Enable Javscript for better performance
மூலிகைத் தாவர சாகுபடி முன்னணியில் துளசி!- Dinamani

சுடச்சுட

    

    மூலிகைத் தாவர சாகுபடி முன்னணியில் துளசி!

    Published on : 04th July 2019 01:06 AM  |   அ+அ அ-   |    |  

    tulsi


    திருநெல்வேலி: காய், கனிகள், மலர் சாகுபடிக்குப் போட்டியாக இந்தியா முழுவதும் மூலிகைத் தாவர சாகுபடியும் அதிகரித்து வருகிறது. இளம் தலைமுறை விவசாயிகளும், தொழில்முனைவோராக மாற விரும்புவோரும் மூலிகைத் தாவர சாகுபடியை அதிகம் விரும்பிச் செய்கின்றனர். மேற்குத் தொடர்ச்சி மலை, போதிய மழை வளம் கொண்டுள்ள திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் பலவகை மூலிகைத் தாவரங்கள்  பயிரிடப்பட்டு வருகின்றன. இவற்றில், துளசி சாகுபாடி முன்னணியில் உள்ளது.
    இந்தியாவை தாயகமாகக் கொண்ட துளசி மூலிகைச்செடி, வழிபாட்டில் முக்கிய பங்கு வகிக்கிறது. துளசி காற்றைச் சுத்தப்படுத்தி, சுற்றுச்சூழல் மாசைக் கட்டுப்படுத்துகிறது. ஆன்டி ஆக்சிடன்ட், வைட்டமின் ஏ, சி, கால்சியம் அதிகளவில் உள்ளது. இது கிருமி, கொசுக்களுக்கு எதிரான பூச்சிக்கொல்லியாக செயல்படுகிறது. துளசி இலையிலிருந்து எடுக்கப்படும் எளிதில் ஆவியாகக்கூடிய எண்ணெய் பூச்சிக்கொல்லியாகவும், ஆன்டி பாக்டீரியாவாகவும் செயல்படுகிறது. நறுமண மூலிகையான துளசியை மற்ற மூலிகைகளுடன் சேர்த்து பயன்படுத்தலாம். துளசி இலை, பூக்களை சாறாக அல்லது தேநீராகத் தயாரித்து வயிற்றுவலி, இருமல், மார்புச் சளி, தோல் வியாதி, வயிற்றுப்போக்கு ஆகியவற்றுக்கு மருந்தாகப் பயன்படுத்தலாம். மலேரியா, காலரா,  புற்றுநோய் ஆகியவற்றைத் தடுக்கும் முன்காப்பு மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது.
    துளசி விதையை தண்ணீர், பழச்சாறு அல்லது பாலுடன் கலந்து பயன்படுத்தும்போது ஆன்டி ஆக்சிடன்டாக மாறுகிறது. ஆற்றல் குறைவு, அல்சர், வாந்தி, வயிற்றுப் பிரச்னைக்கு மருந்தாகவும், டானிக்காகவும் பயன்படுகிறது. துளசி வேரிலிருந்து தயாரிக்கப்படும் பொடியை பால், நெய்யுடன் கலந்தோ, சாறாக மாற்றியோ மலேரியா காய்ச்சலுக்கு மருந்தாகப் பயன்படுத்தலாம். இது, பூச்சிக்கடிக்கு மருந்தாக, வலி நிவாரணியாக பயன்படுகிறது. துளசி, ரத்த அழுத்தத்தை, ரத்தத்தில் சர்க்கரையின் அளவை சமன் செய்கிறது. 
    நடவு முறை: துளசியில், பச்சை,  ஊதா   என 2  ரகங்கள்  உள்ளன. இவை எல்லா வகை மண்ணிலும் வளரும். அதிக உப்பு, காரத்தன்மை, நீர் தேங்கும் பகுதிகளில் வளருவதில்லை. அங்ககத் தன்மையுள்ள மணல் கலந்த பசலை மண்ணில் நன்கு வளரும். வெப்பம், மிதவெப்ப காலநிலையில் நன்கு வளரும். துளசி, விதை மூலம் இனப்பெருக்கம் செய்கிறது. ஒரு ஹெக்டேருக்கு 300 கிராம் விதை போதும். 
    நாற்றங்கால், அரை நிழல், பாசன வசதியுடன் இருக்க வேண்டும். மண்ணை 30 செ.மீ. அளவுக்கு பறித்து, நன்கு மக்கிய தொழுஉரமிட்டு மண்ணைப் பண்படுத்தி, 4.5-1.0-0.2 மீ அளவுள்ள படுக்கைகள் அமைக்க வேண்டும். பருவமழை தொடங்குவதற்கு 2 மாதங்களுக்கு முன்னரே 1:4 என்ற விகிதத்தில் விதையை மணலுடன் கலந்து நாற்றங்கால் படுக்கைகளில் விதைக்க வேண்டும். 8 முதல் 12 நாள்களில் முளை வந்து, நாற்றுகள் 6 வாரங்களில் 4 - 5 இலைகளுடன் நடவுக்குத் தயாராகிவிடும். விதையில்லா பெருக்கத்துக்கு அக்டோபர் - டிசம்பர் மாதங்களில் துளசியின் முற்றிய கிளையின் நுனிகளை வெட்டி நட்டால் 90-100 சதவீதம் முளைத்துவிடும்.  இதற்கு 10-15 செ.மீ. நீளமும், 8-10 கணுக்களும் உள்ள தண்டுகள் பயன்படுத்தப்படுகின்றன.
    விளைநிலம் தயாரிக்கும்போது ஹெக்டேருக்கு 15 டன் தொழுஉரத்தை அடியுரமாக அளிக்க வேண்டும். தழை, மணி, சாம்பல் சத்துகள் முறையே ஹெக்டேருக்கு 120: 60: 60 கிலோ கிராம் என்ற அளவில் பரிந்துரைக்கப்படுகிறது. நட்ட ஒரு மாதம் கழித்து முதல் களையெடுப்பும், அடுத்த 30 நாளில் 2-ஆவது களையெடுப்பும் செய்ய வேண்டும். பிறகு களையெடுக்கத் தேவையில்லை. பொதுவாக, துளசி அதிகளவில் பூச்சி, நோயால் தாக்கப்படுவதில்லை. சில பூச்சிகள், இலைச் சுருட்டுப் புழு போன்றவை துளசியைத் தாக்குகின்றன. 0.2 சதவீதம் மாலத்தியான் அல்லது 0.1 சதவீதம் மெத்தில் பாரத்தியான் தெளிப்பதன் மூலம் கட்டுப்படுத்தலாம்.
    மீன் எண்ணெய் சோப்புகளைப் பயன்படுத்தி, சாறு உறிஞ்சும் பூச்சிகளையும், நனையும் கந்தகம் 0.3 சதவீதம் தெளித்து சாம்பல் நோயையையும், நாற்றங்கால் படுக்கைகளில் 0.1 சதவீதம் மெர்குரியல் பங்கிசைடு மண்ணில் அளித்து நாற்று கருகல், வேர் அழுகல் நோய்களையும் கட்டுப்படுத்தலாம்.
    நடவு செய்த 90 நாளுக்குப் பிறகு முதல் அறுவடை செய்யலாம். தொடர்ந்து, ஒவ்வொரு 75 நாளுக்குப் பிறகும் அறுவடை செய்யலாம். வெயில் காலங்களில் அறுவடை செய்வதால் அதிக அறுவடை கிடைக்கும். எண்ணெய் அளவும் அதிகமிருக்கும். ஓராண்டுக்கு ஒரு ஹெக்டேருக்கு துளசி மூலிகைகள் சராசரியாக 10,000 கிலோ கிடைக்கும். துளசி 0.1 முதல் 0.23 சதவீதம் எண்ணெய் கொண்டது. ஹெக்டேருக்கு 10 - 20 கிலோ எண்ணெய் கிடைக்கிறது.
     

    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    kattana sevai
    flipboard facebook twitter whatsapp