இயற்கை முறையில் மாங்காய்களை பழுக்க வைக்கும் தொழில்நுட்பங்கள்

மாங்காய்களை இயற்கை முறையில் பழுக்க வைப்பதன் மூலம் விவசாயிகள் கூடுதல் வருவாயை ஈட்டலாம் என்கிறார் கிருஷ்ணகிரி மாவட்ட தோட்டக்கலைத் துறை இணை இயக்குநர் டி.சி. கண்ணன்.
இயற்கை முறையில் மாங்காய்களை பழுக்க வைக்கும் தொழில்நுட்பங்கள்


கிருஷ்ணகிரி: மாங்காய்களை இயற்கை முறையில் பழுக்க வைப்பதன் மூலம் விவசாயிகள் கூடுதல் வருவாயை ஈட்டலாம் என்கிறார் கிருஷ்ணகிரி மாவட்ட தோட்டக்கலைத் துறை இணை இயக்குநர் டி.சி. கண்ணன்.
 கனிகளில் முதல் கனியாக விளங்குவது மாங்கனி ஆகும்.  தமிழ்நாட்டில் பரவலாக மாங்காய் சாகுபடி செய்யப்படுகிறது. குறிப்பாக, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகின்றது . கிருஷ்ணகிரி மாவட்டத்தின் முக்கிய தோட்டக் கலை பயிராக மா சாகுபடி உள்ளது. 
 அறுவடை:   தற்போது, மாங்காய் அறுவடைக்கான பருவம் ஆகும்.  தகுதியான மாங்காய்களை அறுவடை செய்யும்போது,  கூடையுள்ள கொக்கிகளைப் பயன்படுத்த வேண்டும். காய்கள் கீழே விழாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.  கீழே விழுந்தால் காயின் தரம் குறைய வாய்ப்பு உள்ளது. 
இயற்கை முறையில் பழுக்க வைக்கும் தொழில்நுட்பங்கள்:  மாங்காய்களை இயற்கை முறையில் மற்றும் சுகாதாரமான முறையில் பழுக்க வைப்பது உடலுக்கு ஆரோக்கியமானது.  அதற்கான தொழில்நுட்ப முறைகளில் முதலாவதானது எத்திலின் என்னும் ஹார்மோன் முறை ஆகும்.   இது இயற்கையாகவே பழுக்கும்போது,  எல்லா வகை பழங்களில் இருந்தும் வெளிப்படுவது.  அதாவது எத்திலின்கள் என்னும் ஹார்மோன் தாவரங்களில் இயற்கையாகவே உற்பத்தியாகிறது.  அந்த ஹார்மோனை செயற்கை முறையில் காய்களுக்கு அளிப்பதன் மூலம் விரைவில் தீங்கு விளைவிக்காமல் பழுக்க வைக்க இயலும்.  இந்த தொழில்நுட்ப முறைகளில் எளிமையான மற்றும் சுகாதாரமான முறைகளில் ஒன்றான காற்றுபுகா அறையில் காய்களை மூன்று பங்கு அளவுக்குப் பரப்பி, மீதமுள்ள இடத்தை காற்றோட்டம் இருப்பதற்காக விட வேண்டும்.  அந்த அறையில் ஓர் ஓரத்தில் அகலமான பாத்திரம் ஒன்றில் 5 லிட்டர் தண்ணீரில் 10 மில்லி எத்ரல் மற்றும் 2 கிராம் சோடியம் ஹைட்ராக்ஸைடு மாத்திரையை கலந்து வைக்க வேண்டும்.  அவற்றிலிருந்து வெளிவரும் எத்திலின் வாயு காய்களை 12 முதல் 24 மணி நேரத்தில் பழுக்கச் செய்யும்.  இந்தகைய மாத்திரைகள் உள்ளூர் சந்தைகளில் கிடைக்கும். 
இந்த முறைக்கு மாற்றாக, 100 கிலோ மாங்காய்களுக்கு 10 கிலோ பப்பாளி,  சப்போட்டா, வாழை, அன்னாசி போன்ற பழங்களை கலந்து வைக்கலாம்.  இந்த பழங்களின் கலவையிலிருந்து எத்திலின் வாயு வெளியிடும்.  இந்த முறையில் மாங்காய்களானது 24 முதல் 48 மணி நேரத்தில் பழுத்துவிடும்.  இந்த முறையில் பழுக்க வைக்கும் பழங்களானது தரமானதாகவும் சுவைமிக்கதாகவும் இருக்கும்.   இந்த முறையில் பழுக்க வைக்கும் காய்கள்,  ஏற்றுமதிக்கு உகந்தவை. இதனால், கூடுதல் வருவாயை விவசாயிகள் ஈட்டலாம்.
புகைமூட்டம் மூலம் காய்களைப் பழுக்க வைக்கும் போது, வெளிவரும் அசிட்டிலின் வாயுவானது பழங்களை பழுக்க வைப்பதோடு,  காய்களை ஒன்றுபோல் பழுக்க வைக்கும். ஆனால்,  இந்த முறையில் பழுக்க வைக்கும் பழங்களானது நிறம் மற்றும் சுவையில் ஒன்றுக்கொன்று வேறுபட்டதாக  இருக்கும். 
மேலும், விவரங்களுக்கு விவசாயிகள் அருகில் உள்ள அனைத்து தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநர்களை அணுகலாம் எனத் தெரிவித்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com