சுடச்சுட

  
  rat

  நெல் வயலில் எலிகளைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகளை அறிந்து அவற்றை முறையாகச் செயல்படுத்தினால் விவசாயிகளுக்கு ஏற்படும் மகசூல் இழப்பை முழுவதும் தடுக்க முடியும் என வேளாண் துறை அறிவுறுத்தியுள்ளது.

  இதுதொடர்பாக, வேளாண்மை உதவி இயக்குநர் எஸ். சத்தியஜோஸ் கூறியது:

  தமிழகத்தில் 4 வகையான வயல் எலிகள் காணப்படுகின்றன. நெல் வயலில் பொதுவாக விதை ஊன்றிய நாள்முதல் அறுவடை வரையிலும், விதை, தானியங்கள் சேமித்து வைக்கும் கிடங்குகளிலும் எலிகளால் தொடர்ந்து சேதமேற்படுகிறது. நெல் வயலில் கதிர் விளையும் தருணத்தில் நெற்கதிர்களைக் கத்தரித்து எலிகள் தங்களது வளைக்குள் கொண்டு சென்றுவிடுகின்றன.

  ஓர் இணை எலிகள் மூன்று ஆண்டுகளில் 35 கோடி எலிகளாகப் பெருகும். எலிகளின் எண்ணிக்கை அதிகமாகும்போது அதன் பாதிப்பும் அதிகமாகும். எனவே, எலிகளைக் கட்டுப்படுத்த ஒருங்கிணைந்த தடுப்பு முறைகளைக் கையாள வேண்டியது அவசியம்.

  பயிரிடத் தொடங்கும் முன்பு வயல் வரப்புகளில் காணப்படும் எலி வளைகளைத் தோண்டி அதில் ஒளிந்துகொண்டிருக்கும் எலிகளை அழிக்க வேண்டும். வயலில் வரப்புகளை முடிந்தளவு குறுகியதாக அமைக்க வேண்டும். இந்த வகையில் வரப்பு அமைத்தால் எலிகளால் வளைகள் அமைக்க முடியாது. எலிகள் மறைந்து தங்கிவாழ இடமளிக்கும் வைக்கோல் போர்களை வயல்களுக்கு அருகே வைக்கக்கூடாது.

  வயல்களிலும், வரப்புகளிலும் காணப்படும் களைகளையும் செடிகளையும் அப்புறப்படுத்த வேண்டும். இல்லையெனில் அவை எலிகளுக்கு மறைந்து வாழும் புகலிடமாக அமையும். கதிர் வெளிவரும் தருணத்தில் எலிகள் நடமாட்டம் அதிகமாகக் காணப்பட்டால் தஞ்சாவூர் வில் எலிக் கட்டிகளை ஹெக்டேருக்கு 50 என்ற அளவில் வரப்பிலிருந்து 3 மீட்டர் விட்டு கிட்டிக்கு கிட்டி 5 மீட்டர் இடைவெளியில் வைக்க வேண்டும். கிட்டியில் பயன்படுத்தப்படும் நெல் பொரியுடன் சிறிதளவு வறுத்த எள்பொடியையும் கலந்தால் எலிகள் அதிகளவில் கிட்டியில் விழும் வாய்ப்பு உள்ளது.

  எலிகளால் சேதம் அதிகமாகும்போது அவற்றைக் கட்டுப்படுத்த ஜிங் பாஸ்பைடு உள்ளிட்ட நச்சுமருந்துகளைப் பயன்படுத்த வேண்டும்.

  நெற்பொரி அல்லது வறுத்த கம்பு மாவு, சோள மாவு, கேள்வரகு மாவு 97 கிராம், தேங்காய் எண்ணெய் அல்லது சமையல் எண்ணெய் 1 கிராம், ஜிங் பாஸ்பைடு 2 கிராம் என்ற அளவில் நன்றாகக் கலந்து தேங்காய் மட்டைகளிலோ, சிரட்டைகளிலோ எலிகள் நடமாட்டம் அதிகமாகக் காணப்படும் பகுதிகளில் ஹெக்டேருக்கு 50 இடங்களில் வைக்க வேண்டும்.

  நச்சு கலந்த உணவு வைக்கப்படும் முன்பு 2 அல்லது 3 நாள்கள் நச்சு கலக்காத நல்ல உணவுப் பொருள்களை வைத்து எலிகள் அவற்றை தின்கின்றனவா என்பதை உறுதிசெய்த பின்னரே நச்சு மருந்து கலந்த உணவை வைக்க வேண்டும். மூன்று அல்லது 4 நாள்களுக்கு மட்டும் நச்சு உணவு வைத்துவிட்டு நிறுத்திவிட வேண்டும்.

  எலிகளைக் கட்டுப்படுத்துவது, மண் மாதிரி எடுப்பது போன்றவற்றை செயல்முறையில் விளக்கமளிக்க வீரவல்லூர் நயினார்காலனியில் வெள்ளிக்கிழமை விவசாயிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபறுகிறது. இக் கூட்டத்தில், வேளாண்மைத் துறை உயர் அலுவலர்கள் பயிற்சியளிக்கவுள்ளனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai