நெல்லை மாவட்டத்தில் வறட்சி: பாபநாசம் நீர்மட்டம் 17 அடியாக குறைந்தது
By ஷேக் அப்துல்காதர் | Published on : 04th October 2016 01:19 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
திருநெல்வேலி: பாபநாசம் அணையின் நீர்மட்டம் செவ்வாய்க்கிழமை 17 அடியாக குறைந்ததை அடுத்து அணையில் இருந்து குடிநீர் தேவைக்கு 100 கனஅடி மட்டும் திறந்து விடப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள 11 அணைகளில் மணிமுத்தாறு அணையை தவிர எஞ்சியுள்ள பாபநாசம், சேர்வலாறு, கடனாநதி, ராமநதி, அடவிநயினார் உள்ளிட்ட அணைகள் வறண்டன.
செவ்வாய்க்கிழமை காலை நிலவரப்படி மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 50.70 அடியாக அதாவது 650 மில்லியன் கனஅடி நீர்இருப்பு உள்ளது. சேர்வலாறு அணையில் 46.55 அடி நீர்மட்டம் இருந்தபோதிலும் மிகக்குறைவாக 98.85 மில்லியன் கன அடிதான் நீர்இருப்பு உள்ளது.
பாபநாசம் அணையின் நீர்மட்டம் 17.05 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 80.88 கனஅடி நீர்வரத்து இருந்தது. அணையில் 130.50 மில்லியன் கனஅடி நீர்இருப்பு உள்ளதால் அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக திறக்கப்பட்ட நீரின் அளவு 100 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது. அடுத்த சில தினங்களில் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் நிறுத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
கடனாநதி, ராமநதி அணைகளில் தலா 25 அடி நீர்மட்டம் இருந்தபோதிலும் நீர் இருப்பு இல்லாத நிலையில் சேறு, சகதியும்தான் உள்ளன. கருப்பாநதி, குண்டாறு, அடவிநயினார்,
வடக்குப்பச்சையாறு அணைகளிலும் இதேநிலைதான் காணப்படுகிறது.
நம்பியாறு அணையில் 9 மில்லியன் கனஅடி, கொடுமுடியாறு அணையில் 6.46 மில்லியன் கனஅடியும் நீர் இருப்பு இருந்தபோதிலும் தண்ணீர் திறக்க முடியாது என அணை வட்டாரங்கள் தெரிவித்தன.
வடகிழக்குப் பருவ மழை இம்மாதம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மழை தொடங்கி அணைகளுக்கு நீர்வரத்து கிடைக்கும் வரை திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்ட மக்களின் குடிநீர் தேவைக்காக மணிமுத்தாறு அணையிலுள்ள நீர் இருப்பை கொண்டுதான் பூர்த்தி செய்ய வேண்டிய நிலை உருவாகியுள்ளது.