Enable Javscript for better performance
கறவை மாடுகளுக்கு ஏற்படும் மடி நோய்: கட்டுப்படுத்தும் முறைகள்- Dinamani

சுடச்சுட

  

  கறவை மாடுகளுக்கு ஏற்படும் மடி நோய்: கட்டுப்படுத்தும் முறைகள்

  By dn  |   Published on : 07th November 2013 01:01 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  cow

  தமிழகத்தில் ஜெர்ஸி மற்றும் ஹோல்ஸ்டின் பிரிசியன் கலப்பின பசுக்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளன. இத்தகைய மாடுகள் அதிக பால் கொடுக்கும். நாட்டு பசுக்களைக் காட்டிலும் நோய் எதிர்ப்புத் திறன் குறைவாக இருப்பதால், தொற்று நோய்களால் அதிகம் பாதிக்கப்படுகின்றன. இதனால், மாடு வளர்ப்போர் நஷ்டம் அடைகின்றனர்.

  இவற்றுக்கு வரக்கூடிய நோய்களில் மிகவும் முக்கியமானது மடி நோயாகும். இந் நோயால் ஆண்டுக்கு சுமார் ரூ. 6,010 கோடி விவசாயிகளுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது என அறியப்பட்டுள்ளது.

  இந் நோய் வராமல் தடுத்து மாடுகளைப் பாதுகாப்பது குறித்து, தேனி உழவர் பயிற்சி மையப் பேராசிரியர்கள் இரா. உமாராணி, நா.ஸ்ரீ. பாலாஜி மற்றும் அ. செந்தில்குமார் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

  மடிநோய்க்கான காரணங்கள்: நுண்ணுயிரி, நச்சுயிரி மற்றும் பூஞ்சைக் கிருமிகள் பால் உற்பத்தி செய்யும் சுரப்பு திசுக்களைப் பாதித்து, மடி நோயை உண்டாக்குகின்றன. இதில், பசுவின் மடி ஒரு பகுதி அல்லது அனைத்துப் பகுதிகளிலும் தாக்குதலுக்கு உள்ளாகுகின்றன. நோய்க் கிருமிகள் பசுவின் மடியில் பால் சுரப்பிகளைத் தாக்குவதால், பசு வளர்ப்பவர்களுக்கு பெரும் பொருள் சேதத்தையும் ஏற்படுத்துகின்றன. தரையின் சுத்தம், மடியின் சுத்தம், ரத்தம் மூலமாகவோ அல்லது காம்பின் துவாரத்தின் வழியாகவோ மடியை அடைந்து மடி நோய் ஏற்படுகிறது.

  மேலும், மடியில் ஏற்படும் காயத்தின் மூலம் இந் நோய் பரவுகிறது. கறப்பவரின் சுத்தமற்ற கை மற்றும் மடிநோய் தாக்கிய மாட்டின் பாலை கறந்த பிறகு, மற்றொரு மாட்டின் பாலைக் கறக்கும்போது, இந் நோய் பரவுகிறது.

  தவறான முறையில் பால் கறந்தாலும், அதாவது கட்டை விரலை மடக்கி பால் கறந்தாலும் மடி நோய் தாக்கும்.

  மூன்று அல்லது நான்கு ஈத்துக்கு மேல் உள்ள மாடுகள், எளிதில் காயம் ஏற்படவுள்ள நீண்ட காம்புகள் மற்றும் தொங்கு மடியில் மடிநோய் தாக்குவதற்கு வாய்ப்புகள் அதிகம்.

  பொதுவாக சுகாதாரமற்ற தரை மற்றும் கறந்தவுடன் மாடு தரையில் படுக்கும்போது அசுத்தமான தரை மூலம் மடிக்காம்பு துவாரம் வழியாக நுண்ணுயிரிகள் மடிக்குள் சென்று, பல்கிப் பெருகி மடி நோயை உண்டாக்கும்.

  நோயின் அறிகுறிகள்: நோய் பாதிக்கப்பட்ட மடியின் பாகம் பெரிதாகி, வீங்கி சிவந்தும் காணப்படும். பொதுவாக ஒன்று அல்லது இரண்டு காம்புப் பகுதிகள் பாதிக்கப்படுகின்றன. வீக்கமும், மடி சூடாகவும், தொட்டால் மாட்டுக்கு மிகவும் வலியும் ஏற்படும். எனவே, மாடு மடியை தொட விடாது உதைக்கும். பாதிக்கப்பட்ட காம்பில் மற்ற காம்புகளை விட பாலின் அளவு குறைவாக இருக்கும். பால் திரியாகவும், மஞ்சள் நிறமாகவும், ரத்தம் கலந்தும், சீழ் கலந்தும் வரும். நோயின் தன்மை அதிகரித்து விட்ட நிலையில், மடியின் பாகம் கெட்டியாக மாறி, பால் சுரக்கும் தன்மையை முழுவதுமாக இழந்து விடும்.

  சிகிச்சை முறைகள்: மடிநோயை ஆரம்ப நிலையில் கண்டறிந்து மருத்துவம் செய்யாவிட்டால், மடியின் பால் சுரப்பி நிரந்தரமாகக் கெட்டு, பால் சுரக்கும் தன்மையை பசு இழந்துவிடும். பின்னர், பாதிக்கப்பட்ட மடியைக் குணப்படுத்துவது இயலாத காரியமாகி விடும். எனவே, நோய் அறிகுறிகள் தென்பட்டவுடன் பாதிக்கப்பட்ட மாட்டைப் பிரித்து, கால்நடை மருத்துவரின் மூலம் நுண்ணுயிர்க் கொல்லி மருந்தினைப் பயன்படுத்தி குணப்படுத்தலாம்.

  தடுப்பு முறைகள்: தொழுவத்தை எப்போதும் தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும். அயொடொபார், சோடியம் ஹைப்போ குளோரைட், குளோர்ஹெக்சிடின் போன்ற கிருமி நாசினி மருந்துகளைப் பயன்படுத்த வேண்டும். பால் கறப்பதற்கு முன், கறப்பவர்கள் தங்களது கைகளை சோப்பு அல்லது கிருமி நாசினி போட்டு கழுவிய பின்னரே கறக்க வேண்டும்.

  பால் கறப்பதற்கு முன்பும், பின்பும் ஒரு லிட்டர் தண்ணீருக்கு ஒரு கிராம் பொட்டாசியம் பெர்மாங்கனேட் என்ற அளவில் கலக்கப்பட்ட தண்ணீரில் மடியை நன்கு கழுவ வேண்டும். பால் கறக்கும் இயந்திரத்தை சுத்தம் செய்து வைக்க வேண்டும். கறவை நேரத்தை ஒழுங்காகக் கடைபிடிக்க வேண்டும். மடியில் பால் தேங்கக் கூடாது. பாலை முற்றிலும் கறந்து விட வேண்டும். சினை மாட்டின் மடியை தினமும் கண்காணிக்க வேண்டும்.

  கறவை காலம் முடிந்தவுடன், கால்நடை மருத்துவர் உதவியுடன் காம்புக்குள் நுண்ணுயிர்க் கொல்லி மருந்தைச் செலுத்த வேண்டும். நோயுற்ற பசுவை இறுதியில் பால் கறக்க வேண்டும். மேலும், நோயுற்ற காம்பை இறுதியில் கறக்க வேண்டும். கறந்த பாலை கிருமி நாசினி மருந்து கலந்து அப்புறப்படுத்த வேண்டும். அடிக்கடி மடிநோய் தாக்கும் மாடுகளை, பண்ணையில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும்.

  மடியில்லையேல் வருமானம் இல்லை. எனவே, கறவை மாடுகள் வளர்ப்பின் மூலம் அதிக லாபம் பெற மடி நோயை வராமல் தடுக்க வேண்டியது மிகவும் அவசியம். நோய் வந்த பின் மருத்துவம் செய்து காப்பாற்றுவதைக் காட்டிலும், மடி நோய் வராமல் இருக்க வேண்டிய அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு, மாடுகளைப் பராமரித்து வருவதே சாலச் சிறந்தது என்றனர்.

  இதுகுறித்து மேலும் தகவல் பெற விரும்புவர்கள், தேனி உழவர் பயிற்சி மையம் 04546-260047 என்ற எண்ணில் தொடர்பு

  கொள்ளலாம்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai