பயறு வகைப் பயிர்களில் பூச்சி, நோய் கட்டுப்பாடு:வேளாண்மை அதிகாரி தகவல்

கோபி: பயறு வகைப் பயிர்களில் பூச்சி, நோய் மேலாண்மை குறித்து நம்பியூர் வேளாண்மை உதவி இயக்குநர் அ.நே.ஆசைத்தம்பி தெரிவித்துள்ளதாவது:
பயறு வகைப் பயிர்களில் பூச்சி, நோய் கட்டுப்பாடு:வேளாண்மை அதிகாரி தகவல்

கோபி: பயறு வகைப் பயிர்களில் பூச்சி, நோய் மேலாண்மை குறித்து நம்பியூர் வேளாண்மை உதவி இயக்குநர் அ.நே.ஆசைத்தம்பி தெரிவித்துள்ளதாவது:

தமிழகத்தில் ஒர் ஆண்டில் 2 லட்சம் டன் பயறு வகைகளான உளுந்து, பாசிப் பயறு, தட்டை, துவரை, கொள்ளு, அவரை, சோயாமொச்சை போன்றவை உற்பத்தி செய்யப்படுகின்றன. தேவையோ ஏழு லட்சம் டன்கள் ஆகும். தமிழக மகசூல் திறன் ஹெக்டேருக்கு 340 கிலோவாக உள்ளது. ஆனால், இந்திய சராசரி மகசூல் திறன் 620 கிலோவாக இருக்கிறது. எனவே, பயறு வகைகளில் மகசூல் மற்றும் மகசூல் திறனை அதிகரிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

இதில் மகசூல் குறைவுக்கும், பயறு சாகுபடிப் பரப்பு அதிகரிக்காமைக்கும் முக்கியக் காரணமாக இருந்து வருவது பூச்சி மற்றும் நோய்கள் ஆகும். சில முக்கிய பூச்சி, நோய்கள் குறித்து காண்போம்.

பயறு வகைகளைத் தாக்கும் பூச்சிகள்: பூ வண்டுகள், புள்ளிக்காய்ப் புழு, பச்சைக் காய்ப்புழு, கதிர் நாவாய்ப்பூச்சி, நீல வண்ணத்துப் பூச்சி ஆகியன முக்கியமானவையாகும். இதனை கீழ்க்கண்டவாறு எளிதில் கட்டுப்படுத்தலாம்.

கட்டுப்பாடு: பச்சைக் காய்ப்புழுவைக் கட்டுப்படுத்த என்.பி.வி கரைசல் ஒரு ஏக்கருக்கு 600 மில்லி தெளிக்கலாம்.

பூ மற்றும் காய் பிடிக்கும் சமயத்தில் 5 சதவீதம் வேப்பங்கொட்டை கரைசலை தெளிக்கலாம். (5 கிலோ வேப்பங்கொட்டையை தண்ணீரில் ஒரு நாள் ஊற வைத்து நன்கு அரைத்து அதை ஒரு துணியில் வடிகட்டி 100 லிட்டர் தண்ணீர் சேர்த்து இந்தக் கரைசலை தயார் செய்யலாம்)

பத்து லிட்டர் தண்ணீரில் 7.5 மில்லி இண்டக்சாகார்ப் அல்லது மானோகுரோடோபாஸ்-20 மில்லி என்ற அளவுகளில் ஏதேனும் ஒரு மருந்தை தெளிக்கலாம். ஸ்பினோசாட் என்ற மருந்தை ஏக்கருக்கு 65 மில்லி என்ற அளவில் தெளித்தும் பல்வேறு பூச்சிகளைக் கட்டுப்படுத்தலாம்.

நோய்கள் கட்டுப்பாட்டு முறைகள்: மஞ்சள் தேமல் நோய், மஞ்சள் கலந்த பழுப்பு நிற இலைகள் உண்டாகி எல்லா இலைகளும் காய்ந்து விடும். மஞ்சள் நிற தேமல் திட்டுகள் இலைகளில் காணப்படும்.

இலைகள் சுருங்கியிருக்கும். இது ஒரு வைரஸ் தாக்குதலால் ஏற்படுகிறது. வெள்ளை ஈக்கள் மூலம் ஒரு செடியிலிருந்து மற்ற செடிகளுக்குப் பரவுகிறது.

கட்டுப்பாடு: நோய் தாக்கிய பயிரை உடனுக்குடன் வேருடன் பிடுங்கி அழிக்க வேண்டும்.

வெள்ளை ஈக்களைக் கட்டுப்படுத்த ஒரு ஏக்கருக்கு மானோகுரோடோபாஸ்- 200 மில்லி (அல்லது) டைமீதேயோட் - 200 மில்லி தெளிக்கலாம்.

வேர் அழுகல் நோய்: வேர்களில் பட்டை உறிந்து நார்போலக் கிழிந்து விடும். தண்டுப் பகுதியில் பூஞ்சான வளர்ச்சி இருக்கும். நோயுற்ற செடிகள் திட்டுத் திட்டாக மடிந்து விடும்.

தடுப்பு முறைகள், விதை நேர்த்தி: விதைக்கும் முன்பு ஒரு கிலோ விதைக்கு 4 கிராம் டி.விரிடி அல்லது 10 கிராம் சூடோமோனாஸ் அல்லது 2 கிராம் கார்பன்டாசிம் கலந்து 24 மணி நேரம் வைத்திருந்து பின்பு விதைக்கலாம். டி.விரிடி ஏக்கருக்கு 1 கிலோ அல்லது சூடோமோனாஸ் 1 கிலோ ஏதேனும் ஒன்றை தொழு உரத்தடன் கலந்து கடைசி உழவில் அடியுரமாக இடலாம்.

சாம்பல் நோய்: இது ஒரு பூசணத்தால் உண்டாகிறது. நோயுற்ற இலைகளில் மேல் மற்றும் கீழ் பகுதிகளில் வெண்மை நிறத்துக்கள் காணப்படும். பாதிக்கப்பட்ட செடி வளர்ச்சி குன்றி வாடிவிடும். காய்கள், பிஞ்சுகள் சுருங்கி, கருமை நிறமாகி விழுந்துவிடும்.

தடுப்பு முறைகள்: ஒரு ஏக்கருக்கு கார்பன்டாசிம் - 100 கிராம் அல்லது நனையும் கந்தகம் ஒரு கிலோ இதில் ஏதேனும் ஒன்றைத் தெளிக்கலாம். இவ்வாறு பயறு வகைப் பயிர்களில் பூச்சி நோய்களைக் கட்டுப்படுத்தி நல்ல மகசூல் பெறலாம் எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com