நெல்தரிசில் பயறுவகைப் பயிர் சாகுபடி

நெல் தரிசில் பயறுவகைப் பயிர்கள் சாகுபடி மற்றும்  பயிர் பாதுகாப்பு தொழில்நுட்பங்கள் குறித்து திருவாரூர் மாவட்டம்,
நெல்தரிசில் பயறுவகைப் பயிர் சாகுபடி


நீடாமங்கலம்: நெல் தரிசில் பயறுவகைப் பயிர்கள் சாகுபடி மற்றும்  பயிர் பாதுகாப்பு தொழில்நுட்பங்கள் குறித்து திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலைய விஞ்ஞானிகள் ராஜா. ரமேஷ் மற்றும் ஆ. பாஸ்கரன் ஆகியோர் யோசனை அளித்துள்ளனர்.
இதுதொடர்பாக அவர்கள் கூறியது:
பயறு வகைப் பயிர்கள் நமது உடல் வளர்ச்சிக்கும், அறிவாற்றலுக்கும் அவசியமான புரதச்சத்தைத் தன்னகத்தே கொண்டுள்ளன. தானியப் பயிர்களைக் காட்டிலும் பயறு வகைப் பயிர்களில் புரதச்சத்தானது 2 மடங்கு அதிகம். உலக சுகாதார அமைப்பு ஒரு நாளைக்கு ஒரு மனிதனுக்கு 80 கிராம் புரதச்சத்து தேவைப்படுவதாகத் தெரிவித்துள்ளது. ஆனால், 40 கிராமுக்கும் குறைவாகவே உள்ளது.
நெல் தரிசுப் பயிர்கள்: காவிரி டெல்டா பாசனப் பகுதிகளில் சம்பா மற்றும் தாளடி நெல் அறுவடைக்கு முன் மெழுகுபத ஈரப்பதத்தில் பயறு வகைப் பயிர்களின் விதைகள் விதைக்கப்பட்டு சாகுபடி செய்யப்படுகின்றன. இதற்கு நெல் தரிசுப் பயிர்கள் அல்லது தொடர் பயிர்கள் என்று பெயர். நெல் தரிசில் வயலிலுள்ள ஈரப்பதம் மற்றும் ஊட்டச்சத்துக்களைப் பயன்படுத்தி சாகுபடி செய்யப்படுவதால், அதிக செலவின்றி விவசாயிகளுக்கு கூடுதல் வருவாய் கிடைக்க வாய்ப்புள்ளது.
 கீழ்க்கண்ட முறைகளைப் பின்பற்றினால், அதிக விளைச்சல் பெறுவதற்கு வாய்ப்புகள் அதிகம். 
மண் வகை: களிமண் கலந்த இருமண்பாடு கொண்ட நிலங்கள் மிகவும் உகந்தவை. பச்சைப் பயறானது களர் மற்றும் உவர் நிலங்களில் நன்கு வளரும்.
ரகங்கள்: உளுந்து ரகங்களான ஏடிடி 3, ஏடிடி 5, ஏடிடி 6, டி.எம்.வி. 1 மற்றும் கோ 4, பச்சைப் பயறு ரகங்களான ஏடிடி 3, கே.எம். 2 ஆகியவற்றை சாகுபடி செய்யலாம். தரமானச் சான்று பெற்ற விதைகளைத் தேர்வு செய்து பயன்படுத்தவும்.
பட்டம்: தைப்பட்டம் மிகவும் ஏற்ற பருவமாகும். 
விதையளவு: ஏக்கருக்கு 10 கிலோ விதை போதுமானதாகும். இயந்திரம் மூலம் அறுவடை செய்யப்படும் இடங்களில் 12 கிலோ விதையளவைப் பயன்படுத்த வேண்டும். சங்கிலி வடிவ இயந்திரம் மூலம் நெல் அறுவடை செய்யும் இடங்களில் பயிர்கள் நன்கு வளரும்.
விதை நேர்த்தி: ஆறிய அரிசி கஞ்சியில் ஓர் ஏக்கருக்கு தேவைப்படும் 10 கிலோ விதையுடன் ஒரு பாக்கெட் ரைசோபியம் (200 கிராம்), ஒரு பாக்கெட் பாஸ்போபாக்டீரியா (200 கிராம்) ஆகிய உயிர் உரங்கள் மற்றும் 100 கிராம் சூடோமோனாஸ் கலந்து விதை நேர்த்தி செய்ய வேண்டும். பின்பு அதனை 15 நிமிடங்கள் நிழலில் உலர்த்தி, 24 மணி நேரத்துக்குள் விதைக்க வேண்டும்.
விதைப்பு: சம்பா மற்றும் தாளடி நெல் அறுவடையானது ஆள்கள் மூலம் மேற்கொள்ளப்படும் இடங்களில் அறுவடைக்கு 7 முதல் 10 நாள்களுக்கு முன்பாகவும், இயந்திரம் மூலம் அறுவடை செய்யப்படும் இடங்களில் 4 முதல் 6 நாள்களுக்கு முன்பாகவும் மெழுகுப்பத ஈரப்பதத்தில் விதைகள் விதைக்கப்பட வேண்டும். மெழுகுப்பதம் இல்லையெனில், நீர்ப்பாசனம் செய்து மெழுகுப் பதம் வந்த பின்பு விதைகளைத் தெளிக்க வேண்டும்.
பயிர்களின் எண்ணிக்கை: ஒரு சதுர மீட்டரில் 33 செடிகள் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். விதைகள் முளைக்காத இடங்களில், முளை கண்ட விதைகளை மீண்டும் தெளித்து சரியான பயிர் எண்ணிக்கையைப் பராமரிக்க வேண்டும்.
களைக் கட்டுப்பாடு: விதைத்த 20-ஆம் நாள் ஓர் ஏக்கருக்கு 400 மில்லி குயிஸலாபாப் ஈதைல் களைக்கொல்லி மருந்தினை 200 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளித்து புல் வகை களைகள், நெல் மறுதாம்பு பயிர் மற்றும் நெல் அறுவடையின்போது விழுந்து முளைக்கும் நெல் நாற்றுகள் ஆகியவற்றைக் கட்டுப்படுத்தலாம். அகன்ற இலை களைகளைக் கட்டுப்படுத்த இமாசிதபயர் களைக்கொல்லி மருந்தினை ஓர் ஏக்கருக்கு 400 மில்லி என்ற அளவில், களைகள் நன்கு இலைப் பருவத்தில் இருக்கும்போது வயலில் போதுமான ஈரம் வைத்து, 200 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளித்துக் கட்டுப்படுத்தலாம்.
இலைவழி ஊட்டச்சத்து அளித்தல் : நெல் தரிசில் அடி உரம் இடமுடியாத இடங்களில் 2 சதவீத டிஏபி கரைசலை (ஒரு லிட்டர் தண்ணீருக்கு 20 கிராம் டிஏபி என்ற அளவில்), ஃபிளானோபிக்ஸ் வளர்ச்சி ஊக்கி அல்லது தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் பயறு ஒண்டர் தெளிக்க வேண்டும். விதைத்த 25-ஆவது நாள் அதாவது பூக்கும் தருணத்திலும், 45-ஆவது நாள் (காய் பிடிக்கும் தருணம்) 2 சதவீத டிஏபி கரைசல், ஒரு சதவீத பொட்டாசியம் குளோரைடு, 40 பிபிஎம் ஃபிளானோபிக்ஸ் கலந்த கரைசலை காலை அல்லது மாலை வேளைகளில் இலைகளில் நன்கு நனையும்படி கைத்தெளிப்பான் கொண்டு தெளிக்க வேண்டும்.
கரைசல் தயாரிக்கும் முறை: ஓர் ஏக்கருக்கு தேவைப்படும் 4 கிலோ டிஏபியை 10 லிட்டர் தண்ணீரில் முதல் நாள் இரவு கலந்து ஊற வைத்து, மறுநாள் காலை தெளிந்த கரைசலை மட்டும் எடுத்து அதனுடன் 2 கிலோ பொட்டாசியம் குளோரைடு மற்றும் 160 மில்லி ஃபிளானோபிக்ஸ் வளர்ச்சி ஊக்கி மருந்தினைக் கலந்து தேவையான அளவு தண்ணீர் கலந்து, 200 லிட்டர் கரைசல் தயாரித்து தெளிக்க வேண்டும்.
தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் பயறு ஒண்டர்: ஓர் ஏக்கருக்கு தேவைப்படும் 2 கிலோ பயறு ஒண்டர் மருந்தினை தேவையான அளவு ஒட்டும் திரவத்தினுடன் 200 லிட்டர் தண்ணீரில் கலந்து, பூக்கும் தருணத்தில் தெளிப்பதனால் வறட்சியைத் தாங்கி காய்கள் அதிகம் பிடித்து விளைச்சலானது, 20-25 சதவீதம் வரை அதிகரிக்க 
வழிவகுக்கும்.
ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு:
சாறு உறிஞ்சும் பூச்சிகளான அசுவிணி, வெள்ளை ஈ, தத்துப்பூச்சி மற்றும் இலைச் சிலந்தி ஆகியவற்றின் தாக்குதலைக் கட்டுப்படுத்த 3 சதவீத வேப்பெண்ணெய் கரைசல் அல்லது 5 சதவீத வேப்பம் பருப்பு கரைசல் தெளித்து கட்டுப்படுத்தலாம் அல்லது ஓர் ஏக்கருக்கு டைமெத்தோயேட் 30 ஈசி 200 மில்லி மருந்தை 200 லிட்டர் தண்ணீரில் கலந்து, மாலை வேளைகளில் தெளித்துக் கட்டுப்படுத்தலாம். மேலும்  ஏக்கருக்கு  5 இனக்கவர்ச்சிப் பொறிகளை வைத்து, 
ஆண் அந்துப் பூச்சிகளையும், ஒரு விளக்குப் பொறியை வைத்து தாய்  அந்துப் பூச்சிகளையும் கவர்ந்து அழிக்கலாம்.
இதன் தாக்குதல் பொருளாதார சேதநிலையைத் தாண்டினால், தயோடிகார்ப் 75 டயிள்யூ.பி. 250 மில்லி அல்லது குளோர்பைரிபாஸ் 20 ஈசி 500 மில்லி அல்லது டைகுளோர்வாஸ் 76 ஈ.சி. 400 மில்லி இவற்றில் ஏதேனும் ஒரு மருந்தை 200 லிட்டர் தண்ணீரில் கலந்து, மாலை வேளைகளில் தெளித்துக் கட்டுப்படுத்தலாம்.
மஞ்சள்தேமல் நோயைக் கட்டுப்படுத்த நோய்த் தாக்கிய செடிகளை அகற்றி அழித்துவிட வேண்டும். மேலும், இந்நோயைப் பரப்பும் வெள்ளை ஈயைக் கட்டுப்படுத்த டைமெத்தோயேட் 30 ஈசி 200 மில்லி அல்லது மோனோகுரோட்டோபாஸ் 36 எஸ்.எல். 200 மில்லி இவற்றில் ஏதேனும் ஒன்றை 200 லிட்டர் தண்ணீரில் கலந்து மாலை வேளைகளில் தெளித்துக் கட்டுப்படுத்தலாம்.
அறுவடை: 80 சதவீதத்துக்கும் அதிகமான காய்கள் முதிர்ச்சியடைந்தவுடன் செடிகளை தரைமட்டத்துக்கு சற்று மேலே வெட்டி, அறுவடை செய்ய வேண்டும். இதனால், மண்ணிலிருக்கும் வேர்கள் மண் வளத்தைப் பெருக்க உதவிடும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com