மானாவாரி நிலங்களில் மண்வளத்தை மேம்படுத்தும் தொழில்நுட்பங்கள்

தமிழ்நாட்டின் மொத்த நிலப்பரப்பான 13 மில்லியன் ஹெக்டேரில் சுமார் 7 மில்லியன் ஹெக்டேர் பரப்பளவில் வேளாண் தொழில் நடைபெற்று வருகிறது.
மானாவாரி நிலங்களில் மண்வளத்தை மேம்படுத்தும் தொழில்நுட்பங்கள்பெரம்பலூர்: தமிழ்நாட்டின் மொத்த நிலப்பரப்பான 13 மில்லியன் ஹெக்டேரில் சுமார் 7 மில்லியன் ஹெக்டேர் பரப்பளவில் வேளாண் தொழில் நடைபெற்று வருகிறது. அவற்றில், 3.1 மில்லியன் ஹெக்டேர் பரப்பில் மானாவாரி விவசாயம் நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டில் பெரும்பாலான பரப்பளவில் மானாவாரி நிலங்கள் அதிக சூரிய ஒளிக்கதிர்களின் தாக்கம், வறட்சி ஆகிய இயற்கையின் இடர்பாடுகளுக்கு இலக்காகிறது. 
கரிசல் மண், வண்டல் மண், செம்மண் ஆகிய பல்வேறு மண் வகைகளில் மானாவாரி நிலங்கள் தென்படுகின்றன. பொதுவாக மானாவாரி நிலங்கள் மண் வளம் குன்றி காணப்படுவதுடன் குறைந்த மண் ஈரப்பதம், களர் தன்மை, சுண்ணாம்புச் சத்துமிகுதி, மேல் மண் இறுக்கம், அடிமண் இறுக்கம் போன்ற இடர்பாடுகளையும் கொண்டுள்ளது. எனவே, உழவர்கள் தகுந்த நிலவள மேலாண்மை முறைகளைக் கையாண்டு மண் வளத்தை மேம்படுத்தி நிலையான வேளாண்மைக்கு வித்திட வேண்டும். 
இதுகுறித்து, பெரம்பலூர் மாவட்டம், வாலிகண்டபுரத்தில் உள்ள வேளாண் அறிவியல் மைய உழவியல் தொழில்நுட்ப வல்லுநர் மு. புனிதவதி கூறியது:
கோடை உழவு: கோடை காலத்திலும், தென்மேற்குப் பருவமழைக் காலத்திலும் பெய்யும் மழைநீரை நிலத்தில் சேமித்திட கோடை உழவு அவசியமாகிறது. கோடை உழவு செய்வதால் மழைநீர் பூமிக்குள் செல்ல வழி வகுக்கப்படுகிறது. பருவ விதைப்பு மேற்கொள்வதற்கு வசதியாக இருக்கும். எனவே, மானாவாரி பயிர் அறுவடை முடிந்தவுடன் மார்ச் மாதத்தில் கோடை உழவு ஆரம்பிப்பதே உரிய காலமாகும். இதனால் அடி மண் இறுக்கம் நீக்கப்பட்டு, நீர் கொள்திறன் அதிகரிப்பதுடன் விளைச்சலும் 20 சதம் வரை அதிகரித்துள்ளதை ஆய்வுகள் உறுதிசெய்துள்ளன. 
பகுதிப்பாத்தி அமைத்தல்: மானாவாரி நிலங்களில் பகுதிப்பாத்தி அமைத்தல் ஒரு சிறந்த ஈரம் காக்கும் முறையாகும். இந்த முறையில் நிலங்களை 8க்கு 5 மீ என்ற அளவில் சிறு, சிறு பகுதிகளாகப் பிரித்துக்கொள்ள வேண்டும். இந்த சிறு பாத்திகள் ஒவ்வொன்றும், சிறு சிற்றணைகளாகச் செயல்பட்டு பாத்திப் பரப்பில் பெய்யும் மழைநீரை நீண்ட காலத்திற்கு தேக்கி வைக்கிறது. தேக்கப்பட்ட நீர் அனைத்தும் மண்ணுக்குள் உறிஞ்சப்படுவதால், நிலத்தடியில் நீர் கொள்திறன் அதிகரிக்கிறது. 
நிலப்போர்வை அமைத்தல்: பயிர்க் கழிவுகளை நிலப்போர்வையாகப் பயன்படுத்துவதால் நிலத்திலுள்ள நீர் ஆவியாக வெளியேறுவது தடுக்கப்படுகிறது. சோளத் தட்டை, கம்புத் தட்டை, சூரியகாந்தி தட்டை, நிலக்கடலைத் தோல், தென்னை நார்க்கழிவு போன்றவை மண்ணில் ஈரம் காக்கப் பயன்படுகின்றன. இக்கழிவுகள் அங்கக உரமாகமாறிப் பயிருக்குப் பயன்படுகின்றன. மண் மூடாக்கு அமைப்பதால் மண் அரிமானம் தடுக்கப்படுகிறது. 
தாவர அரண் அமைத்தல்: வெட்டிவேர், கொழுக்கட்டைப்புல் மற்றும் எலுமிச்சம்புல் போன்ற தாவரஅரண்களுக்கு இடையே மானாவாரிப் பயிர்களை சாகுபடிசெய்யலாம். இதனால் மழைநீர் வீணாவது தடுக்கப்படுவதுடன் மண் அரிமானமும் தடுக்கப்படுகின்றது.
அங்கக உரங்கள் இடுதல்: மானாவாரி நிலங்களில் அங்ககச் சத்துக் குறைவாக இருக்கும். இந்தவகை நிலங்களில் தொழு உரத்தை ஹெக்டேருக்கு 12.5 டன் என்ற அளவில் மண்ணில் இட வேண்டும். மட்கிய தொழு உரம் போன்றவற்றை ஹெக்டேருக்கு 5 டன் என்ற அளவில் இட வேண்டும். கண்மாய் கரம்பை வண்டல் மண்ணில் இடுவதால் மண் வளம் மேம்படுகிறது. அசோஸ்பைரில்லம், ரைசோபியம் ஆகிய உயிர் உரங்கள் பரிந்துரைக்கப்படுகிறது. 
ஊட்டமேற்றிய தொழு உரம் தயாரித்தல்: மானாவாரி நிலங்களில் மணிச்சத்து பயிருக்கு கிட்டாத நிலையில் உள்ளது. ஒரு ஹெக்டேருக்கு தேவையான மணிச்சத்து உரத்தை நன்கு மட்கிய ஈரப்பசையுள்ள தொழு உரத்துடன் 750 கிலோ கலந்த காற்று புகாத நிலையில் ஒரு மாதகாலம் மட்கச் செய்ய வேண்டும். பின் மட்கிய தொழு உரத்தைப் பயிர்களுக்கு இடலாம். 
பஞ்சகவ்யா தெளித்தல்: இயற்கை வளர்ச்சி ஊக்கியான பஞ்சகவ்யா சுலபமாக கிடைக்கக்கூடிய மூலப்பொருள்களில் இருந்து தயாரிக்கப்படுகிறது. 20 லிட்டர் பஞ்சகவ்யா தயாரிக்க பசு மாட்டு சாணம் 5 கிலோ, மாட்டு கோமியம் 3 லிட்டர், பால் 2 லிட்டர், தயிர் 2 லிட்டர், நெய் அரை லிட்டர், கரும்புச்சாறு 3 லிட்டர், பழுத்த வாழைப்பழம் ஒரு டஜன் ஆகியவற்றை ஒரு மண் பானையில் போட்டு கடைந்து நொதிக்க வைக்கவேண்டும். 10 நாள் கழித்து இந்த கலவையில் இருந்து 3 லிட்டர் எடுத்து 100 லிட்டர் தண்ணீரில் கலந்து கைத்தெளிப்பான் மூலம் பயிருக்கு தெளிக்க வேண்டும். 
ஊட்டச்சத்து மேலாண்மை: மானாவாரி நிலங்களில் தழைச்சத்து, மணிச்சத்து, சாம்பல் சத்து, மக்னீசியச் சத்து பற்றாக்குறைகளும் சுண்ணாம்புச் சத்தால் ஏற்படும் இரும்புச் சத்து பற்றாக்குறையும் பரவலாகத் தென்படுகின்றன. மானாவாரி நிலங்களுக்கு கீழ்க்காணும் ஊட்டங்கள் பரிந்துரைக்கப்படுகிறது. 
பயறு வகைகள்
நெல்: யூரியா, டி.ஏ.பி, பொட்டாசியம் குளோரைடு பால் பிடிக்கும் பருவத்திலும், 10 நாள்கள் கழித்தும் தெளிக்க வேண்டும். 
யூரியா, டி.ஏ.பி. மற்றும் பொட்டாசியம் குளோரைடு ஆகியவற்றை முதல்முறை பூக்கும் பருவத்தில் தெளிக்க வேண்டும். 2-வது முறை 15 நாள்கள் கழித்து, இதனுடன் 100 பி.பி.எம் சாலிசிலிக் அமிலம் கலந்து தெளிக்கவேண்டும். 
நிலக்கடலை: 2.5 கிலோ டி.ஏ.பி. + 1 கிலோ அம்மோனியம் சல்பேட் +500 கிராம் போராக்ஸ் உரங்களை, 37.5 லிட்டர் தண்ணீரில் கலந்து 350 மில்லி பிளானோ பிக்ஸ் கலந்து தெளிக்க வேண்டும். 
சூரியகாந்தி: 100 பி.பி.எம் சாலிசிலிக் அமிலத்தை பயிர் வளர்ச்சி மற்றும் பூக்கும் பருவத்தில் தெளிக்க வேண்டும். 
பருத்தி: பூக்கும் பருவத்தில் 2 சத மக்னீசியம் சல்பேட் 10 1 சத யூரியா கரைசல் தெளிக்கவேண்டும்.
இவ்வாறு, மானாவாரி நிலங்களில் இயற்கை இடர்பாடுகள் பல இருந்தாலும் தகுந்த மேலாண்மை முறைகள் வாயிலாகவும், ஒருங்கிணைந்த உர நிர்வாக முறை வாயிலாகவும் மண்வளத்தை மேம்படுத்தி அதிக விளைச்சல் பெறலாம்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com