108 கேரளக் கோயில்கள் - 1. மதூர் மதனந்தேஸ்வர சித்தி விநாயகர் கோயில் ஸ்தல புராணம்!

ஒருமுறை மைசூர் மன்னர் திப்பு சுல்தான் இங்கு படையெடுத்து வந்தார். அந்தப் படையெடுப்பின் போது திப்பு இந்துக் கோயில்கள் பலவற்றைச் சிதைத்துக் கொண்டே வந்து கொண்டிருந்தார். அவ்வேளையில் இந்தக் கோயிலிலும்
மதூர் மதனந்தேஸ்வரா சித்தி விநாயகர் கோயில்
மதூர் மதனந்தேஸ்வரா சித்தி விநாயகர் கோயில்

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் சார்பில் 108 கேரளக் கோயில்கள் குறித்து புத்தகம் ஒன்று சமீபத்தில் வெளியிடப்பட்டிருக்கிறது.

புத்தகம்
புத்தகம்

அதில் பாரம்பர்யப் பெருமை மிகுந்த 108 கேரளக் கோயில்களைப் பற்றிய ஸ்தல புராணங்கள், கோயிலின் புராணத் தொடர்புகள், மக்களின் ஆழ்ந்த நம்பிக்கையின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டுள்ள ஐதீக விளக்கங்கள், அக்கோயில்கள் எந்தெந்த மாதங்களில் திருவிழாக்கள் கொண்டாடப்படுகின்றன... கேரளக் கோயில்களின் மரபு உள்ளிட்ட பல விஷயங்களைப் பற்றிய தெளிவான விளக்கங்கள் அளிக்கப்பட்டுள்ளன. ஆங்கிலத்தில் வெளியிடப்பட்டுள்ள அப்புத்தகத்தினை தினமணி வாசகர்களுக்காகத் தமிழில் மொழிபெயர்த்து கதை சொல்லல் பாணியில் விடியோவாக்கித் தந்திருக்கிறோம். 

மதூர் மதனந்தேஸ்வர சித்தி விநாயகர் கோயில் ஸ்தல புராணம் விடியோ...

ஐதீகக் கதை..

கேரள மாநிலம் மதூரில் இருக்கும் இந்த மதனந்தேஸ்வரர் சித்தி விநாயகர் கோயிலானது கேரள பாணி கோயில் கட்டடக் கலைக்கு சான்று பகன்று கொண்டு இன்றளவும் பெருமைக்குரிய சிவாலயங்களில் ஒன்றாகத் திகழ்ந்து வருகிறது. அடிப்படையில் சிவனுக்காக நிர்மாணிக்கப்பட்ட ஆலயமிது என்றாலும் இன்று பெருந்திரளான மக்கள் இதை சித்தி விநாயகரின் பெயராலேயே அடையாளம் காண்பது இக்கோயிலைப் பொருத்தவரை வியப்பான ஒன்று. கேரளக் கோயில்களில் கொட்டாரக்கார கோயிலிலும் நாம் இதே ஒற்றுமையைக் காண முடியும். அது ஏன்? என்றால் அதற்கொரு ஐதீகக் கதை சொல்லப்படுகிறது.

ஒருமுறை மதூர் இனத்தைச் சேர்ந்த பழங்குடி இனப்பெண் ஒருவர் தனது பசுக்களுக்காகப் புல் அறுக்க காட்டுக்குச் செல்கிறார். அங்கு புல் அறுத்துக் கொண்டிருக்கும் போது, அவ்விடத்தில் திடீரென அவருக்கு சுயம்பு லிங்க தரிசனம் கிடைக்கிறது. உடனே அந்தப் பெண் ஓடி வந்து அந்த அதிசயத்தை தன் இனத்தின் மூத்தவர்களிடம் சொல்ல, அவர்கள் மூலமாக அந்தச் செய்தி மதூர் ராஜாவான மயிபாடி ராமவர்மாவைச் சென்றடைகிறது. 

ஒரு அரசனுக்கு அவனது ஆட்சிக்குட்பட்ட பூமியில் தெய்வச் சிலைகள் கிடைப்பது பெருமைக்குரிய விஷயம். எனவே, சுயம்பு லிங்கம் கிடைத்தது குறித்து சந்தோஷத்தில் ஆளும் ராமவர்மா, உடனடியாக அங்கே சிவனுக்கு ஒரு ஆலயமெழுப்ப உத்தரவிடுகிறார். உத்தவிடுவதால் மாத்திரம் உடனே ஆலயம் எழுந்து விடாதில்லையா? அங்கு எந்த இடத்தில் கோயில் கட்டுவதென மன்னர் ஆன்மீக குருக்களையும், ஜோதிடத்தில் வலுத்த பெரியவர்களையும் அழைத்து ஆலோசனைகள் கேட்கிறார். தீவிரமாக் ஆலோசித்த பின் கோயில் கட்டுவதற்கான புள்ளியை எப்படித் தீர்மானிப்பதென ஆன்றோர் வாக்குச் சொல்ல, எந்தப் பெண்மணிக்கு முதன்முதலாகச் சுயம்புலிங்க தரிசனம் கிட்டியதோ, அவரையே அழைத்து வந்து அவரது கையில் புல்லறுக்கும் கதிரறிவாளை அளித்து, தரிசனம் கிடைத்த இடத்தில் அதைத் தூரமாக தூக்கி வீசச் சொல்கிறார்கள். அப்பெண்மணி வீசிய கதிரறிவாள் சென்று விழுந்த இடம் மதுவாணி ஆற்றங்கரையோரம்.

