மரவள்ளியில்: நுண்ணூட்டச் சத்து பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் வழிமுறைகள்

மரவள்ளியில் நுண்ணூட்டச் சத்து பற்றாக்குறையால், மகசூல் பாதிப்பு ஏற்பட்டு, விவசாயிகளுக்கு வருவாய் இழப்பு உண்டாகிறது.
மரவள்ளியில்: நுண்ணூட்டச் சத்து பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் வழிமுறைகள்


தருமபுரி: மரவள்ளியில் நுண்ணூட்டச் சத்து பற்றாக்குறையால், மகசூல் பாதிப்பு ஏற்பட்டு, விவசாயிகளுக்கு வருவாய் இழப்பு உண்டாகிறது. இதனை தவிர்க்க,  மரவள்ளிப் பயிர்களில் நுண்ணூட்டச் சத்துப் பற்றாக்குறை அறிகுறிகள்,  அவற்றை நிவர்த்தி செய்ய மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள் குறித்து தருமபுரி மாவட்டம்,  பாப்பாரப்பட்டி வேளாண் அறிவியல் நிலைய ஒருங்கிணைப்பாளர் பா.ச.சண்முகம்,  பேராசிரியர் ம.அ.வெண்ணிலா ஆகியோர் கூறியது:

தருமபுரி மாவட்டத்தில் தற்போது, சாகுபடி செய்யப்பட்டுள்ள மரவள்ளிப் பயிரில் பரவலாக நுண்ணூட்டச் சத்துக் குறைபாடுகள் காணப்படுகின்றன. குறிப்பாக, இரும்பு மற்றும் துத்தநாகச் சத்துகளின் குறைபாட்டின் அறிகுறிகள் தென்படுகின்றன. இந்தச் சத்துகளின் பற்றாக்குறையானது களர் நிலங்களில் அதாவது மண்ணின் அமில, கார நிலை 8.0-க்கு அதிகமாக உள்ள நிலங்கள், மணல்பாங்கான மற்றும் சுண்ணாம்புச் சத்து அதிகமாக உள்ள நிலங்களில் அதிகளவில் தோன்றும். இவ் வகை நிலங்களில் இரும்பு மற்றும் துத்தநாகம் ஆகியவை நீரில் எளிதில் கரையாத ஹைட்ராக்ûஸடுகள் மற்றும் டிரைபாஸ்பேட் உப்புகளாக மாற்றமடைந்து, மண்ணில் நிலைப்படுத்தப்படுகின்றன. இந்த உப்புகளை பயிர்களால் எளிதில் எடுத்துக் கொள்ள இயலாது.  எனவே,  பயிர்களில் சத்துப் பற்றாக்குறை அறிகுறிகள் ஏற்படுகின்றன. மேலும்,  வறட்சி மற்றும் நீர்ப் பற்றாக்குறை ஏற்படும் போதும், அதிகளவு மணிச்சத்து மற்றும் சுண்ணாம்பு இடுவதாலும்,  இந்த நுண்ணூட்டச் சத்துகளின் குறைபாடு அதிகமாக இருக்கும்.

அறிகுறிகள் 

இரும்புச் சத்துப் பற்றாக்குறையினால் இளம் இலைகள் பச்சையம் இழந்து காணப்படும்.  குறைபாட்டின் ஆரம்ப நிலையில் இலைகள் வெளிறியும்,  இலை நரம்புகள் அடர் பச்சை நிறத்துடனும் காணப்படும்.  குறைபாடு தீவிரமடையும்போது,  இலை நரம்புகள் நிறமிழந்து, இலைப் பரப்பு முழுவதும் மஞ்சள் நிறமாக மாறி,  பின்பு வெண்மை நிறத்தில் காட்சியளிக்கும். துத்தநாகச் சத்துப் பற்றாக்குறையால்,  முதலில் இளம் இலைகளின் நரம்புகளுக்கு இடைப்பட்ட பகுதி பச்சையம் இழந்து மஞ்சளாகவும்,  இலை நரம்புகள் பச்சை நிறத்துடன் காட்சியளிக்கும். 

செடிகள் வளர்ச்சி குன்றி,  கணுவிடைப் பகுதியின் நீளம் குறைந்து காணப்படும்.  புதிதாக வெளிவரும் நுனி இலைகள் அளவில் சிறுத்தும், மஞ்சளாகவும், மேல்நோக்கியும் காணப்படும்.  பற்றாக்குறை தீவிரமடையும்போது பாதிக்கப்பட்ட இலையின் நுனிப்பகுதி கருகியும், செடி வளர்ச்சி குன்றியும் காணப்படும். இத்தகைய அறிகுறிகள் மரவள்ளிப் பயிரில் தென்பட்டால்,  அவை பயிர்களின் ஒளிச்சேர்க்கை அளவைக் குறைப்பதன் வாயிலாக 10 முதல் 25 சதவீதம் வரை மகசூல் இழப்பை ஏற்படுத்தும்.

நிவர்த்தி செய்யும் வழிமுறைகள்

இரும்பு மற்றும் துத்தநாகச் சத்துகளின் குறைபாட்டை நிவர்த்தி செய்ய,  இரும்பு சல்பேட் 1 சதவீதம் மற்றும் துத்தநாக சல்பேட் 0.5 சதவீதம் கரைசலை இலைகளின் மீது தெளிக்க வேண்டும். அதாவது ஒரு லிட்டர் தண்ணீரில் 10 கிராம் இரும்பு சல்பேட் மற்றும் 5 கிராம் துத்தநாக சல்பேட் மற்றும் ஒட்டும் திரவம் 0.5 மி.லி. ஆகியவை கலந்த கரைசலை செடிகளின் மீது நன்றாகப் படும்படி காலை அல்லது மாலை நேரத்தில் கைத்தெளிப்பான் கொண்டு தெளிக்க வேண்டும். 

இவ்வாறு 15 நாள்கள் இடைவெளியில் இரண்டு அல்லது மூன்று முறை அதாவது பற்றாக்குறை அறிகுறிகள் மறையும்வரை இலைவழித் தெளிப்பு செய்ய வேண்டும்.  இதன் மூலம் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யலாம்.

எனவே,  விவசாயிகள், இலைவழி தெளிப்பு செய்வதன் மூலம் மரவள்ளியில் நுண்ணூட்டச் சத்து குறைபாட்டினால் ஏற்படும் மகசூல் இழப்பைத் தவிர்த்து, அதிக சாகுபடியைப் பெறலாம் என்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com