Enable Javscript for better performance
உயர் விளைச்சல் தரும் கம்பு- Dinamani

சுடச்சுட

  

  உயர் விளைச்சல் தரும் கம்பு

  Published on : 23rd May 2019 12:54 AM  |   அ+அ அ-   |    |  

  peral_millet

  பெரம்பலூர்: மனித வாழ்விற்கு முதன்மையான தேவை உணவாகும். இந்த உணவில் சிறு தானியங்களின் பங்கு மிக முக்கியமானது. மாறிவரும் உணவு பழக்கவழக்கங்களினாலும், இன்றைய இயந்திர வாழ்க்கையின் துரித உணவினாலும், சிறுதானியங்களின் பங்களிப்பை நாமே குறைத்து வருகிறோம். இதனால் சிறுதானிய வகைகளான கேழ்வரகு, சாமை, கம்பு, வரகு போன்றவற்றால் நாம் பெற்றுவந்த சமச்சீர் உணவு மற்றும் ஊட்டத்தை இழந்து கொண்டிருக்கிறோம்.  
  அதிக வறட்சியைத் தாங்கி வளர்ந்து, மிகக் குறுகிய காலத்தில், குறைந்த செலவில் அதிக வருமானம் தரக்கூடிய கம்பு சாகுபடி குறித்து பெரம்பலூர் மாவட்டம், வாலிகண்டபுரத்தில் உள்ள ஹேன்ஸ் ரோவர் வேளாண் அறிவியல் மைய உழவியல் தொழில்நுட்ப வல்லுநர் மு. புனிதவதி கூறியது: இந்தியாவில் நெல், கோதுமை, சோளத்திற்கு அடுத்தபடியாக சுமார் 8 மில்லியன் ஹெக்டேர் பரப்பளவில் கம்பு தானியம் பயிரிடப்படுகிறது. தமிழ்நாட்டில் சுமார் 50,000 ஹெக்டேரில் பயிரிடப்படுகிறது.  மழையளவு குறைவாக உள்ள அனைத்து மாவட்டங்களிலும் கம்பு சாகுபடிசெய்யப்படுகிறது. இப்பயிர், வறட்சியான மற்றும் மண் வளம் குன்றிய இடங்களிலும் நன்கு செழித்துவளரும்.  இறவையில் சுமார் 5 - 7 பாசன நீர் போதுமானது. மானாவாரியிலும் இறவையிலும் நல்ல மகசூலைத் தரும். 
  நிலம் தயாரிப்பு: நிலத்தை இரும்பு கலப்பையினால் இரண்டு முறையும், நாட்டுக் கலப்பையினால் இரண்டு முறையும் உழுது கட்டிகளின்றி மண்ணை உடைக்க வேண்டும். மட்கிய தொழுஉரம் ஹெக்டேருக்கு 12 டன் எனும் அளவில் இட்டு, நாட்டுக் கலப்பையால் மீண்டும் உழுது மண்ணுடன் உரத்தை நன்கு கலக்க வேண்டும். தலா 10 பொட்டலம் அசோஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டீரியாவை 25 கிலோ மண் மற்றும் 25 கிலோ தொழு உரத்துடன் கலந்து இட வேண்டும். 
  பருவம் மற்றும் ரகங்கள்: கம்பை சாகுபடி செய்வதற்கு முன்பு சிறந்த பருவம் மற்றும் உயர் விளைச்சல் ரகங்களைத் தேர்வு செய்வது மிகவும் அவசியம். கம்பு பூக்கும் காலத்தில் அதிகமாக குளிர், வெப்பம், மழை இல்லாமல் இருக்க வேண்டும். பூக்கும் காலத்தில் இச்சூழ்நிலைகள் இருந்தால் மகரந்தம் அல்லது சூலகம் பாதிக்கப்பட்டு கருவுறுதல் தடைப்படும். அதனால் விதைப்பிடிப்பும் குறையும். கதிர் முற்றிய தருவாயில் அதிக மழையோ அல்லது குறைந்த வெப்பமோ இருந்தால், தானிய மணிகள் பூசணத் தாக்குதலுக்கு உள்ளாகி விளைச்சலும் தரமும் குறையும். தமிழ்நாட்டில், பெரும்பாலும் கம்பு மானாவாரிப் பயிராக ஜூன், ஜூலை மாதங்களிலும் அதாவது ஆடிப்பட்டத்தில் பயிரிடப்படுகிறது. கம்பு விதைகளில் சாதாரண ரகங்கள், வீரிய ஒட்டு ரகங்கள் என இரண்டு வகையாக உற்பத்தி செய்யப்படுகின்றன. கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகத்தில் இயங்கி வரும் சிறுதானியத் துறையில் பல்வேறு ஆராய்ச்சிகள் மூலம் உயர் விளைச்சலைத் தரக்கூடிய புதிய ரகங்கள் உருவாக்கப்பட்டு விவசாயிகளுக்கு வழங்கப்படுகின்றன.  இவற்றில் கோ- 9, கோ-10 ஆகிய வீரிய ஒட்டு ரகங்கள் அதிக அளவில் பயிரிட பரிந்துரைக்கப்படுகின்றன. 
