
நீர்வள நிலவளத் திட்டத்தின் கீழ் வேளாண்மை பொறியியல் துறை மூலம் பண்ணைக் குட்டைகளில் மீன் குஞ்சுகள் வளர்க்க அரசு மானியம் வழங்குகிறது.
மானிய உதவிகள்: பண்ணைக்குட்டையில் வளர்ப்பதற்கான இளம் மீன்குஞ்சுகள் 30 ஆயிரம் எண்ணிக்கையில் கொள்முதல் செய்ய ரூ.6 ஆயிரம் மானியம் வழங்கப்படும். மீன் தீவனத்துக்காக ரூ.3 ஆயிரம் வழங்கப்படும்.
இளம் மீன்குஞ்சுகளை 45 நாள்கள் வரை பண்ணைக் குட்டைகளில் விரலிகளாக வளர்த்து ரூ.18 ஆயிரம் வரை லாபம் ஈட்டலாம். மேலும், விரலிகள் அறுவடை செய்த பின் மீன் வளர்ப்பு மேற்கொள்வதன் மூலம் கூடுதல் லாபம் ஈட்டலாம்.
நில மீன் விதை வங்கி அமைத்தல்: நில மீன் விதை வங்கியில் 3 நாற்றாங்கால் குளங்கள், 6 மீன் வளர்ப்பு குளங்கல், தன்னிலைப்படுத்தும் தொட்டி, சிப்பக் கூடம் ஆகியவை ரூ.2.55 லட்சத்தில் அமைத்துக் கொடுக்கப்படும். மேலும், ரூ.15 ஆயிரம் மதிப்புள்ள பண்ணை உபகரணங்கள் மானியமாக வழங்கப்படும். முதலாம் ஆண்டு உள்ளீட்டு மானியமாக ரூ.18 ஆயிரம் மதிப்புள்ள நுண் மீன்குஞ்சுகள், ரூ.12 ஆயிரம் மதிப்புள்ள மீன் தீவனம் ஆகியவை மானியமாக வழங்கப்படும். இந்த இரு திட்டங்களிலும் பயன்பெற விரும்பும் விவசாயிகள் மீன் வளத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தை நேரில் தொடர்பு கொள்ளலாம் என திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் மு. கருணாகரன் தெரிவித்தார்.