5 தென்னை மரங்களுக்கும் காப்பீடு செய்யலாம்

நூற்றுக்கணக்கான எண்ணிக்கையில் இருக்கும் தென்னந்தோப்புகளுக்கு மட்டுமின்றி,  வீட்டுத் தோட்டங்களில் குறைந்தபட்சம் 5 தென்னை இருந்தாலே அதற்கும் காப்பீடு செய்து கொள்ளலாம்.

மதுரை: நூற்றுக்கணக்கான எண்ணிக்கையில் இருக்கும் தென்னந்தோப்புகளுக்கு மட்டுமின்றி,  வீட்டுத் தோட்டங்களில் குறைந்தபட்சம் 5 தென்னை இருந்தாலே அதற்கும் காப்பீடு செய்து கொள்ளலாம்.

தமிழகத்தில் நெல் சாகுபடிக்கு அடுத்ததாக தென்னை முக்கியப் பயிராக இருந்து வருகிறது. இந்திய அளவில் நெல் சாகுபடியில் கேரளம், கர்நாடகத்துக்கு அடுத்ததாக தமிழகத்தில் சுமார் 390 ஹெக்டேரில் தென்னை சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.   வெப்பமண்டல பகுதிகளுக்கு ஏற்றது என்பதால் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் தென்னை சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. அதிகபட்சமாக கோவை மாவட்டத்தில் ஒரு லட்சத்து ஆயிரத்து 544 ஹெக்டேரிலும், அதற்கு அடுத்ததாக தஞ்சாவூர் மாவட்டத்தில் 26 ஆயிரம் ஹெக்டேரிலும், திண்டுக்கல் மாவட்டத்தில் 24 ஆயிரம் ஹெக்டேரிலும் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.

தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களில் நெல் பிரதான பயிராக இருந்தாலும், தென்னை சாகுபடியும் கணிசமான அளவில் இருக்கிறது.  தஞ்சை மாவட்டத்தில் பெரும்பாலான விவசாயிகள் நெல் சாகுபடியோடு,  தென்னை சாகுபடியிலும் ஈடுபட்டிருக்கின்றனர். அண்மையில் கஜா புயலால் ஆயிரக்கணக்கான தென்னை மரங்கள் அடியோடு சாய்ந்துவிட்ட நிலையில், விவசாயிகள் பெரும் பாதிப்பை அடைந்திருக்கின்றனர். தென்னை சாகுபடியை அடிப்படையாகக் கொண்டிருந்த விவசாயிகளின் பொருளாதார நிலை கடுமையான சரிவைச் சந்தித்துள்ளது.

தென்னையைப் பொருத்தவரை நெட்டை, குட்டை ரகங்கள், வீரிய ஒட்டு ரகங்கள் என தமிழகத்துக்கு ஏற்ற ரகங்களை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் உற்பத்தி செய்து விவசாயிகளுக்கு வழங்கி வருகிறது. நெட்டை, குட்டை ரகங்களில் 5 ஆண்டுகளில் காய்கள் அறுவடை செய்யலாம். ஒட்டு ரகங்களைப் பொருத்தவரை 3 ஆண்டுகளிலேயே பலன் கிடைக்கிறது.

தென்னை விவசாயிகள் தனிப் பயிராகவோ, ஊடுபயிர் பரப்பில் வரிசையாகவோ, வீட்டுத் தோட்டத்தில் குறைந்தபட்சம் 5 மரங்களாவது சாகுபடி செய்தால் தென்னை மரக் காப்பீட்டுத் திட்டத்தில் பதிவு செய்யலாம். இதுகுறித்து வேளாண் துறையினர் கூறியது:

வெள்ளம், புயல், வறட்சி, பூச்சி-நோய் தாக்குதல், தீ விபத்து, இயற்கை சீற்றங்களால் தென்னை மரம் பாதிப்பை அடையும் நிலையில் காப்பீட்டுத் திட்டம் விவசாயிகளுக்கு நிவாரணம் அளிப்பதாக இருக்கிறது. ஆண்டுக்கு 30 காய்களுக்கு மேல் மகசூல் தரக்கூடிய தென்னை மரங்களை இத்திட்டத்தில் காப்பீடு செய்யலாம். குட்டை மற்றும் ஒட்டு ரகங்கள் 4 ஆண்டுகளில் இருந்தும், நெட்டை ரகங்கள் 2 ஆண்டுகள் முதல் 60 ஆண்டுகள் வரை காப்பீடு செய்யப்படும். ஒரு ஹெக்டேருக்கு 175 மரங்கள் மட்டுமே காப்பீடு செய்ய முடியும்.

திட்டத்தில் சேரும் விவசாயிகள் சாகுபடி செய்துள்ள மரங்களின் எண்ணிக்கை, வயது, பராமரிப்பு பற்றிய சுய உறுதிமொழி முன்மொழி அளிப்பது அவசியம். நிகழ் ஆண்டில் எந்த தேதியில் காப்பீட்டுத் தொகை செலுத்தப்படுகிறதோ அதற்கு அடுத்த மாதம் 1-ஆம் தேதியில் இருந்து ஓராண்டுக்கு அதற்கான இழப்பீடு வழங்கப்படும். 

காப்பீட்டுத் தொகையில் 50 சதவீதத்தை மத்திய அரசும், 25 சதவீதத்தை தென்னை வளர்ச்சி வாரியமும் ஏற்றுக் கொள்கின்றன. மீதி 25 சதவீதத்தை விவசாயிகள் செலுத்த வேண்டும். 4 முதல் 15 வயது வரை உள்ள மரங்களுக்கு, மரம் ஒன்றுக்கு ரூ.2.25, 16 வயது முதல் 60 வயது வரையுள்ள மரங்களுக்கு மரம் ஒன்றுக்கு ரூ.3.50 செலுத்த வேண்டும்.

தென்னை மரத்துக்கான காப்பீடு செய்வதற்கான விண்ணப்பத்தை வேளாண் விரிவாக்க மையங்களில் பெற்றுக் கொள்ளலாம். கிராம நிர்வாக அலுவலரிடம் பெறப்பட்ட சிட்டா, அடங்கல் விவரங்களுடன் வேளாண் துறை அலுவலகத்தில் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கலாம் என்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com