வைகை அணையில் 'வறட்சி': தேனி, திண்டுக்கல், மதுரை மாவட்டங்களில் முதல் போக நெல் சாகுபடிக்கு தண்ணீர் திறப்பதில் சிக்கல்

முல்லைப் பெரியாறு அணை மற்றும் மூல வைகை நீர்பிடிப்பு பகுதிகளில் போதிய மழையில்லாததால், தேனி, திண்டுக்கல், மதுரை மாவட்டங்களுக்கு முதல் போக நெல் சாகுபடிக்கு பெரியாறு அணை
வைகை அணையில் ஞாயிற்றுக்கிழமை 22.90 அடியாக சரிந்துள்ள நீர்மட்டம்.
வைகை அணையில் ஞாயிற்றுக்கிழமை 22.90 அடியாக சரிந்துள்ள நீர்மட்டம்.

முல்லைப் பெரியாறு அணை மற்றும் மூல வைகை நீர்பிடிப்பு பகுதிகளில் போதிய மழையில்லாததால், தேனி, திண்டுக்கல், மதுரை மாவட்டங்களுக்கு முதல் போக நெல் சாகுபடிக்கு பெரியாறு அணை மற்றும் வைகை அணையில் இருந்து தண்ணீர் திறப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
முல்லைப் பெரியாறு அணையில் இருந்து தமிழகப் பகுதிக்கு திறக்கப்படும் தண்ணீரை பயன்படுத்தி தேனி மாவட்டத்தில் 14,707 ஏக்கர் பரப்பளவிலும், பெரியாறு மற்றும் வைகை அணைகளில் இருந்து திறக்கப்படும் தண்ணீரை பயன்படுத்தி மதுரை, திண்டுக்கல் மாவட்ட பெரியாறு பாசனப் பகுதிகளில் 45,041 ஏக்கர் பரப்பளவிலும் இருபோக நெல் சாகுபடி நடைபெறும்.
கேரளத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கியதும், முல்லைப் பெரியாறு அணையில் இருந்து தமிழகப் பகுதிக்கு வழக்கமாக ஜூன் 2-ஆம் தேதி பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படும். கடந்த 2016-ஆம் ஆண்டு தென்மேற்கு பருவமழை போதிய அளவு பெய்யாததால் பெரியாறு அணையில் இருந்து காலதாமதமாக 14.7.2016 அன்று தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த தண்ணீரை பயன்படுத்தி தேனி மாவட்டத்தில் 8,000 ஏக்கர் பரப்பளவில் மட்டுமே முதல் போக நெல் சாகுபடி நடைபெற்றது. மதுரை, திண்டுக்கல் மாவட்ட முதல் போக நெல் சாகுபடிக்கு வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படவில்லை.
அதே போல் பெரியாறு அணை மற்றும் மூல வைகை ஆற்றின் நீர்பிடிப்பு பகுதிகளில் மழையின்றி அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்ததால், கடந்த 2016, செப்டம்பர் மாதம் 2-ஆம் போக நெல் சாகுபடிக்கும் தண்ணீர் திறக்கப்பட வில்லை.
அணைகளில் போதிய தண்ணீரில்லாததால் கடந்த 2016-ஆம் ஆண்டு, முதல் மற்றும் 2-ஆம் போக நெல் சாகுபடியை கைவிட்ட விவசாயிகள், இந்த ஆண்டு கேரளத்தில் கடந்த ஜூன் 1-ஆம் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்கியதால் மகிழ்ச்சியடைந்தனர். ஆனால், பெரியாறு அணை மற்றும் மூல வைகை நீர்பிடிப்பில் ஓரிரு நாள்கள் மட்டுமே லேசான சாரல் மழை பெய்துள்ளது. இதனால் அணைகளுக்கு போதிய நீர்வரத்து இல்லை.
முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டம் 112 அடிக்கும் மேல் உயர்ந்தால் மட்டுமே தேனி மாவட்ட முதல் போக நெல் சாகுபடிக்கு அணையில் இருந்து தண்ணீர் திறக்க முடியும். தற்போது, பெரியாறு அணை நீர்மட்டம் 108.90 அடியாகவும், அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 75 கன அடியாகவும் உள்ளது. அணையில் தண்ணீர் இருப்பு 739 மில்லியன் கன அடி. அணையில் இருந்து தமிழகப் பகுதிக்கு குடிநீர் திட்டங்களுக்காக விநாடிக்கு 75 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
அதே போல், வைகை அணை நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து 22.90 அடியாக உள்ளது. அணையில் நீர் இருப்பு 158 மில்லியன் கன அடி. அணைக்கு தண்ணீர் வரத்து இல்லை. அணையில் இருந்து மதுரை, ஆண்டிபட்டி- சேடபட்டி குடிநீர் திட்டங்களுக்கு விநாடிக்கு 40 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
முல்லைப் பெரியாறு அணை மற்றும் வைகை அணையில் குறைந்த அளவு தண்ணீர் மட்டுமே இருப்பில் உள்ள நிலையில், தென்மேற்கு பருவமழை இல்லாததால் தேனி, மதுரை, திண்டுகல் மாவட்டங்களில் இந்த ஆண்டும் முதல் போக நெல் சாகுபடி நடைபெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
விவசாயிகள் அதிருப்தி: கடந்த 2016-ஆம் ஆண்டு வறட்சியால் அணைகளில் போதிய தண்ணீரின்றி முதல் மற்றும் 2-ஆம் போக நெல் சாகுபடியை கைவிட்ட விவசாயிகளுக்கு அரசு சார்பில் வறட்சி நிவாரண நிதி வழங்கவில்லை. பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் இழப்பீட்டுத் தொகையும் வழங்கப்பட வில்லை. தற்போது, அணைகளில் நீர்மட்டம் சரிந்து இந்த ஆண்டும் முதல் போக நெல் சாகுபடி நடைபெறுவது கேள்விக் குறியாகி உள்ளது. இதனால் விவசாயிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com