தக்காளியில் சுரங்கப் பூச்சி: கண்டறிதலும் கட்டுப்பாடும்

அந்துப்பூச்சி இனத்தைச் சேர்ந்த சுரங்கப்பூச்சியானது பெரு நாட்டில் முதன்முதலாக தக்காளி பயிரில் கண்டறியப்பட்டது.
தக்காளியில் சுரங்கப் பூச்சி: கண்டறிதலும் கட்டுப்பாடும்


கிருஷ்ணகிரி: அந்துப்பூச்சி இனத்தைச் சேர்ந்த சுரங்கப்பூச்சியானது பெரு நாட்டில் முதன்முதலாக தக்காளி பயிரில் கண்டறியப்பட்டது.   தென் அமெரிக்கா,  ஐரோப்பா, ஆப்பிரிக்கா மற்றும் ஆசிய நாடுகளில் காணப்படும் இந்தப் பூச்சியானது,  தற்போது இந்தியாவில் குஜராத்,  மகாராஷ்டிரம், ஆந்திரம், தெலங்கானா மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் தக்காளி பயிரைத் தாக்கி,  விவசாயிகளுக்கு இழப்பை ஏற்படுத்தி வருகிறது. 
 தக்காளியில் சுரங்கப் பூச்சியைக் கண்டறிதல் மற்றும் அவற்றை கட்டுப்படுத்துவது குறித்து,   கிருஷ்ணகிரியை அடுத்த எலுமிச்சங்கிரியில் உள்ள வேளாண் அறிவியல் மையத்தின் திட்டத் தலைவர் சுந்தரராஜ் தெரிவித்தது:
 சுரங்கப் பூச்சியின் வாழ்க்கைச் சுழற்சி:  பெண் அந்துப் பூச்சி சராசரியாக 200 முட்டைகளை இடும்.  இந்த முட்டைகளை இலைகளின் அடிப்பகுதி,  தண்டு,   பூ மற்றும் காய்களின் மேற்பரப்பில் இடும்.  இந்த முட்டைகள் 6 அல்லது 7 நாள்களில் பொரித்து,  புழுக்களாக வெளியே வருகின்றன.   இந்தப் புழுக்கள் 10 முதல் 12 நாள்களில் நான்கு முறை தோல்களை நீக்கி,  உருமாறி,  காய்ந்த இலைகள் அல்லது காய்கள் அல்லது மண்ணில் ஒட்டிக் கொள்ளும்.    6 அல்லது 7 நாள்களில் இவை அந்துப் பூச்சிகளாக உருமாறி காலை,  மாலை வேளைகளில் பறப்பதைக் காணலாம்.  பகல் நேரங்களில் செடியில் மறைந்திருக்கும்.  இந்தப் பூச்சியின் இறக்கைகள் மினுமினுப்புத் தன்மை கொண்டதாக இருக்கும்.
   பூச்சித் தாக்குதலின் அறிகுறிகள்:  பூச்சித் தாக்குதலுக்கு உள்ளான செடியின் இலைகளின் மேற்பரப்பில் திட்டுத்திட்டாக ஒழுங்கற்ற வட்ட வடிவில் காய்ந்த பகுதி தென்படும்.  இந்த காய்ந்த பகுதியில் புழுக்களின் எச்சம் கருப்பு நிறத்தில் இருப்பதைக் காணலாம்.   இந்தப் புழுவானது செடியின் பூ,  காய்,  தண்டு ஆகிய பகுதிகளைத் தாக்கி, சேதத்தை ஏற்படுத்துகிறது.
  தக்காளிப் பழத்தில் குண்டூசி முனை போல ஓட்டைகள் இட்டு,   உள்சென்று சேதத்தை அதிகப்படுத்தும்.   புழுத் தாக்குதலுக்கு உள்ளான செடியின் பூக்களின் மொட்டு,  பூக்கள், இலைகள் காய்ந்து கீழே விழுவதைக் காணலாம்.  தாக்குதலுக்கு உள்ளான பழங்களில் பூஞ்சாண் ஏற்பட்டு,   அழுகல் நோய்க்கு உள்ளாகும்.   சுரங்கப் பூச்சி,  அளவில் சிறிதாக இருப்பதால்,  அவற்றை எளிதில் கண்ணால் காண முடியாது. 
 மேலாண்மை:  மிகவும் மோசமாக சேதமடைந்த அல்லது அறுவடை செய்த பயிர்கள்,   நோய்த் தாக்குதலால் கீழே விழுந்த தக்காளிப் பழங்களைச் சேகரித்து,  தீயிட்டு எரித்தோ அல்லது புதைப்பது நல்லது.   பயிர் சுழற்சி முறையைப் பின்பற்றுவது சிறப்பு.   பூச்சித் தாக்குதல் இல்லாமல் இருக்க, நாற்றுகளை பசுமைக் குடில் அல்லது நாற்றுப்பண்ணை வலை கொண்டு மூடி பாதுகாக்க வேண்டும்.   தேவைப்பட்டால்,  வேப்பங் கொட்டையின் வடிசாளை 0.5 சதக் கரைசலை சோப்பு நீருடன் கலந்து தெளிக்கலாம்.
 குருணை மருந்து தெளிப்பதைத் தவிர்க்க வேண்டும்.   இதன் மூலம்,  இயற்கையாக நன்மை செய்யும் பூச்சிகளைக் காக்கலாம்.   தேவையற்ற பயிர் ஊக்கிகள்,  பூச்சி மற்றும் பூஞ்சாண் கொல்லிகள்,  உரங்கள் ஆகியவற்றை தவிர்க்கலாம். 
   இனக் கவர்ச்சி பொறி: ஆண் அந்துப்பூச்சிகளைக் கவர்ந்து இழுத்து அவற்றை அழிக்கும் வகையில் பிரத்யேகமாகத் தயாரிக்கப்பட்ட இனக் கவர்ச்சி பொறிகளை ஏக்கருக்கு 15 என்ற எண்ணிக்கையில் வைத்து,   சுரங்கப் பூச்சியின் நடமாட்டத்தைக் கண்காணிக்கலாம்.   தற்போது மஞ்சள் நிற ஒட்டும் அட்டை,   நீர் தட்டு வடிவ அமைப்புகளில்  இந்த இனக் கவர்ச்சி பொறிகள் வணிக நோக்கில் சந்தையில் கிடைக்கின்றன.  
இந்த இனக் கவர்ச்சி பொறிகளை அதிக அளவில் பயன்படுத்துவதன் மூலம்,  ஆண் பூச்சிகளைக் கவர்ந்து, கொல்வதன் மூலம் பெண் பூச்சிகள் முட்டை இடும் செயலைத் தடுக்கலாம். 
இயற்கை முறை கட்டுப்பாடு:  சுரங்கப் பூச்சியின் முட்டைகளை அழிக்கும் டிரைக்கோரிமா வகை ஒட்டுண்ணிகள்,  புழுக்களை இரையாக்கி உள்கொள்ளும் மற்ற இரை விழுங்கி பூச்சிகளான நெசிடியோகோரிஸ் போன்றவற்றை அழியாமல் காப்பது நல்லது. 
 பூச்சி கொல்லியின் பயன்பாடு:
இனக் கவர்ச்சி பொறியில் ஒரு வாரத்தில் 20 முதல் 30 பூச்சிகளுக்கு மேல் காணப்பட்டால்,  உடனடியாக கீழ்க்கண்ட பூச்சிக் கொல்லி மருந்துகளைப் பயன்படுத்துவது அவசியமாகிறது.   ஒரு லிட்டர் தண்ணீரில் குளோரன்டி ரிநிப்ரோல்(ரைநாக்ஸிபைர்) 10, 26 சதம் ஓடி-யை 0.3 மிலி என்ற அளவிலோ அல்லது சைனாட்ரிநிப்ரோல் (சைனாக்ஸிபைர்) 18.5 சத எஸ்சி என்ற பூச்சி கொல்லியை 0.3 மி.லி. என்ற அளவில் கலந்தோ அல்லது ஃபுளுபென்டமைட் 20 சதம் டபிள்யூஜி என்ற பூச்சி கொல்லியை 0.3 மி.லி.  என்ற அளவிலோ, இன்டாக்சாகார்ப் 14.5 சத எஸ்.சி என்ற பூச்சி கொல்லியை 0.5 மி.லி.  என்ற அளவிலோ,  இமிடாகுளோபிரிட் 17.8 எஸ்எல் என்ற பூச்சி கொல்லியை 0.3 மி.லி என்ற அளவிலோ அசாடிராக்டின் (வேம்பு) 1 சதம் அல்லது 5 சதம் என்ற பூச்சி கொல்லியை 2 அல்லது 3 மி.லி. என்ற அளவிலோ பயன்படுத்தலாம். 
மேலும்,  விவரங்களுக்கு முதுநிலை விஞ்ஞானி மற்றும் தலைவர்,  வேளாண் அறிவியல் மையம்,  எலுமிச்சங்கிரி,  கிருஷ்ணகிரி - 635120 என்ற முகவரியிலோ அல்லது 8098280123 என்ற எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com