சுடச்சுட

  

  பச்சைப் பயறை தாக்கும் மஞ்சள் தேமலை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்

  By dn  |   Published on : 03rd March 2016 01:15 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  31

  திருவள்ளூர்: நடப்பு பருவத்தில் பச்சைப் பயறு செடிகளை பரவலாக மஞ்சள் தேமல் நோய் தாக்கி அதிக சேதத்தை ஏற்படுத்தி வருகிறது. இதைக் கட்டுப்படுத்த வேண்டியதன் அவசியம், வழிமுறைகள் குறித்து திருவள்ளூர் வேளாண்மை அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் எ.சுமதி கூறியது:
   தற்போது திருவள்ளூர் மாவட்டத்தில் பச்சைப் பயறு செடிகளை பரவலாக மஞ்சள் தேமல் நோய் தாக்கி வருகிறது. இதன் அறிகுறிகளாக, இலைகளில் லேசான மஞ்சள் நிறப் புள்ளிகள் தோன்றுகின்றன.
   இச்சிறிய புள்ளிகள் அளவில் பெரியதாகி இலை முழுவதும் மஞ்சள் நிறமாக காட்சியளிக்கின்றன. பாதிக்கப்பட்ட இலைகளில் இறந்த செல்களை உடைய திசுக்கள் காணப்படுகின்றன. நோயினால் பாதிக்கப்பட்ட இலைகள் வளர்ச்சியின்றியும், மெதுவாகவும் முழுமையடைகின்றன. இந்நோயால் பாதிக்கப்பட்ட செடிகளின் காய்கள் அளவில் குறைந்தும் மஞ்சள் நிறத்திலும் மாறுகின்றன. இந்நோய் பெமிசியா டெபசி எனப்படும் வெள்ளை ஈயினால் பரவுகிறது.
   பூச்சியின் விபரம்: தாய்ப்பூச்சிகள் மஞ்சள் நிற உடலுடன் வெள்ளை நிற இறக்கைகளுடன், உடலைச் சுற்றிலும் மெழுகு போன்ற பொடியுடன் காணப்படும். இளம் பூச்சிகள் கருப்பு நிறத்தில் வட்ட, கோள வடிவில் இருக்கும்.
   கட்டுப்படுத்தும் முறை: சோளத்தை வரப்புப் பயிராக வரிசையில் விதைக்க வேண்டும். பச்சை பயிறு விதையை இமிடாகுளோபிரிட் 70 டபிள்யூ எஸ் 5 மிலி என்ற அளவில் நேர்த்தி செய்து நோய் பரப்பும் நச்சுயிரியை அழிக்க வேண்டும். இவ்வைரஸினால் பாதிக்கப்பட்ட செடிகளை இளம் பருவத்திலேயே களைய வேண்டும். மஞ்சள் ஒட்டுப் பொறியை எக்டேருக்கு 12 வீதம் வைக்கவும்.
   ஒரு எக்டேருக்கு மீத்தைல் டெமட்டான் 25 இசி 500 மி.லி, டைமீத்தோயேட் 30 இசி 500 மி.லி. அல்லது இமிடோ குளோபிரிட் 17.8 எஸ்.எல். 100 மிலி தெளிக்க வேண்டும்.
   இந்த முறைகளை விவசாயிகள் கையாண்டால் இந்த பூச்சித் தாக்குதலில் இருந்து பச்சைப் பயறை பாதுகாக்கலாம் என்றார்.
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai