சுடச்சுட

  

  சிறு, குறு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் கூட்டுப் பண்ணையம்

  Published on : 27th June 2019 12:51 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  agri

  மதுரை:  விவசாயிகள் குழுவாக இணைந்து சாகுபடி செய்வதன் மூலமாக விவசாயத்தை லாபகரமாக மாற்றுவதற்கு கூட்டுப் பண்ணையத் திட்டம் உதவிகரமாக இருந்து வருகிறது.
   சிறு, குறு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் 2017-18-ஆம் ஆண்டு முதல் கூட்டுப் பண்ணையத் திட்டம் வேளாண் துறையினரால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 
  இதில் கிராம அளவில் உழவர் ஆர்வலர் குழுக்கள் அமைக்கப்படுகிறது. ஒவ்வொரு குழுவிலும் சிறு, குறு விவசாயிகள் 20 பேர் உறுப்பினர்களாகச் சேர்க்கப்படுவர். இதில் ஒவ்வொரு 5 உழவர் ஆர்வலர் குழுக்களையும் இணைத்து உழவர் உற்பத்தியாளர் குழுக்கள் அமைக்கப்படுகின்றன. 
  இந்த உற்பத்தியாளர் குழுக்கள் மூலமாக சாகுபடி உத்திகள் வேளாண் துறையினரால் கொண்டு செல்லப்படுகின்றன.  சாகுபடி பரப்பு குறைவது, இடுபொருள்களுக்கான செலவினம், பாசன நீர் பற்றாக்குறை,  விவசாயத் தொழிலாளர்களுக்குத் தட்டுப்பாடு, அவர்களுக்கான கூலி போன்றவற்றைக் கணக்கிடும்போது,  ஓரிரு ஏக்கர் அளவில் மட்டுமே நிலம் வைத்துள்ள ஒரு சாதாரண விவசாயி  உற்பத்திக்கான செலவை மீட்பதற்கே மிகவும் சிரமப்பட வேண்டியுள்ளது.
   இதைத் தவிர்ப்பதற்காகவே,  கூட்டுப் பண்ணையத் திட்டம் பரிந்துரைக்கப்படுகிறது. வெளிநாடுகள் பலவற்றிலும் இந்த கூட்டுப் பண்ணையத் திட்டம் சிறப்பான செயல்பாட்டில் இருந்து வருகிறது. கடந்த சில ஆண்டுகளில் தான் தமிழகத்தில் இத்திட்டம் தொடங்கப்பட்டிருந்தாலும், சில பகுதிகளில் சிறப்பான செயல்பாட்டில் இருந்து வருகிறது.
  மதுரை மாவட்டத்தில் கொட்டாம்பட்டியில் செயல்படும் உழவர் உற்பத்தியாளர் குழு, காய்கறி சாகுபடியை வெற்றிகரமாகச் செய்து, நேரடியாக விற்பனை செய்யக் கூடிய அளவுக்கு உயர்ந்திருக்கிறது. திருமங்கலம்,  கள்ளிக்குடி வட்டாரங்களில்  உழவர் உற்பத்தியாளர் குழுக்கள் மூலமாக  சிறுதானியங்கள்  உற்பத்தி செய்யப்பட்டு,  மதிப்பு கூட்டப்பட்ட பொருளாக விற்பனைக்கு வருகிறது.   உழவர் உற்பத்தியாளர்கள் குழுக்களில் இணைந்திருக்கும் விவசாயிகள் ஒரே ரக பயிர்களைத் தேர்ந்தெடுத்துப் பயிரிடுவது, கூட்டாக பயிர் சாகுபடி செய்வது, சாகுபடிக்குத் தேவையான இடுபொருள்களை கூட்டாக கொள்முதல் செய்வது, நுண்ணீர் பாசனத் திட்டம் போன்ற புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்த வேளாண் துறையினரால் பரிந்துரைக்கப்படுகின்றன.   இத்தகைய உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கு தலா ரூ. 5 லட்சம் அரசின் தொகுப்பு நிதியாக வழங்கப்படுகிறது.  மேலும், குழு உறுப்பினர்களின் பங்குத் தொகையுடன் சேர்த்து டிராக்டர், களை எடுக்கும் கருவி, பவர் டில்லர், ரோட்டவேட்டர், நாற்று நடும் கருவி, வைக்கோல் கட்டும் கருவி போன்ற பண்ணை இயந்திரங்களும் வழங்கப்படுகின்றன.   
  இந்த இயந்திரங்களை உறுப்பினர்களுக்கு வாடகைக்கு விடுவதன் மூலம், கிடைக்கும் வருவாயை  உற்பத்தியாளர் குழுக்கள் கூட்டாக இடுபொருள் கொள்முதல் செய்வதற்கு சுழல் நிதியாகப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
    மதுரை மாவட்டத்தில் கடந்த ஆண்டில்   290 உழவர் ஆர்வலர் குழுக்கள் அமைக்கப்பட்டு, அதன்மூலம் 58 உழவர் உற்பத்தியாளர் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கு 217 பண்ணை இயந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன.  இந்த ஆண்டும் கூட்டுப் பண்ணையத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இத் திட்டத்தில் உழவர் ஆர்வலர் குழுக்கள் அமைத்து பயன்பெற விரும்புவோர் தங்களது பகுதியில் உள்ள வேளாண் உதவி இயக்குநர் அலுவலகங்களைத் தொடர்பு கொள்ளலாம்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai