பயன் தரும் பனை மரம்

உலகின் மூத்த குடியான தமிழ்க்குடிக்கும், பனைமரத்துக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு.
பயன் தரும் பனை மரம்


பெரம்பலூர்: உலகின் மூத்த குடியான தமிழ்க்குடிக்கும், பனை
மரத்துக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. பனை மரம் தமிழர்களின் வாழ்வோடும், மொழியோடும் ஒன்றுபட்டது என்பதற்குச் சான்றாக 
சங்க கால நூல்களான  தொல்காப்பியம், திருக்குறள் மற்றும் சிலப்பதிகாரம் உள்ளிட்ட நூல்களில் பனையின் சிறப்புகள் குறிப்பிடப்பட்டுள்ளன.
 பனை ஓலைச் சுவடிகள் மூலமாகவே நமக்கு பல இலக்கியங்கள் கிடைத்துள்ளன. தமிழகத்தின் மாநில மரமாக அறியப்படும் பனையானது, இந்தியத் துணைக் கண்டம் முழுவதும் பரவிக் காணப்படுகிறது.  போராசஸ் பிளாபெல்லிபர் என்னும் தாவரவியல் பெயர் கொண்ட இப்பனையானது, பனைக் குடும்பத்தில் தென்னைக்கு அடுத்ததாக சிறப்பிடம் பெற்றுள்ளது. இதன் தாயகம் ஆப்பிரிக்கா. 
இதுகுறித்து, பெரம்பலூர் மாவட்டம், வாலிகண்டபுரத்திலுள்ள தந்தை ஹேன்ஸ் ரோவர் வேளாண் அறிவியல் மைய தோட்டக்கலை தொழில்நுட்ப வல்லுநர் ஜே. கதிரவன் கூறியது: 

பனையிலிருந்து கிடைக்கும் நுங்கு, பதநீர், பனை வெல்லம், பனங்கிழங்கு போன்றவை உடலுக்கு நன்மை பயக்கும் உணவுப் பொருள்களாக விளங்குகின்றன. பனை ஓலைகள் கூரை வேயவும், பல்வேறு கைவினைப் பொருள்கள் தயாரிக்கவும், முதிர்ந்த பனை மரங்கள் மரச்சட்டங்கள் செய்யப் பயன்படுகின்றன. பல்வேறு பயன்களைத் தரும் பனையானது கற்பக விருட்சம் என அழைக்கப்படுகிறது. பனை மரமானது 100 அடி உயரம் வளர்ந்து 100 ஆண்டு காலம் வாழும் தன்மையுடையது.  

பனை பொருள்களின் மருத்துவக் குணங்கள்: வெயில் காலங்களில் உடம்பில் தோன்றும் வியர்க்கூர் மேல் நுங்குநீரைத் தடவினால் வியர்க்கூர் மறைந்துவிடும். தோலுடன் நுங்கைச் சாப்பிட்டால் வெப்பநோய்கள் குறையும். செரிமானத்தை அதிகப்படுத்தவும், உடல் சூட்டை தணிக்கவும், குடல் மற்றும் வயிற்றுப் புண்களைக் குணப்படுத்தவும் பதநீர் பயன்படுகிறது. தொண்டைப் புண்களை குணப்படுத்தவும், உடல் சூட்டைத் தணிக்கவும் பனங்கற்கண்டு பயன்படுகிறது. 
பனை வேர் தொழு நோயைக் குணப்படுத்தும் தன்மைகொண்டது. பனங்கொட்டையிலுள்ள வெண்மை நிற தேங்காய் போன்ற பருப்பு எலும்பு முறிவைக் குணப்படுத்தும் எண்ணெய் தயாரிக்கப் பயன்படுகிறது. 
வெப்ப மற்றும் மித வெப்ப மண்டல பகுதிகளில் மணல் வெளிகளில் நன்கு வளரக்கூடியது. சராசரி வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ் என்ற போதிலும் 50 டிகிரி செல்சியஸ் வரை தாங்கி வளரக்கூடியது.

 வறண்ட சூழலில் 500 முதல் 900 மி.மீ வரை சராசரி மழைப்பொழிவு உள்ள பகுதிகளிலும், ஈரப்பதம் மிகுந்த சூழலில் 5,000 மி.மீ வரையுள்ள பகுதிகளிலும் நன்கு வளரும் தன்மைபெற்றது. 
பனை விதை வழியாக பெருக்கம் செய்யப்படுகிறது. அதிக விளைச்சல் தரக்கூடிய, குட்டைத் தன்மைகொண்ட, விரைவில் ஈனக்கூடிய, பூச்சிநோய் தாக்குதல் இல்லாத தாய் மரங்களிலிருந்து பனம் பழங்களை சேகரிக்கவேண்டும். இவற்றை நான்கு வாரங்களுக்கு நிழலில் குவித்து வைத்திருக்க வேண்டும். இதில் எடை குறைந்த, சுருங்கிய, துளைகள் உள்ள பழங்களை நீக்கிவிட வேண்டும். தரமான பனங்கொட்டைகளை 3 மணி நேரம் நீரில் ஊறவைத்து விதைப்பு செய்வதன் மூலம் முளைப்புத் திறனை அதிகப்படுத்தலாம்.  

விதைக் கொட்டைகளைப் பழங்களிலிருந்து பிரித்தெடுத்து அவற்றை 1 லிட்டர் நீருக்கு 1 கிராம் அளவில் கார்பென்டாசிம் பூஞ்சாணக் கொல்லி கலந்த கரைசலில் 24 மணி நேரம் ஊறவைத்து நடவுசெய்வதால் விரைவாக முளைப்பதோடு கிழங்கு அழுகல் நோய் தடுக்கப்படும். 
மணல், மண், மட்கிய எரு ஆகியவற்றை சரிக்கு சரி கலந்து, அதில் பனங்கொட்டைகளை விதைத்தால் விரைவாக முளைக்கும். பொதுவாக பிடுங்கி நடப்படும் நாற்றுகள் வயலில் வேர் பிடிக்காமல் வாடி மடிந்து விடுகின்றன. எனவே, ஏதேனும் கொள்கலனில் நாற்று விட்டு, வளர்ந்தவுடன் வேர் மண்ணுடன் வயலில் நடவுசெய்வதன் மூலம் இழப்பைத் தவிர்க்கலாம். அல்லது பனை விதைகளை நடவுசெய்ய வேண்டியஇடத்தில் நேரடியாக விதைப்பது சிறந்தது. 

நடவு: 3 முதல் 6 மீட்டர் இடைவெளியில் 1 அடி நீளம் மற்றும் அகலம், 2 அடி ஆழம் உள்ள குழிகளைத் தோண்டி, அதில் குழி ஒன்றுக்கு 10 கிலோ மக்கிய தொழு உரம், மணல் கொண்டு நிரப்பவேண்டும். இதில் வளமான விதைகளை 10 செ.மீ. ஆழத்தில் விதைக்கலாம். நாற்றுகளாக இருந்தால் நடுவில் பள்ளம் பறித்து நடவுசெய்யலாம். 
உரமிடல்: பனையின் வயது அதிகமாகும் போது ஊட்டச் சத்துகளின் தேவையும், ஊட்டச்சத்துகள் அதிகம் வழங்கும்போது மகசூலும் அதிகரிக்கும். பனை நடவுசெய்த 1 மற்றும் 2}ஆவது ஆண்டுகளில் செடி ஒன்றுக்கு 10 கிலோ தொழு உரமும் 3 மற்றும் 4 }ஆம் ஆண்டுகளில் 20 கிலோ தொழு உரமும், 5 மற்றும் 6 }ஆம் ஆண்டுகளில் 30 கிலோ தொழு உரமும், 7 மற்றும் 8}ஆம் ஆண்டுகளில் 40 கிலோ தொழு உரமும், 9 மற்றும் 10}ஆம் ஆண்டுகளில் 50 கிலோ தொழு உரமும், 11}ஆம் ஆண்டிலிருந்து 60 கிலோ தொழு உரமும் இட வேண்டும். 

ஓலை நீக்குதல்:ஓராண்டுக்கு 12 மட்டைகள் விடும். நன்கு வளர்ச்சியடைந்த பனை மரத்தில் 30 முதல் 40 ஓலைகள் காணப்படும். ஓலைகள் தோன்றியதிலிருந்து விரிவடைவதற்கு 31 முதல் 58 நாள்களாகும். பனையின் வயது அதிகரிக்கும்போது ஓலைகள் விரிவடையும் காலம் குறையும். நாற்று நிலையில் விரிவான வளர்ச்சியடைய அதிக நாள்களாகும். 
பனையின் உயரம் 2 மீட்டராக இருக்கும்போது, ஓரிரு ஓலைகளை நீக்கலாம். முதிர்ச்சியடைந்த பனையில் 16 முதல் 22 வரை ஓலைகளை விட்டு விட்டு எஞ்சியவற்றை நீக்கலாம். பருவமழை தொடங்குவதற்கு முன்பாக பழைய காய்ந்த ஓலைகளையும் ஓலையடிகளை அகற்றவேண்டும். 
 பனை நடவுசெய்த 12 முதல் 15 ஆம் ஆண்டிலிருந்து பூக்க தொடங்கும். தமிழகத்தில் பிப்ரவரி முதல் ஜூலை மாதம் வரை பூக்கும். ஆண்டுக்கு 5 முதல் 8 பாளைகள் வரை ஈனும். ஆண் பாளைகள் 68 நாள்களிலும், பெண் பாளைகள் 11 நாள்களிலும் பூப்பதை நிறைவுசெய்யும்.

பயிர்ப் பாதுகாப்பு: தென்னையைத் தாக்கும் பூச்சி மற்றும் நோய்கள் பனையையும் தாக்குகின்றன.
காண்டாமிருக வண்டு: ஓலையின் அடிப்புறம், நுனி ஓலை, ஓலைத் தண்டு, பாளை போன்றவற்றை முதிர்ந்த வண்டுகள் தாக்கும். ஓலை அச்சுக்கும், தண்டுக்கும் இடைப்பட்ட பகுதியில் மாலத்தியான் நான்கு சத தூள் 250 கிராமை மணலுடன் கலந்து இட வேண்டும். ஆமணக்கு பிண்ணாக்கை சிறிய மண் பானைகளில் ஊறவைத்து ஆங்காங்கே வைப்பதன் மூலம் முதிர்ந்த வண்டுகளைக் கவர்ந்தழிக்கலாம். 

சிவப்புக் கூண் வண்டு: இளம் புழுக்கள் தண்டின் மெல்லிய பகுதியையும், ஓலைத் தண்டின் அடிப்பகுதியையும் உண்பதால் பனைகள் காய்ந்து விடும். கூண் வண்டு தாக்கிய தண்டுப் பகுதியிலிருந்து பசை போன்ற திரவம் வெளியாகும். காயங்கள் உள்ள இடத்தில் மாலத்தியான் 50 விழுக்காடு நனையும் தூள் மற்றும் தார் ஆகியவற்றைக் கலந்து பூசலாம். பதநீர் எடுக்காத மற்றும் விளைச்சல் இல்லாத காலங்களில் 10 மி.லி மோனோகுரோட்டோபாஸ் பூச்சிக் கொல்லியை 30 மி.லி நீரில் கலந்து பாலித்தீன் பையில் எடுத்து வேர் வழியே அளிக்கலாம்.

இலைக்கருகல் நோய்: பாதிப்புக்குள்ளான இலைகளில் நீள வடிவில் சாம்பல் நிற விளிம்புகளுடன் பழுப்பு நிற மையத்துடன் காணப்படும். பல புள்ளிகள் ஒருங்கிணைந்து ஓலைக்கருகல் ஏற்படுகிறது. காப்பர் ஆக்ஸி குளோரைடு பூஞ்சாணக் கொல்லியை ஒரு லிட்டர் நீருக்கு 2 கிராம் அளவில் கலந்து தெளித்து கட்டுப்படுத்தலாம். 

குருத்து அழுகல் நோய்: ஓலையின் ஓரங்களிலும் உறைகளிலும் சிறு சிறு புள்ளிகள் தோன்றி உள்
புறமாகப் பரவும். தாக்குதல் தீவிரமடைந்ததும் குருத்து அழுகி பனை மடிந்துவிடும். இவ்வாறு மடிந்த பனைகளை உடனே எரித்துவிடுவதோடு பனை மரத்தைத் தூய்மையாக வைத்திருப்பதன் மூலம் குருத்தழுகலைத் தவிர்க்கலாம். 

மகசூல்:   நன்கு பராமரிக்கப்பட்ட ஒரு பனைமரத்திலிருந்து ஆண்டொன்றுக்கு 150 லிட்டர் பதநீர், 20 கிலோ கருப்பட்டி, 15 கிலோ பனங்கற்கண்டு, 12 ஓலைகள் மற்றும் 10 கிலோ விறகு கிடைக்கும்.                                                   

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com