பாடல் 9:

    உருகிட உவகை தந்து உடலின் உள்ளால்
    பருகிடும் அமுதன பண்பினனே
    பொருகடல் வண்ணனும் பூவுளானும்
    பெருகிடும் அருள் எனப் பிறங்கு எரியாய்
    உயர்ந்தாய் இனி நீ எனை ஒண்மலர் அடி இணைக் கீழ்
    வயந்து ஆங்குற நல்கிடும் மதில் புகலிமனே

விளக்கம்:

உருகிட உவகை தந்து=மனம் உருகி தனை வழிபடும் அடியார்களுக்கு, இறைவன் அத்தகைய அடியார்கள் சிவானந்தத்தில் திளைக்கும் வண்ணம் இன்பம் அளித்தல்; வயந்து=விரும்பி; ஆங்குற=திருவடிகளின் கீழே பொருந்தி இருக்கும் வண்ணம்; மன்= தலைவன், அரசன்; பொருதல்=மோதுதல்; பொருகடல்=இடைவிடாது கரையில் மோதும் அலைகள் கொண்ட கடல்; பிறங்கெரி=வெளிப்பட்டு தோன்றும் தீப்பிழம்பு; இந்த பாடலில் பிரமன் மற்றும் திருமாலின் முன்னர் தோன்றிய தீப்பிழம்பு, அளவில் பெருகி நீண்டு உயர்ந்ததை, அவனது அருள் பெருகும் தன்மைக்கு சம்பந்தர் ஒப்பிடுகின்றார். ஒண்=சிறந்த, ஒளிவீசும்;     

தனது அடியார்கள் பருகும் வண்ணம் இறைவன் சிவானந்தத் தேனை அளிக்கின்றார் என்று இந்த பாடலில் சம்பந்தர் கூறுவது அப்பர் பிரானின் திருமருகல் தலத்து பதிகத்தின் முதல் பாடலை நமது நினைவுக்கு கொண்டு வருகின்றது. பரமாய ஆனந்தம்=மேலான ஆனந்தம். சிவானந்தத்தை விடவும் இனிய ஆனந்தம் வேறதும் இல்லை என்று அப்பர் பிரான் இந்த பாடலில் உணர்த்துகின்றார். மருகல் எனப்படும் தலத்தில் உறையும் இறைவனின் திருவடிகளை வாழ்த்திப் பாடி வணங்கினால், தவம் செய்வதால் ஏற்படும் நல்ல பயன்கள் நமக்கு கிடைக்கும்; மேலும் நமது உயிரைப் பிணைத்துள்ள ஆணவ மலத்தினால் நமக்கு ஏற்பட்டிருக்கும் அறியாமை நீங்கும்: உண்மையான மெய்ப்பொருளை நாம் உணர்ந்து உலகப் பொருட்களால் நமக்கு ஏற்படும் மாயையிலிருந்து விடுபடலாம்; வேறு ஏதேனும் மாறுபட்ட எண்ணங்கள் நமது மனதினில் இருந்தால் அந்த சிந்தனைகள் நீக்கப்பட்டு நெஞ்சம் தூய்மை அடையும்; பரம்பொருளாகிய சிவபெருமானைத் தியானம் செய்து அதன் மூலம் நமக்கு ஏற்படும் பரமானந்தத்தை, சிவானந்தத் தேனை நாம் பருகலாம் என்பதே இந்த பாடலின் திரண்ட பொழிப்புரை. .

    பெருகலாம் தவம் பேதமை தீரலாம்
    திருகல் ஆகிய சிந்தை திருத்தலாம்
    பருகலாம் பரமாயதோர் ஆனந்தம்
    மருகலான் அடி வாழ்த்தி வணங்கவே

தனது ஊனினை உருக்கிய பெருமான், சிவானந்தத் தேனைத் தான் பருகும் வண்ணம் பெருமான் அருள் புரிந்தார் என்று மணிவாசகர் கூறும் திருச்சதகப் பாடல் இங்கே கொடுக்கப் பட்டுள்ளது. வான நாடர்கள் அறிந்து கொள்ள முடியாத பெருமானை, மற்ற நாட்டில் உள்ளவர்களும் அறிந்து கொள்ள முடியவில்லை என்று அடிகளார் இந்த பாடலில் கூறுகின்றார். ஆனால் இறைவனின் கருணையால் தான் அவனை அறிந்து கொள்ள முடிந்தது என்று இதே பாடலில் உணர்த்தும் அடிகளார், இறைவனை நாம் அறிந்து கொள்ள அவனது கருணை மிகவும் அவசியம் என்பதை இங்கே உணர்த்துகின்றார். ஊன நாடகம் என்று உயிரினை அதற்கு தகுந்த உடலுடன் பொருத்தி உயிர்கள் வினைகளை அனுபவித்து கழிக்க இறைவன் வழி வகுப்பதை குறிப்பிடுகின்றார். ஞான நாடகம் என்று உள்ளத்தின் அறியாமையை ஒழித்து ஒளியை பெருக்கச் செய்தமை குறிப்பிடப்படுகின்றது.

    வான நாடரும் அறிவொணாத நீ மறையில் ஈறும் முன் தொடரொணாத நீ
    ஏனை நாடரும் தெரிவொணாத நீ என்னை இன்னிதாய் ஆண்டு கொண்டவா
    ஊனை நாடகம் ஆடுவித்தவா உருகி நான் உனை பருக வைத்தவா
    ஞான நாடகம் ஆடுவித்தவா நைய வையகத்து உடைய விச்சையே

இவ்வாறு இறைவன் விளைவிக்கும் சிவானந்தத் தேன், அழிவில்லாத ஆனந்தத்தை அளிக்கும் என்று விளக்கும் திருவாசகப் பாடலையும் நாம் இங்கே காண்போம். பிடித்த பத்து பதிகத்தின் பாடல் இங்கே கொடுக்கப் பட்டுள்ளது. இந்த பாடலில் அடிகளார், தக்க நேரத்தில் தனது குழந்தைக்கு பாலினை நினைந்து ஊட்டும் தாயினும் பரிந்து உதவி செய்பவன் சங்கரன் என்று கூறுகின்றார். குழந்தையின் உடல் உரம் பெறுவதற்காக தாய், தனது குழந்தைக்கு காலம் தவறாமல் பால் அளித்து வளர்க்கின்றாள். அழியக் கூடிய உடலினை விடவும் அழியாத தன்மை படைத்த உயிர் முக்கியம் வாய்ந்தது அல்லவா. அதனால் தான், உயிருக்குத் தேவையான ஞானத்தைத் தரும் பெருமானை, தாயினும் சாலப் பரிந்து உதவி செய்யும் பெருமான் என்று இங்கே கூறுகின்றார். தனது உயிர் உரம் பெறுவதற்காக இறைவன் தனது உள்ளத்தில் இருந்த இருளினை அகற்றி ஞானத்தை ஏற்படுத்தி ஒளி பெருக்கியதாக மணிவாசகர் இங்கே கூறுகின்றார். சிவபெருமான் உள்ளொளி மட்டுமா பெருக்கினான், அவரது ஊனினை உருக்கினான், உள்ளத்தில் அழிவில்லாத ஆனந்தம் ஊறி தேன் போன்று தித்திக்குமாறும் செய்தான். இவ்வாறு அருள் புரிந்த பெருமான், தான் செல்லுமிடமெல்லாம் வந்ததாக மணிவாசகர் கூறுகினார். இவ்வாறு பக்குவபடுத்தப் பட்ட மணிவாசகரின் உள்ளம், அந்த நிலையிலிருந்து மாறாமல் இருக்கின்றதா என்பதை கண்காணிக்க அவருடனே திரிந்த சிவபெருமானை தான் கண்டு கொண்டு அவரை இறுகப் பிடித்து கட்டியதாக இந்த பாடலில் கூறுகின்றார்.  

