குண்டுமல்லி சாகுபடி: ஒரு முறை முதலீடு செய்தால் 3 ஆண்டுகளுக்கு பலன் தரும்

ஒருமுறை முதலீடு செய்தால் போதுமானது. தொடர்ந்து 3 ஆண்டுகளுக்கு மறுதாம்பு முறையில் பலன் தரக்கூடிய பயிர் என்பதாலும்,
 திருவள்ளூர் அருகே விடையூரில் ஆர்வத்துடன்  குண்டுமல்லி பறிக்கும் பணியில் ஈடுபட்ட பெண்கள். 
 திருவள்ளூர் அருகே விடையூரில் ஆர்வத்துடன்  குண்டுமல்லி பறிக்கும் பணியில் ஈடுபட்ட பெண்கள். 


திருவள்ளூர்:  ஒருமுறை முதலீடு செய்தால் போதுமானது. தொடர்ந்து 3 ஆண்டுகளுக்கு மறுதாம்பு முறையில் பலன் தரக்கூடிய பயிர் என்பதாலும், நாள்தோறும் வருவாய் ஈட்டித் தரும் என்பதாலும் திருவள்ளூர் பகுதியில் குண்டுமல்லி சாகுபடி செய்வதில் விவசாயிகள் ஆர்வத்துடன் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவிக்கின்றனர்.  
குறைந்த அளவு நீர் ஆதாரம் போதும்:  கோடைக்காலம் என்பதால் திருவள்ளூர் பகுதியில் கடும் வெயில் வாட்டி வருகிறது. இதன்காரணமாக ஏரிகளில் மற்றும் விவசாயக் கிணறுகளிலும் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்து கொண்டே வருகிறது. இதனால், திருவள்ளூர் பகுதி கிராமங்களில் விவசாயக் கிணறுகளில் குறைந்த அளவு நீரைக் கொண்டு ஏதாவது ஒரு வகை பயிர் சாகுபடி செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அதனால், இப்பகுதியைச் சுற்றியுள்ள கிராமங்களில் குறைந்த அளவு நீரைக் கொண்டு நீண்ட காலப் பலன் தரக்கூடிய குண்டுமல்லி சாகுபடி செய்வதில் விவசாயிகள் ஆர்வத்துடன் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், இப்பயிரிட்ட 5ஆவது மாதம் முதல் தேவையான அளவு குண்டுமல்லியைப் பறிக்க முடியும். இதன் மூலம் விவசாயிகளுக்கு நாள்தோறும் போதுமான அளவுக்கு வருவாய் கிடைத்து வருகிறது.   
நன்றாகப் பராமரித்தால்...: திருவள்ளூர் மாவட்டத்தில், பூண்டி, எல்லாபுரம், கும்மிடிப்பூண்டி ஆகிய ஒன்றியங்களைச் சேர்ந்த பூண்டி, புல்லரம்பாக்கம், காந்தி நகர், மோவூர், விடையூர், புல்லரம்பாக்கம், புதுமாவிலங்கை, காரணி, சிவன்வாயல், நத்தமேடு, பாக்கம், கசுவா, புலியூர், வெள்ளியூர், கீழானூர்  உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் 5 ஆயிரம் ஏக்கரில் குண்டுமல்லி சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். 
இப்பயிர் நன்றாக வளரும் வரை களைகொத்தி பராமரிப்பு செய்ய வேண்டும். அதேபோல் தேவையான அளவு இடுபொருள்களை அளித்தால் போதுமானது. அத்துடன், நாள்தோறும் அறுவடை செய்து குண்டுமல்லியை சந்தைக்கு அனுப்பி உடனே விற்க முடியும். இதுபோன்ற காரணங்களால் இப்பகுதியில் விவசாயிகள் ஒவ்வொருவரும் அரை ஏக்கர் முதல் 1 ஏக்கர் வரை குண்டுமல்லி சாகுபடி செய்து பராமரித்து வருகின்றனர். 
ஒரு முறை முதலீட்டுக்கு 3 ஆண்டு பலன்: இப்பயிருக்கு ஒரு முறை முதலீடு செய்தால் போதுமானது. அதன்பின் மறுதாம்பு முறையில் தொடர்ந்து 3 ஆண்டுகளுக்கு பலன் தருகிறது. இப்பயிருக்கு பராமரிப்புதான் முக்கியமாகும். மாதந்தோறும் இரு முறை தண்ணீர் பாய்ச்சினாலே போதும். இப்பயிர் நன்றாக வளர்ந்ததும் குடைபோல் விரிந்து காணப்படுவதால் நிலப்பகுதியில் உள்ள ஈரத்தை தக்க வைத்துக் கொள்ளும் தன்மையைக் கொண்டுள்ளது. அதேபோல், பூக்களைப் பறிப்பதற்கு ஏதுவாக அவ்வப்போது கிளைகளை வெட்டிப் பராமரிக்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் 5-ஆவது மாதத்திலிருந்து பலன் பெறலாம். மேலும், ஒரு முறை முதலீடு செய்தால் போதுமானது. தொடர்ந்து 3 ஆண்டுகளுக்கு மறுதாம்பு முறையில் பயிர் செய்வதன் மூலம் வருவாய் ஈட்ட முடியும் எனவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர். 
நாள்தோறும் வருவாய்: இதுகுறித்து விடையூரைச் சேர்ந்த விவசாயி மகேந்திரன் கூறியது:
தற்போதைய நிலையில் ஏரியில் நீர் ஆதாரம் குறைந்து வருவதால் கிணறிலும் போதுமான நீர் வரத்து கிடையாது. இதனால் குறைந்த அளவு நீரை பயன்படுத்தி அரை ஏக்கரில் குண்டு மல்லி சாகுபடி செய்துள்ளேன். இப்பயிரைச் சாகுபடி செய்வதன் மூலம் 5-ஆவது மாதத்தில் இருந்து பூக்களைப் பறிக்க முடியும். அரை ஏக்கரில் நன்றாகப் பராமரித்தால் 5-ஆவது மாதத்திலிருந்து நாள்தோறும் குண்டுமல்லி பறித்து பலன் பெற முடியும்.
இதில் குறைந்தது 80 சேர் வரை கிடைக்கும். குண்டுமல்லியைப் பறித்து சென்னை கோயம்பேடு சந்தைக்கு கொண்டு சென்றால் உடனே பணமாக்க முடியும். இதில் பூக்கள் வரத்து அதிமாக இருந்தால் ஒரு சேர் ரூ.40 வரை விற்பனையாகும். வரத்து குறைவாக இருந்தால் ரூ.60 வரை விற்பனையாகும். தற்போது, கோடைக்காலம் என்பதால் குண்டுமல்லிப் பூக்கள் வரத்து குறைந்துள்ளது. இதனால் ஒரு சேருக்கு ரூ.80 வரை கிடைக்கிறது. சந்தைக்கு கொண்டு செல்ல முடியாதபட்சத்தில் கிராமங்களிலேயே விற்பனை செய்து பணமாக்க முடியும். இவ்வாறு நாள்தோறும் குண்டுமல்லி பறிப்பதன் மூலம் வருவாய் ஈட்ட முடிவதால் விவசாயிகளின் விருப்பப் பயிராக இது மாறி வருகிறது என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com