சுடச்சுட

  
  onion


  கோவை : நடப்புப் பருவத்தில் சின்ன வெங்காயம் பயிரிடுவது விவசாயிகளுக்கு லாபம் கொடுக்கும் வகையில் இருக்குமா என்பது தொடர்பாக தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் விலை முன்னறிவிப்பு வழங்கியுள்ளது.
  அதன் விவரம்:
  இந்தியாவில், தென் இந்திய மாநிலங்களான தமிழ்நாடு, ஆந்திரம், கர்நாடக மாநிலங்களில்தான் சின்ன வெங்காயம் அதிக அளவில் பயிரிடப்படுகிறது. நாட்டின் மொத்த சின்ன வெங்காய உற்பத்தியில் சுமார் 85 சதவீதம் அளவுக்கு தமிழ்நாட்டில்தான் விளைகிறது.
  தமிழ்நாட்டில் திண்டுக்கல், திருப்பூர், பெரம்பலூர், திருச்சி, நாமக்கல், தேனி, மதுரை மாவட்டங்களில் சின்ன வெங்காயம் அதிக அளவில் பயிரிடப்படுகிறது.
  நாற்றங்கால், விதைப்பு வெங்காயம் முறைகள் மூலம் சின்ன வெங்காயம் பெரும்பாலும் சாகுபடி செய்யப்படுகிறது. குறிப்பாக, விதைப்பு வெங்காயம் முறையானது விதை உற்பத்திக்காகவே அதிகம் பயன்படுத்தப்படுகிறது. பெரும்பாலும் தை, மாசி பட்டத்தில் நாற்றங்கால் முறையில் சாகுபடி செய்யப்படுகிறது.
  இந்தப் பட்டத்தில் சாகுபடி செய்யப்படும் சின்ன வெங்காயம், ஏற்றுமதிக்கு அதிக அளவு விரும்பப்படுகிறது. இலங்கை, இந்தோனேசியா, தாய்லாந்து, சிங்கப்பூர், மலேசியா ஆகிய நாடுகள் அதிக அளவில் நமது நாட்டிலிருந்து சின்ன வெங்காயத்தை இறக்குமதி செய்கின்றன.
  இந்த நிலையில், தற்போது நாமக்கல், கோபிசெட்டிபாளையம், சத்தியமங்கலம் பகுதிகளில் இருந்து கோவை மாவட்ட சந்தைகளுக்கு அதிக அளவில் வெங்காயம் வந்து கொண்டிருக்கிறது. மைசூரில் இருந்து வரும் வெங்காய வரத்து மார்ச் மாதம் வரை இருக்கும். வர்த்தக ஆதாரங்களின்படி ரபி பருவத்தில் கர்நாடகத்தில் மழைப் பொழிவு குறைந்திருந்தாலும், வெங்காய உற்பத்தி இயல்பாகவே இருக்கிறது. எனவே, சின்ன வெங்காயத்தின் பண்ணை விலையில் குறிப்பிடத்தக்க அளவுக்கு மாற்றம் இருக்காது என்று கருதப்படுகிறது.
  இந்த சூழலில், விவசாயிகள் விதைப்பு முடிவுகளை எடுக்க ஏதுவாக தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில், தமிழ்நாடு பாசன விவசாய மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் இயங்கி வரும், வேளாண், ஊரக மேம்பாட்டு ஆய்வு மையத்தின் விலை முன்னறிவிப்புத் திட்டம், கடந்த 12 ஆண்டுகளாக திண்டுக்கல் சந்தையில் நிலவிய சின்ன வெங்காயத்தின் விலை, சந்தை நிலவரம் தொடர்பாக ஆய்வுகளை மேற்கொண்டது.
  இந்த ஆய்வுகளின் அடிப்படையில் அறுவடையின்போது தரமான சின்ன வெங்காயத்தின் சராசரி பண்ணை விலை கிலோவுக்கு ரூ.25 முதல் ரூ.27 வரை இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. ஏற்றுமதி, விதை வெங்காயத்தின் தேவைகளைப் பொறுத்து விலையில் மாற்றங்கள் இருக்கும். எனவே, விவசாயிகள் மேற்கூறிய சந்தை ஆலோசனை அடிப்படையில் விதைப்பு முடிவுகளை எடுக்கப்  பரிந்துரைக்கப்படுகின்றனர்.
  இது தொடர்பான மேலும் விவரங்களுக்கு, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் உள்நாட்டு, ஏற்றுமதி சந்தைத் தகவல் மையத்தையோ, காய்கறிப் பயிர்கள் துறையின் தலைவரையோ நேரிலோ, 0422 - 2431405, 6611374 என்ற எண்களிலோ தொடர்பு கொள்ளலாம்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai