தீவனத் தேவையால் மக்காச் சோளத்தின் விலை அதிகரிக்க வாய்ப்பு

தமிழ்நாட்டில் நடப்பு ஆண்டில் மக்காச்சோளம் பயிரிடும் பரப்பு குறைவாக இருக்கும் என்பதாலும், தீவனத் தேவை அதிகமாக இருப்பதாலும் மக்காச்சோளத்தின் விலை அதிகரிக்கும் வாய்ப்பு இருப்பதாக
தீவனத் தேவையால் மக்காச் சோளத்தின் விலை அதிகரிக்க வாய்ப்பு


கோவை: தமிழ்நாட்டில் நடப்பு ஆண்டில் மக்காச்சோளம் பயிரிடும் பரப்பு குறைவாக இருக்கும் என்பதாலும், தீவனத் தேவை அதிகமாக இருப்பதாலும் மக்காச்சோளத்தின் விலை அதிகரிக்கும் வாய்ப்பு இருப்பதாக வேளாண்மைப் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
வேளாண்மை, விவசாய நல அமைச்சகத்தின் மூன்றாவது முன்கூட்டிய மதிப்பீட்டின்படி 2018-19 ஆம் ஆண்டில் மக்காச்சோளம் 93 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் பயிரிடப்பட்டு 2.78 கோடி டன்கள் உற்பத்தி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் மகாராஷ்டிரம், மத்தியப்பிரதேசம், கர்நாடகம், பிகார், தெலங்கானா, ஆந்திர மாநிலங்களில் அதிக அளவில் மக்காச்சோளம் பயிரிடப்படுகிறது. தமிழ்நாட்டில் சேலம், திண்டுக்கல், நாமக்கல், புதுக்கோட்டை, திருப்பூர், விழுப்புரம், பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் அதிக அளவில் மக்காச்சோளம் பயிரிடப்படுகிறது.
 வர்த்தக மூலகங்களின்படி தாமதமான பருவ மழையால் தமிழ்நாட்டில் மக்காச்சோள சாகுபடி பரப்பு, உற்பத்தியானது குறைவாகவே இருக்கும் என்று கருதப்படுகிறது. மேலும், மக்காச்சோளத்தில் படைப்புழு தாக்குதல் எல்லா மாநிலங்களிலும் பரவலாகக் காணப்படுவதால் உற்பத்தி பெரிதும் பாதிக்கப்பட்டு வருகிறது. எனவே, தீவனத் தயாரிப்பு தொழிற்சாலைகள் மாற்று தானியங்களான கோதுமை, உடைத்த அரிசி ஆகியவற்றை தற்போது கொள்முதல் செய்து வருகின்றன. கர்நாடகத்தின் வரத்து, இறக்குமதியைப் பொருத்து தமிழ்நாட்டில் மக்காச்சோளத்தின் விலை  மாறுபடும்.
 இந்தச் சூழலில் விவசாயிகள் விதைப்பு முடிவுகளை எடுக்க ஏதுவாக வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்நாடு பாசன விவசாய மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் இயங்கி வரும் வேளாண், ஊரக மேம்பாட்டு ஆய்வு மையத்தின் விலை முன்னறிவிப்புத் திட்டம் கடந்த 19 ஆண்டுகளாக உடுமலைப்பேட்டை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நிலவிய மக்காச்சோள விலை குறித்து சந்தை ஆய்வுகள் மேற்கொண்டது.
 இந்த ஆய்வுகளின் அடிப்படையில், அறுவடையின்போது (செப்டம்பர் - அக்டோபர்) தரமான மக்காச்சோளத்தின் பண்ணை விலை குவிண்டாலுக்கு ரூ.2,300 ஆக இருக்கும். 
எனவே விவசாயிகள் மேற்கூறிய சந்தை ஆலோசனையின் அடிப்படையில் விதைப்பு முடிவுகளை எடுக்கலாம் என்று பரிந்துரைக்கப்படுகிறது. இதுதொடர்பான மேலும் விவரங்களுக்கு பல்கலைக்கழகத்தின் உள்நாட்டு, ஏற்றுமதி சந்தைத் தகவல் மையத்தையோ, சிறுதானியத் துறைத் தலைவரையோ அணுகலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com