மக்காச்சோளப் பயிரில் படைப்புழு தாக்குதலைத் தடுப்பது எப்படி?

மக்காச்சோளப் பயிரில் படைப்புழுக்களின் தாக்குதல் அறிகுறி தென்பட்டால் மேற்கொள்ள வேண்டிய தடுப்பு நடவடிக்கை குறித்து விவசாயிகளுக்கு வேளாண்மைத் துறை அதிகாரிகள்
மக்காச்சோளப் பயிரில் படைப்புழு தாக்குதலைத் தடுப்பது எப்படி?



நாமக்கல்:  மக்காச்சோளப் பயிரில் படைப்புழுக்களின் தாக்குதல் அறிகுறி தென்பட்டால் மேற்கொள்ள வேண்டிய தடுப்பு நடவடிக்கை குறித்து விவசாயிகளுக்கு வேளாண்மைத் துறை அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.
நாமக்கல் மாவட்டத்தில் சுமார் 9,510 ஹெக்டர் பரப்பளவில் மக்காச் சோளம் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.  இந்த ஆண்டு மக்காச் சோளத்தில் படைப்புழு தாக்குதல் கண்டறிப்பட்டுள்ளது. இந்தப் படைப்புழுவானது நெல், சோளம், பருத்தி, நிலக்கடலை, கரும்பு, தக்காளி, வெங்காயம் உள்ளிட்ட 80 வகையான பயிர்களைத் தாக்குவது கண்டறியப்பட்டுள்ளது. 
இதுகுறித்து மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் ஜெ.சேகரிடம் கேட்டபோது, அவர் கூறியது:-
அனைத்து வட்டாரங்களிலும் படைப்புழுக்களின் தாக்குதல் பரவுவதற்கு முன்  வேளாண்மைத் துறை மூலம் முழுவீச்சில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
 படைப்புழுவின் தாய் அந்துப்பூச்சியானது பழுப்பு நிறத்தில் காணப்படும். இறக்கைகளின் நுனியும் மத்திய பகுதிகளில் வெள்ளைநிற புள்ளிகளுடன் காணப்படும். இளம்
புழுக்களின் தலைப்பகுதியில் மஞ்சள் நிறத்தில் தலைகீழாக இருப்பது போன்று காணப்படும். 
பயிரில் ஏற்படும் பாதிப்பு அறிகுறிகள்:    தாய்அந்துப்பூச்சி லட்சக்கணக்கான முட்டைகள் கொண்ட குவியல்களைப் பெரும்பாலும் இலையின் அடிப்பகுதியில் இடுகிறது. தண்டிலிருந்து இலை வெளிவரும் பகுதி முட்டையிடுவதற்கு மிகவும் உகந்தது. இவை செடியின் அடிப்பகுதியில் இருக்கும் இலைகளில் முட்டைகளை இடும்.  எண்ணிக்கை அதிகமாக இருக்கும்போது செடியின் மேற்பரப்பில் அல்லது அருகிலுள்ள களைகளில் முட்டைகளை இடும்.
முட்டையிலிருந்து வெளிவரும் புழுக்கள் இலைகளின் அடிப்பகுதியில் சுரண்டி சேதத்தை உண்டு பண்ணும். சேதத்தால் இலைகள் பச்சையம் இழந்து வெண்மையாகக் காணப்படும். இளம் புழுக்கள் நூலிழைகளை உருவாக்கும். இதன் மூலம் காற்றின் திசையில் ஒரு செடியிலிருந்து மற்றொரு செடிக்கு செல்லும். இளம் செடிகளில் இலை உறைகளையும், முதிர்ந்த செடிகளில் நூலிழைகளையும் அதிகம் சேதப்படுத்தும். இரவு நேரங்களில் அதிகமான சேதத்தை விளைவிக்கும்.
மூன்று முதல் ஆறு நிலை புழுக்கள் இலையுறையினுள் சென்று பாதிப்பை உண்டாக்கும்.  இதனால் இலைகள் விரிவடையும் போது அதில் வரிசையாகத் துளைகள்  தென்படும். இளம் செடிகளில் நுனிக் குருத்து சேதமடைந்தால் பக்க இலைகள் மற்றும் கதிர்கள் தோன்றும். ஒரு இலையுறையினுள் இரண்டு அல்லது மூன்று புழுக்கள் மட்டும் இருக்கும்.  உருவத்தில் பெரிதாக இருக்கும் புழு சிறிய புழுக்களை தின்றுவிடும்.  கதிர் உருவானதற்குபின் பாதிப்பு தோன்றினால் கதிரின் மேலுள்ள உறைகளை சேதப்படுத்தி கதிரை சேதப்படுத்தும்.