    பால் நினைந்து ஊட்டும் தாயினும் சாலப்பரிந்து நீ
           பாவியேனுடைய
    ஊனினை உருகி உள்ளொளி பெருக்கி உலப்பிலா
           ஆனந்தமாய
    தேனினைச் சொரிந்து புறம் புறம் திரிந்த செல்வமே
            சிவபெருமானே
  யான் உனைத் தொடர்ந்து சிக்கெனப் பிடித்தேன் எங்கு
             எழுந்து அருளுவது இனியே 

பொழிப்புரை:

உள்ளம் கசிந்து தன்னை வழிபடும் அடியார்களுக்கு சிவானந்ததை அளிக்கும் பெருமானே, அத்தகைய அடியார்களின் உள்ளம் அந்த சிவானந்தத் தேனை பருகும் வண்ணம், அமுதம் போன்று இனிய செயலைப் புரியும் பெருமானே, இடைவிடாது கரையில் மோதும் அலைகளை உடைய கடலின் நிறம் கொண்ட திருமாலும் தாமரைப் பூவினில் அமரும் பிரமனும் தனது அடியையும் முடியையும் காணமுடியாத வண்ணம் நீண்ட தீப்பிழம்பாக நின்றவனே, அவ்வாறு தீப்பிழம்பாக நெடிது உயர்ந்தபோது, பெருமானே, உனது அருள் மிகுந்து பெருகுவது போன்று மிகவும் வேகத்துடன் தீப்பிழம்பாக இருந்த உனது உருவமும் மேலும் மேலும் உயர்ந்தது; அத்தகைய கருணையினை உடைய உனது சிறந்த திருவடிகளை மிகவும் விரும்பும் அடியேன், உனது திருவடி நிழலில் பொருந்தி இருக்கும் வண்ணம் அருள் புரியவேண்டும் என்று உயர்ந்த மதில்களை உடைய புகலி நகரில் வீற்றிருக்கும் இறைவனே, நான் உன்னை வேண்டுகின்றேன்.

 

]]>
https://www.dinamani.com/specials/thinam-oru-thavaram/2019/apr/18/126-இயலிசை-எனும்-பொருளின்---பாடல்-9-3132442.html
3132441 ஸ்பெஷல்ஸ் தினம் ஒரு தேவாரம் 126. இயலிசை எனும் பொருளின் - பாடல் 8 என். வெங்கடேஸ்வரன் DIN Wednesday, April 17, 2019 12:00 AM +0530  

பாடல் 8:

    இரவொடு பகலதாம் எம்மான் உன்னைப்
    பரவுதல் ஒழிகிலேன் வழி அடியேன்
    குரவிரி நறும் கொன்றை கொண்டு அணிந்த 
    அரவிரி சடைமுடி ஆண் தகையே
    அன மென்னடையாளொடும் அதிர்கடல் இலங்கை மன்னை
    இனமார் தரு தோள் அடர்த்து இருந்தனை புகலியுளே  

விளக்கம்:

இரவொடு பகலதாய்=இரவும் பகலாகவும் வெவ்வேறு காலங்களாக இருப்பவனே; வழியடியேன்=இதுவரை எடுத்த அனைத்து பிறப்புகளிலும் வழிவழியாக; குர=குராமலர்;   இனமார்=கூட்டமாக அமைந்துள்ள; 

பொழிப்புரை:

இரவாகவும் பகலாகவும் ஒரு நாளின் அனைத்துப் பொழுதுகளாகவும் இருக்கும் பெருமானே கடந்து பல பிறவிகளாக வழிவழியாக உன்னைப் புகழ்ந்து வழிபட்டுவந்த அடியேன் அந்த பழக்கத்திலிருந்து விடுபடாமல் உன்னைத் தொடர்ந்து வழிபடுவேன்; குரா மலரும் நறுமணம் வீசும் கொன்றை மலரினையும் தனது விரிந்த சடையில் அணிந்து கொண்டுள்ள பெருமானே, ஆண்களில் சிறந்தவனாக கருதப்படுபவனே, அதிரும் கடலினை எல்லையாகக் கொண்டுள்ள இலங்கைத் தீவினுக்கு அரசனாக விளங்கும் இராவணனின், கூட்டமாக விளங்கிய இருபது தோள்களையும் மலையின் கீழே அடர்த்து நெருக்கியவனே, அன்னத்தைப் போன்று அழகு நடையினை உடைய உமை அன்னையுடன் அமர்ந்தவனாக நீ புகலி நகரில் காட்சி தருகின்றாய்.

 

]]>
https://www.dinamani.com/specials/thinam-oru-thavaram/2019/apr/17/126-இயலிசை-எனும்-பொருளின்---பாடல்-8-3132441.html
3132440 ஸ்பெஷல்ஸ் தினம் ஒரு தேவாரம் 126. இயலிசை எனும் பொருளின் - பாடல் 7 என். வெங்கடேஸ்வரன் DIN Tuesday, April 16, 2019 12:00 AM +0530
பாடல் 7:

    அடியவர் தொழுது எழ அமரர் ஏத்தச்
    செடிய வல்வினை தீர்ப்பவனே
    துடி இடை அகல் அல்குல் தூமொழியைப் 
    பொடியணி மார்பு உற புல்கினனே
    புண்ணியா புனிதா புகர் ஏற்றினை புகலிந்நகர்
    நண்ணினாய் கழல் ஏத்திட நண்ணகிலா வினையே

விளக்கம்:

செடிய=கொடுமையான, துடி இடை=துடி எனப்படும் இசைக்கருவியின் நடுவினைப் போன்று மெலிந்து காணப்படும் இடையினை உடையவள்; புகர் ஏறு=புள்ளிகளை உடைய எருது; தொழுது எழுதல் என்ற தொடர் மூலம், தரையில் விழுந்து வணங்கிய பின்னர் அடியார்கள் எழுவது இங்கே உணர்த்தப் படுகின்றது.

பொழிப்புரை:

அடியார்கள் உன்னைத் தரையில் விழுந்து தொழுது வணங்கவும் தேவர்கள் உன்னைப் புகழ்ந்து வணங்கிப் போற்றவும் விளங்கும் பெருமானாகிய நீ, அவர்களை பிணித்திருக்கும் வலிமை வாய்ந்த கொடிய வினைகளைத் தீர்க்கின்றாய். துடி இசைக்கருவியின் நடுவினைப் போன்று மெலிந்த இடையினையும், அதன் மேலும் கீழும் அகன்ற பாகங்களை உடையவளும், தூய்மையான சொற்களைப் பேசுபவளும் ஆகிய உமை அன்னையை, திருநீறு அணிந்து உனது மார்பினில் பொருந்தும் வண்ணம் தழுவும் பெருமானே, புண்ணியனே, தூய்மையே வடிவமாக இருப்பவனே, புள்ளிகள் கொண்ட எருதினை வாகனமாக உடையவனே, நீ உனது இருப்பிடமாக கருதி புகலி நகரில் பொருந்தி உறைகின்றாய். உனது திருவடிகளைப் புகழ்ந்து உன்னை வணங்கும் அடியார்களை வினைகள் நெருங்காது விலகிவிடும்.

 

]]>
https://www.dinamani.com/specials/thinam-oru-thavaram/2019/apr/16/126-இயலிசை-எனும்-பொருளின்---பாடல்-7-3132440.html
3132439 ஸ்பெஷல்ஸ் தினம் ஒரு தேவாரம் 126. இயலிசை எனும் பொருளின் - பாடல் 6 என். வெங்கடேஸ்வரன் DIN Monday, April 15, 2019 12:00 AM +0530
பாடல் 6:

    அடை அரிமாவொடு வேங்கையின் தோல்
    புடைபட அரை மிசைப் புனைந்தவனே
    படை உடை நெடு மதில் பரிசு அழித்த
    விடை உடைக் கொடி மல்கு வேதியனே
    விகிர்தா பரமா நினை விண்ணவர் தொழப் புகலித்
    தகுவாய் மடமாதொடும் தாள் பணிந்தவர் தமக்கே

விளக்கம்:

அரிமா=சிங்கம்; தகுவாய்=தகுந்த பயன்களைத் தருவாய்; அடை அரிமா=குகையிலே சென்று அடையும் சிங்கம்; சிங்கத்தின் பொதுத் தன்மையாக குகையில் சென்று அடைவது குறிப்பிடப் பட்டாலும், சிங்கம் என்று ஞானசம்பந்தர் இங்கே குறிப்பிடுவது நரசிங்கத்தை என்று உரை ஆசிரியர்கள் கருதுகின்றனர். இரணியனது இரத்தம் குடித்த நரசிம்மர், அதனால் வெறி அதிகமாகி திரிந்த போது, நரசிம்மரது ஆவேசத்தை அடக்கி அவரது தோலை சட்டையாக தரித்து அவரின் எலும்பை கதையாக மாற்றிகொண்ட வடுகநாதரின் உருவம் தான் சீர்காழி திருக்கோயிலில் உள்ள சட்டநாதர் உருவம். நரசிம்மரும் இலக்குமியும் வணங்கி வழிபட இறைவன் அவர்களுக்கு அருள் புரிந்ததாக கூறுவர். பணிந்த நரசிம்மரின் அகம் அடங்கியது. இந்த நிகழ்ச்சிகள் சித்திரமாக சீர்காழி கோயிலின் இரண்டாம் நிலையின் சுற்றுச் சுவர்களில் வரையப்பட்டுள்ளன. பிரமனின் கர்வமும் பிரளய காலத்தில் பூமி அழிந்துவிட சிவனால் அனைத்தும் தோற்றுவிக்கப்பட்டதால், அழிந்தது. இவ்வாறு அடி பணிந்தவரின் அகங்காரத்தை அடக்கும் மூர்த்தியாக பரமன் இங்கே திகழ்கிறார். சட்டநாதரின் வரலாற்றை விளக்கும் தல புராண செய்யுள் இங்கே தரப்பட்டுள்ளது.

    துங்க மாமணி தூணில் வந்து இரணியன் தோள் வலி தனை வாங்கும்
    சிங்க ஏற்று உரி அரைக்கு அசைத்து உலகு தேர்ந்து அளந்து அவன் மேனி
    அங்கம் யாவும் ஓர் கதை அதாய் கொண்டு அதன் அங்கியாய் புனை காழி  
    சங்க வார் குழைச் சட்டை நாயகன் துணைத் தாமரை சரண் போற்றி

புடைபட=பொருந்தும் வண்ணம்; படையுடை நெடு மதில்=படையாக திகழ்ந்த மதில்கள், மூன்று கோட்டைகள். வேறு எந்த படையும் தேவைப்படா வண்ணம் மூன்று பறக்கும் கோட்டைகளே படையாக திரிபுரத்தவர்களுக்கு அமைந்திருந்த நிலை  படையுடை என்ற சொல் மூலம் குறிப்பிடப் படுகின்றது. விகிர்தன்=ஏனைய தெய்வங்களிலிருந்து மாறுபட்டவன்; பரமன்=அனைவர்க்கும் மேலானவன்; பரிசு=தன்மை; 

பொழிப்புரை:

குகைகளில் சென்று அடையும் சிங்கத்தின் முகம் கொண்ட வடிவமெடுத்து இரணியனை கொன்ற திருமாலின் தோலையும், வேங்கைப் புலியின் தோலையும் தனது உடலில் பொருந்தும் வண்ணம் அணிந்து கொண்ட பெருமானே, வலிமையான பறக்கும் கோட்டைகளே தங்களுக்கு பெரிய படையாக இருக்கும் வண்ணம் வரம் பெற்றிருந்த திரிபுரத்து அரக்கர்களின் கோட்டைகளின் தன்மை அழியும் வண்ணம் செயல்பட்ட பெருமானே, இடபத்தின் சித்திரத்தை கொடியில் தாங்கிய வேதியனே, மற்ற தெய்வங்களிளிருந்து மாறுபட்டு விளங்கும் தன்மை உடையவனே, ஏனையிரிலும் மேலாக கருதப்படும் தேவர்கள் உனது திருவடிகளைத் தொழ, அவர்களுக்கு அருள் புரியும் வண்ணம் உமையம்மையுடன் நீ இருக்கும் கோலத்தை காட்சியாக அவர்களுக்கு அளிக்கின்றாய்.   

 

]]>
https://www.dinamani.com/specials/thinam-oru-thavaram/2019/apr/15/126-இயலிசை-எனும்-பொருளின்---பாடல்-6-3132439.html
3132438 ஸ்பெஷல்ஸ் தினம் ஒரு தேவாரம் 126. இயலிசை எனும் பொருளின் - பாடல் 5 என். வெங்கடேஸ்வரன் DIN Sunday, April 14, 2019 12:00 AM +0530
பாடல் 5:

    கருமையின் ஒளிர் கடல் நஞ்சம் உண்ட
    உரிமையின் உலகு உயிர் அளித்த நின் தன்
    பெருமையை நிலத்தவர் பேசின் அல்லால்
    அருமையில் அளப்பு அரிது ஆயவனே
    அரவேர் இடையாளொடும் அலைகடல் மலி புகலி
    பொருள் சேர் தர நாள்தொறும் புவி மிசைப் பொலிந்தவனே 

விளக்கம்:

அரவேர் இடையாள்=அரவு ஏர் இடையாள், பாம்பு போன்று நுண்ணியதும் அழகு வாய்ந்ததும் ஆகிய இடையினை உடைய உமைநங்கை; துவளுதல், ஒளிவீசுதல், மெலிந்து  இருத்தல் ஆகிய பாம்பின் மூன்று தன்மைகளையும் கொண்ட இடை என்று பொருள் கொள்ள வேண்டும். பெருமானின் பெருமையை உள்ளபடி அறிந்து கூறுவது மிகவும் அரிதான செய்கை என்று சம்பந்தர் இந்த பாடலில் கூறுகின்றார். இவ்வாறு சொல்வது நமக்கு நன்றுடையானை என்று தொடங்கும் சிராப்பள்ளி பதிகத்தின் ஒரு பாடலை (1.93.8) நினைவூட்டுகின்றது. பல செய்திகளையும் தத்துவங்களையும் விளக்கமாக உரைக்கும் வேதங்களும், அருளாளர்கள் இயற்றிய பாடல்களும், பெருமானின் ஒரு சில பெருமைகளையே சொல்ல முடிகின்றது என்று உணர்த்தி, பெருமானின் பெருமை சொற்களையும் கடந்தது என்று திருஞான சம்பந்தர் இந்த பாடலில் கூறுகின்றார். ஏற்பது இகழ்ச்சி என்பது முதுமொழி. ஆனால் சிவபெருமான் தன் பொருட்டு பலி ஏற்காமல் மக்களை உய்விப்பதற்காக பலி ஏற்பதால், அவன் எடுக்கும் பிச்சை இகழ்ச்சிக்கு உரியது அல்ல. இதனை புரிந்து கொள்ளாமல் பலர் பெருமான் பிச்சை எடுப்பதை இகழ்வாக கூறினாலும், பெருமான் அதனை பொருட்படுத்துவதில்லை. உயிர்கள் தங்களது மலங்களை பெருமான் வைத்திருக்கும் பிச்சைப் பாத்திரத்தில் இட்டு உய்வினை அடைவதற்கு ஒரு வாய்ப்பினை அளிக்கும் பொருட்டு, பிறரது பழிச் சொற்களை புறக்கணித்து பிச்சை எடுக்கின்றான் என்பதை உணர்த்தும் வண்ணம், பழி ஓராது பெருமான் பலி ஏற்கின்றார் என்றும் இந்த பாடலில்  திருஞானசம்பந்தர் கூறுகின்றார்.. 

    மலைமல்கு தோளன் வலி கெட ஊன்றி மலரோன் தன்
    தலை கலனாகப் பலி திரிந்து உண்பர் பழி ஓரார் 
    சொலவல வேதம் சொலவல கீதம் சொல்லுங்கால்
    சில வல போலும் சிராப்பள்ளி சேடர் செய்கையே 

பெருமானின் கருணைத் திறம் மற்றும் அவரது பெருமையினையும் ஆராயத் தொடங்கினால் அவை அளவு கடந்தவை என்பது நமக்கு புரியும். எனவே அவற்றை ஆராய்வதை தவிர்ப்பீர்களாக என்று ஞானசம்பந்தர் உணர்த்தும் பாடல் வாழ்க அந்தணர் என்று தொடங்கும் திருப்பாசுரத்தின் (3.55.4) பாடலாகும். தாட்பால்=தாள் பால், ஆட்பால்=ஆள் பால், அடியவர்கள் பால், கேட்பால் புகில்=கேட்கத் தொடங்குவீர்களாயின்; கிளக்க வேண்டா= அவை பற்றிய ஆராய்ச்சியில் புகவேண்டாம்; கோட்பால்=கோள்களின் தன்மையால் ஏற்படும் தலைநின்று=சார்ந்து.   

    ஆட்பாலவர்க்கு அருளும் வண்ணமும் ஆதி மாண்பும்
    கேட்பால் புகில் அளவில்லை கிளக்க வேண்டா  
    கோட்பாலனவும் வினையும் குறுகாமை எந்தை
    தாட்பால் வணங்கித் தலை நின்று இவை கேட்கத் தக்கார்

பக்குவம் அடைந்த உயிர்களுக்கு இறைவன் அருள் புரிகின்ற தன்மையும், அவனது பழமை வாய்ந்த பல் புகழுக்குரிய செயல்கள் பெருமைகள் அனைத்தையும், சொல்வதற்கும் கேட்பதற்கும் நாம் முனைந்தால், அதற்கு அளவு என்பது ஏதும் இல்லை என்பதை உணர்வோம். எனவே அத்தகைய ஆராய்ச்சியில் ஈடுபடுவதை நீங்கள் தவிர்ப்பீர்களாக. கோள்களின் தன்மையால் தீவினைகளும் நம்மை பிணைத்துள்ள தீய வினைகளால் ஏற்படும் துன்பங்களும் தனது அடியார்களை அடையாமால் இருக்கும் வண்ணம் காத்து அருள் புரிபவன் எமது தந்தையாகிய பெருமான். அவனது திருவடிகளை வணங்கி, அந்த திருவடிகள் மட்டுமே நமக்கு பற்றுக்கோடு என்று சார்ந்து நிற்கும் அடியார்களுக்கு பெருமானின் திருவடிகள் ஞானத்தை உணர்த்த, அந்த ஞானத்துள் அடங்கி நிட்டை கைகூட நிற்பார்கள், என்பதே இந்த பாடலின் பொழிப்புரை.

தன்னுள் ஒடுங்கிய உயிர்களை, பிரளயம் முடிந்த பின்பு விடுவிக்கும் பெருமான், பல பொருட்களையும் உலகத்தில் தோற்றுவிக்கின்றார். இந்த உலகினில் பிறவியெடுத்த உயிர்கள் இன்பமுடன் வாழ இந்த பொருட்கள் தோற்றுவிக்கப் படுகின்றன. செடியிலிருந்து விதை தோன்றுகின்றதா அல்லது விதையிலிருந்து செடி தோன்றுகின்றதா என்பது காலம் காலமாக கேட்கப்படும் கேள்வி; தம்மில் ஒடுங்கிய உலகத்து உயிர்கள் மற்றும் உலகத்து பொருட்கள் அனைத்தையும் பெருமான் விடுவிக்க. பிரளயம் முடிந்த பின்பு இயல்பு வாழ்க்கை உலகில் தொடங்குகின்றது. இவ்வாறு விதை ஏதும் இல்லாமல், அதாவது மூலம் ஏதும் இல்லமால், எந்த பொருளையும் தோற்றுவிக்கும் வல்லமை இறைவனுக்கு உள்ளது என்பதை புலப்படுத்தும் வண்ணம் உள்ள திருவாசகப் பாடலை நாம் இங்கே காண்போம். விச்சு=விதை; வைச்சு=நிலைநிறுத்தி; வாங்குவாய்=அழிப்பாய். பெருமான் செய்யும் மூன்று தொழில்களும் இங்கே குறிப்பிடப் படுகின்றது. பெரிய அன்பர் என்று பெருமானின் அடியார்களுடன் தன்னை பெருமான் கூட்டுவித்த செய்கையை குறிப்பிடும் அடிகளார், பின்னர் தன்னை கைவிடுதல் அவருக்கு அழகா என்ற கேள்வியை எழுப்புகின்றார். தாம் அறியாமல் ஒரு நச்சு மரத்தினை வளர்த்திருந்தாலும் வளர்த்த பாசத்தால் அதை எவரும் வெட்டாமல் இருப்பது போன்று, என்னை இந்த அளவுக்கு மாற்றிய நீ, எனது குறைகள் காரணமாக இப்போது கைவிடலாகாது என்று பெருமானிடம் பேசுவது போன்று அமைந்த பாடல்.   

    விச்சு அது இன்றியே விளைவு செய்குவாய் விண்ணும் மண்ணகம்
              முழுதும் யாவையும்       
    வைச்சு வாங்குவாய் வஞ்சகப் பெரும் புலையனேனை உன்
              கோயில் வாயினில்
    பிச்சன் ஆக்கினாய் பெரிய அன்பருக்கு உரியன் ஆக்கினாய் தாம்
              வளர்த்தது ஒஅர்
    நச்சு மாமரம் ஆயினும் கொலார் நானும் அங்ஙனம்
              உடைய நாதனே

மேற்கண்ட பாடலில் அடிகளார் கூறியது போன்று, உலகத்தில் உள்ள அனைத்து பொருட்களையும் தோற்றுவிப்பது இறைவனே என்பதே புவிமிசை பொருள் சேர்தர என்ற தொடர் மூலம் திருஞானசம்பந்தரால் இந்த பதிகத்தில் உணர்த்தப் படுகின்றது. .    
 
பொழிப்புரை:

ஒளிவீசும் கரிய நிறத்தினை உடைய கடலில் தோன்றிய விடத்தை உண்டு உலகினை காப்பாற்றிய பெருமானே, உலகில் உள்ள அனைத்து உயிர்களையும் தோற்றுவிக்கும் உனது பெருமையை, உலகத்தவர் ஓரளவு பேசலாமே தவிர, முழுவதுமாக பேச இயலாது. உனது பெருமையை முற்றிலும் அளந்து பேசும் திறமை படைத்தவர் எவரும் எங்கும் இல்லை. பாம்பின் உடல் போன்று துவளும் தன்மை கொண்டதும் மெலிவானதும் ஒளி வீசுவதும் ஆகிய இடையினைக் கொண்ட உமை அன்னையுடன் கூடி புகலி நகரில் பொருந்தி உறைகின்ற பெருமானே, நீ தான் இந்த பரந்த உலகினில் பல பொருட்களைத் தோற்றுவித்து, அந்த பொருட்களின் பயனை உயிர்கள் நாள்தோறும் அனுபவிக்கும் வண்ணம் செயல் புரிகின்றாய்.

 

]]>
https://www.dinamani.com/specials/thinam-oru-thavaram/2019/apr/14/126-இயலிசை-எனும்-பொருளின்---பாடல்-5-3132438.html
3132437 ஸ்பெஷல்ஸ் தினம் ஒரு தேவாரம் 126. இயலிசை எனும் பொருளின் - பாடல் 4 என். வெங்கடேஸ்வரன் DIN Saturday, April 13, 2019 12:00 AM +0530
பாடல் 4:

    நிழல் திகழ் மழுவினை யானையின் தோல்
    அழல் திகழ் மேனியில் அணிந்தவனே
    கழல் திகழ் சிலம்பொலி அலம்ப நல்ல
    முழவொடும் அருநடம் முயற்றினனே
    முடிமேல் மதி சூடினை முருகு அமர் பொழில் புகலி
    அடியார் அவர் ஏத்துற அழகொடும் இருந்தவனே 

விளக்கம்:

நிழல்=ஒளி; முருகு=நறுமணம்; அலம்ப=ஆரவாரத்துடன் ஒலிக்க; இந்த பாடலில் கழலும் சிலம்பும் குறிப்பிடப்பட்டு மாதொரு பாகனாக இறைவன் உள்ள நிலை உணர்த்தப் படுகின்றது. அழல் திகழ்=கொழுந்து விட்டெரியும் நெருப்பு போன்று சிவந்த வண்ணம்; தீமேனியான் என்று பல பாடல்களில் பெருமானை அழைத்து நால்வரும் மகிழ்கின்றனர். கோத்தும்பீ பதிகத்தின் கடைப் பாடலில் தீமேனியானுக்கே சென்று ஊதாய் கோத்தும்பீ என்று மணிவாசகர் பாடும் பாடலை நாம் இங்கே காண்போம். நடனம் ஆடுபவனுக்கும் பாடும் கலைஞனுக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பது இயற்கையே. அந்த தொடர்பினை பயன்படுத்தி, தனது விருப்பத்தை தூதுவனாக சென்று பெருமானிடம் தெரிவிக்க, வண்டுகளின் அரசனை மணிவாசகர் தேர்ந்து எடுக்கின்றார். தனக்கு இறைவன் அளித்த பெருமையை நினைத்து பெருமிதம் கொண்டு இறுமாந்து இருந்ததாக இங்கே கூறுகின்றார். தங்களது ஆற்றலில் மிகுந்த நம்பிக்கை கொண்டவர்களாய், பெருமானின் திருமுடியையும் திருவடிகளையும் தேடிச் சென்ற பிரமனும் திருமாலும் தங்கள் முயற்சியில் தோல்வியுற்று திகைத்து நின்றதை ஏமாறி நின்றது என்று அடிகளார் குறிப்பிடுகின்றார். தவிசு=ஆசனம்; வீட்டின் நடுவில் ஒரு ஆசனம் வைத்து நாயினை அழைத்து அதில் உட்காரும் வண்ணம் எவரேனும் செய்வாரோ. வீட்டினில் வளர்க்கப்படும் நாயாக இருந்தாலும், நாம் அந்த நாயினை அதன் போக்கில் விட்டுவிடுவோம் அல்லவா. இது நாயின் தகுதி கருதி நாம் செய்யும் செயல். அவ்வாறு இருக்க, நாய் போன்று கீழ்நிலையில் இருந்த தன்னை, இறைவன் ஒரு பொருட்டாக மதித்து திருவடி தீட்சை அளித்த நிகழ்ச்சியை நன்றாய் பொருட்படுத்த என்ற தொடர்  மூலம் அடிகளார் உணர்த்துகின்றார்.      .        
    பூமேல் அயனோடு மாலும் புகல் அரிது என்று
    ஏமாறி நிற்க அடியேன் இறுமாக்க
    நாய் மேல் தவிசு இட்டு நன்றாய் பொருட்படுத்த
    தீ மேனியானுக்கே சென்று ஊதாய் கோத்தும்பீ 

பொழிப்புரை:

ஒளி வீசும் மழுப்படையைத் கையில் ஏந்திய பெருமானே, தன்னை எதிர்த்து வந்த மத யானையின் தோலினை உரித்து கொழுத்து விட்டெரியும் தீ போன்ற நிறத்தில் அமைந்த தனது திருமேனியின் மீது போர்த்தவனே, ஆரவாரத்துடன் ஒலிக்கும் சிலம்பினையும் அழகாக திகழும் கழலையும் கால்களில் அணிந்தானே, பூத கணங்கள் முழவினை இயக்க அந்த இசையின் பின்னணியில் நடனம் ஆடுபவனே, சடையில் பிறைச் சந்திரனை சூடிய பெருமானே, நீ நறுமணம் கமழும் சோலைகள் நிறைந்த புகலி நகரினில் அடியார்கள் உன்னை புகழ்ந்து ஏத்த, அழகான திருக்கோலத்துடன் அமைந்துள்ளாய்.  

 

]]>
https://www.dinamani.com/specials/thinam-oru-thavaram/2019/apr/13/126-இயலிசை-எனும்-பொருளின்---பாடல்-4-3132437.html
3132436 ஸ்பெஷல்ஸ் தினம் ஒரு தேவாரம் 126. இயலிசை எனும் பொருளின் - பாடல் 3 என். வெங்கடேஸ்வரன் DIN Friday, April 12, 2019 12:00 AM +0530
பாடல் 3:

    பாடினை அருமறை வரன் முறையால்
    ஆடினை காண முன் அருவனத்தில்
    சாடினை காலனைத் தயங்கொளி சேர்
    நீடு வெண்பிறை முடி நின்மலனே
    நினையே அடியார் தொழ நெடு மதில் புகலிந்நகர்
    தனியே இடம் மேவினை தவநெறி அருள் எமக்கே

விளக்கம்:

தனக்கு இறைவன் ஞானம் தந்ததை பதிகத்தின் முதல் பாடலில் குறிப்பிட்ட சம்பந்தர்  தவநெறியும் தர வேண்டும் என்று இந்த பாடலில் வேண்டுகின்றார். திருஞானசம்பந்தர் தவநெறி வேண்டுவது நமக்கு, சுந்தரர் தவநெறி வேண்டியதை நினைவூட்டுகின்றது. சுந்தரர் தவநெறி வேண்டியதை குறிப்படும் சேக்கிழார், தீவினைப் பயனால் அவநெறியில் செல்லாமல் தன்னை தடுத்தாட்கொண்ட இறைவன், தனக்கு தவநெறி தந்தருள வேண்டும் என்று சுந்தரர் வேண்டியதாக கூறுகின்றார். தவநெறி=சிவபூஜையில் செல்லும் வழி. புலன் வழிச் செல்லாது மனத்தினை ஒன்றுவித்து சிவபெருமானை இடைவிடாது நினைத்தலும் பூசித்தலுமே தவநெறி எனப்படும் என்று பெரியோர்கள் விளக்கம் கூறுவார்கள். எனவே புலன்களின் வழியே செல்லும் வாழ்க்கையை அவநெறி என்று உணர்த்தினார் என்று கொள்வதும் பொருத்தமே. பெருமான் சுந்தரரை ஆட்கொண்டபோது சுந்தரர் திருமணம் செய்து கொண்டு உலகத்தவர் அனைவரும் செல்லும் இல்லற வழி தானே. எனவே அவர் அப்போது செல்லவிருந்தது தீவினை என்று குறிப்பிடுவது தவறு அல்லவா. எனவே தீவினை என்று சேக்கிழார் இங்கே கூறுவது தீயின் முன்னர் செய்யப்பட்டு மணவேள்வி என்று பொருள் கொள்ளவேண்டும். தவநெறி அல்லாத வாழ்க்கை என்பதால் அவநெறி என்று குறிப்பிட்டார் எனவும் பொருள் கொள்ளலாம்.    

    சிவன் உறையும் திருத்துறையூர் சென்றணைந்து தீவினையால்
    அவநெறியில் செல்லாமே தடுத்தாட்கொண்டாய் அடியேற்கு
    தவநெறி தந்து அருள் என்று தம்பிரான் முன்னின்று 
    பவநெறிக்கு விலக்காகும் திருப்பதிகம் பாடினார் 

நினையே தொழ=உன் ஒருவனை மட்டும் தொழும்; ஏகாரம் பெருமானை மட்டுமே என்று குறிப்பிடப் பயன்படுத்தப் பட்டுள்ளது வரன்முறை=வரைமுறை; சந்த இலக்கணங்களுடன் பாட வேண்டிய உயர்ந்த முறை; அருவனம்=அரிய வனம், தாருகவனம்; தாருகவனத்து முனிவர்கள் அனைவரும், பெருமானின் தன்மையை உணர்ந்து கொண்ட பின்னர், அதுவரை தாங்கள் கொண்டிருந்த கொள்கையில் இருந்த தவறினை உணர்ந்து, பெருமானை வழிபடத் தொடங்கினர். அது கண்ட பெருமான் மிகுந்த மகிழ்ச்சியுடன், பல வகையான நடனங்கள் ஆடினார் என்று புராணங்கள் கூறுகின்றன. அந்த நடனங்களை தாருகவனத்து முனிகளும் அவரது மனைவியர்களும் தேவர்களும் கண்டு களித்தமை இங்கே அருவனத்தில் காண ஆடினை என்ற தொடரால் சொல்லப் படுகின்றது. தயங்கொளி=விளங்கும் ஒளி; நீடுவெண் பிறை=நீண்ட பிறைச் சந்திரன்; தக்கனின் சாபத்தால் தனது கலைகள் ஒவ்வொன்றாக தேய்ந்து தனது ஒளியினை இழந்து ஒற்றைப் பிறையுடன் அழியும் நிலையில், சந்திரன் பெருமானிடம் சரண் அடைந்தான். பெருமான், தன்னிடம் சரணடைந்த ஒற்றைப் பிறைச் சந்திரனைத் தனது சடையில் சூடிக் கொள்ள, நின்மலன்=இயல்பாகவே பாசங்களிலிருந்து நீங்கியவன். பெருமானின் எட்டு அரிய குணங்களில் ஒன்று 
       
பொழிப்புரை:

பெருமானே, அரிய மறைகளை வரைமுறை கெடாமல் நீ பாடுகின்றாய்; மேலும் தனிச் சிறப்பு வாய்ந்த தாருகவனத்தில், முனிவர்களும் அவர்களது மனைவியரும் தேவர்களும் கண்டு மகிழும் வண்ணம் சிறந்த பல நடனங்களை நீ ஆடினாய்; உனது அடியானாகிய மார்கண்டேயனின் உயிரைக் கவர வந்த காலன் மீது கோபம் கொண்டு அவனை உதைத்து வீழ்த்தினாய்; ஒளியிழந்து தேய்ந்து ஒற்றைப் பிறையுடன் அழியும் நிலையினில் சரணடைந்த, பிறைச் சந்திரனைத் தனது சடையில் அணிந்து கொண்டு சத்திரனுக்கு மறுவாழ்வு அளித்து, அவனது வாழ்நாளை நீட்டி ஒளியுடன் வானில் திகழும் வண்ணம் அருள் புரிந்தாய்; உனது பெருமையை நன்கு உணர்ந்த உனது அடியார்கள், மற்ற தெய்வங்களைத் தொழுவதை தவிர்த்து உன்னையே தொழும் வண்ணம், நீண்டு உயர்ந்த மதிற்சுவர்கள் கொண்ட புகலி நகரினை உனது இருப்பிடமாகக் கொண்டு அங்கே நீ உறைகின்றாய்; இயல்பாகவே பாசங்களிலிருந்து நீங்கிய பெருமானே நீ அடியேனுக்கு தவநெறி தந்து அருள் புரிவாயாக.    

 

]]>
https://www.dinamani.com/specials/thinam-oru-thavaram/2019/apr/12/126-இயலிசை-எனும்-பொருளின்---பாடல்-3-3132436.html
3132435 ஸ்பெஷல்ஸ் தினம் ஒரு தேவாரம் 126. இயலிசை எனும் பொருளின் - பாடல் 2 என். வெங்கடேஸ்வரன் DIN Thursday, April 11, 2019 12:00 AM +0530
பாடல் 2:

    நிலையுறும் இடர் நிலையாத வண்ணம்
    இலை உறு மலர்கள் கொண்டு ஏத்துதும் யாம்
    மலையினில் அரிவையை வெருவ வன் தோல்
    அலை வரு மதகரி உரித்தவனே
    இமையோர்கள் நின் தாள் தொழ எழில் திகழ் பொழில் புகலி
    உமையாளொடு மன்னினை உயர் திரு அடி இணையே

விளக்கம்:

நிலையுறும் இடர்=நிலையாக உயிருடன் இணைந்து நிற்கும் ஆணவமலம்.. ஆணவமலம் என்றும் அழியாது, நெல்லுடன் உமி ஒட்டி இருப்பது போன்று, உயிருடன் ஒட்டி இருக்கும் ஆணவ மலத்தினை அடக்கத் தான் முடியுமே தவிர அதனை முற்றிலுமாக ஒழித்து விட முடியாது. எனவே தான் ஆணவமலம் வலுவடைந்து நிற்காத வண்ணம் என்று இங்கே சம்பந்தர், நிலையாத வண்ணம் என்ற தொடரால் குறிப்பிடுகின்றார். அலைவரு=வருத்தும் நோக்கத்துடன்; இலையுறு மலர்கள்=இலைகளும் மலர்களும், ஏத்துதல்=புகழ்ந்து போற்றுதல் அரிவை=இளம் பெண், இங்கே பார்வதி தேவி; வெருவ=அச்சம் கொள்ளும் வண்ணம்; வன்தோல்=வலிமையான தோல்; கரி=ஆண்யானை; மன்னினை=நிலை பெற்று இருத்தல்;

பொழிப்புரை:

உயிர்களாகிய எங்களுடன் இணைபிரியாது பிணைந்துள்ள ஆணவ மலம் வலிமையுடன் எங்களது உடலில் வலிமையுடன் விளங்குவதைத் தவிர்க்கும் நோக்கத்துடன் பெருமானே உனது உயர்ந்த திருவடிகளை, நாங்கள் உனது திருவடிகளில் பூவும் இலையும் கொண்டு அர்ச்சனை செய்து உன்னை புகழ்ந்து வணங்குகின்றோம். இமயமலையில் அவதரித்த இளம் பெண்ணாகிய பார்வதி தேவி அச்சம் கொள்ளும் வண்ணம், உன்னை வருத்தும் நோக்கத்துடன் உன்னை நோக்கி பாய்ந்து வந்த மதம் கொண்ட ஆண்யானையின் தோலினை உரித்துத் தனது உடலின் மீது போர்த்துக் கொண்ட பெருமானே, இமையோர்கள்  உமது திருவடிகளைத் தொழும் வண்ணம் பார்வதி தேவியோடு நிலையாக அழகுடன் திகழும் சோலைகள் நிறைந்த புகலி நகரினில் நீ வீற்றிருக்கின்றாய்.
  
 

]]>
https://www.dinamani.com/specials/thinam-oru-thavaram/2019/apr/11/126-இயலிசை-எனும்-பொருளின்---பாடல்-2-3132435.html
3132434 ஸ்பெஷல்ஸ் தினம் ஒரு தேவாரம் 126. இயலிசை எனும் பொருளின் - பாடல் 1 என். வெங்கடேஸ்வரன் Wednesday, April 10, 2019 12:00 AM +0530 பின்னணி

நான்காவது தலையாத்திரையை முடித்துக் கொண்டு சீர்காழி திரும்பிய ஞானசம்பந்தருக்கு அவரது தந்தையார் உபநயனச் சடங்கு செய்வித்தார். இந்த சடங்கு முடிந்த சில நாட்கள் கழித்து ஞானசம்பந்தரைக் காண வேண்டும் என்ற விருப்புடன் தில்லைச் சிதம்பரத்திலிருந்து புறப்பட்ட திருநாவுக்கரசர் சீர்காழி வந்து செர்ந்தார், சீர்காழி வந்து சேர்ந்த திருநாவுக்கரசரை, பல அடியார்கள் புடை சூழ எதிர்கொண்ட சம்பந்தர அவரை அன்புடன் அப்பரே என்று அழைத்தார். பின்னர் இருவரும் சேர்ந்து சீர்காழி நகரத்தில் உள்ள திருக்கோயிலுக்கும் அருகில் உள்ள திருக்கோலக்கா தலத்திற்கும் ஒன்றாக சென்றனர். கோலக்கா சென்று திரும்பியதும் நாவுக்கரசர், பல சோழ நாட்டு தலங்களைக் காண்பதற்கு ஆவல் கொண்டவராக சீர்காழியிலிருர்ந்து புறப்பட்டு செல்ல, சம்பந்தர் பல நாட்கள் சீர்காழியில் தங்கி இருந்தார். அவ்வாறு இருந்த நாட்களில் பல வகையான பதிகங்களை அருளினார். இந்த பதிகங்கள் பல வகையிலும் ஏனைய பதிகங்களிலிருந்து மாறுபட்டு காணப் படுகின்றன. இவற்றுள் சில தமிழ் இலக்கியத்திற்கு முன்னோடியாக திகழ்ந்தன என்று சேக்கிழார் பெரிய புராணத்தில் கூறுகின்றார். அத்தகைய வித்தியாசமான பதிகங்களில் ஒன்று தான் நாலடிமேல் வைப்பு என்ற வகையைச் சார்ந்த இந்த பதிகம். 

பொதுவாக தேவாரத் திருவாசகப் பதிகங்கள் நான்கு அடிகள் கொண்டவையாக விளங்குகின்றன. ஆனால் இந்த பதிகத்தில் ஆறு அடிகள் இடம் பெற்றுள்ளன. ஒரே சந்தத்தின் அமைப்பில் உள்ள முதல் நான்கு அடிகளை மேல் வேறொரு சந்த அமைப்பில் உள்ள இரண்டடிகளை ஒட்டி வைத்தது போன்று காணப்படுவதால் நாலடிமேல் வைப்பு என்ற பெயர் வந்தது. திருவாவடுதுறை தலத்தின் மீது அருளப்பட்ட, இடரினும் தளரினும் என்று தொடங்கும் பதிகமும் (3.04) இந்த பதிகம் போன்றே காந்தார பஞ்சமம் பண்ணில் அமைக்கப் பட்டுள்ளது. ஆலவாய்த் தலத்தின் மீது அருளிய வேதவேள்வியை என்று தொடங்கும் பதிகமும் (3.108) நாலடி மேல் வைப்பு என்ற வகையில் அமைந்துள்ளது. இந்த மூன்று பதிகங்களையும் திருவாசகத்தில் காணப்படும் திருவம்மானை மற்றும் பொன்னூசல் பதிகங்களை தவிர்த்து உள்ள மற்ற அனைத்துப் பதிகங்களும் நான்கு அல்லது அதற்கும் குறைந்த அடிகளைக் கொண்ட பதிகங்களாக உள்ளன. திருவாசகத்தில் உள்ள பதிகங்களின் பாடல்கள், ஆறு அடிகளும் ஒரே வகையான சந்தத்தில் அமைந்துள்ளன.  
 
பாடல் 1:

    இயலிசை எனும் பொருளின் திறமாம்
    புயல் அன மிடறுடைப் புண்ணியனே
    கயல் அன வரி நெடும் கண்ணியொடும்
    அயல் உலகு அடி தொழ அமர்ந்தவனே
    கலன் ஆவது வெண் தலை கடி பொழில் புகலி தன்னுள்
    நிலன் நாள்தொறும் இன்புற நிறைமதி அருளினனே

 
விளக்கம்:

இயல்=இயற்றமிழ்; இசை=இசைத்தமிழ்; முத்தமிழ்களில் இயல் மற்றும் இசைத் தமிழ்களை குறிப்பிட்ட படியால் நாடகத் தமிழையும் குறிப்பிட்டதாக நாம் கொள்ள வேண்டும் பொருள்= மேற்கண்ட மூன்று தமிழால் கருதப்படும் முடிந்த பொருள்; அயல் உலகு=நிலவுலகத்திற்கு வேறான விண்ணுலகம்; கலன் என்பதற்கு உண்ணும் கலன் என்றும் அணிகலன் என்றும் இரண்டு விதமாக பொருள் கொள்ளலாம். பிரமனின் கபாலம் உலர்ந்து வெண்மை நிறத்துடன் உண்கலமாக இறைவனின் கையினில் உள்ளது. தானே நிலையானவன் என்பதை உணர்த்தும் பொருட்டு தலைமாலை அணிந்தவனாகவும் இறைவன் காட்சி தருகின்றான். எனவே இரண்டும் பொருத்தமான விளக்கமே. நிறை மதி=நிறைந்த அறிவு, ஞானம். புயல்=மேகம்; மிடறு=கழுத்து; கடி பொழில்=நறுமணம் வீசும் சோலைகள்; நிலன்=நிலவுலகம்      

எண்ணரிய சிவஞானம் கலந்து கொடுக்கப்பட்ட பாலினை தனக்கு ஊட்டுமாறு, உமை அம்மையைப் பணித்து தனக்கு இறைவன் நிறைந்த ஞானம் அளித்ததை நினைவு கூறும் சம்பந்தர், அந்த ஞானம் தனக்கு அளிக்கப்பட்டதன் காரணத்தையும் இங்கே கூறுகின்றார். தன்னுள் இருந்து இறைவன் மொழிந்த தேவாரப் பாடல்களை நாள்தோறும் ஓதியும் கேட்டும் உலகத்தவர் உய்யும் பொருட்டு, தனக்கு ஞானம் அளிக்கப்பட்டது என்று ஞானசம்பந்தர் இந்த பாடலில் கூறுகின்றார். தமிழ்நாட்டில் பலரும் தேவாரப் பதிகங்கள் பாடுவதற்கு காரணமாக இருப்பவர் திருஞானசம்பந்தர் தானே. தேவாரப் பதிகங்கள் தோன்றுவதற்கும் ஆதாரமாக இருப்பது அம்மையே அப்பா என்று தோணிபுரத்து  கோயில் சிகரத்தை பார்த்து அவர் அழுதது தானே, அதனைக் கேட்டு பெருமான் பிராட்டியுடன் கீழே இறங்கி வந்து ஞானப்பால் அளித்து, மூன்று வயது குழந்தையை தோடுடைய செவியன் என்று தொடங்கும் பதிகத்தினை பாடச் செய்தது. இந்த நிகழ்ச்சியை குறிப்பிடும் பாடல் ஒன்றனில் சேக்கிழார், பல உயிர்களும் இன்பம் பெருகி களிக்கும் வண்ணம் இந்த பாடலை பாடிய ஞானசம்பந்தர், உலகத்தவரின் மனத்தினை இந்த பதிகம் மற்றும் பல தேவாரப் பதிகங்கள் சென்று அடைய செயல்படும் உறுப்பாகிய காதினை சிறப்பித்து தோடுடைய செவியன் என்று பாடியதாக கூறுகின்றார். இந்த பெரிய புராண பாடலை நாம் இங்கே காண்போம்.

    எல்லையில்லா மறை முதல் மெய் உடன் எடுத்த எழுது மறை
    மல்லல் நெடும் தமிழால் இம்மாநிலத்தோர்க்கு உரை சிறப்பப்
    பல்லுயிரும் களிகூரத் தம் பாடல் பரமர் பால்
    செல்லும் உரை பெறுவதற்குத் திருச்செவியைச் சிறப்பித்து

எழுது மறை=அவ்வப்போது ஓலைகளில் பதிவு செய்யப்பட்ட தேவாரப் பதிகங்கள்; எழுதா மறை என்று வடமொழி வேதங்களை குறிப்பிடுவார்கள்; மறையின் முதல் எழுத்து பிரணவ மந்திரம்; தமிழ் என்ற சொல்லின் முதல் எழுத்து த. இதற்கு ஆதாரமாக உள்ளது த் என்ற மெய்யெழுத்து. இந்த இரண்டு எழுத்துகளையும் இணைத்து தோ என்ற எழுத்தினை முதல் சொல்லாக வைத்து தொடங்கப்பட்ட பாடல். மல்லல்=வளமை வாய்ந்த; உரை சிறப்ப என்று தமிழுலகில் வாழும் மக்கள் இந்த தேவாரப் பதிகங்களில் சொல்லப்பட்டுள்ள கருத்தினைக் கேட்டு உய்வினையடையும் பொருட்டு; 

ஞானசம்பந்தர் அன்று அழுததால் நமக்கு தேவாரப் பதிகங்கள் கிடைத்தன என்பதால், அழுதார் என்று குறிப்பிடாமல் அழுது அருளினார் என்று சேக்கிழார் குறிப்பிடும் பாடல் திருஞானசம்பந்தர் புராணத்தின் முதல் பாடலாகும். பூதம்=உயிர்கள்; பொலிதல்=தங்களைத்  பிணைத்துள்ள வினைகளின் விளைவால் பற்பல பிறவிகள் எடுக்கும் உயிர்கள் தேவாரப் பாடல்கள் மூலம் படிப்படியாக பக்குவம் பெறுதல்; சமணம் மற்றும் புத்த மதங்களின் தாக்கத்தால் குன்றிய சைவ சமயம் தழைத்துப் பெருகும் பொருட்டு, வேதநெறிகள் தழைத்து வளர்வதற்கு தேவாரப் பதிகங்கள் காரணமாக இருந்தன என்று சேக்கிழார் இங்கே கூறுகின்றார். எனவே தான் அழுத வாயினை சிறப்பித்து, புனித வாய் என்று மலர்ந்து அழுத என்றும் சேக்கிழார் கூறுகின்றார். மற்றொரு பாடலில் அழுது அருளியவர் என்றும் சேக்கிழார் கூறுகின்றார். கதிர்காமம் தலத்தின் மீது பாடிய திருப்புகழில். அருணகிரி நாதர் அழுது உலகை வாழ்வித்தவர் என்று ஞானசம்பந்தரை குறிப்பிடுகின்றார்.      

