சுடச்சுட

  
  cotton

  பருத்தி செடியில் காணப்படும் மாவுப் பூச்சி தாக்குதல்.


  தஞ்சாவூர்: காவிரி  டெல்டா மாவட்டங்களில் தற்போது கோடை தரிசு பயிரில் பருத்தி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதில் மாவுப்பூச்சியின் தாக்குதல் தென்படுகிறது. மாவுப்பூச்சி - பீனோகாக்கஸ்  வகை , மாக்கோ நெல்லி காக்கஸ் வகை. இந்த மாவுப் பூச்சியானது அதிகக் கூட்டமாக இலையின் அடிப்புறத்தில், மெழுகுபோன்று காணப்படும். இதனால்,  இப்பூச்சியானது பூச்சி  மருந்துகளிலிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ளும். இவை அதிகமான இனப்பெருக்கத் தன்மையும்,  மகசூல் இழப்பையும் ஏற்படுத்தக்கூடியது. இவை காற்று, நீர், மழை, பறவை மற்றும் விலங்குகளின்  மூலமாகவும் பரவக்கூடியது. இந்தப் பூச்சி தாக்கப்பட்ட இலைகளானது சுருங்கியும், செடி வளர்ச்சி குன்றியும், மற்றும் முழுவதும் இலைகள் உதிர்ந்து காய்ந்த செடி போன்றும் காணப்படும்.
  மாவுப் பூச்சியைக் கட்டுப்படுத்தச் சில வழிமுறைகள்:
  மாவுப் பூச்சியின் குஞ்சுகளானது ஒரு செடியிலிருந்து மற்றொரு செடிக்கு விரைவாகப் பரவக்கூடியது. எனவே, தாக்கப்பட்ட செடிகளை விரைவாகக் கண்டறிந்து முழுவதுமாகப் பிடுங்கி எரிக்க வேண்டும். இதேபோல, சிறிய செடியானது மாவுப்பூச்சியின் தாக்குதலுக்கு அதிக எதிர்ப்பு சக்தி உடையதால், சிறிய செடியில் மருந்து தெளிப்பதைத் தவிர்க்க வேண்டும். இதேபோல மாவுப் பூச்சியும் சிறிய செடியில் இனப்பெருக்கம் செய்வது மிகவும் குறைவு.இந்தியா முழுவதும் அதிகமான ஒட்டுண்ணிகளும், பொறி வண்டுகளும் மாவுப் பூச்சியின் தாக்குதலைக் கட்டுக்குள் வைத்துள்ளன. இப்பூச்சியைக் கட்டுப்படுத்தப் பயன்படுத்தும் மருந்துகளை அடிக்கடி உபயோகப்படுத்துவதால், நன்மை செய்யும் பூச்சிகள் அழிந்து மாவுப் பூச்சியின் எண்ணிக்கை திடீரென அதிகமாகிவிடும். எனவே, மருந்துகள் பயன்படுத்துவதைச் சப்பை பிடிக்கும் பருவத்தில் தவிர்க்க வேண்டும். தேவை ஏற்பட்டால் சுற்றுச்சூழலுக்குத் தீங்கு விளைவிக்காத வேப்ப எண்ணெய் சார்ந்த மருந்துகள் அல்லது பியூப்ரோபைசின் என்ற மருந்தை பருத்தியின் வளர்ச்சி பருவத்தில் தெளிக்க வேண்டும். 
  ஆனால், சப்பை கட்டும் பருவத்தில் மாவுப்பூச்சியானது கூட்டமாக இருந்து இனப்பெருக்கம் செய்வதால் சரியான நேரத்தில் பூச்சியின் நடமாட்டத்தைக் கண்டுபிடித்து அதைக் கட்டுப்படுத்த வேண்டும். அப்படி இல்லையென்றால், விவசாயிகள் மிகவும் அதிகமான மகசூல் இழப்பைக் காண நேரிடும். பூச்சி மருந்துகளை வயல் முழுவதும் தெளிக்கக் கூடாது. அப்படி தெளிப்பதால் நன்மை செய்யும் பூச்சிகள் அழிந்து விடும். எனவே, ஒரு கொம்புக்கு மேல் பூச்சி தாக்கப்பட்ட செடிகளைக் கண்டறிய வேண்டும். அந்தச் செடிகளை மனிதர்களின் உடலில் படாதவாறு அதை அப்படியே பிடுங்கி பிளாஸ்டிக் பையில் வைத்து, வயலுக்கு வெளியே சென்று எரிக்க வேண்டும்.
  ஆனால் 100-க்கு 10 செடிகளுக்கு மேல் மாவுப்பூச்சியின் தாக்குதல் தென்பட்டால் தையோடிகார்ப் 75 ரட-இல் 750 கிராம் அல்லது புரோபோனோபாஸ் 50 உஇ-இல் 1.25 கிலோ அல்லது அஸிப்பேட் 75 நட-இல் 2 கிலோ அல்லது டைமீய்தோயேட் 1 லிட்டர் என்ற மருந்துகளில் ஏதேனும் ஒன்றை ஒரு ஏக்கருக்கு 200 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கலாம் என்று ஆடுதுறையிலுள்ள தமிழ்நாடு நெல் ஆய்வு நிலைய இயக்குநர் வெ. அம்பேத்கார், முனைவர் பி. ஆனந்தி ஆகியோர் தெரிவித்துள்ளனர்.   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai