சுடச்சுட

  

  சின்ன வெங்காயத்தின் விலை உயர்வு குறுகிய காலத்துக்கு மட்டுமே இருக்கும்:  வேளாண் பல்கலைக்கழகம் தகவல்

  Published on : 29th August 2019 12:56 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  Small-Onion  கோவை : தமிழகத்தில் சின்ன வெங்காயத்தின் விலை உயர்வு குறுகிய காலத்துக்கு மட்டுமே இருக்கும் என்று தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
   இது குறித்து பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:  உலகில் வெங்காயம் உற்பத்தி செய்யும் நாடுகளில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. காரத்தன்மையில் இந்திய வெங்காயம் பிரசித்தி பெற்றது. கர்நாடகம், ஆந்திர மாநிலத்தின் தெற்கு பகுதியிலும், தமிழ்நாட்டில் திண்டுக்கல், திருப்பூர், பெரம்பலூர், திருச்சி, நாமக்கல், தேனி, மதுரை மாவட்டங்களிலும் சின்ன வெங்காயம் அதிகம் பயிரிடப்படுகிறது.
   தமிழ்நாட்டில் வேளாண்மை, விவசாய நல அமைச்சகத்தின் மதிப்பீட்டின்படி, 2017-18  -ஆம் ஆண்டில் சின்ன வெங்காயம் 0.28 லட்சம் ஹெக்டேரில் பயிரிடப்பட்டு சுமார் 3 லட்சம் டன் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தின் சின்ன வெங்காயம் இலங்கை, இந்தோனேஷியா, தாய்லாந்து, சிங்கப்பூர், மலேசிய  நாடுகளுக்கு அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது.  வெளிநாட்டு சந்தை நுகர்வோர் 23 மி.மீ. அளவுடைய சின்ன வெங்காயத்தையே அதிகம் விரும்புகின்றனர். திருச்சி, திண்டுக்கல் சந்தைகளுக்கு தாராபுரம், பல்லடம், உடுமலைப்பேட்டை பகுதிகளில் இருந்து சின்ன வெங்காய வரத்து உள்ளது. விலை உயரும் என்ற நம்பிக்கையில் சில உற்பத்தியாளர்கள் வெங்காயத்தை சேமித்து வைத்துள்ளனர்.
  வர்த்தக மூலகங்களின்படி மைசூரு வரத்து தொடங்கும் செப்டம்பர் வரையிலும் சின்ன வெங்காயத்தின் விலை உயர்ந்தே இருக்கும். இந்த சூழலில் விதைப்பு முடிவுகளை எடுக்க ஏதுவாக, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்நாடு பாசன விவசாய மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் இயங்கி வரும் வேளாண்மை, ஊரக மேம்பாட்டு ஆய்வு மையத்தின் விலை முன்னறிவிப்புத் திட்டம் கடந்த 12 ஆண்டுகளாக திண்டுக்கல் சந்தையில் நிலவிய சின்ன வெங்காயத்தின் விலை குறித்து சந்தை ஆய்வு மேற்கொண்டது.
   இந்த ஆய்வுகளின் அடிப்படையில் வரும் செப்டம்பர் இறுதி வரை தரமான சின்ன வெங்காயத்தின் சராசரி பண்ணை விலை கிலோவுக்கு ரூ.32 முதல் ரூ.34 வரை இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. மேலும் அண்டை மாநிலங்களில் இருந்து வரத்து, பருவமழை ஆகியவற்றைப் பொறுத்து விலையில் மாற்றங்கள் இருக்கும். எனவே இந்த சந்தை ஆலோசனையின் அடிப்படையில் சின்ன வெங்காயம் பயிரிடும் விவசாயிகள் விதைப்பு முடிவுகளை எடுக்கலாம்.  இது தொடர்பான மேலும் விவரங்களுக்கு உள்நாட்டு, ஏற்றுமதி சந்தைத் தகவல் மையத்தையோ, காய்கறிப் பயிர்கள் துறைத் தலைவரையோ அணுகலாம் என்று பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. 
  தொடர்பு எண்கள் 0422 - 2431405, 6611374.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai