மலர்ச் செடிகளுக்கு புத்துயிர் அளிக்கும் முறைகள்

மலர்ச் செடிகளுக்கு புத்துயிர் அளிக்கும் முறைகள்

தமிழகத்தில் கஜா புயல் தாக்கம், தொடர் மழையால் பல்வேறு மாவட்டங்களில் பயிரிட்டிருந்த பெரும்பாலான குண்டு மல்லிகை, முல்லை, ஜாதிமல்லி போன்ற மல்லிகை

விழுப்புரம்: தமிழகத்தில் கஜா புயல் தாக்கம், தொடர் மழையால் பல்வேறு மாவட்டங்களில் பயிரிட்டிருந்த பெரும்பாலான குண்டு மல்லிகை, முல்லை, ஜாதிமல்லி போன்ற மல்லிகை இனச்செடிகள் பெரும்பாலும் பாதிப்புக்குள்ளாகின.
இவற்றுக்கு புத்துயிர் அளித்து அதிக மகசூல் பெறும் வழிமுறைகள் வருமாறு:
மலர் செடிகளுக்கு புத்துயிர் அளிப்பதற்கு, வயலில் தேங்கிய நீரை வெளியேற்றிவிட்டு, செடிகளின் வேர்களில் மண் அணைத்து பாதிக்கப்பட்ட மற்றும் காய்ந்த கிளைகளையும், உயரமாக வளர்ந்துள்ள கிளைகளையும் (தரையிலிருந்து 40 முதல் 50 செ.மீ. உயரம்) வெட்டிவிட வேண்டும்.
நுண்ணுயிர் உரங்கள்: உடனடியாக அசோஸ்பைரில்லம், பாஸ்போ பேக்டீரியா, பொட்டாஷ் சொலுபிளைசர், டிரைக்கோடெர்மோ விரிடி, சூடாமோனஸ் புளோரசன்ஸ், மைக்கோ-ரைசா போன்ற நுண்ணுயிர் உரங்கள், நுண்ணுயிரிகளை ஏக்கருக்கு தலா ஒரு கிலோ வீதம், நன்கு மக்கிய தொழு எருவுடன் கலந்து இட வேண்டும்.
இந்த நுண்ணுயிரிகளால் செடிகளின் வேர்கள் வேகமாக 
வளர்ந்து, மண்ணில் உள்ள சத்துகளை செடிகளுக்கு அளிப்பதால், செடிகள் உடனடியாக புத்துயிர் பெறும். 
இதனால், 15 நாள்களுக்குள் செடிகள் மீண்டும் செழிப்பாக வளரத் தொடங்கும்.
உர மேலாண்மை செய்தல்: இதன்பிறகு, பொதுவாக பரிந்துரைக்கப்பட்ட உர அளவான தழை, மணி, சாம்பல் சத்துகளை ஒரு செடிக்கு 60-120-120 கிராம் என்ற விகிதத்தில் இட வேண்டும். அதாவது பொதுப் பரிந்துரைஅளவாக, செடிக்கு 30 கிராம் யூரியா, 50 கிராம் மியுரியேட், ஆப்பொட்டாஷ், 185 கிராம் சூப்பர் பாஸ்பேட் உரங்களைப் பிரித்து இட்டு, நீர் பாய்ச்ச வேண்டும்.
பிறகு 15 நாள்கள் கழித்து அவசியமாக, பரிந்துரைக்கப்பட்ட அளவில் துத்தநாகம், போரான், மாங்கனீசு, இரும்பு நுண்ணூட்ட சத்துகளை மண்ணில் இடலாம் அல்லது இலைவழியாகத் தெளித்து வழங்கலாம்.
இதே முறையை தொடர்ந்து, மூன்று மாதங்களுக்கு ஒருமுறை உரங்களைப் பிரித்து, பிரித்து ஆண்டுக்கு நான்கு முறை வழங்க வேண்டும்.
இதை மேற்கொள்வதால், பூக்களின் மகசூல் ஒரே சீராக கிடைக்கும். நீரில் கரையும் உரங்களான 19-19-19 மற்றும் 13-0-45 கலப்பு உரங்களை ஒரு லிட்டருக்கு 2 கிராம் வீதம் தேவையான அளவு ஒட்டும் திரவத்துடன் கலந்து இலைவழியாகத் தெளிப்பதாலும், செடிகளின் வளர்ச்சி துரிதப்பட்டு, பூக்கும் தன்மையும் அதிகரிக்கும்.
மகசூலைப் பெருக்கும் வழிகள்: மலர்ச் செடிகளை மேற்கூறியபடி பராமரிப்பு செய்த 30 நாள்களில், ஜிப்பரிலிக் அமிலம் அல்லது குளோர்மெக்வாட் குளோரைடு 50 எஸ்.எல் என்ற பயிர் வளர்ச்சி ஊக்கிகளை ஒரு லிட்டர் நீருக்கு ஒரு மில்லி வீதம் ஒருமுறையும், 15 நாள்கள் கழித்து மறுமுறையும் தெளிப்பதால் பூக்கள் அதிகரித்து அதிக மகசூல் கிடைக்கும்.
பூச்சிகளை கட்டுப்படுத்துதல்: 
பூச்சி நோய் தாக்காமல் இருப்பதற்கு 0.03 சதம் அசாடிராக்டின் என்னும் வேம்பு கலந்த தாவர பூச்சிக்கொல்லியை 15 நாள்களுக்கு ஒருமுறை வீதம் இரண்டு தடவை அவசியம் தெளிக்க வேண்டும். தேவையில்லாமல் பூச்சி, நோய் மருந்துகளை தெளிப்பதை தவிர்க்க வேண்டும்.
இதுதொடர்பாக, மேலும் விவரங்களுக்கு அருகிலுள்ள தோட்டக் கலைத் துறையினரிடமும், வேளாண் ஆராய்ச்சி நிலைய அலுவலர்களிடமும் தெரிந்து கொள்ளலாம் என்று சென்னையைச் சேர்ந்த ஓய்வு பெற்ற தோட்டக்கலைத் துறை இயக்குநர் எஸ்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com