சுடச்சுட

  
  seed

  பிசான பருவ சாகுபடி அறுவடை நடைபெற்று வரும் இத் தருணத்தில் நெல் தரிசில் உளுந்து பயிரிடுவதன் மூலம் குறுகிய காலத்தில் அதிக மகசூல் பெறுவதுடன் மண்ணின் வளத்தை அதிகரிக்கச் செய்யலாம் என வேளாண்துறை தெரிவித்துள்ளது.

  சேரன்மகாதேவி வேளாண் உதவி இயக்குநர் ச. சத்யஜோஸ் வெளியிட்ட செய்திக் குறிப்பு: சேரன்மகாதேவி வட்டாரத்தில் பிசான பருவ சாகுபடி அறுவடை நடைபெற்று வருகிறது. இந்த தருணத்தில் நெல்தரிசில் உளுந்து பயிரிட்டு குறுகிய காலத்தில் அதிக மகசூல் பெறலாம். மேலும் மண்ணின் வளமும் அதிகரிக்கும்.

  காற்றில் சுமார் 75 சதவிகித நைட்ரஜன் உள்ளது. உளுந்து, பாசிப்பயிறு போன்ற பயறு வகைப் பயிர்கள், இந்த காற்றில் உள்ள தழைச்சத்தைக் கிரகித்து வளரும் செடிகளுக்கு தருவதுடன் மண்ணின் வளம் காக்க பெரிதும் உதவுகிறது. இந்த பயிறு வகைகள் வேர் முடிச்சுகளின் மூலம் தழைச்சத்தை மண்ணில் நிலை நிறுத்துகிறது.

  நமது உடல் வளர்ச்சிக்கும், அறிவாற்றலுக்கும் புரதச்சத்து மிகவும் அவசியமானது. இத்தகைய புரதச்சத்து பயறு வகை பயிரான உளுந்தில் அதிகளவு உள்ளது. நெல் போன்ற தானியப் பயிரைக் காட்டிலும் பயிறு வகைகளில் புரதச்சத்து இரண்டு, மூன்று மடங்கு அதிகமாக உள்ளது. மகசூல் அதிகரிக்கவும், மண்ணில் உள்ள அனைத்து சத்துக்களும் செடிகளுக்கு கிடைக்கவும் பயிர் சுழற்சி மிகவும் முக்கியம். தொடர்ந்து நெற்பயிர் சாகுபடி செய்வதற்குப் பதிலாக நெல் தரிசில் உளுந்து பயிரிடுவதன் மூலம் மண் வளத்தை மேம்படுத்தலாம்.

  தமிழகத்தில் உளுந்து, பாசிப்பயிறு போன்ற பயிறு வகைகளின் உற்பத்தி, தேவையை விடக் குறைவாக இருக்கிறது. தமிழகத்தின் தேவையைப் பூர்த்தி செய்ய பிற மாநிலத்தைச் சார்ந்து உள்ளோம். ஆகவே உளுந்து உற்பத்தியை அதிகரிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. உளுந்து சாகுபடியில் அதிக மகசூல் பெற சரியான விதை அளவும் விதை நேர்த்தியும் மிக முக்கியமாகும்.

  ரகமும், விதை நேர்த்தியும்: வம்பன் 3 உளுந்து ரகம் 65 முதல் 70 நாள்கள் வயதுடையது. மஞ்சள் தேமல் நோயை தாங்கி வளரக்கூடியது. ஒரு ஏக்கருக்கு தேவையான 8 கிலோ விதையுடன் ரைசோபியம் ஒரு பொட்டலம் (200 கிராம்) பாஸ்போ பாக்டீரியா (200 கிராம்) ஆகியவற்றை ஆறிய அரிசிக் கஞ்சியுடன் கலந்து விதை நேர்த்தி செய்து நிழலில் உலர்த்தி 24 மணி நேரத்திற்குள் 30 க்கு 10 செ.மீ. இடைவெளியில் விதைப்பு செய்து சதுர மீட்டருக்கு 33 செடிகளைப் பராமரிக்க வேண்டும்.

  இவ்வாறு விதை நேர்த்தி செய்வதால் அதிக முளைப்புத் திறன், அதிக மகசூல், தழைச்சத்து பூமியில் நிலைநிறுத்தப்படும். மண்ணில் உள்ள மணிச்சத்தைப் பயிர் எடுக்கும் திறன் அதிகரித்தல் போன்ற பயன் கிடைக்கும்.

  சுவர் இருந்தால்தான் சித்திரம் வரை முடியும் என்ற பழமொழிக்கு ஏற்ப வளமான உயிரோட்டம் உள்ள மண் வளம் இருந்தால்தான் தொடர்ந்து அதிக மகசூல் பெற முடியும். ஆகவே விவசாயிகள் நெல் தரிசில் உளுந்து பயிரிட்டு உளுந்து உற்பத்தியைப்

  பெருக்குவதுடன் மண்ணின் வளத்தை மேம்படுத்த வேண்டும் என்றார் அவர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai