மானாவாரியில் ஒருங்கிணைந்த பண்ணை முறை

ஒருங்கிணைந்த பண்ணையம் என்பது விவசாயத்தில் ஒரு பண்ணையத் தொழிலை மட்டும் மேற்கொள்ளாமல்,
மானாவாரியில் ஒருங்கிணைந்த பண்ணை முறை


பெரம்பலூர்: ஒருங்கிணைந்த பண்ணையம் என்பது விவசாயத்தில் ஒரு பண்ணையத் தொழிலை மட்டும் மேற்கொள்ளாமல், ஒன்றோடொன்று தொடர்புடைய இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட பண்ணைத் தொழில்களைக் கூட்டாக மேற்கொள்வதாகும். இதுகுறித்து, பெரம்பலூர் மாவட்டம், வாலிகண்டபுரத்தில் உள்ள ஹேன்ஸ் ரோவர் வேளாண் அறிவியல் மைய தோட்டக்கலை தொழில்நுட்ப வல்லுநர் ஜெ. கதிரன் கூறியதாவது: 
ஒருங்கிணைந்த பண்ணையத்தின் அங்கங்கள்: வேளாண், தோட்டக்கலைப் பயிர்கள், கால்நடைகள், பழ மரங்கள், வன மரங்கள், பறவைகள் போன்றவை ஒருங்கிணைந்த பண்ணை முறையின் அங்கங்களாகும். இவற்றுடன் தேனீ, அசோலா, காளான், முயல் மற்றும் மீன் வளர்ப்பு போன்றவற்றைக் கடைப்பிடிப்பதன் மூலம் கூடுதல் வருவாய் ஈட்ட முடியும். நிலத்திலிருக்கும் மண் வகைக்கேற்ப பயிர்களைத் தேர்வு செய்து சாகுபடி செய்தால் நல்ல லாபம் பெற முடியும்.
 கால்நடைகள், கோழிகள்: பசு, எருமை, வெள்ளாடு, செம்மறி ஆடு, கோழி, காடை மற்றும் புறா ஆகியவற்றை விவசாயிகள் வசதிக்கேற்ப ஒருங்கிணைந்த பண்ணையத்தில் வளர்க்கலாம். 
பழத்தோட்டங்களுடன் வேளாண் காடுகள் அமைத்தல்: மானாவாரி எனப்படும் தரிசு நிலப்பகுதிகளுக்கான ஒருங்கிணைந்த பண்ணையம் மேற்கொள்ள உதாரணமாக 2.5 ஏக்கர் நிலப்பரப்பில் குறைந்தது 2 ஏக்கரில் தானியப்பயிர்கள் மற்றும் பழ மரங்களை வளர்க்கலாம். பழ மரங்களில் குறிப்பாக கொய்யா, மாதுளை, சப்போட்டா போன்றவைகளை சொட்டு நீர்ப் பாசனம் மூலம் உருவாக்கலாம். முல்லை மேய்ச்சல் வகையில் வேளாண் காடுகளை உருவாக்கி, ஆடுகளுக்கான தீவன மரங்களான சூபாபுல், கிளைரி சிடியா, கல்யாண முருங்கை ஆகியவற்றுடன் கொழுக்கட்டைப் புல், முயல் மசால் போன்ற புல் மற்றும் பயறு வகை பசுந்தீவனங்களையும் வளர்க்கலாம்.   
இத்தகைய முல்லை மேய்ச்சல் நிலங்களில் நீர் பாய்ச்சுவதற்குத் தெளிப்பு நீர்ப் பாசனத்தைப் பயன்படுத்தலாம். மானாவாரி நிலங்களில் ஒருங்கிணைந்த பண்ணையத்தின் மூலம் நடைமுறை செலவினமாக ரூ. 1 லட்சம் வரை செலவு செய்வதன் மூலம் குறைந்தது, ரூ. 2 அல்லது ரூ. 3 லட்சம் லாபம் ஈட்டலாம்.  
சப்போட்டா அல்லது கொய்யாத் தோப்பில் கம்பு நேபியர், கோ- 4, கோ- 5 ரக புற்களையும், கொழுக்கட்டைப் புல்லையும் ஊடே இணைந்த தோட்டத்தின் வெளிச்சுற்றளவில் சூபாபுல் கிளைரி சிடியா, அகத்தி போன்ற குறு மரங்களையும் பயிரிட்டு தோட்டத்தின் உள்ளே புரதச்சத்துமிக்க கோழி மசால் பசுந்தீவனத்தை உற்பத்தி செய்யலாம். இதில், 6 முதல் 12 மாதம் வயதுடைய செம்மறியாடுகளை இணைத்து வளர்ப்பதன் மூலம் நாளொன்றுக்கு முறையே 53- 44 கிராம் அளவில் உடல் வளர்ச்சியைப் பெற முடியும். 
கினியா புல்லை கொய்யா அல்லது சப்போட்டாவுடன் இணைத்து பயிர் செய்வதன் மூலம், ஹெக்டேருக்கு 48 டன் பசும்புல்லும், புளியந்தோப்புகளில் தீவனக் கொள்ளுப் பயிரை இணைத்துப் பயிர் செய்வதன் மூலம் 5 - 8 டன் பசுந்தீவனமும் கிடைக்கும். இதேபோல, மானாவாரியில் மா மரத்துடன் நிலக்கடலை அல்லது தீவனக் கொள்ளு அல்லது தீவனச் சோளம் சாகுபடி செய்தால் ஹெக்டேருக்கு 190- 207 மற்றும் 234 கிலோ அளவில் புரதச்சத்து கொண்ட பசுந்தீவனம் உற்பத்தி செய்ய இயலும்.
மானாவாரியில் மா மரத்துடன் காராமணி இணைத்து பயிரிடுவதன் மூலம் ஹெக்டேருக்கு 170 கிலோ புரதச்சத்து கொண்ட 3.25 டன் காராமணி தீவனப்பயிராகப் பெற இயலும். இதன் மூலம் 10 முதல் 12 செம்மறியாடுகளை ஆண்டு முழுவதும் பராமரிக்கலாம். 
மானாவாரி நிலங்களில் சோளம் மற்றும் முயல் மசால் தீவனப்பயிர் உற்பத்தி: மானாவாரியில் தானிய உற்பத்திக்காக சோளம், கம்பு போன்ற பயிர்கள் ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே சாகுபடி செய்கிறோம். இப்பயிர்களின் அறுவடை முடிவடைந்தவுடன் நிலம் கரம்பாகக் காணப்படுகிறது. இதற்கு பதிலாக சோளம் மற்றும் கம்பு போன்ற விவசாயப் பயிர்களுடன் ஏக்கருக்கு 5.5 கிலோ என்ற அளவில் முயல் மசால் விதைகளை மண்ணுடன் கலந்து நிலப்பரப்பில் தூவ வேண்டும். இதில் சோளப் பயிர் மிக விரைவாக வளரும்.
முயல் மசால் சற்று குறைவான வளர்ச்சியுடன் வளரும். இந்த நிலையில் தானியத்திற்கான சோளப்பயிரின் அறுவடை முடிந்த பின்னர் நேரடியான சூரிய ஒளி கிடைப்பதால் முயல் மசால் நன்கு செழித்து வளரும். இப்பயிரை நன்கு முற்றவிட்டு அறுவடை செய்தால் கால்நடைகளுக்குத் தேவையான பசுந்தீவனம் வருடம் முழுவதும் கிடைப்பது மட்டுமல்லாமல், அவற்றின் விதைகள் அந்நிலத்திலேயே விழுந்து அடுத்த ஆண்டு பருவமழையில் நிலத்தை உழுது சோளப் பயிரை சாகுபடி செய்யும்போது முயல் மசால் விதையும் முளைத்து பசுந்தீவனத்தைக் கொடுக்கும். இம்முறையில் ஒருமுறை விதைக்கப்பட்ட முயல் மசால் 2 அல்லது 3 ஆண்டுகள் வரை மீண்டும் முளைத்து வளர்ந்து சோளப்பயிர் இல்லாத நாள்களிலும் பசுந்தீவனத்தை அளிக்கும். அத்துடன் முயல் மசால் மூலம் மண்ணில் நிலை நிறுத்தப்பட்ட தழைச்சத்து சோளப்பயிரின் மகசூல் அதிகரிக்கும். 
மானாவாரி நிலங்களுக்கு ஏற்ற மர ஊடுபயிர் முறை: மானாவாரி நிலங்களில் தீவன மர வகைகளை குறிப்பிட்ட இடைவெளியில் கிழக்கு, மேற்காக நீளவாக்கில் நெருக்கமாக ஊடுபயிராக அமைத்து, அம்மரங்களின் வரிசைகளுக்கு இடைப்பட்ட நிலப்பரப்பில் வேளாண்மை மேற்கொள்ளும் முறையே மர ஊடுபயிர் சாகுபடியாகும்.  
இதுமட்டுமின்றி, மானாவாரி நிலங்களில் மண் அரிப்பைத் தடுக்க ஈரப்பதத்தைக் காக்கும் வகையில் உயர் வரப்புகள் அமைக்கலாம். மேலும், நிலங்களைச் சுற்றி முள் கம்பி வேலி அமைப்பதற்குப் பதிலாக கால்நடை தீவனம் மற்றும் விறகு போன்றவற்றைத் தரும் மரங்களை நட்டு உயிர்வேலி அமைக்கலாம். 
பயன்கள்: அதிக உணவு உற்பத்தியின் மூலம் நாட்டின் மக்கள் தொகை தேவையை சமநிலைப் படுத்தப்படுகிறது. மறுசுழற்சி மற்றும் வேளாண் சார் அங்ககம் போன்றவற்றின் மூலம் பண்ணை வருவாயானது உயர்த்தப்படுகிறது. நீடித்த மண் வளம் மற்றும் அங்கக கழிவுகளின் மறுசுழற்சி மூலம் உற்பத்தி, ஒருங்கிணைந்த வேளாண்சார் நுட்பத்தின் மூலம் உணவுகளிலுள்ள புரதம், கார்போஹைட்டிரேட், கொழுப்பு, தாதுக்கள், வைட்டமின்கள் போன்ற ஊட்டச்சத்துக்களை செறிவூட்டுகிறது. 
பன்றி வளர்ப்பு, கோழி வளர்ப்பு, புறா வளர்ப்பு போன்றவற்றிலிருந்து வரும் கழிவுகளை மறு சுழற்சி செய்வதன் மூலம் சுற்றுச்சூழல் பாதுகாப்படைகிறது. முட்டை, பால், காளான், காய்கறிகள், தேன் மற்றும் பட்டுப்புழு போன்ற ஒருங்கிணைந்த பண்ணை முறை மூலம் நிலையான வருவாய் கிடைக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com