சுடச்சுட

  

  தேசிய தோட்டக்கலை இயக்கத்தில் விவசாயிகள் பங்கேற்கலாம்

  By dn  |   Published on : 27th June 2013 12:22 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  agriculture

  தேசிய தோட்டக்கலை இயக்கத்தில் பங்கேற்று பயன்பெறலாம் என்று திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி தோட்டக்கலை உதவி இயக்குநர் தி.சு. பால சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

  இது தொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மாநில அரசும், மத்திய அரசும் இணைந்து தேசிய தோட்டக்கலை இயக்கம் என்ற திட்டத்தைச் செயல்படுத்துகிறது. இத் திட்டத்தின்கீழ் பழமரச் சாகுபடி, மலர்ச் சாகுபடி ஆகியவற்றை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு மானியத் திட்டங்களை செயல்படுத்துகின்றன.

  பழமரச் சாகுபடி: பல்லாண்டுப் பயிர்களான மா, எலுமிச்சை மற்றும் திசு வாழை சாகுபடியை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. சாதாரண முறையில் 10 மீட்டருக்கு 10 மீட்டர் இடைவெளியில் மா நடவு செய்ய, முழு மானியத்தில் ஹெக்டேருக்கு 100 ஒட்டு மாங்கன்றுகளும், உரங்கள், பயிர்ப் பாதுகாப்பு மருந்துகள் ஆகிய இடுபொருள்களும், பராமரிப்பு மானியமும் வழங்கப்படும்.

  மாவில் நெருக்கிநட்டு, நிறைய மகசூல் காணும் வகையில் 5 மீட்டருக்கு 5 மீட்டர் இடைவெளியில் மா நடவு செய்ய முழு மானியத்தில் ஹெக்டேருக்கு 400 ஒட்டு மாங்கன்றுகளும், உரங்கள், பயிர்ப் பாதுகாப்பு மருந்துகள் ஆகிய இடுபொருள்களும், பராமரிப்பு மானியமும் வழங்கப்படும்.

  எலுமிச்சை நடவு: 6 மீட்டருக்கு 6 மீட்டர் இடைவெளியில் மா நடவு செய்ய முழு மானியத்தில் ஹெக்டேருக்கு 275 எலுமிச்சை கன்றுகளும், உரங்கள், பயிர்ப் பாதுகாப்பு மருந்துகள் ஆகிய இடுபொருள்களும், பராமரிப்பு மானியமும் வழங்கப்படும்.

  2-ஆம் ஆண்டு பராமரிப்பு- இத் திட்டங்களில் முறையாக நன்முறையில் பராமரிக்கும் விவசாயிகளுக்கு 2-ஆம் ஆண்டில் கன்றுகள், உரங்கள், பயிர் பாதுகாப்பு மருந்துகள் ஆகிய இடுபொருள்களுடன் பராமரிப்பு மானியமும் வழங்கப்பட்டு, தொடர் பராமரிப்புக்கும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

  திசு வாழை சாகுபடி: திசு வாழை சாகுபடியை ஊக்குவிக்கும் வகையில் திசு வாழை கன்றுகளை வாங்கி நட்டு சாகுபடி செய்ய ஹெக்டேருக்கு ரூ.31,200 மானிய உதவி வழங்கப்படவுள்ளது.

  இத் திட்டங்களின்கீழ் பயன்பெற விவசாயிகள் தங்கள் நிலத்தின் கணினி பட்டா, பழமரங்கள் நடவுள்ள பரப்புக்கு தரிசு என்று குறிப்பிடப்பட்ட அடங்கல், தங்கள் முகவரி மற்றும் அடையாளத்தைக் குறிப்பிடும் குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை நகல், தங்கள் பாஸ்போர்ட் அளவு புகைப்படம், நடப்பில் உள்ள தங்கள் வங்கி கணக்குப் புத்தகத்தின் முதற்பக்க நகல் ஆகியவற்றை தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தில் வழங்கி பதிவு செய்து கொள்ளலாம்.

  மலர்சாகுபடி: கேந்தி (செண்டு மல்லி), கோழிக் கொண்டை போன்ற உதிரி மலர் சாகுபடியை ஊக்குவிக்கும் வகையில் சிறு, குறு விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு ரூ.12 ஆயிரம் மானிய உதவி வழங்கப்படுகிறது. உரங்கள் பயிர் பாதுகாப்பு மருந்துகள் போன்ற இடுபொருள்கள் ரொக்கப் பராமரிப்பு மானியம் என்று இந்த மானிய உதவி வழங்கப்படும் என்றார் அவர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai