ஒரு முறை முதலீட்டுக்கு 20 ஆண்டுகள் பலன் தரும் செங்காம்பு கருவேப்பிலை சாகுபடி

ஒரு முறை முதலீடு செய்தால் 20 ஆண்டுகள் பலன் தரக்கூடியதாகவும், நாள்தோறும் வருவாய் ஈட்டித் தரும் பயிராகவும்
ஒரு முறை முதலீட்டுக்கு 20 ஆண்டுகள் பலன் தரும் செங்காம்பு கருவேப்பிலை சாகுபடி


திருவள்ளூர்: ஒரு முறை முதலீடு செய்தால் 20 ஆண்டுகள் பலன் தரக்கூடியதாகவும், நாள்தோறும் வருவாய் ஈட்டித் தரும் பயிராகவும் உள்ளதால் 20 ஏக்கரில் சொட்டு நீர்ப்பாசன முறையில் மூலிகையான செங்காம்பு கருவேப்பிலையை விவசாயி ஒருவர் ஆர்வத்துடன் சாகுபடி செய்து வருகிறார்.
பொதுவாக காய்கறிகளுக்கு அடுத்தபடியாக அதிக அளவில் சமையலில் முக்கியம் இடம் பெறுவது மணம் மிக்க கறிவேப்பிலை ஆகும். தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து கருவேப்பிலை கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. அதனால் உள்ளூர் பகுதியிலேயே விளைவிப்பதற்கு விவசாயிகளிடையே ஆர்வம் ஏற்பட்டுள்ளது. அத்துடன் நாள்தோறும் பயன்படுத்தும் கருவேப்பிலைக்கு நன்றாக சந்தை வாய்ப்பும் உள்ளது. இதையறிந்து, திருவள்ளூர் பகுதியில் உள்ள விளைநிலங்களில் சிறு அளவில் கருவேப்பிலையை சாகுபடி செய்து வந்தனர். ஆனால், தற்போது சமையலுக்கான தேவையும் பொதுமக்களிடையே அதிகரித்த காரணத்தால் விவசாயிகளின் விருப்பப் பயிராக மாறி, பல ஏக்கர்களில் வளர்ந்து கருவேப்பிலை மணம் வீசி வருகிறது.
அனைத்து வகை நிலங்களிலும்... 
 அதற்கு காரணம் பயிரிட்டதில் இருந்து நன்றாக வளர்ந்த 3-ஆம் மாதம் முதலே ஒவ்வொரு பகுதியாக குறிப்பிட்ட அளவு அறுவடை செய்யலாம். இதன் மூலம் அறுவடை செய்த நாளிலேயே விற்பனை செய்யவும் முடியும்.  கருவேப்பிலை பயிரிட்ட விவசாயிகளுக்கு நாள்தோறும் வருவாய் ஈட்டித் தரும் பயிராக அது உள்ளது. பொதுவாக தண்ணீர் வசதியுள்ள அனைத்து இடங்களுமே செங்காம்பு, பச்சை என இரு ரக கருவேப்பிலைகளையும் சாகுபடி செய்வதற்குத் தகுதியான நிலங்கள்தான். இந்த வகை செடிகள் அனைத்து வகை விளைநிலங்கள் மற்றும் மண்ணிலும் நன்றாக வளரும் தன்மையுடையவை. செம்மண் நிலத்தில் மிகச் சிறப்பாக வளர்ந்து அதிக அளவில் சாகுபடி தரும்.  
நடவு முறை: நாள்தோறும் வருவாய் ஈட்டித் தரும் பயிராக கருவேப்பிலை உள்ளதால் விவசாயிகள் விரும்பிப் பயிரிடுகின்றனர். பெரிய செடிகளாக வளர்க்க 2.5 மீட்டர் இடைவெளியில் நடவு செய்ய வேண்டும். குத்துச் செடிகளாக வளர்க்க 1.2 மீ. இடைவெளி இருப்பது அவசியம். அதிகமான மகசூல் பெற 60 செ.மீ. இடைவெளியில் நடவு செய்தால் நன்றாக இருக்கும். நடவு செய்வதற்கு முன்னதாக அடி உரம் 1 அடி ஆழத்தில் சதுர குழியைத் தோண்டி நாற்றுகளைச் சுற்றி மக்கிய தொழு உரம் இட வேண்டும். 
பின்னர் உரத்தை மண்ணுடன் சேர்த்து கிளறி விட வேண்டும். இதேபோல் ஒரு ஏக்கரில் பயிரிடுவதற்கு நடவு, பாத்தி கட்டுதல், இடுபொருள்கள் ஆகியவற்றுக்கு ரூ.12 ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரம் வரை செலவு ஆகும். கருவேப்பிலை நடப்பட்டவுடன் ஒரு முறையும், வாரம் ஒருமுறையும் கட்டாயம் நீர் பாய்ச்ச வேண்டும். அதிலும் சொட்டு நீர்ப்பாசனம் மூலம் நீர் பாய்ச்சினால் சாகுபடி அதிகம் செய்யலாம். இப்பயிர் வளர்ந்த நிலையில் கிளைகள் அதிகமாக இருந்தால் 60 நாள்களுக்கு ஒரு முறை அறுவடை செய்ய முடியும். அறுவடை செய்யும்போது பூமியிலிருந்து 10 செ.மீ. உயரம் விட்டு அறுவடை செய்ய வேண்டும்.
ஒரு முறை முதலீடு 20 ஆண்டுகள் பலன்
 கருவேப்பிலைச் செடி பல்வேறு மருத்துவ குணங்களைக் கொண்டதாகும். வளரும் வரை நன்றாகப் பராமரித்தால் போதுமானது. அதைத் தொடர்ந்து ஒவ்வொரு முறையும் அறுவடை செய்த பின்னர், களையைக் கொத்தி விடுதல் அவசியம். விலை குறைவாக இருக்கும் நேரத்தில் குறைந்த அளவில் அறுவடை செய்து விற்பனை செய்யலாம். 
கருவேப்பிலைப் பயிருக்கு ஒரு முறை முதலீடு செய்தால் மட்டும் போதுமானது. அதைத் தொடர்ந்து நன்றாகப் பராமரிப்பதன் மூலம் 20 ஆண்டுகள் வரை பலன்பெற முடியும். ஒரு ஏக்கரில் பயிரிட்டால், ஆண்டுக்கு 2 தடவை தலா 6 டன் வரை அறுவடை செய்யலாம். தற்போது, ஒரு கிலோ ரூ.30 முதல் ரூ.35 வரை விற்பனையாகிறது. 
ஒவ்வொரு பகுதியாக நன்கு வளர, வளர அறுவடை செய்வதன் மூலம், அவ்வப்போது விலை உயர்வுக்கு ஏற்ப நாள்தோறும் குறிப்பிட்ட அளவு வருவாய் கிடைக்கும். தற்போது திருவள்ளூர் பகுதியில் கருவேப்பிலை பயிரிடுவது விருப்பமான தொழிலாக மாறி வருவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.            
3 மாதம் முதல் அறுவடை
திருவள்ளூர் அருகே கொரக்கதண்டலம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி  கிஷோர் கூறியது:
கொரக்கதண்டலம் கிராமத்தில் கடந்த 80 ஆண்டுகளுக்கும் மேலாக விவசாயம் செய்யாத வெற்று நிலங்களில், முள்புதர் மண்டிப் போய் கிடந்தது. அதனால், ஒருங்கிணைந்த பண்ணையம் அமைப்பதற்காக வாங்கி விவசாயம் செய்யும் இடமாக மாற்றியுள்ளேன். கடந்த ஓராண்டாக மருத்துவ குணம் கொண்ட செங்காம்பு கருவேப்பிலைக்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு உள்ளது என்பதை அறிந்தேன். இதற்காக சிறுமுகை பகுதியில் இருந்து, செங்காம்பு கொழுந்து ரக கருவேப்பிலை நாற்றுகளை வாங்கி வந்து 20 ஏக்கரில் சாகுபடி செய்துள்ளோம். இதற்காக ஆழ்துளைக் கிணறு அமைத்து தண்ணீரைத் தொட்டியில் தேக்கி வைத்துப் பாய்ச்சும் வகையில் சொட்டு நீர்ப் பாசனம் அமைக்கப்பட்டுள்ளது.
இதன் ஒவ்வொரு செடிக்கும் தேவையான உரம் மற்றும் நீர் ஆகியவை கிடைப்பதால் வளர்ச்சியும் நன்றாக இருக்கும். ஏற்கெனவே அடி உரமாக தொழு உரம் இடுவதால் இந்த ரகச் செடியை நோய் எதுவும் தாக்காது. இப்பயிர் செய்த 3 மாதங்களில் இருந்து அறுவடை செய்யலாம். 
மேலும், இளநரை மற்றும் சர்க்கரை நோய் ஆகியவற்றைக் கட்டுப்படுத்தும் மருத்துவ குணம் கொண்டதால் செங்காம்பு கருவேப்பிலைக்கு பொதுமக்களிடையே அதிக வரவேற்பு உள்ளது. 
வெளிநாடுகளில் செங்காம்பு ரக கருவேப்பிலைச் செடி கிடைக்காது. அதனால், மகசூல் அதிகரிக்கும்போது வெளிநாடுகளுக்கு அனுப்பி வைக்கும் திட்டமும் உள்ளது என்றார் அவர்.
விவசாயிகளுக்கு மானியம்
தோட்டக் கலைத்துறை அலுவலர் பாபு கூறுகையில், கருவேப்பிலையைத் தாக்கும் நோய் இலைப்புள்ளி நோயாகும். இதைக் கட்டுப்படுத்தி கருவேப்பிலைச் செடியை பாதுகாக்க கார்பன்டைசிம் என்ற பூச்சிக்கொல்லி மருந்தை ஒரு லிட்டர் தண்ணீரில் ஒரு கிராம் அளவு கலந்து செடிகள் முழுவதும் நனையும் வரை தெளித்தால் போதும்; இலைப்புள்ளி நோய் மறைந்து விடும். 
மேலும், தற்போது நிலத்தடி நீர்மட்டம் குறைந்து கொண்டு வருகிறது. இதனால் விளைநிலங்களில் பயிருக்கு நீர் பாய்ச்ச முடியாத நிலை உள்ளது. இதைக் கருத்தில் கொண்டு குறைந்த அளவு
நீரிலும், அதிக பரப்பளவிலும் சாகுபடி செய்யும் வகையில் சொட்டு நீர்ப் பாசனக் கருவிகள் விவசாயிகளுக்கு மானியத்தில் வழங்கப்படுகின்றன. சிறு குறு விவசாயிகளுக்கு 90 சதவீத மானியத்திலும், மற்ற விவசாயிகளுக்கு 75 சதவீத மானியத்திலும் வழங்கப்படுகின்றன என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com