சுடச்சுட

    

    பருத்தியில் மகசூல் இழப்பைத் தடுக்க செய்ய வேண்டியது என்ன?

    By dn  |   Published on : 29th May 2014 12:23 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    cotton

    பருத்திப் பயிரில் பூச்சிகள் தாக்குதலைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகளைத் தவறாமல் பின்பற்றுவதன் மூலம் மகசூல் இழப்பைத் தவிர்த்து கூடுதல் லாபம் பெறலாம்.

     

    இளம்பருவம் (விதைத்த 50 நாள்கள் வரை): இப் பருவத்தில் தத்துப்பூச்சி, அசுவினி தாக்குதல் தென்படும். தத்துப்பூச்சி தாக்குதலால் பருத்தி இலைகள் மஞ்சள் நிறமாகி, ஓரங்கள் மடிவதுடன் இலைகள் உதிரும். அசுவினி தாக்கப்பட்ட பயிர்களின் தளிர் இலைகள் சிறிதாக தோன்றுவதுடன் இலைகள் கிண்ணம்போலக் குவியும்.

    தத்துப்பூச்சி, அசுவினியின் தாக்குதலைக் கட்டுப்படுத்த ஏக்கருக்கு மீத்தைல் டெமட்டான் 200 மி.லி. அல்லது வேப்பங்கொட்டைச் சாறு 5 சதவீதம் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றைத் தெளிக்கலாம்.

     

    காய்ப் புழுக்கள்: பருத்தியில் பூ, பிஞ்சுகள் உருவாகி காய் பிடிக்கும் தருணத்தில் காய்ப் புழுக்களின் தாக்குதல் காணப்படும். புள்ளிக் காய்ப் புழு, பச்சை அல்லது அமெரிக்கன் காய்ப் புழு, இளஞ்சிவப்புக் காய்ப் புழு போன்ற 3 வகை காய்ப் புழுக்கள் பருத்திக் காய்களைத் தாக்கி பயிருக்கு சேதம் விளைவிக்கும். புள்ளிக் காய்ப் புழுக்கள் பிஞ்சுக் காய்களைத் துளைத்தால் அவை செடியிலிருந்து உதிர்ந்துவிடும். முற்றுகிற காய்களைக் குடைந்து தின்பதால் உள்ளே இருக்கும் பஞ்சின் தரம் குறைந்து மகசூலும் குறையும்.

    பச்சை அல்லது அமெரிக்கன் காய்ப் புழு, பயிர்கள் பூக்கும் மற்றும் காய்க்கும் பருவத்தில் தாக்குதலை ஏற்படுத்தும். இவை காய்களுக்குள் தலையை மட்டும் நுழைத்து பஞ்சு, விதைகளைக் குடைந்து தின்னும்.

     

    காய் முதிரும் பருவங்கள்: இப் பருவத்தில் இளஞ்சிவப்பு காய்ப் புழுக்கள் பயிரைத் தாக்கும். புழுக்கள் தாக்கப்பட்ட பயிர்களில் மலர அல்லது விரிய வேண்டிய பூக்களின் இதழ்கள் விரியாமல் நுனிகள் ஒன்றுடன் ஒன்று ஒட்டப்பட்டு ரோஜா மலரின் மொட்டுகள்போல தோற்றம் அளிக்கும். அவ்வாறு உள்ள பூக்களைப் பிரித்துப் பார்த்தால் இளஞ்சிவப்பு காய்ப் புழு, மகரந்தம், சூல்பை ஆகியவற்றைத் தின்று சேதப்படுத்தியிருக்கும்.

    இதைக் கட்டுப்படுத்த ஏக்கருக்கு குளோர்பைரிபாஸ் 800 மில்லி அல்லது குயினால்பாஸ் 800 மி.லி., பாசலோன் ஒரு லிட்டர் அளவில் தேவையான நீருடன் கலந்து தெளிக்கலாம்.

     

    தண்டு மூக்கு வண்டு அல்லது மோதிரப் புழு: இப் புழுக்கள் பருத்தி விதைத்த 25 நாளிலிருந்து 90 நாள்கள் வரை தாக்குதலை ஏற்படுத்துவதுடன், அடித்தண்டில் வீக்கம் காணப்படும். செடிகளின் இடையே களை எடுக்கவோ, உரமிடவோ, நீர் பாய்ச்சும்போதும், பலத்த காற்று வீசும்போதும் தண்டின் வீங்கிய இடத்தில் செடிகள் முறிந்து சேதம் விளைவிக்கும்.

    இதைக் கட்டுப்படுத்த ஏக்கருக்கு 12 கிலோ கார்போபியுரான் குருணை மருந்தை செடிகளுக்கு அருகே இட்டு மண் அணைக்கலாம். அல்லது ஒரு லிட்டர் குளோர்பைரிபாஸ் மருந்தை தேவையான அளவு நீருடன் கலந்த கரைசலை தண்டுகள் நன்கு நனையும்படி தெளிப்பதன் மூலம் கட்டுப்படுத்தலாம்.

     

    காய் பிடிக்கும் மற்றும் முற்றும் பருவங்கள்: இப் பருவத்தில் புரோடீனியா புழுக்கள் பருத்தியில் தாக்குதல் ஏற்படுத்தும். புழுக்கள் தாக்கிய பயிரின் இலைகள் சல்லடைபோல் அரிக்கப்பட்டிருக்கும். இப் புழுக்களைக் கட்டுப்படுத்த ஏக்கருக்கு குயினால்பாஸ் 800 மில்லி, குனோர்பைரிபாஸ் 800 மில்லி இவற்றில் ஏதேனும் ஒன்றைத் தெளிக்கலாம்.

     

    ஒருங்கிணைந்த பூச்சி நிர்வாகம்: ஒவ்வொரு பூச்சிக்கும் தனித்தனியே நிர்வாகம் செய்வதைவிட ஒருங்கிணைந்த பூச்சி நிர்வாகம் செய்வதன் மூலம் பருத்தியைத் தாக்கும் பூச்சிகளை திறன்பட கட்டுப்படுத்தலாம். எனவே, பூச்சிக் கட்டுப்பாட்டு முறைகளைக் கடைப்பிடித்து பருத்தியில் ஏற்படும் பூச்சி நோய் தாக்குதலைக் கட்டுப்படுத்துவதன் மூலம் பருத்தி விவசாயிகள் சாகுபடி செலவைக் குறைத்து அதிக மகசூல் பெறலாம். மேலும், விவரங்களுக்கு அந்தந்தப் பகுதியில் உள்ள வேளாண் விரிவாக்க மையங்களையும், வேளாண் அலுவலர்களையும் தொடர்பு கொள்ளலாம்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai