சுடச்சுட

    
    amla

    சாகுபடியில் தற்போது காணப்படும் நோயைக் கட்டுப்படுத்தும் முறையை பின்பற்றுவதன் மூலம் நிறைவான லாபம் பெற்று பயனடையலாம் என விவசாயிகளுக்கு தோட்டக்கலைத் துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.

    திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநர் தி.சு. பாலசுப்பிரமணியன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: நெல்லி நீண்ட ஆயுளையும், நிறைவான இளமையும் தரவல்லது. எனவேதான் அவ்வைக்கு அதியமான் நெல்லிக் கனியை பரிசாக வழங்கினான் போலும். தற்போது காய்ப்புப் பருவத்தில் உள்ள நெல்லியில் காணப்படும் பல்வேறு பூச்சி நோய்களை முறையாகக் கட்டுப்படுத்தி மகசூல் இழப்பைத் தவிர்க்கலாம்.

    பட்டைத் துளைப்பான்: போதிய பராமரிப்பு இல்லாத மரங்களை இப்பூச்சித் தாக்கும். ஏப்ரல் மாதத்தில் இதன் தாக்குதல் அதிகரிக்க வாய்ப்புள்ளது. தாய் அந்துப்பூச்சி மரப்பட்டையின் பள்ளம் மற்றும் காயம்பட்ட இடத்தில் முட்டையிடும். எனவே மரப்பட்டையில் அரிவாளைக் கொண்டு குத்துதல் போன்ற மூலம் காயம் ஏற்படாமல் பாதுகாக்க வேண்டும்.

    புழு வெளியாகி துளைத்து உள்ளே செல்லும். இதன் தாக்குதலால் கிளைகளின் வளர்ச்சி தடைபடும். மகசூல் பருவங்களில் பூ பிடிப்பது குறையும். தாக்குதல் தீவிரமானால் கிளைகள் காய்ந்து மரமே

    இறக்கக் கூடும். தாய் அந்து இலைக் கோணங்களில் முட்டையிடுவதால் துவாரமும் கிளைப் பிரியும் கோணங்களில் காணப்படும்.

    கட்டுப்படுத்துதல்: காய்ந்த தாக்கப்பட்ட பகுதிகளை அகற்றித் தோட்டத்தை சுத்தமாகப் பராமரிக்க வேண்டும். விளக்குப்பொறி வைத்து தாய் அந்துப் பூச்சிகளைக் கட்டுப்படுத்தலாம். ஈரமான கழிவுகள் இருக்கும்போது, துளைக்குள் முனை வளைந்த கம்பி செலுத்தி, புழுவை வெளியே எடுத்து அழிக்கலாம். உயிரியல் பூஞ்சாணக் கொல்லி பெவேரியா பேசியானா தெளித்துக் கட்டுப்படுத்தலாம்.

    சேதம் அதிகமாகும்போது, துளைகளில் பஞ்சில் 5 மிலி டைகுளோர்வாஸ் மருந்தை நனைத்து, உள்ளே வைத்து துளையை மண்கொண்டு அடைக்க வேண்டும்.

    தண்டு வீங்கி நோய்: இந்நோயால் செடிகளிலும் மரங்களிலும் தண்டு வீங்கி முடிச்சுப் போல காணப்படும். இதனால் வளர்ச்சி பாதிக்கப்பட்டு பூ காய் பிடிப்பது பாதிக்கப்படும். தொடர்ந்து தாக்குதல் தென்பட்டால் மானோகுரோட்டோபாஸ் மருந்தை ஒரு லிட்டருக்கு 1.5 மி.லி வீதம் கலந்து 15 தினங்கள் இடைவெளியில் இரு முறை தெளிóக்க வேண்டும்.

    பழத்துளைப்பான்: இந்த புழுவின் தாக்குதல் காய்ப்பிடிப்பு பருவத்தில் காணப்படும். பழுப்பான கருநீல நிற வண்ணத்துப்பூச்சி வெள்ளைநிற முட்டையை இளம் காய்களில் தனித்தனியாக இடுகிறது. முட்டையில் இருந்து வெளிவரும் புழு, பழத்தை துளைத்து விதையை உண்டு சேதப்படுத்தும். இதனால் பழங்கள் தரம் குறைந்து அழுகி வெம்பி விழுந்து விடும். இது நேரிடையாக மகசூல் இழப்பை ஏற்படுத்தும்.

    நெல்லி மரங்களுக்கு அருகில் கொய்யா, மாதுளை

    பயிரிடுவதைத் தவிர்க்க வேண்டும். தாக்கப்பட்ட பழங்களைச் சேகரித்து அழிக்க வேண்டும். டிரைகோகிரம்மா ஒட்டுண்ணிகளை ஏக்கருக்கு 1 லட்சம் வீதிம் விட்டு பழத்துளைப்பான் முட்டைகளை அழிக்கலாம். பூ பிடிக்கும் காலங்களில் வேப்பங்கொட்டைச் சாறு 5 சதவிகிதம் அல்லது வேப்பெண்ணெய் 2 சதவிகிதம் அல்லது வேம்பு சார்ந்த மருந்தை 15 தினங்கள் இடைவெளியில் 4 முறை தெளிக்க வேண்டும். தாக்குதல் அதிகரிக்கும்போது, ஒரு லிட்டர் தண்ணீருக்கு 1.5 மிலி மனோகுரோட்டோபாஸ் கலந்து தெளித்துக் கட்டுப்படுத்தலாம்.

    தாக்கும் நோய்கள்: பழங்களில் சிறு கரும்துரு போன்ற புள்ளிகள் முதலில் தோன்றிப் பின் வளையம்போல் வட்டமாக உருவாகும். இவை இணைந்து பழத்தின் பெரும்பகுதி கருப்பாக மாறிவிடும். நோய் தாக்குதல் இலைகளில் தோன்றும்போது, சிவந்த பழுப்பு நிற துரு புள்ளிகள் சிதறியது போன்றோ அல்லது கூட்டமாக சேர்ந்தோ காணப்படும்.

    தரு நோய் இலைகளைத் தாக்கினால் பழங்களில் தாக்குதல் இருக்காது. அதுபோல பழங்களைத் தாக்கினால் இலைகளில் தாக்குதல் இருக்காது. நோயினை நனையும் கந்தகம் மருந்தை ஒரு லிட்டர் நீருக்கு 5 கிராம் வீதம் கலந்து தெளித்து கட்டுப்படுத்த வேண்டும்.

    பறவைக்கண் புள்ளி நோய்: இலைகளில் வட்ட வடிவ பழுப்பு நிறப்புள்ளிகளில் மஞ்சள் நிற விளிம்புகளுடன் தோன்றும். பழங்களில் உள்குவிந்த திவலைகள் ஏற்பட்டு பின்னர் பழுப்பாகி வட்ட வரி வளையங்களாக மாறும். தாக்குதல் தீவிரமாகும்போது கனிகள் சுருங்கி அழுகிவிடும். நோயை ஒரு லிட்டர் நீருக்கு 2 கிராம் மாங்கோசெப் அல்லது ஒரு கிராம் கார்பண்டாசிம் கலந்து தெளித்து கட்டுப்படுத்தலாம்.

    வினையியல் குறைபாடு: கனிகளின் வெளிப்புறம் நன்கு தோற்றமளித்தாலும் உள் பகுதிகளில் தீய்ந்த பழுப்பு நிறச் சதைப்பகுதி காணப்படும். பின் கரும்பழுப்பாகி கடின பிசின்போல் மாறிவிடும். என்.ஏ. 6 மற்றும் என்.ஏ. 7 ரகங்களில் இக் குறைபாடு தோன்றுவதில்லை. இந்த குறைபாடுகளை ஒரு லிட்டர் நீருக்கு 4 கிராம் துத்தநாக சல்பேட், 4 கிராம் போராக்ஸ் கலந்து தெளித்துக் கட்டுப்படுத்தலாம்.

    இத்தகைய நோய் பாதுகாப்பு முறைகளை முறையாக பின்பற்றுவதன் மூலம் நெல்லி சாகுபடியில் நிறைவான மகசூல் பெற்று பயன்பெறலாம் என்றார் அவர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai