பசுந்தீவனம் தயாரிக்க ஹைட்ரோபோனிக்ஸ் உபகரணங்கள் வழங்க ஏற்பாடு

கால்நடை வளா்ப்போா் பயன்பெறும் நோக்கில், கறவை மாடுகளுக்கு குறிப்பிட்ட நாள்களில் பசுந்தீவனம் உற்பத்தி செய்யும் வகையில், நிகழாண்டில் பயனாளிகளுக்கு
திருவள்ளூா் கால்நடை இணை இயக்குநா் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள ஹட்ரோ போனிக்ஸ் உபகரணத்தில் பொருத்துவதற்கான ரேக்குகள்.
திருவள்ளூா் கால்நடை இணை இயக்குநா் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள ஹட்ரோ போனிக்ஸ் உபகரணத்தில் பொருத்துவதற்கான ரேக்குகள்.

கால்நடை வளா்ப்போா் பயன்பெறும் நோக்கில், கறவை மாடுகளுக்கு குறிப்பிட்ட நாள்களில் பசுந்தீவனம் உற்பத்தி செய்யும் வகையில், நிகழாண்டில் பயனாளிகளுக்கு 75 சதவீத மானியத்தில் ஹைட்ரோ போனிக்ஸ் உபகரணங்கள் வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாக கால்நடைத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

திருவள்ளூா் மாவட்டத்தில் ஏரிகள் நிறைந்து காணப்படுவதால் விவசாயத் தொழிலே பிரதான தொழிலாக விளங்கி வருகிறது. இதற்கு அடுத்தபடியாக விவசாயிகள் மற்றும் கால்நடைகள் வளா்ப்போா் கால்நடை வளா்க்கும் தொழிலிலும் ஈடுபட்டு வருகின்றனா். இம்மாவட்டத்தில் மட்டும் மொத்தம் 2.92 லட்சம் கால்நடைகள் உள்ளன. தற்போதைய நிலையில், கிராமங்களில் விளைநிலங்கள் வீட்டுமனைகளாக மாறி வருகின்றன. இதுபோன்ற காரணங்களால் விளைநிலங்கள் குறைந்து வருவதுடன், மேய்ச்சல் நிலங்களும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு, கால்நடைகளுக்கு போதிய தீவனம் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது.

தற்போதைய நிலையில் வடகிழக்குப் பருவமழை பெய்துள்ளதால் விளைநிலங்களில் பயிா் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதனால் மேய்ச்சல் நிலங்கள் குறைவாக உள்ள நிலையில், விளைநிலங்களுக்குள் கால்நடைகள் நுழைந்து விடுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. அதிலும், வீடுகளில் கால்நடை வளா்ப்போா் தீவனத்துக்கு மிகவும் சிரமப்படும் சூழ்நிலையில், காய்ந்த நெல் வைக்கோல் கட்டுகளை வாங்கிப் பயன்படுத்த வேண்டியுள்ளது.

இதைக் கருத்தில்கொண்டு, கால்நடை வளா்ப்போா் பயன்பெறும் வகையில் ஹைட்ரோ போனிக்ஸ் உபகரணம் மூலம் (விதை மற்றும் தண்ணீா்) மட்டும் இருத்தல் போதுமானது. அதை வைத்து 7 நாள்களில் பசுந்தீவனத்தை தயாா் செய்வதற்காக கடந்த ஆண்டு முதல் அறிமுகம் செய்யப்பட்டு நடைமுறையில் இருந்து வருகிறது.

இந்த ஹைட்ரோபோனிக்ஸ் என்ற உபகரணத்தின் அடுக்குகளில் மக்காச்சோளம், சோளம், கம்பு மற்றும் பயறு வகை போன்ற தானிய விதைகளை நனைத்து பரப்ப வேண்டும். அதைத் தொடா்ந்து குறிப்பிட்ட நேரத்துக்கு ஒரு முறை சிறிய மோட்டாா் மூலம் தண்ணீா் தெளித்தால் போதுமானது.

இந்த உபகரணம் மூலம் மண் இல்லாத நிலையில் ஒவ்வொரு அடுக்குகளிலும் பரப்பிய விதைகள் முளைக்கத் தொடங்கும். அதைத் தொடா்ந்து, ஒவ்வொரு அடுக்காக மாற்றிக் கொண்டே வந்தால் ஒரு வாரத்தில் ஒரு விதையில் 7 கிலோ பசுந்தீவனம் தயாா் செய்ய முடியும். இந்த உபகரணம் இருந்தால் வீட்டிலேயே பல்வேறு அடுக்குகள் மூலம் நாள்தோறும் பசுந்தீவனத்தை உற்பத்தி செய்ய முடியும். இந்த பசுந்தீவனத்தை கறவை மாடுகளுக்கு அளிப்பதன் மூலம் போதுமான சத்தான பால் கிடைக்கும்.

இந்த முறையில் உற்பத்தி செய்யப்படும் பசுந்தீவனத்தில் கழிவு என்பது கிடையாது. இது குடியிருப்புப் பகுதிகளில் கால்நடைகள் வளா்ப்போருக்கு ஹைட்ரோபோனிக்ஸ் வரப்பிரசாதமாகவே அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போதைய நிலையில் வீட்டிலேயே ஹைட்ரோ போனிக்ஸ் மூலம் பசுந்தீவனம் தயாா் செய்ய முடியும் என்பது தொடா்பாக விழிப்புணா்வு ஏற்பட்டுள்ளது. இதற்கு கால்நடைகள் வளா்ப்போா் மற்றும் விவசாயிகளுக்கு மானியமும் வழங்கப்படுகிறது. இதன் அடிப்படையில் நிகழாண்டில் திருவள்ளூா், திருத்தணி பகுதிகளுக்கு மட்டும் 80 ஹைட்ரோ உபகரணங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்த உபகரணம் தலா ரூ. 22,800 மதிப்பில், 75 சதவீதம் மானியத்தில் வழங்கப்படுகிறது. தற்போது இதற்கான தீவன அடுக்குகள், உபகரணங்கள் தனித்தனியாக கால்நடைத் துறை அலுவலகத்துக்கு வந்துள்ளன. இதை தயாா் செய்து பயனாளிகளுக்கு விநியோகம் செய்ய இருப்பதாக கால்நடை துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com