சுடச்சுட

    

    பூச்சித் தாக்குதலில் இருந்து மா மரங்களை காப்பது எப்படி?

    By dn  |   Published on : 14th February 2013 05:19 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    06PDYAGR

    முக்கனிகளில் முதலாவதானது மாம்பழம் ஆகும். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவர்ந்த இந்த கனி, சுவை மட்டுமல்லாமல் பல்வேறு சத்துகளையும் கொண்டது.

    ÷மாம்பழத்தில் "ஏ', "சி' மற்றும் "இ' வைட்டமின்கள் அதிகமாகக் காணப்படுகிறது. ÷இவ்வாறு பல்வேறு சிறப்புகளைக் கொண்ட மாம்பழ மரங்களை பூச்சிகளிலிருந்து பாதுகாப்பது குறித்து இங்கு காண்போம்.

    ÷புதுச்சேரி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் "மா' பயிரிட்டுள்ள விவசாயிகள் தற்போது உள்ள தட்பவெப்ப நிலைக்கு ஏற்றாற்போல அவற்றை முறையாக பராமரித்து பூச்சிகளைக் கட்டுப்படுத்தினால் கூடுதல் லாபம் பெற முடியும்.

    ÷மாம்பழத்தில் நீலம், பெங்களூரா (தோத்தாப்புரி), அல்போன்சா, ருமானி, பங்கனப்பள்ளி, காலாப்பாடி, பீத்தர், செந்தூரா, ஜஹாங்கீர், மல்கோவா, இமாயுதீன், அர்கா அன்மால், அர்கா அருணா, அர்கா நீல்கிரன், அர்கா புனீத், அமரப்பள்ளி, பி.கே.எம் 1, பி.கே.எம் 2, பையூர் 1, மல்லிகா, சிந்து மற்றும் ரத்னா ஆகிய ரகங்கள் அதிக அளவில் பயிரிடப்படுகின்றன.

    ÷இவற்றில் மல்லிகா, சிந்து, ரத்னா மற்றும் பி.கே.எம் 2 போன்ற இரகங்கள் உயர் ரகங்களாகவும், கேசர் மற்றும் அமரப்பள்ளி போன்ற ரகங்கள் சுவை மற்றும் அதிக விளைச்சல் தரும் ரகங்களாகவும் உள்ளன. மல்லிகா மற்றும் சிந்து ரகங்கள் விதையில்லாதது. தற்போது மாமரங்களில் பூக்கள் பூத்துள்ளன. ஆனால் கடந்த ஆண்டுகளை விட இந்த ஆண்டு மாமரங்களில் பூக்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக உள்ளது.

    ÷அதே போல், மகரந்தச் சேர்க்கை நடைபெறுவதும் குறைந்துள்ளது. இதன் காரணமாக மகசூல் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. பகல் மற்றும் இரவு நேர வெப்பநிலையில் அதிக அளவு வித்தியாசம் இருப்பதும் பனிப்பொழிவுடன் குளிர்நிலை நிலவுவதும் தான் இதற்கு காரணம் என்று விவசாய ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

    ÷இந்நிலையில் மாமரத்தின் பூக்களின் எண்ணிக்கை மற்றும் விளைச்சலை அதிகரிப்பதற்கான சாத்தியக்கூறுகள், பூச்சிகளைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து காமராஜர் வேளாண் அறிவியல் நிலையத்தின் பூச்சியியல் துறை வல்லுநர் நி.விஜயகுமார் கூறியது:

    ÷மாமரம் இதுவரை பூக்காமல் இருந்தால், 0.5 சதவீத யூரியா கரைசல் (5 கிராம் யூரியா ஒரு லிட்டர் நீருக்கு) அல்லது ஒரு சதவீத பொட்டாசியம் நைட்ரேட் கரைசல் (10 கிராம் பொட்டாசியம் நைட்ரேட் ஒரு லிட்டர் நீருக்கு) என்ற அளவில் பிப்ரவரி மாதம் 15 தேதிக்குள் தெளிக்க வேண்டும். இதனால் பூக்கள் உருவாக வாய்ப்புண்டு.

    ÷பூக்கள் பூத்திருக்கும் மாமரங்களில் நாப்தலின் அசிட்டிக் அமிலம் தெளிப்பதால் அதிக பிஞ்சுகள் உருவாவதோடு, பிஞ்சுகள் உதிர்வதும் தடுக்கப்படும்.

    ÷அதே நேரத்தில் பிஞ்சுகள் உருவாகியுள்ள மாமரங்களில் 2 சதவீத பொட்டாசியம் நைட்ரேட் தெளிப்பதால் பிஞ்சுகள் உதிர்வது தடுக்கப்பட்டு பழங்கள் உற்பத்தி அதிகரிக்கும். மாமரத் தோப்புகளில் தோழமை தாவரங்களான சீத்தாப்பழக் கன்றுகள் மற்றும் ஆமணக்குச் செடிகளை பயிரிடுவதால் கூடுதல் வளர்ச்சி மற்றும் அதிக மகசூல் கிடைக்கும் வாய்ப்புகள் உள்ளன.

    பூச்சிகளும்,

    கட்டுப்படுத்தும் வழிகளும்...

    தத்துப் பூச்சி: மாமரங்களை மூன்று விதமான தத்துப் பூச்சிகள் தாக்குகின்றன. மாமரத்தின் கிளைகளில் தத்துப் பூச்சியின் தாக்குதலை எளிதாக கண்டறிய முடியும். தத்துப் பூச்சியின் தாக்குதலினால் பூக்களின் எண்ணிக்கை குறைவதோடு பூக்களிலும் அதன் பாதிப்பு ஏற்படும்.

    ÷தத்துப் பூச்சியின் தாக்குதல் குறைவாக இருப்பின் 3 சதவீத வேப்ப எண்ணை ஒரு லிட்டர் நீருக்கு 5 மிலி அல்லது வேப்பம் சோப்பு ஒரு லிட்டர் நீருக்கு 5 கிராம் என்ற அளவில் தெளிக்க வேண்டும்.

    ÷தத்துப் பூச்சியின் தாக்குதல் மத்திமமாக இருப்பின், ஒரு லிட்டர் நீருக்கு 4 கிராம் "பெவேரியா பேஸியானா' என்ற உயிரக பூஞ்சாண மருந்தினை அதிக திறன் உள்ள தெளிப்பான் மூலம் தெளிப்பு வேகத்தை குறைத்து மாமரம் மற்றும் பூக்களின் மீது தெளிப்பதால் தத்துப் பூச்சிகள் அழியும். தாக்குதல் அதிகமாக இருப்பின், "அசிபேட் 75 எஸ்.பி.' ஒரு கிராம் ஒரு லிட்டர் நீருக்கு அல்லது "கார்பரைல் 50 டபில்யு.பி'-ஐ ஒரு லிட்டர் நீருக்கு 2 கிராம் என்ற அளவில் பூ உருவாகும் சமயத்தில் ஒரு முறையும், 15 நாள்கள் கழித்து இரண்டாவது முறையும் பூக்களின் மீது தெளிக்க வேண்டும்.

    ÷ இது மட்டும்மல்லாமல் நனையும் கந்தகம் 2 கிராம் ஒரு லிட்டர் நீருக்கு என்ற அளவில் தெளித்தால் செஞ்சிலந்தியின் தாக்குதலை தடுக்க முடியும்.

    பிணைக்கும் புழு: பிணைக்கும் புழுவானது மாமரங்களின் பூக்களில் தமது எச்சத்தினால் கூடுகள் கட்டி வலை போல் பின்னி பூக்களை உண்பதால் மகசூல் பாதிக்கப்படுகின்றது. இதனால் பூக்களில் மகரந்தச்சேர்க்கை நடைபெறுவதும் தடுக்கப்படும்.

    ÷பிணைக்கும் புழுவின் தாக்குதலை கட்டுப்படுத்த "பேசலோன் 35 இ.சி' 2 மிலி ஒரு லிட்டர் நீருக்கு அல்லது "புரப்னோபாஸ்' 2 மிலி ஒரு லிட்டர் நீருக்கு என்ற அளவில் பூக்களின் மீது தெளிக்க வேண்டும்.

    இலைக் கொப்புளம் மற்றும் அசுவுணி: இலைக் கொப்புளம் மற்றும் அசுவுணியைக் கட்டுப்படுத்த "டைமித்தோயேட்' 2 மிலி ஒரு லிட்டர் நீருக்கு என்ற அளவில் தெளிக்க வேண்டும்.

    கரையான்: மாமரத் தோப்புகளில் கரையான் புற்றுகளை அழிக்க சோற்றுக்கற்றாழை செடிகளை நடலாம். மேலும் மாமரங்களில் தோன்றும் கரையானை அழிக்க சிறிதளவு சர்க்கரைக் கரைசலை மரத்தின் மீது தெளிப்பதால் செவ்வெறும்புகள் சர்க்கரையை தேடிவந்து கரையான்களை தூக்கிச் செல்லும்.

    பழ ஈ: மாமரத்தின் பழங்களில் தோன்றக்கூடிய பழ ஈயை கட்டுப்படுத்த பிரத்தியேக இனக்கவர்ச்சி பொறியினை ஒரு ஏக்கருக்கு 2 என்ற அளவில் பூக்கும் தருணத்தில் வைத்துவிட வேண்டும். 

    ÷இதனால் பழ ஈக்கள் பூ பூக்கும் தருணத்தில் முட்டையிடுவது தவிர்க்கப்பட்டு இனகவர்ச்சிப் பொறியினால் அவை ஈர்க்கப்பட்டு அழிக்கப்படும் என்றார் அவர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai