"மழையைப் பயன்படுத்தி நேரடி நெல் விதைப்பு செய்யலாம்'

டெல்டா மாவட்டங்களில் பெய்யும் மழையைப் பயன்படுத்தி சம்பா
"மழையைப் பயன்படுத்தி நேரடி நெல் விதைப்பு செய்யலாம்'

தஞ்சாவூர்:  டெல்டா மாவட்டங்களில் பெய்யும் மழையைப் பயன்படுத்தி சம்பா பருவ நேரடி நெல் விதைப்பு செய்யலாம் என மூத்த வேளாண் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து தஞ்சாவூர் மாவட்ட மூத்த வேளாண் வல்லுநர்கள் பி. வெங்கடேசன், ஏ. பழனியப்பன், பி. கலைவாணன் ஆகியோர் தெரிவித்திருப்பது:

காவிரி படுகையில் சம்பா நெல் சாகுபடி பருவம் நடைபெறுகிறது. வடகிழக்குப் பருவமழை தொடங்குவதற்கு முன்பு அக். 25-ம் தேதிக்குள் சம்பா நெல் பயிர் வளர்ச்சி நிலையில் இருந்தால்தான், வெள்ளச் சேதம் இன்றி பயிர்கள் காப்பாற்றப்படும்.

தற்போது, மேட்டூர் அணையில் உள்ள நீர் இருப்பைக் கொண்டும், அணைக்கு வருகிற நீர்வரத்தைக் கொண்டும் உடனடியாக அணையைத் திறந்து, அனைத்து சம்பா பரப்பிலும் நாற்றுவிட்டு நடவு செய்ய இயலாத நிலையே உள்ளது.

மேட்டூர் அணை நீரை சம்பா பருவ இறுதியில் மழை கிடைக்காத தருணத்தில் பயன்படுத்திக் கொள்ள ஏதுவாக சேமித்துக் கொள்ள வேண்டியது அவசியமாகிறது. எனவே, தற்போது பெய்யும் மழையைப் பயன்படுத்தி நேரடி நெல் விதைப்பு முறையை அனைத்து விவசாயிகளும் உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.

இதன்மூலம் சம்பா பரப்பு முழுவதும் வடகிழக்குப் பருவமழைக்கு முன்பாக பயிர் வளர்ச்சி நிலைக்குக் கொண்டு வரமுடியும். மொத்த நீர் தேவை குறையும். பயிர் மேலாக முளைப்பதால், அதிக சிம்புகள் தோன்றி அதிக மகசூல் கிடைக்கும்.

நாம் எதிர்பார்த்தபடியே ஆகஸ்ட் இறுதி வாரத்தில் நல்ல மழை பெய்து வருகிறது. இதை பயன்படுத்தி நாகை மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் பரவலாக வயலை தயார்நிலையில் வைத்திருப்போர் விதைப்புப் பணியைத் தொடங்கிவிட்டனர்.

தஞ்சாவூர் மாவட்டத்திலும் சில இடங்களில் நேரடி நெல் விதைப்பு செய்துள்ளனர். வயல் தயார்நிலையில் இல்லாதவர்கள் உடனடியாக உழுது, புழுதி செய்து நேரடி நெல் விதைப்பு செய்யலாம். செப்டம்பர் முதல் வாரம் வரை நீண்டகால ரகங்களான சி.ஆர். 1009 (சாவித்திரி) ஆடுதுறை 44, ஆடுதுறை 50 ஆகியவற்றையும், 135 நாள்கள் வயதுடைய மத்திய கால ரகங்களையும் விதைக்கலாம். ஒரு சதுர மீட்டரில் 200 விதைகள் முளைக்க, ஏக்கருக்கு 8 முதல் 10 கிலோ விதையைப் பயன்படுத்துவதே போதுமானது.

நேரடி விதைப்பு திட்டத்தில் தமிழக அரசு அறிவித்துள்ள சம்பா தொகுப்புத் திட்ட மானியங்களை முழுமையாகப் பயன்படுத்தி உடனடியாக நேரடி நெல் விதைப்பை மேற்கொண்டு பயன்பெறலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com