பயிர்களைத் தாக்கும் படைப்புழுக்களை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்!

பயிர்களைத் தாக்கும் புதிய வகையான படைப்புழுக்கள் அண்மையில் சில மாவட்டங்களில் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், இதுபோன்ற புழுக்கள் தங்களது பயிர்களில் காணப்பட்டால், விவசாயிகள்
பயிர்களைத் தாக்கும் படைப்புழுக்களை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்!
Published on
Updated on
1 min read

திருவள்ளூர்: பயிர்களைத் தாக்கும் புதிய வகையான படைப்புழுக்கள் அண்மையில் சில மாவட்டங்களில் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், இதுபோன்ற புழுக்கள் தங்களது பயிர்களில் காணப்பட்டால், விவசாயிகள் அந்தந்தப்  பகுதி  வட்டார வேளாண்மை அலுவலரை அணுகி தேவையான ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்ளலாம் என்றும் வேளாண் துறை இயக்குநர் கோ.பாண்டியன் தெரிவித்துள்ளார். 
இதுகுறித்து அவர் மேலும் கூறியுள்ளதாவது:
பயிர்களைத்தாக்கும்  புதிய வகையான படைப்புழுக்கள் இந்த ஆண்டில் தமிழகத்தில் சில மாவட்டங்களில் அடையாளம்  காணப்பட்டுள்ளன. இந்த புதிய வகைப் படைப்புழுக்கள் அண்மையில் கர்நாடகத்தின் சில பகுதிகளில் மக்காச்சோளத்தில் தாக்கியது கண்டறியப்பட்டது. தற்போது தமிழகத்தில் தருமபுரி, கரூர்,  கிருஷ்ணகிரி, நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் மக்காச்சோளத்தில் தாக்குதல் ஏற்படுத்தியிருப்பது தெரியவந்துள்ளது. 
80 வகையான பயிர்களைத் தாக்கும்: இந்த வகைப் புழுக்கள், தலைப் பகுதி மஞ்சள் நிறத்தில், வால்பகுதியில் நான்கு புள்ளிகள் சேர்ந்து சதுர வடிவில் காணப்படும். இப்புழுக்கள் மக்காச்சோளம் மட்டுமின்றி நெல், கரும்பு, தக்காளி, வெங்காயம்,  நிலக்கடலை, பருத்தி, உருளை, மொச்சை, முட்டைகோஸ், சிறுதானியங்கள் உள்ளிட்ட 80 வகையான  பயிர்களைத் தாக்கும் தன்மை கொண்டவை என கண்டறியப்பட்டுள்ளது.   
பாதிப்பின் அறிகுறிகள்:  இதன் தாயான அந்துப்பூச்சி 100 முதல் 200 முட்டைகள் கொண்ட குவியல்களை இலையின் அடிப்பகுதியில் இடுகின்றது. இதிலிருந்து வெளிவரும் புழுக்கள் இலைகளைச் சுரண்டி உண்பதால் இலைகள் பச்சையத்தை  இழந்து வெண்மையாகக் காணப்படும். அதோடு, சிலந்தி போன்று நூல் போன்ற இழைகளை உருவாக்குவதால் அதன்மூலம் இப்புழுக்கள் ஒரு செடியிலிருந்து  மற்றொரு செடிக்குச் செல்லும் தன்மையுடையது. இது, இளம் செடிகளில் இலைகளையும் முதிர்ந்த செடிகளில்  கதிர்களையும் பாதிக்கும். 
கட்டுப்படுத்தும் முறைகள்: இவ்வகைப் புழுக்களின் தாக்குதல் அறிகுறி தென்பட்டால் இலைகளின் அடிப்பரப்பில் காணப்படும்  முட்டைகளை அழிக்க வேண்டும். விளக்குப் பொறிகள் மூலம் தாய் அந்துப்பூச்சியின் நடவடிக்கைகளைக் கண்காணித்து அவற்றை  அழிக்க வேண்டும்.  வேளாண்மை விரிவாக்க மையங்களில் கிடைக்கும் உயிர் காரணிகள் மூலமும், முட்டை ஒட்டுண்ணி ஆகியவை மூலமும் இப்பூச்சியினைக் கட்டுப்படுத்தலாம். மேலும், 3 சதவீதம்  வேப்ப எண்ணெய் கரைசல் மற்றும் 5 சதவீதம்  வேப்பங்கொட்டை கரைசல் மூலம் இயற்கை முறையிலும் இப்பூச்சிகளைக் கட்டுப்படுத்தலாம். இப்பூச்சித் தாக்குதலில் சேதம் அதிகமாக இருந்தால் மட்டுமே  பயிர் பாதுகாப்பு மருந்துகளை தேவையான அளவு பாதுகாப்புடன் தெளிக்க வேண்டும்.
எனவே விவசாயிகள் இப்பூச்சி நோய் தாக்குதல் அறிகுறிகள் தென்பட்டால், அருகில் இருக்கும் வட்டார  வேளாண்மை விரிவாக்க மையத்திற்கு பாதிக்கப்பட்ட பயிர் மாதிரிகளை எடுத்துச் சென்று உறுதி செய்தபின், மேற்கண்ட கட்டுப்படுத்தும் முறைகளைக் கையாள வேண்டும் என கோ. பாண்டியன் கூறியுள்ளார்.            

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com