    வேதநெறி தழைத்து ஓங்க மிகு சைவத்துறை விளங்க
    பூத பரம்பரை பொலிய புனிதவாய் மலர்ந்து அழுத
    சீதவளர் வயல் புகலி திருஞானசம்பந்தர்
    பாதமலர் தலைக் கொண்டு திருத்தொண்டு பரவுவாம்

             
பொழிப்புரை: 

இயற்றமிழ், இசைத்தமிழ், நாடகத்தமிழ் ஆகிய மூன்று வகையான தமிழ் நூல்களிலும் குறிப்பிடப்படும் முடிவான பொருளாக இருப்பவனே, கருமையான மேகம் போன்ற நிறத்தில் கழுத்தினை உடையவனே, விண்ணவர்களும் உனது திருவடிகளைத் தொழும் வண்ணம், கயல்மீன் போன்று நீண்டு அழகாக உடைய கண்களை உடைய உமை அன்னையுடன் பல தலங்களில் உறைபவனே, உமக்கு அணிகலனாக உள்ளது வெண்தலை மாலையாகும். நறுமணம் நிறைந்த சோலைகள் கொண்ட புகலி நகரினுள் அமர்ந்துள்ள இறைவனே, அடியேனுக்கு நிறைந்த அறிவினை அளித்து, அந்த அறிவினைக் கொண்டு தேவாரப் பாடல்கள் பாட வைத்து, அந்த பாடல்களால் உலகத்தில் உள்ள உயிர்கள் இன்பம் அடியுமாறு அருள் புரிந்தாய்.        

 

]]>
https://www.dinamani.com/specials/thinam-oru-thavaram/2019/apr/10/126-இயலிசை-எனும்-பொருளின்---பாடல்-1-3132434.html
3127773 ஸ்பெஷல்ஸ் தினம் ஒரு தேவாரம் 125. தக்கன் வேள்வி தகர்த்தவன் - பாடல் 11 என். வெங்கடேஸ்வரன் DIN Tuesday, April 9, 2019 12:00 AM +0530  

பாடல் 11:

    புந்தியால் மிக நல்லவர் பூந்தராய்
    அந்தம் இல் எம் அடிகளை ஞானசம்
    பந்தன் மாலை கொண்டு ஏத்தி வாழும் நும்
    பந்தமார் வினை பாறிடுமே

விளக்கம்:

வாழும்=வாழ்வீர்களாக; பந்தமார்=பிணைத்து நிற்கும்; புந்தி=மனம்; அந்தமில் அடிகள் என்று முடிவில்லாத ஆற்றல் உடைய பெருமான் என்று பெருமானின் எண்குணங்களில் ஒன்றினை இங்கே சம்பந்தர் குறிப்பிடுகின்றார். பேரருள் உடையவன் பெருமான் என்பதை உணர்த்தும் வண்ணம் பெருமான் அருள் செய்யும் திறம் இந்த பதிகத்தின் பல பாடல்களில் உணர்த்தப் படுகின்றது. பெருமான் இயல்பாகவே பாசங்களிலிருந்து நீங்கியவன் என்பதை நாம் இந்த பதிகத்தின் முதல் பாடலில் சிந்தித்தோம். எண்குணத்தான் என்று அழைக்கப்படும் பெருமானின் எஞ்சிய ஐந்து குணங்கள், தன்வயத்தன் ஆதல், தூய உடம்பினனாக இருத்தல், இயற்கை உணர்வினன் ஆதல், முற்றும் உணர்தல், வரம்பு இல்லாத இன்பம் உடைத்தல் என்பனவாகும்.  

பொழிப்புரை:

உயர்ந்த கொள்கைகள் நிறைந்த நல்ல மனதினர் வாழும் பூந்தராய் நகரினில் வாழும் பெருமானை, முடிவு ஏதும் இல்லாமல் என்றும் நிலைத்து நிற்கும் பெருமானை, ஞான சம்பந்தன் அருளிய மாலை கொண்டு புகழ்ந்து வாழும் அடியார்கள் தங்களைப் பிணைத்துள்ள வினைகளின் தன்மை முற்றிலும் மாறிவிடும்.     

முடிவுரை:

பதிகத்தின் முதல் பாடலில் பூந்தராய் தலத்தில் உறையும் இறைவனை, நமது சிந்தையில் வைத்தால் பல நன்மைகள் விளையும் என்றும் இந்த காரணம் பற்றியே உண்மையான மெய்ஞானம் அடைய விரும்புவோர் பெருமானை தியானம் செய்கின்றனர் என்று பதிகத்தின் இரண்டாவது பாடலில் கூறும் சம்பந்தர், அடுத்து வரும் பாடல்களில்  பெருமானை வழிபடுவதால் நாம் அடையவிருக்கும் பலன்களை கூறுகின்றார். வேந்தராய் உலகு ஆளலாம் என்றும் நம்மைப் பற்றியுள்ள வினைகள் செயலற்று விட முக்தி நிலையினை நாம் அடையலாம் என்று மூன்றாவது பாடலில் கூறுகின்றார். நான்காவது பாடலில் மனமும் உடலும் நலம் பெற்று இருக்கும் என்று கூறுகின்றார். ஐந்தாவது பாடலில் வினைகளிலிருந்து விடுதலை பெற்று வீடுபேறு அடைய வழி வகுக்கும் என்று கூறுகின்றார். ஆறாவது பாடலில் நாள்தோறும் இன்பமுடன் இருக்கலாம் என்றும் ஏழாவது பாடலில் நமது பாவங்கள் அழிந்துவிடும் என்றும் ஒன்பதாவது பாடலில் நமது வினைகள் மாளும் என்றும் கூறுகின்றார். எட்டாவது பாடலில் அரக்கன் இராவணன் பால் கருணை கொண்டு அருளியதை குறிப்பிட்டு, இறைவனைப் புகழ்ந்து பாடினால் நமது குற்றங்களும் மன்னிக்கப்பட்டு அவனது அருளினை நாம் பெறலாம் என்று உணர்த்துகின்றார். பத்தாவது பாடலில் சமணர்கள் கூறும் பொருத்தமில்லாத சொற்களை வெறுத்து நீக்கிவிடும் பெருமான் என்று குறிப்பிட்டு, நாமும் அவ்வாறு செய்து, மாற்று மதத்தவர்களின் பொய்யுரைகளை பொருட்படுத்தாமல் இருக்க வேண்டும் என்று அறிவுரை கூறுகின்றார். பதிகத்தின் கடைப் பாடல் இந்த பதிகத்தை ஓதுவதால், நம்மை பிணித்திருந்த வினைகள் நீங்கி விடும் என்று கூறப்படுகின்றது. சீர்காழிப் பெருமானை தொழுவதால் கிடைக்கும் பலன்களை ஞானசம்பந்தர் வாயிலாக அறிந்து கொண்ட நாம், பெருமானை வணங்கித் தொழுதும் இந்த பதிகத்தினை ஓதியும் பலன் அடைவோமாக.    

 

]]>
https://www.dinamani.com/specials/thinam-oru-thavaram/2019/apr/09/125-தக்கன்-வேள்வி-தகர்த்தவன்---பாடல்-11-3127773.html
3127772 ஸ்பெஷல்ஸ் தினம் ஒரு தேவாரம் 125. தக்கன் வேள்வி தகர்த்தவன் - பாடல் 10 என். வெங்கடேஸ்வரன் DIN Monday, April 8, 2019 12:00 AM +0530  

பாடல் 10:

    பொருத்தம் இல் சமண் சாக்கியப் பொய் கடிந்து
    இருத்தல் செய்த பிரான் இமையோர் தொழ
    பூந்தராய் நகர் கோயில் கொண்டு கை
    ஏந்து மான்மறி எம் இறையே
    

விளக்கம்:

பொருத்தமில்=வேத நெறிகளுக்கு பொருத்தமில்லாத; சிறந்த நூல்களாக கருதப்படுவதற்கு பொருத்தம் ஏதும் இல்லாத சமண மற்றும் புத்த இலக்கியங்கள்; சாக்கிய=புத்த

பொழிப்புரை:

வேத நெறிகளுக்கு சற்றும் பொருத்தம் இல்லாத சமணர்கள் மற்றும் புத்தர்கள் கூறும் பொய்யான சொற்களைக் கடிந்து விளக்கும் பெருமான், இமையோர்கள் தொழும் வண்ணம் பூந்தராய் நகரினில் கோயில் கொண்டுள்ளார். அவரே தனது கையினில் மான் கன்றினை ஏந்தியுள்ள சிவபெருமான் ஆவார்.  

 

]]>
https://www.dinamani.com/specials/thinam-oru-thavaram/2019/apr/08/125-தக்கன்-வேள்வி-தகர்த்தவன்---பாடல்-10-3127772.html