அந்த இடத்திற்கு அரசரது பரிவாரங்கள் ஓடிச் சென்று பார்க்கையில் அங்கு ஓர் பேரதிசயம் காத்திருந்தது அவர்களுக்கு;

ஆம், அந்த இடத்தில் புலியும், பசுவும் ஒரே இடத்தில் வாய் வைத்து நீரருந்திக் கொண்டிருந்தன.

இது நிச்சயமாகப் பேரதிசயமின்றி வேறென்ன? புலிக்கு இரையாகக் கூடிய பசுவுடன் புலி ஒற்றுமையாக நீரருந்தியது என்றால் அந்த இடம் நிச்சயம் புனிதமானது தான் என்று முடிவெடுத்து ஆன்றோர் வாக்குப்படி அங்கு சிவாலயம் எழுப்பப்படுகிறது. மதனந்தேஸ்வரர் என்ற பெயரில் எழுந்த அந்த சிவாலயத்தில் பூஜை புனஸ்காரங்களைச் செய்விக்க நம்பூதிரி குடும்பத்தார் வரவழைக்கப்படுகின்றனர். அவர்கள் மூலமாக அங்கு தினப்படி பூஜைகள் நடந்தேறுகின்றன.

சித்தி விநாயகர் இணைந்த கதை... 

இது இப்படி இருக்க, பூஜை செய்ய வந்த நம்பூதிரிமார்களில் பெரியவர்கள் எல்லாம் சிவ வழிபாட்டில் ஆழ்ந்திருக்க, அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த சிறுவர், சிறுமிகளுக்கு பூஜை முடிந்த நேரங்களில் பொழுதுபோக்கப் பெரிதாக எந்த வாய்ப்புகளும் இல்லாது போகவே, அவர்கள் விளையாட்டாக அந்த ஆலயத்தின் பிறிதொரு இடத்தில் கற்சுவற்றில் விநாயகர் உருவம் ஒன்றை வரைந்து வைத்துக் கொண்டு, தம் வீட்டுப் பெரிய ஆண்கள் சிவனுக்கு வழிபாடு செய்வதைப் போலவே இவர்கள் விநாயகருக்கு வழிபாடுகளும், பூஜைகளும் நடத்தத் தொடங்கி இருக்கின்றனர். பொழுது போக்காகத் தொடங்கிய விஷயம் இது. ஆனால், நாளடைவில் குழந்தைகளின் இந்த விளையாட்டு பெரியவர்களுக்கு எட்ட, அவர்கள் இதைக் காணும் பொருட்டு ஒருநாள் குழந்தைகளின் வழிபாட்டு நேரத்தில் அங்கு செல்ல அங்கு அவர்களுக்குப் பேரதிர்ச்சி கலந்த ஆனந்தம் காத்திருந்தது.

ஆம், கற்சுவரில் வரையப்பட்டு வழிபாடு செய்யப்பட்டு வந்த விநாயகர் இப்போது புடைப்புச் சிற்பம் போல பெரிதாக பெரும் சிலை வடிவம் பெற்றிருந்தார். இது ஆச்சர்யமின்றி வேறென்ன? மதூர் சித்தி விநாயகர் உருவான கதை இது தான். அவரும் குழந்தைகளின் கறிக்கோட்டு சித்திரத்தில் இருந்து உருவான சுயம்பு மூர்த்தியே என்பதால், அரசன், அவருக்கும் சிவனைப்போலவே பூஜை, புனஸ்காரங்கள் நடத்த உத்தரவிடுகிறார். இப்படித்தான் இந்தக் கோயிலின் பெயர் மதூர் மதனந்தேஸ்வர சித்தி விநாயகர் ஆயிற்று. இன்று சிவனைக் காட்டிலும் விநாயகருக்கு இங்கு அதிக செல்வாக்கு என்கிறார்கள் அங்கிருக்கும் மக்கள்.

மதூர் மதனந்தேஸ்வரரைப் பொருத்தவரை இந்தக் கோயிலின் சிறப்பியல்புகளாகக் கருதப்படுபவை;

இது கேரள கட்டடக் கலை மரபை அடியொற்றி மூன்றடுக்கு அமைப்பில் உருவாக்கப்பட்ட ஆலயங்களில் ஒன்று. மேலும் இந்தக் கோயிலில் சிவனுக்கு அபிஷேகம் நடக்கும் நாட்களில் அந்த அபிஷேக நீர் வெளியேற வழியே இல்லை. பிற சிவாலயங்களில் அப்படி இருப்பதில்லை. அபிஷேக நீர் வெளியேற வெளிப்புறமாக ஒரு அமைப்பு இருக்கும். ஆனால், இங்கு அபிஷேக நீர் அப்படியே பூமிக்குள் புதையுண்டு செல்ல சுரங்கம் அமைத்திருக்கப்படலாம் எனக் கருதப்படுகிறது.

அதுமட்டுமல்ல, பிற கேரளபாணி கோயில்களில் நடத்தப்படும் யானை அணிவகுப்பு என்பது இங்கு கிடையாது. ஏனெனில், இங்கு திடம்பு மூர்த்தி என்று சொல்லப்படக்கூடிய உற்சவ மூர்த்தியின் எடையானது மிக அதிகம். இரண்டு மூன்று பேர் இணைந்து முயன்றாலும் அது சற்றுக் கடினமான பணியே என்பதால் திடம்பு மூர்த்தி ஊர்வலமென்பது இந்தக் கோயிலுக்கு கிடையாது என்கிறார்கள்.

கோயிலின் மற்றொரு சிறப்பு இங்கு மன்னர் காசி சென்று வந்ததன் அடையாளமாக காசி விஸ்வநாதர் என்ற பெயரில் தட்சிணாமூர்த்தி பிரதிஷ்டையும் செய்யப்பட்டுள்ளது. அவர் இங்கொரு உபதேவதையாக வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்கிறார்.

ஒருமுறை மைசூர் மன்னர் திப்பு சுல்தான் இங்கு படையெடுத்து வந்தார். அந்தப் படையெடுப்பின் போது திப்பு இந்துக் கோயில்கள் பலவற்றைச் சிதைத்துக் கொண்டே வந்து கொண்டிருந்தார். அவ்வேளையில் இந்தக் கோயிலிலும் நுழைந்து அவர் உபதேவதைகளை எல்லாம் சிதைத்து விட்டு கருவறைச் சிவனை நோக்கி முன்னேறிச் செல்கையில் திடீரென அவருக்கு தொண்டை வறண்டு தாகம் எடுத்திருக்கிறது. உடனே, திப்பு கோயில் வளாகத்தில் இருந்த சந்திராசலா என்கிற கிணற்றுக்குச் சென்று அங்கிருந்த நீரை அருந்தியிருக்கிறார். கிணற்று நீர் தொண்டைக்குள் இறங்கிய மாத்திரத்தில் மன்னரின் மனம் போரை நிறுத்தி விட உத்தரவிடுகிறது. இது இன்றளவும் நம்பப்படும் ஒரு கதை. இது நிஜமா? இட்டுக்கட்டப்பட்டதா? என்பதை சரித்திர ஆய்வாளர்கள் தான் சொல்ல வேண்டும். கருவறைச் சிலையை சேதப்படுத்தாமல் செல்ல நினைத்தாரே தவிர, இக்கோயிலில் தனது தடத்தைப் பதிக்க மறந்தாரில்லை திப்பு. ஆம், இன்றும் இக்கோயிலின் தென்மேற்கு மூலையில் இருக்கும் சந்திராசலா கிணற்றுச் சுவரில் திப்பு தன் வாளால் கீறிய தடம் இருக்கிறது என்கிறார்கள் மக்கள்.

இப்படி இந்தக் கோயிலைப் பற்றிய சுவாரஸ்யமான விஷயங்கள் அனைத்தும் கோயிலின் ஸ்தல புராணத்தில் இடம்பெற்றுள்ளன.

அதுமட்டுமல்ல கேரள காலண்டர் மரபுப்படி ஆண்டுதோறும் மேட மாத ஆரம்பத்தில் 5 நாள் திருவிழாவும் இங்கு கொண்டாடப்படுவதாகத் தகவல்.

சரி. மேலதிக விவரங்களுக்கு கீழுள்ள விடியோவைப் பார்வையிடுங்கள். புத்தக வடிவில் ஸ்தல புராணம் தெரிந்து கொள்ள ஆர்வமிருப்போர் ஜனவரி புத்தகத் திருவிழா வரை காத்திருங்கள். 

மீண்டும் அடுத்து ஒரு கேரளக் கோயிலின் ஸ்தல புராணத்தில் சந்திக்கலாம்.

நன்றி!
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com