  விதை நேர்த்தி செய்தல்: கம்பு விதைகளை 2 சதம் பொட்டாசியம் குளோரைடு அல்லது 3 சதம் சோடியம் குளோரைடில் 16 மணி நேரம் ஊறவைக்க வேண்டும். பிறகு இந்த விதைகளை 5 மணி நேரம் நிழலில் உலர்த்த வேண்டும். இப்படிச் செய்வதால் விதைகளின் முளைப்புத்திறன் அதிகரிக்கும். பார் மற்றும் வாய்க்கால் முறையில் நடவு செய்வதற்கு 5 கிலோ விதைகள் தேவைப்படும். விதைகளுக்கான இடைவெளி 4 - 5 செ.மீ இருக்கவேண்டும். இவ்வாறு நட்டால் ஏக்கரில் 1,45,000 பயிர்கள் இருக்கும்.
  உர அளவு: மண் பரிசோதனை பரிந்துரைப்படி தழை, மணி, சாம்பல் சத்துக்களை அளிக்கலாம். அவ்வாறு செய்யாத நிலையில் ஹெக்டேருக்கு 70:35:35 என்ற அளவில் மேற்கண்ட சத்துக்களை அளிக்க வேண்டும். பரிந்துரைக்கப்பட்ட தழைச்சத்தை மூன்றாகப் பிரித்து விதைக்கும் முன், விதைத்த 15-30 ஆம் நாளில் மண் வளத்தைப் பொறுத்து இட வேண்டும். மணிச்சத்து மற்றும் சாம்பல் சத்தை அடியுரமாக அளிக்க வேண்டும். 
  களை மேலாண்மை: விதைத்த 3 நாள்களுக்குப் பிறகு களை முளைப்பதற்கு முன் ஹெக்டேருக்கு அட்ரசின் 0.25 கிலோ எடுத்து 500 லிட்டர் நீரில் கலந்து மண்ணின் மேற்பரப்பில் ரேப்சேக் அல்லது ராக்கர் தெளிப்பானால் தெளிக்க வேண்டும். மண்ணில் தேவையான அளவு ஈரப்பதம் இருக்கும்பொழுதும், களை முளைப்பதற்கு முன்பும் களைக் கொல்லியைப் பயன்படுத்த வேண்டும். விதைத்த 30-35 நாள்களுக்குப் பிறகு கையால் களை எடுக்க வேண்டும்.
  அறுவடை: 85 முதல் 90 நாள்களுக்குள் இலைகள் மஞ்சளாக மாறி உலர்ந்த தோற்றத்திலும், தானியங்கள் கடினமாகவும் இருந்தால் அறுவடை செய்யலாம். கதிர்களை தனியாக அறுக்கவேண்டும். தட்டைகளை ஒரு வாரம் காயவிட்டு அறுவடை செய்யவேண்டும். கோ- 10 ரகம் இறவையில் சராசரியாக ஒரு ஹெக்டேருக்கு 3.526 டன் விளைச்சலும், மானாவாரியில் 2.923 டன் விளைச்சலும் தரவல்லது. இது, மற்ற ரகங்களை விட அதிக விளைச்சலைத் தருகிறது.  கம்பில் அடிச்சாம்பல் நோய்க்கு எதிர்ப்பு சக்தி வாய்ந்தது. 
  சிறப்பியல்புகள்: அதிக விளைச்சல் தரவல்லது, குறுகிய வயதை உடையது, 85- 90 நாள்கள். நீளமான கதிர்கள் - 45 செ.மீ. அதிகத் தூர்கள். 4 முதல் 6 வரை சாயாத  தன்மையுடையது. 
  தானியங்கள் பெரியதாகவும் நெருக்கமாகவும் இருக்கும். மஞ்சள் கலந்த சாம்பல் நிற தானியங்கள். 
  அடிச்சாம்பல் மற்றும் துரு நோய்க்கு எதிர்ப்புச் சக்திகொண்டது. மற்ற ரகங்களை விட 30 முதல் 45 சதவீதம் அதிகமான விளைச்சலைத் தரவல்லது. 
  எனவே, விவசாயிகள் இத்தகைய உயர் விளைச்சல் தரும் ரகங்களைப் பயன்படுத்தி, சாகுபடி செலவைக் குறைத்து நிகர லாபத்தைப் பெருக்கலாம்.

  kattana sevai