சுடச்சுட

  
  raggi

  மார்கழி பட்ட ராகியில் புதிய தொழில்நுட்பங்களைக் கடைப்பிடிப்பதன் மூலம் குறைந்த தண்ணீரைப் பயன்படுத்தி குறைந்த செலவில் அதிக மகசூல் பெறலாம் என்று தருமபுரி உழவர் பயிற்சி நிலையம் தெரிவித்தது.

  தருமபுரி மாவட்டத்தில் சராசரி மழையளவான 853.1 மி.மீ. மழைக்குப் பதிலாக நிகழாண்டு 732.4 மி.மீ. மழை மட்டுமே கிடைக்கப் பெற்றுள்ளது. இது சராசரி மழையைவிட 14 சதவீதம் குறைவாக உள்ளது.

  இதனால், மாவட்டத்தில் உள்ள வாணியாறு, வரட்டாறு ஆகிய நீர்த்தேக்கங்கள் தவிர இதர நீர்த்தேக்கங்களான சின்னாறு, தும்பலஹள்ளி, நாகாவதி, தொப்பையாறு ஆகியவற்றில் பாசனத்துக்கான தண்ணீர் இல்லை. வாணியாறு, வரட்டாறு அணைகளிலும் அதன் முழுப் பாசனப் பரப்புக்கு போதுமான தண்ணீர் இல்லை. பாசன ஏரிகளில் ஒரு சில ஏரிகள் தவிர மற்ற ஏரிகளில் தண்ணீர் இல்லை. கிணறுகளிலும் நீர்மட்டம் உயரவில்லை.

  இந்த நிலையில், இருக்கும் தண்ணீரைச் சிக்கனமாக பயன்படுத்தியே வேளாண் பணிகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது. தண்ணீரைச் சிக்கனமாக பயன்படுத்த வேண்டுமெனில் புதிய தொழில்நுட்பங்களைப் பின்பற்ற வேண்டியது அவசியமானது.

  ராகி சாகுபடியில் புதிய தொழில்நுட்பம்: கார்த்திகை, மார்கழிப் பட்டங்களில் தருமபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாரங்களிலும் ராகி சாகுபடி செய்யப்படுகிறது. ராகி சாகுபடியில் அதிக மகசூல் பெற வேண்டுமெனில் புதிய தொழில்நுட்பங்களுக்கு விவசாயிகள் மாற வேண்டும்.

  ரகங்கள் தேர்வு: முதல் கட்டமாக அதிக விளைச்சல் தரக் கூடிய ரகங்கள் எவை என்பதைத் ஆராய்ந்து தேர்வு செய்ய வேண்டும். ஜிபியு 26, ஜிபியு 64, கோ 14 ஆகிய ரகங்கள் அதிக விளைச்சலைத் தரும். எனவே, இத்தகைய ரகங்களை நாற்றுவிட்டு நடவு செய்யலாம்.

  ஓர் ஏக்கருக்குத் தேவையான 2 கிலோ விதையை, விதை நேர்த்தி செய்து 30 நிமிஷம் நிழலில் உலர்த்தி பின்னர் நாற்றுவிட வேண்டும்.

  ஓர் ஏக்கருக்கு 5 சென்ட் நாற்றாங்கால் தேவை. நன்கு உழுது பயன்படுத்தி ஒரு சென்ட் நாற்றாங்காலுக்கு 3 கிலோ சூப்பர் பாஸ்பேட் உரத்தை அடியுரமாக இட வேண்டும். இந்த தொழில்நுட்ப முறையைப் பின்பற்றுவதன் மூலம் வேர் வளர்ச்சியை ஊக்குவிக்கலாம்.

  15 முதல் 17 நாள் வயதுடைய நாற்றுகளை நடவு செய்ய வேண்டும். 17 நாள்களுக்கு மேல் வயது முதிர்ந்த நாற்றுகளை நடவு செய்தால் நாளொன்றுக்கு ஓர் ஏக்கருக்கு ஒரு மூட்டை மகசூல் குறையும். எனவே, இளம் நாற்றுகளையே தேர்வு செய்ய வேண்டும்.

  இப்போதுள்ள சூழ்நிலையில் குறிப்பிட்ட வயதுக்குள் நடவு செய்ய இயலாது என்பதால் விதைகளைப் பிரித்து இரண்டு அல்லது மூன்று தவணைகளில் நாற்றுவிடுவது சிறந்ததாகும்.

  நடவு முறை: நடவுக்கு முன் அடியுரமாக ஏக்கருக்கு 12 கிலோ தழைச் சத்து தரவல்ல 26 கிலோ யூரியா, 12 கிலோ மணிச்சத்து தரவல்ல 75 கிலோ சூப்பர் பாஸ்பேட், 12 கிலோ சாம்பல் சத்து தரவல்ல 20 கிலோ மூரியேட் ஆஃப் பொட்டாஷ் இட்டு நடவு செய்ய வேண்டும்.

  15 செ.மீ.க்கு 15 செ.மீ. இடைவெளியில் குத்துக்கு 2 நாற்றுகள் வீதம் ஒரு சதுர மீட்டருக்கு 45 குத்துகள் இருக்குமாறு நடவு செய்ய வேண்டும்.

  மேலுரமாக நடவு செய்த 20ஆம் நாள் களையெடுத்து பயிர் நன்கு வாடும் நிலையில் 12 கிலோ தழைச்சத்து தரவல்ல 26 கிலோ யூரியா இட்டு நீர்ப் பாசனம் செய்ய வேண்டும். குலைநோய் தென்பட்டால் உடனடியாகப் பயிர்ப் பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

  விவசாயிகள் தவறாமல் இத்தகைய நடவடிக்கைகளைப் பின்பற்றி ராகி சாகுபடியில் ஈடுபடுமாறு வேளாண் இணை இயக்குநர் பொ. மனோகரன், துணை இயக்குநர் ந.மேகநாதன் ஆகியோர் கேட்டுக் கொண்டுள்ளனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai