கொல்லிமலை மிளகு கொடியில் பூக்கள் அதிகரிப்பு: கூடுதல் மகசூல் எதிர்பார்ப்பில் விவசாயிகள்

கடந்த ஏப்ரல், மே மாதங்களில் பெய்த தொடர் மழை காரணமாக
கொல்லிமலை மிளகு கொடியில் பூக்கள் அதிகரிப்பு: கூடுதல் மகசூல் எதிர்பார்ப்பில் விவசாயிகள்

நாமக்கல்:  கடந்த ஏப்ரல், மே மாதங்களில் பெய்த தொடர் மழை காரணமாக கொல்லிமலையில் சாகுபடி செய்யப்பட்டுள்ள மிளகு கொடியில் பூக்கள் அதிகம் முளைத்துள்ளன. இதனால் அடுத்த ஆண்டு அறுவடையின்போது கூடுதல் மகசூல் கிடைக்க வாய்ப்புள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.
 நாமக்கல் மாவட்டம், கொல்லிமலையில் சுமார் 3,000 ஏக்கரில் மிளகு சாகுபடி செய்யப்படுகிறது. வழக்கமாக ஏப்ரல், மே மாதங்களில் குறிப்பிட்ட இடைவெளியில் மழை பெய்து வருமானால், செப்டம்பர் மாதத்தில் நல்ல முறையில் பூப் பிடித்து அடுத்த ஆண்டில் நல்ல விளைச்சல் இருக்கும்.
 2015-ஆம் ஆண்டில் ஏப்ரல், மே மாதங்களில் கொல்லிமலையில் போதிய மழை இல்லை. இதனால் கொடிகளில் பூப் பிடிப்பது குறைந்து, விளைச்சல் பெருமளவில் குறைந்துவிட்டது. சராசரியாக ஒரு சில்வர் ஓக் மரத்தில் ஏற்றிவிடப்படும் ஒரு கொடியில் 2 முதல் 3 கிலோ வரை மிளகு விளைச்சல் இருக்கும். நிகழாண்டு பிப்ரவரி, மார்ச் மாதம் நடந்த அறுவடையில் 1 கிலோ கூடக் கிடைக்கவில்லை.
 ஏக்கருக்கு 440 சில்வர் ஓக் மரங்களை வைத்து, மிளகு கொடிகளை ஏற்றிவிட முடியும். கொடிக்கு 2 முதல் 3 கிலோ வரை விளைச்சல் இருக்கும். இதன்மூலம் ஏக்கருக்கு 1,000 முதல் 1,200 கிலோ வரை மிளகு கிடைக்கும். கிலோ சராசரியாக ரூ.500-க்கு விற்றாலே ரூ.50,000 முதல் ரூ.60,000 வரை வருவாய் ஈட்ட முடியும்.
 ஆனால், கடந்த பிப்ரவரி, மார்ச் மாதம் நடந்த அறுவடையில் ஏக்கருக்கு 500 கிலோ கூட கிடைக்கவில்லை. இதனால் ஏக்கருக்கு ரூ.30,000-க்கும் குறைவாகவே வருவாய் கிடைத்தது. இதனால் விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.20,000 முதல் ரூ.30,000 வரை வருவாய் இழப்பு ஏற்பட்டது. போதிய அளவு விளைச்சல் இல்லாமல் போனதால்தான் இப்போது விளைச்சல் பகுதியிலேயே கிலோ ரூ.1,000 வரை விற்கிறது.
 இதுகுறித்து தமிழ்நாடு பழங்குடியினர் நல அமைப்பு மாநிலத் தலைவரான விவசாயி கே. குப்புசாமி கூறியது:
 கொல்லிமலை மிளகு அடர்த்தியாகவும், காரமாகவும் இருக்கும். ரசாயன உரங்கள் பயன்படுத்தப்படாததும், இங்குள்ள இயற்கைச் சூழலும் மிளகு விளைச்சலுக்கு சாதகமாக உள்ளது. இங்கு விளையும் மிளகு தரமானதாக இருப்பதால், நல்ல சந்தை வாய்ப்பு உள்ளது.
 இப்போது பூ வைத்துள்ள மிளகு கொடியில் நவம்பர், டிசம்பர் மாதங்களில் காய்ப் பிடிக்கத் தொடங்கும். பின் பிப்ரவரி, மார்ச் மாதங்களில் அறுவடை செய்து விற்பனைக்குக் கொண்டு வரப்படுகிறது.
 கடந்த ஆண்டு போதிய மழைப் பொழிவின்மை காரணமாக கடந்த பிப்ரவரி, மார்ச் மாத அறுவடையில் விவசாயிகள் எதிர்பார்த்த அளவுக்கு மிளகு மகசூல் கிடைக்கவில்லை. நிகழாண்டு ஏப்ரல், மே மாதங்களில் போதிய மழைப்பொழிவு இருந்ததால், இப்போது நன்றாக பூப்பிடித்துள்ளது.
 கடந்த ஆண்டு எதிர்பார்த்த மகசூல் இல்லாமல் கடும் இழப்பைச் சந்தித்த விவசாயிகள், 2017 ஆம் ஆண்டு அறுவடையில் கூடுதல் மகசூலை எதிர்பார்த்துள்ளனர். தற்போதைய சூழலில் மிளகுக்கு நல்ல விலை கிடைத்து வருகிறது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com