கட்டுப்படுத்தும் முறைகள்: முதலில் வயலை களைகள் இல்லாமல் தூய்மையாக வைத்திருக்க வேண்டும். கோடை உழவு செய்வதன் மூலம் மண்ணிலுள்ள கூட்டுப் புழுக்களை அழிக்கலாம். குருத்து காய்ந்த செடிகளை உடனுக்குடன் அப்புறப்படுத்தி அழித்திட வேண்டும். விளக்குப் பொறி வைத்து தாய் அந்து பூச்சிகளைக் கண்காணிக்க வேண்டும். அதிகமாக தழைச்சத்து இடுவதை தவிர்க்க வேண்டும். 
விதை நேர்த்தி செய்வதால் ஆரம்ப கட்டத்தில் இளம் பயிரை பாதுகாக்கலாம். ஒரே நேரத்தில் பயிர் சாகுபடி செய்ய வேண்டும். மக்காச்சோளப் பயிரைத் தொடர்ந்து பல பருவங்களில் தொடர்ந்து சாகுபடி செய்வதைத் தவிர்க்க வேண்டும்.  
காலம் தாழ்த்தி பயிர் செய்வதைத் தவிர்க்க வேண்டும். வயலைச்சுற்றி பயறுவகைப் பயிர்களைத் தடுப்புப் பயிராக விதைக்க வேண்டும். 
கம்புநேப்பியர்  புல்வகை பயிரை  வரப்பு பயிராகப் பயிரிடுவதன் மூலம், புழுக்களின் வளர்ச்சி நிலைகளைக் கட்டுப்படுத்தலாம். ஆரம்ப நிலையில் முட்டையில் இருந்து வெளிவரும்  புழுக்களைக் கண்காணிப்பு முறையில் எளிதாக அழிக்கலாம். முட்டை ஒட்டுண்ணிகள் (டிரைக்கோகிரம்மா, டெலினோமஸ் மற்றும் புழு ஒட்டுண்ணி  சைலோனிஸ்) மூலம் முட்டை மற்றும் புழுக்களை அழிக்கலாம். புள்ளி வண்டுகள், தரைவண்டுகள் மற்றும் ராட்சத நாவாய்பூச்சிகள் போன்றவை படைப்புழுவை உண்ணும் தன்மை உடையன. ஆகையால் வயலில் பூ பூக்கும் தாவரங்களை ஓரமாகவோ அல்லது ஊடு பயிராகவோ பயிர் செய்வதன் மூலம் நன்மை செய்யும் எதிர் உயிரினங்களின் எண்ணிக்கையை பெருக்கலாம்.
எதிர் உயிர் நுண்ணுயிர்களான பிவேரியா பேசியானா, மெட்டாரைசியம் அனைசோபிலியோ மற்றும் பேசில்லஸ் துரிஞ்சியன்சிஸ் போன்றவற்றை ஒரு லிட்டர் தண்ணீருக்கு 2 முதல் 5 கிராம் வரை பயன்படுத்தி பாதிப்பை கட்டுப்படுத்தலாம். 
என்.பி.வி. வைரஸ் கரைசலை ஒரு லிட்டர் நீருக்கு 2 மில்லி வீதம் தெளிக்கலாம். இயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட, இஞ்சி, பூண்டு, கரைசல், பூச்சி விரட்டி கரைசல், வேம்பு சார்ந்த பூச்சிகொல்லிகளை பயன்படுத்துவதன் மூலம் பாதிப்பைக் குறைக்கலாம். வேப்பம் புண்ணாக்கு 100 கிலோ 1 ஏக்கருக்கு இட  வேண்டும். புழுக்களின் பாதிப்பு பொருளாதார சேத நிலையினை தாண்டும்போது பின்வரும் பூச்சிக் கொல்லிகளில் ஏதேனும் ஒன்றை பயன்படுத்த வேண்டும். கார்டாப் குருணை மருந்தை, ஏக்கருக்கு தகுந்தாற்போல் மணலுடன் கலந்து குருத்துப் பகுதியில் இடுவதன் மூலம் புழுக்களை கட்டுப்படுத்தலாம். 
பூச்சி நோய் தாக்குதல் அறிகுறிகள் தென்பட்டால் விவசாயிகள் உடனடியாக  சம்பந்தப்பட்ட வேளாண் விரிவாக்க மையம் அல்லது வேளாண் அறிவியல் நிலையம் லத்துவாடி ஆகியவற்றினைத் தொடர்பு கொண்டு தக்க அறிவுரைகளை பெற்று தடுப்பு நடவடிக்கைளை மேற்கொள்ள வேண்டும்.  
 மேற்காணும் அனைத்து தடுப்பு நடவடிக்கை முறைகளையும் விவசாயிகள் பின்பற்றி படைப்புழு தாக்குதலிருந்து மக்காச்சோள பயிரினை பாதுகாத்திட வேண்டும் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com