நெற்பயிரில்: குருத்துப்பூச்சித் தாக்குதல்

நெற்பயிரில் குருத்துப்பூச்சி தாக்குதலைக் கட்டுப்படுத்தும் முறைகள் குறித்து, நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலைய விஞ்ஞானிகள் ராஜா.ரமேஷ்,
நெற்பயிரில்: குருத்துப்பூச்சித் தாக்குதல்


நீடாமங்கலம்: நெற்பயிரில் குருத்துப்பூச்சி தாக்குதலைக் கட்டுப்படுத்தும் முறைகள் குறித்து, நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலைய விஞ்ஞானிகள் ராஜா.ரமேஷ், பாஸ்கரன்ஆகியோர் விவசாயிகளுக்கு பரிந்துரை செய்துள்ளனர்.
இதுதொடர்பாக, அவர்கள் வழங்கியுள்ள ஆலோசனைகள்:
தற்போது சாகுபடி செய்யப்பட்டுள்ள சம்பா மற்றும் தாளடி பருவ நெல் வயல்களில் ஆங்காங்கே குருத்துப் பூச்சியின் தாக்குதல் காணப்படுகின்றன. 
குருத்துப்பூச்சியின் முட்டைக் குவியல்கள் இலைகளின் நுனிகளில் பழுப்பு நிறத்தில் காணப்படும். 
வளர்ந்த அந்துப்பூச்சிகளானது மஞ்சள் நிறத்தில் கூரிய மூக்கு போன்ற அமைப்போடு இலைகளின் நுனிகளில் அமர்ந்திருக்கும். அக்டோபர் முதல் ஜனவரி மாதம் வரை இதன் தாக்குதல் மிக அதிகமாகக் காணப்படும்.
நாற்றங்கால் மற்றும் நடவு வயலிலுள்ள இளம் பயிர்களின் தூர்கட்டும் பருவம் வரை இப்பூச்சிகள் தாக்கும்போது நடுக்குருத்து காய்ந்து விடும் அல்லது இறந்த குருத்துக்கள் உண்டாகும் அதனை பிடித்து இழுத்தால் எளிதாக கையோடு வந்துவிடும். 
பயிர் நன்கு வளர்ந்து பால்பிடிக்கும் பருவத்தில் தாக்குதல் காணப்படும்போது, நெற்கதிருக்கு செல்லும் உணவு தடைப்பட்டு, நெல் மணிகள் பால் பிடிக்க முடியாமல் வெளிவரும் கதிர்கள் அனைத்தும் வெண் அல்லது சாவி கதிர்களாக மாறிவிடும்.
கட்டுப்படுத்தும் முறைகள்
1. நாற்றுகளை வயலில் நடும்போது முட்டைக் குவியல்கள் உள்ள இலைகளின் நுனிகளைக் கிள்ளிவிட்டு நடவு செய்ய வேண்டும்.
2. இனக்கவர்ச்சிப் பொறிகளை நடவு செய்த 10 நாட்களுக்குப் பிறகு ஏக்கருக்கு 5 என்ற அளவில் வைத்து ஆண் குருத்துப்பூச்சிகளைக் கவர்ந்து அழிக்க வேண்டும்.
3. டிரைக்கோகிரம்மா ஜப்பானிக்கம் என்ற முட்டை ஒட்டுண்ணியை 2சிசி (40,000 முட்டைகள்) என்ற அளவில் இரு முறை அதாவது நடவு நட்ட 30 மற்றும் 37-ஆவது நாட்களில் வயலில் வெளியிட வேண்டும்.
4.வேப்பெண்ணெய் 3 சதவீதம் அதாவது ஒரு லிட்டர் தண்ணீருக்கு 30 மிலி அல்லது 5 சதவீதம் வேப்பங்கொட்டைக் கரைசலை தேவையான அளவு ஒட்டும் திரவத்துடன் கலந்து தெளிக்கவேண்டும்.
5. குருத்துப்பூச்சியின் தாக்குதல் பொருளாதார சேதநிலையைத் தாண்டும் போது, ஓர் ஏக்கருக்கு ஃப்ளுபென்டியாமைட் 20 டபிள்யூ.ஜி- 50கிராம், ஃப்ளுபென்டியாமைட் 39.35 எஸ்.சி - 20 மிலி, கார்டாப் ஹைட்ரோகுளோரைடு 50எஸ்.பி.- 400 கிராம், குளோரன்ட்ரான்லிபுரோல் 18.5 எஸ்.சி.- 60 மிலி, பிப்ரோனில் 5 எஸ்.சி.- 400 மிலி ஆகிய பூச்சிக்கொல்லி மருந்துகளில் ஏதாவது ஒரு மருந்தை ஏக்கருக்கு 200 லிட்டர் தண்ணீரில் கலந்து கைத்தெளிப்பான்கொண்டு காலை அல்லது மாலை வேளைகளில் தெளிக்க வேண்டும். 
6. வயலில் காணப்படும் நன்மை செய்யும் பூச்சிகளான சிலந்திகள், தரை வண்டுகள், ஒட்டுண்ணி குளவிகள், நீர்த்தாண்டி, நீர் மிதப்பேன், தட்டான்கள், இடுக்கிவால் பூச்சிகள் போன்றவற்றை பாதுகாத்து, பெருக்குதல் போன்றவற்றினால் இயற்கையாகவே கட்டுப்பாடு கிடைக்கும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com