சுடச்சுட

  
  pestcide

  தற்போது சாகுபடி செய்யப்பட்டுள்ள தர்பூசணி பயிரில் வாடல் நோயின் தாக்குதல் அதிகம் காணப்படுகிறது. முறையான நடைமுறைகளை கையாண்டு இந்நோயை கட்டுப்படுத்தினால் விவசாயிகள் கூடுதல் மகசூல் எடுக்க முடியும்.

  விழுப்புரம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் தர்பூசணி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. வளர்ச்சி நிலை, பிஞ்சு உருவாகும் நிலை, அறுவடை நிலை என பல்வேறு நிலைகளில் தர்பூசணி உள்ளது. இப் பயிரில் ஃபியூசேரியம் வாடல் நோய் என்ற பூஞ்சண நோயின் தாக்குதல் பரவலாகக் காணப்படுகிறது.

  பாதிக்கப்பட்ட பயிரின் வளர்ச்சிக் குன்றி செடிகள் காய்ந்து விடுவதால் பெருமளவில் மகசூல் இழப்பு ஏற்படுகிறது. இந் நோயின் பூஞ்சணம் மண்ணில் பல ஆண்டுகள் வரை தங்கி தர்பூசணி சாகுபடி செய்யும்போது அதன் வேர்கள் மூலம் உள்புகுந்து பாதிப்பை ஏற்படுத்துகிறது என்று விவசாய வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

  ஃபியூசேரியம் வாடல் நோய் தர்பூசணி பயிரின் எல்லா நிலைகளிலும் தென்படும். இந் நோயின் பொதுவான அறிகுறி, ஒரு பக்க வாடல் என்று அழைக்கப்படும். அதாவது பாதிக்கப்பட்ட செடிகள் முழுமையாக வாடாமல் ஒன்று அல்லது அதற்கும் மேற்பட்ட கொடிகள் மட்டுமே வாடி இருக்கும். இலைகள் துவண்டும், பழுப்பான நிறத்திலும், காய்ந்தது போன்றும் காட்சியளிக்கும்.

  வேருக்கு மேல் உள்ள கொடியை வெட்டிப் பார்த்தால் மஞ்சள் மற்றும் பழுப்பு நிறமான திசுக்களை காண முடியும். காய்ந்த செடியின் தண்டுகளில் வெண்மையான பஞ்சு போன்ற இழைகள் தென்படும். வெப்பநிலை 25 முதல் 27 டிகிரி செல்சியஸ் இருக்கும்போது இந் நோயின் அறிகுறி மற்றும் தாக்குதல் அதிக அளவில் இருக்கும்.

  இந் நோயை கட்டுப்படுத்துவது குறித்து வானூர் தோட்டக்கலை உதவி இயக்குநர் கு.அன்பழகன் கூறியது: தர்பூசணியில் ஃபியூசேரியம் வாடல் நோயைக் கட்டுப்படுத்த எந்த பூஞ்சணக் கொல்லியும் கிடையாது. பயிர் சுழற்சி முறை, நோய் எதிர்ப்புத் திறன் கொண்ட ரகங்களை சாகுபடி செய்தல் மற்றும் இதர தொழில்நுட்பங்களைக் கடைபிடிப்பதன் மூலமே இந் நோயை கட்டுப்படுத்த முடியும்.

  நோயை கட்டுப்படுத்தும் முறை: விதைப்புக்கு முன்பு ஒரு கிலோ விதையுடன் 2 கிராம் அளவில் கேப்டான் கலந்து விதை நேர்த்தி செய்ய வேண்டும். ஒரு லிட்டர் நீரில் பெவிஸ்டின் 1 கிராம் (அல்லது) பெனோமில் 1 கிராம் கலந்து நோயின் அறிகுறி தென்படும் செடிகளைச் சுற்றி ஊற்றலாம். சூடோமோனாஸ், ஃபுளூரசன்ஸ் உயிரியல் கட்டுப்பாட்டு காரணி 2.5 கிலோவை 50 கிலோ எருவுடன் கலந்து வயலில் இட்டு நீர் பாய்ச்சலாம்.

  இத்தொழில்நுட்பங்களைக் கடைப்பிடிப்பதன் மூலம் ஃபியோசேரியம் வாடல் நோயை கட்டுப்பாட்டில் வைக்கலாம்

  மேலும் தர்பூசணி அறுவடை செய்த பின்பு அதே நிலத்தில் தர்பூசணி, சாம்பல் பூசணி, கிர்னி போன்ற பயிர்களை மறுபடியும் சாகுபடி செய்வதை தவிர்த்து வேறு காய்கறி பயிர்களை சாகுபடி செய்ய வேண்டும் என்றார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai