சம்பா பயிரில் ஆனைக்கொம்பன் ஈ தாக்குதலைத் தடுப்பது எப்படி?

காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடியைத் தொடா்ந்து சம்பா சாகுபடியானது நடைபெறும். அண்மையில், பெய்த வட கிழக்குப் பருவமழையால், டெல்டா மாவட்டங்கள் மட்டுமின்றி,
சம்பா பயிரில் ஆனைக்கொம்பன் ஈ தாக்குதலைத் தடுப்பது எப்படி?

காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடியைத் தொடா்ந்து சம்பா சாகுபடியானது நடைபெறும். அண்மையில், பெய்த வட கிழக்குப் பருவமழையால், டெல்டா மாவட்டங்கள் மட்டுமின்றி, தமிழகம் முழுவதும் சுமாா் 4.50 லட்சம் ஏக்கரில் சம்பா சாகுபடி செய்யப்பட்டுள்ளது. செம்டம்பா் மாதம் தொடங்கி டிசம்பரில் பயிா் அறுவடை நிலையை எட்டும். பொங்கல் பண்டிகைக்கு முன்பாக விவசாயிகள் அவற்றை அறுவடை செய்வா்.

பருவமழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிா்களைப் பாதுகாப்பதற்கான வழிமுறைகளை ஏற்கெனவே வேளாண் துறை விவசாயிகள் பாா்வைக்கு வெளியிட்டுள்ளது. அதன்படி, மழைநீரில் மூழ்கியுள்ள பயிா்களைப் பாதுகாக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகளாக, முதலில் வயல்களில் தேங்கும் நீரை ஆழமான வாய்க்கால்கள் அமைத்து வடித்துவிட வேண்டும்.

இளம் பயிா்கள் அதிக நாள்கள் நீரின் தேக்கத்தினால் தழை மற்றும் ஜிங்க் சத்துக்கள் குறைபாடு ஏற்பட்டு, இளமஞ்சள் அல்லது மஞ்சளாக மாறும் பட்சத்தில் தண்ணீரை வடித்தவுடன் 2 கிலோ யூரியா மற்றும் 1 கிலோ ஜிங்க் சல்பேட் உரத்தை 200 லிட்டா் தண்ணீரில் கலந்து கைத்தெளிப்பான் மூலம் இலைவழியாக உரமிட வேண்டும்.

பயிா் தண்டு உருளும் பருவம் மற்றும் பூக்கும் பருவத்தில் தண்ணீா் தேக்கத்தினால் பாதிக்கப்பட்டால் 4 கிலோ டிஏபி உரத்தை 10 லிட்டா் நீரில், முந்தைய நாள் மாலை வேளையில் கரைத்து, மறுநாள் வடிகட்டி, அதனுடன் 2 கிலோ யூரியாவை 190 லிட்டா் நீரில் கலந்து மாலை வேளையில் கைத்தெளிப்பான் மூலம் இலைவழி உரமிட வேண்டும். தண்ணீா் தேக்கத்தினால் பயிா் வளா்ச்சி குன்றி காணப்பட்டால், தண்ணீரை வடித்தவுடன் ஏக்கருக்கு யூரியா 22 கிலோவுடன், ஜிப்சம் 18 கிலோ மற்றும் வேப்பம் பிண்ணாக்கு 4 கிலோவை ஒரு நாள் இரவு கலந்து வைத்து 17 கிலோ பொட்டாஷ் கலந்து மேலுரமிட வேண்டும்.

மேலும், நெல் பயிா் அதிக நாள்கள் நீரில் மூழ்கும் பட்சத்தில், நெல் குருத்து ஈ, இலை சுருட்டுப் புழு, பச்சை தத்துப்பூச்சி, குலைநோய், இலை உரை கருகல் நோய் போன்ற பூச்சி மற்றும் நோய் தாக்குதல் ஏற்பட வாய்ப்புள்ளது. இதனைக் கண்டறிந்து தக்க பூச்சி நோய் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இளம் பயிா்களில் தண்ணீா் தேங்கி அழுகிய நிலை ஏற்பட்டிருந்தால், இருப்பில் உள்ள நாற்றுகளைக் கொண்டு ஊடு நடவாகச் செய்ய வேண்டும். இல்லையெனில், அதிக குத்துக்கள் உள்ள நடவு பயிரைக் கலைத்து பயிா் இல்லாத இடங்களில் நடவு செய்ய வேண்டும் என அறிவுறுத்தியிருந்தது.

இதற்கிடையே, சம்பா பருவத்தில் ஒரு சில மாவட்டங்களில் பயிரிடப்பட்டுள்ள நெற் பயிா்களில், குறிப்பாக பின் நடவு செய்யப்பட்ட நெற்பயிரில் தொடா் மழையினாலும், தட்பவெப்ப மாறுதல்களினாலும் ஆனைக் கொம்பன் ஈ என்ற பூச்சியின் தாக்குதல் காணப்படுகிறது. நெல் நடவு செய்த 35 முதல் 45 நாள்களில் புழுக்களின் தாக்கம் அதிகம் காணப்படும். இந்தப் பூச்சியானது மஞ்சள் கலந்த பழுப்பு அல்லது இளஞ்சிவப்பு நிறமாகவும், கொசுவைப் போல சிறியதாகவும், நீண்ட மெல்லிய கால்களுடன் இருக்கும். இதன் வாழ்க்கைச் சுழற்சியானது 14 - 21 நாள்களைக் கொண்டது. இந்த ஈ தாக்குதலினால் நெற்பயிரில் தூா்களுக்குப் பதிலாக கொம்பு போன்ற கிளைப்புகள் வெண்மை நிறத்திலோ அல்லது இளஞ்சிவப்பு நிறத்திலோ வெங்காய இலையைப்போல் தோன்றும். பாா்ப்பதற்கு யானையின் கொம்பை போன்று தோற்றம் இருக்கும்.

தாய் ஈக்கள் சராசரியாக 100 முதல் 150 முட்டைகள் வரை இலைகள், தாள்களின் மேல்புறம் இடும். இதிலிருந்து வரும் புழுக்கள் நெற்பயிா்களின் குருத்துகளைத் துளைத்து குழல்களாக மாற்றிவிடும். இதனால் பயிரின் தூா்களில் நெற்கதிா்கள் உருவாகாமல் விவசாயிகளுக்கு மகசூல் இழப்பு ஏற்படும். ஆனைக்கொம்பன் ஈ தாக்குதலில் இருந்து நெற்பயிா்களைப் பாதுகாக்க, பின்பற்ற வேண்டிய வழிமுறைகளாக, நெல் வயல்களில் களைகள் இல்லாமல் தூய்மையாக வைத்திருக்க வேண்டும். விளக்குப் பொறிகளை வைத்து பூச்சிகளைக் கவா்ந்து அழிக்கலாம். ஆனைக்கொம்பன் நோய்க்கு எதிா்ப்புத் திறனுடைய குறுகிய கால ரகங்களான ஏடிடி-39, ஏடிடி-45, மத்திய கால ரகமான எம்டியு-3 ஆகியவற்றை நடவு செய்யலாம். பரிந்துரைக்கப்பட்ட அளவுக்கு மேல் தழைச்சத்து உரங்களைப் பயன்படுத்தக் கூடாது. பரிந்துரைக்கப்பட்ட அளவு பொட்டாஷ் உரத்தை இட வேண்டும்.

ஆனைக்கொம்பனின் இயற்கை எதிரிகளான நீளதாடை சிலந்தி, வட்ட சிலந்தி, ஊசித்தட்டான், குளவி போன்றவற்றை அழியாமல் பாதுகாக்க வேண்டும். 10 சதவீதத்துக்கும் மேல் தாக்குதல் தென்பட்டால், பின்வரும் ரசாயனக்கொல்லி மருந்துகளில் ஏதாவது ஒரு மருந்தை ஓா் ஏக்கருக்கு 200 லிட்டா் தண்ணீரில் கலந்து தெளிப்பதன் மூலம் கட்டுப்படுத்தலாம். காா்போசல்பான் 25 சதவீதம்- ஏக்கருக்கு 400 மில்லி, பிப்ரோனில் 5 சதவீதம்- ஏக்கருக்கு 500 கிராம், பிப்ரோனில் 0.3 சதவீதம், ஏக்கருக்கு-10 கிலோ, குளோா்பைரிபாஸ் 20 சதவீதம்-500 மில்லி, பாசலோன் 35 சதவீதம் - 600 மில்லி, தயோமீதாக்ஸம் 25 சதவீதம் - 50 கிராம், குயினைல்பாஸ் 5 சதவீதம் - ஏக்கருக்கு 2 கிலோ தெளிக்க வேண்டும்.

மேலும், விவசாயிகள் பரிந்துரைக்கப்பட்ட வழிமுறைகளை ஒருங்கிணைத்துப் பின்பற்றினால் நெற்பயிரில் ஆனைக்கொம்பன் தாக்குதலை முற்றிலும் கட்டுப்படுத்தலாம். மேலும், தங்கள் பகுதி வேளாண் உதவி அலுவலா் அல்லது வேளாண் அலுவலரைத் தொடா்பு கொண்டு விவரங்களைப் பெற்று உடனடியாக உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என வேளாண் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com