நெற்பயிர் நாற்றங்காலில் பூச்சிக் கட்டுப்பாடு வழிமுறைகள்

இந்த ஆண்டு தென்மேற்குப் பருவமழை மேற்குத் தொடர்ச்சிமலைப் பகுதிகளில் மிகவும் தீவிரமாகப் பெய்துள்ளதால் அனைத்து அணைகளுக்கும் போதிய அளவில் நீர்வரத்து உள்ளது.
நெற்பயிர் நாற்றங்காலில் பூச்சிக் கட்டுப்பாடு வழிமுறைகள்


மேலூர்: இந்த ஆண்டு தென்மேற்குப் பருவமழை மேற்குத் தொடர்ச்சிமலைப் பகுதிகளில் மிகவும் தீவிரமாகப் பெய்துள்ளதால் அனைத்து அணைகளுக்கும் போதிய அளவில் நீர்வரத்து உள்ளது. இதனால் விவசாயிகளும் சாகுபடி பணிகளைத் தொடங்கியுள்ளனர். நெல் விதைத்து நாற்றங்கால் தயாரிக்கும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் அதிக மகசூலுக்கு நாற்றங்கால் பூச்சி நிர்வாகம், கண்காணிப்பு அடிப்படையானது. அதுகுறித்த விவரம்:
நாற்றங்கால், இளம் பயிரைத் தாக்கும் நெற்பேன்: வறட்சியான சூழ்நிலையில் நெல் நாற்றங்காலில் கரும்பழுப்பு நிறத்தில் நெற்பேன் தென்படும். நாற்றின் இளம்நடவில் பயிரின் இளம் தளிர் இலைகளைச் சுரண்டித் திண்ணும். நாற்றின் நுனி பகுதி கருகித் தீய்ந்தும், சுருண்டும் தோற்றமளிக்கும். நெற்பேன் பூச்சித் தாக்குதல் அதிகமானால் நாற்றங்காலிலேயே நாற்று கருகி மடிந்துவிடும். கனமழை பெய்தால் இப்பூச்சிகள் மறைந்துவிடும்.
பூச்சிக் கட்டுப்பாடு: உள்ளங்கையை தண்ணீரில் நனைத்து நாற்றங்காலில் நாற்றினை பத்து, பனிரெண்டு இடங்களில் தடவிப் பார்த்தால், நாற்றின் கீழ் தோகைகள் சுருண்டிருப்பது தெரியும். பத்து சதவீதத்துக்கும் மேல் பாதிப்புத் தெரிந்தால் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். நாற்றங்காலில் தண்ணீர் பற்றாக்குறை இல்லாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும். பாஸ்போமிடன் 40, எஸ்.எல். 50 மில்லி அல்லது மோனோகுரோட்டபாஸ் 36, எஸ்.எல். 40 மில்லியை நீரில் கலந்து நாற்றில் தெளிக்க வேண்டும். 
நெற்பயிரில் குருத்துப் பூச்சி: இதன் தாக்குதலால் 5 முதல் 20 சதம் பயிரில் சேதம் ஏற்படுத்தக் கூடும். முன்பருவ பயிர்களை விட தாமதமாக நடவான பயிரிலேயே இதன் தாக்குதல் அதிகம் காணப்படும். பூச்சிகளின் முட்டைகளில் இருந்து வெளிவரும் புழுக்கள் நெற்பயிரின் அடித்தண்டை துளைத்து உள்ளேநுழைந்து உட்திசுக்களை தின்றுவிடும். 
இதனால் பாதிக்கப்பட்ட பயிரின் நடுக்குருத்து கருகி விடும். பெண் அந்திப்பூச்சி தளிர் இலைகளின் நுனியில் அடர்த்தியாக முட்டைகளை இட்டுவிடும். இக்குவியல் முட்டைகள் மீது ரோமங்களை வைத்து மூடிவிடும்.
கட்டுப்படுத்துதல்: நெல் வயலில் 25 சதவீதத்துக்கும் மேல் குருத்துகள் கருகி காணப்பட்டால், பொருளாதார சேதார நிலையாகும். பூச்சி புழுக்களை கட்டுப்படுத்த கூடுகளை பொறுக்கி குவித்து அழிக்க வேண்டும். இதற்கு நாற்றின் நுனியில் கருகி வளைந்த தோகைகளை கிள்ளி அகற்ற வேண்டும். நாற்று நடும்போது இடைவெளியை அதிகரிக்க வேண்டும். நெருக்கி நடுவதை தவிர்க்க வேண்டும். மாலை நேரத்தில் நெல்வயலில் விளக்கு பொறிகளை ஆங்காங்கே வைத்து பெண் அந்திப் பூச்சிகளை கவர்ந்தும் அழிக்கலாம்.
ஒட்டுண்ணிகளான டிரைக்கோடெர்மா ஜப்பானிக்கம் ஹெக்டேருக்கு 6 சிசி வீதம் இருமுறை நாற்றங்காலில் தெளிக்க வேண்டும். மேலும், வேப்பங்கொட்டையை அரைத்து சாறுஎடுத்து 5 சதம் தெளிப்பதன் மூலம் தண்டு துளைப்பானை கட்டுப்படுத்தலாம். 
பச்சைத்தத்துப் பூச்சியானது இலைகளிலிருந்தும் தண்டிலிருந்தும் சாற்றை உறிஞ்சிக் குடிக்கின்றன. இதனால் பயிரின் வளர்ச்சி குன்றி, பசுமையை இழந்து வாடிமடிந்துவிடும். மின் விளக்கு அருகில் நாற்றங்காலை அமைக்கக் கூடாது. நாற்றங்காலில் 2.5 செ.மீ. உயரம் நீரைத் தேக்கிவைக்க வேண்டும். கார்போபியூரான் 3 ஜி 20 சென்ட் நாற்றங்காலுக்கு 3.5 கிலோ அளவில் தூவ வேண்டும். 
வெட்டுப்புழு: நாற்றங்காலில் ஆடு மேய்ந்ததுபோல வெட்டுப்புழு படைப் படையாக வெட்டுவிடும். கோடைக்காலத்தில் மழைக்குப் பின் நாற்றங்காலில் இது காணப்படும். 
இதனைக் கட்டுப்படுத்த நாற்றங்காலில் தண்ணீரை வடித்துவிட்டு, குளோரிபைரிபாஸ் 20 இசி 80 மில்லியை 20 லிட்டர் நீரில் கலந்து 8 சென்ட் அளவுள்ள நாற்றங்காலில் தெளிக்கலாம். இதற்கு, முன்னேற்பாடாக தரிசு நிலத்தில் வாத்துகளை மேய விடுவதால் பல்வேறு பூச்சிகளை அழிக்கலாம். நாற்று மறைய நீர்தேக்கினால், புழுக்கள் மேல்மட்டத்தில் வந்து பறவைகள் தின்று விடும்.
பூச்சிக்கொல்லிகளை பரிந்துரைத்த அளவில் பயன்படுத்தி நஞ்சுக் கலப்பற்ற நெல் மணிகளை உற்பத்தி செய்யலாம்.
இத்தகவலை மதுரை வேளாண். அறிவியல் மைய பூச்சியியல் துறை ஆராய்ச்சியாளர்கள் பா.உஷாராணி, அறிவியல் மைய ஒருங்கிணைப்பாளர் செல்வி ரமேஷ் ஆகியோர் தெரிவித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com