சுடச்சுட

    
    26

    திருநெல்வேலி: விவசாயிகள் தீவனச் சோளம் பயிரிட்டு, தங்களது கால்நடைகளுக்கான தீவனச் செலவைக் குறைக்கலாம் என, வேளாண் துறை அறிவுறுத்தியுள்ளது.
     பருவம்: இறவைப் பயிராக ஜனவரி - பிப்ரவரி, ஏப்ரல் - மே மாதங்களில் தீவனச் சோளம் பயிரிட உகந்த மாதங்கள். தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் பயிரிடலாம். மானாவாரிப் பயிராக ஜூன் - ஜூலை, செப்டம்பர் - அக்டோபர் மாதங்களிலும் அனைத்து மாவட்டங்களில் பயிரிடும் வாய்ப்புள்ளது.
     ரகங்கள்: கோ எஃப், எஸ் 29, கோ 31 (மறுதாம்பு சோளம்) ரகங்கள் சிறந்தவை. தீவனச் சோளத்துடன் கோ 5, கோ எஃப் சி 8 ரக தட்டைப்பயறு சேர்த்து ஊடுபயிராகப் பயிரிட்டால் சத்தான தீவனம் பெறலாம்.
     சாகுபடிக் குறிப்புகள்: தீவனச் சோளம் கோ 31 ரகத்தை ஆண்டு முழுவதும் இறவைப் பயிராகப் பயிரிடலாம். ஒருமுறை விதைத்து பலமுறை அறுவடை செய்யலாம்.
     நிலம்: நீர் தேங்காத நல்ல வடிகால் வசதியுள்ள நிலத்தைத் தேர்வு செய்ய வேண்டும். நிலத்தைத் தயார் செய்யும்போது 2 அல்லது 3 முறை உழுது பண்படுத்த வேண்டும். பண்படுத்தப்பட்ட நிலத்தில் 60 செ.மீ. இடைவெளியில் பார்கள் அமைக்க வேண்டும். உழும் முன்பு ஹெக்டேருக்கு 25 டன் தொழுவுரம் இடுதல் அவசியம்.
     விதையளவு: ஹெக்டேருக்கு 5 கிலோ விதை போதும். 30-க்கு 15 செ.மீ. இடைவெளியில் விதைகளை பார்களின் இருபுறமும் விதைக்க வேண்டும். விதை உற்பத்தி செய்ய 60-க்கு 15 செ.மீ. இடைவெளியில் விதைக்க வேண்டும்.
     உர நிர்வாகம்: அடியுரமாக தழை, மணி, சாம்பல் சத்து ஆகியவற்றை 45: 40: 40 என்ற விகிதாசாரத்தில் இட வேண்டும்.
     விதைத்த 30-ஆவது நாளில் 45 கிலோ யூரியா இட வேண்டும். ஒவ்வோர் ஆண்டு முடிவுக்குப் பிறகு 45: 40: 40 கிலோ தழை, மணி, சாம்பல் சத்து இட வேண்டியது அவசியம்.
     களை நிர்வாகம்: விதைத்த 25 அல்லது 30 நாளில் முதல் களை எடுக்க வேண்டும். பிறகு தேவைப்படும்போது ஒவ்வொரு அறுவடைக்குப் பின்பும் ஒருமுறை களையெடுத்து உரமிட வேண்டும்.
     நீர்ப்பாசனம்: விதைத்தவுடன் நீர்ப் பாய்ச்சி மூன்றாம் நாள் உயிர்த் தண்ணீர் கொடுத்த பிறகு 7 அல்லது 10 நாள்களுக்கு ஒருமுறை மண் வகை, மழை அளவைப் பொறுத்து நீர் பாய்ச்ச வேண்டும். தீவனச் சோளத்தில் பயிர்ப் பாதுகாப்பு பொதுவாக தேவையிராது.
     பசுந்தீவன அறுவடை: 50 விழுக்காடு பூக்கும் தருணத்தில் அறுவடை செய்யலாம். முதல் அறுவடையானது விதைத்த 65 முதல் 70 நாளில் மேற்கொள்ளலாம். அடுத்த அறுவடைகளை 50 நாள்களுக்கொருமுறை மேற்கொள்ள வேண்டும்.
     விதை அறுவடை: விதைத்த 110 அல்லது 125ஆவது நாளில் அறுவடை செய்யலாம்.
     பசுந்தீவன மகசூல்: ஹெக்டேருக்கு ஆண்டுக்கு 192 டன்கள் கிடைக்கும். 6 அல்லது 7 முறை அறுவடை செய்ய வேண்டும்.
     விதை மகசூல்: ஹெக்டேருக்கு 1,000 கிலோ விதை கிடைக்கும். ஆண்டுக்கு 3 முறை அறுவடை செய்யலாம். விதை உறக்க நிலை 45 முதல் 60 நாளாக உள்ளது. எனவே, அறுவடைக்குப் பிறகு 60 நாள் கழித்து விதைக்க வேண்டும்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai