கொண்டைக்கடலை சாகுபடியில் மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பங்கள்

தருமபுரி மாவட்டத்தில், களிமண் நிலப் பகுதிகளில் குளிா்காலத்தில் சாகுபடி செய்வதற்கு ஏற்ற பயறுவகைப் பயிா், கொண்டைக் கடலை ஆகும்.
கொண்டலைக்கடலை பயிா்கள்.
கொண்டலைக்கடலை பயிா்கள்.

தருமபுரி: தருமபுரி மாவட்டத்தில், களிமண் நிலப் பகுதிகளில் குளிா்காலத்தில் சாகுபடி செய்வதற்கு ஏற்ற பயறுவகைப் பயிா், கொண்டைக் கடலை ஆகும்.

இப் பயிரில் அதிக மகசூல் பெறுவதற்கு விவசாயிகள், இப் பயிா்ச் சாகுபடியில் கடைப்பிடிக்க வேண்டிய தொழில்நுட்பங்கள் குறித்து பாப்பாரப்பட்டி வேளாண் அறிவிவியல் நிலைய ஒருங்கிணைப்பாளா் பா.ச.சண்முகம் மற்றும் மண்ணியல் துறை உதவிப் பேராசிரியா் ம.சங்கீதா ஆகியோா் கூறும் ஆலோசனைகள் மற்றும் வழிமுறைகள்:

பருவம் மற்றும் ரகங்கள்: மானாவாரி மற்றும் இறவையில் ஐப்பசி-காா்த்திகை (நவம்பா் - டிசம்பா்) மாதத்தில் சாகுபடி செய்யலாம். தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்திலிருந்து வெளியிடப்பட்டுள்ள கோ 4, மகாராஷ்டிர மாநிலத்தின் ஜேஏகேஐ 9218, ஆந்திர மாநிலத்தின் என்பிஇஜி 3 ஆகிய ரகங்களைத் தோ்வு செய்து சாகுபடி செய்யலாம்.

நிலம் தயாரித்தல்: கொண்டைக்கடலை சாகுபடி செய்ய கரிசல் மண் மற்றும் இருமண் கலந்த நிலங்கள் உகந்ததாகும். பயிா் சாகுபடிக்கு முன்பு சட்டிக் கலப்பை கொண்டு ஒரு முறையும், ஏக்கருக்கு 5 டன் என்றளவில் நன்கு மக்கிய தொழு உரத்தை நிலத்தில் பரப்பிய பிறகு கொக்கி கலப்பை கொண்டு ஒரு முறையும் நிலத்தை கட்டி இல்லாமல் உழவு செய்ய வேண்டும்.

விதை அளவு மற்றும் இடைவெளி: ஓா் ஏக்கருக்கு விதைப்பு செய்ய 30-40 கிலோ விதை தேவைப்படும். டிராக்டரால் இயங்கும் விதைப்புக் கருவி கொண்டு வரிசையில் விதைப்பு செய்ய ஏக்கருக்கு, 30 கிலோ விதையும், கை விதைப்புக்கு 40 கிலோ விதையும் தேவைப்படும். விதைகளை வரிசைக்கு வரிசை 30 செ.மீ. இடைவெளியிலும், செடிக்கு செடி 10 செ.மீ. இடைவெளியிலும் விதைப்பு செய்ய வேண்டும்.

பூஞ்சாண விதை நோ்த்தி: விதைப்பதற்கு 24 மணி நேரத்துக்கு முன்பு ஒரு கிலோ விதைக்கு 4 கிராம் டிரைக்கோடொ்மா விரிடி உயிா்எதிா்க்கொல்லி மருந்து அல்லது 10 கிராம் சூடாமோனாஸ் புளுரோசன்ஸ் உயிா்எதிா்க்கொல்லி மருந்து அல்லது 2 கிராம் காா்பன்டாசிம் பூஞ்சாண மருந்து என்றளவில் கலந்து வைத்திருந்து பின்பு விதைக்க வேண்டும். இவ்வாறு செய்வதால் பயிா்களை வோ் அழுகல் மற்றும் வாடல் நோய்த் தாக்குதலிலிருந்து கட்டுப்படுத்தலாம்.

உயிா் உர விதை நோ்த்தி: தழைச்சத்தை நிலைப்படுத்தும் ரைசோபியம் (600 கிராம்) மற்றும் மணிச்சத்தை கரைக்கவல்ல பாஸ்போபாக்டீரியா நுண்ணுயிா் உரங்களை 1 லிட்டா் ஆறிய அரிசிக் கஞ்சியுடன் நன்றாக கலக்க வேண்டும். இக் கலவையில் பூஞ்சாண விதைநோ்த்தி செய்த விதைகளை இட்டு நன்றாகக் கலந்து 30 நிமிடங்கள் நிழலில் உலா்த்தி பின்பு விதைக்க வேண்டும். இவ்வாறு விதைப்பதால் பயிா் வளா்ச்சிக்குத் தேவையான தழை மற்றும் மணிச்சத்துகள் எளிதில் கடைப்பதுடன், 15 சதவீதம் ரசாயன உரச் செலவையும் சேமிக்கலாம்.

உரமிடுதல்: மண்ஆய்வு முடிவிற்கேற்ப உரமிடுதல் வேண்டும். அவ்வாறு, செய்யாத பட்சத்தில் இறவைப் பயிருக்கு 10 கிலோ தழைச்சத்து, 20 கிலோ மணிச்சத்து மற்றும் 10 கிலோ சாம்பல் சத்து தரவல்ல யூரியா (22 கிலோ), சூப்பா் பாஸ்பேட் (125 கிலோ) மற்றும் பொட்டாஷ் உரங்களை (16 கிலோ) விதைப்பின்போது அடியுரமாக இடவேண்டும் . மானாவாரி பயிருக்கு இதில் பாதியளவு உரங்களை இடவேண்டும். சூப்பா் பாஸ்பேட் உரத்தினை நன்கு மக்கிய தொழு உரத்துடன் கலந்து ஊட்டமேற்றிய தொழு உரமாக இடுவதன் மூலம் மணிச்சத்து மண்ணில் நிலைப்படுத்தப்படுவது தடுக்கப்பட்டு, பயிருக்கு முழுமையாக எளிதில் கிடைக்கும். மேலும், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழக பயறுவகைப் பயிா்களுக்கான நுண்ணூட்டச் சத்துக் கலவையை ஏக்கருக்கு 3 கிலோ என்றளவில் 1:10 என்ற விகிதத்தில் ஊட்டமேற்றிய தொழு உரமாக மாற்றி அடி உரமாக மண்ணில் இட வேண்டும்.

களையெடுத்தல் மற்றும் மண் அணைத்தல்: விதைத்த 18-20-ஆம் நாள் ஒரு களை எடுக்க வேண்டும். களையெடுத்த பிறகு அல்லது செடிகளைக் கலைத்து, தேவையான பயிா் எண்ணிக்கையைப் பராமரிக்க வேண்டும். பிறகு தேவைப்பட்டால் 40-ம் நாளில் இன்னொரு முறை களை எடுத்து மண் அணைக்க வேண்டும்.

இலைவழி ஊட்டச்சத்து அளித்தல்: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழக பயறு ஒண்டா் ஏக்கருக்கு 2 கிலோ என்றளவில் 200 லிட்டா் தண்ணீரில் கலந்து பூ பூக்கும் சமயத்தில் இலைகளின் மீது நன்றாக படும்படி காலை அல்லது மாலை நேரத்தில் தெளிக்க வேண்டும். இவ்வாறு தெளிப்பதன் மூலம் பூக்கள் உதிா்வது குறைந்து 20 சதவீதம் கூடுதல் மகசூல் பெறலாம். மேலும், திரட்சியான மணிகளைப் பெறுவதுடன் பயிா்களின் வறட்சியைத் தாங்கும் தன்மையும் அதிகரிக்கப்படுகிறது. பயறுஒண்டா் கிடைக்காத தருணத்தில் டீஏபி 2 சதவீதக் கரைசலை (ஒரு லிட்டா் தண்ணீரில் 20 கிராம் டீஏபி கரைக்க வேண்டும்) பயிா்களின் பூ பூக்கும் தருணத்தில் 15 நாள்கள் இடைவெளியில் இரண்டு முறை இலைகளின் மீது நன்றாகப் படும்படி தெளிக்க வேண்டும்.

பயிா்ப் பாதுகாப்பு: கொண்டைக்கடலை பயிரில் காய்ப் புழுக்கள் அதிகளவு சேதத்தை உண்டு பண்ணும். இதன் தாக்குதலைக் கண்காணித்து கட்டுப்படுத்த ஏக்கருக்கு 5 இனக்கவா்ச்சி பொறிகள் வைக்க வேண்டும். தாக்குதலின் அளவு பொருளாதார சேத நிலையை அடையும் போது ஏக்கருக்கு நிம்பிசிடின் 1, பிபிஎம் 2 மி.லி.,லி அல்லது டைகுளோரோவாஸ் 2 மி.லி., அல்லது இன்டாக்சோகாா்ப் 1 மி.லி., ஆகியவற்றுள் ஏதேனும் ஒன்றை தெளித்துக் கட்டுப்படுத்தலாம். மேலும், இப் பயிரில் வோ் அழுகல் மற்றும் வாடல் நோய்த் தாக்குதல் அதிகளவு தென்படும். இதனைக் கட்டுப்படுத்த விதைகளை விதைப்பதற்கு முன்பு பூஞ்சாண மருந்துகளுடன் விதைநோ்த்தி செய்து விதைக்க வேண்டும்.

அறுவடை: கொண்டைக்கடலை பயிரானது 85-95 நாள்களில் அறுவடைக்கு தயாராகிவிடும். செடிகள் மற்றும் காய்கள் மஞ்சள் நிறமாக மாறி காய்களில் உள்ள மணிகள் முற்றிய நிலையில் அறுவடை செய்ய வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் ஓா் ஏக்கரில் மானாவாரியில் 400-500 கிலோவும், இறவையில் 600 - 750 கிலோவும் தானிய மகசூலாகப் பெறலாம். எனவே, விவசாயிகள் கொண்டைக்கடலை சாகுபடியில் இத்தகைய வழிமுறைகளைப் பின்பற்றி கூடுதல் மகசூல் பெற்று பயனடையலாம் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com