விழுப்புரம் அருகே பிடகாத்தைச் சேர்ந்த முன்னோடி விவசாயி மோ.அறிவழகன் சொட்டு நீர் பாசனத்தை பயன்படுத்தி கூடுதல் மகசூல் பெற்று சாதனை படைத்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மிளகாய் பயிரிடப்படுகிறது. பெரும்பாலும் மிளகாய் பயிரிடும் விவசாயிகள் பாரம்பரிய வாய்க்கால் முறைப்படிதான் பயிர் செய்கின்றனர். ஆனால் தற்போது மிளகாய் சாகுபடியில் தோட்டக் கலைத் துறை நவீன முறையை புகுத்தியுள்ளது.
இந்த முறையில் மிளகாய் சாகுபடி செய்தால் அதிக மகசூல் கிடைக்கும் என்று விவசாயத் துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
முன்னோடி விவசாயி: விழுப்புரம் மாவட்டம், கோலியனூர் ஒன்றியம், பிடாகம் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி மோ.அறிவழகன். இயற்பியல் பாடத்தில் பி.எஸ்.சி. பட்டம் பெற்றுள்ள இவர், கடந்த 2012-ம் ஆண்டு யு.எஸ். 344 என்ற வீரிய ஒட்டு ரக மிளகாயை சொட்டு நீர் பாசன முறையில் பயிர் செய்தார்.
குழிநாற்று முறையில் மிளகாய் நாற்றுகளை பராமரித்து பின்னர் அதை நடவு செய்தார். மிளகாய்க்கு தேவையான உரங்களை சொட்டு நீர் பாசன முறையில் நீரில் கலந்து அளித்தார். இதனால் அவருக்கு அதிக மகசூல் கிடைத்தது.
இதுகுறித்து விவசாயி அறிவழகன் கூறியது:
சாதாரண முறையில் மிளகாய் சாகுபடி செய்த போது எனக்கு ஏக்கருக்கு 10,890 நாற்றுகள் தேவைப்பட்டன. ஆனால் சொட்டு நீர் பாசன முறையில் 4,444 நாற்றுகள் மட்டுமே தேவைப்பட்டன. களை நிர்வாகமும் இந்த முறையில் மிகவும் குறைவாகவே தேவைப்பட்டது.
3 மடங்கு வருமானம்: சாதாரண முறையில் ஏக்கருக்கு 9 மாதங்களில் 20 டன் மிளகாய் கிடைத்தது. ஆனால் சொட்டு நீர் பாசன முறையில் ஏக்கருக்கு 45 டன் மிளகாய் கிடைத்துள்ளது. சாகுபடி செலவு சாதாரண முறையில் 9 மாதங்களுக்கு ரூ.1,25,000 ஆனது. ஆனால் இம் முறையில் ரூ.3 லட்சத்து 15 ஆயிரம் ஆனது. செலவு அதிகம் ஆனாலும் நிகர வருமானம் 3 மடங்கு அதிகம் கிடைக்கிறது. சாதாரண முறையில் ரூ.2.75 லட்சம் வருமானம் கிடைத்து. ஆனால் சொட்டுநீர் பாசனத்தை பயன்படுத்தி நவீன முறையில் பயிர் செய்தபோது ரூ.9 லட்சம் வருமானம் கிடைத்தது. இன்னும் அறுவடை முடியாததால் மேலும் 2 டன் அளவுக்கு மிளகாய் கிடைக்கும்.
இந்த வீரிய ஒட்டு ரக மிளகாய் சாதாரண மிளகாய் போன்றே இருக்கும். ஆனால் அதிக மகசூல் கிடைக்கும். தரமாகவும் இருக்கும். கோலியனூர் வட்டாரத்தில் உள்ள மற்ற விவசாயிகளும் அரசின் மானிய உதவியுடன் சொட்டு நீர் பாசனத்தை அமைத்து, மிளகாய் சாகுபடி செய்தால் அதிக பலன் கிடைக்கும் என்பதில் சந்தேகமில்லை என்றார்.
நீர் சேமிப்பு: இதுகுறித்து தோட்டக்கலை உதவி இயக்குநர் க.வீரசாமி கூறுகையில், சொட்டு நீர் பாசன முறையில் பயிர் செய்வதன் மூலம் நாற்றுக்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கும்.
அதேபோல் 40 சதவீத அளவுக்கு நீரையும் சேமிக்க முடியும். நீரை சேமிப்பதன் மூலம் கூடுதல் பரப்பில் சாகுபடி செய்யலாம் என்றார்.