சுடச்சுட

  
  sugarcane

  நீடித்த நிலையான கரும்பு சாகுபடி (எஸ்.எஸ்.ஐ.) எனப்படும் நவீன தொழில் நுட்பத்தின் மூலம் கரும்பு சாகுபடி செய்தால் இரண்டரை மடங்கு மகசூல் கிடைக்கும் என விவசாயத் துறை அதிகாரிகள் யோசனை தெரிவிக்கின்றனர்.

  விழுப்புரம் மாவட்டத்தில் கரும்பு மிக முக்கியமான பணப்பயிர். மாவட்டத்தில் 7 சர்க்கரை ஆலைகள் உள்ளன. இவை மட்டும் இல்லாமல் வெளி மாவட்டத்தில் உள்ள 6 சர்க்கரை ஆலைகளுக்கும் கரும்பு அனுப்பப்படுகிறது. கரும்புக்கான தேவை அதிகம் இருப்பதால் இம் மாவட்டத்தில் 1,20,000 ஹெக்டேரில் கரும்பு சாகுபடி செய்யப்படுகிறது.

  சாதாரண முறையில் நடவு செய்வதன் மூலம் ஒரு ஏக்கருக்கு 30 முதல் 40 டன் வரை விவசாயிகள் மகசூல் பெறுகின்றனர். ஆனால் எஸ்.எஸ்.ஐ. எனப்படும் நீடித்த நிலையான கரும்பு சாகுபடி முறையில் நடவு செய்வதன் மூலம் ஒரு ஏக்கருக்கு 70 முதல் 80 டன் வரை மகசூல் கிடைக்கும்.

  சாதாரண முறையில், ஒரு ஏக்கருக்கு கரும்பு பயிர் செய்வதற்கு 30 ஆயிரம் கரணைகள் தேவைப்படும். 2-3 அடி இடைவெளியில் நடுவார்கள். ஆனால் நவீன முறையில் ஏக்கருக்கு 5 ஆயிரம் நாற்றுகள் இருந்தால் போதுமானது. குறைந்தது 5 அடி இடைவெளியில் நாற்றுகளை நட வேண்டும். தண்ணீர் தேவையும் மிகக் குறைவு. குறைந்த அளவு ஈரப்பதம் இருந்தாலே போதுமானது. காற்று மற்றும் சூரிய ஒளி புகுவதற்கான சாத்தியக் கூறுகள் அதிகம்.

  நவீன முறையில் கரும்பு சாகுபடி செய்ய சொட்டு நீர்ப் பாசனம் அவசியம். சொட்டு நீர்ப் பாசனத்தை பயன்படுத்துவதன் மூலம் 40 சதவீத தண்ணீரை சேமிக்க முடியும். மேலும் சொட்டு நீர்ப் பாசனம் மூலம், நீரில் கரையும் உரங்களையும் பயிருக்கு விநியோகிக்க முடியும். வேலை ஆள்களுக்கான தேவையும் குறைகிறது.

  இதுகுறித்து விவசாயத் துறை இணை இயக்குநர் இர.சக்கரவர்த்தி கூறுகையில், அரசு சொட்டு நீர் பாசனம் அமைக்க சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியம் அளிக்கிறது. பெரு விவசாயிகளுக்கு 75 சதவீத மானியம் அளிக்கப்படுகிறது. இதேபோல் ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள நீரில் கரையும் உரங்களும் மானிய விலையில் வழங்கப்படுகின்றன.

  இத் திட்டத்தை செயல்படுத்துவதில் விழுப்புரம் மாவட்டம் முன்னோடி மாவட்டமாக உள்ளது. இந்த நீடித்த நவீன கரும்பு சாகுபடி திட்டத்தில் ஊடு பயிராக வேறு சில பயிர்களை பயிரிட முடியும். இதனால் கரும்பு மகசூல் பாதிக்காது. விவசாயிகள் கூடுதல் லாபம் பெறலாம் என்றார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai