Enable Javscript for better performance
பருத்தியில் காய்ப்புழுவை கட்டுப்படுத்தும் முறைகள்...- Dinamani

சுடச்சுட

    
    insect

    பருத்திச் செடியில் காணப்படும் காய்ப்புழு தாக்குதலை கட்டுப்படுத்துவதன் மூலம் முழுமையான சாகுபடி பெற முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் அம்பாசமுத்திரம் நெல் ஆராய்ச்சி நிலைய பூச்சியியல் துறை உதவிப் பேராசிரியர் கு. இளஞ்செழியன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் குறிப்பாக, கோவில்பட்டி வட்டாரத்தில் பருத்தி ரகமானது மானாவாரிப் பயிராகவும், இறவைப் பயிராகவும் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது பருத்திச் செடிகளில் உள்ள பூ மொட்டுகள் (சப்பைகள்) உதிர்ந்து காணப்படுகின்றன. பருத்தியை தாக்கும் காய்ப்புழுக்களே இதற்கு காரணம்.

    காய்ப்புழு தாக்குதலால் 30 முதல் 40 சதவிகிதம் வரை மகசூல் இழப்பு ஏற்படுகிறது.

    இவை பருத்தி தவிர மக்காசோளம், சூரியகாந்தி, பயறு வகைகள், தக்காளி போன்ற 181-க்கும் மேற்பட்ட பயிர்களையும், களைச் செடிகளையும் தாக்குகின்றன. இவை எல்லா மருந்துகளுக்கும், குறிப்பாக செயற்கை பைரித்தாய்டு மருந்துகளுக்கு எதிர்ப்பு தன்மையாகிவிட்டது.

    இளம்புழுவானது இலைகளை உண்கிறது. வளர்ச்சியடைந்த புழுவானது சப்பைகளையும், காய்களையும் துளையிட்டு உள்ளே உள்ள பகுதிகளை உண்கிறது. இது தனது தலையை மட்டும் உள்ளே நுழைத்து உள்ளே உள்ள பகுதிகளை உண்ணும். உடம்பானது காய்களுக்கு வெளியே தொங்கிக் கொண்டிருக்கும். பாதிக்கப்பட்ட சப்பைகளானது விரிந்திருக்கும். மேலும், செடிகளில் உள்ள பூ மொட்டுகள் (சப்பைகள்) உதிர்ந்துவிடும்.

    தாய் பூச்சியானது மஞ்சள் கலந்த வெண்ணிற முட்டைகளை தனித்தனியாக இலைகளின் மேற்பகுதியிலும், சப்பைகளின் மீதும் இடுகின்றன. முட்டையில் இருந்து வெளியே வரும் புழுவானது பச்சை, மஞ்சள் அல்லது பழுப்பு நிறத்தில் இருக்கும். புழு மண்ணுக்குள் சென்று கூட்டுப்புழுவாக மாறும். கூட்டுப்புழுவில் இருந்து வெளியே வரும் அந்துப்பூச்சியானது பழுப்பு நிறத்தில் இருக்கும்.

    கட்டுப்படுத்தும் முறைகள்: ஒரு ஹெக்டேருக்கு அமெரிக்கன் காய்ப்புழு இனக்கவர்ச்சி பொறி 12 என்ற அளவில் வைத்து அந்துப்பூச்சியை கவர்ந்து அழிக்கலாம். ஒரு ஹெக்டேருக்கு முட்டை ஒட்டுண்ணியான டிரைக்கோகிரம்மா கைலோனிஸ் 6.25 சிசி என்ற அளவில் 15 நாள் இடைவெளியில் விதைத்த 45ஆம் நாள்முதல் மூன்று முறை விட வேண்டும்.

    பூ பூக்கும் பருவத்தில் ஒரு ஹெக்டேருக்கு குளோர்ஆன்ட்ரனிலிபுரோல் 14.5 18.5 சதவிகிதம் எஸ்ஸி 150 மில்லி அல்லது புளுபென்டியமைடு 39.35 எஸ்ஸி 100-125 மில்லி அல்லது இன்டாக்சகார்ப் 14.5 இசி 500 மில்லி அல்லது லூபனூரான் 5.4 இசி 600 மில்லி அல்லது நோவலூரான் 10 இசி 1000 மில்லி அல்லது குளோர்பைரிபாஸ் 20 இசி 1250 மில்லி என்ற அளவில் கைத்தெளிப்பான் கொண்டு தெளிக்க வேண்டும்.

    காய் பிடிக்கும் பருவத்தில் ஒரு ஹெக்டேருக்கு குயினால்பாஸ் 25 இசி 2000 மில்லி அல்லது பைரகுளோபாஸ் 50 இசி 1500 மில்லி என்ற அளவில் தெளிக்க வேண்டும்.

    ஒரே மருந்தினை திரும்ப திரும்ப அடிக்காமல் சுழற்சி முறையில் தெளிக்க வேண்டும்.

    அடுத்த பருவத்தில் வயலில் தொடர்ச்சியாக பருத்தி பயிரிடுவதைத் தவிர்க்க வேண்டும். பயிர் சுழற்சி முறையைக் கடைப்பிடிக்க வேண்டும். மறுதாம்பு பயிர் விடுவதை தவிர்க்க வேண்டும். பரிந்துரைக்கப்பட்ட அளவுக்கு அதிகமாக தழைச்சத்து உரம் இடக்கூடாது.

    பொறிப்பயிராக கேந்திப்பூவை பயிரிட்டு அமெரிக்கன் காய்ப்புழுவின் அந்துப்பூச்சியை கவர்ந்து அதனுடைய முட்டையை சேகரித்து அழிக்க வேண்டும். மேற்கண்ட முறையை பின்பற்றி பருத்திச் செடியில் காய்ப்புழுத் தாக்குதலை கட்டுப்படுத்தலாம்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai