நெற்பயிரில் குலைநோய்  தாக்குதலை கட்டுப்படுத்தும் முறைகள்

சம்பா, தாளடி நெற்பயிரில் குலை நோய் தாக்குதலை இயற்கை முறையில் கட்டுப்படுத்தலாம் என வேளாண்மை இணை இயக்குநர் ப. சிவக்குமார் தெரிவித்துள்ளார்.
நெற்பயிரில் குலைநோய்  தாக்குதலை கட்டுப்படுத்தும் முறைகள்


சம்பா, தாளடி நெற்பயிரில் குலை நோய் தாக்குதலை இயற்கை முறையில் கட்டுப்படுத்தலாம் என வேளாண்மை இணை இயக்குநர் ப. சிவக்குமார் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:  திருவாரூர் மாவட்டத்தில் பல இடங்களில் நெற்பயிரில் குலை நோய் தாக்குதலின் அறிகுறிகள் காணப்படுகின்றன. இலையுறை தண்டுப் பாகத்திலுள்ள கணுக்கள் மற்றும் கழுத்துப் பகுதிகளில் சேதம் ஏற்படுவதன் மூலம் கண்டறியலாம்.

குலைநோய் தாக்குதலின் அறிகுறிகள்....முதலில் இலையின் மேல் பகுதியில் அளவில் சிறிய பசுமை கலந்த நீல நிறப் புள்ளிகள் உருவாகும். பின்பு இந்த புள்ளிகள் பெரிதாகும்போது இரண்டு பக்க நுனிகளும் விரிவடைந்து, நடுப் பகுதியில் அகலமாகவும், முனைகள் கூராகவும் காணப்படும். இது பார்ப்பதற்கு நமது கண் வடிவத்தை ஒத்திருக்கும். இந்த கண் வடிவ புள்ளிகளின் ஓரங்கள் கரும்பழுப்பு நிறத்திலும், உட்பகுதி இளம் பச்சை அல்லது சாம்பல் நிறத்திலும் இருக்கும்.

தாக்குதல் அதிகமாகும்போது, இலையில் காணப்படும் பல புள்ளிகள் ஒன்றுசேர்வதால் இலைகள் காய்ந்து தீய்ந்தது போல் காணப்படும். இறுதியாக இலைகள் உதிர்ந்துவிடும். இதன் தாக்குதலால் 30 முதல் 60 சதவீதம் வரை நெல் விளைச்சல் பாதிக்கப்படுவதாகக் கண்டறியப்பட்டுள்ளது. 
தற்போது நிலவி வரும் தட்பவெப்ப நிலையின் காரணமாக, இந்தப் புள்ளிகள் பால்பருவம் முதல் முற்றும் நிலையில் உள்ள கதிர்களின் கழுத்து பகுதிகளில் புள்ளிகள் ஏற்பட்டு கதிர் ஒடிந்து விழும். இதனால் மகசூல் வெகுவாகப் பாதிக்கப்படும்.

நோய் பரவுவதற்கான சூழ்நிலை: குலை நோயானது, காற்று, விதை மற்றும் நோயுற்ற வைக்கோல் மூலமாக பரவக்கூடியத் தன்மை உடையது. 
இரவு நேரங்களில் 20 டிகிரி செல்ஷியசுக்கு குறைவான வெப்பநிலை, அதிக நேரப் பனிப்பொழிவு, 85 முதல் 90 சதவீதம் ஈரப்பதம் ஆகிய காரணிகள் இந்த நோய் பரவுவதற்கு உகந்த சூழ்நிலைகளாகும். 

குலைநோயைக் கட்டுப்படுத்தும் முறைகள்: வயல்கள் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலுள்ள களைகளை அழித்து சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். ஒரு கிலோ விதைக்கு 10 கிராம் என்ற அளவில் சூடோமோனஸ் எதிர் உயிர்க்கொல்லி மருந்தை கலந்து விதை நேர்த்தி செய்து விதைக்க வேண்டும். குலைநோயின் அறிகுறிகள் தென்படும்போது தழைச்சத்து உரங்கள் இடுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். 

தொடக்க நிலையில், குலைநோய்த் தாக்குதலை இயற்கை முறையில் கட்டுப்படுத்த ஓர் ஏக்கருக்கு ஒரு கிலோ சூடோமோனாஸ் பாக்டீரியா கலவை 0.5 சதவீத கரைசல் அதாவது ஒரு லிட்டர் தண்ணீருக்கு 5 கிராம் என்ற அளவில் நடவுநட்ட 45 நாள்கள் கழித்து, நோய்களின் தீவிரத்தைப் பொறுத்து 10 நாள்கள் இடைவெளியில் இரண்டு அல்லது மூன்று முறை தெளிக்க வேண்டும். இதனுடன் புளித்த தயிரைக் கலந்து தெளித்தால் செயல்திறன் இன்னும் அதிகரித்துக் காணப்படும். 

தாக்குதல் அதிகமாகக் காணப்படும்போது, ஓர் ஏக்கருக்கு டிரைசைக்ளோசோல் 75 சதவீதம் டயுள்யுபி 200 கிராம் அல்லது அசாக்சிஸ்டோர்பின் 25 சதவீதம் எஸ்ஸி 200 மில்லி ஆகிய ரசாயன மருந்துகளில் ஏதாவது ஒன்றை 200 லிட்டர் தண்ணீரில் கலந்து மாலை வேளையில் கைத்தெளிப்பான் கொண்டு தெளித்து குலைநோயைக் கட்டுப்படுத்தலாம் என அவர் தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com