சுடச்சுட

    
    33

    அரக்கோணம்: எண்ணெய் வித்துகளிலேயே மானாவாரி, இறவை இரண்டிலும் 85 நாள்களில் பலனை தரக்கூடிய பயிர் எள் பயிர் ஆகும்.
     நிலம் தயாரித்தல்: எள் பயிரிட மணற்பாங்கான வண்டல், செம்மண், கருவண்டல் நிலங்கள் ஏற்றவை. நிலத்தை இரு முறை டிராக்டர் கலப்பையால் (அ) மூன்று முறை இரும்புக் கலப்பையால் (அ) ஐந்து முறை நாட்டுக் கலப்பையால் உழ வேண்டும். சிறு விதைகளும் முளைக்குமாறு மண்ணில் உள்ள கட்டிகளை உடைத்து நுண்மைப்படுத்த வேண்டும்.
     மண்ணில் உள்ள கடினமான கட்டிகளை உடைக்க உளிக் கலப்பையைக் கொண்டு 0.5 மீட்டர் ஆழத்தில் இருந்து, செங்குத்தான திசைகளில் உழ வேண்டும். பிறகு, 12.5 டன் தொழு உரம் (அ) மக்கிய தென்னை நார்க்கழிவு இட வேண்டும். இறவை எள் சாகுபடிக்கு, கிடைக்கும் நீர், நிலத்தின் சரிவைப் பொருத்து 10 சதுர மீட்டர் அல்லது 20 சதுர மீட்டர் அளவுக்கு படுக்கை தயாரிக்க வேண்டும். நீர் தேங்குவதைத் தடுக்க சமன்படுத்த வேண்டும். நெல் சாகுபடிக்குப் பிறகு எள் போடும் நிலமானது சரியான ஈரப்பதத்தில் ஒரு முறை உழுதபின், விதை விதைத்த பிறகு மற்றொரு உழவினால் மூட வேண்டும்.
     விதை நேர்த்தி: ஒரு கிலோ விதைக்கு 4 கிராம் டிரைகோடெர்மா கொண்டு விதை நேர்த்தி செய்ய வேண்டும். விதைப்புக்கு முன் விதை நேர்த்தி செய்ய வேண்டியது முக்கியம். நேர்த்தி செய்யப்பட்ட விதைகளை பூசணக்கொல்லியுடன் விதை நேர்த்தி செய்வதைத் தவிர்க்கவும் (அல்லது) ஒரு கிலோ விதைக்கு 4 கிராம் திரம் (அ) 2 கிராம் கார்பன்டாசிம் கொண்டு விதை நேர்த்தி செய்யவும்.
     விதைக்கும் முறை: விதைகளை வரிசையில் விதைக்க வேண்டும். விதையின் அளவில் நான்கு மடங்கு மணலுடன் விதையைக் கலந்து நிலத்தின் மேற்பரப்பில் சீராகத் தூவ வேண்டும். 3 செ.மீ. ஆழத்தில் விதைகளை விதைத்து, மண் கொண்டு மூட வேண்டும். கோடை பாசன நிலையில, வி.ஆர்.ஐ. (எஸ்.வி.) 1 என்னும் ரகத்தை விதைப்பதற்கு பிப்ரவரி 15 முதல் மார்ச் 15 வரை உகந்த காலமாகும்.
     இடைவெளி: வரிசைக்கு வரிசை 30 செ.மீ. இடைவெளியும், செடிக்கு செடி 30 செ.மீ. இடைவெளியும் கொடுக்க வேண்டும். நெல் தரிசில், விதைகளை வீசி விதைக்க வேண்டும். பின்னர், ஒரு சதுர மீட்டருக்கு 11 செடிகள் வீதம் பயிர் கலைத்தல் வேண்டும்.
     ரசாயன உரம்: மண் பரிசோதனைப் படி உரமிடுதல் சிறந்தது. அவ்வாறு செய்யாவிடில் பொதுவான பரிந்துரையின்படி பின்பற்றவும். மானாவாரி: ஹெக்டேருக்கு 23:13:13 கிலோ தழை, மணி, சாம்பல் சத்து (அ) 17:13:13 கிலோ தழை, மணி, சாம்பல் சத்துடன் 3 பாக்கெட் அசோஸ்பைரில்லம் (600 கிராம்), 3 பாக்கெட் பாஸ்போபேக்டீரியா (600 கிராம்) (அ) 6 பாக்கெட் அசோபாûஸ (1,200 கிராம்) இட வேண்டும். இறவை: ஹெக்டேருக்கு 35:23:23 கிலோ தழை, மணி, சாம்பல் சத்து (அ) 21:23:23 கிலோ தழை, மணி, சாம்பல் சத்துடன் 3 பாக்கெட் அசோஸ்பைரில்லம் (600 கிராம்) மற்றும் 3 பாக்கெட் பாஸ்போபேக்டீரியா (600 கிராம்) (அ) 6 பாக்கெட் அசோபாûஸ (1,200 கிராம்) இட வேண்டும். தழை, மணி, சாம்பல் சத்து முழுவதையும் அடியுரமாக இட வேண்டும். ஹெக்டேருக்கு 5 கிலோ மாங்கனீஸ் சல்பேட்டை சேர்த்து கொள்ளவும். நிலக்கடலை பயிரைத் தொடர்ந்து இறவை எள் பயிரிடும் போது, பரிந்துரைக்கப்பட்ட உரங்களில் தழைச்சத்து, மணிச்சத்து, சாம்பல் சத்து ஆகியவற்றை இட வேண்டும். 30 செ.மீ. இடைவெளியில் 5 செ.மீ. ஆழத்தில் வாய்க்கால் தோண்டி உரக்கலவையை அதில் இட்டு, 3 செ.மீ. ஆழத்துக்கு மண் கொண்டு மூட வேண்டும். இவ்வாறு வாய்க்காலில் இடவில்லை எனில், உரங்களை சீராக படுக்கையின் மீது தூவ வேண்டும்.
     ஹெக்டேருக்கு நுண்ணூட்டக் கலவை 7.5 கிலோவை செறிவூட்டப்பட்ட தொழு உரமாக மானாவாரி எள்ளுக்கும், ஹெக்டேருக்கு நுண்ணூட்டக் கலவை 12.5 கிலோவை செறிவூட்டப்பட்ட தொழு உரமாக இறவை எள்ளுக்கு இட வேண்டும். ஊட்டமேற்றிய தொழு உரம் தயாரிக்க 1:10 என்ற விகிதத்தில் நுண்உரக் கலவை, தொழு உரத்தைச் சேர்த்து தகுந்த ஈரப்பதத்தில் ஒரு மாதம் நிழலில் உலர்த்தவும்.
     களைக் கட்டுப்பாடு, பின்செய் நேர்த்தி: விதைத்த 15 நாள்கள் கழித்து முதலாவது களையும், 35 நாள்கள் கழித்து இரண்டாவது களையும் எடுக்க வேண்டும்.
     நீர் நிர்வாகம்: மண்ணின் தன்மை, பருவகாலம் ஆகியவற்றைப் பொருத்து சுமார் 5 அல்லது 6 முறை நீர் பாய்ச்ச வேண்டும். முதல் முறை விதை விதைத்தவுடன் 7-ஆவது நாள் உயிர்த் தண்ணீர், 25-ஆவது நாள் பூக்கும் தறுவாயில் 2 முறை, காய் பிடிக்கும் தறுவாயிலும், முதிர்ச்சியடையும்போது 2 முறை என சுமார் 6 முறை நீர் பாய்ச்ச வேண்டும். பூ பூக்கும் பருவம் காய் பிடித்து முற்றும் பருவத்தில் நீர் பாய்ச்சுவதைக் கவனமாகக் கடைபிடிக்க வேண்டும். இறவைப் பயிரில் விதைத்த 65 நாள்களுக்குப் பின் நீர் பாய்ச்சக் கூடாது.
     அறுவடைக்கான அறிகுறிகள்: செடியில் கீழிருந்து 25 சதவீத இலைகள் உதிர்ந்துவிடும். காய்களும், தண்டு பாகங்களும் பழுப்பு நிறமாக மாறும். செடியின் அடியிலிருந்து மேலாக உள்ள 10-ஆவது காயில் உள்ள விதைகள் கருப்பாக (முதிர்வு) மாறியிருக்கும். மேற்கண்ட அறிகுறிகள் தென்படும்போது அறுவடை செய்துவிட வேண்டும். தவறினால் காய்கள் வெடித்துச் சிதறி மகசூல் குறையும்.
     மேலும் எள் பயிர் வேளாண்மை குறித்த விவரங்கள் தேவைப்படுவோர், அவர்களது வட்டாரத்தில் உள்ள வேளாண்துறை உதவி இயக்குநர், வேளாண் அலுவலர், உதவி வேளாண் அலுவலர் ஆகியோரை அணுகி அரசின் உதவிகளையும் ஆலோசனைகளையும் பெறலாம்.
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai