நாள்தோறும் வருமானம் கொடுக்கும் எலுமிச்சை

திருப்பதிக்கு லட்டு, திருநெல்வேலிக்கு அல்வா, பத்தமடைக்கு பாய் போன்ற பெயர்கள் அடையாளப் பெயர்களாக இருப்பது
நாள்தோறும் வருமானம் கொடுக்கும் எலுமிச்சை



கடையநல்லூர்: திருப்பதிக்கு லட்டு, திருநெல்வேலிக்கு அல்வா, பத்தமடைக்கு பாய் போன்ற பெயர்கள் அடையாளப் பெயர்களாக இருப்பது போல், திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள புளியங்குடிக்கு அடையாளப் பெயராகத்திகழ்கிறது எலுமிச்சம் பழம்.  இங்குள்ள எலுமிச்சம் பழச் சந்தை மூலம் விவசாயிகளுக்கும்,வியாபாரிகளுக்கும் நாள்தோறும் வருமானம் கிடைத்து வருகிறது.
புளியங்குடியில் எலுமிச்சம் பழங்களுக்கு என தனியாக சந்தை செயல்பட்டு வருகிறது. இந்தச் சந்தைக்கு, ராஜபாளையம் மாங்குடி, தென்மலை, ராயகிரி, சிவகிரி, கடையநல்லூர், திருவேட்டநல்லூர், புன்னையாபுரம், நெல்கட்டும்செவல், பாம்புக்கோவில், தலைவன்கோட்டை, ராமநாதபுரம், கரிவலம்வந்தநல்லூர், புளியங்குடி மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளிலிருந்து டன் கணக்கில் எலுமிச்சம் பழங்கள் கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
இப்பகுதிகளில் சுமார் 20 ஆயிரம் ஏக்கர் பரப்பில் எலுமிச்சை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. அதில், அதிகபட்சமாக புளியங்குடி வட்டாரத்தில் எலுமிச்சை சாகுபடி செய்யப்பட்டுள்ளதாலும், புளியங்குடியில்தான் எலுமிச்சைக்கென்று தனிச் சந்தை இருப்பதாலும் லெமன் சிட்டி என்று புளியங்குடி அழைக்கப்பட்டு வருகிறது. இதைத் தாண்டி, புளியங்குடியில் விளைந்த பழங்கள் அதிக திரட்சியாகவும், கூடுதல் சாறு உள்ளவையாகவும் இருப்பதால் இப்பழங்களுக்கு எல்லா ஊர்களிலும் அதிக வரவேற்பு உள்ளது.
கரும்பு, நெல் உள்ளிட்ட பயிர்களும் இப்பகுதிகளில் பயிரிடப்பட்டு வந்தாலும், தினசரி வருமானம் தரும் எலுமிச்சையையே இப்பகுதி விவசாயிகள் பணப்பயிராகக் கருதி பயிரிட்டு வருகின்றனர். அதனால், எலுமிச்சை சாகுபடி பிரதானமாக உள்ளது. பொதுவாக நாள்தோறும் இந்த சந்தைக்கு சுமார் 100 டன் எலுமிச்சம் பழங்கள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன. மார்ச் கடைசி, ஏப்ரல், மே, ஜூன், ஜூலை முதல் வாரங்களில் எலுமிச்சம் பழத்துக்கு நல்ல  கிராக்கி இருக்கும். அப்போது கிலோ ஒன்றுக்கு ரூ.150 வரை விற்பனையாகும். இங்கு கிலோ கணக்கில் மட்டுமல்ல, எண்ணிக்கை அடிப்படையிலும் பழங்கள் விற்பனை செய்யப்படும்.
மூன்று தரம்: மூன்று வகையான தரங்களில் பழங்கள் விற்பனை செய்யப்படும். நம்பர் -1 தரம் (ஒரு பழம்) ரூ. 8 முதல் 10 வரையிலும், நம்பர்- 2 ஆவது   தரமுடைய பழம் ரூ. 3 முதல் 4 வரையிலும், நம்பர்-3 ஆவது  தரமுடைய பழம் ரூ. 2 வரையிலும் விற்கப்படும். ஆனால், சீசன் இல்லாத காலங்களில் பழங்களின் விலை கணிசமாக குறைந்துவிடும். குறிப்பாக, மழைக் காலங்களில் விலை மிகவும் குறைந்துவிடும். இருந்தாலும் அந்த விலைக்கு விற்பதைத் தவிர விவசாயிகளுக்கு வேறு வழியில்லை.
இது தொடர்பாக புளியங்குடி, புன்னையாபுரம் எலுமிச்சை சந்தை தலைவர் குழந்தைவேலு கூறியது: புளியங்குடி சந்தைக்கு நாள்தோறும் 100 டன் அளவுக்கு எலுமிச்சம் பழங்கள் கொண்டு வரப்படுகின்றன. சந்தையில் வைத்து தரம் வாரியாகப் பிரிக்கப்பட்டு பகிரங்க ஏலம் மூலம் பழங்கள் விற்கப்படுகின்றன. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் இங்கிருந்து பழங்கள் அனுப்பி வைக்கப்படுவதுடன், கேரளம் உள்ளிட்ட வெளி மாநிலங்கள், மாலத்தீவு உள்ளிட்டவற்றுக்கும் நாள்தோறும் பழங்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன.
கோடை காலங்களில் விவசாயிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். அதே சமயம் மழைக் காலங்களில் அவ்வளவு லாபம் இருக்காது. கேட்கும் விலைக்குத்தான் கொடுக்க வேண்டிய நிலை இருக்கும். 
புளியங்குடியில் பழம் சேமிப்புக் கிடங்கு வசதி செய்யப்பட்டால், அதில் சேமித்து வைத்து விற்பனை செய்ய முடியும். இதனால் விவசாயிகளுக்கு சரியான விலை கிடைக்கும். அதனால் அவர்களின் வாழ்வாதாரம் பெருகும். நாம் இங்கிருந்து கேரளத்துக்கு அனுப்பும் பழங்களைக் கொண்டு, அவர்கள் மதிப்புக் கூட்டுப் பொருள்களை உருவாக்கி விற்பனை செய்து அதிக லாபம் ஈட்டுகின்றனர். புளியங்குடியில் அது போன்ற மதிப்புக் கூட்டு பொருள்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகளை உருவாக்கினால் விவசாயிகளுக்கு அதிக லாபம் கிடைப்பதுடன், பொருள்களை சந்தைப்படுத்துவதற்கு இளைஞர்களின் தேவை அதிகரிக்கும். அந்த வகையில் புளியங்குடி வட்டார இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாகும். இங்கு தொழிற்சாலை அமைந்தால், கூடுதல் பரப்பில் எலுமிச்சை சாகுபடியை விவசாயிகள் தாமாகவே முன்வந்து  மேற்கொள்வார்கள். இதனால் தரிசாக கிடக்கும் நிலங்களிலும் சாகுபடி செய்யப்படும் வாய்ப்பு ஏற்படும். இதன் காரணமாக அப்பகுதியைச் சேர்ந்த விவசாய கூலித் தொழிலாளர்களுக்கும் வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றார்.
நாள்தோறும் வருமானம்: எலுமிச்சை மரத்தை முறையாக பராமரித்தால், வருடம் முழுவதும் காய் பறித்து விற்பனை செய்ய முடியும். ஒரு மரத்தில் வருடத்துக்கு குறைந்தபட்சம் 1,200 முதல் 1,500 பழங்கள் வரை கிடைக்கும். 14 ஆண்டுகள் வரை மரங்கள் பலன் கொடுக்கும் எனக் கூறும் விவசாயிகளுக்கு, தினசரி வருமானம் கொடுக்கும் ஒரே பயிர் எலுமிச்சை மட்டும்தான். 
இன்னும் சொல்லப்போனால், நாளைக்கு ரூ.5,000 தேவைப்பட்டால் கவலைப்படாமல் பழங்களை பறித்து விற்று பணமாக்கலாம். வங்கியில் கிடக்கும் பணத்தை எடுப்பது போல் பழங்களைப் பறித்து பணத்தைப் பெறலாம் என்கின்றனர் விவசாயிகள்.
கூடுதல் வருமானம்: புளியங்குடி எலுமிச்சை சந்தைப் பகுதியில், எலுமிச்சையை பதப்படுத்தும் குளிர்பதனக் கிடங்கு, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் கட்டமைப்பு வசதிகள், மதிப்புக் கூட்டு பொருள்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் அமைக்கப்பட்டால் பல ஆயிரம் பேருக்கு கூடுதல் வருமானத்தை ஈட்டித் தருவதுடன், வேலை வாய்ப்பையும் உருவாக்கும் என்கின்றனர் இப்பகுதி மக்கள்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com